(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) காய் 3 மறுநாள் காலை வாசல் தோட்டத்துக் காம்பவுண்டில் சரத் துணிகளைப் பிழிந்து நான் உலர்த்திக் கொண்டிருந்தேன். மூர்த்தி சைக்கிளைச் சார்த்தி விட்டு உள்ளே வந்தான். “அவர்கள் இதற்குள் எங்கும் போய்விட மாட்டார்கள் என்று வந்தேன். இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டான். என்னிடம் பாட்டியின் சூடு இன்னும் என் உள்ளத்தில் பச்சையாகவே இருந்தது. எனவே இருக்கிறார்கள் என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினேன். அவன் உள்ளே சென்றான். சற்றைக்கெல்லாம் அறையில் ஏதோ வேலையாக இருந்த என்னை மூர்த்தி, “சுசீலா!” என்று வந்து கூப்பிட்டான். என் கணவரும் அருகில் நின்றார். “நான் சொல்லவில்லையா நேற்று? இன்று என்ன திட்டம் போட்டிருக்கிறார், தெரியுமா?” என்று கேட்டு அவன் சிரித்தான். அவரும் நகைமுகத்துடன் தான் மௌனம் சாதித்துக் கொண்டு நின்றார். என்றாலும், முன்பு போல் அவர் விழிகள் என் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை. அவர் புன்னகையிலே இயற்கையான ஜீவன் இருந்ததாக்வே எனக்குப் படவில்லை. மூர்த்தியின் கேள்வியில் மகிழ்ச்சி தாங்காமல் அகம் மலர்ந்து விடவில்லை எனக்கு. “என்ன திட்டமாம்?” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு. எங்கள் இருவருக்கும் ஏதோ மனவேற்றுமை இருக்கிறது என்பதை எங்கள் பாவனை அவனுக்குப் புலப்படுத்தியே இருக்கும். நான் என்ன செய்வேன்! அகத்தின் நிலையை முற்றும் மறைத்துக் கொண்டு நடிக்க எனக்குத் தெரியவில்லையே! என்ன தான் நான் முயன்றாலும் அநுதாபம் கிடைக்கும் சமயங்களில் கட்டுக்கு மீறிச் சாயையைத் தெரிவித்து விடுகிறதே முக பாவம். “பார்த்தாயா மூர்த்தி? எனக்குத் தெரியும், நான் வந்து அழைத்தால் அவள் வரமாட்டாள் என்று. அதனாலேயே அவள் வழியில் குறுக்கிட வேண்டாமென்று நான் நேற்றுப் பேசாமல் போனேன்” என்றார் அவர். இந்த வார்த்தைகளில் எத்தனையோ அர்த்தம் பொதிந்து கிடக்கின்றது என்பது எனக்குத்தானே தெரியும். “நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் வரவில்லை. எப்படியும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டும். மன்னிக்கு அப்புறம் எப்போது சமயம் வாய்க்குமோ? எனக்கு அப்படியா? நாளைக்கே ஹேமாவுக்குக் கல்யாணம் என்றால் வருவேன். பிரமேயம் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் விட்டுக் கொடுத்தேன்” என்று மனத்தாங்கள் எதுவுமே இல்லாதவள் போல நான் சாதாரணமாக பதில் அளித்தேன். என்றாலும் அவர் வார்த்தைகள் எனக்கு உள் அர்த்தத்தை அறிவுறுத்தியதைப் போல, அவருக்கு சுரீர் என்று அவருடைய மதனி என்னைப் பாவிக்கும் விதத்தை அறிவுறுத்தியிருக்க வேண்டும். நாங்கள் ஏதோ குட்டிச் சண்டை போட்டுக் கொண்டு முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்கிறோம் என்று மூர்த்தி