உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
13 நல்லது செய்தவர்களுக்கு நல்லதும், கெட்டது செய்தவர்களுக்குக் கெடுதலும் விளைவதாக இருந்தால், இந்த உலகம் வெகு நாளைக்கு முன்பே அமர உலகமாக ஆகியிருக்கும். ராமசாமிக் கவுண்டர் தன்னுடைய பரோபகார குணத்தை எண்ணி ஒரு நாளும் வருத்தப் படவேயில்லை. தருமம் செய்தவன் கெட்டுப் போய் விட்டதற்காக துளிக் கூட வருந்துவதில்லை. ஒரு நாளும் தருமமே செய்யாதவன், செய்து அறியாதவன் மற்றவர்கள் செய்யும் தருமத்தைக் கண்டு வருந்துகிறான். உலக இயற்கையும் விதியின் போக்கும் இப்படி ஒன்றுக்கு ஒன்று வக்கணையாக இருக்கிறது. கடந்த நாலைந்து வருஷங்களாக காங்கய நாட்டிலே மழை துளி இல்லாமல் குடிபடைகள் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகி விட்டார்கள். ஏழை எளியவர்கள் உடுக்கும் துணிக்கும் கதியற்றுப் போய் விட்டார்கள். குடிசைகளிலுள்ள குழந்தைகள் தலைக்கு எண்ணெய் கண்டு மாதக் கணக்கு வருஷக் கணக்காகி விட்டது. ராமசாமிக் கவுண்டரின் பண்ணயம் பெரியது. அப்பேர்பட்ட பண்ணயமே ஆட்டங்கண்டு விட்டது. காணாமல் என்ன செய்யும்! ஆடு மாடுகளுக்கு நோய் வந்தது. வந்த நோய் அரை குறையாக விட்டு வைக்கவில்லை. ஆடுகளுக்கு வந்தால் பட்டியோடு அதோகதிதான். இரண்டு நாள் தலையைக் குத்திக் கொண்டு நிற்கும். மூன்றாம் நாள் தீர்ந்தது காரியம். ஆடுகள் போகட்டும். பாராசாரியான காளைகள் கதி என்ன? மாடுகளுக்கு இந்த மாதிரி நோய் இதற்கு முன் வந்ததில்லை என்று பேசிக் கொண்டார்கள். அறுபது வருஷத்துக்கு முந்தி வந்த ‘கஞ்சித் தொட்டி’ப் பஞ்சத்தின் போது கூட கொங்கு நாட்டு வாழ்வு இவ்வளவு சீர்குலைந்து போகவில்லை. நின்றது நிற்க திடீரென்று விழுந்து இறந்த காளைகள் எத்தனையோ! என்ன வைத்தியம் செய்தும் நீங்கவில்லை. ராமசாமிக் கவுண்டரின் நாலு ஜோடிக் காளைகள் இரண்டே நாளில் மடிந்து போய்விட்டது. கன்னபுரம் தேரில் ஜோடி அறுநூறு ரூபாய்க்குக் கேட்ட காளைதான்! என்னத்தைப் பண்ணுவார்? தலையில் கை வைத்து உட்காருவதைத் தவிர வேறு ஒன்றும் ஓடவில்லை. அப்போதும் அவர் கலங்கவில்லை. கிணற்று வெட்டுக்கு விட்டார். சோதனை போட்ட பக்கமெல்லாம் பாறைகள் தான்! தண்ணீர் எத்தனை ஆழம் போனாலும் காணோம். பூமியே வரண்டு விட்டதாக்கும்! இந்த நெருக்கடியில் எவ்வளவோ குடும்பங்கள் அடிபட்டுப் போய்விட்டது. பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் வெளியே தலை நீட்ட முடியவில்லை. மனம் புழுங்கிக் கொண்டே வீட்டோடு அடைந்து கிடந்தார்கள். ஆரம்பத்தில் நாலு பேருக்கு யோசனை சொல்லிக் கொண்டிருந்த ராமசாமிக் கவுண்டனே கடைசியில் வீரப்ப செட்டியாரை நாடும்படி