உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 மறுநாள் மத்தியானம் மணியக்காரர், வீட்டில் மகள் செல்லாயாளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் ஏதாவது விளையாடியே தீரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருந்தது. அவர் அடையப் போகும் பலனை எண்ணித்தான் அத்தனை மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதோடு இடையிடையே வீரப்ப செட்டியாருக்குத் தம் வந்தனத்தை இருதய அந்தரங்கத்தில் செலுத்திக் கொண்டிருந்தார். செட்டியார் அப்படி என்ன செய்தார்? என்ன செய்தாரா? எத்தனையோ செய்திருக்கிறார். அந்தப் பக்கத்திலே எத்தனையோ பூமி தம் கைவசமாக வீரப்ப செட்டியார் புரிந்த பேருதவிகளை வீரபத்திரரே அறிவார்! அப்படி இல்லா விட்டால், விருந்து மேல் விருந்தும், உபசரிப்புக்கு மேல் உபசரிப்பும் அப்படி அமோகமாக நடக்குமா? வீரப்ப செட்டியாருக்கும் தான் பக்க பலமாக இல்லாவிட்டால் ஒரு துண்டு நிலம் கூட சொந்தமாகியிருக்காது என்ற விஷயமும் மணியக்காரருக்குத் தெரியாத உண்மையல்ல. ஆனாலும், செட்டியாரே தமக்கு ஆபத்பாந்தவராகக் கை கொடுப்பதால், மேலும் மேலும் தம் அதிர்ஷ்டம் அதிகரித்துக் கொண்டு போவதாக இவர் நம்பினார். நேற்று சாயங்காலம் தம்முடைய தோட்டத்துக்கு அடுத்த ‘கொரங்காட்டை’ப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “முழங்கால் வரை ஊசிப்பில்லு இடமில்லாமல் நிறைந்து கிடக்கிறதே. இது நம் வசம் ஆகிவிட்டால் மாடு கண்ணு தீவனத்துக்கு கொஞ்சமும் குறைச்சல் ஏற்படாது” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எப்படியோ ராத்திரியிலே அந்தக் ‘கொரங்காடு’ மணியக்காரர் வசமாக வழி பண்ணிவிட்டார் செட்டியார். காட்டுக்காரனுக்கு எத்தனை ஆயிரம் கொடுப்பதாகச் சொன்னாரோ? சொல்வது என்ன? அந்த ஆசாமி ஒரு ஆயிரம் செட்டியாரிடம் கடன் வாங்கியிருக்கலாம். அது வட்டிக்கு வட்டி சேர்ந்து இந்தப் பத்து வருஷத்துக்குள் அசலுக்கு மேல் போய் இருக்கலாம். பூமி ஏலத்துக்கு வருகிற நிலைமை ஏற்பட்டால், சொந்தக்காரன் செட்டியார் சொன்னபடி கேட்டுத்தானே தீரவேண்டும்? துணைக்கு மணியக்காரர் இருக்கிறார். மணியக்காரருக்கே வட்டித் தொகையில் பாதியைத் தள்ளிக் கொடுத்து விடுகிறதென்றால் காட்டுக்காரன் மறுபேச்சுப் பேசாமல் கொடுத்து விடுகிறான். அதைவிட வேறு வழி? இப்படித்தான் ஏதோ ஒரு கணக்கில் செட்டியார் அந்தக் காரியத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். மணியக்காரருக்கு உற்சாகம் இப்போது தாங்க முடியவில்லை. அந்த ஆனந்த வெறியில் குழந்தையாகவே மாறிவிட்டார். செல்லாயா அந்த பெரிய ஆசாரத்தில் பந்தக்காலுக்குப் பந்தக்கால் ஓடி ஒளிந்து கொண்டிருந்தாள். மணியக்காரர் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்! செல்லாயாளுடைய அத்தை இந்தச் சத்தத்தைக் கேட்டு ஆசராத்துக்கு வந்தாள். அவளுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய சகோதரனுக்கு இன்றைக்கு இவ்வளவு ஆனந்தம் என்ன வந்தது? “என்னங்கண்ணா, இது என்ன கூத்து?” என்றாள். “கூத்தா? அது ராத்திரிக்கு அல்ல நடக்கும்?” என்றார் சிரித்துக் கொண்டே. “ஏனுங்க அண்ணா, யாராச்சும் பாத்தா என்ன சொல்லுவாங்க?” “இப்ப நீ சொல்லறயே, இப்படித்தான் ஏதாச்சும் சொல்லுவாங்க.” மூன்றுபேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். செல்லாயாளுக்கு ஆட்டத்தை நிறுத்தி விட்டதில் கொஞ்சம் வருத்தமேதான். அத்தையை மெதுவாகப் பார்த்தாள். அத்தைக்கு செல்லாயாளிடம் உயிர். “ஏங்கண்ணு, உங்க ஐயனுக்குத் தான் வேறெ வேலை இல்லீண்ணா, உனக்குமா ஒண்ணும் இல்லை” என்றாள். சமையல் அறையிலிருந்து சட்டி காயும் சத்தம் வந்து கொண்டிருந்தது. அத்தை அவசரமாக உள்ளே போனாள். வெளி வாசலில் ஏழெட்டுப் பேர் வரும் சத்தம் கேட்டது. ஒரு இரட்டை மாட்டு வண்டி வீட்டுக்கு எதிரில் விடப்பட்டிருப்பது, திண்ணையிலிருந்து திரும்பியதும் மணியக்காரருக்குத் தெரிந்தது. அவர் அவசரமாகப் புறப்பட்டார். ஆனால், செல்லாயா கையைப் பிடித்துக் கொண்டு, “பாதி ஆட்டத்திலே உட்டா, நாளையும் பொறகு உங்களோட வெளையாடச் சேரமாட்டேன்” என்றாள். ஆனால், மகள் சொல்வது அவர் காதில் விழவே இல்லை. அவரைத் தேடி வந்திருக்கும் ஆசாமிகளின் முகத்தைப் பார்த்ததும், அவர் மனம் வேறு உலகுக்குத் திரும்பி விட்டது. அந்த உலகத்து விளையாட்டே ஒரு தனி ரகம். ஆனால் இப்போது விளையாடிய விளையாட்டில் இன்பம் இருந்தது. உள்ளம் முழுதும் இதிலே ஈடுபட்டது. அவர்களோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்திலே கொஞ்சம் தவறினாலும், அதல பாதாளத்திற்குப் போய்ச் சேர வேண்டியதுதான். அந்த எல்லையில்லா வாழ்க்கை விளையாட்டிலே அடி எடுத்து வைத்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். நூலேணியில் வித்தை காட்டும் பெண் போல், ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த முப்பத்தைந்து வருஷ விளையாட்டிலே நன்றாக அடிபட்டுக் கை தேர்ந்துமிருக்கிறார். ஆனாலும், அதில் கரை கண்டாரா என்பது அவருக்கே விளங்காத விஷயம். வாசலில் தனிந்து நின்று கொண்டிருந்த செல்லாயாளின் கருவிழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. தன் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருக்கும் மாரியப்பனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். மாரியப்பனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. “என்னை நீ பார்த்ததில்லையா?” என்றான். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. மறுபடி ‘கலகல’வென்று சிரித்துக் கொண்டு, “இல்லெ மாரியப்பா. வெளையாட்டுப் பாதியோடே நிண்ணு போச்சு. எனக்கு நீ வந்ததே தெரியிலே” என்றாள். “எந்த விளையாட்டு? ஒண்ணும் பாதியிலே நிக்காது” என்றான். மறுபடி இரண்டு பேரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு தோட்டத்துக்குப் புறப்பட்டார்கள். |