நினைத்திருக்கிறான். எங்கள் மனத்தாங்கலைத் தீர்த்துச் சமாதானம் செய்து வைக்கும் பெருமை முகத்தில் கொப்பளிக்க அவன், “என்ன சுசீலா? அதற்குள்ளே நீ இப்படிப் பிரமாதமாகச் சண்டை போடுகிறாயே அவரிடம்?” என்று என்னை நோக்கிக் கேட்டுவிட்டு அவரிடம் “போனால் போகட்டும், இன்று பகல் கிளம்பி நீங்கள் மட்டும் சுசியை அழைத்துக் கொண்டு ஊரை ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டுங்கள். அப்புறம் அணைக்கட்டுக்கும் போக நேரம் இருக்கும்” என்றான். மூர்த்தியிடம் நான், “நீங்களும் வருவீர்கள் அல்லவா?” என்றேன். ஏதோ யோசியாமல் கேட்டேன். அவ்வளவுதான். “வெகு அழகுதான்! காசிக்குப் போயும் கர்மம் விடவில்லை என்பது போல, அவர் குறைபட்டுக் கொள்ள வேண்டுமா? நேற்றே, தனியாகப் போக வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார். நான் எதற்கு!” என்று கபடமற்ற குழந்தை போல் அவன் நகைத்தான். “நீ வந்தால் தான் பொழுது போக்கு இன்னும் ரஸனையாக இருக்கும். நீயும் வா அப்பா. சுணங்கி விடாதே. ஹேமாவையும் கூப்பிட்டு விடுகிறேன்” என்று அர்த்தபுஷ்டியுடன் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல் ஒரு விநாடியில் ஒளி குன்றிய அவனை நான் கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அங்கு ஹேமா வந்தாள். “என்ன, மூவரும் இங்கே தனியாக ரகசியக் கூட்டம் நடத்துகிறீர்கள்? நானும் பங்கு கொள்ளலாமா?” என்று கேட்டவாறு நின்றாள். “பங்கு கொள்ளலாமா என்றா கேட்கிறாய்? உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று என் கணவர் முடிக்குமுன் அவள் “ஓகோ! தனிமையில் என் மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்! இந்த மூர்த்திக்கு எல்லோரிடமும் என் மண்டையைப் போட்டு உருட்டாமல் போனால் பொழுதே போகாது. என்னைப் பற்றி என்ன சொல்கிறான்” என்று நாளைக்குக் கணவனாக வரப்போகும் அவனை அவள் வலுச்சண்டைக்கு இழுத்தாள். “பார்த்தீர்களா? நான் பாட்டுக்குத் தெய்வமே என்று கிடக்கிறேன். என்னைக் குற்றம் சொல்வதைத் தவிர வேறு எதுவுமே அவளுக்குப் பேசத் தெரியாது” என்றான் மூர்த்தி. “அடடா! இப்போதே நீங்கள் உப்புக்கு உதவாததற்கெல்லாம் வலுச் சண்டை போடுகிறீர்களே!” என்று கடகடவென்று ஒலிக்க, நகைத்த என் கணவர், “என்ன ஹேமா, இன்று பிருந்தாவனம் போகலாமா? நீ இல்லாமல் மூர்த்தி வரமாட்டானாம்!” என்று அழைத்தார். “ஐயையோ! என்னால் இன்று பிருந்தாவனத்துக்கும் வர முடியாது, கோகுலத்துக்கும் வர முடியாது. ‘டென்னிஸ் மாட்ச்’ இன்று. ‘ஸெமி பைனல்ஸ்’ நான் ஆட வேண்டும்” என்று நாசுக்காகத் தோளை அசக்கிய ஹேமாவின் ஸாடின் சோலிக்கு மேல் பட்டும் படாமலும் நின்றிருந்த நைலான் புடவை தோள் பட்டையை விட்டு நழுவியது. “போக வேண்டும் நான். பத்மினி காத்துக் கொண்டிருப்பாள்” என்று உடலை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டுக் கொண்டு அவள் டக் டக்கென்று பாதரட்சை ஒலிக்க மச்சுப் படியில் இறங்கிச் சென்றாள். மூர்த்தி பேசவே