உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) காய் 6 வரதன் கூறியது உண்மைதான். தன் காதலியைப் பிரிந்து அடி வானத்திலே மறையும் போது கதிரவன் என்ன என்ன ஜாலங்கள் செய்கிறான்! ஒரேயடியாக மறைந்து விட்டால் அவள் எங்கே சோர்ந்து விடுவாளோ என்ற எண்ணம் போலும் அவனுக்கு! ஒரு விநாடி தன் ஒளி முகத்தைக் காட்டுவான். பின்னர் கொஞ்சம் மேகத் திரைக்குள் மறைந்து பின்னே செல்வான். மறுபடியும் ‘இதோ இருக்கிறேன்’ என்று தன் பொற்கதிர்களால் அவளை அணைத்துக் கொள்வான். பெண்களை மயக்கும் இந்தக் கொஞ்சல் வித்தை அவனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது! இந்த ஜால வித்தையை அறியாத மலையரசி, காதலன் தன்னுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டு பரவசம் அடைந்தவளாக மெய் மறந்து விடுவாள். உள்ளே மறைந்தவன் வருவான் என்று அகம் துடிக்க அவள் நிற்கும் போதே அவன் போயே போய் விடுவான். ஏக்கமும் நிராசையும் சூழ்ந்தவனாக அவன் கரிய கங்குல் கொண்டு தன்னை மறைத்துக் கொள்வான். சில நாட்களில் மலை மோகினியை ஏளனம் புரிவது போல, வான வீதியிலே அவள் ஒளி நாயகன் இருந்த இடத்திலே சந்திரன் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கன்னிகையர் சூழப் பவனி வருவான். அப்போது எனக்குச் சட்டென்று வரதனின் அநுதாபம் நெஞ்சிலே ஈட்டி போல நினைவுக்கு வரும். நான் முகங் கொடாமல் அன்று படாரெனக் கதவைச் சார்த்தியும் கூட அவன் என்னிடம் எந்த மாறுதலையும் காட்டவில்லையே! எவ்விதச் சங்கடமும் இன்றி முன்போலவே அவன் நடந்து கொண்டானே ஒழிய அந்தச் சம்பவத்தைப் பற்றியோ, அம்மாதிரியான விஷயங்களைப் பற்றியோ அவன் பேசவே இல்லை. ‘உண்மையாக ஏதோ அநுதாபம் கொண்டும் கேட்டிருக்கிறானே ஒழிய, விகற்பமாக எண்ணுவது தவறு. ஆடவர் எவருடனும் இன்னமும் கலகலப்பாகப் பழகி இராததனாலே, கெட்டிப்படாத மனத்தில் ஏற்படும் சலனந்தான் இது’ என்று தைரியத்தைக் குவித்துக் கொண்டேன். அவன் குரலெடுத்துப் பாடும் போது, பெருந்தொண்டை கொண்டு நகைக்கும் வரதனா இது என்று எனக்குப் பிரமை தட்டி விட்டது. விரிசல் ஏதும் இல்லாத அவன் சன்னக்குரல் வெகு சுலபமாக மூன்று ஸ்தாயிகளிலும் மனத்திற்கு ரஞ்சகம் ஊட்டும்படி சஞ்சாரம் செய்தது. அநேகமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவன் வெளியே போவதே இல்லை. பட்டுவும் மைத்துனரும் வீட்டில் இருந்தால், தான் பாடுவதுடன் நின்று விடுவான். இல்லாவிட்டால் என்னிடம் ‘அது இப்படி, இது இப்படி’ என்று ராக விஸ்தாரங்களையும் லட்சணங்களையும் பற்றி ஏதாவது பேசுவான். என்னையும் இரண்டொரு பாட்டுக்கள் பாடச் சொல்லுவான். எனக்குத் தெரியாத விஷயங்களை நான் இந்தப் புதுக் கலை நட்பின் மூலம் அவனிடமிருந்து அறிந்து கொண்டேன். மனச் சஞ்சலம் மாறி ஏற்பட்ட உற்சாகத்தில் அவனிடமிருந்து இரண்டொரு பாடல்களைக் கூடக் கற்றுக் கொண்டேன். இந்த வரம்பை மீறி அவனும் என்னிடம் ஏதும் அநாவசியமாகப் பேசவில்லை. நானும் அவர்கள் சீட்டுக் கச்சேரி கலைந்து விட்டது என்று அறிந்தவுடனேயே விளக்கை அணைத்து ஜன்னல் கதவைச் சாத்தி விடுவேன். அன்று பட்டுவும் மைத்துனரும் மட்டும் ஏதோ படம் பார்க்கச் சென்றிருந்தனர். குழந்தைகள் வாசல் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரதன் வீணையில் புதிய பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என்ன