7

     இன்னும் நாட்டராயன் கோவிலுக்குப் புறப்பட மூன்று நாள் தான் இருந்தது. அநேகமாக எல்லாருக்கும் ‘வேண்டுதலை’ இருந்ததால் ஊரைச் சுற்றிக் கொழுத்த ஆட்டுக் கடாக்கள் மேய்ந்து கொண்டிருந்தது. கருகரு என்று மேனி மினுமினுப்பாக இருந்தது. குழந்தைகளுக்கு அந்தக் கடாக்களைக் கண்டால் வெகு பிரியம். பில்லுத் தண்ணிக்குக் குறை இல்லாததால் அந்தக் கடாக்களும் ‘மதமத’ வெனக் குழந்தைகள் போலவே வளர்ந்திருந்தன. ஆனால் இரண்டொரு நாளில் தங்களுக்கு ஏற்படப் போகும் முடிவுகள் அந்த வாயில்லாச் சீவன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

     ஆடி மாசம். ஆற்றிலும் புது வெள்ளம் நாலைந்து நாளாக வந்து கொண்டிருந்தது. அதிகம் என்று சொல்வதற்கில்லை. மசமசப்பு நேரத்தில் செந்தண்ணி முழங்கால் அளவு வரும். விடிவதற்குள் வடிந்துவிடும். அப்படி ‘திடும்’ என்று வெள்ளப் பெருக்கு வந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்கு வருணபகவானே மனசு வைத்தாலும் ‘மேதண்ணீர்’ வராது என்று அவர்கள் நம்பினார்கள். ஏனென்றால் நாட்டராயன் கோயில் பிரயாணத்தை ஆடு தடுக்காது என்பதில் அவர்களுக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. எப்பவாவது ராத்திரியில் அரச இலைகள் விசையாகக் காற்றில் படபடக்கையில், தண்ணீரின் ‘முறைச்சல்’ போலவே கேட்கும். பாதித் தூக்கத்தில் இருந்தாலும், “என்ன ‘மேதண்ணி’ வருதா? நாளைக்கு குறுக்காட்டிக்குமா இந்த எளவு?” என்று ஒவ்வொரு வாய் முணுமுணுக்கும். அடுத்த கணமே சமாதானமும் கொண்டு விடும்.

     மத்தியானம் வெயில் அதிகமாக இல்லை. ‘மங்கு மங்கு’ என அடித்துக் கொண்டிருந்தது. குளிரும் அதிகமாக இல்லை. ஆற்றிலே ஏழெட்டுப் பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. ஒரு பெண் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக் கொண்டு ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். “என்ன என்ன?” என்ற கேள்விக் குறியுடன் அனைவர் கண்களும் அந்தத் திசையை நோக்கின. குளித்துக் கொண்டிருந்த பெண்களிலே செல்லாயாளும் கலந்திருந்தாள். அவள் இள வதனத்தில் சோகத்தின் சாயல் இலேசாகப் படர்ந்தது. மனசு ‘படபட’ வென்று அடித்துக் கொண்டது. ‘என்னமோ ஏதோ?’ என்று அவளும் மற்றவர்களைப் போல் கலங்கினாள் என்றாலும் அவளுடைய வேதனை கங்கு கரை இன்றி அதிகரித்துக் கொண்டு போயிற்று. ஒரு வேளை மாரியப்பன் தாயாருக்கு உடம்புக்கு என்னவோ?

     ஆற்றோரம் தான் ராமசாமிக் கவுண்டர் தோட்டம். வாரி வெளியில் பூவரச மர நிழலும், வேப்பமரத்து நிழலும் எப்போதும் படர்ந்திருக்கும். என்னேரமும் அங்கேதான் கட்டில் போட்டோ, அல்லது துண்டை விரித்தோ உட்கார்ந்திருப்பார். தோட்டத்து ஆட்கள் வேலை செய்வது நாலு புறமும் அங்கிருந்து பார்த்தால் நன்றாகத் தெரியும். முந்திய நாள் விடிய விடியப் பேசிய சலிப்பில் அப்போதுதான் கண்ணயரச் சற்று தலை சாய்த்தார். அந்த அழுகைக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தார். யாரென்று பார்க்கையில், நெல்லுக்காட்டு சின்னப்பன் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள்.

