உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) காய் 2 “அத்தை வீட்டுக்குள் இனி அடி எடுத்து வைக்கக் கூடாது” என்று சங்கற்பம் செய்து கொண்டேனே, அது தவிடு பொடியாகும் காலமும் வந்தது. புதுவாழ்வின் சுழற்சியிலே உல்லாசமாக மிதக்கப் போகிறோம் என்ற முறுக்கிலே விறைத்து நின்ற காலம் அது. எந்தச் சின்ன வார்த்தையும் பதம் படாத நெஞ்சைக் கடித்தது. பதமிலா மனத்துக்கு வாழ்வானது பாடம் கற்பிக்கும் தினுசே அலாதிதான். எந்த விஷயத்தில் விறைப்பாக நின்றதோ அதிலேயே பணிந்து போகும்படி சாட்டையடி கொடுத்தாற் போலச் சம்பவங்களைக் கொணர்ந்து விட்டு விடுகிறது. வலுவிலேயே அத்தை வீடு செல்லும் நிலைமை எனக்கு வந்தது. “இங்கிருந்து காரிலே நேராக ஊட்டிக்குப் போவதை விட பெங்களூர் மைசூர் வழியாகப் போகலாமே? நேர் ரோடு அவ்வளவு சுகம் இல்லை” என்று ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார் என் கணவர். எனக்கு அப்போதே பகீர் என்றது. “மைசூரில் ஒரு வாரம் தங்கிப் பார்த்துவிட்டுப் போகலாம். சுசீலாவுக்கு அத்தை வீடு இருக்கிறது அங்கு. கல்யாணத்தின் போதே வருந்தி வருந்தி அழைத்திருக்கிறாள்” என்று பட்டு புன்னகையுடன் அதை ஆமோதித்தாள். வீட்டின் ராணியாயிற்றே அவள்! அவள் அபிப்பிராயத்துக்கு ஏதாவது வெட்டு வருமா என்ன? லீலா எங்களுடன் வருவதாகத் தெரியவில்லை. ஏனோ என்று நான் சங்கடப்பட்ட போது என் கணவர், “ஏன் லீலா நீ தானே முக்கியமாக வர வேண்டியவள்! வரதனுக்கு ஏற்கனவே நீ வரமாட்டாயோ என்ற கவலை போலிருக்கிறது. ‘லீலாவுக்கும் பரீட்சை முடிந்திருக்கும் என எண்ணுகிறேன்’ என்று நாசுக்காகக் கோடி காட்டியிருக்கிறான். அவனுக்கு அவ்வளவு ஏமாற்றத்தையா கொடுப்பது?” என்று கேட்ட பின் தான் அவள் வர இஷ்டப்படாததன் விஷயம் புரிந்தது எனக்கு. “முதன் முதலாகப் பங்களாவுக்குள் மணப்பெண்ணாகக் காலெடுத்து வைக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம். அதை இப்போது கெடுப்பானேன்?” என்று அவளைக் கேலி வேறு செய்தார் மைத்துனர். எதிராளியின் மனத்தை அறியாமல் பரிகாசப் பேச்சுப் பேசும் போது பெரிய பரிசளித்து விட்டதாகச் சந்தோஷத்துடன் பெருமைப்படுகிறார்கள். ஊரிலே என்னை எல்லோரும், ‘வெறுமே வரவில்லை’ என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டபோது நான் என்ன பாடுபட்டேனோ, அதே நிலையில் லீலா துடித்தாள் என்பது எனக்கு மட்டும் புரிந்தது. எங்கள் வருகையை அத்தை, அத்திம்பேர், பாட்டி எல்லோருமே ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. “அந்த மேனாமினுக்கு ஆட்டி வைத்து விடுவாள்” என்று பட்டுவுக்குப் பட்டம் கொடுத்த அத்தை அவளுடன் குழைந்து குழைந்து பழகினதையும், பட்டு இழைந்து இழைந்து உறவாடியதையும் கண்டு நெஞ்சில் ஒன்றும் நாவில் ஒன்றும் வைத்துப் பேசுவதைக் கலையாகப் பயின்றிருக்கிறார்களோ அவர்கள் என்று கூட நான் பிரமித்துப் போனேன். ஹேமா அந்த ஏழெட்டு மாதங்களில் புது ஆளாக மாறி இருந்தாள். அவள் நடை, உடை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றிலும் கல்லூரி மாணவி என்ற முத்திரை இருந்தது. கர்வமும் மிடுக்கும் ஏறியிருந்தன. முன்பு, ‘சுசி, சுசி!’ என்று குழைந்த அவள் இப்போது அவ்வளவாக லட்சியங்கூடப் பண்ணவில்லை. ஆமாம்! ஓரகத்தியின் கைக்குழந்தைக்குப் பால் புகட்டுவதும் தூங்க வைப்பதும் பணிவிடை செய்வதுமாக, என் புடவையிலும் தலையலங்காரத்திலுங்கூடக் கவனம் செலுத்தாதவளாகச் சுற்றிச் சுற்றி வந்த நான் அவள் கண்களுக்கு வேலைக்காரியைப் போல் தென்பட்டிருக்கலாம். பட்டுவின் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான் அலைவதைப் பார்த்த வெங்கிட்டு கூட, “என்ன சுசி, இப்போதே ஒரே அம்மாமியாக ஆகிவிட்டாயே!” என்றான். தனக்குச் சரிசமமான அந்தஸ்துடையவர்கள் என்று அத்தை பட்டுவிடம் புதுப்புது நகைகளையும் புடைவைகளையும் பற்றிப் பேசினாள். தன் வீட்டில் உள்ள சாமான்களையும் பணம் பெற்ற பண்டங்களையும் அவளிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டாள். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்க, அவர்கள் வேடிக்கையாக ஊர் சுற்றினார்கள். உற்சாகம் மேலிட்ட அத்தை, “இன்னும் பத்து நாள் நீங்கள் இருந்து விட்டுப் போகலாம். அப்புறம் இந்தப் பக்கம் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கூட உபசரித்தாள். அப்பப்பா! இந்தப் பணத்துக்கு இத்தனை மதிப்பா? ஆண்கள் சமூகத்தில் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெண்கள், முக்கால்வாசி நடுத்தரப் பெண்கள், நகையாலும் புடவையாலுமே மதிப்பை அளவிடுகிறார்கள். என்னுடைய அத்தைக்குப் பட்டுவிடம் உள்ள மதிப்பு அவளை விட நெருங்கிய சம்பந்தம் உள்ள அம்மாவிடம் இருக்குமா? டாலடிக்கும் வைரமும், சரிகை நெளியும் பட்டும் அவளிடம் ஏது? மஞ்சள் சரட்டுடன் நூல் புடவையுடனும் என் தாய் இந்த வீட்டுக்கு வந்தால் எத்தகைய மரியாதை கிடைக்குமோ? ஏன்? அத்தைதான் ஆகட்டும், ‘குழந்தை அப்போதே வந்தாள், ஓரிடமும் பார்க்கவில்லை’ என்று என்னை அழைக்கவில்லை. பட்டுவை ஒரு நிமிஷம் வீட்டிலே தங்க விடாமல் அழைத்துப் போவானேன்? ஊமைக் காயமுற்றிருந்த இருதயத்தில் சுரீரென்று சாட்டையடி கொடுப்பது போல் அன்று கீழே குளித்து விட்டுப் புடவை தோய்த்துக் கொண்டிருந்த என்னிடம் அத்தை, “இந்தப் புடவையைக் கட்டிக் கொள்கிறாயா? எங்கே குப்பையில் போட்டு விட்டாயோ என்று எண்ணினேன்” என்றாள். ‘குழந்தைப் பெண் தெரியாமல் செய்து விட்டாள், நாமும் பேசிய முறை தவறு தான். பாவம்! இன்னமும் ஓரகத்தியின் குழந்தையை வைத்துக் கொண்டு உழலுகிறாளே’ என்று என்னிடம் அநுதாபம் தோன்றக் கூடாதா? பாட்டிக்கு என்னிடம் தோன்றிய அநுதாபமே விசித்திரமான முறையில் இருந்தது. “ஏண்டி பெண்ணே இந்தக் கண்ணாடிக்கல் தோட்டைப் போட்டுக் கொண்டு அவர்களுடன் நடமாடுவது பார்க்க நன்றாக