(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) முன்னுரை நாவல் போட்டி நடத்துவதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. மற்றொரு விதத்தில் கவலை உண்டாகிறது. எழுதும் ஆற்றலுடையவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அவர்களுடைய படைப்புத் திறமையைத் தூண்டி விடுகிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள, முன்பே பல கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர்கள் முன் வருவதில்லை. புதிய எழுத்தாளர்களே தங்கள் நாவல்களை அனுப்புகிறார்கள். அப்போது ‘இத்தனை நாவல்களிலும் பரிசுக்குத் தகுதியானதாக ஒன்று கிடைக்க வேண்டுமே!’ என்ற கவலை உண்டாகி விடுகிறது. இதுவரை குறையின்றி நாராயணசாமி ஐயர் பரிசைத் தமிழ் அன்பர்கள் பாராட்டும் வகையில் வழங்கி வரும்படி நேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ‘பெண் குரல்’ என்ற இந்த நாவல் 1953-ஆம் வருஷப் போட்டியில் பரிசு பெற்றது. கலைமகளில் தொடர்ச்சியாக வந்தது. ‘பெண் குரல்’ இடைத்தரக் குடும்பத்திலே பிறந்து தன் குடும்பத்தினும் உயர்தரமான குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு, அங்குள்ளவர்களோடு மனத்தால் நெடுந்தூரம் விலகி நின்று, பலவகையான சங்கடங்களை அநுபவித்த பெண் ஒருத்தியின் குரல். சுமாரான குடும்பத்தில் பிறந்த சுசீலா சற்றுப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ராமநாதனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளுடைய கல்யாணத்தின் போதே அவளது பிற்கால வாழ்க்கையின் ரீதியைப் புலப்படுத்தும் நிமித்தம் உண்டாயிற்று. எல்லோரும் மைசூருக்குப் போய் ஊட்டிக்குச் செல்கிறார்கள். வரதன் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். சங்கீதம் சுசீலாவையும் வரதனையும் நெருங்க வைக்கிறது. வரதன் தன் உள்ளத்தை வெளிபப்டுத்துகிறான். அதைக் கண்டு சுசீலா சீறுகிறாள். இவற்றையெல்லாம் மறைவிலிருந்து அறிந்த ராமநாதன் உண்மையை உணர்கிறான். அதற்கு முன் சுசீலாவின் போக்குக்கு வேறு காரணங்களைக் கற்பித்துக் கொண்டு அவன் விலகி நிற்கிறான். இதைக் கடைசியில் சுசீலா உணர்கிறாள். அன்புள்ளங்கள் இணைகின்றன. கதையும் பூரணம் அடைகிறது. வாழ்க்கையின் அநுபவங்களை மிகவும் நுட்பமாகக் கவனித்து இந்தக் கதையில் புலப்படுத்தியிருக்கிறார் இதன் ஆசிரியை. பெண்ணின் உள்ளத்திலே தோன்றும் ஆசாபாசங்களையும் குமுறல்களையும் பொறாமையையும் நன்றாகக் காட்டுகிறார். இதில் தான் எத்தனைவிதமான பெண்கள் வருகிறார்கள்! இல்லற விளக்காகிய சுசியின் தாய், அகம்பாவம் பிடித்த அத்தை, தன் வயிற்றில் பிறந்த பெண்ணிடம் குளிர்ச்சியாகவும் பிள்ளையிடம் சூடாகவும் பேசும் பாட்டி. நவநாகரிகத்தில் தவழும் ஹேமா, பிறர் நலத்தைச் சிறிதும் எண்ணாத சுயநலப் புலி பட்டு, மலரைப் போன்ற மலர்ச்சியும் மனமும் உள்ள லீலா - இப்படிப் பலவிதமான பெண்களைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் இவர்களில் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இதே மாதிரி பேச்சு, இதே மாதிரி குணம் உடைய உருவங்களை உயிருடன் சந்தித்திருக்கிறோம். அதனால் தான் இந்தக் கதை ஜீவனுடையதாக இருக்கிறது. கதையில் நிகழ்ச்சிகளும் மனத் தத்துவமும் இழைந்து செல்கின்றன. பாத்திரங்களும் பூரண உருவம் பெற்று நடமாடுகிறார்கள். சிறிய சிறிய இழைகளெல்லாம் சேர்ந்து பெரிய கயிறாக மாறிச் சோர்ந்து போன பெண் உள்ளத்தைப் பிணைத்து வீழ்த்துவதைப் பார்க்கிறோம். கதை மேலும் மேலும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் உள்ள நடை இயற்கையாக இருக்கிறது. பேச்சும் செயல்களும் இயற்கையாகவே உள்ளன. அங்கங்கே வரும் உபமானங்கள் அனுபவ சாரமாக இருக்கின்றன. இந்தக் கதையை எழுதிய ஸ்ரீமதி ராஜம் கிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன். இப்படியே இன்னும் பல நாவல்களை எழுதிப் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|