நேர்ந்தது. செட்டியார் தலையைத் தடவிக் கொண்டு சிரிப்போடு தான் வரவேற்றார். செட்டியாரை அண்டினார். அவர் தான் அப்போது ஆட்கொள்ளக் காத்திருந்தார். கடைசியில் பூமிகளையும் ஆட்கொண்டு விட்டார். கடைசியாக எஞ்சியது ஆற்றங்கரைத் தோட்டத்திலே பத்தில் ஒரு பாகம் தான். ஏதோ அரைக்கஞ்சி குடிக்கலாம். அந்தச் சமயம் அதே அபூர்வமாக இருந்தது. எங்கே பார்த்தாலும் தரித்திரம் பிடுங்கித் தின்றது. யார் முகத்திலும் ‘களை’ இல்லை. அநேகமாக எல்லாப் பூமிகளுமே செட்டியார் வசம் ஆகி விட்டது. மிஞ்சியது இரண்டொன்று மணியக்காரர் கடாட்சத்தால் தலையை உயர்த்திக் கொண்டிருந்தது. ஊருக்குள்ளே மணியக்காரர் குடும்பம் மட்டும் பழைய நிலையில், ஏன், அதைவிட நல்ல நிலையில் இருந்தது. இதற்குக் காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர் அடைந்த பலன் ரொம்பப் பெரியது. இப்போது அவர் தனியாக வீட்டைவிட்டு வெளியே புறப்படுவதில்லை. புறப்படவும் முடியாது. தன்னைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. எப்பவாவது சுப்பண முதலி மணியக்காரர் வீட்டுப் பக்கம் போவான். ஊர்ச்சங்கதிகள் அப்போதுதான் அவருக்குத் தெரியவரும். தலையாரிகள் எந்நேரமும் வீட்டைச் சுற்றிக் காவல். ஒருநாள் ‘பிசு பிசு’ என்று மழை தூறிக் கொண்டிருந்தது. தூறல் அடங்கியதும் களத்து வாசலில் போட்டிருந்த பருத்தி மலகுகளைப் பார்த்து விட்டு வர மணியக்காரர் போயிருந்தார். திரும்பி வருகையில் நாலைந்து சிறுவர்கள் ஒரு செம்பூத்தைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். பின்னால் ஓடி வரும் சத்தத்தால் அலண்டு போய் மணியக்காரர் ஓட்டமெடுத்து விட்டார். தலையாரி ஆனமட்டும் பின்னால் கத்திக் கொண்டே ஓடிவந்தும் மணியக்காரர் வீட்டு வாசலில் வந்து தான் நின்றார். அதுவும் வாசலில் போட்டிருந்த வாழை மட்டை தடுக்கி விடவும்தான் ஓட்டம் ஓய்ந்து வாசலில் விழுந்தார். அவசரமாக எழுந்தும் முழங்காலில் காயம் பட்டு விட்டது. ரத்தமும் கசிந்தது. செல்லாயா கொஞ்சம் சாணியை காயத்துக்கு வைத்துக் கட்டிக் கொண்டே, “நாமொ வேறெ ஊருக்குப் போயிட்டா என்னுங்க?” என்றாள். மகள் சொல்லியது சிரிப்பையும் கோபத்தையும் மூட்டியது. “பொளப்புத் தளப்பை உட்டுப் போட்டா? எலிக்குப் பயந்துகிட்டு ஊட்டைச் சுட்டாப்பிலே இருக்குதே” என்றார். மகளுடைய முகத்தைப் பார்த்ததும், “நீ சும்மா இரு செல்லாத்தா. மடியிலே இது இருக்கற முட்டும் (துப்பாக்கியைத் தொட்டு) எவங் கிட்ட வந்திடுவான்! அந்த ராமசாமிக் கவுண்டனைப் ‘பிரிக்’கட்டாதெ போவனா?” என்றார். செல்லாயாளுக்கு இதொன்றும் பிடிக்கவே இல்லை. இப்போது பெரிய பெண்ணாகி விட்டாலும் பழைய