இல்லை. முகம் கறுக்க ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனைப் போல் நின்றான். அவன் தோளைப் பிடித்து அவர் குலுக்கினார். “என்னப்பா? ஒரேயடியாய் இந்த உலகத்துச் சிந்தனையை விட்டே ஓடிப்போய் விட்டாயே! அவள் வராமல் எங்களுடன் வர மாட்டாயாக்கும்!” என்றார் சிரித்துக் கொண்டே. அவன் சமாளித்துக் கொண்டவனாக, “உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இல்லை என்றால் வருகிறேன்” என்றான். பட்டு, அத்தை, பாட்டி எல்லோரும் பிரமித்து நிற்கும்படி நான் அவருடன் காரில் ஏறிக் கொண்டேன். பின்புற ஆசனத்தில் மூர்த்தி அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு கட்டிடத்தையும், இது இன்னது, அது இன்னது என்று சொல்லிக் கொண்டே வந்தான். முதன் முதலாக அவரருகில் அமர்ந்து கொண்டு அழகு வாய்ந்த அவ்வூரின் விசாலமான வீதிகளில் உல்லாசப் பவனி வரும் எனக்கு ஏனோ மனம் விம்மவில்லை. வாழ்வின் முதற் படியில் காலை எடுத்து வைக்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஏமாற்றங்கள் நிகழ்ந்திராமற் போனால் அப்போது எனக்கு மேக மண்டலத்திலே சஞ்சரிப்பதைப் போலல்லவா இன்பம் கொடுக்கும்? இப்போதே அவர் உள்ளத்தை வலுவிலே சென்று இடித்துப் பார்க்க எனக்குப் பயமாக இருந்தது. கற்பாறை கொண்டு மூடப் பெற்றிருக்கும் இருட் குகையாக இருந்தால் நான் இடித்தும் என்ன பயன்? வீணாக இருதயம் வலிக்கும். இருளைக் கண்டு இன்னும் துயருண்டாகும். அதற்கு இந்த ஊசலாடும் நிலையே மேலானதல்லவா? அவர் என்னுடன் தனிமையை இன்னும் விழைந்து விரும்பவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறதே! அம்மாவின் அபிப்பிராயத்தை ஒட்டி, நானே ஆத்திரப்பட்டுத் தவறு செய்தேன் என்று அவர் நினைக்கிறாரா? என்னை “மன்னித்து விடுங்கள். அறியாமல் தவறு செய்து விட்டேன்!” என்று அவர் காலில் போய் நான் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இதற்கு என் பெண்மை இடம் கொடுக்க மறுத்தது. ஆண்மைக்கு அத்தனை அகம்பாவமும் அழுத்தமும் இருக்குமானால் நான் எவ்விதத்திலும் நடந்து கொண்டது சரியே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, வீணே ஏன் சரணாகதி அடைய வேண்டும்? என் சுதந்திரத்திலும் சுக சௌகரியங்களிலும் சற்றும் அக்கறை கொள்ளாத அவரிடம் நான் உணர்ச்சி வசப்பட்டுச் சரணாகதி அடைந்து விட்டேனானால் இன்னமும் அவர் ஆணவத்திற்கு உரம் கண்டு விடும் அன்றோ. அவர் கைப் பொம்மையாக ஆகும் அந்த நிலைக்கு நான் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது. வெளியே என் பார்வையைச் செலுத்தினேன். அணைக்கட்டின் வாயிலில் கொணர்ந்து வண்டியை நிறுத்திய அவர், “உள்ளே நடந்து செல்லலாமா? அல்லது காரிலேயே போய் விடலாமா?” என்று கேட்டார். “நடக்கலாமே, என்ன சுசீலா? காரிலே போவது எனக்கு அவ்வளவு சுகமாகத் தோன்றவில்லை” என்றான் மூர்த்தி. “ஓ நடக்கலாம்” என்று கூறியவாறே நான் இறங்கினேன். மூவரும் அணைக்கட்டின் மீது