உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) கனி 4 ராஜ வைத்தியத்தையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ‘டியூபர் குலோஸிஸ்’ வியாதி ஏழைக் குமாஸ்தாவான அப்பாவின் எளிய உடலிலே மட்டிலாத மோகம் கொண்டிருந்தது. கூடத்திலே கிடந்த பழைய விசி பலகையில் மெத்தென்று அம்மா தயாரித்த படுக்கையில் அவர் படுத்திருந்தார். டாக்டர் தருமத்துக்குக் கொடுத்திருந்த ‘பினைல்’ தண்ணியின் வாசனை உள்ளே நுழையும் போதே மூக்கில் நெடி ஏறியது. என்னையும் அத்தையையும் கண்டவுடனேயே அம்மா, “மாபாரதமாகப் படுத்துக் கொண்டு விட்டாரே! கணையும் காங்கையும் மனுஷர்களுக்கு வருவதில்லையா? நகை வேண்டாம், நாணயம் வேண்டாம், அந்த மனுஷர் உடம்பில் தெம்புடன் வளைய வருவதே பெரிய பாக்கியம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்குச் சமானமில்லை என்று இருந்தேனே! தெய்வம், ‘அப்படியா நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கிறதே!” என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள். “அப்புறம்? டாக்டர் வந்து பார்க்கிறாரா இல்லையோ? ஆறு மாசத்துக்கு முன் உடம்பு சரியில்லை, இருமுகிறது என்று எழுதியிருக்கிறான் என்று அவர் சொன்னார். சூடு, நாலு நாளைக்குப் போஷாக்காக வைத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டேன். இத்தனை பெரிசு என்று எப்படித் தெரியும்? டாக்டர் என்ன தான் சொல்கிறார்?” என்றாள் அத்தை. “தினம் அவரும் வருகிறார். தேவலை ஆகிவிடும் என்கிறார். நேற்றைக்கெல்லாம் பார்க்கப் பயமாக இருந்தது. பயந்து தந்தி அடிக்கச் சொன்னேன். நீங்களும் அங்கே வந்திருப்பீர்கள் என்று ஆசையுங்கூட. ஒரு சமயம் தெம்பாகப் பேசுகிறார். இன்னொரு சமயம் மனசு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்று அம்மா புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். கழுத்திலே மஞ்சள் பூச்சு ஏறாமல் அழுக்குப் படிந்திருந்த தாலிச் சரடு. இடுப்பில் பல இடங்களில் கரைந்து சாயம் போன புடைவை. கவலையும் எக்கமும் மண்டிக் கிடக்கும் உலர்ந்த முகம். ‘இதுவா என் அம்மா?’ அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போல இருந்தது எனக்கு. அப்பா, அப்பாவா அவர்? இல்லை, கொஞ்ச நஞ்சம் இருந்த இவருடைய சதையையும் சாப்பிட்டு விட்டு எலும்புருக்கி நோய்தான் படுத்திருந்தது. பொந்துக்குள் கிடந்த அவ்விரு கண்களும் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு நீரில் மிதந்தன. அப்பா அவர் என்ற அந்தத் தடையம் நான் அவர் நோயாளி என்பதையே மறக்கும்படி செய்துவிட்டது. “ஐயோ அப்பா!” என்று எலும்புக் குச்சியாக இருந்த அவர் தோளைப் பிடித்துக் கொண்டு என்னையும் மீறிய உணர்ச்சியிலே கதறி விட்டேன். என் தந்தையை எனக்கு நினைப்பூட்டக் கூடிய இன்னொரு தடையமாக அவரது மெல்லிய குரல், “சுசீ? அழாதேயம்மா. எனக்குச் சீக்கிரம் தேவலையாகிவிடும்” என்று தழுதழுத்தது. அவருடைய வறண்ட கைகள் என் முதுகைத் தடவின. இந்த நிலையில் வைத்தியர் வந்திருக்கிறார். “இதென்னம்மா? நோயாளி அருகிலே இவ்வளவு நெருக்கமாக? நீயா அழுகிறாய்? எப்போதம்மா வந்தாய், சுசீலா? படித்த பெண்ணாகிய நீயே இப்படி மனம் தளர்ந்து போகலாமா? அம்மாவுக்குத் தேறுதலாக இருப்பதை விட்டு...? சே சே! எழுந்திரம்மா!” என்று அவர் கடிந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் முன்பு