குறும்பும், விளையாட்டும் நிறைந்துதான் இருந்தது. “நல்லாப் பிரிக்கட்டினீங்க! காலுக்குத் துணிகட்டலாம் உள்ளெ வாங்க. வேதுங் குடுக்கலாம். ராமசாமிக் கவுண்டர் எப்பவும் மரியாதையாகத்தான் இருக்காங்களா. நீங்க சித்தெ சும்மா இருங்க” என்றாள். மணியக்காரர் அப்போது சும்மாதான் இருந்துகொண்டார். ஆனால் எல்லாரையும் முறுக்கிவிட்டு ராமசாமிக் கவுண்டர் வேடிக்கை பார்ப்பதாக அவர் நினைத்தார். அவர் எப்படியோ நினைத்துக் கொண்டு போகட்டும். உண்மையில் ராமசாமிக் கவுண்டர் இப்போது சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். பாடு பரப்பைப் பார்ப்பதற்கு நேரமா போதவில்லை? வேண்டிய நேரம் இருக்கிறது! ஆற்றுத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டு மரத்து நிழலில் படுத்திருப்பதைத் தவிர இப்போது அதிக வேலை இல்லை! ஐந்து வருஷத்துக்கு முன்பிருந்ததையும் இப்போதைய நிலையையும் எண்ணினால் அவருக்குச் சிரிப்பு வந்தது. காலையில் கொட்டத்தூட்டுக்காரர் கால் ரூபாய் கடன் கேட்க வந்திருந்தார். ராமசாமிக் கவுண்டர் சட்டெனக் கால் ரூபாய் கொடுக்க முடிந்ததா? வெத்திலைப் பையைப் பத்துத் தரம் தேடின பிறகு ஒரு மூலையிலிருந்து அது ‘பொத்’தென விழுந்தது. கொட்டத்தூட்டாருக்கு அதைக் கண்டதும் கற்பக விருட்சத்தையே கண்ட மாதிரி சந்தோஷம். “பாவம் ஒரு காலத்தில் இவர் பொளப்புத் தளப்பு எப்படி இருந்தது?” என்று நினைக்கவும் ராமசாமிக்கு ‘சொரேல்’ என்று பற்றிக் கொண்டது. கொட்டத்தூட்டார் குதிரையில் தான் சவாரி. ஆள் ஆறு அடி உயரத்துக்கு மேல் இருப்பார். நல்ல ஜவான். காங்கயம் சந்தையில் நாலுபடி கடலையும், இரண்டு தேங்காயும், எட்டணா வெல்லமும் வாங்கி மடிக்குள் போட்டுக் கொண்டாரென்றால் பன்னிரண்டு மைல் குதிரையில் ஊர் வருவதற்குள் தீர்த்துக் கட்டிவிடுவார். ஒரு கன்றுக்குட்டியை ஓங்கி கையால் அறைந்து முடித்திருக்கிறார். அப்படிப் பலமாக வாழ்ந்தவர் தான். அவரும் ஒரு ஆயிரம் கடன் வாங்கி, ஒண்ணு நாலாகி, நாலு பத்தாகி, பத்தாயிரம் கடனுக்கு, கடனை அடைக்க வேறு வகையில்லாமல், இருபது ஆயிரம் பூமி அடியோடு போய்விட்டது. எவன் தான் வட்டிக்குக் கடன் வாங்கினவன் உருப்படி ஆகியிருக்கிறான்? “ஏனப்பா போகுட்டா?” என்றார் கொட்டத்தூட்டார். அந்த நாலணாவைத் திருப்பிக் கேட்கிற நிலையில்தான் இருந்தார் ராமசாமி. ஆனாலும், கேட்க மனம் வரவில்லை. “போயிட்டு வாங்க” என்றார். அன்றைக்குக் காலையில் நடந்த ஒரு சோக சம்பவம் அவர் உணர்ச்சிகளைக் கிளறி விட்டுக் கொண்டே இருந்தது. மாரக் கவுண்டன் குடும்பம் முப்பது வள்ளம் பூமியும் போன கதை ஒரு ‘கண்றாவி’ தான். இத்தனைக்கும் நல்ல