19

     காலையிலிருந்து மழை தூறிக் கொண்டிருந்தது. பொழுது சாயும் வரை இந்தத் தூறல் ஓயாது போல் இருந்தது.

     மாரியப்பன் துணிகளை ஒரு பையில் போட்டுக் கட்டிக் கொண்டிருந்தான். புத்தகங்கள் சின்னதும் பெரிதுமாக இருந்ததால் கட்டுக்குச் சேராமல், கீழும் மேலும் சரிந்து கொடுத்துக் கொண்டிருந்தன.

     மகனுக்குச் சோறு போட இலை அறுத்துக் கொண்டே தாயார், “போனா வாரதுக்கு எத்தனை நாளு ஆகும் அப்புனு?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

     “எப்படி சொல்றது? வேலையிலே சேந்ததுக்கு பொறகுதான் சொல்றதுக்கு ஆகும்?”

     “ஒரு மாசமாகுமா?”

     “ஒரு மாசமா? வருசம் ஆனாலும் ஆச்சு, அப்புறந்தான் என்ன? அங்கெயெ இருந்தாலும் இருந்ததுதான்.”

     தாயார் முகம் சற்று வாடியது. “கலியாணங்காச்சி செய்யறதில்லை யாப்பா?” என்றாள். மாரியப்பன் மௌனமாக இருந்தான்.

     “நம்ம ஊருச் சேரியிலெ பொண்ணு பார்த்தா எப்படி இருக்கும்? அங்கியே இருந்துக்கிட்டா அதெல்லாம் நடக்குமா?”

     அவன் சாப்பிட்டு விட்டு, கையில் பைக்கட்டு சகிதம் தோட்டத்திற்குப் புறப்பட்டான். ராமசாமிக் கவுண்டர் சாளையிலேயே இருந்தார். மழையாயிருந்ததால் சாப்பாடும் தோட்டத்திற்கே கணவனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டாள்.

     ‘கொசுத்துளி’க்காக தலை நனையாமல் இருக்க ஒரு கிழிந்து போன ஓலைக் குடையைத் தாயார் எடுத்து வந்து கொடுத்தாள். ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் போகும் மகனை வாசற்படியில் நின்றபடியே தாயார் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ஆற்றுக்கு இந்தத் தூறலிலும், குளிரிலும் யாரும் தண்ணீர் கொண்டு வரப் போக மாட்டார்கள். ஆனால் இரண்டொரு பெண்களும், அவர்களுக்கு மத்தியில் செல்லாயாளும் போய்க் கொண்டிருந்தாள். மழை சற்றுக் கனமாக வரவே கூட இருந்த பெண்கள் பக்கத்துக் குடிசைக்கு ஓடிவிட்டார்கள். தூரத்தில் வரும் மாரியப்பனையே பார்த்துக் கொண்டு நடந்த செல்லாயாளுக்கு மழை வந்ததும் தெரியவில்லை. எப்படிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்தோம் என்பதும் தெரியவில்லை. பிள்ளையார் கோவில் பாதை ஓரத்திலேயே இருக்கிறது. உள்ளே உட்காருவதற்கு சௌகர்யமான இடமும் உண்டு. மாரியப்பனும் அங்கே வந்து சேர்ந்தான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள். “நல்ல வேடிக்கை” என்றாள் செல்லாயா.

     மழை இன்னும் சற்றுப் பலமாக ஆரம்பித்தது. வான வீதியில் மின்னல் கொடிகளும் விளையாட ஆரம்பித்தன. செல்லாயா உடம்பு ஏனோ நடுங்கியது.

     “எப்பொ இது நிக்குமோ?” என்றாள்.

     “புள்ளையாரைக் கேளு!” என்றான்.

     அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இரண்டு மூன்று வாரமாக இருவரும் சந்திக்கவே இல்லை. அதற்குள் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. திருப்பூரில் ஏதோ ஒரு வாத்தியார் வேலைக்கு ஒரு ஆள் தேவையாக இருந்ததாம். தன் நண்பனிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்து, அந்த வேலையில் போய்ச் சேர்ந்து விடலாம் எனப் புறப்பட்டு விட்டான் மாரியப்பன். பள்ளிக்கூட வேலையில் அவனுக்கு விருப்ப மில்லாவிட்டால், வேறு வேலையில் சேர்த்து விடுவதாக நண்பன் வாக்குறுதி அளித்திருந்தான்.

     மாரியப்பன் கையிலிருந்த துணி மூட்டையைப் பார்த்ததும், ஆற்றுக்குத்தான் போகிறானாக்கும் என முதலில் அவள் நினைத்தாள்.

     “துளி நிண்ணதும் ஆத்துக்குப் போறது. அதுக்குள்ளெ என்ன அவசரம்?” என்றாள்.

     “பொழுது மட்டும் நிக்காது போலிருக்குதே.”

     “நாளைக்குத் தெவைக்கறது?”

     “தெவைக்கறதா?” என்று ஆச்சரியத்தோடு அவன் கேட்டுவிட்டு, உடனே, “அடடா! சொல்லலியே உங்கிட்டே? நான் போகப் போறேன்” என்றான்.

     அவள் ஊகித்துக் கொண்டாள். “எங்கே?” என்று கூடக் கேட்காமல், “சரி, உங்க புத்தி ஒரு நாளைக்கு ஒரு தினுசா மாறுதா? இல்லாட்டி ஒரே நாளிலே பல தினுசா மாறுதா?” என்றாள்.

     அவன் பேசவில்லை. பேசவும் முடியவில்லை.

     அவன் முக மாறுதலைக் கவனியாமல், “எங்கதி என்ன ஆவது? நீங்க பக்கத்திலே இருந்து புத்திமதி சொல்லாத போனா இவங்க என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் கருணை காட்டுங்க. புலி சிங்கம் கூட கருணை காட்டும்ணு கேட்டிருக்கறனே” என்றாள்.

     வெளியே ‘சடசட’ வென்று கொட்டிக் கொண்டிருக்கும் மழையை விட இந்த வார்த்தைகள் அவன் மனசில் வேகத்தோடு மோதின.

     மற்றவர்களுக்கும் அவனுக்கும் எவ்வளவோ வித்தியாசம் காணப்பட்டதே! ஆனால் இன்று? சாதாரண மனிதர்களை விட, இன்னும் சற்றுத் தாழ்வாக அல்லவா காரியங்களை மேற்கொண்டு விட்டான். சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும் செல்லாயாளை ஏறிட்டுப் பார்க்கவும் அவனால் முடியவில்லை.

     “பேசாமல் இருக்கலாமா? ஆனால், உத்தியோகத்தையும் பாக்க வேணும். போனல், நம்ம கிராமத்தையும், சனங்களையும், என்னையும் மறந்துவிடப் படாது!” என்றாள்.

     அவன் தலை குனிந்தபடியே, “நான் போகிலை” என்றான்.

     “அடே! ஒரு கணத்தில் அப்பேர்ப்பட்ட வேலையை உதறித் தள்ளி விடுவதா? பிறகு சிபார்சு பண்ணிய நண்பன் என்ன நினைத்துக் கொள்வான்? சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா?”

     வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு தன் மனத்திலுள்ள எல்லாச் சங்கதிகளையும் கொட்டித் தீர்த்தான். இந்த அறியாமையில் உழலும் சனங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. இவர்களோடு எத்தனை நாளைக்கு “அழுது” கொண்டிருப்பதென்று புறப்பட உத்தேசித்து விட்டான். இவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று எண்ணியவன், ‘ஐயோ, என்னை விட்டால் இவர்களுக்கு கதி ஏது? இன்னும் படு மோசமாக இவர்கள் போனாலும் இவர்களை விட்டு நான் பிரியப் போவதில்லை’ என்று சபதம் செய்து கொண்டான்.

