16

     தனிமையிலே இனிமை இருப்பதாகச் சொல்லுகிறார்கள். எல்லையற்ற வானம், நட்சத்திரப் பரப்பு, பிரபஞ்சத்தின் விந்தை விந்தையான காட்சிகள், மற்றுமுள்ள இயற்கையின் அதிசயங்களைத் தனிமையிலே உட்கார்ந்து மாதக் கணக்காக, வருஷக் கணக்காக அனுபவித்து ஆனந்தித்துக் கொண்டிருக்கலாம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால், சுள்ளிவலசு மணியக்காரருக்கு அந்த உண்மை ஏனோ தெரியவில்லை. இயற்கையின் போக்கைக் கண்டு களிப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நல்ல நண்பர்களோ, உற்றாரோ உறவினரோ இல்லை. ‘நாம் தனித்து விட்டோம்’ என்ற உணர்ச்சி மேலோங்கி விட்டால் அப்புறம் அது ‘உயிர் கொல்லியே’ தான். அந்த வாதனையின் பிரவாகம் கொஞ்சம் கொஞ்சமாக நரம்புகளுக்குள்ளும் பரவி உயிரையே அரித்துத் தின்றுவிடும். அப்போது இயற்கையின் எழிலும் பொட்டல் பெருவெளியாகக் கண்ணுக்குத் தோன்றுவதில் வியப்பில்லை அல்லவா? மணியக்காரருக்கு எதிலும் ‘பற்று’ அவ்வளவாக இப்போது இல்லை. தோட்டங் காட்டுக்குப் போனாலும் வெகு நேரம் தங்குவதில்லை. வீட்டிலும் சரியாகப் பொழுது போவதில்லை. மகளுடைய கலியாண விஷயம் வேறு அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது.

     வீரப்ப செட்டியார் சென்ற இரண்டொரு வருஷமாக இந்தப் பக்கம் வரவே இல்லை. ஏறக்குறைய அவருடைய காரியம் தான் எல்லாம் கை கூடி விட்டதே! இனி மணியக்காரர் பூமிகள் மட்டும் தானே பாக்கி! அதற்கும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

     காற்றடித்ததும் வற·ப் ண்ட இலைகள் கீழே விழுகின்றன; அதைப் போல் காலம் வந்ததும் சரிய வேண்டிய கற்கள் சரிந்து விழுகின்றன. அதன்படியே காரியங்களும் நடக்கும்! சந்தேகமே கிடையாது.

     ‘இப்படி நடக்கும்’ என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மணியக்காரர் தோட்டத்தில் மூணு ஜோடிக் காளைகள் ஒரே ராத்திரியில் மாண்டு போய் விட்டன. சாயங்காலம் தீவனம் தின்னாமல் படுத்துக் கொண்டிருந்தன. காதை அறுத்துப் பார்த்தார்கள். சூட்டைப் போட்டுப் பார்த்தார்கள். என்னத்தைப் பண்ணி என்ன? ஒன்றுக்கும் குணமாகவில்லை. நாலு வருஷத்துக்கு முன் ஊரிலுள்ள மாடுகள் எல்லாம் நோயில் மடிந்தன. அப்போது இவருடைய ஆட்டுக் குட்டிகளுக்குக் கூட ஒன்றும் வரவில்லை. எல்லாம் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தன போலும்!

     காலந்தவறி மழையும் பொழியாகப் பொழிந்தது. இல்லாதவன் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால், மணியக்காரர் பருத்தி பூசணம் பூக்குமே என்று வருந்தினார். புகையிலை தக்க தருணத்தில் மழையில் அடிபட்டு ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது.

     இந்தத் தகவல்கள் மணியக்காரருக்குத் தெரியு முன் வீரப்ப செட்டியாருக்குத் தெரிய வந்தன. தன்னை விட மற்றவர்களுக்குத் தன் ‘வீழ்ச்சி’ அதி சீக்கிரத்தில் பகிரங்க ரகஸ்யமாகிக் கொண்டு வருவது சற்று வருத்தமாகவே தான் இருந்தது.

     கிழக்கே இருந்து வந்த வைர வியாபாரி கொஞ்ச நாளாக அந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் விற்று வருவது போலி வைரம் என்பதை அடமானத்திற்கு வந்ததும் வீரப்ப செட்டியார் கண்டு கொண்டார். மணியக்காரர் ஆறு ஆயிரம் கொடுத்து அந்த வைரத்தில் மகளுக்கு மாலை பண்ணிப் போட்டிருந்தார்.

     செட்டியார், தலையைத் தடவிக் கொண்டே மணியக்காரரிடம் பேச்சை ஓட்டினார். ஏற்கனவே கொடுத்திருந்த பணத்தைப்பற்றி யெல்லாம் மறந்தவர் போலிருந்தவர் எழுத்து மூலம் ஆதாரம் தேடிக் கொள்ள விரும்பினார். விரும்புவது என்ன? துடித்தார். செட்டியாருடைய போக்கு அது. ஊருக்கு ஒரு நியாயம், தனக்கு ஒன்று, என்று வீரப்பரிடம் வைத்துக் கொள்ள முடியுமா? அதுவும் இந்தச் சமயத்தில்? ‘நமக்குள்ளே என்னுங்க வித்துவாசம்?’ என்று சொல்லிக் கொண்டே மணியக்காரரிடம் எழுதி வாங்கிக் கொண்டார். ஆறு மாதத்தில் காரையும் ‘ஒன்றுக்குப் பாதியாக’ விலை போட்டுச் செட்டியாரே எடுத்துக் கொண்டார்.

