உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) காய் 4 கானகத்தினிடையே வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கார் வரும் போது நான் தலை சுற்றலால் கண்களையே திறக்கவில்லை. நாங்கள் உதகமண்டலத்தை வந்தடையும் சமயம் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். அலுத்து ஓய்ந்து போயிருந்த நான் வந்து படுத்ததுதான் தாமதம் கண் அயர்ந்து விட்டேன். காலையிலே எழுந்து வெளியே நோக்கிய போதுதான் அழகும் சாந்தமும் பொலியும் தன் கருணை முகத்தைக் காட்டிப் புன்னகை புரியும் இயற்கை யன்னையின் மடியிலே நான் வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். கதிரவனின் ஒளியிலே வைரம் இழைத்தாற் போன்று பனித் திவளைகளால் மூடப்பட்டு மின்னிய பசும் புல் தரை, மனிதனுடைய கைகள் கொண்டு வெட்டி விடப்பட்டவை போல அழகாக வளர்ந்து நின்ற கோபுர விருட்சங்கள், பள்ளங்களிலும் மேடுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாரி இறைத்தாற் போன்று காணப்பட்ட வீடுகள், மங்கையொருத்தி தன்னுடைய கூந்தலை மலர்ச் சரங்களுக்கிடையே வளைத்து வளைத்துச் சுற்றிக் கட்டி இருப்பதைப் போல மலைகளைச் சுற்றி வளைந்தும் நெளிந்தும் செல்லும் தார் ரஸ்தாக்கள் எல்லாம் நாங்கள் இறங்கியிருந்த வரதனுடைய பங்களாவிலிருந்து கண் கவரும் காட்சிகளாகத் தென்பட்டன. வாசலிலே தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களைத் தாங்கிய செடிகளும் கொடிகளும் மனத்திலே புத்தொளியைப் பரப்பின. தோற்றத்திலே அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், வீடு முழுவதும் சோபாக்களும் மேஜைகளும் நிலைக் கண்ணாடிகளுமாக மேல் நாட்டுப் பாணியிலே அலங்கரித்திருந்தது. கீழே கால் வைத்தால் ஓசைப்படாத மெத்தென்ற விரிப்புகள், அலங்கார ஜாடிகளில் அழகழகாகச் செருகி வைத்திருந்த பூங்கொத்து, மாசுமறுவற்றுப் பளபளக்கும் ஸ்நான அறைகள் எல்லாம் எனக்கு எங்கோ ஒவ்வாத இடத்தில், நான் நடக்கவே கூசும் இடத்தில் வந்திருப்பதாக அறிவுறுத்திக் கொண்டிருந்தன. ‘வரதன், எம்.ஏ.’ என்ற பலகையைத் தாங்கி நிற்கும் ராஜபோக மாளிகை, பளபளக்கும் புதுக் கார், ஆடம்பர வாழ்க்கை, எல்லாவற்றையும் லீலாவுக்குச் சொந்தமாக்கி விடப் பெரியவர்கள் நிச்சயித்திருப்பது பார்ப்பதற்குத் தவறாக இல்லை. ஏன், வரதனுக்கு மட்டுந்தான் என்ன குறைவு? சுக வாழ்வைக் காண்பிக்கும் சற்றே தடித்த உடற்கட்டு, சோபை பெற்ற சிவந்த மேனி, எப்போதும் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருக்கும் சுபாவம். எல்லாம் அவனை லீலாவுக்குத் தகுதியற்றவன் என்று கூற முடியாமல் செய்தன. ஆனால், புனிதமான காதல் உணர்ச்சியில் பண்பட்ட இதயத்துக்கு, எப்பேர்ப்பட்ட அமரலோக வாழ்வும் துச்சந்தானே? லீலாவைக் குற்றம் கூறுவதற்கு இடமே இல்லை. “லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று என் கணவர் கூறி நகைத்த போது மூர்த்தியின் உள்ளத்திலே ஏற்பட்ட அதிர்ச்சியை நான் எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? ஒரு