இருந்த வைத்தியர் தாம் அவர். உஷ்ணமானியை வைத்துப் பார்த்தார். அப்புறம் ஊசி மூலம் ஏதோ மருந்து போட்டார். அவர் திரும்பும் சமயம் கூடவே வாயில் வரை சென்ற நான், “அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது டாக்டர்? தேவலையாகி விடுமா?” என்று குழந்தை போல் கேட்டேன். “ம்...?” என்று அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். தெய்வத்திடம் வரம் கேட்பவன் நோக்கும் நிலையில் நான் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றேன். “உன்னிடம் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும். உன் புருஷன் வந்திருக்கிறாரா அம்மா?” என்று அவர் கேட்டார். “இல்லையே டாக்டர். உண்மையைச் சொல்லுங்களேன். அப்பாவுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று நான் பதறினேன். “இந்த வியாதி இப்படியெல்லாம் கவனித்தால் தீரக் கூடியது இல்லை அம்மா. முதலிலே இந்த இடத்தை விட்டு நல்ல ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க வேண்டும். வெறும் மருந்துகளால் குணமடையக் கூடிய வியாதி அல்ல இது. ஆரோக்கியமான உணவு, காற்று, சுற்றுப்புறம் இவை தேவை. இவை சரியாக இல்லாததனாலேயே வியாதி இத்தனைக்கு முற்றி விட்டிருக்கிறது. ஆனால் அம்மா என்ன பண்ணுவார்கள், சுசீலா? ஆயிரக்கணக்கில் பணம் செலவிட்டுப் பார்க்க வேண்டிய நோயாயிற்றே இது? எல்லாம் யோசித்துத்தான் உன் புருஷர் வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உம்...” என்றார் அவர் நிதானமாக. என் பரபரப்பு, தந்தையின் உடல்நிலை அவர் கையில் இருக்கிறது என்று குழந்தை போல் நினைத்த என் அசட்டுத்தனம், எல்லாவற்றுக்கும் அவருடைய இந்தப் பதில் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. “ஆனால் அவரை வரவழைக்கட்டுமா டாக்டர்?” என்று நான் கேட்டேன். “அதுதானம்மா உசிதம்” என்று மொழிந்த அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார். “டாக்டர் என்ன சொன்னார் சுசீ? தங்கமானவர். இந்த அஞ்சு மாசகாலமாக கோடி ரூபாயைக் கட்டி கொடுத்தால் கூட அப்படி வந்து பார்க்க மாட்டார். அப்படி வருகிறார். அவருந்தாம் மாற்றி மாற்றி ஊசி போடுகிறார். மருந்து கொடுக்கிறார். நம் போதாத வேளை எப்போது அகலும் என்று யாருக்குத் தெரியும்?” என்றாள் என் தாய். பாவம்! அவளுக்கு இந்த வியாதியைப் பற்றி என்ன தெரியும்? ஊசி போடுகிறார். பெரிய வைத்தியம் நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். மலையை விழுங்கிவிட்டவனுக்குச் சுக்குக் கஷாயம் போல், இந்தச் சிகிச்சை எம்மாத்திரம்? பணம்! அவரிடம் எந்த உதவியையும் நாடக்கூடாது என்று இந்தச் சமயத்தில் என் வைராக்கியத்தை நிலை நாட்டிக் கொண்டு அப்பாவின் உயிரைப் பணயம் வைப்பதா? ஊராரின் மனத்திலே சுசீலா செயலாக இருக்கிறாள் என்று தோன்றும் எண்ணத்தின் பிரதிபலிப்புப் போல்தானே டாக்டர், “உன் புருஷர் வந்திருக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்? அப்போது எனக்குப் பெருமையாக இருந்ததே! என் தந்தை இங்கே போஷாக்குக்கு மன்றாடுகையில் நான் எண்பது ரூபாயில் ‘டீ செட்’ என்ன, பட்டுப் புடவைகள் என்ன, இப்படி ஆடம்பரத்துக்குச் செலவிட்டேனே! கையில் வைத்திருந்த பொருளையெல்லாம் என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வாரி இறைத்துவிட்டு, முழுக்க முப்பது ரூபாய் கூடக் கையில் இல்லாமல் நிற்கிறேனே! அவருக்கு