நடந்தோம். என்னை விட்டுப் பேசிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்ட மூர்த்தியும் என் கணவரும் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள். “சுசீலா, சுசீலா!” என்று அவர்கள் கத்தியது எனக்குக் காதில் விழவில்லை. அவர் திரும்பி அருகில் வந்து, கல்லோடு கல்லாகச் சாய்ந்து நின்ற என்னை, “என்ன சுசீலா, இங்கேயே நின்றுவிட்டாய்? பிருந்தாவனம் பார்க்க வேண்டாமா?” என்று அழைத்த பிறகு தான் சுய உணர்வு பெற்றேன். படிக்கட்டுகளின் வழியாக அணைக்கும் கீழே இறங்கிய போது உண்மையாகவே எனக்குப் பூவுலகை விட்டு எங்கோ வந்து விட்டதாகத் தோன்றியது. கண்களைப் பறிக்கும் வர்ண விளக்குகளின் ஒளியிலே காவேரி எப்படி எல்லாம் திகழ்ந்தாள்! ஒரு புறத்திலே தோகை மயிலைப் போலச் சிவப்பும் நீலமுமாக ஒளிவிட்டுக் கொண்டு ஆடினாள். இன்னொரு புறத்திலே அன்னமென நடந்து சென்றாள். மற்றொரு புறத்தில் பட்டாடைகளைப் பூண்டு கொலுவிருக்கும் அரசி எனத் திகழ்ந்தாள். பிறிதொரு பக்கம் சலசலவென இனிய சங்கீதம் பாடி மக்களை மகிழ்வித்தாள். பல வண்ணப் பூக்கள் நிறைந்த சோலையிலே ஒளிப் பிழம்புக்கு முன் தோழிமார்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு ஆடிக் களித்தார்கள். அவள் ஆடும் இடத்திலே எனக்கும் இவ்வுலகின் இன்னல்களை எல்லாம் மறந்து ஆட ஆசை உண்டாயிற்று. அவள் நடை பயிலும் இடத்திலே அந்த அழகையே பார்த்துக் கொண்டு ஆயுள் முழுவதும் கழித்து விடலாம் எனத் தோன்றியது. வண்ண மலர்ச் சோலையிலே அவள் தோழிகளுடன் கூடிக் களிப்பதைக் கண்டதும் நானும் ஒரு நீரூற்றாகி அவள் தோழிமார்களில் ஒருத்தியாகி விடமாட்டேனா என்று மனம் துடித்தது. அவள் கொலு வீற்றிருக்கும் போது சாமரம் வீசும் பணிப்பெண் போல் திகழும் நீரூற்றாக இருக்கும் பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கலாகாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று. நங்கையின் களிக்கூடத்தை அலங்கரித்த விளக்குகளுக்குத்தான் எத்தனை பெருமை, எத்தனை பூரிப்பு! வான மண்டலத்தை அழகு செய்த நட்சத்திரங்களைக் கண்டும் வெட்கமுறாமல் “எங்களுக்குச் சமமாவீர்களா நீங்கள்?” என்று பெருமிதத்துடன் கேட்பது போல் மின்னின. மக்களை மகிழ்விக்கும் மங்கைக்குக் களைப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டோ என்னவோ, வாயுதேவன் தன் குளுமையான கரங்களால் விசிறியபடி இருந்தான். வாய் ஓயாமல் எதை எதையோ அவரிடம் விளக்கிக் கொண்டு வந்த மூர்த்தியாகட்டும், அவராகட்டும், என்னைக் கவனிக்கவே இல்லை. கொலு மண்டபம் போல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தண்டை வந்த பின் தான் அவர்களும் என்னைக் கவனித்தார்கள். நானும் இரண்டாம் முறையாக என் நினைவுக்கு வந்தேன். “என்ன இது? நான் பாட்டுக்கு வளவள என்று பேசிக் கொண்டே வந்திருக்கிறேன் உங்களை மறந்து? என்ன சுசீலா? இவன் ஏதடா இது, சளசளவென்று குறுக்கிட்டு விட்டான் என்று