தான் துணிச்சலை வருவித்துக் கொண்ட போதிலும், அவனுக்கு நேர் எதிரே சரிசமமாக உட்கார்ந்து வார்த்தையாட என் மனம் கூசியது. மைதிலியும் சுகுமாரும் உள்ளே வந்து, “சித்தப்பா வந்துட்டா! வரப் போறார்னு நீ சொல்லவேல்லியே சித்தி? சித்தப்பா வந்துட்டா!” என்று சந்தோஷக் கூச்சலோடு என் கையைப் பிடித்து இழுத்தனர். “யார் ராமுவா வருகிறான்? இப்ப ஏதுடா வண்டி?” என்று கேட்ட வரதன் வீணையைக் கீழே வைத்தான். “நிஜம்மா கீழேயிருந்து தெருவிலே ஏறி வரா. நளினி அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து” என்று கைகளை ஆட்டி அவர்கள் விளிக்கிறார்கள். அதற்குள் அவரே கூடத்துக்குள் நளினியைக் கையில் பிடித்துக் கொண்டு நுழைந்தார். கையில் இருந்த சிறிய தோல் பெட்டியைக் கீழே வைத்த அவர், “என்ன வரதா இது? வீணை கீணை எல்லாம் நீயா வாசிக்கிறாய்? தெரியவே தெரியாதே எனக்கு!” என்று வியப்புறும் விழிகளுடன் நோக்கினார். “இப்போது ஏதடா வண்டி? சொல்லாமல் கொள்ளாமல் ‘அவளை’ நினைத்து எப்படி வந்து குதித்தாய்?” என்று வினவினான் வரதன். “கோயம்புத்தூர் வரை வரவேண்டி இருந்தது. இவ்வளவு தூரம் வந்தோமே, இங்கும் வந்துவிட்டுப் போகலாம் என்று இரண்டு மணி பஸ்ஸில் நினைத்துக் கொண்டு கிளம்பினேன். உங்களைத் திகைக்க வைக்க வேண்டும் என்று தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்தேன்” என்று அவர் புன்னகை புரிந்தார். ‘திகைக்க வைக்கவா? நிஜமாகவே திகைக்க வைக்கவா?’ என்று என் மனம் ஏனோ ஒரு விநாடியில் துள்ளிக் குதிக்க வேண்டும்! சற்றைக்கெல்லாம் அவருக்காக நான் காபித் தம்ளரை மேஜை மேல் கொண்டு வைத்த போது வரதன் சிரித்துக் கொண்டே, “நீ மகா அதிர்ஷ்டசாலி அப்பா! இப்படிக் குறிப்பறிந்து பணி செய்யும் மனைவியை நான் எங்கெங்கும் கண்டதில்லை. பாரேன்! நீ வந்து இன்னும் அவளிடம் அரை வார்த்தைக் கூடப் பேசவில்லை. சிறிதும் நன்றியில்லாமல் என்னிடம் வளவளவென்று ஏதேதோ கதை அளந்து கொண்டிருக்கிறாய். அவள் உன் மீது எத்தனை கவனமாக இருந்திருக்கிறாள்! சுசீலா, நீ ஆனாலும் இந்த மடையனுக்கு இத்தனை இடம் கொடுக்கக் கூடாது. சற்றும் கண்டிக்க மாட்டேன் என்கிறாய்” என்றான். “ஏண்டா வளவளவென்று நீ அளந்தாயா! நான் கதை பேசினேனா? நீ என்ன சொன்னாலும் சுசீலா என்னைக் கண்டிக்க மாட்டாள்” என்று என்னைப் பார்த்து முறுவலித்த வண்ணம் அவர் காபித் தம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார். “சுசீலா, நீ இவ்வளவு பட்சபாதம் செய்யக் கூடாது. நான் தடியன் போல் உட்கார்ந்திருக்கிறேன். அவனுக்கு மட்டும் காபி கொண்டு வந்தாயே. அவன் இதற்குள் எத்தனை கப் உள்ளே விட்டிருக்கிறானோ? பஸ் அடியிலேயே இந்திர பவனில் நுழையாமலா வந்திருப்பான்? அவனுக்கு நெஞ்சு உலர்ந்தா கிடக்கிறது? உண்மையில் எனக்குத்தான் இப்போது நெஞ்சு உலர்ந்திருக்கிறது. உம், என்ன இருந்தாலும் சொந்தக்காரி என்று ஒருத்தி இருந்தால் அந்த மாதிரியே வேறுதான்!” என்று அவன் குறைபட்டுக் கொண்ட போது, அவர் மட்டும் அல்ல, நானும் ‘பக்’கென்று சிரித்து விட்டேன். “என்னை மடையன் என்று அடிக்கொரு சஹஸ்ரார்ச்சனை செய்கிறாயே, உன்னைப் போல வடிகட்டின மடையன் யாருமே இருக்க மாட்டார்கள். ஏதோ வருஷம் ஒரு முறையாவது எதையாவது சாக்கு வைத்துக் கொண்டு லீலாவைப் பார்த்துவிட்டுப் போகிறாயா? நீ இங்கே, ‘நமக்கு என்று சொந்தக்காரி இல்லையே’ என்று நெடுமூச்சு விடுகிறாய். அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?” அவர் நிறுத்தும்போது எனக்கு ஏன் படபடக்க வேண்டும்? மூர்த்தியின் சமாசாரம் அவருக்குத் தெரிந்து விட்டதா? அதையா அவனிடம் சொல்லப் போகிறார்? வரதன் பதிலே கூறாமல் அவர் முகத்தைப் பார்த்தான். “இன்னும் எம்.