இல்லையே. உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏன் இதெல்லாம் தெரியவில்லை? இல்லை, அகமுடையானிடம் கேட்டுத்தான் நல்லதாகத் தோடு ஒன்று வாங்கி இட்டுக் கொள்ளக் கூடாது? என்னவோ? விடிய விடிய உன் அப்பாவும் சம்பாதிக்கிறான். அக்கா, தங்கை என்று பற்றிக் கொள்வதைத் தவிர காலணாக் கொடுக்கவில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட்டான். காது மூக்குக்கூட ஒக்கிடாமல்!” என்று என்னைப் பார்க்கச் சகிக்காமல் அலுத்துக் கொண்டாள். ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வருடைய அருமைப் பெண் அல்லவா ஹேமா? காதிலே மாட்டியிருந்த தேர்ச்சக்கரம் போன்ற கொப்பும், கொழுக்கட்டை போன்ற மொண்ணை மூக்கும், மொட்டைக் கைகளும் பாட்டிக்குப் பார்க்கப் பெருமையாக இருந்தன! பணக்காரர்கள் என்ற முத்திரையினால் தலைகீழாக நின்றாலும் அரை நிர்வாணமாக ஆடை அணிந்து கொண்டாலும் நாகரிகமாகப் பட்டு விடுகிறது. நான், இருப்பதைக் கொண்டு அடக்கமாக இருந்தது. இல்லாமையைப் பறையடிக்கும் தோற்றமாகப் பட்டது! பெண்கள் என்னவோ முன்னேறுவதாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்தப் புடவை நகை மனப்பான்மை மட்டும் பதினெட்டாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் இருபதாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் பெரும்பாலும் ஒரே தன்மையாகவே தான் தோன்றுகிறது. காறையாகவும் காசு மாலையாகவும் இருந்தவை வேறு பல உருவங்களாக அவதாரம் எடுத்திருக்கின்றன. அவ்வளவுதான். இல்லாவிட்டால் அத்தைக்கும் எனக்கும் இடையே இத்தனை பெரிய பிளவு தோன்றுவானேன்? என்னிடம் அழகில்லையா? அறிவில்லையா? குணத்திலுந்தான் என்ன குறைந்து விட்டேன்? இந்த பட்டுதான் என்னை இப்படித் தாழ்வாக நடத்துவாளா? ஹேமா எனக்குப் பதிலாக இங்கே வாழ்க்கைப்பட்டிருந்தால், ‘குழந்தை அழுகிறதே, கொஞ்சம் எடுத்து ஹார்லிக்ஸ் கொடுக்கிறாயா?’ என்று பட்டு சொல்ல முடியுமா? அன்று வெற்றிலையைச் சுவைத்துக் கொண்டு உல்லாசமாக உட்கார்ந்திருந்த அத்தை பட்டுவிடம், “இந்த வருஷம் அநேகமாக எங்கள் ஹேமாவுக்குக் கல்யாணம் நடந்தாலும் நடக்கும். ஊட்டியில் இருந்தால் கட்டாயம் நீங்கள் வரவேண்டும். இன்னும் இரண்டு மாசங்கூட இல்லாமலா போகப் போகிறீர்கள்?” என்றாள். “அப்படித்தான் நினைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பள்ளிக்கூடம் திறந்து விட்டால் கூடக் குழந்தைகளை மட்டும் அனுப்பிவிட்டு நான் நாலு மாசம் உடம்பைத் தேற்றிக் கொண்டு போகலாம் என்று எண்ணியிருக்கிறேன். பெண் படிக்கிறாள் போல் இருக்கிறதே; கல்யாணமும் பண்ணி விடப் போகிறீர்களாக்கும்” என்று பட்டு கேட்டாள். “படித்தால் என்ன? உறவு தான் பையன். அவனுக்கு இந்த வருஷந்தான் படிப்பு முடிந்தது. கட்டிவிட்டால் கவலை விட்டது, பாருங்கள்!” என்றாள் அத்தை. ‘உறவிலேயா? யார் இருக்கிறார்கள்?’ என்று நான் எண்ணி முடிக்கு முன் பட்டு கேட்டு விட்டாள். “நாத்தனார் பிள்ளைதான். இந்த ஊரிலேதான் அவர் யூனிவர்ஸிடியில் புரொபஸராக இருந்தார். கொஞ்ச நாளாக உடம்பு சரியாக இல்லை. அதனாலேயே அவ்வளவு அவசரம். பையன் பட்டணத்திலேதான் எஞ்சினியரிங் வாசித்தான்” என்று அத்தை விளக்கும் வரை எனக்கு மூர்த்தியின் நினைவு வரவேயில்லை. என்னையும் மீறியவளாக, “மூர்த்தியா அத்தை? தெரியவில்லையா மன்னி? அன்றொரு நாள் புடவை கொண்டு கொடுத்தாரே; அப்புறங்கூட அடிக்கடி வீட்டுக்கு வருவாரே” என்று நான் ஞாபகப்படுத்தினேன். என்றாலும் ஏனோ எனக்கு அப்படிப் படபடக்க வேண்டும்? அங்கே லீலாவுக்கு வரதன், இங்கே மூர்த்திக்கு ஹேமாவா? லீலாவுக்கு இந்தச் செய்தி தெரிந்தால் எத்தனை வேதனையாக இருக்கும்! பெண் என்றாலும் அவளல்லவா பெண்? அவளுந்தான் படிப்பிலும் அழகிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் குணத்திலும் மேன்மை பெற்றவள். என்னுடன் பழகி இருந்தும் ஹேமா இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாளே. வெளித் தோற்றத்தை விட்டு, உண்மையான உள்ளத்தைக் கண்டு மதிப்புக் கொடுக்கும் அவளல்லவா உண்மையில் நாகரிகம் அடைந்தவள்? அவளைப் போல் மேக்-அப் ஆடம்பரமும் உடல் தெரியும் ஆடைகளும் இன்றி அடக்கமாக அவள் கல்லூரிக்குப் போய் வரும் அழகு ஒன்றே போதுமே! லீலாவுக்கு இந்தச் செய்தியை நான் தெரிவிக்க வேண்டாமா? அன்பு இல்லாத அந்த வீட்டில் என்னை மகிழ்விக்கும் ஒரே பிராணி அல்லவா அவள்? ஏன்? என் தாய் கூட அப்போது அன்பிலிருந்து பிறழ்ந்து விட்டதாகத் தோன்றியது. அவள் அநுதாப வார்த்தைகளையும் ஆதரவையும் எதிர்பார்த்திருந்த என் மேல் குற்றத்தை அல்லவோ ஏற்றி வைத்து விட்டாள்? நிதானம் இழந்து விடுவேன் என்று, உள்விஷயத்தை அறியாமலேயே மடக்கி விட்டாளே? அதையும் அறிந்தால் நிச்சயமாக ஊர்ஜிதம் செய்து என்னை இன்னும் எப்படி எல்லாம் கோபித்திருப்பாளோ? புதிதாக ஏதாவது அலங்காரம் செய்து கொண்டால் கண்ணாடியில் கண்டு தனக்குத்தானே, அபிப்பிராயம் சொல்வதைக் காட்டிலும், பிறர் கண்களில் பட்டு அவர்கள் கொடுக்கும் அபிப்பிராயமே உகந்ததாகக் கருதுகிறோமல்லவா? அது போலத்தானோ உள்ளமும்? குழந்தையிலிருந்து வளர்த்து என்னைப் பெரியவளாக்கியிருக்கும் என் தாய்க்கு என் மன இயல்புகள் என்னை விட நன்கு தெரிந்திருக்குமோ? அப்படிப் பார்த்தால், நான் நிதானமின்றி அன்று நடந்து கொண்டு விட்டேன் என்று தானே ஆகிறது? ஒரு துளி விஷம் ஒரு குடம் அமுதத்தையும் விஷமாக்கி விடச் சக்தி வாய்ந்தது போல் என்னுடைய ராட்சசத் தன்மை அவருடைய அத்தனை அன்பையும் முறித்து விட்டிருக்குமோ? லீலாவிடமிருந்து எப்படியோ சுற்றிச் சுற்றி இந்தச் சஞ்சலத்திற்கே வந்து விட்டேன். குட்டையைக் குழப்பிக் கையை விட்டுத் தேடினால் இன்னமும் கலங்கிப் போகுமே ஒழியத் தேடும் பொருள் அகப்படாது. என் மனத்தை நான் கிளறிக் கிளறி விட்டுக் கொண்டதன் பலன் இன்னும் அதிகான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தனவே ஒழிய அவர் மனத்தை ஆழம் பார்க்கும் அளவு கோல் எனக்குக் கிடைக்கவில்லை. லீலாவுக்கு