எழுதினால் உதவமாட்டாரா? இங்கே அவருக்கு இருக்கும் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் புறப்பட்டு வரமாட்டாரா? உடலில் சக்தி இருக்குமட்டும் அப்பாவும் ஓடி ஓடி உழைத்தார். இப்போது அவர் ஓய்ந்துவிட்ட பிறகு நான் என்று நாதனாக யாரும் இல்லையே! சுந்து அந்த வருஷந்தான் பள்ளிப் படிப்பை முடிக்கும் பரீட்சை எழுதியிருந்தான். பாவம் வண்ணான் வெளுத்த சட்டைக்குக் கூட அவன் கொடுத்து வைக்கவில்லை. இளமையில் எழும் இந்த அற்ப ஆசைகளைக் கூட உள்ளே அடக்கிக் கொண்டு அவன் கிணற்றடியில் சட்டை துவைப்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லை. உலகம் இன்னும் தெரியாத பதினைந்து வயசுப் பாலகனான அவனால் அப்பாவின் இந்த வியாதிக்கு எப்படிப் பரிகாரம் தேட முடியும்? அவனாலானது ஆஸ்பத்திரித் தண்ணீரை வாங்கி வந்து வைப்பதுதான். வீட்டுக்கு வாடகை பாக்கியாதலால் வீட்டுக்காரன் வீட்டைப் பழுதுபார்க்கவில்லை. கண்ட இடங்களிலெல்லாம் காரையும் மண்ணும் உதிர்ந்தன. லீவு இல்லாமல் அப்பா அரைச் சம்பள லீவில் இருந்ததால் குடும்பமே அரைப் பிராணனாக இருந்தது. அத்தை வந்திருக்கிறாளே, கட்டாயம் அவள் சமயத்தில் உதவி புரிவாள் என்று நான் நிச்சயமாக நம்புவதற்கு இல்லாமல் அம்மா அவளிடம் குடும்ப நிலவரங்களை மூடி மூடியே வைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் தான் இந்த டாக்டரின் சிகிச்சைக்கு மேல் ஒன்றுமே இல்லை என்று எண்ணியிருக்கிறாளே. அத்தையாக உணர்ந்து உதவுவாளா? அவள் அன்று என்னிடம் கிணற்றடியில் கேட்டது என் கொஞ்ச நம்பிக்கையையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. “பார்த்தாயா சுசீலா? இவ்வளவு மோசமாகும் வரை எங்களுக்கு எழுதக் கூடாது என்று இருந்திருக்கிறாளே! பெற்றவள் இருக்கிறாள், அவளுக்கு கூடத் தெரிவிக்க வேண்டாம் என்று தானே இத்தனை பெரிய வியாது வந்து வைத்தியம் பண்ணுவதை எழுதாமல் இருந்திருக்கிறாள்? உடன் பிறப்பில்லையா? நாளைக்கு ஏதாவது நேர்ந்தால் என்னை நாலு பேர் கரிக்க மாட்டார்களா? இப்படி இவள் இருக்கும் போது நானாக அத்திம்பேரிடம் ஏதாவது சொன்னால் செருப்பைக் கழற்றி என் மூஞ்சியில் அடிப்பார்! ஆறு மாசம் முன்பு எழுதினேன் என்று மழுப்புகிறாளே! சாதாரணமாக இருமுகிறது என்று அவனே எழுதியிருந்தான். அதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லையா?” என்று என்னிடம் அம்மாவின் மேல் குற்றப் பத்திரிகை படித்தாள். எனக்குக் கூட இது சரியெனப் பட்டது. அப்பாவின் உயிருக்கு மேலா இவர்களுடைய மரியாதை, கௌரவம் எல்லாம்? அம்மா முதலிலேயே அத்தைக்குத் தெரிவிக்க வேண்டாமா? நமக்குப் பெரிய உதவி தேவையாக இருக்கும் போது சில்லரை அவமதிப்புக்களைக் கவனிக்கலாமா? ஏதோ நாலு வார்த்தை பேசினாலும் அத்திம்பேர் கவனித்து ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க மாட்டாரா? புக்ககத்து மனிதர்களுடன் இணைந்து போக வேண்டும் என்று எனக்குப் புத்தி கற்பித்த அம்மாவுக்கு ஏன் தெரியவில்லை? அத்தையின் உதவி இல்லாமலே, இந்த அழகான மாப்பிள்ளையான சாய்காலிலே உதவி பெற்று விடலாம் என்று அம்மாவின் அசட்டு வீம்பு எனக்கு அன்று தான் வெளியாயிற்று. “மாப்பிள்ளை வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சுசீ. இங்கே சமயத்தில் உதவுவார் யாரும் இல்லையே! அந்த இரண்டு மாப்பிள்ளைகளும் சுகமில்லை. மாமாவோ சம்சாரி. இந்த ஆசையிலேதான் இத்தனை நாட்களாக உனக்குத் தெரிவித்தால் கவலைப்படுவாய் என்றே பேசாமலிருந்தவள், டாக்டர் முதற் கொண்டு எல்லோரும் சொன்ன பிறகு தந்தியடிக்கச் சொன்னேன். அப்பாவுடைய அரைச் சம்பளம் மருந்துக்கே காணவில்லை” என்று தனிமையில் என்னிடம் ரகசியமாக வெளியிட்டாள். நான் ஜாடையாக, “ஏனம்மா? அத்தைக்கு நீங்கள் கடிதமே போடவில்லையா?” என்று கேட்டேன். ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. “போடவில்லையாவது? உடம்பு சரியில்லை. இங்கே நல்ல ஆஸ்பத்திரி இல்லை. அங்கே வந்து வைத்தியம் பார்க்கலாமா என்று வெட்கத்தை விட்டு அப்பா நாலு கடிதம் எழுதினார். என்று வந்துவிடப் போகிறார்களோ என்று அத்தனைக்கும் பிடிகொடுத்தே எழுதவில்லை. இப்போது இவளை யார் வரச் சொன்னார்கள்? இந்தக் கரைசல் யாருக்கு வேண்டும்? தெய்வம் கண் திறக்க வேண்டும். எனக்கும் மாங்கல்ய பலம் இருக்க வேண்டும்!” என்றாள். நான் எதை நம்புவேன்? அம்மா என்னிடம் இதைக் கூறுமுன்பே நான் என் கணவருக்கு அவளுக்குத் தெரியாமலே இங்குள்ள நிலையைத் தெரிவித்து உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். போட்டு விட்டு மறுநாள் இல்லை, மறுநாள் காலை வண்டியிலேயே அவர் வந்துவிடுவார் என்று வாயிலில் வந்து நின்று எதிர்பார்த்தேன். அது தவறியதும் பகல் தபாலை எதிர் நோக்கினேன். டாக்டர் கூட உரிமையுடன், “மாப்பிள்ளை எப்போது வருவாரம்மா?” என்று விசாரித்து விட்டார். அவரோ அனுதாபமாகக் கூட ஒரு கடிதம் போடவில்லை! என் நம்பிக்கை மழைக் காலத்து மண் சுவர் போலச் சரியலாயிற்று. வந்து பத்துத் தினங்கள் ஆகிவிட்டனவே. அத்தை, “நான் அப்படியே ஓடி வந்தேன். போய் அம்மாவை ஒரு நடை வரச் சொல்கிறேன். தைரியமாக இரு மன்னி. கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறிவிட்டுக் கிளம்பி விட்டாள். பெண்ணாக ஏன் பிறந்தேன் என்று நான் எத்தனையோ முறைகள் என்னைப் படைத்த ஈசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த நேரத்தில் உச்ச நிலைக்கு வந்தது. நான் மட்டும் ஆண்பிள்ளையாக இருந்தால் அப்பாவை இந்தக் கதியில் காண்பேனா? என் வயசுக்குக் குடும்பத்தைத் தாங்கக் கூடிய ஜீவனாக இருக்க மாட்டேனா? முதலில் குடும்பம் இந்த நீரில்லாக் குளமாக வறண்டு போனதன் காரணமே நான் பெண்ணாக அவதரித்ததனால்தானே? அடாடா! நான் விவாகம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் சுயமாக என் தந்தையை ஆதரிக்கும் நிலையில் இருக்க மாட்டேனா? ‘சுசியைக் காலேஜில் சேர்த்து விடுங்கள். அவளுக்குக் கல்யாணம் பண்ன வேண்டாம்’ என்று கூறியவர்களை எக்களிப்புடன் நோக்கிவிட்டு என்னை மணம் செய்வித்தேன் என்று பெருமைப்பட்டாரே. அந்த ஜீவனுக்கு இன்று பாராமுகமாக இருப்பதுதானா என்னாலான கைம்மாறு? எனக்குச் சுகமா? அவருக்குச் சுகமா? சூரிய ஒளி சரியாக இல்லாததனால் வளைந்து வளைந்து செல்லும் செடியைப் போன்று என் எண்ணங்கள் எங்கெங்கோ நோக்கிச் சென்றன. இனிமேல் தான் என்ன? அன்பு செய்யாத கணவன் வீட்டிலே போய் மனம் புழுங்கிக் காலம் தள்ளுவதை விட நான் விவாகத் தளையிலே அகப்படாதவள் போன்று காலத்தை ஓட்டிவிடக் கூடாதா? நாலு பெண்களுக்குச் சங்கீதம் பயிற்றுவித்தால் கூட எத்தனையோ உபயோகமாக இருக்கும். ஆனால் திடீரென்று நான் வழி மாறுவது அம்மாவுக்கும் - ஏன் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கும் கூட அதிர்ச்சியாக