ஏ.க்குப் படிக்கப் போகிறாளாம்! அப்புறந்தான் கல்யாணம் என்றும், ‘இன்னும் இரண்டு வருஷம் பேசக் கூடாது’ என்றும் அம்மாமியிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். நீ என்னடா என்றால், இங்கே ‘சொந்தக்காரி வரவில்லையே’ என்று ஏங்குகிறாய்!” என்றார் என் கணவர். “அப்பாடா! படிக்கட்டுமே! இப்போது பரீட்சை முடிவு வந்து விட்டதா என்ன?” என்று பரந்த மனத்தினனாக வரதன் கேட்டான். “அழகாய்த்தான் இருக்கிறது! அது வந்து எத்தனை நாட்களாய் விட்டன? லீலா முதல் வகுப்பில் தேறியிருக்கிறாள். ஒரு சந்தோஷக் கடுதாசியாவது எழுதிப்போடு. ஆமாம் வீணை கீணை எல்லாம் தடபுடலாக இருக்கிறதே! எத்தனை நாட்களாக அப்பா இந்தத் துறையில் இறங்கியிருக்கிறாய்?” “திடீரென்று வானொலியில் என் குரல் கேட்டதும், அப்போது நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்பட வேண்டும் என்று எத்தனை நாட்களாக நான் கோட்டை கட்டியிருந்தேன் தெரியுமா? அத்தனையும் சுசீலாவால் பாழாய்ப் போய்விட்டது. நான் ஏதாவது வாயைத் திறந்தாலே உள்ளே ஓடிவிடுபவள், வீணையையும் சுருதிப் பெட்டியையும் பார்த்துவிட்டு, யார் பாடுவார்கள் இங்கு என்று என்னிடம் வாயைத் திறந்து கேட்டு விட்டாள். அவளே கேட்கும் போது நான் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டி வந்து விட்டது.” எனக்கு ஒரு விநாடி திக்பிரமையாக இருந்தது. குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவனா அவன்? அவள் பாடுவதை நானா கண்டுபிடித்துக் கேட்டேன்? “ஆமாம், சுசீலா நன்றாகப் பாடுவாளே? நன்றாகக் கற்றுத் தேர்ந்தவள். அதனால் கேட்டிருக்கிறாள். ஓகோ! நீ ரேடியோவில் வேறு பாடுகிறாயா? ஆனால் சுசிலா உன் வித்தையை வெளியிட்டிருக்காமல் போனால் நாங்கள் நீ நினைத்தது போல் ஆச்சரியப்படவும் மாட்டோம். திடுக்கிடவும் மாட்டோம். எத்தனையோ தடியர்கள் எருமை மாட்டுத் தொண்டையை வைத்துக் கொண்டு பாடுகிறார்கள். வெளியிடங்களில் நடக்கும் கிரிக்கெட் வருணனையைத் தவிர நான் ரேடியோவில் செய்திகள் கூடக் கேட்பதில்லை. விடிந்தால் சமாசாரங்கள் பத்திரிகையில் வந்து விடுகின்றனவே. எனவே நீ பாடியிருந்தாலும் ஆடியிருந்தாலும் சொல்லாமற் போனால் யாருமே கவனிக்கப் போவதில்லை. எனக்கு என்னவோ பெண்கள் பாடினாலாவது கேட்கச் சற்று இனிமையாக இருக்கிறது. எருமைக் கடாவைப் போல இடிக்குரலை வைத்துக் கொண்டு நாமெல்லாம் பாட ஆரம்பிப்பது என்பது சகிக்க முடியாததாக இருக்கிறது” என்று தம்முடைய அபிப்பிராயத்தைச் சற்றும் ஒளிவு மறைவின்றிக் கூறி விட்டார் அவர். “சகிக்க முடியாததா? நீ ரஸிக்கும் லட்சணம் அவ்வளவுதான். நல்ல தேர்ந்த ஞானத்துடன் குரல் வசதியுடன் இருந்தால் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? யாருமே பாடலாம். உங்களுக்கெல்லாம் அனுபவிக்கத் தெரியவில்லையே என்று அநுதாபமாக இருக்கிறது எனக்கு. அதுவும் சுசீலா இந்தக் கலையை இத்தனை ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்திருக்கும் போது, நீயே