     மூன்று மாசம் டிரைவர் சம்பளப் பணத்துக்காகத் தகராறு பண்ணிக் கொண்டிருந்தான். இரண்டு மாசம் மறுபடியும் புதுக் கார் வாங்குவதாகச் சொல்லிப் பார்த்தார். அந்தப் பட்டிக் காட்டில் திரிந்து கொண்டிருக்க மலையாள டிரைவருக்குப் பைத்தியமா என்ன? கொஞ்சம் சம்பள விஷயமாக பேச்சு வார்த்தை தடிக்கவே, “என்ன மணியக்காரரே, ஊர் கூட்டி நாலு பேரை வெச்சுக்கிட்டு, பெட்ரோலுக்கு அப்பப்போ ஆட்டுக் குட்டியைக் கொண்டு போய் வித்ததை எல்லாம் சொல்றதா?” என்று கேட்டு விட்டான். அவன் சொல்லியதில் பக்கத்திலிருந்த ஏழெட்டுப் பேருக்கு அரைகுறையாக அர்த்தமாயிற்று. அதிலிருந்து ‘முன்னூல் பிடித்து’ கணக்கு எடுக்க அவர்களுக்குத் தெரியாத என்ன? காதும் காதும் வைத்தாற்போல் அவனை மரியாதையாக அனுப்பி விட்டார்.

     முன்னெல்லாம் தலையாரிகள் கையைக் கட்டிக் கொண்டு அடக்க ஒடுக்கமாகப் பின் தொடருவார்கள். முகத்தைப் பார்த்தாலே நடுங்குவார்கள். கை அசைத்தால் ஓடி வருவார்கள். இப்போது பேர் சொல்லிக் கூப்பிட்டால் கூட ‘அன்ன நடை’ நடக்க ஆரம்பித்து விட்டார்கள். கண் எதிரிலே இதை எல்லாம் மணியக்காரர் கண்டார். ஒரு ஆறு மாதத்தில் ‘காலோடு ஒன்றாக’ மணியக்காரரும் ஆகி விட்டார். காரும், வண்டியும் போய் சாதாரணப் பூமிக்கு வந்துவிட்டார்.

     வெள்ளம் கரைபுரண்டு போவதைக் கண்டால், கீழே கால் வைக்கக் கொஞ்சம் பயம். குண்டு குழி இருக்குமா? படகுக்காரன் எங்கே? தண்ணீர் எப்போது வடியும் என்ற கவலை எல்லாம் அப்போதுதான். பாதம் மறையத் தண்ணீர் போகும் போது குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். துளிக்கூட பயமில்லாமல் எல்லாரும் ஏக போக உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

     அடேயப்பா! நாலு வருஷத்துக்கு முன்பு, நாலு என்ன, போன வருஷம் வரை மணியக்காரருக்கு கொஞ்சம் உயரமான இடம் அளிக்கப்பட்டிருந்தது. சமூகத்திலிருந்து சற்று உயர்ந்த, அந்த உன்னத ஆசனத்திலிருந்து கீழே நோக்கினார். இப்போது தோட்டத்து ஆள்க்காரனே, “பொவிலை இருந்தா குடுங்க” என்று கேட்கும்படி இறங்கிவிட்டார்.

     அவர் காது கேட்க நாலைந்து பேர், “இப்ப புத்தி வந்திருக்கும்” என்று பேசிக் கொண்டு போவது கேட்டது. ஒருவன், “அடே எஞ்சாமி, செட்டி கடைசிலே காலை வாரி உணைந்தானே உட்டிட்டான்! உங் குடுமீந்தானே சிக்கிக் கிட்டது? அதுக்குள்ளே கன துள்ளுத் துள்ளினையே!” என்றான். பிறகு பலமான சிரிப்புச் சத்தம்.

     அந்தச் சிரிப்புச் சத்தம் காற்றில் மிதந்து வந்து இதயத்தில் ‘கணீர்’ என்று ஒலித்தது. நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். மரக்கட்டை போலத்தான் இருந்தது.

     ‘மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்குமா?’ என்பது பழமொழி. வெளிக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கட்டும் என்று அவர் ‘மூடி மூடி’ வைத்துப் பார்த்தார். மகள் கலியாணத்தைச் சட்டென்று முடித்து விடலாம் என முன்பு பெண் பார்க்க வந்த இடங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பினார். ஆனால் ‘வெறுங்கை’ என்னத்தை முழம் போடும் என்பது மற்றவர்களுக்குத் தெரியாதா?

     பாலதுளுவு பக்கத்து ஊர். பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் பெண் பார்க்க இரண்டு வருஷத்துக்கு முன் இங்கு வந்திருக்கிறார்கள். இப்போது வலிய இவர் கேட்கப் போய் கருக்கங்காட்டுச் செல்லணன் சொல்லி அனுப்பி இருந்தான். செல்லணனுக்கு வயசு அறுபதுக்கு மேல் ஆகிறது. செல்லாயாளுக்குத் தாத்தா போல் இருப்பான். ஆமாம், பவளாக் கவுண்டரும் அவரும் ஒரு வருஷத்தில் பிறந்தவர்கள் தான். மணியக்காரர் வந்த ஆளிடம், “செரி பார்க்கலாம்” என்று சொல்லி அனுப்பினார். கொஞ்ச நேரத்தில் ஊரெங்கும் இந்தப் பேச்சுப் பரவி விட்டது.