விநாடி தூக்கி வாரிப் போட்டது போல அவன் திடுக்கிட்டுப் போய் விட்டான். அப்புறம் சமாளித்துக் கொண்டான் என்றாலும் வரும் போது அவனிடம் காணப்பட்ட உற்சாகம், கலகலப்பு எல்லாம் குன்றிப் போய்விட்டன. மூர்த்தி உள்ளதை உள்ளபடி கள்ளமில்லாமல் கூறும் வெகுளி தான், என்றாலும் இந்த வரதன் என் முன்னேயே, “ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று கூறியது என் மனசுக்குப் பொருந்தவேயில்லை. அன்று லீலா அவர் முன் என்னை எப்படி எல்லாமோ வர்ணித்தாள். ஆனால் அவள் என்னைப் போல் ஒரு பெண். எனக்கு உவப்பாக இருந்தது. மூர்த்தி என்னுடன் சகஜமாக அளவளாவினான் என்றாலும் அந்தப் பாணி எனக்குக் குற்றமில்லாததாகவே தொனித்தது. அதுவும் அவன் சமய சந்தர்ப்பம் அறிந்து மரியாதையாகப் பழகுவான். என் மாமியார், பட்டு, எல்லோரும் இருக்கும் சமயம் அவன் வீட்டுக்கு வருவானே, “என்ன சுசீலா?” என்று கேட்டுக் கொண்டு தடதடவென்று வர மாட்டான். போகும் போது மட்டும், “நான் வரட்டுமா?” என்று வாசற்படியண்டை நின்று கேட்டு விட்டுப் போவான். இப்படிப் பழகியதில் அவன் எனக்கு அந்நியனென்ற கூச்சம் மனதில் ஏற்படவில்லை. அவன் கூறியது போல், சகோதரன் மாதிரி பாவித்த எனக்கு நாளடைவில் வேடிக்கையாகப் பேசவும், கேலி செய்யவுங் கூடச் சகஜ பாவம் வளர்ந்து விட்டது. இப்போது வரதன், “என்ன சுசீலா? அதற்குள் எழுந்து விட்டாயே?” என்று எடுத்த எடுப்பில் கேட்டுக் கொண்டு வந்தது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டேன். வீட்டிலே யாரும் என்னைப் பிரத்தியேகமாகக் கவனிக்கா விட்டால் கூட அவன் விடமாட்டான் போல் இருந்தது. என்னைப் பற்றி ஏதாவது கேட்டு அவர்கள் சம்பாஷணைக்குள் என்னை இழுத்து விட்டான். அடிக்கொரு தடவை அவர் முதுகில் இரண்டு ‘ஷொட்டு’க் கொடுத்து, “என்னப்பா ராமு? உன் ‘மிஸஸ்ஸை’ நீ கவனிக்கவே மாட்டாய் போல் இருக்கிறதே!” என்று வேறு கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளப்பினான். “நான் என்ன அவளைக் கவனிப்பது? அவள் அல்லவா என்னைக் கவனிக்க வேண்டும்?” என்று என்னைப் பாராமலேயே அவர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். வந்த முதல் நாள் காலை எல்லோருமே ஊர் சுற்றக் கிளம்பினோம். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, நகரின் உல்லாச நந்தவனத்திற்கு வந்தோம். வாயிலில் காரை விட்டு இறங்கி உள்ளே பத்தடி கூட நடந்திருக்க மாட்டோம். நளினி எதற்கோ பிடிவாதம் பிடித்துத் தொம் தொம் என்று குதித்து அழுதாள். கைக்குழந்தை வேறு பசியோ, தூக்கமோ, கையிலே பிடிபடாமல் கத்தியது. நளினியின் முதுகில் இரண்டு அறை வைத்த பட்டு “சுசீலா, இவை இரண்டையும் சற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு தொலையேன், முன்னாடி. இந்த லட்சணத்துக்குத்தான் நான் இவர்களை அழைத்துக் கொண்டு எங்கேயும் புறப்படுவதில்லை” என்றாள். முன்னால் வரதனுடன் பேசிச் சென்ற அவர் என்னைக் கவனித்தாரோ இல்லையோ? நான் திரும்பியே