5

     இளம் உள்ளங்களின் கனவுகளை எழுத்தில் எழுதுவதென்பது கொஞ்சம் சிரமமான காரியந்தான். முடியாது என்றே சொல்லிவிடலாம். அவர்களுடைய எண்ணங்கள் இந்தக் கணம் பூமியைச் சுற்றி நிறைந்திருக்கும். மறுகணம் கற்பனைச் சிறகு கொண்டு வானவளையத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும். கண்காணாத இடங்கள் வர்ணனைக்கு எட்டாத மார்க்கங்கள். அங்கெல்லாம் சுலபமாக அவர்கள் உலவ ஆரம்பித்து விடுவார்கள்.

     மாரியப்பனுக்கு வயசு பதினாறு ஆகிறது. திருப்பூர் பள்ளிக்கூடத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். உள்ளூரிலே கூத்து நடக்கையில் மகன் பக்கத்திலிருந்து பார்க்காமல் படிப்பு என்ன வேண்டியிருக்கிறது என்பது அவனுடைய அம்மாவின் கவலை. அவள் அப்படித் தொந்தரவு பண்ணியிருக்காவிட்டால் நடுவளவு ராமசாமி இந்தத் தடவை போய்க்கூட இருக்கமாட்டார். தலைக்கு மேலே நூத்தி எட்டு வேலையை வைத்துக் கொண்டு இருக்கிற ஆசாமி, கூத்துப் பார்க்கத்தானே போகாமல் இருக்கும் போது பையனையும் படிப்பை விட்டுக் கூட்டிக் கொண்டா வருவார்? ஆனால், அவர் தாயார் இதே சாக்கில், இந்தத் தடவை நாட்டராயன் கோவிலுக்கும் பையனைக் கூட்டிக் கொண்டு போகலாம் என்பதற்கே வரச் சொல்லி இருந்தாள். போனவருஷம் நாட்டராயனுக்கு விட்டிருந்த கிடா பெரிதாக வளர்ந்திருந்தது. ஊரிலே எல்லோரும் இந்த மாசம் போகிறார்கள். இந்த மகிழ்ச்சியிலெல்லாம் மைந்தனும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று பெற்றவளுக்கு ஆசை இருக்குமா இருக்காதா?

     செல்லாயா எத்தனையோ சங்கதிகளைச் சொல்லத் துடித்துக் கொண்டிருந்தாள். செட்டியார் வாங்கியிருக்கும் புதுக் குதிரை வண்டியில் தகப்பனாரோடு காங்கயம் சவாரி போய் வந்ததிலிருந்து, இந்தத் தீபாவளிக்குத் தைத்த ‘பாவாடை’ வரை அவளுக்குப் பேச எத்தனையோ விஷயங்கள் பாக்கியிருந்தது. தானும் காங்கயமோ, திருப்பூரோ போன்ற ‘டவுண்’ பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டியவள் தான் என்று மாரியப்பன் ஊரிலிருக்கும் வரை கனாக்கண்டு கொண்டிருந்தாள். ஆனால் சென்ற வருஷம் அவன் திருப்பூர் போன போது, இவளுக்கும் போகப் பிரியம் தான். ஆனால் மணியக்காரர் தடுத்துவிட்டார். மீண்டும் மாரியப்பன் நேற்று ஊருக்கு வந்ததும் அவளுக்கு பழைய காட்சிகள் நினைவுக்கு வந்துவிட்டது. போக முடியாவிட்டாலும் அதையெல்லாம் கேட்பதிலே, அதுவும் மாரியப்பன் மூலம் அவைகளைத் தெரிந்து கொள்வதிலே அவளுக்கு விவரிக்க முடியாத குதூகலம் உண்டாகியிருந்தது.

     “மாரியப்பா, உனக்கு என்ன வெச்சிருக்கிறேன், தெரியுமா? கொய்யாப்பழம், நகப்பழம்...”

     “எது, நகப்பழ மரம் உங்க தோட்டத்தில் இல்லையே?” என்றான்.