இப்படிப் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்? மனைவிக்காகவாவது நீ சங்கீதத்தை அநுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்பா!” என்றான் வரதன். “ஓகே! எனக்கு நீ உபதேசம் செய்வதும் ஒரு விதத்திற்கு நல்லதாகத் தான் போயிற்று. லீலா இருக்கிறாளே, அவளுக்கு இது விஷயமாக அ, ஆ கூடத் தெரியாது. என்றாலும் அநுபவிப்பது என்றாயே, அதிலே எனக்கு அக்காவாகத்தான் இருப்பாள். எனவே இனிமேல், ‘அவன் எந்தத் தொண்டையில் கத்தினாலும் கேட்டுப் புகழ்வதற்கு முன் கூட்டியே கற்று வைத்துக் கொள்!’ என்று எச்சரிக்கை செய்து வைக்கிறேன்!” என்று நகைத்தார் என் கணவர். “கிடக்கட்டும். ‘மனைவியை அப்படி நடத்துவேன், இப்படி நடத்துவேன்’ என்று நீ தம்பட்டம் அடித்ததெல்லாம் கல்யாணம் ஆகும் வரை தான் போல் இருக்கிறது. நடைமுறையில் ஒன்றையும் காணவில்லை. முதலில் அவள் சங்கோச மனப்பான்மையைப் போக்கித் தாராளமாக எல்லோருடனும் பழகும்படி நீ அவளை ஆக்கவில்லையே? நான் ஏதாவது கேட்டால் நாலு மைல் ஓடுகிறாள்!” என்று என் நடத்தையை மிகைப்படுத்தி அவரைக் குற்றம் சாட்டினான். சில நாட்களுக்குள்ளேயே என்னைத் தூண்டித் துளைத்து அவன் அவ்வளவு சகஜமான முறையிலே பாடவும், அபிப்பிராயங்கள் கூறவும் வைத்திருக்கிறான்? இத்தனை மோசமாக அவன் பழகத் தெரியாத இயல்பை ஏன் மிகைப்படுத்த வேண்டும்? என் கணவர் என்னை நோக்கி, “அப்படியோ சுசீலா? ‘கேட்ட கேள்விக்குக் கூடப் பதில் சொல்லாமல் ஓடும் வழக்கத்தை விட்டுவிடு’ என்று எத்தனை முறை கூறியிருக்கிறேன் உனக்கு?” என்று முகத்தைச் சுளிக்காமல் கடிந்து கொண்டார். குழந்தை போல் எனக்குக் கோபம் வந்தது. “ஒரேமுட்டாகப் புளுகுகிறீர்களே? கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் தான் இருந்தேனாக்கும்?” என்று கேட்டுவிட்டு உள்ளே வந்து விட்டேன். அவ்வளவு சீக்கிரம் உதகை வாசம் எனக்கு முடிந்து விடும் என்று நான் வரும் போது எண்ணியிருக்கவில்லை. அவரைக் கண்டதும் பட்டு, “நல்லவேளை! நீ கோயம்புத்தூர் வந்தாலும் வருவாய் என்று அண்ணா தெரிவித்த போதே, ‘இங்கு வரச் சொல்லி எழுதுங்கள்’ என்றேன். நீ போகும் போது, சுகுமார், மைதிலி, ஏன் சுசீலாவையுங் கூட அழைத்துப் போய்விடு. பள்ளிக்கூடம் திறந்து விடுகிறார்கள். நீ அங்கே இருக்கும் போது பாவம், அவள் இங்கே இருப்பானேன்? ஏதோ ஆசைக்குக் கொஞ்ச நாள் இருந்தாச்சு” என்று என்னை நோக்கிப் புன்னகை செய்தவாறு மொழிந்தாள். எத்தனை கருணை! எத்தனை அன்பு! உண்மையில் அந்த நினைப்புடனா அவள் என்னை அனுப்புகிறாள்? இல்லவே இல்லை என்று கூறியது என் உள் மனம். வரதன் என்னிடம் சுதந்திரம் கொண்டு வேடிக்கையாகப் பேசுவதும், அவர்கள் இல்லாத சமயங்களில் அவன் விகற்பமாக நினைத்துக் கொள்ளாமல் வீட்டிலே தங்குவதும் அவளுக்கு சுருக்கென்று உறுத்தியிருக்கின்றன. எல்லாம் நன்மைக்குத்தான். எனக்கும் அவன் போக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லையே? அவனுடன் பேசிப் பழகியதன் பலனாக என் உள்ளக் குமுறலுக்கு மேலாக இப்போது புதிய தாபம் தளிர்த்திருந்தது. அவர் மட்டும் ரஸிக உள்ளம் படைத்திருந்தால் வரதனைப் போலக் கலை ஆர்வமும் மனத்தில் உள்ளதை உடனே வெளியில் உரைக்கும் சுபாவமும் அவருக்கு இருந்தால் எப்படி இருக்கும்? இப்படிக் கற்பனை செய்து பார்த்த போது என் உள்ளம் விம்மியது. அவருக்கு