பார்க்காமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரதனுடைய வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். ‘வெளியே கிளம்பி அவமானப்படுவதைக் காட்டிலும் இனிமேல் வீட்டுடனேயே இருந்து விடுவது மேல்’ என்றும் தீர்மானித்துக் கொண்டேன். வீடு வந்த பின் கைக் குழந்தைக்குப் பாலைக் கொடுத்துத் தூங்க வைத்தேன். நளினியும் சாப்பிட்டு விட்டு விளையாடினாள். அவர்கள் பகல் ஒரு மணிக்கு வீடு திரும்பினார்கள். சமையலுக்கு ஆள் இருந்தாலும் கூட, உதவியாக மேற்பார்வை செய்ய நான் வந்து விட்டதும் நல்லதாகவே இருந்தது. வந்ததும் வராததுமாக முணுமுணுத்த மைதிலுக்கும் சுகுமாருக்கும் முன்னாடியே சாப்பாடு போட்டேன். மற்றவர்கள் சாவகாசமாக வட்ட மேஜையைச் சுற்றி உணவருந்த அமர்ந்தார்கள். நான் பரிமாற வந்தேன். வரதன் என்னைக் கண்டதும், “என்ன, உட்காரவில்லையா சுசீலா? அந்தத் தடியன் எங்கே? பரிமாறுவதற்கென்ன?” என்றான் வெகு சகஜமாக. நான் பதிலே பேசவில்லை. யாருமே வாய் திறக்கவில்லை. ஏதோ எல்லோருடனும் நான் வார்த்தையாடினாலும், மைத்துனர், கணவர், அவன் எல்லோருக்கும் சமமாகச் சாப்பிட உட்கார எனக்குப் பயமாக இருந்தது. அதுவும் என் ஆயுளில் நான் மேஜையில் உணவு உட்கொண்டதில்லை. “வெகு அழகாக இருக்கிறதே, நீ பரிமாற வருவது! டேய் சுப்பு! மடையா! இன்னொரு தட்டு கொண்டாடா! நீயும் உட்கார் சுசீலா” என்று ஆடம்பரமாக இரைந்து விட்டு அவன் என்னை வற்புறுத்தினான். எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. “வேண்டாம், பிறகு சாப்பிடுகிறேன்” என்றேன். கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்று. பக்கத்திலே ஒன்றையும் கவனியாதவர் போல் அமர்ந்திருந்த என் கணவரின் முதுகிலே சுவாதீனமாக ஒரு குத்து விட்டான் வரதன். “டேய்! வாயிலே கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? ‘தேவி, நீயும் போஜனத்திற்கு அமரலாமே’ என்று உபசாரம் பண்ணடா. நீ அல்லவோ சொல்ல வேண்டும்? அதனால் தான் அவள் பேசாமள் நிற்கிறாள்?” என்று அவரைக் கடிந்து கொண்டான். “அப்...பா!” என்று அவர் முதுகைத் தடவிக் கொண்டார். “இந்த இரண்டு நாட்களில் நீ குத்திக் குத்தி என் முதுகு வலி கண்டு விட்டது. ஆள் ஒருவன் அகப்பட்டேன் என்று இப்படியா குத்துவது? ரொம்ப ரொம்பக் கெட்ட வழக்கமப்பா. நாளைக்கும் இதே கைதானே ஞாபக மறதியாக வரும்? மறதியாகப் பக்கத்தில் லீலா இருக்கும் போது இப்படி ஒரு குத்து விட்டாயானால் அவ்வளவுதான்! ஜாக்கிரதை வேண்டும்!” என்று நாசுக்காகப் பேச்சை வேறு திசையில் திருப்பினார் அவர். “டேய் பிருகஸ்பதி! போதும் உன் உபதேசம். உனக்கு இத்தனை குத்து விழுந்தும் எருமை மாடு போல உனக்கு உறைக்கவில்லையே! பெண்டாட்டியிடம் ஜாக்கிரதையாக இருப்பது பற்ரி எனக்கு உபதேசம் செய்ய வந்து விட்டான், உபதேசம்! எத்தனை நேரமாக அவள் தயங்கிக் கொண்டு நிற்கிறாள்! இன்னமும் தான் ஆகட்டும், வாயைத் திறக்கிறானா பாரேன்!” என்று வரதன் விடாப்பிடியாக அவருக்கு இன்னொரு குத்து விட்டான். இதற்குள் சுப்பு