     செல்லாயா சாந்தமாகக் கேட்டுவிட்டு, “சரி, அதெல்லாம் போகுது, என்னை எப்படிப் பிரிஞ்சு, சொல்லாமல் கொள்ளாமல் பயணம் கட்டினீங்க?” என்றாள்.

     என்னவோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவள் மேலே பேசவிடாமல், “என்னதான் வந்தாலும் கலங்காத உறுதி வேண்டாமா? மத்தவங்களுக்கு சொல்றதை முதலிலே நாமளே நடத்திக் காட்ட வேணும்” என்றாள்.

     அவள் சொல்வது ‘சரி’ யென்று அவனுக்குப் பட்டது. காற்றும் கலந்து கொண்டதால் வெளியே ஒரே இரைச்சலாக இருந்தது. ஆனால் அந்தக் காற்றிலே மழைத் துளிகள் அங்கும் மிங்கும் சிந்திச் சிதறி விழுவதும், வெள்ளம் பல புறங்களிலும் பாய்ந்து ஓடி வருவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவே இருந்தது. கண் கொட்டாமல் அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு போகும் போது, “இனிச் சொல்லாமெ கொள்ளாமெ போயிராதீங்க” என்றாள்.

     மறுநாள் மாலை, “நேத்து என்ன சொன்னே? இனி, உங்கிட்டே சொல்லிட்டும் போகப் போறதில்லெ. எல்லாக் காரியத்துக்கும் ஒரு முடிவு பண்ணிப் போட்டேன். நாங்கூட மணியக்காரரைப் பாக்க வேணும்” என்றான்.

     அவன் பேச்சிலும், முகத்திலும் உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது.

     “என்ன அது? நீங்க எங்க அய்யனைப் பாக்கறதிண்ணா, நான் உங்க ஊட்டுக்குப் போயி...” என்று வார்த்தையை முடிக்கு முன், “யார் கண்டாங்க, என்ன வேணும்னாலும் நடக்கும்” என்றான்.

     ஏறக்குறைய ஊர் முழுதும் ஒரே நிலையில் தான் இருந்தது. ஒரு குடும்பமாவது சௌக்கியமாக வாழும் நிலைமையில் இல்லை. எல்லாருக்கும் போதுமான ‘கடன்’ இருந்தது! பூமியை எழுதிக் கொடுத்தவர்கள் ‘ஜாயிண்ட்’ கையெழுத்துப் போட்டு ‘ஓட்டாண்டி’ ஆகியிருந்தார்கள். ஜாமீன் போட்டு முழுகிப் போன குடும்பங்களே அதிகமாக இருக்கும். குத்தகைதாரர்கள் கடனை அடைக்க வழியில்லாமல் இருந்ததோடு, குத்தகையையும் கட்டுவதற்குள் திணறித் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். ராமசாமிக் கவுண்டரும், மணியக்காரருமே சமாளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?

     “இத்தனை பேரும் ஆளுக்குள்ளே ஆளு அடங்கித் தானே இருக்காங்க. பூமியை செட்டியாருக்கு எழுதிக் குடுத்திருந்தா என்ன? வட்டி கட்டறது, குத்தகைப் பணம் குடுக்கறது எல்லாம் நம்ம ஆளுங்கதானெ? இத்தனை நாளும் குடுத்ததெ அசலுக்கு மேலே இருக்கும். உண்ணி பூமி நம்மளுதுதான். தம்பிடிக் காசு வட்டீண்ணு கட்டப்படாது. அவனவன் வெள்ளாமெ வெளச்சலெ அவனவனெ எடுத்துக்கறது. அப்பொ செட்டியார் என்ன பண்ணுவார்? என்னதான் பண்ணிப்போடறதுக்கு ஆகும்?” என்றான்.