     “சிவன்மலைத் தேரிலிருந்து ஐயன் வாங்கியாந்தாங்க” என்றாள்.

     சிவன்மலைத் தேர் என்று கேட்டதும் இரண்டு வருஷத்துக்கு முன் தேருக்கு எல்லாருமாகப் போயிருந்த ஞாபகம் வந்தது.

     “உனக்கு நெனப்பிருக்குதா?...”

     “ஆத்துக்குப் போய் ‘குதிகுதி’ண்ணு குதிச்சமே அதைத்தானே சொன்னாய்? இண்ணைக்கும் நேரமிருந்தா ஆத்துக்குப் போலாம்” என்றாள்.

     இரண்டு பேரும் பேசிக் கொண்டே வாழைத்தோப்பை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். குலையோடு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதிலே செல்லாயாளுக்கு அதிக ஆசை. அதில் மாரியப்பனும் பங்கு எடுத்துக் கொள்வான்.

     பக்கத்திலே ‘ஜம்’ என்ற மணத்துடன் சோளப்பயிர் கைக்கு எட்டுகிற மாதிரி வளர்ந்திருந்தது.

     அதுவும் வரப்பின் மீது நடந்து செல்லுகையில் காதருகே ரகசியம் பேச வருவது போல் பயிர்கள் குனிந்து நிமிரும் போது அழகாக இருப்பது மட்டுமல்ல - மனசைக் கவரும் மணமும் அதில் கலந்திருக்கும்.

     வாழைத்தோப்புக்குள் நுழைந்ததும் குதிக்க வேண்டும் போல் இருந்தது. ‘மளமள’வெனக் குருத்துக்கள், அந்த மங்கலான மத்தியான வெயிலில், இளஞ்சிவப்பும், வாடப் பசுமையுமாக கண்ணுக்கு விருந்தாயிருந்தது. இரண்டு மூன்று குலைகளில் பழுத்த பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு குலைப் பழத்தைப் பறித்துக் கொண்டு, அங்கே ஓடி வரும் வாய்க்கால் ஓரம், வாழை மட்டையைப் பரப்பி அதன்மேல் உட்கார்ந்தார்கள். கருவேப்பிலைப் பழமும் இரண்டு மூன்று கொத்து பக்கத்திலிருந்த மரத்தில் ஒடித்துக் கொண்டார்கள்.

     “இந்த மாதிரி திருப்பூர் பள்ளிக்கூடத்திலே இருக்குதா?” என்றாள்.

     “போகவேணும்!” என்றான் அவன்.

     “எங்கே! சுள்ளிவலசுக்குத்தானே? வரவேணும்னு சொல்லு” என்றாள்.

     கொஞ்ச நேரம் பேசுவதும் சாப்பிடுவதுமாக இருந்தார்கள். “கிட்டத்தானே ஆறு? ரண்டுபேரும் போய் தண்ணி எல்லாம் வாத்துக்கிட்டு வரலாமா?” என்றான்.

     “அதுக்குள்ளே அடிச்சாஞ்சு போகாதா? சோறு திங்கப் பாத்துக்கிட்டு இருப்பாங்களே. நாம் போக வேண்டாமா?” என்றாள் செல்லாயா.

     அவள் புத்திசாலிப் பெண். சிறு வயசிலிருந்தே அதைப் பார்த்திருக்கிறான் மாரியப்பன். எத்தனையோதரம் திண்ணைப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயரிடமிருந்து அடிக்குத் தப்பித்துக் கொள்ளும் உபாயம் எல்லாம் அவள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.

     “எங்கெல்லாமோ சுத்தலாம்ணு இருந்தா, வாழைத்தோப்புக்கு கூட்டியாந்திட்டயே?” என்றான்.

     “ஏம், பழங்கெடச்சுதோ இல்லையோ? குரங்குகளுக்குப் பழம்ணா பிரியம்மிண்ணு கேட்டிருக்கிறனே?” என்றாள்.