மேஜை ஓரத்தில் எனக்குத் தட்டுக் கொணர்ந்து வைத்தான். எனக்கு உள்ளூற நடுக்கம் கண்டு விட்டது. நாற்காலியை விட்டு எழுந்து நின்ற அவர், “நீங்களும் சாப்பிட உட்காரலாமே!” என்று நாடக பாணியில் காலியாகக் கிடந்த மற்றொரு நாற்காலியைச் சுட்டிக் காட்டிக் கூறிய போது என் மைத்துனர் உட்பட எல்லோரும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்தார்கள். என் முகத்தில் குப்பென ரத்தம் ஏறியது. நம்மை நடுவில் வைத்துக் கொண்டு எல்லோரும் அவமானம் செய்கிறார்களே என்று கோபம் வந்தது. நல்ல வேளையாக, பட்டு என்னை விடுவிக்க முன் வந்தாள். “நன்றாக இருக்கிறது, நீங்கள் அவளைப் படுத்தி வைப்பது! நீ போம்மா சுசீலா! நான் தான் அவளை முன்னேயே சாப்பிட்டு விடு. அப்புறம் நீங்கள் ஆளுக்கு ஒன்றாகக் கேட்பீர்கள். பரிமாறுகிறவனுக்கு ஒத்தாசை வேண்டும் என்றேன். தவிர, இப்படியெல்லாம் நீங்கள் கூத்தடித்தால் அவள் எப்படி உட்காருவாள்? அவளுக்கு வழக்கம் இல்லை” என்று ஒரு போடு போட்டாள். நான் என் வாழ்வில் ஒரே ஒரு தடவை அவளுக்கு மனமாற நன்றி செலுத்தினேன். தைரியம் கொண்டவளாக கொண்டு வந்ததைப் பரிமாறினேன். “ஏது ஏது பட்டு, அவள் உட்கார்ந்தால் கூட நீ வேண்டாம் என்பாய் போல் இருக்கிறதே! வழக்கம் எப்படி வரும்? நாலு நாள் பழகினால் தானே வருகிறது” என்றான் வரதன். ஆனால் அது அத்துடன் நின்று விட்டது. அலையடங்கிய சமுத்திரம் போல் கலகலப்பு ஓய்ந்தது. பாதிச் சாப்பாடின் போது என் கணவர், “வெந்நீர் இன்னும் கொஞ்சம் சூடாகக் கொண்டு வா சுசீ?” என்றார். நான் கொண்டு வந்து வைத்தேன். தம்ளரை உதட்டில் வைத்துக் கொண்ட அவர், ‘சுருக்’கிட்டுக் கீழே வைத்து விட்டு, “எவ்வளவு சூடு?” என்றார். “அதிகமா?” என்று கேட்ட நான் தம்ளர் வெந்நீரை எடுத்து ஆற்றப் போனேன். “வாய் கொப்புளித்து விடும்” என்றார் அவர். அத்துடன் அது நின்றுவிட்டால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். “எனக்குத் தெரியும், அவள் கொண்டு வந்து வைக்கும் போதே ஆவி வருவதைக் கவனித்தேன். வைத்து விட்டுத் தன் கையை உதறிக் கொண்டாள். இப்படியா குடிக்க வெந்நீர் கொண்டு வைப்பது? இதெல்லாம் இன்னுமா ஒரு பெண்ணுக்குத் தெரியாது? அப்படியே தூக்கிக் குடிப்பவர்களாக இருந்து வாயில் விட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்ட பட்டு என்னை முறைத்துப் பார்த்தாள். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவர் கேட்டார், நான் பதில் கூறினேன். சூடு அதிகம் என்று அவர் என்னைக் கோபிக்கலாம். அடிக்கவும் அடித்திருக்கலாம். எனக்குச் ‘சுருக்’கென்று தைக்காது. இவள் ஏன் குறுக்கே வந்து விழ வேண்டும்? நான் வேண்டுமென்று செய்வேனா? அவருக்கு நாக்கு புண்ணானால் எனக்கு அந்தப் பொறுப்பு இல்லையா? நான் எந்த வேலை செய்தாலும் குற்றம் கூறுவது அவள் வழக்கந்தான். ஒவ்வொரு நாளும் என் மாமியாருக்கும் அவளுக்கும் உணவு பரிமாறும் போது கலாசாலைப் பரீட்சை போல எனக்கு நெஞ்சம் அடித்துக் கொள்ளும். அத்தனை பயந்து