     எல்லாரும் ஒரே அபிப்பிராயப்படி நடந்து கொண்டால் செட்டியார் ஜம்பம் சாயாது என்பது அவர்களுக்கும் நன்றாக விளங்கியது. ஆனாலும், இது நடக்கக் கூடியதா?

     “என்ன சொன்னீங்க?” என்றாள்.

     “உனக்குத் தெரிய இன்னும் கொஞ்ச நாள் ஆகும். இப்பொ உங்க தோட்டத்தையே எடுத்துக்கோ. வருசத்திலே வெளையற வெள்ளாமையிலே முக்கால்வாசிக்கு மேலெ கடனுக்கு போயிருதல்ல? அந்தக் கடனும் நல்ல செலவுக்கு வாங்கின கடனா? அதிருக்கட்டும். எத்தனை பேரு பூமியை அடமானத்துக்கு வெச்சிட்டு, போக்கியத்துக்கு வெச்சிட்டு, அந்தப் பணத்தைக் கட்ட வழியில்லாமே பரதேசியாயிட்டாங்க? இத்தனை நாளும் போனது போகுது. இனியாவது பூமிக்காரன் பூமி அவனுக்கே சொந்தம். எல்லாரும் ஒறைச்சு நிண்ணா ஆரு என்ன பண்ணிப்போட முடியும்?”

     மாரியப்பன் மனசில் அந்த யோசனை அரும்பி மலர்ந்து விட்டது.

     செல்லாயாள் உலகத்திலே இன்னும் நன்றாக அடிபடவில்லை யானாலும், வாழ்வின் கரடுமுரடான பாதைகளிலே அதிகப் பிரயாணம் செய்யாவிட்டாலும், இந்த வழி நல்ல வழி என்று அவளுக்குத் தோன்றியது.

     “ஆமா, இதைக் கேட்டாத்தானெ ஆச்சு, ஆரும் கேக்காட்டி என்ன பண்ணறது?”

     “கேக்காமெ இருப்பாங்களா? தடத்திலே குழி இருக்குதுண்ணு சொன்னா, தள்ளிப் போறவன் போறான். குழியிண்ணு தெரிஞ்சு உழுகறவன் உழுதுட்டுப் போறான். அவனை ஆருதான் தடுக்காட்ட முடியும்?” என்றான்.

     அவளுக்கு இன்னும் பலமான நம்பிக்கை ஏற்பட்டது. எவ்வளவோ கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் தோன்றவில்லை.

     இருவரும் அதைப் பற்றியே மீண்டும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எண்ணம் வேரூன்றிவிட்டது. “சரி, இனி அதிருக்கட்டும். நம்ம சங்கதி என்ன?” என்றாள்.

     வாஸ்தவத்தில் இன்று தான் அவனுக்கு அது பெருத்த சங்கடமாக இருந்தது. சுப்பண முதலி வீட்டிலிருந்து வந்த மேளச்சத்தம், “சொல்லு, சொல்லு” என்று மனக்கதவை இடித்துக் கட்டுவது போல் இருந்தது. எப்படியும் தங்களுக்குக் கல்யாணம் ஆகியே தீரும் என்ற எண்ணம் நிறைந்திருந்தாலும் அது நடக்கும் வழியைக் காணோம். வருங்காலம் கட்டோடு மகிழ்ச்சியுடன் கண்ணுக்கெதிரே விரிந்தது. அதிலே துளி இன்பம் துக்கத்திற்கு இடமேயில்லை. கலியாண காரியங்கள் மணியக்காரர் வீட்டில் நடைபெற்று வந்தாலும், செல்லாயா தனக்காகவே படைக்கப்பட்டவள். பிரமநியதியே அப்படி இருக்கையில் சாதாரண மனிதர்களால் என்ன ‘குந்தகம்’ விளைந்து விடப் போகிறது என்று மனம் பூரித்திருந்தான்.