என் சஞ்சலத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அவள் எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லக் கூடும் என்று ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது. என்றாலும் நானாக எப்படிப் பச்சையாக நிலவரங்களை உடைப்பேன்? என்னைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள வாய் எழாதபடி ஏதோ தடுக்கிறதே! எல்லோரும் அன்று கண்ணம்பாடி அணைக்கட்டுப் பார்க்கக் கிளம்பினார்கள். கொஞ்சம் தயங்கிய பட்டுவை வெகு சுவாதீனமாக அத்தை, “அணைக்கட்டுப் பக்கம் தண்ணீர்க் காற்று. குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது. ஏற்கனவே அதற்கு ஜலதோஷம். மூச்சுத் திணறுகிறது. சுசீலா குழந்தையை வைத்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்கள் இந்தச் சமயம் விட்டால் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று அவளுக்கு இன்னும் தைரியமூட்டும் வகையில் கூறினாள். எல்லோரும் போய் விட்டார்கள். வெங்கிட்டு ஊரிலேயே இருக்கவில்லை. ஏதோ விளையாட்டுக் கோஷ்டியுடன் பெங்களூர் சென்றிருந்தான். ஹேமா ‘டென்னிஸ் கிளப்’புக்குக் கிளம்பி விட்டாள். பாட்டி கீழே சமையற்கட்டில் சமையற்காரிக்கு உதவியாக இருந்தாள். நான் மட்டும் அழும் குழந்தையை மடியில் விட்டு ஆட்டியவாறு மாடியில் உட்கார்ந்தேன். மாடிப் படியில் அடியோசை கேட்டது. “யாரும் இல்லையா?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்தான். “நீங்களா? வாருங்கள். எப்போது ஊரிலிருந்து வந்தீர்கள். அங்கு வீட்டுக்குப் போயிருந்தீர்களா? அவர்கள் எல்லோரும் சற்று முன் தான் அணைக்கட்டுப் பார்க்கச் சென்றார்கள்” என்று விசாரித்து நான் அவனை வரவேற்றேன். “நான் இன்று தான் வந்தேன். நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று லீலாதான் தெரிவித்தாள். எத்தனை நாட்கள் ஆகின்றன? நீ ஏன் பிருந்தாவனம் பார்க்கப் போகவில்லை? முன்பேயே தான் இந்த ஊருக்கு வந்து இந்த வீட்டையும் ஸ்டேஷனையும் தரிசனம் செய்து விட்டுப் போய்விட்டாய்!” என்று சிரித்த முகத்துடன் கேட்ட மூர்த்தி என்னை உற்று நோக்கினான். “அப்போது சௌகரியமில்லை. இப்போது குழந்தை இருக்கிறதே?” என்று பதிலளித்த எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. மீறிக் கொண்டு ஒரு வறட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தேன். ஆச்சரியம் விழிகளில் நடமிட அவன் என்னை இன்னும் கூர்ந்து கவனித்தான். நான் தலையைத் தொங்க விட்டுக் கொண்டேன். “ராமநாதன் வரவில்லை?” என்று கேட்ட அவன் தொனியிலே சந்தேகம், வியப்பு இரண்டும் கலந்திருந்தன. “வந்திருக்கிறார்” என்று முணுமுணுத்த நான் தலையை ஆட்டினேன். “பின் ஏன் உன்னைத் தனியாக இங்கு விட்டுவிட்டுப் போனார்? ஓகோ! கூட்டத்துடன் இல்லாமல் தனியாகப் போக வேண்டும் என்று...” குறும்புச் சிரிப்புடன் வாக்கியத்தை முடிக்காமலேயே அரைகுறையாக நிறுத்தினான் அவன். என் துயரத்தை