பயந்து செய்தாலும் அவர்கள், ‘கடுகு வெடிக்கவில்லை, உளுத்தம் பருப்புத் தீயவில்லை, கஞ்சி வடியவில்லை’ என்று ஏதாவது சொல்லாமல் இலையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள். ஆயிரம் புருஷர்களுக்கு அன்னம் படைத்து விடலாம், சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இரண்டு பெண்களைச் சமாளிப்பது கஷ்டம். இத்தகைய அவர்கள் வழக்கத்தால் என் மனம் காய்ந்துதான் போகிறது என்றாலும், இன்று வந்த இடத்தில் என்னை அவர்களுக்குச் சமமாக மதிக்கும் வரதனுக்கு முன்னிலையில் என் கணவரையும் வைத்துக் கொண்டு, அவர் கடுகடுக்காத போது வலிய அவள் குற்றம் கூறியதை என்னால் சகிக்க முடியவில்லை. “நான் கொண்டு வைத்துவிட்டுக் கையை உதறிக் கொண்டேனோ? நாக்குப் பொத்துப் போகும்படியாகவா இருக்கிறது? இதோ, தொட்டுப் பாருங்கள். அவருக்கு வாய் வெந்து போக வேண்டும் என்று நான் காரியம் செய்ததைப் போலவே பேசுகிறீர்களே; உங்களுக்கு இருக்கும் பொறுப்பு எனக்கு இல்லையா? குற்றத்துக்கு எதுவும் இடமில்லாமல் போனாலும் இப்படி எதையாவது மிகைப்படுத்திப் பொய்யாவது சொல்ல வேண்டுமா?” என்று படபடத்த கேள்விகள் என் கொதிக்கும் உள்ளத்திலிருந்து எழுந்தன. இத்தகைய வார்த்தைகளை நான் கேட்க அவள் பொறுப்பாளா? அவள் வேண்டுமானால் என்னை எதுவும் சொல்லலாம். எப்படியும் நடத்தலாம். என்னை ஏனென்று கேட்பார் இல்லை. உள்ளம், உணர்வு எல்லாம் எனக்குக் கல்லாகி விட வேண்டும். அவள் அப்படியா? அவள் சொற்படி கேட்கும் கணவர் உண்டு, அளவற்ற மரியாதை செலுத்தும் மைத்துனர் உண்டு, மருமகள் மீது அன்பு மழை பொழியும் மாமி உண்டு, இவற்றுக்கு மேல் அன்னை உண்டு, செல்வம் உண்டு, செழிப்பு உண்டு. வீட்டின் சர்வாதிகாரிணி கலத்திலே கையை உதறிவிட்டுக் கோபத்தால் ஜொலிக்கும் முகத்துடன் என் கணவரைப் பார்த்தாள். “பார்த்தாயா ராமு? இப்போது நான் இவளை என்ன சொன்னேன்? தப்புச் செய்தால் ‘இப்படிச் செய்தாயே அம்மா?’ என்று கேட்டது தவறா? விடு விடு என்று வாயில் வந்ததைக் கொட்டுகிறாளே! நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒரேயடியாக அடித்து விட்டாளே! எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது அப்புறம்?” என்று உதடுகள் படபடக்க முறையிட்டாள். இரு தரப்பிலும் உள்ளே குமைந்து கிடக்கும் புகைச்சல் வெளியே கிளம்பி விட்டது. ‘அப்புறம் போக முடியாமல் இருபுறமும் நகர முடியாமல் நடுநிலையிலே தவிக்கும் அவர் எந்தப் பக்கம் சாய்காலாக நிற்கிறார் என்று பார்க்க வேண்டும். உண்மையிலே அவர் காதல் உள்ளம் படைத்தவரா என்று அறியச் சந்தர்ப்பம் நேரிட்டிருக்கிறது’ என்று அவர் முகத்தை ஆதரவுடனும் ஆவலுடனும் நோக்கி நின்றேன். தராசின் தட்டு ஒரு புறமும் தாழவில்லை. மௌனமாகவே அவர் கலத்தை விட்டு எழுந்தார். வரதன் சும்மா இருக்கக் கூடாதா? “ஏன் பட்டு, சமத்துவம், சமத்துவம் என்று பெண்கள் கோஷமிடும் போது நீ மட்டும் இப்படிப் பத்தாம் பசலியாக இருக்கிறாயே! வெந்நீர் கொண்டு வைத்தால் அது சூடா, இல்லையா