(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

கனி

1

     சித்திரை மாதம். பகல் பன்னிரெண்டு மணி வேளை. சென்னையிலே வெயில் அனல் போல் எரிக்கக் கேட்பானேன்? தீவட்டி போல் கண்களை வெப்பம் கொளுத்தியது. மயிலாப்பூரின் தெருவொன்றில் இருந்த எங்கள் தனி வீட்டின் வாசற்புற அறையின் ஜன்னலிலே அமர்ந்து நான் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெருவிலே வழக்கமாக நடமாடும் கறிகாய்க் கூடைக்காரிகளையும், பழைய துணிகள் வாங்கிக் கொண்டு பாத்திரம் கொடுக்கும் தெரு விற்பனையாளர்களையுங் கூட அன்றைய வெயில் பயமுறுத்தி இருக்கிறது போல் இருக்கிறது. அவர்களைக் கூடக் காணோம்.

     வாயில் ஈ புகுந்தது தெரியாமல் வீட்டு வேலைகளும் குழந்தைகளின் கலகலப்பும் கிடைக்கும் இரண்டொரு நிமிஷ ஓய்வு நேரத்தையும் பறித்துக் கொள்ள, லீலாவும் இல்லாத இந்தத் தனிக் குடித்தனம் எனக்கு ஏதோ மனிதரே இல்லாத சூனியப் பிரதேசத்தில் வாழ்க்கை நடத்துவது போல் இருந்தது. அதிக வேலை செய்யும் கஷ்டம் இல்லை. அதிகாரம் செலுத்த மாமியார் இல்லை. அடிக்கு ஒரு தரம் அஞ்சி அஞ்சி மாடி ஏறும்படி செய்ய ஓரகத்தி இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து இரண்டு அறைகள். சிறிய கூடம் சாமான் வைக்க. சமையல் செய்ய, பின்கட்டு. மின்சார வசதிகள் கொண்ட அழகிய சிற்றடக்கமான வீடு. கணவன் மனைவி இரண்டே பேர் கொண்ட குடும்பம். என் இஷ்டம் போல எதுவும் செய்யச் சுதந்திரம் எல்லாம் எனக்கு இப்போது இருந்தன.

     ‘அவளுக்கு என்ன? நச்சுப் பிச்சென்று குழந்தை குட்டிகள் இல்லை. கை நிறையக் காசு வாங்கும் கண் நிறைந்த கனவன்’ என்று என்னைப் பார்ப்பவர்கள் காது கேட்கப் புகழ்ந்தார்கள்.

