உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) காய் 5 மனோகரம் கமழும் மாலை வேளை. ஜோடியாக ஆடவரும் பெண்டிரும் மனத்தைக் கவரும் ஆடைகளை அணிந்து உல்லாசமாக மலைப்பாதையிலே கவலையற்றவர்களாகச் சென்றார்கள். செல்வர்களான சுகவாசிகளின் ஒய்யார வாழ்க்கையைப் பறையடித்துக் காட்டும் வண்ணம் ரஸ்தாவில் இப்படியும் அப்படியுமாகப் போகும் விதம் விதமான கார்கள் தங்கள் அழகை மாலை வெயிலில் மிகைப்படுத்திக் காண்பித்தன. ஆதவனின் அந்திப் பொன்னிறத்திலே ஒன்றிப் போயிருந்த மலையரசி ஜன்னலிலே அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி நகைப்பது போல் இருந்தது. வரதன் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்த வீட்டின் அந்த ஜன்னலிலே அதுவரை யாரும் சோகத்தைக் கக்கியிருக்க மாட்டார்கள். இனி மேலும் யாரும் வரப் போவதும் இல்லை. ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் கடவுள் அருள் வள்ளல்தாம். கஷ்டத்தையும் கொடுக்கிறார், அப்படி ஒரு துயரம் நேரிட்டால் நாம் எப்படிச் சமாளிப்போம் என்று பீதி கொண்டிருக்கும் போது தாங்குவதற்குச் சக்தியையும் அளிக்கிறார். எப்படிச் சகித்துக் கொள்கிறோம் என்றே அந்த சமயத்தில் புரிவதில்லை. பின்னால் கூட, ‘நாமா அந்த மலையைத் தாங்கினோம்’ என்ற ஆச்சரியம் எழும். நான் பயந்தது இப்போது எனக்கு லபித்து விட்டது. அவர் மனத்திரைக்குள் என்ன இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஆராய்ச்சிகள் செய்து குட்டையைக் குழப்பி விட வேண்டாம். என் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார். காதலைத் தெய்வீகமாகப் போற்ற மாட்டார். ஏதோ அவர் இஷ்டப்படி, இழுக்கும் இடத்தில் எல்லாம் நீண்டு கொடுக்கும் ரப்பரைப் போல, நானும் இருப்பேன் என்று என்னைக் கேவலமாக நினைத்து விளையாட்டு போல் மணந்து கொண்டு விட்டார். இப்போது அவருக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்! படுகுழியில் விழுவோமோ, விழுவோமோ என்ற திகிலிலிருந்து விழுந்து விட்டேன் என்று தீர்ந்து விட்டது. என் போன்ற அதிசய வாழ்வு எந்தப் பொண்ணுக்காவது கிட்டி இருக்குமா? “ஐயோ பாவம்! புக்ககம் படு கர்நாடகம், அவன் ஓர் அம்மா பிள்ளை, ரொம்பவும் கஷ்டப்படுகிறாள் பெண்” என்று ஜகதுவிடம் தோன்றும் அநுதாபங்கூட என்னைக் கண்டு யாருக்கும் தோன்றாது. நாகரிகப் போர்வையும், ஆடம்பர வாழ்வின் முகமூடியும் இவர்களது உண்மைத் தோற்றத்தை வெளியே காண்பிக்க மாட்டா. என் அவல நிலையும் வெளியே தெரியாது! இதுதான் என் தலைவிதி என்று எத்தனை தீர்மானமாக உறுதி கொள்ள முயன்றாலும், என்னை அறியாமலே இருதயத்தின் ஒரு மூலையிலே வானம் குமுறுவது போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்தத் திசையில் செலுத்தலாம் மனத்தை என்று யார் யாரையோ சிந்தித்துப் பார்த்தேன். ஊர் நினைவு வந்ததும் சரளா என்னுள் வந்தாள். அப்புறந்தான் எனக்கு ஞாபகம் வந்தது. புங்கனூரோடேயே என் சங்கீத அபிவிருத்தியை மூட்டை கட்டி விட்டேனே. வீட்டிலே அப்போது யாருமே இல்லை. பெரிய குழந்தைகள், மைத்துனர், பட்டு எல்லோரும் கூனூர் ரோஜாத் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர். வரதனும் எங்கோ போயிருந்தான். விளக்கேற்றி விட்டு இரண்டு பாட்டுப் பாடலாம் என்ற எண்ணத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன். அவ்வளவு