சபித்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான் மூர்த்தி. “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இங்கு வந்ததுமே எனக்கு பூலோகத்திலிருந்து வேறு எங்கோ தவறி வந்து விட்டதைப் போல பிரமை தட்டிவிட்டது. பேச்சே எழாமல் சக்தியை நாக்கு இழந்து விட்டது” என்றேன் பரவசமாக. “நல்ல வேளை ஊமையாகி விடவில்லையே? எங்கே இந்த மண்டபத்தில் கொஞ்சம் சிரித்துக் கொண்டு நில்லுங்கள்” என்று கூறிய மூர்த்தி தோளில் மாட்டியிருந்த ‘காமிரா’வை எடுத்தான். அவர் நின்றார், நானும் பக்கத்தில் போய் நின்றேன். “இன்னும் கொஞ்சம் நெருங்கி. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். சுசீலா தலையை நிமிர்த்திக் கொள். உம், சாய்க்காதே! கொஞ்சம் புன்னகை!” என்றெல்லாம் அவன் சொன்ன போது, புது மணப் பெண்ணைப் போல எனக்கு வெட்கமாக இருந்தது. அவர் அருகில் நெருங்கி நெருங்கி அவருடைய ‘கோட்’ என் புடவையுடன் உராய்ந்து விட்டது. நான் அணையிட்டுத் தடுத்திருந்த மன நெகிழ்ச்சி கட்டுக்காவலை உடைத்துக் கொண்டு மீறிவிடும் போலக் கொந்தளித்தது. வலிமை பொருந்திய அவருடைய கரங்களின் அணைப்பிலே அடங்கிச் சிறு குழந்தை போல அவருடைய நெஞ்சிலே தஞ்சம் புக என்னுள் தாபம் கிளம்பியது. இந்த வேளையில் மூர்த்தி, “சிரித்த முகம் கொஞ்சம்!” என்று உத்தரவிட்ட போது, நான் சிரித்தேனா அழுதேனா என்று கூட எனக்குப் புரியவில்லை. அதற்குள் அவர், “வேண்டாம், இங்கே நீ சுசீலாவுடன் பேசிக் கொண்டிரு. நான் போய் வாங்கிக் கொண்டு வெளியே போய் அப்படியே காரையும் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறி அவனுடைய பதிலை எதிர்பார்க்காமலே நடந்தார். அசந்து போனவன் போல மூர்த்தி எங்கள் இருவரையும் மாறி மாறி நோக்கினான். நானோ அவன் பார்வைக்கு அகப்படாமல் கீழே தரையை வருடிக் கொண்டிருந்தேன். ஆம், அவருக்கு என்னுடன் தனிமையில் இருக்கப் பிடிக்கவில்லை. அதற்காகவே பயந்து கொண்டு திரும்பிப் பாராமல் ஓடுகிறார்! என் நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது. உண்மையில் அவர் மட்டும் அன்று அந்தப் பொழுதிலே என்னுடன் தனிமையில் இருந்திருந்தாரானால் அவர் காலடியில் விழுந்து நான் கதறியிருப்பேன். என் ஆராய்ச்சிகளை எல்லாம் ஒரு புறமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு நான் செய்த பிழையை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் பெருக்கியிருப்பேன். மூர்த்தி தான் போவதாகச் சொன்ன போது, அந்த நிமிஷத்துடன் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாத மௌன வாழ்வின் முடிவு சமீபித்து விட்டது என்றே எண்ணினேன். என் நெகிழ்ந்த நெஞ்சுக்கு அவர் மட்டும் அப்போது சற்று வழிவிட்டிருந்தாரானால் அது மெழுகென உருகி ஓடியிருக்கும். அவர் அவ்விதம் செய்யவில்லை. தனிமை தம்மை உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிவிடக் கூடும். கல் மனத்தைக் கரைத்து விடக் கூடும் என்று