இருக்குமே! மாப்பிள்ளை வந்து தாங்குவதைப் பெருமையாகக் கருதும் மனம் படைத்தவர்கள், பெண் தன் உழைப்பைக் கொண்டு தாங்குவதை ஏன் கேவலமாக எண்ண வேண்டுமோ? மணம் புரிந்து கொண்டு, தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுவதுதான் பெண்ணுக்குப் பெருமையா? அவரிடமிருந்தோ உதவி ஏதும் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் தந்தையின் நோய் வலுத்தது. குடும்பத்தின் சீர்கேடுகள் வலுத்தன. கணவன் வீட்டுக்குத் திரும்பக் கூடாதென்ற வைராக்கியமும் வலுத்தது. இரவின் தனிமையிலே ஏதேதோ யோசனையில் புழுங்கிய எனக்குச் சட்டென்று ஓர் எண்ணம் உதித்தது. ஒன்றும் அதிகம் இல்லை என்றாலும், என் மீதுள்ள நகைகள் சில நூறு ரூபாய்களாவது பெறுமே! காலையில் என் சங்கிலியைக் கழற்றி அம்மாவிடம் கொடுத்து, “இதை விற்று வரச் சொல் அம்மா. அப்பாவின் உடல் சரியானால் போதும்” என்றேன். என் செய்கை அவளுக்கு விசித்திரமாகப் பட்டது போலும்! “என்னடி சுசீலா? வெகு அழகுதான்! மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதினாலும் பயன் உண்டு. நகையை விற்பதாவது? அசடு போல் பேசாதே?” என்று நான் வாயைத் திறக்க வொட்டாமல் ஒரே போடாகப் போட்டுவிட்டாள். அவளுடைய அழகான மாப்பிள்ளை பதில் கூடப் போடாமல் இருக்கும் லட்சணத்தையும், நான் அவரிடம் வாழும் லட்சணத்தையும் அவிழ்க்க அதுவா சமயம்? பாட்டி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். பெற்ற பாசம் செல்வத் திரையைக் கிழித்துக் கொண்டு அப்போதுதான் பீறி எழுந்தது போல் இருக்கிறது. “எப்படி இருந்த உடம்புடா? இப்படி எப்படி ஆயிற்றடா அது? நான் பெற்றவள் ஒருத்தி இருக்கிறேன் என்ற நினைவு அற்று விட்டீர்களேடா! ஒரு நாலு வரிக் கடிதம் எழுதக் கை வரவில்லையே?” என்றெல்லாம் என் தந்தையின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அதுதான் சமயம் என்பதைப் போல் அம்மாவிடம் அடக்கி வைத்திருந்த மனத்தாங்கலையெல்லாம் சொல்லிச் சொல்லிப் பிரலாபித்தாள். என் தந்தையிடம் இவளுக்கு இருக்கும் அக்கறை, மனைவிக்கு இல்லையா? ஏதோ தான் புரட்டிவிடுவது போலவும், அவள் கவனிக்கவில்லை என்ற மாதிரியிலும் ஏன் சொல்லிக் காட்ட வேண்டும்? மனைவிக்குத்தான் கணவனிடம் முதல் உரிமை என்பதை ஏன் இவர்கள் மறந்து விடுகிறார்கள்? பெரும்பாலான நம் குடும்பங்களில் மனைவியின் அந்தஸ்து இன்னும் அதல பாதாளத்திலேயே இருக்கிறது. சிறு பெண்ணாக, அநுபவம் முற்றாமல் புதிதாகக் குடும்பத்தில் நுழைபவளாக இருந்தால் பெரியவர்கள் அவள் தவறான வழியில் செல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் மருமகள் என்றும் பெரியவர்கள் என்றும் இருந்தால் அவளைக் கண்டிப்பதும் குறை கூறுவதுமே பெரியவர்களுக்கு அழகு என்று தங்களுக்குள்ளே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தால் என்ன செய்ய? அடங்காப் பிடாரிகளாக இருக்கும் பெண்களைப் பற்றி இங்கே கூற வரவில்லை நான். என் தாய் நேற்றுத்தான் கணவன் வீடு வந்தாளா? பாட்டியின் நடத்தை என் மனத்திலே கோபத்தை உண்டு பண்ணியது. தபாலை எதிர்பாராமலே விரக்தியுடன் தூணிலே சாய்ந்து நின்ற என் பெயரைச் சொல்லித் தபால்காரன் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான். ‘டைப்’ செய்யப் பெற்றிருந்த விலாசம் என் கணவரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை அறிவித்தது. ‘கனக்கிறது; நன்றாக