ஆடம்பரமாக எல்லாவிதச் சுக சௌகரியங்களும் நிரம்பியிருந்த அந்த வீட்டிலே சுவாமியறைப் படமோ, குத்துவிளக்கோ ஒன்றையும் காணவில்லை. செல்வமும் சுகமும் இருந்து விட்டால் கடவுளின் நினைப்பு அநாவசியம் போலும்! நான் இருந்த அறை அலமாரியில் நான்கு மெழுகுவர்த்திகள் என் கண்களில் தென்பட்டன. எப்போதாவது மின்சார ஓட்டம் தடை பெற்று விளக்கு அணைந்து விட்டால் அவசரத் தேவைக்காக அவற்றை வாங்கியிருக்க வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன். தீப ஒளியை ஒரு நிமிஷம் என்னை மறந்து உற்று கவனித்தேன். முழுவதும் பிழம்பாகத் தெரியவில்லை. அடியிலே நீலம். நடு மையத்திலே சந்திரனின் மையத்தைப் போன்ற கருமை. நுனியிலே கொழுந்துச் சிவப்பு. இத்தனையும் தாங்கிக் கொண்டு ஒளி சுடர் விட்டெரிந்தது. படாடோபமாகக் கண்ணைப் பறிக்காமல் அடக்கமாக மனத்துக்குச் சாந்தியையும் குளிர்ச்சியையும் இதனாலேயே தான் தீபச்சுடர் அளிக்கிறது என்று அறிந்து கொண்டேன். ‘இன்னல், கவலை, சோர்வு ஆகியவை இருந்தாலும் இந்த ஒளியைப் போல அன்பின் சுடரால் தாங்கப்படும் வாழ்வைக் கொடு, தேவி!’ என்று என்னையும் அறியாமல் உள்ளம் பிரார்த்தித்துக் கொண்டது. பிறகு நான் என் மனத்தை விட்டுத் துன்பங்களை எல்லாம் மறந்து பாடினேன். ஒரு பாட்டு, இரண்டு பாட்டு என்று என் மனம் முழுவதும் அதில் லயித்தது, சாந்தி கண்டது. யாருமே என்னைத் தடுப்பார் இருக்கவில்லை. தன்னிச்சையாகத் தோன்றிய கீதங்களை எல்லாம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் போதே, நான் பார்த்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்தி அணைந்தது. ஜன்னல் கதவு திறந்திருக்கிறது. ‘காற்று அணைத்து விட்டது போலிருக்கிறது’ என்று எண்ணியவளாகச் சார்த்துவதற்காக எழுந்தேன். திரும்பிய நான் திகைப்பூண்டை மிதித்தவள் போல மருண்டு நின்று விட்டேன். அறை வாயிற்படியிலே இரு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாக வைத்த வண்ணம் புன்னகை மலர்ந்த வதனத்துடன் வரதன் நின்றான்! எத்தனை நேரமாக இருக்கிறானோ? “மிக நன்றாகப் பாடுகிறாயே சுசீலா! பக்க வாத்யம் இல்லாமல் ரேடியோவில் யார் பாடுகிறார்களோ என்று நான் எண்ணிக் கொண்டே வந்தவன், நீ பாடுகிறாய் என்று தெரிந்து கொண்டதும் அதிசயப்பட்டுப் பிரமித்து விட்டேன்! இவ்வளவு இனிமையான சாரீரமும் சங்கீதத் திறமையும் படைத்தவள் நீ என்று எனக்கு இதுவரை யாருமே சொல்லவில்லையே!” என்றான். வெட்கமும் பயமும் என்னைச் சூழ்ந்து கொண்டன. அசையவும் மறந்தவளாகத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றேன். “எத்தனை வருஷம் சிட்சை சொல்லிக் கொண்டிருக்கிறாய்? யாரிடம்?” என்று அவன் கேட்டான். நான் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல முணுமுணுத்தேன். “இன்னும் இரண்டு பாட்டுக்கள் பாடுகிறாயா? அதற்குள் ஏன் எழுந்து விட்டாய்? நான் வந்து விட்டேன் என்றா? நானும் ஓரளவு சங்கீதம் பயின்றிருக்கிறேன். கொஞ்ச காலமாக வீணை கூடச் சாதனை செய்து வருகிறேன். நீ இவ்வளவு உயர்தரமாகப் பாடுவாய் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு நாளாக” என்றான் அவன். பலவந்தமாக ஒரு சிறைக்குள் அகப்பட்டுவிட்டது போல் இருந்தது எனக்கு. வீட்டிலே யாரும் இல்லை. ‘இவன் சொல்லுகிறபடி பாடலாமா? திடீரென்று பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்கள்? ஆனால் ஏன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அவனுக்கும் இந்தக் கலையிலே ஞானம் இருக்கிறது. என்னை மதித்து, விரும்பி இரண்டு பாட்டுக்கள் பாடச் சொல்லும் போது நான் மறுக்கலாமா? நான் புக்ககம் வந்து அத்தனை நாட்களிலே என்னைப் பாடு என்று யாருமே அதுவரையில் சொன்னதில்லை. பெரும்பாலும் விவாகத்துக்குப் பெண் பார்க்க வருகிறவர் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கலை ஆர்வம் உள்ளவர்களைப் போல் காண்பித்துக் கொண்டு பெண்ணைப் பரீட்சை செய்து பார்ப்பதுடன் சரி, கணவன் வீடு வந்து விட்டால் அவள் பாட்டு, ஆட்டம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். குழந்தையின் வளர்ச்சிக்குத் தாயின் அரவணைப்புத் தேவையாக இருப்பது போல, கலை வளர்ச்சிக்குப் பிறருடைய உற்சாகத் தூண்டுதல் தேவை. அது இல்லாவிட்டால் உள்ளே இருக்கும் கலை சோம்பு உறங்கி மங்கி விடும். மனைவி கற்றிருக்கும் அருங்கலையைப் போற்றி வளர்க்கும் கணவன்மார்கள் நம் சமூகத்தில் மிகக் குறைவு. அப்படியே அவன் ஆர்வம் உள்ளவனாக இருந்தாலும் சூழ்நிலை சரியாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை ரஸிகத் தன்மையைத் தொட்ட கையைக் கூடக் கழுவிக் கொண்டு பிரமன் அவரைப் படைத்திருக்க வேண்டும். அவரைச் சார்ந்தவர்களும் சங்கீதத்தை வீசையாக அளக்கும் ஞானந்தான் படைத்திருந்தார்கள். ரேடியோ வைத்திருக்கிறார்களே, அது பெருமைக்குத்தான். கடனே என்று அது ஏதாவது அழுது கொண்டிருக்க, அவர்கள் சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். தூண்டுதல் இல்லாவிட்டால் பாடவே முதலில் மனம் எழும்புவதில்லை. இரண்டாவதாக எனக்கு அந்த வீட்டிலே எங்கே ஓய்வு இருந்தது? இப்போது வரதன் என் கானத்தை ரஸித்துக் கேட்டிருக்கிறான். உற்சாகத்துடன் இன்னும் இரண்டொரு பாட்டுக்கள் இசைக்கத் தூண்டுகிறான். என் கலை தளிர்த்து வளர இதுதானே தேவை? நான் ஏன் பாடக் கூடாது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு நான் என்ன பாட்டுப் பாடலாம் என்று யோசனை செய்தேன். அதற்குள் அவன், “இரு சுருதிப் பெட்டி கொண்டு வருகிறேன்” என்று போனான். நான் இதுதான் சமயமென்று கூடத்துக்குள் வந்து உட்கார்ந்து கொண்டேன். நடுவே அவன் சுருதிப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தான். எனக்குக் குரல் நடுங்கியது. அவசர அவசரமாக ஒரு பாட்டைப் பாடி முடித்து விட்டு எழுந்தேன். “நான் சொல்லாமலே நீ பாடிக் கொண்டிருந்தாயே, அந்த இனிமை இப்போது குன்றி விட்டது. நான் முட்டாள்தனம் பண்ணினேன். தெரியாமல் வெளியிலேயே நின்றிருக்க வேண்டும்!” என்று அவன் நகைத்தான். சங்கோசத்தின் பிடியிலேயே சிக்கிக் கிடந்த நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன். “நீ இப்போது பாடினாயே, அந்தப் பாட்டை நான் வீணையில் அப்பியசித்து வருகிறேன். இதோ வாசிக்கிறேன். எப்படி இருக்கிறதென்று சொல், பார்க்கலாம்!” என்று என் பதிலை எதிர்பாராமலே அவன் வீணையைத் தூக்கிக் கொண்டு வந்தான். அடி மனத்தில் அச்சம் துடித்தது எனக்கு. சுருதி கூட்டிக் கொண்டு அவன் நான் பாடிய கீதத்தை அதே மாதிரியில் வீணையில் இசைத்தான். அவ்வளவு உயர்தரமாக அவன் வாசிப்பான் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. “என்னைக் கேலி