ஏகாந்தத்தின் இலக்குக்குள் அகப்படாமல் ஓடுகிறார். ஏன் இப்படி ஓட வேண்டும்? மனிதர்கள் குற்றம் செய்வதில்லையா? அவரை விட நான் எவ்வளவோ சிறியவள். அநுபவம் முதிராதவள். தவறு என்னிடம் இருந்தாலும் அவர் உள்ளத்தில் காதல் நிரம்பி இருக்குமானால் மன்னித்து விட மாட்டாரா? மூர்த்தியின் தூண்டுதலுக்காக என்னை அழைத்து வந்திருக்கிறார். “சுசீலா!” என்ற மூர்த்தியின் குரல் என்னை உலுக்கியது. நிமிர்ந்தேன். எங்கே பார்த்தாலும் ஜகஜ் ஜோதியான ஒளிமயம், சோவென்று நீரின் சப்தம், எல்லாம், ‘இந்திரலோகம் போன்ற இடத்திலே இருக்கிறோம். எதிரே மூர்த்தி கூப்பிடுகிறான்’ என்று எனக்கு நினைப்பூட்டின. “என்ன சுசீலா இது? ராமநாதனுக்கும் உனக்கும் ஏதோ விளையாட்டுச் சண்டைதானாக்கும் என்று நினைத்தேனே! எனக்கு இப்போது மிகுந்த கஷ்டமாக அல்லவோ இருக்கிறது? நீ பாட்டுக்குப் பேசாமல் உம்மென்று இருக்கிறாய். அவரோ நான் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாதே என்று மாதிரி ஏதோ அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு எனக்காக உன்னிடம் பேசுகிற தோரணையில் பாவனை செய்கிறார். என்ன விஷயம் சுசீலா? நேற்று உன்னை விட்டு அவர் இங்கு வந்திருக்கிறார் என்று அறிந்த போதே எனக்கு ஏதோ போல் இருந்தது. ஏதோ தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்று தமாஷ் செய்கிற மாதிரியில் நான் இன்று இங்கு வரத் தூண்டினேன். ஆனால் நான் நினைத்தது போல் படவில்லையே?” என்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டான். அவனே வெகுளியான சுபாவம் படைத்தவனாயிற்றே. மனத்தில் பட்டதை அப்படியே ஒளிவு மறைவின்றி என்னிடம் கேட்டு விட்டான். ஆனாலும் எங்கள் விஷயத்தில் அவனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? ‘பெரிய மனஸ்தாபமாக இருந்தால்தான் நமக்கு என்ன?’ என்று லேசாகக் கவனிக்காமல் இருந்து விடலாமே! கண்கள் நீரைக் கக்கி விடாதபடி உணர்ச்சியை விழுங்கிக் கொண்டேன். என்ன பதில் சொல்வது அவனுக்கு? வயசு வந்த ஆண்பிள்ளை அவன். யாருமே எங்களைச் சிரத்தை கொண்டு கவனிக்காத சூழ்நிலை. ஏன் இப்படி அவர் எங்களை விட்டு விட்டுப் போக வேண்டும்? மனைவியிடம் சந்தேகம் கொள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்டவர் அல்ல என்று அவனுக்குப் பெருமையாகத் தெரிவிக்கவா? என் மௌனத்தைக் கண்டு மூர்த்தி என் எண்ணங்களை அறிந்து கொண்டு விட்டான் போலும்! மீண்டும் அவன், “நான் விஷமமாகக் கேட்கிறேன் என்ரு நினைக்கிறாயே? உன்னை நான் மஞ்சு போல் எண்ணிக் கொண்டிருக்கிறேன் சுசி. முதல் முதலாக உன்னைப் பார்த்த போதே எனக்கு என்னவோ தனியாக உன் மீது அப்படி ஓர் அபிமானம் தோன்றி விட்டது. அதுவும் மஞ்சு இறந்த பிறகு, நீதான் அவள் என்றே நான் எண்ணியிருக்கிறேன். உங்கள் விவகாரங்களில் நான் தலையிடுவது தவறு என்று உனக்குத் தோன்றலாம்” என்று கூறிய போது தொண்டை கரகரத்தது அவனுக்கு. “நான் எப்போது உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வாடிய