     அன்று பௌர்ணமி; ஊரே ஒரே குதூகலத்தில் மூழ்கியிருப்பது போல இருந்தது. குழந்தைகளும், இளம் பெண்களும் வாசலிலும் தெருவிலும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

     தோட்டத்திலே அழகான வன்னிமரத்துக் கொம்பின் கீழ், ஒரு பூங்கொம்பு போல் செல்லாயா காட்சி அளித்தாள். மாரியப்பன் இதயம் அன்று தான் அழகு ஒளியில் மலர்ந்தது. எங்கிருந்தோ ஒரு மாயக் கன்னிகையே வந்துவிட்டதாக பூரித்துப் போனான்.

     “கார்த்தாலே கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லலியே” என்றாள்.

     மாரியப்பன் மெய்மறந்து நின்றான். “இப்படி யெல்லாம் வந்து போனா, ஆராச்சும் பாத்தா நல்லா இருக்குமா? சட்டுண்ணு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவேணும்” என்றாள்.

     அவள் என்ன சொன்னாள்? என்ன சொல்லுகிறாள் என்பதை ஒன்றும் அவன் அறியான். கனவில் ஆழ்ந்து விட்டான். உலகமே ஒரு அழகிய பூங்கா. அந்தப் பூங்காவிலே பூத்த ஒரு அருமையான மலர் இது. இந்த மலர் வாடும்படியான காரியத்தைக் கடவுள் கூட செய்யமாட்டார்! என்ன பைத்தியக்காரத்தனமான யோசனை என்று நினைத்து அவனே சிரித்துக் கொண்டான்.

     “செல்லாயா நாம் முடிவு பண்ணினா அது கட்டாயம் கைகூடியே தீரும். நீ பாத்துக் கிட்டே இரு” என்றான்.

     “எதைப் பாக்கறது? நீங்க எங்க ஊட்டுக்கு வந்தா என்ன? அய்யன் எங்கே வந்தீண்ணா கேப்பாங்க? இப்படியே இருந்தா, எவங் கையிலோ புடிச்சுக் கொடுத்திருவாங்க” என்றாள்.

     “எப்படி வாரது?”

     “கோல் புடிச்சு கூட்டிக்கிட்டுப் போகோணுமா?”

     அவனுக்கு அது சரியான யோசனை என்று தோன்றவில்லை. வலியப் போனால் வீண் மனஸ்தாபத்திற்கு இடமாகலாம். தவிரத் தன் தந்தையின் மானாபிமானம் - முன் நடந்ததெல்லாம் எப்படி மறந்து விட முடியும்?

     சந்திர வெள்ளம் வழிந்து ஓடும் அந்த இனிய இரவிலே அவ்விருவரும் மரத்தடியில் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்? கன்னபுரம் தேருக்குப் போகும் காளைகள் மணியின் நாதம் எப்போது மங்கி மறைந்தது என்பதொன்றும் அவர்களுக்குத் தெரியாது.

     சுள்ளிவலசிலிருந்தும் சில காளைகளைத் தேருக்குக் கொண்டு போக ‘நோட்டம்’ பார்த்துக் கொண்டிருந்தார்கள்; இந்த வருஷம் ‘காளை’கள் படு கிராக்கி, மணியக்காரரும் தேருக்குப் போவதாகத் திட்டம் போட்டிருந்தார். கலியாணமும் இந்த மாசம் செய்து விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஊருக்குள் ‘சளபள’ வென்று தேர்ப் பழமை முழங்கிக் கொண்டிருந்ததால், தோட்டத்திற்கு வந்த செல்லாயா இன்னும் இங்கேயே இருந்து கொண்டிருந்தாள்.