என்று பார்த்து விட்டுக் குடிப்பதற்கு என்ன இந்தத் துரைக்கு? அதைக்கூட அவள் பார்த்து வைக்க வேண்டுமாக்கும்! மனைவி அன்பு மேலிட்டுச் சிசுருஷை செய்கிறாள் என்று நினைக்க வேண்டுமே ஒழிய, அவளை இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆணவத்துடன் நிர்ப்பந்தப்படுத்துவது சரியல்ல. என்னைக் கேட்டால், சமயம் நேரும் போது கணவனும் அதே போல் மனைவிக்கும் பணிகள் செய்ய வேண்டும் என்பேன்” என்று குட்டிப் பிரசங்கம் நிகழ்த்தி விட்டு எழுந்தான். கை கழுவி விட்டு வந்த என் கணவர் இம்முறை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “பரவாயில்லை, இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே. பிழைத்துப் போவாய்” என்று நகைத்தார். அவன் உள்ளூற மகிழ்ந்து கொண்டதை முகம் காட்டியது. என் மைத்துனர் ஒன்றையுமே காதில் போட்டுக் கொள்ளாதவர் போன்று மௌனச் சாமியாராக வயிற்றைத் தடவியவாறு ஏப்பம் விட்டார். பட்டுவுக்கு முகம் நாலுபடி வெண்கலப் பானையைப் போல் உப்பியிருந்தது. அவளுடைய முறையீட்டை என் கணவர் எடுத்துக் கொண்டு என்னைத் தண்டிக்கவில்லை என்ற மனத்தாங்கல் உள்ளே இருப்பது வெளியே நன்றாகத் தெரிந்தது. எனக்கோ, வரதன் முன்னிலையில் அவள் என்னை மட்டம் தட்டியதும், அவர் அதைக் கேட்டுக் கொண்டு எனக்குப் பரிந்து அரை வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்ததும், மனப்புண்ணிலே அதிகமாகத் தைத்தன. அவனுக்குக் கூடப் பொறுக்கவில்லை. அவர் பொறுத்து விட்டார்! உள்ளுக்காக இல்லாவிட்டாலும் ஊருக்காகவாவது பால் குடிக்க வேண்டாமா! அவருக்கே அவமானமாக இல்லையா? ஆனால் அவளுக்கு உரம் கொடுத்து, ‘ஏண்டி அதிகப்பிரசங்கி’ என்று கண்டிக்காமலிருந்தாரே என்னை? அந்த மட்டும் பெரிதுதான். அன்று ஏதேதோ கடிதங்கள் வந்தன. அவர்கள் பேச்சுக்களைக் கேட்டும், என் கணவர் தம் உடைகளைத் தனியே எடுத்து வைத்துக் கொள்வதைக் கண்டும் எனக்கு யாரோ நெஞ்சை அமுக்கிப் பிழிவது போல இருந்தது. காரியாலயத்திலே இருவரும் ஒரு வாரமாக இல்லாமல் இருந்ததே மிக மிக நெருக்கடியைக் கொணர்ந்து விட்டதாம். எனவே அவர் மறுநாளே போகிறார்! அவர் என்னிடம் ஆதரவு காட்டிப் பரிந்து வரவில்லை. அன்பு மழை பொழிந்து ஆறுதல் காட்டவில்லை. என்றாலும் அவர் இருக்கும் வீட்டிலே நான் இருந்தேன். என் கண் முன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். இனி அதுவும் இல்லை. சூரியன் இல்லாத வானம் போல, அச்சில்லாத தேர் போல என் வாழ்க்கை இந்த அழகிய ஊரிலே கழிய வேண்டும். குழந்தைகளுக்குத் தாதியாக, கூப்பிட்ட குரலுக்கு ஏவலாளியாக நான் உணர்ச்சியற்று உழைக்க வேண்டும்! அவர் நெஞ்சம் கல்தானா? இருதயமே இல்லையா? என்னுடைய இந்த வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? நான் செய்து விட்ட தப்புக்கு, அதைத் தப்பு என்றே வைத்துக் கொண்டாலும், வாழ்வையே பலி கொடுக்க வேண்டுமா? இருதயத்துள்ளே ஒரு பிரளயம் வந்து விட்டது போலக் குமுறியது. இரவு என்னுடன் தூங்கும் சுகுமாரும் மைதிலியும் வழக்கம் போல, “கதை