என்னிடம் காதல் இல்லையே என்று நான் ஏன் ஏங்க வேண்டும்? என் கலை அவரைக் காந்தம் போல் இழுத்து விடாதா தானாகவே? அப்போது அவர் எனக்காக எது வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்க மாட்டாரா? அவருடைய உள்ளத்தின் தன்மைக்கும் என் உள்ளத்தின் இயல்புக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை. ஒன்றை ஒன்று தெய்வீகமாகக் கவராவிட்டாலும் நடைமுறைப் பழக்கத்தில் கூட இணைப்புள்ளதாக ஆகாது. நான் என்ன முயன்றும் பயன் இல்லை. பாலுடன் தேன் சேருமே அல்லாது புளிநீர் இணைந்து போகுமா? அதற்கு உப்பும் காரமும் ஆகிய அதன் இயல்பை ஒத்த பண்டங்களே சேரும். அத்தனை நாட்கள் நான் அறியாத புது உண்மையை வரதன் எனக்கு அறிவுறுத்தி விட்டான். மேலும், ஆதரவு கிடைக்க வேண்டிய இடங்களிலிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அநுதாபமும் ஆதரவும் வரும் திசைகளை நம்பி நான் செல்லுவது கூடாது. அவை சாவுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஓடுவதைப் போன்று அபாயகரமானவை என்று எனக்குள்ளே ஏதோ ஒன்று கூறியது. வாழ்வு ஒரு மாயச் சுழல் என்று வேதாந்திகளும், அப்பாவுங் கூடத்தான் ஒருநாள் கூறியிருப்பது எனக்கு நினைவு இருக்கிறது. அது எத்தகைய உண்மை! இந்த சுழலிலே நான் என் சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் சுழன்று சுழன்று முன்னேற வேண்டும். பொன்னை நெருப்பிலிட்டு உருக்கித்தானே கண்கவரும் அணிகள் செய்கிறார்கள்? சாணையிலே உடலைக் கொடுத்துத் துன்புற்ற பின் தானே வைரம் ஜகஜ்ஜோதியாகப் பளபளக்கிறது. உலக நாடக அரங்கிலே முன்னேறிப் பிரகாசிக்கும் மேதைகளின் வாழ்க்கை முழுதுமே சோதனையாக இருக்கும் என்பது தெளிந்தறிந்த உண்மையாயிற்றே! கஷ்டங்களில் தலை குனியாமல் நிற்பவர்கள் தாமே சோதனைகளில் தேறிப் பிரகாசிக்கின்றனர்? சோதனையிலே நானும் தளராமல் தலை நிமிர்ந்து போராடினால் முடிவிலே எனக்குப் பலன் கிட்டுமோ, என்னமோ? அழகிய அந்நகரை விட்டு நான் பிரியும் போது எனக்கு உயிர்த்தோழி ஒருத்தியை விட்டுப் பிரிவது போல் இருந்தது. என் கணவர் அறியாத என் உள்ளத்தை வனப்பு மிகுந்த கோபுர விருட்சங்கள் உணர்ந்து விட்டன போல் இருந்தது. அன்று கணவன் வீடு செல்லு முன் மரமே, செடியே, மானே, கண்ணே என்று விடை பெற்றுக் கொண்ட சகுந்தலையைப் போல நானும் வருத்தத்துடன், ‘இயற்கையன்னையின் பரிபூரண அருளைப் பெற்ற மலைத் தோழியே, நான் இன்னொரு முறை வரும் போது என் துயரமெல்லாம் ஓடிப் போயிருக்குமோ என்னவோ?’ என்ற நம்பிக்கையை நானே வரவழைத்துக் கொண்டு வண்டியில் ஏறிக் கொண்டேன். வரதன் தொணதொணவென்று பேசிக் கொண்டே எங்களுடன் மலையடிவாரம் வரையிலும் வந்தான். முதல் முதலாக என் கணவருடன் உயர் வகுப்புப் பெட்டியில் நான் ஏறிக் கொண்ட போது, அன்று நான் மூர்த்தியுடன் பிரயாணம் செய்ததும், அப்போது நான் கட்டியிருந்த மனக்கோட்டைகளும் சிறிதும் புதுக்கருக்கு அழியாமல் என் மனக் கண் முன் எழும்பின. எதுவுமே பேசாமல் சிந்தனையில் லயித்துப் போயிருந்த என்னை அருகிலே அமர்ந்திருந்த சுகுமாரும் மைதிலியும், “சித்தி, நேற்றே கதை சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்கள். இன்றைக்குச் சொல்லாமல் போனால் விடமாட்டோம்!” என்று விரலை ஆட்டிச் சுவாதீனமாகப் பயமுறுத்தினார்கள். என் பொட்டல் வாழ்க்கையிலே பசுமை ஊட்டிய அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற அன்பு என்னைக் கட்டுப்படுத்தியது. தங்களுடைய தாயும் தந்தையும் என்னை அவமதிப்புக் கண் கொண்டு பார்ப்பதை இப்போது அறியாமல் இருக்கும் குழந்தை மனம் மாசும் மருவும் ஒட்டிக் கொள்ளாமல் அதே நிலையில் வளர்ச்சியடையக் கூடாதா? என்னை அவர்கள் நெருக்கியது, அவர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. “லீலா சித்தியை ஒரு நாள் கூட இப்படித் தொந்தரவு பண்ணியதில்லையே! அவளைக் கண்டால் பிடிக்காதோ உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே குழந்தைகளைக் கேட்டார். ஆறு வயது நிரம்பியிருந்த மைதிலி மழலை மாறாத சொல்லில் என் கணவரைப் பார்த்துத் தன் சிறு கையை விரித்து இடித்துவிட்டு, “லீலா சித்திக்கு, ‘தொந்தரவு பண்ணாதே!’ன்னு எரிஞ்சு விழத்தான் தெரியும். உன்னைக் கண்டாலும் பிடிக்கலே எனக்கு! லீலா சித்தியைக் கண்டாலும் பிடிக்கலே! எங்க சுசீலா சித்திதான் நல்லது! எனக்கு இந்தச் சித்தியைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று அபிப்பிராயம் கொடுத்துவிட்டு என்மேல் இடித்துக் கொண்டு சாய்ந்தாள். என்னை அறியாமல் நான் அவளைத் தழுவிக் கொண்டேன். அதைக் கண்ணுற்ற அவர் முகத்தில் இனந்தெரியாத சோகத்தின் சாமை பரவியது. சட்டென்று ஞாபகம் வந்தவரைப் போல, “மூர்த்தி வந்திருந்தான் ஒரு வாரம் முன்பு! சொல்ல மறந்து விட்டேனே! அவன் மேல்நாட்டுத் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் போகிறான். முதலில் பர்மிங்ஹாம் போவதாகச் சொன்னான்” என்றார். ‘ஓகோ! அதனால் தான் லீலா எம்.ஏ.க்குப் படிக்கிறாள் போலும்!’ நான் வெகு ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “அப்படியா? என்னிடங் கூட அவன் அப்படிப் பிரஸ்தாபிக்கவில்லையே” என்றேன். “உன் அத்திம்பேருங் கூட வந்திருந்தார். எங்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டான். அம்மா ஒருநாள் அவனுக்கு விருந்து கூட வைத்தாள். ‘பொழுது விடிந்தால் விமானம் விழுந்து நொறுங்குகிறது. ஜாக்கிரதையாகப் போய்த் திரும்பி வர ஆசீர்வாதம் பண்ணுங்கள் மாமி!’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்தான். சிரிக்கப் பேசிப் பழகும் நல்ல பையன்!” என்று தெரிவித்தார் அவர். எனக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. லீலாவும் அவனும் புறப்படும் முன்பு எப்படியும் சந்தித்து மனம் விட்டுத் தங்கள் தங்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள்! என்னைக் கண்டதும் அவள் அகத்தில் பொங்கும் மகிழ்ச்சியை அடக்க முடியாத சிரமத்துடன் முகம் சிவக்க - அத்தனை சமாசாரங்களையும் எப்படிச் சொல்லுவாள். இந்த அசட்டு வரதன் அவளை நினைத்து நெடு மூச்செறிவதை நான் சொல்லி எப்படி நகைப்பேன் என்ற கற்பனையில் ஆழ்ந்து விட்டேன். ***** மறுநாள் காலை நான் வீட்டுக்குள் காலெடுத்து வைத்த போது லீலா நான் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சி அலைமோத என்னை வந்து தழுவிக் கொள்ளவில்லை. நானாக அவளைத் தேடிக் கொண்டு சென்ற போதும் அவள் முகம் எனக்கு அளவற்ற ஏமாற்றத்தை ஊட்டியது. புத்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துப் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த அவள் வாடி வதங்கிய மலரைப் போல் காட்சி அளித்தாள். “என்ன அக்கா? உடம்பு