சோறு கிடையாது. உண்டு உடுத்தியும் கெட்டுப் போகவில்லை. இரண்டு மூன்று ‘சாயிண்ட்’ கையெழுத்துப் போட்டதுதான். ‘ஜாமீன்’ போட்டவனையே பிடித்தது. கடன் வாங்கியிருந்தவன் கைவிரிச்சு விட்டதால் மாரப்பன் குடும்பம் அரோகரா! காலையில் இரண்டுபடி கம்புக்கு அவர் தவியாய்த் தவித்தது ராமசாமிக்கு பார்க்க முடியவில்லை. கடைசியில் தன் வீட்டிலிருந்துதான் கொடுத்தார். இந்தக் கஷ்ட காலத்திலும் சிரித்துக் கொண்டேதான் அவைகளைச் செய்தார். ஆனால், முந்திய இராத்திரியிலிருந்து நல்ல தூக்கம் இல்லை. மகன் இன்று திருப்பூரிலிருந்து வரப் போகிறான். மூன்று வருஷங்களாக மாரியப்பன் ஊர்ப் பக்கமே வரவில்லை. ஏதோ அரையும் குறையுமாக ஊர் விவரங்களைக் கேட்டானே ஒழிய இந்தக் கோலத்தில் இருக்கும் என்று மாரியப்பன் கற்பனை கூடப் பண்ணவில்லை. ஒரு காலத்தில் எவ்வளவோ ஆர்வத்தோடு பையனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார். அவன் திரும்பி வருவதே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. இப்படி ‘நொடிந்து’ போய் விட்டதால் மேற்கொண்டு தொடர்ந்து படிக்க வைக்க முடியவில்லை. படிப்பு இல்லாவிட்டால் போகிறது? மகன் இவைகளைப் பார்த்து ‘பொக்’கென்று ஏக்கமடைவானே! அவன் என்னென்ன எண்ணிக் கொண்டு வருவானோ? ஆனாலும் புத்திசாலி. குடும்பக் கஷ்டம் தெரியாதா? இருக்கட்டும், பார்ப்போம் என்று பலவிதமாக ராமசாமிக் கவுண்டர் யோசித்துக் கொண்டே ஆற்றின் அக்கரைத் தடத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மைலுக்கு அந்தப்புறம் கார் ஓடும் ரோடு. அங்கிருந்து நடந்து தான் வரவேண்டும். முன்னத்த காலமாக இருந்தால் வண்டி அனுப்பியிருப்பார். இப்போது? சாட்டை கிடக்கும் இடம் கூடத் தெரியவில்லை. அந்திச் சாயை மறையும் போது மாரியப்பன் வந்து சேர்ந்தான். கையில் ஒரு புத்தகம், பையிலும் புத்தக மூட்டை, பெட்டியில் துணிகளும் புத்தகங்களுந்தான் இருக்க வேண்டும். ஆர்வத்தோடு மகனை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனார். தாயார் எப்போதும் போலத்தான் இருந்தாள். ராமசாமிக் கவுண்டர்தான் நடுச்சாமத்துவரை எல்லா விவரமும் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே மாரியப்பன் எல்லாம் கேட்டான். விடிந்ததும் சிரித்துக் கொண்டே ஆற்றங்கரைப் பக்கம் புறப்பட்டான். இரவில் மகன் முகத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிரித்தபடி போகிறானே! கொஞ்சங்கூட அந்த முகத்தில் கவலைக் குறி படரவில்லை. தன் மகன் சிரித்தபடி இருப்பதைப் பார்த்து ராமசாமிக் கவுண்டருக்கு எவ்வளவோ ஆறுதல் ஏற்பட்டது! நெஞ்சிலிருந்த பாரமே இறங்கியது போலிருந்தது. |