முற்றியிருக்கும்’ என்று பறிக்கும் மட்டைத் தேங்காயை உரித்து உடைத்தவுடன் ஒன்றுமே இல்லாமல் ஏமாற்றம் கொடுப்பது உண்டு. என் ஆவலை அவருடைய கடிதத்தில் கண்ட ஏமாற்றம் அப்படித்தான் வளரச் செய்தது. கல்கத்தா தலைமைக் காரியாலயத்திலிருந்து அவர் எழுதியிருந்தார். “நான் இப்போது இங்கே இருக்கிறேன். அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? நீ வருவதற்கு இன்னமும் நாட்களாகுமா? எனக்கு வேலை மிகவும் அதிகம் இப்போது. கடிதம் போடு. ராமு” இதுதான் கடிதத்தில் காணப்பட்ட செய்தி. இந்தக் கடிதம் போடவில்லை என்று யார் அழுதார்கள்? தாம் அங்கே சென்று எத்தனை நாட்களாயின என்று அவர் தெரிவிக்கவில்லை. என் கடிதத்தைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வதா, இல்லை என்று வைத்துக் கொள்வதா? பார்க்கவில்லை என்றால் ‘நீ போய் ஒரு மாதம் ஆகிறதே? ஏன் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை? என்ன உடம்பு’ என்று விவரம் விசாரித்திருக்கிறாரா? பார்த்துத்தான் பட்டுக் கொள்ளாமல் எழுதியிருக்கிறார். என்ன கல் நெஞ்சம்? என்னால் ஏதும் உதவுவதற்கில்லையே என்ற அநுதாப வார்த்தை கூட எனக்குக் கிடையாது! இப்பேர்ப்பட்ட மனிதரிடம் நான் எதற்காகப் பணிவிடை செய்து கொண்டு வாழ வேண்டும்? கணவன் என்ற பெயருக்கு அவர் என் மீது காட்டும் இந்த அழகான அன்புக்கும் சலுகைக்கும் நான் மட்டும் உண்மையான மனைவி என்று ஊரறிய எதற்காகக் குடித்தனம் நடத்த வேண்டும்? மாபெரும் கடலுக்கும் ஓர் எல்லையுண்டு. பொறுமையில் சிறந்த பூமிதேவி கூடத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உஷ்ணத்தை வரம்பு மீறினால் ஒவ்வொரு சமயம் வெளியிட்டு விடுகிறாள். நான் அவருக்குப் பந்தமுற்றவள், அவருடைய மனைவி என்று நினைக்கும் போதே என்னுள்ளே பொங்கி வரும் அளவுக்கு நானும் கொதிப்பு அடைந்து விட்டேன். கடிதத்தை அப்படியே சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறியும் வண்ணம் ஆத்திரம் துடிதுடித்தது. இரண்டாகக் கிழித்து எடுத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றேன். அடுத்த தாழ்வரையில் அம்மா சுந்துவிடம் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தன. “அவர் தங்கந்தான். நமக்கு வாய்த்திருக்கும் பெண்ணே இப்படி இருக்கிறாளே சுந்து? அதற்கென்னமா, கடுதாசி போடுகிறேன் என்று சொல்ல மாட்டாளோ? ஆத்திரப்படுவது போலச் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கிறாளே! பிக்கு இல்லை, பிடுங்கல் இல்லை. ஒரு வார்த்தை அதட்டிச் சொல்லும் புருஷன் கூட இல்லை. இன்னொரு பெண்ணாக இருந்தால் பிறந்த வீட்டைத் தாங்க மாட்டாளா? அவளுக்கே இஷ்டமில்லையே? உம். பெண்கள் சுரண்டுவதுடன் சரி!” என் செவிகளை என்னால் நம்ப முடியவில்லை. தாயுள்ளம் படைத்த என் அன்னையா இப்படிப் பேசுகிறாள்? பணம் காசுதானா அவளுடைய தாயன்புக்கும் அஸ்திவாரம்? அன்றே என் கணவன் வீடு சுகமில்லை என்று நான் காட்டிக் கொண்டதை அவள் ஏன் நம்பவில்லை? அவள் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கியிருக்கும் நான் பொய் புகழுவேனா என்று ஏன் சந்தேகிக்கவில்லை? ‘அப்போதே குழந்தை போக மாட்டேன் என்று ஜாடையாகச் சொன்னாளே, இப்போது எப்படி இருக்கிறாளோ, என்ன கஷ்டமோ?’ என்று தாயுள்ளத்திற்கே இயல்பானதாக நான் எண்ணியிருக்கும் தணதணப்பு ஏன் அவளுக்கு என் மீது இல்லை? என்றோ நிலத்தில் விழுந்துவிட்ட முளைக்காத வித்து வேண்டுமானால் நாளடைவில் மட்கி மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் மனத்தில் என்றோ விழுந்து விட்ட வித்து அப்போது அமுங்கிவிட்டால் கூடச் சரியான உரம் போன்ற சம்பவங்களும் சூழ்நிலையும் கிடைத்துவிட்டால் வேர்விடத் தொடங்கிவிடும். என் தாய்க்கு என் மீது அன்பு இல்லை என்று என் குழந்தை உள்ளத்தில் பதிந்திருந்த எண்ணம் இச்சமயம் பலமாகவே வேரூன்றலாயிற்று. மனம் ஓடி வரும் நீரைப் போன்றது. உவர் நிலத்திலே ஊறி வரும் நீர் உவப்பாக இருக்கும். வண்டல் மண்ணிலே ஓடி வரும் நீர் அதன் சாரங்களைக் கிரகித்துக் கொண்டு வரும். சுண்ணாம்புச் சத்தானால் அதையும் இழுத்து வரும். நிறமும் மணமும் குணமும் ஒட்டாத நன்நீரைப் போல் அப்பட்டமாக மனம் இருப்பது மிக மிக அரிது. எந்தச் சூழ்நிலையிலே அது முதிர்ச்சி அடைகிறதோ, எந்த எந்த மனப்பான்மையுடைய மக்களினூடே அது பண்படைகிறதோ, என்ன என்ன நிகழ்ச்சிகள் அதற்கு உரமாக இருக்கின்றனவோ அவை அத்தனையின் சாராம்சமும் அதைச் சுபாவிகமான தனித் தன்மையினின்றும் வெகுதூரம் கொண்டு வந்து விடுகிறது. ‘நான் அதிருஷ்ட மற்றவள், அன்பு செலுத்தக் கூடியவர் எவருமே என்னிடம் தவறி விட்டனர். என் வாழ்வு என்றுமே இருட்டுத்தான்’ என்று நம்பிக்கை ஒளியையே முற்றும் இழந்து விட்டிருந்த என் மனம், ‘அன்னையும் என் மீது அன்பைச் செலுத்தவில்லை. இவ்வுலகின் இயல்புக்கே அப்பாற்பட்ட மாதிரியில் என்னிடம் அவளும் தன் கடமையை மறந்து விட்டாள்’ என்றெல்லாம் என் கற்பனைகள் வளர்த்து இன்னும் இருளாக்கிக் கொண்டு குறுகிய நோக்கத்தில் இனமறியாத சமாதானம் அடைந்தது. இத்தகைய நிலையிலே, நானாக எதுவும் முயன்று என் தந்தைக்கோ குடும்பத்துக்கோ உதவு முன்பு, யாருடைய ஒத்தாசையும் எனக்குத் தேவையில்லை என்று என் தந்தை - வாழ்நாளிலே சுகமே அறிந்திராத என் தந்தை கண்ணை மூடிவிட்டார். அவர் ஒருவரே என் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார். என் நலனிலே சிரத்தை வைத்திருந்த ஒரே ஜீவன் - ‘தின்றால் பழம் புளிக்கும்’ என்று என் வாழ்க்கையை அறிந்தால் மனம் கசிந்துவிடக் கூடிய ஒரே ஜீவன் போய் விட்டது! நான் தான் எத்தகைய அன்புக்கும் ஆகாதவனாயிற்றே! அதனாலேயே அவர் இந்த வியாதிக்கு ஆளானார்! அம்மா, பாட்டி எல்லோரும் அழுது துடித்தார்கள். நான் மட்டும் கண்ணீர் பெருக்கவில்லை. ஏன்? எனக்குக் கண்ணீரே வரவில்லை. துக்கம், மகிழ்ச்சி இரண்டுக்கும் ஒரு வரம்பு உண்டு. எல்லை மீறிவிட்டால் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே எனக்கு அழுவதற்கு இனி என்ன இருக்கிறது. வாழ்வின் போது மேடுபள்ளங்களால் வேறுபட்டிருந்தவர்கள் கூட துக்கத்துக்கும் அநுதாபத்துக்கும் ஒன்று கூடுவது இயல்பு. வீட்டிலே என் தந்தையின் மறைவுக்காக யாரெல்லாமோ வருவதும் போவதுமாக இருந்தனர். இந்தக் கும்பலிலே என் கணவரும் ஒருநாள் வந்தார். நேரிலே அவரைக் கண்டதும், பொங்கிக் கொண்டிருந்த என் ஆத்திரமெல்லாம் குப்பியில் அடைபட்டிருந்த குமுறும் வாயுவெனச் சீறி எழுந்தது. ‘சமயத்தில் உதவி செய்ய இஷ்டப்படாதவரை, சாவு என்றவுடன் யார் வரச் சொன்னார்கள்?’ என்று பொருமிக் கொண்டு அவர் கேட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்தேன். பத்துத் தினங்களுக்குள் ஜகது, மாமியார் மாமனாருடன் வந்தாள். சம்பிரதாயமாகத் துக்கம் விசாரித்துவிட்டுப் போய்விட்டாள். அத்தை அத்திம்பேரில்லாமல் வந்தாள். பாட்டியுடன் கிளம்பி விட்டாள். பெரிய அக்கா தங்கமும் அம்மாவைத் தேற்றிவிட்டுப் புறப்பட்டு விட்டாள். மதுரையிலிருந்து வந்திருந்த மாமாதாம் சுந்துவுக்கு ஒரு வழிகாட்டி. அம்மாவையும் கூட அழைத்துப் போவதாகத் தீர்மானம் செய்தார். நான் - நான்? புறப்படு முன் என் கணவர், “நீ தயாராக இல்லையா சுசீ?” என்று கேட்டார்? போவதா வேண்டாமா? கேள்விக்குறி என் மண்டை முழுவதும் வளர்ந்து விசுவரூபம் எடுத்து விட்டது போல் கனகனத்தது. போகாமல் என்ன செய்வது? போய்த்தான் என்ன கிழிக்கப் போகிறேன்? தனி வாழ்க்கையில் கொஞ்சமாவது விச்ராந்தி இருக்காதா? “நான் ஒன்றும் இப்போது உங்களுடன் வரப் போவதில்லை” என்றேன் வெடுக்கென்று. “சுசீ! கோபித்துக் கொள்ளாதே! உன் கடிதம் வந்த சமயம் நான் கல்கத்தா போய்விட்டேன். நான் இங்கே வரும் போதுதான் வீட்டின் உள்ளே கிடந்தது, பார்த்தேன். அப்புறமாவது நீ எனக்கு இன்னொரு கடிதம் போட்டிருக்கக் கூடாதா சுசீ? சமயத்தில் என்னால் பிரயோஜனம் இல்லையே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. உனக்கு வர இப்போது இஷ்டமில்லை என்றால், நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. நீ எப்போது வரப் பிரியப் படுகிறாயோ அப்போது வா. உன் மனம் சமாதானப்படும் வழியிலே நான் குறுக்கே நிற்கவில்லை சுசீலா!” என்று புகன்றுவிட்டு அவர் போய்விட்டார். இந்தக் குழைவிலே என் கண்ணை மறைக்கப் பார்த்திருக்கிறார். நான் வராவிட்டால் பாதகமில்லை என்பதை உருகுவது போல் நாசுக்காக எடுத்து உரைக்கும் அவர் தனிச் சாமர்த்தியத்துக்கு நான் வியப்பேனா? அல்லது ஏன் வரவில்லை என்று கூறினோம் என்று பெண் புத்தி பின் புத்தியானதற்கு வருந்துவேனா? “ஏண்டி சுசீலா? நீ அவருடன் போகவில்லையா?” என்று பொருள்பட என்னை எல்லோரும் நோக்கினார்கள். அம்மா கேட்டே விட்டாள். ‘நான் அவரிடம் போகப் போவதில்லை. என்னை எப்படியோ காப்பாற்றிக் கொள்வேன்’ என்று சொல்லும் தைரியம் அவள் முகத்தையும் கேள்வியையும் காணும் போதே அடைத்து விடுகிறதே! சுந்துவின் ‘ரிஸல்ட்’ வந்து ‘சர்ட்டிபிகேட்’ வாங்கிப் போகவும், ஊரில் உள்ள கணக்குப் பாக்கிகளைத் தீர்த்துச் சாமான்களை ஒழித்துக் கட்டவும் ஒரு மாதம் போல் ஆயிற்று. அவனுடன் நானும் வேண்டா விருந்தாளியாகச் செல்லுவேனா? ஆகா, பெற்ற மகள் தான் நான். சுந்துவைப் போல அதே தாய்க்கும் தகப்பனுக்கும் உதித்தவள் தான் நான். ஆனால் வேறொருவருக்கு உரிமைப் பொருளாக ஆன எனக்கு அந்த வீட்டில் யாதொரு சலுகையும் உண்மையில் இல்லையே? கணவன் வீட்டுப் பெருமைதான் பிறந்த இடத்தில் மதிப்பைக் கொடுக்கிறது. இல்லாவிட்டால் பிறந்த வீடென்று சொல்லிக் கொள்ளவும் நாக் குன்றி விடுகிறது. ‘வேறு புகலில்லை. வேண்டாதவளாக அவர்களுடன் செல்வதை விட அந்த அலுத்த வாழ்க்கை குன்றிவிடாது போக வேண்டியதுதான்’ என்று ஒரு வழியாக ஒரு மாதத்தில் முடிவு கட்டினேன். இந்தச் சமயத்தில் அங்கே என் பெயருக்கு வானொலி நிலையத்திலிருந்து வந்த கடிதம் ஒன்றை என் கணவர் திருப்பியிருந்தார். வருகிற மாதம் நிகழ்த்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ள எனக்கு அழைப்பு வந்திருந்தது! என்னைச் சூழ்ந்திருந்த போராட்டங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மறுநாளே நான் தன்னந்தனியாகப் பயணமானேன். பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|