சுகம் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே பிரவேசித்தேன். “சுசீலாவா? என்னது, இது? திடீர் வருகையாக இருக்கிறதே! ராமு உன்னை அழைத்து வரப் போவதாகச் சொல்லவே இல்லையே! என்ன மலை வாசம் எப்படி இருந்தது?” என்று கேள்விகளை அவள் அடுக்கினாள். “நன்றாகத்தான் இருந்தது உம். மூர்த்தி வந்து போனாராமே?” என்று அவள் காதோடு கேட்ட நான் குறுநகை செய்தேன். நான் இப்படிக் கேட்டதும் அவள் விழிகளில் அலாதி ஒளி தென்படும். பேச்சு நெகிழ்ந்து வரும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன். அவள் மாறாத நிலை எனக்கு முற்றும் மாறுதலாகத் தோன்றியது. “ஆமாம்” என்று அவள் தலையை ஆட்டிவிட்டு, “குழந்தைகள் வந்தாயிற்றாக்கும்! வீட்டு எஜமானிக்கும் எஜமானருக்கும் இன்னும் மலைவாசம் விடவில்லையோ?” என்றாள் குத்தலாக. மூர்த்தியின் பேச்சை எடுத்தாலே பூரித்துப் போகும் அவள், திடீரென்று இப்படி ஒளியிழந்தவளாக அசுவாரஸ்யமாகப் பதிலளிப்பானேன்? இருவருக்கும் அதற்குள் மனத்தாங்கள் ஏற்படும் வழியில்... “மூர்த்தி பர்மிங்ஹாம் போகிறார். நீங்கள் எம்.ஏ.க்குச் சேரப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்? அவர் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? பாவம்! வரதன் உங்கள் பேச்சை எடுத்தாலே வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்து போகிறார்!” என்றேன். “மகிழ்ந்து கொண்டு இருக்கட்டும். பாவம் என்று நீ வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறாயாக்கும்! சுசீலா! இனிமேல் என்னிடம் இந்த விஷயங்களைப் பற்றியே பேசாதே. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணம் செய்து கொள்வதே இல்லை என்று தீர்மானித்து விட்டேன்!” என்று அவள் ஆத்திரத்துடன் மொழிந்தது என்னைத் திடுக்கிடச் செய்தது. “என்ன லீலா இது? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்? காதல் பூஞ்சோலையில் உல்லாசமாக அடியெடுத்து வைத்த நீங்கள் மனம் வெதும்பிப் பேசும்படி மூர்த்தி என்ன செய்து விட்டார்?” என்று நகைத்த வண்ணம் கேட்டேன். “என்ன செய்து விட்டார் என்றா கேட்கிறாய் சுசீ? நீயும் எனக்கு இதைத் தெரிவிக்காமல் இருந்து விட்டாய். இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை. என்னிடம் பிரேமை, காதல் என்று கதைத்து விட்டு, அவருக்காகக் காத்திருக்கும் மாமா பெண்ணை மணக்கப் போகிறார்! இன்று நேற்றுப் பேச்சில்லையாம் இது. என்னிடம் இப்போதுங் கூட அவர் தெரிவிக்கவில்லையே! நினைக்க நினைக்க நான் ஏமாந்து போனேன் என்று நம்பவே முடியவில்லை சுசீ!” என்றாள் படபடப்புடன். “அடாடா! நீங்கள் மிகவும் பொறுமையில்லாதவர். உங்களுக்காகத் தவமிருக்கும் வரதனைப் பற்றி நீங்கள் மட்டும் அவரிடம் பிரஸ்தாபித்தீர்களா?” என்று திருப்பிக் கேட்டு அவள் கன்னத்தில் இடித்தேன். “நான் எதற்காகச் சொல்ல வேண்டும்? வரதனை மணந்து கொள்வதாக நான் ஒரு நாளும் எண்ணியிருக்கவில்லையே! அவருக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கத் தயாராக இருந்தேனே! வீணாகப் பிரஸ்தாபித்து ஏன் அவரைச் சஞ்சலத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்றல்லவா நான் மௌனமாக இருந்தேன்? தயங்கினால் தானே நான் அவரிடம் கூறி வருத்தப்பட வேண்டும்? அவர் அப்படியா?” “ஏன்? அவரும் உங்களைப் போல எண்ணி