     ஆனால் வாழ்வைப் பூரணமாக்க எது தேவையோ, குடும்பத்தின் இன்ப வாழ்வுக்கு எது அஸ்திவாரமோ அது இல்லை என்று என் மனத்தைத் தவிர யார் அறிவார்கள்? இந்தத் தனிக் குடித்தனமா நான் விழைந்து விரும்பினது? இரவின் நிசப்தத்திலே குமுறும் அலைகடலைப் போல இந்தத் தனிமை செறிந்த வாழ்க்கை என் மனப் புண்ணைக் குடைந்து குடைந்து வேதனையன்றோ செய்கிறது? ‘குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் வேர்ப்புழுவாக நீ இருக்கக் கூடாது அம்மா’ என்று அம்மாவும் அப்பாவும் எனக்கு எத்தனையோ எடுத்துக் கூறினார்கள். நினைத்துப் பார்க்கப் பார்க்க இந்தப் பெண் பிறவி நான் எதற்காக எடுத்தேன் என்று புரியவில்லை. பிறருக்குத் துன்பம் கொடுப்பதும், என்னை நானே வருத்திக் கொள்வதுமா என் வாழ்வின் லட்சியங்கள்? பெண் ஒருத்தியின் வாழ்வு எதனாலே ஒளி பெறக் கூடியது? கணவனைக் களிப்பூட்டுவதனால் தானே. அந்த வகையிலே நான் முழுத் தோல்வி அடைந்திருக்கிறேன். கணவனின் சுற்றத்தாருக்காவது நான் உகப்பாக இருக்கிறேனோ? அவர்களுக்காக ஓடி ஓடித்தான் உழைத்தேன். அவர் அவர்களிடம் கொண்ட நன்மதிப்பைக் காப்பாற்றுவதற்காக அவர் என் இதயத்தைக் கசக்கிப் பிழிவதைப் பொறுத்தேன். ‘உன் வாழ்வின் சௌகரியங்களை நீ குறைத்துக் கொள்ள வேண்டும் அம்மா!’ என்று அப்பா சொன்ன வார்த்தைகள் கணீர் கணீர் என்று இன்னமும் என் செவிகளைத் தாக்குகின்றன. எந்த வேளையில் எதை நினைத்துக் கூறினாரோ? வேளைக்கு நான் உணவருந்தினேனா என்று கூட யாரும் கவனியாத வீட்டிலே என் சௌகரியங்கள் என்றால் என்ன என்பதையே அறியாமல் என் வாழ்வைத் தியாகம் செய்தேன். கடைசியிலே நான் கண்டது என்ன? என் சோதனைக் காலத்தின் இறுதியிலே கிரீடம் கிடைக்கப் போகிறது என்ற தைரியத்திலே நான் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவதாகத் தீர்மானம் கொண்டேனே, அந்த வகையிலாவது என் லட்சியம் சித்தி பெற்றதா? விழலுக்கு இறைத்த நீர் போல, மணிக்கணக்காக உட்கார்ந்து சிரமப்பட்டு இட்ட கோலத்தை அரை நொடியில் மழை வந்து அழித்து விடுவது போல, என் உழைப்பும் தியாகமும் இருந்த சுவடே தெரியாமல் அவருடைய ஒருநாளைப் பொருமலில் பஸ்மீகரம் ஆகிவிட்டன.

     இத்தனைக்கும், ‘இந்த வீட்டிலே என்னால் ஒரு கணம் இருக்க முடியாது!’ என்று காய்ந்து விழுந்தேனா? ‘என்னைத் தனிக் குடித்தனம் கொண்டு வைக்காவிட்டால் நான் இங்கே வர மாட்டேன். உங்களுக்கு நான் வேண்டுமானால் வீட்டை இரண்டு பண்ணுங்கள். அண்ணா மதனி முக்கியமானால் என்னை ரெயிலேற்றி விடுங்கள்’ என்று ராட்சசத்தனம் செய்தேனா?

     அவ்வாறெல்லாம் நான் அடம் பிடித்து இந்த அழகான தனிக் குடித்தனத்திற்கு வந்திருந்தேனானால் இவ்வளவு தூரம் என் கொதிப்பு எழும்பியிருக்காது. என் பற்றுதலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதிகாரத்துக்கும் அடக்குதலுக்கும் உணர்ச்சியற்றுப் போய்வரும் நாளிலே அவரை இந்தக் காரியம் செய்யச் சொல்லி யார் வருந்தினார்கள்? ‘எந்த விதத்திலும் இவள் மனம் சமாதானம் பெறக் கூடாது’ என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாரா என்பதையும் அறிகிலேனே!

     அவருக்கு என் மீது உள்ளன்பு நிரம்பி இருக்கவில்லை என்ற உண்மையை வரதனுடைய வீட்டில் அன்று அவர் வாய் மூலமாகவே அறிந்து கொண்ட போது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் போல இடி விழுந்தால் கூட ஏற்பட்டிராது. சாந்தியளிக்கும் திசையில் மனத்தைத் திருப்ப முயன்றேன். என் சங்கீத வளர்ச்சிக்கு என் நாட்களிலே கொஞ்ச நேரம் ஒதுக்கி வைக்கலானேன். அதிகாலையிலே இன்னும் ஒரு மணி முன்னதாக எழுந்தேன். விடிவெள்ளி ஊட்டிய புத்துணர்ச்சியிலே சாதகம் செய்யலானேன்.