செய்வது போல வாசித்து விட்டீர்களே!” என்று மெல்ல திகைத்தேன். “இல்லை, சரணத்தின் அடியில் நீ நிரவல் செய்தாயே? அந்தக் கற்பனை, புது மாதிரியாக இருந்தது. எனக்கு அது வரவில்லை. எங்கே அந்த அடியை மட்டும் கொஞ்சம் இன்னொரு தரம் சொல்லிக் காட்டேன்” என்றான் வரதன். என் அச்சத்தினூடே இந்தப் புகழ்ச்சி சற்று உற்சாகத்தையும் ஊட்டியது. “சும்மா வேடிக்கை செய்கிறீர்கள். நான் பாட மாட்டேன்” என்று கொஞ்சம் பிகுவாகவே உள்ளே ஓடி வந்து விட்டேன். நல்ல வேளையாக அப்போது பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டதை அறிவித்தபடியே சுகுமாரும் மைதிலியும் கட்டியம் கூறிக் கொண்டு குதித்தோடி வந்தனர். வீணையும் கையுமாக அமர்ந்திருந்த வரதனை மைத்துனர், “ஏதேது வரதா, வீணை கீணை எல்லாம் வாங்கி வாசிக்கிறாயா, என்ன?” என்று வியப்புடன் வினவினார். “ஏதோ பொழுது போக்காகக் கற்றுக் கொண்டேன். அடுத்த வாரம் வானொலியில் முதல் தடவையாக என் குரல் கூடக் கேட்கும்” என்று என்னிடம் கூறாத சங்கதியைக் கூறிவிட்டு அவன் வீணையைக் கீழே வைத்தான். “சுசீலா!” என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு நேராக உள்ளே வந்தான் பட்டு. “வரதன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதா? டென்னீஸ் மாட்சுக்குப் போவதாகச் சொல்லிப் போனானே?” என்று கேட்டாள். “எனக்கே எப்போது வந்தார் என்று தெரியாது. நான் வேலையை முடித்துக் குழந்தையைத் தூங்கப் பண்ணி விட்டு வரும்போது இங்கே பாடிக் கொண்டிருக்கிறார்” என்றேன். பின் என்ன சொல்லுவது? “சரிதான். இனிமேல் சொல்லி வைக்கிறேன். அவன் சற்றுக் கபடமற்றுப் பழகுவான். இருந்தால் கூட பார்க்கிற பேருக்கு நன்றாக இருக்காது, பார். அதிகமாக அவனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதே” என்று இதமாக என்னைக் கண்டித்து வைத்தாள். “ஆகட்டும் மன்னி” என்று நான் தலையை ஆட்டினேன். அவளுக்கு அதற்குள் புத்தி எப்படிப் போய் விட்டது? இந்தச் சங்கடத்துக்காக அவளால் வீட்டிலே தங்குவதும் சாத்தியம் இல்லை. என்னை அழைத்துச் செல்லவும் முடியாது. வரதனைக் கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம். கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் அதிகமாக இருக்கும் இடத்திலே தான் எப்படியாவது சிறிய இடைவெளி ஏற்படுவது வழக்கம். வரதனுடன் நான் பேசுவதைப் பற்றி அவள் எச்சரிக்கை செய்தாள். ஆனால் சமயத்தில் அந்தக் கட்டுப்பாட்டின்படி நான் ஊமையாகி விடுவது சாத்தியமாக இருக்கிறதா? வேற்று ஆண்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் கிராமத்துச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி. இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் நான் என்ன செய்வேன்! சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு முதல் நாளைப் போல இரவின் கரிய நிறத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். மணி பத்து பத்தரை இருக்கும். அறை விளக்கை அணைத்திருந்தேன். என் மனத்தின் மூலையில் புதையுண்டிருந்த பொருமல் மெள்ள மெள்ளத் தனிமையில் தலை தூக்கியது. முன்னாள் நான் அப்படி உட்கார்ந்திருந்ததும், அவர் வந்ததும், பேசிய சொற்களும் படலம் படலமாக என் முன் அவிந்து, ஆடும் நாகத்திற்கு ஊதும் இசை போல