     “அப்ப நம்ம ரண்டுபேரிலே யாரு குரங்கு!”

     “ரண்டு பேருந்தான்.”

     இருவரும் ‘சிரிசிரி’ என்று சிரித்தார்கள். சிரித்துக் கொண்டு தோட்டம் முழுதும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். எவ்வளவோ பேசவேண்டுமென்று இருவருக்கும் ஆவல். ஆனால் பக்கத்தில் இருக்கையில் ஒன்றுமே பேசமுடியவில்லை! இவர்கள் இரண்டு பேரும் சுற்றிலுமுள்ள காட்சிகளைப் பார்க்கும் தினுசே வேறு விதம். பவளாக் கவுண்டர் பார்ப்பதும் வேறு விதமேதான்.

     கையில் கவையுடன் இலந்தமுள் புதரைத் தட்டி விட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். அவரோடு கோவில் மேளக்காரன் சுப்பணன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

     சுப்பணன் சிரித்துக் கொண்டே தான் பேசுவான். சிரித்தபடியேதான் இந்த ஐம்பது வருஷ வாழ்க்கையும் கழித்திருக்கிறான். கோவில் வரும்படி ரொம்பக் குறைச்சல்தான். ஆனாலும், பிழைப்பு என்னமோ அவனுக்கு மட்டும் கஷ்டமின்றிக் கழிகிறது. எல்லாருக்கும் அவனிடம் காரியம் உண்டு. எல்லாரிடத்திலும் அவனுக்கும் காரியமுண்டு. சிரித்துக் கொண்டு ஊர்க் கதைகளை அரட்டை அடித்துக் கொண்டே ஊரை ஒருதரம் சுற்றி வந்தால் பெண்களே இரண்டு மாத சீவனத்துக்கு வேண்டியது தந்து விடுவார்கள். சுப்பணன் யார் காசையும் தம்பிடி கூட வைத்துக் கொள்வதில்லை. மற்றவர்கள் காசைத் தன்னுடையது போல் பார்க்கும் தாராள குணம்தான் இதற்குக் காரணம்!

     “ஏஞ் சுப்பணா, கள்ளுக்கடை ஏலம் கீலம்ணு திரிஞ்சுது என்னப்பா ஆச்சு?” என்றார் பவளாக் கவுண்டர். கோயில் கட்டும் கைங்கரியத்தில் தமக்கு அதிக சிரத்தையுண்டு என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம். அதோடு இராத்திரிக் கூடும் தம் சபையில் இது சம்பந்தமாக மற்றவர்களை விட ஆதாரத்தோடும் அதிகத் தகவல்களோடும் பேச வேண்டும் என்பதும் அவர் ஆசை.

     சுப்பணன் என்னவோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் சிரிப்புச் சத்தத்தைக் கேட்கவும் திரும்பிப் பார்த்தான். தாத்தா இந்த வேளையில் இங்கிருப்பார் என்று செல்லாயாள் நினைக்கவேயில்லை.

     “வெயிலுக்குள்...” என்று ஆரம்பித்தவர், பையனைப் பார்த்ததும், “அடே, நீ எப்ப அப்புனு வந்தே?” என்றார்.

     “நேத்துத் தானுங்க” என்று மாரியப்பன் சொன்னது அவருக்குக் கேட்டதோ என்னவோ? சுப்பண முதலியார் காடே அதிரும்படி கைதட்டிச் சிரித்துக் கொண்டு, “அப்படிச் சொல்லுங்க ஐயா! இப்பவே முடிபோட்டு உட்டிட்டீங்க போல் இருக்குதுங்களே?” என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கினான்.

     “தலையிலே எழுதியிருந்தா உட்டாப்பா போகும்?” என்றார் கவுண்டர்.

     இந்தப் பேச்சைக் கேட்டதும் அங்கே நிற்க முடியவில்லை அவர்களால். செல்லாயாளுக்கு தாங்க முடியாத வெட்கம். வேகமாக இருவரும் அங்கிருந்து ஓடியே விட்டார்கள்!