     ‘உனக்கு அவசியமானவற்றைக் கூடப் பிறர் கவனிப்பார்கள் என்று எதிர்பார்த்து எடுத்ததற்கெல்லாம் பயந்தால், பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்று லீலா எனக்குச் சொல்லிக் கொடுத்த வகையில் நான் பயப்படாமல் நானாகவே ஏற்படுத்திக் கொண்ட சௌகரியம் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்று தைரியமாகச் சங்கீத சபைகளுக்கும், இன்னும் நகரத்திலே நடக்கும் பெரிய வித்துவான்களின் இசைக் கச்சேரிக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். ‘இன்று மாலை இந்த இடத்திலே... இன்னார் கச்சேரி... சீக்கிரமா வந்து அழைத்துப் போகிறீர்களா?’ என்று நான் கேட்க வேண்டியதுதான் தாமதம், மனைவி சொல் தட்டாத கணவராக அவர் என்னை உள்ளே கொண்டு உட்கார வைத்து விட்டு முடியும் தறுவாயில் வந்து அழைத்துப் போவார். இந்த ஒரு விஷயத்திலே அவர் காட்டிய சலுகையைப் பட்டுவாலும் மாமியாராலும் பொறுக்கத்தான் முடியவில்லை. நான் இல்லாத சமயங்களிலே நிச்சயமாக அவர்கள் அவரிடம் என்னைப் பற்றிக் குற்றம் கூறி அவருடைய பொறுமையைக் குலைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் நடந்த சிறு சம்பவம் மட்டும் அவருடைய அத்தனை நாளைய அசைக்க முடியாத பிணைப்பில் இருந்து அவரை அறுத்துக் கொள்ளச் சொல்லுமா?

     அதிகாலையில் நான் சாதகம் செய்வது பக்கத்து அறையிலே அவர்கள் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எத்தனையோ முறை பட்டு ஜாடைமாடையாகத் தெரிவித்தும் நான் செவி சாய்க்கவில்லை. ஆனால் நான் இதற்கென்று எங்கே போவேன்? இந்தச் சுதந்திரத்தை நான் இழக்கத் தயாராக இல்லை. தனியானதொரு சந்தோஷத்தையும், என்னை மறக்கும் ஒரு சாந்தியையும் கண்ட இந்த வழியை நான் விட்டுக் கொடுப்பேனா?

     அன்று காலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது பட்டு எழுந்து வந்தாள். “இந்தாடி சுசீலா, ஒரு நாளைப் பார்த்தாற் போல் நானும் சொல்கிறேன்; நீ காதிலே போட்டுக் கொள்வதாகவோ லட்சியம் பண்ணுவதாகவோ காணோம். விடிகாலமேதான் சற்றுக் குழந்தை தூங்குகிறான். அவரும் அசந்து தூங்குகிறார். இப்படிக் காதிலே வந்து பாயும்படி கத்தினால் கோபித்துக் கொள்கிறார்” என்றாள் கடுமையான அதட்டும் குரலில்.

     நான் தைரியமாகப் பதில் அளித்தேன்.

     “அதற்காக, என்னைப் பாடக்கூடாது என்கிறீர்களா மன்னி? எது வேண்டுமானாலும் நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன். தயவுசெய்து என்னுடைய இந்த ஒரே ஒரு சுதந்திரத்தில் மட்டும் குறுக்கிடாதீர்கள். நாளையிலிருந்து வேணுமானாலும் நான் கீழே போய் விடுகிறேன்” என்று நான் கெஞ்சும் முறையில் வேண்டிக் கொண்டது, அவள் கோபத்தை கிளப்பி விட்டு விட்டது.

     “பேச்சைப் பாரேன்! உன் சுதந்திரம் இங்கே என்ன பறி போய்விட்டது! ஒரே ஒரு சுதந்திரம் என்று காய்ந்து விழுவானேன்? பெரியவர்கள், மட்டு மரியாதை என்று இருந்தால் இப்படி நீ பேசுவாயா?” என்றாள் அவள்.

     என் கணவரும் தூங்கவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

     எரிச்சல் மூண்ட தொனியில், “என்ன மன்னி இது, காலை நேரத்திலே?” என்றார்.