நெம்புகோல் போட்டு நெம்பி விட்டது போல் ஆயிற்று. விழிக்கடையில் நீர் உந்திக் கொண்டு வந்து விட்டது. குழந்தையைத் தூளியில் போட்டு விட்டு அவன் முகத்தைப் பாராமலே நான் வராந்த ஓரமாகப் போய் நின்று கொண்டேன். மழையில்லாது காய்ந்து கிடக்கும் பயிர் ஒரு சொட்டு நீர் வந்தாலும் விட்டு விடுமா? யாருமே எனக்கு அநுதாபமாக இருக்கவில்லை என்ற ஏக்கம் நெஞ்சை நிரப்பிக் கொண்டிருந்த போது அவனுடைய அநுதாபம் என்னை இளக்கிவிட்டது. மீண்டும் அவன், “என்ன சுசீலா, முகம் ஏதோ மாதிரி இருக்கிறதே. உடம்பு சுகமில்லையா?” என்று வினவினான். “ஒன்றுமில்லை” என்ற என் குரல் எனக்கே தழுதழுத்திருந்தது. அவன் பாராதபடி, திரும்பிக் கண்களில் துளித்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டேன். பதற்றம் தெரிய, “என்ன விஷயம் சுசீலா? ஏதோ... மனஸ்தாபம் போல...” என்று முடிக்காமலேயே நாவைக் கடித்துக் கொண்டான் மூர்த்தி. நான் அந்த அரை நிமிஷ நெகிழ்ச்சியிலிருந்து சமாளித்துக் கொண்டு விட்டேன். “ஏதும் இல்லை. ஆமாம், நீங்கள் லீலாவை என்று பார்த்தீர்கள்? உங்களுக்குக் கல்யாணமாமே?” என்று சட்டென்று பேச்சை மாற்றினேன். இந்தச் சமயத்தில் பாட்டி வந்தாள். “மூர்த்தியா வந்திருக்கிறாய்? எப்போது ஊரிலிருந்து வந்தாய்? நீ வந்தது தெரியவே இல்லையே! வெகு நேரமாச்சா என்ன?” என்று விசாரித்தாள். “இல்லை, இப்போதுதான் வந்தேன். அவர்கள் யாருமில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்களும் வந்துவிட்டீர்கள்” என்று அவன் பதில் கொடுத்தான். “குழந்தை தூங்குகிறதாடி சுசீலா? கீழே போய்க் கொஞ்சம் பாலைப் பார்த்துக் காய்ச்சி வை” என்று எனக்கு உத்தரவிட்டு அவள் தன் பேத்திக்குக் கணவனாக வரப் போகும் மூர்த்தியிடம் பேச உட்கார்ந்தாள். ‘சாதாரணமாகத்தான் சொன்னாளாக்கும்’ என்று அப்போது நினைத்தேன். அவள் எண்ணம் பிறகு தான் தெரிந்தது. “ஏண்டி நீ சிறிசு. அவன் வந்தால் அவர்கள் இல்லை என்று பேசாமல் கீழிறங்கி வந்து என்னிடம் தெரிவிப்பாயா? அவனுடன் வராந்தாவில் நின்று கொண்டு என்ன பேச்சு வேண்டியிருந்தது? புக்ககத்துக்குப் போயும் இது தெரியவில்லையே இன்னும்! அவன் யார், என்ன? இதெல்லாம் நினைப்பில்லையே உனக்கு! என்னவோ உன் அம்மாவும் பெண் வளர்த்து விட்டாள். நியும் புக்ககம் என்று வந்து விட்டாய்!” என்று அன்றிரவு என்னைத் தனிமையில் சமையலறையில் கோபித்துக் கொண்டாள். பந்தடி மட்டையை ஒய்யாரமாக வீசிக் கொண்டு தன்னந்தனியே வெளியே போய்விட்டு வந்த ஹேமா சற்றும் கூச்சமோ நாணமோ இன்றி என் கணவரிடமும் மைத்துனரிடமும் கடகடவென்று சிரித்துக் கொண்டு பேசுவது பாட்டியின் கண்களுக்கு விகற்பமாகப் படவில்லை. வீட்டிற்குள் என் விதியை நொந்து கொண்டு கிடக்கும் நான் மூர்த்தியிடம் இரண்டு வார்த்தை பேசியது விகற்பமாகப் பட்டுவிட்டது! பணம் பண்ணும் வித்தைகளில் இதுவும் ஒன்று போலும்! பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|