அந்தப் பொருமலுக்கு ஆவேசம் கொடுத்தன. மனித வாழ்விலே எதிர்பாராத விதமாக விபத்துகள். நோவ் நொடிகள் முதலிய எத்தனையோ அதிர்ச்சிகள் நேரிடுகின்றன. அதெல்லாம் விதியின் செயல். தடுக்க முடியாதவை என்கிறார்கள். அப்படி என் நிலையும் விதியின் செயலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அற்ப நிகழ்ச்சியில் உண்டான அர்த்தமற்ற பயத்தில் ஆரம்பித்து, இன்று ஆதரவே இல்லாத அவல நிலையில் அல்லலுறும் வரை எப்படி வந்தேன் நான்? உலகத்திலேயே இல்லாத அதிசயமாக, என்றோ ஆதரவு காட்டிய அண்ணன் மதனியிடம் காட்டும் நன்றியுணர்ச்சிக்காக மனைவியின் உணர்ச்சிகளைத் துச்சமாகக் கருதுவாரா இவர்? யாரும் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். நீர்த் திரையிட்ட விழிகளை நிலைநிறுத்தி அசையாமல் இருளை நோக்கினேன். கீழே இருந்த ரஸ்தாவில் வரிசை வரிசையாகத் தென்பட்ட முனிசிபாலிடி விளக்குகள் மலையரசிக்கு அழகாக மாலையிட்டது போல் காணப்பட்டன. வானத்திலே சந்திரன் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. மரம் செடி கொடிகள் கூட அசையாமல் நின்றன. வீட்டைச் சுற்றிச் சென்ற நடைப்பாதையில் முன்புற வழியாக ஏதோ ஓர் உருவம் வருவதுபோல் தோன்றியது. ‘யார் இந்த வேளையில் இந்த வழியாக வருபவர்?’ என்ற அச்சத்துடன் நான் ஊன்றிக் கவனித்தேன். ஓவர் கோட்டும் தலையில் தொப்பியும் அணிந்த ஆண் உருவந்தான். ‘திருடன் இப்படியும் வருவானோ?’ என்று ஒரு கணத்துக்குள் என்ன என்னவோ எண்ணிவிட்ட எனக்கு சட்டென்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே வந்து விட வேண்டும் என்று தோன்றவில்லை. சற்றும் நான் எதிர்பாராத விதமாக ‘டார்ச்’ விளக்கின் ஒளி நடை பாதையில் விழுந்தது. மேகத்தின் நுனியிலே காணும் வெள்ளி விழும்பியது. ‘விளக்கைப் போட்டுக் கொண்டு வரும் இந்த ஆள் திருடனா இல்லையா என்று பார்த்து விடுவோமே? திருடனாகத் தோன்றினால் ஒரே கூச்சலில் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விடலாமே’ என்று குழந்தை போல் எண்ணமிட்டேன். டார்ச் விளக்கின் ஒளி என் மீது விழுந்தது. கூடவே, “இன்னும் நீ தூங்காமலா ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறாய், சுசீலா? குளிர் காற்று உள்ளே வரவில்லை?” என்று வரதன் குரல் கேட்டது. நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போனேன். “நீங்களா?” என்று குழறியிருக்கிறேன். “ஏன்? திருடன் எவனாவது உள்லே வருகிறான் என்று பயந்து விட்டாயாக்கும்!” என்று அவன் நகைத்தான். பின் “எனக்கு இரவின் அமைதியிலே அசைவற்று நிற்கும் இந்த மலைமோகினியின் வனப்பைக் காண்பதிலே ஒரு பைத்தியம். அதோ அந்த முனையிலிருந்து பார்த்தால் ஆகா!” என்றான் பரவசமாக. நான் ஆறுதலாக மூச்சு விட்டேன். “நீங்கள் கேட்பது போலத் திருடன் என்று தான் எண்ணினேன். கத்துவதாகக் கூட எண்ணி விட்டேன்!” என்றேன். “நல்ல வேளை!” என்று அவன் நிறுத்தினான். நான் ஜன்னல் கதவைச் சார்த்துவதற்காக கொக்கியைத் தள்ளினேன். “இந்த மலையரசி தினம் தினம் இப்படி இருள் துகிலில் மறைந்து கொண்டு காதலன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவதைக் கண்ணுறுவதுடன் அன்றி, நிஜ மங்கை ஒருத்தியும் அதே நிலையில் இருப்பதை இப்போது பார்க்க நேரிட்டிருக்கிறது.” என்னைத் தூக்கி வாரிப் போட்டது. பரந்த நோக்கு, பரந்து