     சின்னப்பன் காலமாகி நாலைந்து வருஷமாகிறது. மனைவி மானத்திற்குக் கட்டுப்பட்டவள். வீட்டை விட்டு அதிகமாக வருவதில்லை. ஒரு மகன். கொஞ்சம் உள்ள நிலத்தை அவன் ஒருவனே பார்த்துக் கொள்வான். இப்போது அந்தப் பூமிக்கே ஆபத்து வந்துவிடத்தான் அவள் ஆவிப் பறந்து கொண்டு ஓடிவந்தாள்.

     “அப்பா, உன்னை விட்டா வேறு கதியில்லை. நீதான் காப்பாத்தோணும். எனக்கு ஒரு பயன். அவனும் எங்க ஊட்டுக்காரரைப் போல் மசயன். செட்டி பண்ணின பழியைப் பாத்தியாப்பா?” என்றாள்.

     “என்ன? உட்காருங்க” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

     நாச்சக்காள், ராமசாமிக் கவுண்டன் சொன்ன தொன்றையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவள் தன் குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் கொண்டை அவிழ்ந்து பிடரியைத் தொட்டுக் கொண்டிருந்தது. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அவள் அடிக்கடி மூக்கைச் சிந்தி பக்கத்தில் ஆள் இருப்பதைக் கவனியாமல் வீசிக் கொண்டிருந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த அவளுடைய மகன் குட்டீணன், “அட, நா நிக்கிறது உனக்குக் கண்ணுத் தெரியுதோ இல்லையோ?” என்றான்.

     அவள் ஒன்றும் பதிலளிக்காமல் இரு கைகளையும் முன் நீட்டிக் கொண்டு ராமசாமியைப் பார்த்து, “அப்பா, நீ நாலுந் தெரிஞ்சவன், நீயே பாரு. எப்பவோ வாங்கியிருந்தாங்களா. நூறோ எர நூறோ. அது இப்போ பெருகிப் போச்சாம். இருக்கற பூமி அதுக்கு இப்போ போதாதாம். பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டானே. ஏலத்துக்கு கொண்டு வரானாம். பணம் கட்ட நானு எங்கப்பா போவேன்? எம் பயனை செயில்லே புடிச்சுப் போட்டிடுவானாம். கேட்டயாப்பா நாயத்தை?” என்றாள்.

     “கடனுக்குத்தான் பூமி. பயனை எதுக்குச் செயிலுக்குப் புடிக்கோணும்?”

     “இதைக் கேட்டதையும் பயன் கருக்கருவாளை எடுத்துத் தீட்டறானப்பா, நொங்குக்காய் சீவறாப்பலே அந்த மணியாரனை மொதல்லே சீவிப்போடறனுங்கறான். அப்புறஞ் செட்டியையும் உசிரோடெ உடறதில்லிங்கறான்” என்றாள்.

     ராமசாமிக் கவுண்டருக்கு வியாகூலத்துக்கு இடையேயும் சிரிப்பு வந்தது. சின்னப்பன் பையன் ஒரு தட்டிலே தட்டி எறிகிற ஆசாமிதான். எதார்த்தமானவன். சூதுவாது தெரியாது. மனமறியத் துரோகம் என்று தெரிந்தால் கை வைக்கப் பின் வாங்க மாட்டான்.

     ராமசாமிக் கவுண்டர் அமைதியாக, “நாங் கடனைக் கட்டிப் போடறே. நீ மொள்ளக் கடனை அப்புறம் அடைச்சுக்காயா. உம் பையனை சித்தெ ஊட்டோடெ இருக்கச் சொல்லு. நானும் குட்டீணனைக் கண்டா நல்ல புத்தி சொல்றேன். எதுக்கும் ஆத்தரப்பட வாண்டாம்னு சொல்லு” என்றார்.