     “பின் என்ன ராமு இது? தினமும் அண்ணா அசந்து தூங்கும் சமயத்தில் தொந்தரவாக இருக்கிறது என்றார். விடிந்து பாடேன் என்றால் சுதந்தரம், கிதந்தரம் என்று என்னவெல்லாமோ பேச்சு வருகிறது. நீங்கள் சுதந்தரமாக இருப்பதை நானா வேண்டாம் என்று கையைப் பிடிக்கிறேன்? இதோ பார் ராமு, நான் சொல்லி விட்டேன். வீணாக அவள் அவலை நினைத்து உரலை இடிப்பது போலப் பொரும வேண்டாம். நாளையே நீ தனிக்குடித்தனம் வைத்துக் கொள். அவளுக்குந்தான் ஏன் மனக் கஷ்டம்? மனசிலே ஒற்றுமை இல்லாமல் கசப்புடனே எத்தனை நாளைக்குத் தள்ளிக் கொண்டு போக முடியும்?” என்று பொழிந்து கொண்டே போனாள்.

     உண்மையைக் கூறிக் கெஞ்சியதற்கு எனக்குக் கைமேல் பலனா இத்தனை குற்றச்சாட்டுகள்? அவர்களே சதமென்று அவருக்கும் மேலாக மதிப்பு வைத்து உதாசீனங்களைப் பொருட்படுத்தாமல் வஞ்சகமின்றி நான் பாடுபட்டதற்குப் பரிசா இத்தனை பேச்சுக்கள்?

     என் உடைந்த மனத்திலிருந்து துயரம் கிளம்பியது. முகத்தை மூடிக் கொண்டு சிறு குழந்தைப் போல விம்மினேன்.

     “இப்போது யார் என்ன சொன்னார்கள்? எது சொன்னாலும் அவ்வளவு சட்டென்று அழுகை எப்படித்தான் வருமோ? பார்க்கிற பேர்கள் என்ன எண்ணிக் கொள்ள மாட்டார்கள்?” என்று முடிவு கட்டிவிட்டு அவள் சென்று விட்டாள்.

     முதல் முதலாக என் கனவர் மதனியின் செய்கை தமக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் காண்பித்துக் கொள்ளும் மாதிரியில், “அழாதே, சுசீலா! விடு, விட்டுத் தள்ளு?” என்றார்.

     அவருடைய அந்த ஆதரவான வார்த்தைகளிலே தான் என் உள்ளம் எத்தனை ஆசையுடன் தலை தூக்கியது! ஆனால் அந்த ஆதரவு வார்த்தையுடன் அவர் நின்றிருக்கக் கூடாதா?

     நிச்சயமாக நான் அவர் அப்படிச் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடுக்கிடும் காரியம் செய்வார் என்று எண்ணியிருக்கவே இல்லை. ஒரு வாரம் சென்றபின் ஒருநாள் நான் இரவு சாப்பாடெல்லாம் முடிந்து அறையைத் தண்ணீர் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தேன்.

     பரபரப்பும் படபடப்புமாக மாமியார் என்னிடம் வந்தாள். “என்னடி சுசீலா, பரம சாது போல் இருந்து கொண்டு உள்ளூற அவனுக்கு வத்தி வைத்து விட்டாயே. பெரியவர்கள், பெருந்தலை என்று என்னிடம் மரியாதைக்காவது கேட்டானா?” என்றாள் ரௌத்திராகாரமாக.

     எனக்கு அடியும் புரியவில்லை, நுனியும் புரியவில்லை.

     “என்ன சொல்கிறீர்கள், அம்மா?” என்றேன் தலை நிமிர்ந்து.

     “என்ன சொல்கிறீர்களா? ஒன்றும் தெரியாதவள் போல நடிப்பானேன்? அப்படி உசிருக்கு உசிரா, ‘அண்ணா, மன்னி’ என்று ஒட்டிக் கொண்டு இருந்தவனையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்திருக்கிறாயே அம்மா! ‘மயிலாப்பூரிலே வீடு பார்த்து விட்டேன். நாளைக்கே போய் விடலாம் என்று உத்தேசம் பண்ணிவிட்டேன் அண்ணா’ என்று அவனும் சொல்லும்படி ஆயிற்றே? கேசவன் அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டான். இல்லை, நான் ஒருத்தி குத்துக்கல் போல இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனக்கு ஒரு மதிப்பு வைத்து ஒரு வார்த்தை கேட்டானா? கூடப் பிறந்த பிறப்பினும் மேலாக, “ராமு ராமு, என்று அவள் அத்தனை ஒட்டுதலாக இருந்தாள். அதற்கு நல்ல மரியாதை கிடைத்தது!” என்று அவர் செய்யும் காரியத்துக்கு நான் தான் பொறுப்பாளி என்று என் மீது பாய்ந்தாள் அவள்.