இருக்கக் கூடாதா?” “அப்படி எனக்காக எதையும் துறக்கத் தயாராக இருப்பவர்தாம். வருங்காலச் செல்வ மாமனார் ஆதரவில் இப்போது மேல் நாடு செல்கிறாராக்கும்! திரும்பி வந்த போது பெண்ணைக் கொடுக்கத்தானே ஆயிரக்கணக்கில் செலவு செய்து கூடவே வந்து விமான நிலையம் வரை அனுப்பிவிட்டுப் போகிறார் உன் அத்திம்பேர்? ‘உங்கள் மகளை நான் மணக்கவில்லை’ என்று மறுப்பவர், இப்போது அவர்கள் பண உதவியை வெறுமே பெற்றுக் கொண்டு செல்வாராக்கும்! இந்த வாக்குறுதியே எனக்கு அவர் நேர்மையற்றவர் என்று காண்பிக்கப் போதுமானதாக இருக்கிறதே! சுசீலா, நீ எப்படி நினைப்பாயோ? என் வரைக்கும் ஆண்கள் ஏமாற்று வித்தையில் கை தேர்ந்தவர்கள்!” என்று பொங்கும் சினத்துடன் லீலா முடித்தாள். “உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தன?” என்று திகைத்தவளாக நான் கேட்டேன். “தெரிந்தது என்ன? தாம் உதவி செய்வதைப் பற்றி உன் அத்திம்பேர் நொடிக்கு நூறு தடவை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாரே. அப்புறம் பேச்சு வாக்கில் ராமுவுந்தான் கூறினான். எனக்கு அப்போதே இடிவிழுந்தது போல் ஆயிற்று. இப்போதும் அவர் வாயிலாக உண்மையைத் தெரிவிக்கவில்லையே எனக்கு!” எத்தகைய ஏமாற்றம் இது! மூர்த்தியும் உண்மையில் இந்தக் கும்பலில் சேர்ந்தவன் தானா? அன்று அவ்வளவு உருக்கமாகப் பேசினானே! நடிப்புத்தானா? படித்துப் பட்டம் பெற்ற லீலா, வெளி உலகம் தெரிந்து நாலு பேருடன் பழகவும் விவாதிக்கவும் அறிந்த, நாகரிகம் பெற்ற லீலா, மூர்த்தியின் நயவஞ்சகத் தன்மைக்கு இலக்காகி விட்டாள். அதுதான் அன்று அத்தை அவ்வளவு தீர்மானமாகக் கூறினாள். இப்படி ஒரு கும்பல் உலகத்தில் இருந்து வருவது என்னவோ உண்மை. சகுந்தலா துஷ்யந்தன் கதை ஒன்றே போதாதா, இதைத் தெளிவாக்க! உலகத்தில் இந்தக் காதல் தோன்றிய நாள் முதலாகவே இந்த ஏமாற்று வித்தையும் தோன்றியிருக்க வேண்டும். ‘அதுவும் இந்த மக்களிடந்தான் இது அதிகமாகக் குடி கொண்டிருக்கிறது. வெளித் தோற்றத்துக்கு ஆண்மையும் உறுதியும் உடையவர்களாகத் தோன்றும் எல்லா ஆண்மக்களும் நெஞ்சில் பேடிகளாகவே இருக்கிறார்கள். உள்ளே உள்ள புரையை மறைக்கவே இந்த வெளி வேஷம், ஆடம்பரம் எல்லாம்.’ ‘பெண்மை, அழகு, இளமை இந்த மூன்றும் எந்த ஆண்மகனையும் தமக்கு அடிமை ஆக்கி விடுகின்றன. இப்படி அடிமையான ஆண்மகன் தான் செய்வது என்ன என்று புரியாத நிலையிலேயே தன் மனங் கவர்ந்த மங்கையிடம் பழகுகிறான். சர்வ சுந்தரனாகவும் லட்சியவாதியாகவும் காட்சியளிக்கிறான்.’ ‘பொறுப்பேற்கும் காலம் வரும்வரையில் தான் இந்தப் பகட்டெல்லாம். பெறுப்பேற்கும் காலம் வந்தாலோ அல்லது முடிவைத் தீர்மானிக்கும் அவசியம் நேர்ந்தாலோ அப்போது தான் அவன் உண்மைச் சொரூபம் வெளிப்படுகிறது.’ ‘என்ன செய்யலாம், எல்லாமே அவன் படைப்பின் விளையாட்டுப் போலும்!’ இப்படியெல்லாம் ஓடிய எண்ண அலைகள் ஒருவாறு அடங்கிய பின் லீலாவுக்கு ஆதரவாக ஏதேனும் கூற வேண்டும் என்று நினைத்த போது என் நாத் தழுதழுத்தது. “நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. பெண் சட்டென்று எதையும் நம்பி விடுவதனால் ஆண்கள் அவர்களைச் சுலபமாக ஏமாற்றி விட முடிகிறது” என்றேன். என் உள்ளத்திலிருந்து அநுபவபூர்வமாக வரும் வார்த்தைகள் இவை என்று லீலா அறிவாளோ என்னவோ? பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|