சொல்லு, சித்தி” என்று கேட்ட போது, ஒன்றும் அறியாக் குழந்தைகளிடம், “கதையுமாச்சு கிதையுமாச்சு!” என்று ஒருநாளும் இல்லாமல் எரிந்து விழுந்தேன். வெளியே ஹாலிலே பட்டு, மைத்துனர், வரதன், அவர் நால்வரும் சீட்டாடிக் கொண்டிருந்தனர். சிரிப்பொலியும், சீட்டுக் கலைக்கும் சப்தமும் வரதனின் வெண்கலத் தொண்டையும் அவ்வீட்டையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தன. கடிகாரத்தில் மணி பத்து அடித்து விட்டது. தூங்கி விட்ட குழந்தைகளைச் சரியாகக் கட்டிலில் நகர்த்தி விட்டேன். ஆயிற்று, இந்தச் சீட்டாட்டம் இன்னும் சற்றுப் பொழுதிலே ஓய்ந்து விடும். அப்புறம் அவர் பூனை போல் அடிமேல் அடி வைத்து ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு வருவார். என்னைப் பார்த்தாலே எங்கே நெஞ்சம் நிலைகுலைந்து விடுமோ என்று முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வார். நான் விளக்கை அணைக்காமல் உட்கார்ந்திருப்பது தெரிந்தால், “இன்னும் படுத்துக் கொள்ளவில்லையா? விளக்கை அணைத்துவிட்டால் தேவலை” என்பார். அவரது மன உறுதி என்னைக் கல்லாக்கிவிடும். ஏதேனும் வாயைத் திறந்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனானால் அதைக் கூட மென்று விழுங்கி விடும்படி செய்து விடும் அவரது அசையா நெஞ்சம். பெண்கள் தங்கள் சாகசப் பேச்சிலும் மயக்கும் கண் வீச்சிலும் மோகனப் புன்னகையிலும் முற்றும் துறந்த முனிவர்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள் என்பதை நான் அறியாதவள் அல்ல. தூய்மையான அகக் காதல் இல்லாத இடத்தில் கீழ்த்தரமான மனப்பான்மைக்கு எழுச்சி கொடுக்கும் வண்ணம் எழும் முயற்சிகள் அவை. கணவன் - மனைவி என்ற புனித உறவுக்கு அஸ்திவாரம் இல்லாமல் எழும் உடற் கலப்பிலே வெறுப்புற்றுத் தானே என்றே நான் வெகுண்டு தள்ளினேன்? அவரிடம் நான் வேண்டி விழையும் அகக் காதலுக்கு என்ன என்ன சாதனைகள் செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்திலேனே! ஜன்னல் திரையை அகற்றிவிட்டுக் கண்ணாடி கதவைத் திறந்தேன். மலைக்காற்றுச் சில்லென்று உள்ளே நுழைந்தது. என் உடல் சிலிர்த்தது. புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு நான் வெளியே நோக்கினேன். பின் நிலாக் காலம் போல் இருக்கிறது. மலை மங்கை அந்தகாரத்தில் மறைந்து கிடந்தாள். வெளியே எங்கும் நிசப்தம் நிலவியது. எங்கும் சூனியம். ‘இப்படித்தான் வாழ்வும். இப்படித்தான் உன் வாழ்வும்!’ என்று என்னுள்ளே சோக்குரல் பரவி ஒலித்தது. இதயம் எழும்பியது. சாளரத்தண்டையில் அமர்ந்த நான் விம்மி விம்மி அழுதேன். என் சிந்தனையிலிருந்து அந்த வீடு, ஆடம்பரம் அவர்களுடைய ஆட்டக் கலகலப்பு எல்லாம் அகன்று விட்டன. என் சூனிய உலகின் சோகச் சிறையிலே ஒன்றி எத்தனை நேரம் கண்ணீர் பெருக்கி இருப்பேனோ! அறைக் கதவைத் திறந்து கிரீச்சென்று சார்த்தும் சப்தம் எனக்கு ஆழ்கடலின் அடியிலிருந்து வந்தது போல் இருந்தது. கட்டிலில் போய் உட்கார்ந்த