     “அப்படியா? எனக்குத் தெரியாதே அம்மா. என்னிடம் அவர் அப்படி ஏதும் சொல்லவில்லையே!” என்றேன் பரிதாபமாக.

     “தெரியும் என்று நீ ஒப்புக் கொள்வாயா? உம் யாரைச் சொல்லி என்ன இப்போது? கேசவன் மனசே முறிந்து போய்விட்டது. பணங் காசு வரும் போகும். இப்படி முகத்தை முறித்துக் கொண்டு போகிறீர்களே, நாளைக்கு ஓர் ஆபத்து, சம்பத்து என்றால் மனுஷர்கள் கிடைக்க மாட்டார்கள்” என்று அவள் என் அழிந்த உள்ளத்திலே சொல்லம்புகளைப் பாய்ச்சிக் கொண்டு போனாள். நான் ஒன்றும் அறியாதவள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் உலகம் நம்பாது. உலக நியதியை விட்டே என் வாழ்க்கை நழுவி அப்பால் இருக்கிறது என்று சொன்னால் கூட அவர்கள் நகைப்பார்கள். இப்போது பிரிந்து போய் என் தலை மீது பழியைச் சுமத்துவதற்கு அவர் காத்திருந்தாரா? இந்தப் புத்தி முதலிலேயே எங்கே போயிற்று? என்னிடம் ஒன்றுமே தெரிவிக்காமல் அவர் செய்யும் காரியத்துக்கு அர்த்தந்தான் என்ன? ‘நான் உன்னைக் கைப் பிடித்த போது அப்படி எண்ணியிருந்தேன். இப்போதுதான் செய்தது தவறு என்று தெரிகிறது’ என்று என் மீது அன்று குற்றத்தைச் சுமத்தினாரே, என்னுடைய கண்ணீரிலும் கம்பலையிலும் இளகாதவர், இப்போது எதனாலே உருகிப் பிடிப்பு விட்டுப் போகும் ஈயத்தைப் போல் அண்ணன் மதனியிடமிருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்கிறார்?

     மாமியாரின் குத்தும் வார்த்தைகள், பட்டுவின் முதலைக் கண்ணீர் மைத்துனரின் பட்டுக் கொள்ளாத மௌன நிலை, குழந்தைகளின் உண்மையான பிரிவுத் துயரம், மனங் கவர்ந்த தோழி லீலாவைப் பிரியும் ஏக்கம், அவருடைய சலனமற்ற தனை, இவற்றின் நடுவே எங்கிருந்தோ வரும் சுதந்தரத்தை அநுபவிப்பவள் போன்று, என் தாய் எனக்கு என் விவாகத்தின் போது வழங்கியிருந்த சிறு வெண்கலப் பாத்திரத்தில் அரிசியையும் பருப்பையும் எடுத்துக் கொண்டு என் புதுமனையிலே புகுந்தேன்.

     கவலையும் ஏக்கமும் சூழ்ந்திருக்கும் இரவுகளிலே மனம் உறங்காமற் போனாலும் உழைத்துச் சலித்த உடல் தன்னை மறந்து உறங்கிவிடும். ஆனால் அடி மனத்திலே, ‘பொழுது விடிந்து விட்டதோ, விடிந்து விட்டதோ?’ என்ற துடிப்பு உடல் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கும். சிறிய அரவமும் கண்களை விழித்துப் பார்க்கச் செய்யும். நிலவின் கதிர்கள் என் கண்களுக்கு, விடிந்து விட்டது போன்ற பிரமையை ஊட்டிவிடும். ‘நேரம் அதிகமாகி விட்டதே. தூங்கி விட்டோமே!’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து வருவேன். குழாயில் நீர் வந்திருக்காது. பின்னரே என் மயக்க நிலை தெளியும். ‘பொழுது இன்னும் புலரவில்லை. விடிந்தும் தூங்கி விடுவோமோ? என்று உள்ளே குடி கொண்டிருக்கும் அச்சத்தினால் ஏற்பட்ட பிரமைதான்’ என்று எனக்குள்ளேயே அச்சத்திற்கும் அறியாமைக்கும் வெட்கிப் போவேன்.