நோக்கு என்றால் அதற்கும் இன்னதுதான் பேசலாம், பேசக்கூடாது என்று எல்லை இல்லையா? நான் திகைத்து நிற்கையிலே அவன் தொடர்ந்தான். “ஆனால் இந்த மலை மங்கையின் தாபம் வீண் போகாது. செம்பொன்மயமான பிரகாசத்துடன் கதிரவன் தன் இருதயக் கதவைத் திறந்து அவளை ஏற்றுக் கொள்வான். சிந்திய கண்ணீர் அத்தனையும் புல் தரையிலே முத்துக்களென ஒளி விடும்படி அவள் உவகை கொள்வாள்.” இந்தச் சித்திரச் சொற்கள் என் கருத்தைக் கவர்ந்தன. வர்ண விசித்திரங்களைக் கண்டு பிரமித்து மனத்தை மயக்க விடும் குழந்தை போல, அவனுடைய ரஸிக உள்ளம் என்னைப் பிரமிக்கச் செய்தது. “உம், அப்புறம்?” என்று நான் கேட்பது போல என் நிலை அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். “நாயகனது ஒளியிலே ஒன்றிப் பகலெல்லாம் எனக்கு நிகர் யாரும் இல்லை என்று இறுமாந்து கிடப்பாள். மறுபடியும் அவன் அவளிடம் விடைபெற்றுக் கொள்ளும் காட்சி இருக்கிறதே, அதை நீ கவனித்திருக்கிறாயா?” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் கவனித்துத்தான் என்ன பிரயோசனம்? இம்மாதிரி எல்லாம் எனக்குப் பேச வராதே?” என்று பதில் அளித்த என்னை மனத்தின் உள்ளே குதிரையோட்டி கடிவாளத்தைப் பிடித்து இழுப்பது போல ஏதோ ஒன்று பின்னுக்கு இழுத்தது. “சுசீலா! ராமநாதனுக்கும் உனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை நான் நேற்று இப்படி வரும் போது கேட்க நேரிட்டுவிட்டது. பட்டு உன்னை இப்படி அடிமை போல் நடத்துவதை அவன் அநுமதித்திருப்பதே எனக்குச் சரியாகத் தொனிக்கவில்லை. அப்போதிலிருந்து எனக்கு உன்னைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் அநுதாபம் கொண்டு பொறுக்காமல் கேட்கிறேன். அவன் உன்னை எப்போதும் இப்படித்தான் நடத்துகிறானா?” ஆயிரம் தேள்கள் ஒரே சமயம் என்னைக் கொட்டின. வானத்துக் கருமேகங்கள் என் மீது வந்து மோதின. உடலும் உள்ளமும் காந்தின. பளாரென்று ஜன்னல் கதவைச் சார்த்தித் திரையை இழுத்து விட்டேன். படுக்கையில் வந்து வீழ்ந்தேன். உள்ளூறப் புண் இருக்கும் போது அவ்வளவாகத் தெரியாத வேதனை பிறர் கண்களில் பட்டு அவர்கள் கேட்கும் போது உயிர் போகும்படி நோகிறதே. அன்று மூர்த்தி கேட்டான். ஏதோ மழுப்பினேன். இந்த வரதன் - பாம்பைப் போன்றவனா, பழுதையைப் போல் அபாயமற்றவனா என்று எனக்குத் தெரியாத வரதன் - எங்கள் வாழ்க்கைச் சகடத்தின் அச்சு முறிவது போன்று நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளைக் கவனித்திருக்கிறான். அவர் என்னைச் சிறையிலே தள்ளி ஆயுட்காலம் முழுவதும் துன்புறுத்தட்டும். ஆனால் இந்தச் சித்திரவதை, வரதன் போறவர்களுக்குத் தெரியக் கூடாதே! அவன் அநுதாபம் எனக்கு ஆறுதலுக்குப் பதில் வெடிக்கும் வேதனையை அன்றோ கிளப்பி விடுகிறது? அத்துடன் இப்படிக் கூறக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் கொடுமை செய்வதைப் பொறுத்துக் கொள்ள எனக்குச் சக்தி இருக்கிறது. ஆனால் அவர் என் முன்னேயே பிறரின் அவமதிப்புக்குள்ளாவதைப் பொறுக்காமல் உள்ளம் குமுறுகிறதே. பெண்ணுள்ளத்தை அளவிட இயலாத பலவீனத்தின் கோளாறா இது? அல்லது வாழையடி வாழையாகப் பத்தினிப் பெண்களின் பண்பாட்டில் ஒளியுறும் பாரத நாட்டிலே பிறந்ததற்கு உரித்தான மேன்மைக் குணத்தின் கோளாறா? பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|