அவர் தலையிலே கையை வைத்துக் கொண்டு நெடு மூச்செறிந்தது, டிக் டிக் கென்று நின்றுவிடும் போல் கட்டுக் கடங்காமல் துடித்த என் இருதயத்தை சம்மட்டிக் கொண்டு அடிப்பது போல் இருந்தது. என் அருகிலே எழுந்து வந்த அவர் அடுத்த விநாடி கண்ணீர் கறை படிந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார். “சுசீலா!” என்ற அவர் குரல் நடுங்கியது. கல் நெஞ்சமும் கலங்கி விட்டதா? ஏன் இபப்டி என் உடல் சிலிர்க்க வேண்டும்? ஏனென்று பதில் வரவில்லை. விம்மல் உந்தியது. தழுதழுத்த குரலைச் சமாளித்துக் கொண்டு, அவர் “என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்து விட்டேன் சுசீலா!” என்றார். தேளின் விஷத்தினால் நெறி ஏறித் துடிதுடிப்பவன் ஆவலுடன் மருந்தின் இதத்தை எதிர்பார்க்கும் போது கால கூட விஷம் உடலில் ஏறி விட்டால் எப்படி இருக்கும்? அவர் முகத்தை நடுநடுங்க ஏறிட்டுப் பார்த்தேன். “உன்னைக் கைப்பிடித்து மணம் செய்து கொண்ட போது, ‘என்னைப் போலப் பாக்கியவான் யாரும் இல்லை!’ என்று பெருமிதம் கொண்டிருந்தேன். மண மயக்கத்திலே மாபெரும் தவறு செய்கிறேன் என்பதை நான் அப்போது அறியவில்லை சுசீலா! என்னை மன்னித்து விடு. தீர விசாரியாமல், ஆலோசியாமல் நான் உனக்கும் எனக்கும் தீங்கிழைத்துக் கொண்டு விட்டேன். மன்னித்து விடு. இதை விட உனக்குச் சந்தோஷம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது சுசீலா.” நெடுமலை ஒன்றிலிருந்து கிடுகிடு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது போல் இருந்தது எனக்கு. இந்த வீழ்ச்சியில் ஏற்பட்ட ஆத்திரம் என் நெகிழ்ச்சி யாவும் அவருடைய உருக்கத்தில் ஓடுவதற்குப் பதிலாகப் பாறையாகக் கெட்டிப்பட்டன. நான் அவருடைய வாழ்விலே புகுந்து விட்டது அவருடைய அண்ணா மதனி இணைப்பிலே பிளவு காண ஏதுவாகி விட்டது என்பதை எத்தனை உருக்கமாகச் சொல்லுகிறார்! என்னைக் கைப் பிடித்த போது என் ராட்சசத்தனம் தெரியவில்லையாம்! அவருக்கு என் மீது ஏற்படும் அன்பு, நான் அவருடைய மதிப்பைப் போற்றுவதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது! சே! எத்தனை சுயநலப் பிராணி இவர். கோழை. ஆம் கோழை தான். இல்லாவிட்டால் அண்ணாவை விட்டு என்னுடன் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த விழைய மாட்டாரா? காரும் பங்களாவும் சீரும் சிறப்பும் வேண்டாமே! அவர்களிடம் மனத்தாங்கல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டவே மாட்டார். ஆனால் இந்தப்புறம் நான் சீற்றம் கொண்டு வெகுளுவேன். அவர் மேல் பாய்ந்து விழுவேன் என்பதற்காக இந்த உருக்கம்! இந்தத் தியாகங் கூட அதனால்தான். என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவர்கள் இட்ட கோட்டை மீறி வரமாட்டார். வெறுப்பு என் வைராக்கியத்தை எழுப்பியது. விருட்டென்று விளக்கை அணைத்தேன். ஜன்னல் கதவைச் சாத்தித் திரையைத் தள்ளிவிட்டு என்றும் இல்லாத உறுதியுடன் படுத்துக் கொண்டேன். பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|