     தங்க வளையலுக்கு ஆசைப்படும் ஏழை ஒருத்திக்குப் புதிதாக மெருகிட்டுக் கடையிலே விற்கும் பித்தளை வளையல் கையிலே கிடக்கும் கண்ணாடி வளையல்களை விடக் கவர்ச்சியாகத் தோன்றும். ஆசையின் உந்தலிலே அவற்றை வாங்கி அணிந்து விடுவாள். நாலு நாட்கள் சென்ற பிறகு தான் பித்தளையின் சுயரூபம் தெரியும். மங்கிப் பாசி பிடித்து அவலட்சணத்தின் சின்னமாக விளங்கும் அவற்றைக் காணுந்தோறும் அலட்சியத்துடன் தான் உடைத்தெறிந்த கண்ணாடி வளையல்கள் மேலானவையாக அவளுக்குத் தோன்றும். தனிமைக்கு அதிகம் இடமில்லாமல், குரங்கு மனத்துக்கு அலையவிடச் சந்தர்ப்பம் அதிகமில்லாமல் அலுவல்கள் நிறைந்த அவ்வீடே எனக்குத் தேவலை என்று தோன்றியது.

     என்ன காரணம் கொண்டு தனிக் குடித்தனம் வைத்தார். மனைவியிடம் அன்பைப் பெருக்கிக் கொள்ள அவர் கொஞ்சமும் விழைந்து விரும்பாத போது? என் மீது கனிவு காட்டுபவராகவா? அல்லது என்னைச் சற்றும் நிம்மதி இல்லாதவளாகச் செய்யவா?

     காலையிலே ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரைக் காணலாம். பகல் நேரச் சாப்பாட்டை ஆள் வசம் அனுப்பி விட்டு வாயில் புறத்து அறை ஜன்னலிலேயே உட்கார்ந்து, நான் தெருவிலே உல்லாசமாக மாலை வேளையைக் கழிக்கச் செல்லும் ஜோடிகளைக் கண்டு பெருமூச்செறிவதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும்.

     ‘மனம் விட்டுப் பாட அவகாசம் இல்லையே, சூழ்நிலை சுவையாக இல்லையே!’ என்று நான் குறைப்பட்டது போக, பொழுது எனக்கு வளர்ந்தது. நான் பாடினாலும் சிரித்தாலும் அழுதாலும் அதற்கு எதிரொலி எழும்பாது. மனத்திலே தளர்ச்சி அதிகரிக்க முளைவிட்டிருந்த என் சங்கீதத்தைப் பெருக்கிக் கொள்ளும் லட்சியமும் பாதிக்கப்படாமல் இல்லை.

     சுடர் கருகி மங்கும் விளக்கைப் போலக் குன்றி வந்த என் உற்சாகத்தைத் தூண்டி விடுபவள் போன்று சரளா என் வாழ்விலே வந்து புகுந்தாள். எப்போதும் போலத் தெருவைப் பார்த்துக் கொண்டு நான் ஒரு நாள் நிற்கையில் சரளா செருப்புச் சத்தம் ஒலிக்க, பின்னால் தலைப்புப் பறக்க அந்த மூன்று மணி வேளையிலே அவசரமாகச் செல்லுவதை என் கண்கள் கவனித்து விட்டன. மனத்திலே எழும்பிய ஆவலிலே அங்கிருந்தே, “சரளா” என்று கத்தி விட்டு வாசலுக்கே ஓடி வந்தேன். அவளோ, எந்த வீட்டில் யார் நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி நேரான நோக்குடன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தாமலே சென்றால். வாசற்படியில் நின்று எட்டிப் பார்த்த நான் அளவில்லாத துடிப்புடன் அவள் தெருவிலே செல்கிறாள் என்பதையும் மறந்து, “சரளா, சரளா!” என்று கூவினேன். அவள் ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். பிறகு அங்கிருந்தே முகத்தை அசைத்து விட்டுத் திரும்பிப் போய் விட்டாள். அவள் செய்கை எனக்குப் புரியவில்லை. அவளாக இருந்தால் அப்படியா என்னைக் கண்டுவிட்டுப் பேசாமல் போவாள்? தெருவில் போகும் பெண்ணொருத்தியை அப்படிக் கூப்பிட்டு விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