முகத்துடன் நீ சமையலறைக்குள்ளிருந்து வரும் காட்சியைத் தான் காண்பேன். மனத்துக்குள் நீ ஏதோ கஷ்டப்படுகிறாய் என்று நேற்று அறிந்த போது எனக்குத் திடுக்கென்றது. சுசி, உன்னை நான் முதன்முதலாக ஊருக்கு அழைத்துப் போன போது பார்த்ததற்கும் இப்போதைய தோற்றத்திற்கும் எத்தனையோ மாறுதல் காண்கிறேன். ராமநாதன் உன்னிடம் அன்பாகத் தானே இருக்கிறார்?” என்று நேரான கேள்வியில் வந்து அவன் முடித்தான். ‘நமக்கும் இப்படி ஒரு மூத்த சகோதரன் இருந்தால்?’ என்று ஏங்கியிருந்த எனக்கு அப்போதே “அண்ணா” என்று கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏனோ சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். எப்படியே மனத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் மீறிக் கொண்டு சிரித்தேன். சமயங்களில் நடிப்புக் கலை மிகவும் தேவையாக இருக்கிறதே? “அதெல்லாம் ஒன்றும் இல்லை. எதை எதையோ நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆமாம், உங்களுக்கு இந்த வருஷத்தில் கல்யாணமாமே? நேற்று நான் கேட்க வாயெடுத்தேன்; பாட்டி வந்து விட்டாள்” என்று பேச்சைச் சமத்காரமாக அவன் பக்கம் திருப்பினேன். “நிஜந்தானா சுசீலா?” என்று அவன் கேட்டான். நான் இன்னும் சத்தமாக ஒலிக்கும்படி நகைத்தேன். “என்ன நிஜந்தானா? அதை நான் அல்லவா கேட்க வேண்டும்? எனக்கு ஓர் அண்ணா இல்லையே என்று எப்போதும் ஒரு குறை உண்டு. அது தீர்ந்ததும் இப்போது எனக்குச் சந்தோஷம் கிட்டவில்லை. ஏன் தெரியுமா?” அவன் வாய் திறக்கவில்லை. நான் மீண்டும், “எனக்கு உள்ள இன்னோர் ஆசை, காதல் மனம் பார்க்க வேண்டும் என்பது. அதுவும் எனக்குத் தெரிந்த காதலர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசை வேறு பாழாகும் போல் இருப்பதால், எனக்கு இப்போது எதுவுமே பிடிக்கவில்லை” என்றேன். “ஐயோ, நீ மஞ்சுவைப் போலவே பேசுகிறாய், சுசி. அவள் இப்படித்தான் அடிக்கடி சொல்லுவாள்” என்று அவன் நெகிழ்ந்த குரலில் கூறிய போது எனக்கு ஏன் அவ்விதம் பேசினோம் என்று இருந்தது. பாவம்! பழைய நினைவுகளில் அவனுக்குக் கண்களில் நீர் கூடத் துளிர்த்து விட்டது. “கடைசி முறையாகக் கூட அவள் இப்படித்தான் என்னைக் கேலி செய்தாள். உன் புடவைகளை என் பெட்டியில் பார்த்துவிட்டு, ‘வரப்போகும் மன்னிக்கு வாங்கியிருக்கிறாயா அண்ணா? சிவப்பாக இருந்தால் ‘ஸெலக்ஷன்’ முதல் தரம். எனக்கு வெகு நாட்களாக ஆசை அண்ணா. ஏதாவது இடைஞ்சல் இருந்தால் நானும் உதவி செய்யட்டுமா? எனக்கு அவள் யார் என்று சொல்ல மாட்டாயா?’ என்றெல்லாம் கூறிய அவள் இப்போது இல்லையே! இருந்தால் தோண்டித் துளைத்து என்னிடமிருந்து விஷயத்தை அறிந்து கொண்டு அப்பா அம்மாவிடம் நானாச்சு என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிடக் கிளம்பி விடுவாளே!” என்று அவன் நெடு மூச்செறிந்தான். என் மனங்கூட இளகிவிட்டது. அவன் வருத்தத்தை இன்னும் ஏதாவது பேசிக் கிளப்ப வேண்டாம் என்று நான் கவனத்தை எதிரேயுள்ள நீரூற்றுகளில் செலுத்தினேன். அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டேன். இரண்டு பெண்களும் இரண்டு ஆடவர்களும் படியேறி மண்டபத்துக்குள் வந்தார்கள். அதில் ஒரு ஜோடி. காதலர்களோ தம்பதிகளோ தெரியவில்லை; சற்றும் நாணமோ கூச்சமோ இன்றி அவனும் அவளும் இடைகளில் கை கொடுத்துக் கொண்டு உல்லாசமாக நடந்து வந்தனர். பெண்கள் இருவரும் சாயலில் சகோதரிகள் என்று தெரிந்தது. சற்றும் லஜ்ஜையின்றி அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடைகள் உடம்பெல்லாம் தெரியும்படி இருந்தன. ‘அடக்கத்துக்கும் மரியாதைக்கும் அழகுக்கும் பேர் போன நம் பாரதப் பெண்கள் இப்படி உடைகள் அணியும் காலமும் வந்துவிட்டதே!’ என்று குன்றிப்போன எனக்கு அவர்களைப் பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. தனியாகத் தென்பட்ட ஆடவன், அவர்களை விதம் விதமான கோணங்களில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான். என் கவனத்தை அவர்களிடமிருந்து நான் திருப்பிய போது, மூர்த்தியும் அவர்களைக் கவனித்திருக்கிறான் போல் இருக்கிறது. “ஹேமாவும் வரவர இந்தப் பாணியில் தான் உடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்” என்று அருவருப்புடன் முணுமுணுத்தான். “வெகு நேரமாகி விட்டதோ?” என்று கேட்டவாறே கையில் உணவுப் பொட்டலங்களுடன் என் கணவர் படியேறி வந்தார். பட்டப்பகல் போன்ற வெளிச்சத்தில் அவரைக் கண்டுவிட்ட, தனியான அந்த ஆடவன் “ஹல்லோ!” என்று விளித்துக் கொண்டே அவரை நோக்கி வந்தான். “ஓ! அடடா! சற்றும் எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே! எங்கே இப்படி?” என்று முகம் மலர, அவர் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார். “இவர்கள் பம்பாயிலிருந்து நம் பக்கத்துப் பங்களாவுக்கு ஸீஸனுக்கு வந்திருந்தார்கள். நேற்றுத்தான் இங்கு வந்தோம். நீங்கள் நேராக அங்கே வருவீர்கள் என்று அல்லவோ எதிர்பார்த்தேன்? ஆட்களிடம் கூடச் சொல்லிவிட்டு வந்தேன். இங்கே எப்போது வந்தீர்கள்? உன் மனைவி வந்திருக்கிறாளா?” என்று அவன் விசாரித்தான். “நாங்கள் வந்து ஒரு வாரம் ஆகிறது. நாளைக்கே அங்கே புறப்படலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதோ என் சுசீலா!” என்று என்னைக் காட்டிப் புன்னகை செய்த அவர், சற்றுத் தயங்கி, “இவர் அவளுக்குக் கஸின், மிஸ்டர் மூர்த்தி” என்று அவனையும் அறிமுகப்படுத்தி வைத்தார். சந்தேகத்துடன் நான் அவனைப் பார்க்கையிலேயே அவன் என்னை ஏற இறங்க நோக்கிவிட்டு, “ஓகோ! ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று புன்னகை செய்தான். உடனே நினைவு வந்தவர் போல் மூர்த்தியிடம் என் கணவர், “மூர்த்தி இவர் தாம் மிஸ்டர் வரதன். லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று சற்று அழுத்தமாகவே கூறி நகைத்தார். பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|