     வீட்டிற்குப் போகக் கால் வந்தாலும் மனசு ஏனோ வர மறுக்கிறது. ஆனால் நிலவின் எழிலிலே நின்று கொண்டே இருக்க முடியுமா? மாரியப்பனோடு எவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டிருப்பது! பேசலாம். மற்றொரு சங்கடமும் உள்ளக் கடலிலே லேசாக அலை மோதிக் கொண்டிருந்தது. சமூகத்திலிருந்து பிரிந்து நிற்கலாம் என்றாலும் சமூகத்தின் கோரப் பார்வை நிழல் போலப் பின் தொடருகிறதே!

     எங்கேயோ பக்கத்து ஊரில் பேயோட்டும் சத்தம் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. உடுக்கை அடிப்பது, ஓங்காரச் சத்தத்திற்கு அனுசரணையாக இழைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஆற்றங்கரை யோரந்தான் சுடுகாடு. கொஞ்ச நேரத்தில் ‘சாம்பல்’ எடுத்துக் கொண்டு போக அவர்கள் வந்தாலும் வரலாம். புளிய மரத்தில் ஆணி அடிக்க பேய் பிடித்தவளையும் அந்தப் பக்கமாகக் கூட்டிக் கொண்டு வரலாம். செல்லாயாளுக்கு அதை நினைக்கவும் உடம்பு சிலிர்த்தது.

     பால் நிலவில் அவள் மேனி நடுங்குவது நன்றாகத் தெரிந்தது. மாரியப்பன், “நீ பயப்படாதே செல்லாயா. தைரியம் சொல்றவளே இப்படிப் பயப்பட்டா அப்புறம் எப்படி?” என்றான்.

     “இல்லை, மனிசர்களைக் கண்டு பயக்கிலே. பேயைக் கண்டாத்தான் எனக்குப் பயம்” என்றாள்.

     சிரித்துக் கொண்டே, “மனிசப் பேய் ஒண்ணும் பண்ணாது. என்னைக் கண்டும் பயப்படாதே” என்றான்.

     அவள் பலமாகச் சிரித்துக் கொண்டு, “உடுக்கைச் சத்தம் உங்களுக்கு கேக்கிலியா?” என்றாள்.

     அவன் கண்ணை மூடிக் கொண்டான்.

     “அடேஞ்சாமி! அந்தக் கூத்தெ என்ன சொல்றது! பேய் இல்லீண்ணு சொல்றீங்களே! எங்க நாச்சக்காளுக்கு பின்னெ எப்படி எட்டுக்கு நாலுதரம் அமித்திக்குது?” என்றாள்.

     நாச்சக்காளைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். சற்று நேரம் சும்மா இருக்க மாட்டாள். ஊர்க் குழந்தை ஏதாவது ஒன்று எப்போதும் அவள் கையில் இருக்கும். குழந்தைகளுக்கு குளிப்பாட்ட வேண்டுமா? வந்து விடுவாள். குழந்தை அழுகிறதா? நாச்சக்காள் தொட்டில் ஆட்டத் தயார். வேலை வெட்டி யாராவது ஒண்டிக்காரி செய்ய முடியாமல் பிள்ளை அழுது தொந்தரவு தருகிறதா? இதோ நாச்சக்காள் கையிலெடுத்துப் ‘பராக்குக் காட்டி’ பாங்காகப் பார்த்துக் கொள்வாள். இதனால் எல்லாத் தாய்மார்களுக்கும் நாச்சக்காள் என்றால் உயிர். அவளுக்கு யாரும் இல்லை. குழந்தை குட்டியும் கிடையாது. வயசு நாற்பதுக்கு மேலிருக்கும். இன்னும் இருபது வருஷத்திற்கு முன்பு காலஞ்சென்ற தன் கணவனுக்குப் பிடித்தமான காய்கறிகளைப் பற்றிப் பேசுவதிலே அவளுக்கு சலிப்பு ஏற்படவில்லை. தன்னைப் பேய் பிடித்ததாலேதான் கணவன் இறந்து போனான் என்பது அவளுடைய பலமான நம்பிக்கை.