     திரும்பி வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்றேகால் ஆகியிருந்தது. தனக்கென எதுவும் பிரத்தியேகமாகச் செய்து கொள்வது என்றாலே பிடிக்காத பான்மை என் மனத்திடையே ஊறியிருந்தது. ‘அவருக்குச் சாப்பாடு அனுப்ப வேண்டும். இரவு உணவருந்த வருவார்’ என்று இந்த இரண்டு வேளைகள் மட்டும் சிரத்தையுடனும் கவனிப்புடனும் உணவு தயாரித்தேனே ஒழிய, என்னைப் பொறுத்த மட்டில், ஒருநாள் பன்னிரண்டு மணி, ஒரு நாள் இரண்டு மணி என்று நினைத்த போது உணவு கொள்வேன். எனக்குத் தோன்றினால் காபி போடுவேன். இல்லாவிட்டால் சிந்தனையிலேயே காலம் போக்கி விடுவேன். என்ன வேண்டுமானாலும் செய்ய இடந்தரும் இந்தச் சுதந்திரத்தை மனம் போன வழியிலேயே செலவழித்தேன். அன்று ஏதோ ஞானோதயம் போலத் திடீரென்று அப்படிச் செய்யக் கூடாது என்று தோன்றியது. ‘வாழ்வை ஏன் சோம்பிச் சோம்பிச் சுவையற்றதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? நல்ல உடைகள் அணிந்து சிங்காரித்துக் கொள்ளக் கூடாதா? வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பானேன்? அண்டை அயலிலே சிநேகம் பிடித்துக் கொண்டு வெளியில் வாசலில் போய் வரக் கூடாதா? ஏற்கனவே மூளியாயுள்ள வாழ்க்கையை இன்னும் நானாகவே ஏன் கல்லும் முள்ளுமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற புது எண்ணங்கள் எழும்பின. வாசலில் “யார் என்னைக் கூப்பிட்டது?” என்ற குரல் - சரளாவின் குரலே தான் - என்னை அழைத்தது. நான் அப்படியே ஓடினேன்.

     “சுசீலாவா, அடையாளமே தெரியவில்லையே? நான் யாரோ கூப்பிடுகிறார்களே, யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வந்தேன். தபால் ஒன்று அவசரமாக அனுப்ப வேண்டி இருந்தது. சற்று நின்றால் கூடக் கட்டு எடுத்து விடுவானே என்று அப்படி ஓடினேன். நான் போனது சரியாக இருந்தது. பெட்டியைக் காலி செய்து கொண்டிருந்தான். கையில் கொடுத்து விட்டு வந்தேன். நீ இங்கே தான் இருக்கிறாய்?” என்று ஆவலுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

     எத்தனையோ தினங்களுக்குப் பிறகு அன்று நான் என்னை மீறி மகிழ்வுற்றேன். “ஆமாம், உங்கள் மாதிரி இருந்தது. கூப்பிட்டு விட்டேன். அப்புறம் பேசாமல் போகவே, ‘யாரோ தெரியாமல் அழைத்தோமே’ என்று வெட்கப்பட்டுக் கொண்டேன். புங்கனூரை விட்டு எப்போது வந்தீர்கள்? நீங்கள் இந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! எங்கே இருக்கிறீர்கள்?” என்று பதிலுக்கு விசாரித்தேன். பழைய நட்பு என்றாலே தனி இன்பம் அதில் இருக்கிறது. என்னுடன் அவள் அன்று இரண்டு மணி நேரம் இருந்தாள். பக்கத்துத் தெருவிலே இருந்த கலாமந்திரம் ஒன்றில் அவள் சங்கீதத்துக்குத் தலைமை ஆசிரியராக இருக்கிறாள் என்றும், புங்கனூரை விட்டு வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் அறிந்து கொண்டேன். என்னைப் பாடச் சொல்லிக் கேட்ட அவள் ஆச்சரியத்துடன், “சுசீ! உன் சாதனையால் குரல் இன்னும் இனிமை பெற்றிருக்கிறது. நீ மேடை ஏறிக் கச்சேரி செய்தால் புகழும் பொருளும் உன்னை எப்படித் தேடி வரும், தெரியுமா?” என்று என் முதுகிலே தட்டினாள். எனக்கு சாயுஜ்ய பதவி கிட்டி விட்டது போல் இருந்தது.