     “ஆமாமப்பா, இப்பத்தான் என்மனங் குளுந்துது. நம்ம மாரியப்பனுக்கு, ஏஞ்சாமிக்கு தங்கமான பொண்ணு செல்லியாத்தா தர்மத்திலே கெடைக் கோணும்” என்று வாழ்த்திக் கொண்டே அவள் அங்கிருந்து போனாள். பக்கத்தில் நின்ற பையனுக்கு நடந்த ‘நாடகம்’ ஒன்றுமே விளங்கவில்லை. தனக்கு நல்ல பெண்ணாகக் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துதலை எண்ணி மட்டும் சிரித்தான். ராமசாமிக் கவுண்டரும் தன் பையன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, மணியக்காரர் வீட்டையும், எதிரே தெரிந்த செல்லியாண்டி அம்மன் கோயிலையும் மாறி மாறிப் பார்த்தார். மனதிற்குள் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தச் சமயம் ராமசாமிக் கவுண்டர் மனதில் அத்தனை விதவிதமான எண்ணங்கள் திரண்டு எழுந்து கொண்டிருந்தன.

     மணியக்காரர் போக்கே அலாதியாக இருக்கிறதே? ஏன்? இனி அவருக்கு என்ன வேண்டும்? பேத்துப் பிதிர் எடுக்கும் வயசு ஆகிவிட்டது. மாணிக்கம் போன்று பெண் ஒருத்தி இருக்கிறாள். ஆண் சந்ததிதான் கிடையாதே. இன்னும் எதற்காக ‘ஊர்த் தலையில்’ கல்லைப்போட்டுச் சம்பாதிக்க வேண்டும்? இருப்பதை அனுபவிப்பதற்கே இன்னும் பத்துப்பேர் வேண்டி இருக்கிறதே? அப்படியும் தானா அனுபவிக்கப் போகிறார்? ஊர்க்காரன் குடுமி யெல்லாம் பிடித்து செட்டியார் கையில் கொடுப்பதில் என்ன லாபம்? கண்ணுக்கு எதிரே நாலு பேர் நன்றாக இருந்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். எல்லாம் கெட்டுப் போனால், நமக்கு என்ன வருவது? நாமென்ன ரண்டாயிரம் வருஷத்துக்கா இருக்கப் போகிறோம்?

     இப்படிப் பலவிதமாக நினைக்கவும் ராமசாமிக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. மாரியப்பன், “ஏனுங்க சிரிக்கிறீங்க? ராத்திரி கோமாளி ‘குப்பு’ண்ணு உழுந்தானுங்களே அதெ நெனைச்சா சிரிக்கிறீங்க?” என்றான். அப்போது மாரியப்பன் தாயாரும் அங்கே வந்தாள். அவள் எப்போதும் அடக்கமாகப் பேசுகிறவள். இன்றைக்கு வந்ததும், “இப்படியே தான தருமம் பண்ணிக்கிட்டு இருந்தா நம்ம ஊடு நெறஞ்சு போகும்! தடத்திலே போறவனெல்லாம் உண்ணி நம்மளை சும்மா உடமாட்டாங்க. ஊர்க் கடனை அடைக்கறதுக்கு நம்மகிட்டே கொட்டியா வெச்சிருக்குது?” என்றாள்.

     ராமசாமிக் கவுண்டர் பதில் சொல்லுமுன், “சும்மா இரம்மா. உனக்கு அதெல்லாம் தெரியாது” என்றான் மாரியப்பன். தன் பிள்ளை திருப்பூர் பள்ளிக்கூடத்திற்குப் போனதுமே புத்திசாலியாகி விட்டதாக தாயின் எண்ணம். அவன் சொல்வதைத் தட்டிப்பேச அவளால் முடியவில்லை. ராமசாமி கொஞ்சம் பலமாகவே, “என்ன பேசிலயா? மவன் சொன்னாக் கேப்பே, எம் பேச்சும் காரியமும் உனக்கு மேவுமா?” என்றார்.

     அந்தச் சமயம் ஆற்றிலிருந்து குளித்துவிட்டு வந்த பெண்கள் இந்தப் புறமாகத் திரும்பி ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அதிக ஆச்சரியத்துடன் நோக்கும் இரு கருவிழிகளின் கேள்விக் குறியையும் தூரத்திலிருந்தபடியே மாரியப்பன் கவனித்தான்.