     “நாச்சக்காளுக்கு சன்னி; அவளுக்குப் பேயும் இல்லை. பிசாசுமில்லை” என்றான். செல்லாயாளுக்குக் கோபம் வந்துவிட்டது. இருபத்து ஐந்து வருஷத்திற்கு முன்பு, குளித்து மஞ்சள் பூசி, கோடாலிக் கொண்டை போட்டு ராசாத்தி மாதிரி, ஒற்றை மாட்டு வண்டியில், தன் சகோதரனைப் பார்க்க நாச்சக்காள் எள்ளுமாவு இடித்துக் கொண்டு போனதும், ஆற்றுக்கு அப்பாலே, இட்டேறி முக்கில், காகமலைப் பறையன் காய்ச்சலில் வந்து விழுந்து இறந்து போனவன், உச்சாணிக் கிளையிலே உட்கார்ந்திருந்து, வண்டியைக் கொடைக் கவிழ்த்துவிட்டு நாச்சக்காளைப் பிடித்துக் கொண்டதையும் கதை போல ரொம்ப ரசமாகச் செல்லாயா சொல்லி முடித்தாள்.

     “கேக்க நல்லாத்தான் இருக்குது. நான் நம்புவண்ணு நெனைக்கறயா?” என்றான்.

     “நீங்க நம்பினா நம்புங்க. நம்பாட்டிப் போங்க! நாச்சக்காளைப் புடிச்சவன் பெரியவன்!” என்றாள்.

     “இந்தக் குருட்டுத்தனமெல்லம் எண்ணைக்கு போகுமோ?” என்றான். அவனுக்குக் கோபம் வந்தது.

     “சும்மா கோவிச்சு என்ன பண்ணறது? சூளைக் காத்து மலையாட்ட வந்துதாம். கூடப்போன நம்ம குப்பாயா இண்ணைக்கும் உசிரோடே இருக்கறாள். ‘தூத்தூண்ணு’ அவ சொன்னாளாம். ‘நீயும் ‘தூ’ண்ணு சொல்லு, இல்லாட்டி காத்து வந்து அண்டிக்கும்’னு அவ பரவாப் பறந்தாளாம். நம்ம நாச்சக்கா கேட்டாத்தானெ? எங்கிட்ட குப்பாயாளே இதைச் சொன்னா” என்று ஆதாரத்தோடு செல்லாயா சொன்னாள்.

     “கொஞ்சம் குப்பாக்காளெ வரச் சொல்லாயா, நானும் பார்த்துக்கறேன்!” என்றான் வேடிக்கையாக.

     எங்கேயோ ஒரு கோழி கூவிற்று. “நேரம் போனது தெரியாமெ பேசிக்கிட்டு இருக்கறமே! வெடிஞ்சு போச்சா?” என்றாள்.

     “நாம தூங்கினாத்தான் வெடியும்?” என்றான் மாரியப்பன்.

     அன்றிரவு அவளுக்கு ஏனோ தூக்கமே வரவில்லை. வெளியே சொரியும் அழகலைகள் அவள் உள்ளத்தில் வீசத் தொடங்கியது. ஏன் இந்தப் பரபரப்பு என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். எங்கே பார்த்தாலும் ஒரே வெண்மை. வெண் படலமே தான். செடி கொடிகளும் சொக்கிப் போய் தூங்குவது போல் இருந்தது. உலகமே அதிசயத்திலே, அழகிலே சொக்கிப் போய் விட்டது. ஆனால் தான் மட்டும் ஏன் விழித்திருக்க வேண்டும்? யாருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். ஐயோ! காரணமில்லாமல் கண்கள் நீரைச் சிந்துகிறதே? சந்திர வெளிச்சம் புகமுடியாத அந்த மரவரிசைகளுக்கிடையே எதைத் தேடி அவள் கண்கள் சுழல்கின்றன?