     சரளாவின் நட்பு அன்றிலிருந்து என் கசப்பைப் போக்கும் மருந்தாக வளர்ந்தது. என் வாழ்விலே புது ஏடுகள் பிரிந்தன. சிறகிழந்த பறவை போல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதை விட்டு அவளுடைய கலா மந்திரத்திலே கலைஞர்களுக்கிடையே காலம் கழிக்கலானேன். அவளுடைய தோழமையினால் பல வித்துவான்களும் ரஸிகர்களும் எனக்குப் பழக்கமாயினர்.

     ஒருநாள் அவள் ஒரு விண்ணப்பக் காகிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து, “பூர்த்தி செய், சுசீலா!” என்று சிரித்துக் கொண்டே உத்தரவிட்டாள். என் உள்ளத்தில் மகிழ்ச்சி அலை பாய்ந்தாலும், சந்திரனின் மையத்தைப் போல உள்ளே நிழல் கட்டியது. “இவரிடம் இதற்கெல்லாம் உத்தரவு கேட்க வேண்டாமா?” என்றேன்.

     ஒரு விநாடி அவள் தயங்கிவிட்டு, “உனக்கு இத்தனை சுதந்தரம் கொடுத்திருக்கும் அவரைப் பதினெட்டாம் நூற்றாண்டுக் கணவராக நினைத்துப் பயப்படுகிறாயே? அவர் தடை சொல்லுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. கேட்க வேண்டுமானால் கேளேன்? நாளை வருகிறேன்” என்று கூறித் தாளைக் கொடுத்துப் போனாள்.

     அன்று இரவு அவரிடம் அதைக் காண்பித்தேன். எவ்விதச் சலனமுமின்றி அவர் அதைக் கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்தார்.

     “நான் என்ன தடை சொல்லப் போகிறேன், சுசீலா? உன் வழியிலே எனக்கு இயற்கையாக ஆர்வம் இல்லாவிடினும் உன் ஆசையை நான் மறிப்பேன் என்று எண்ணினாயா?” என்றார்.

     என் வித்தையை வெளி உலகிலே அறிமுகப்படுத்த ஏதும் தடை கூறாத அவரது பெருந்தன்மை என் மனச்சாட்சியைக் குத்தியது. ஆனால் அதே சமயத்தில் அவர் தம் அந்தரங்கத்திலே எனக்கு இடம் கொடாமல், மணந்து கொண்டு விட்ட கடனுக்காக என்னை மனைவியாக நடத்தும் கொடுமை என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.

     நானும் என் பெண்மையின் உறுதி லகானைத் தளர்த்தாமலே, புது உலகிலே புகழுடன் பிரகாசிக்கப் போகும் புது மகிழ்ச்சியைக் கொண்டு அக நெகிழ்ச்சியை மறைத்துக் கொண்டேன்.

     என் விண்ணப்பம் வெற்றியாக வேலை செய்தது. வானொலியிலே சுசீலா ராமநாதனின் குரல் அடிக்கடி கேட்கலாயிற்று.

     இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன. ஆனால் பெண்ணொருத்தியை மலர வைக்கும் ஜீவ ஒளி என் அக நிறைவை இன்னமும் கிரகணமாகவே வைத்திருக்கிறதே?

     வாயிலில் பேச்சுக் குரல் என் கவனத்தைத் தூண்டில் போட்டு இழுத்தது. லீலாவும் குழந்தைகளும் கம்பிக் கதவின் பின்புறம் நின்று பூட்டைப் பிடித்துக் குலுக்கினார்கள். நான் எழுந்து வந்தேன்.