(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

காய்

1

     ‘ஜல்ஜல்’ என்ற குதிரை வண்டிச் சத்தத்திற்கிணங்க என் இருதயம் தாளம் போட்டது. ஆமாம்! இதோ வீடு வந்து விட்டது! நான் சலுகையுடனும் உரிமையுடனும் அன்பு குலவும் அன்னையின் அரவணைப்பில் சரண் புகும் நேரம் வந்து விட்டது! ஆகா! இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏதேனும் உண்டா? பழகிய தெருவிலே அத்தனை முகங்களும் என்னை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் காட்சி எனக்கு அத்தனை நாட்களாகக் கண்டிராத மகிழ்ச்சியை ஊட்டியது. வாயிலிலே பக்கத்து வீட்டு ஜானியின் தாயுடன் அம்மா சிரித்த முகத்தோடு நின்றிருந்ததை நான் தூரத்திலேயே கண்டு விட்டேன். வண்டி இன்னும் செல்ல வேண்டிய பத்தடி தூரத்தைக் கூட என்னால் தாங்க முடியாது போல் இருந்தது. வண்டி நிற்கு முன்னரே தடால் என்று குதித்த என்னை, “மெதுவாக இறங்கு சுசி! வண்டி நிற்கட்டும்” என்று தந்தை கடிந்து கொண்டார். எனக்குக் காதிலே விழவில்லை அது.

     வாயிலிலே நின்ற என் தாயை, என் இருதய வேதனைக்குத் தஞ்சமாகப் புக எண்ணியிருக்கும் அன்னையை ஓடிப்போய்க் கரை காணாக் காதலுடன் தழுவிக் கொண்டேன்.

     “சுசீலா இளைச்சுத்தான் போய் விட்டாள்! இந்த ஆறு மாசத்தில் கறுத்துப் போய் தலைமயிர் எல்லாங் கூடக் கொட்டி இருக்கிறது. பட்டணத்துக் காற்று உப்பங்காற்று. உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் என்று எண்ணியிருந்தேனே!” என்று ஜானியின் அம்மா என்னைப் பார்த்து அபிப்பிராயம் கொடுத்தாள்.

     வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்த அப்பா சிரித்துக் கொண்டே, “இப்போதுதான் நாலு நாளாய் உடம்பு ஜுரமாக இருந்ததாம். அத்துடன் ரெயிலில் வந்தது வேறு. மற்றபடி அவர்கள் வீட்டில் என்ன குறை?” என்றார்.

     அம்மா அன்புடன் என் தலையைக் கோதி விட்டாள். “புக்கத்துக்குப் போயும் இன்னும் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறதே? அதே ஓட்டம், அதே குதிப்பு. அதே பரபரப்பு! அங்கே கூட இப்படித்தான் இருப்பாயா, சுசீ?” என்று முறுவலித்த வண்ணம் கேட்டாள்.

     “அதை ஏன் கேட்கிறாய்? அவர்கள் வீட்டிலே எல்லோருமே குழந்தைகள் தாம். இவள் ஓர்ப்படியின் தங்கை ஒரு பெண் இருக்கிறாளே, சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். பரிகாசம், விளையாட்டு எல்லாவற்றுக்கும் அவள் ஒருத்தியே போதும். நேற்று ஸ்டேஷனுக்கு சுசீலாவை வழியனுப்பக் குழந்தைகள், ‘நான் வரேன், நீ வரேன்’ என்று எல்லோரும் வந்து விட்வார்கள். ‘சித்தி நான் எண்ணிக் கொண்டே இருப்பேன். அஞ்சு நாள் ஆனவுடனே வந்து விடுவாயல்லவா’ என்று சின்னக் குழந்தைகூட ஒட்டிக் கொண்டு இருப்பதை எனக்குப் பார்க்க எத்தனை அழகாக இருந்தது தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் இருக்கிறாளே, அத்தனைப் பெரிய குடும்பத்தில் எப்படி ஒத்துப் போவாளோ என்று நான் கவலைப்பட்டது உண்டு. இப்போது சுசீலாவைப் பற்றி நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவள் மைத்துனர், மாமியார், ஏன் மாப்பிள்ளைக்குங்கூடத் தான் அவளை அனுப்புவதில் இஷ்டமில்லை. ஒரு மாசந்தான் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் ஒரு வாக்காகத் தவணை கொடுத்திருக்கிறார்கள்” என்று அப்பா பெருமை முகத்தில் மலர்ச்சியைத் தர, என்னைப் பார்த்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டை அப்படிப் புகழ்ந்து தள்ளினார்!

     நான் சிரிப்பேனா, அழுவேனா?

     அவருக்கு எப்படித் தெரியும் என் வாழ்வு. அந்த மலேரியா மாத்திரை போன்றதுதான் என்று? கார், ரேடியோ, அன்பு செய்யும் கணவன் என்று அவருடைய கண்களுக்கு, ஏன் மேலாகப் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே என் வாழ்க்கை அழகிய பூங்கொத்துப் போலத்தான் தோன்றியது. ஆனால் நிலத்துடன் சரி; மணமில்லாத காகிதப் பூங்கொத்து என்று எனக்கன்றோ தெரியும்? சுகமாகப் பங்களாவின் மின்சார விசிறியினடியில் வாழ்பவன், சாலையிலுள்ள ஆலமரத்தைத் தேடி வருவானா? வெயிலில் களைத்து வழி நடப்பவனுக்குத் தானே ஆல மரத்தடி அருமையானது? அத்தகைய அருமையுடன் நான் அன்னையிடம் வந்திருக்கிறேன் என்பதை அப்பா அறிந்தால் இப்படிப் பேச மாட்டார். அவரிடம் நான் என் குறையை எப்படித் தெரிவிக்க முடியும்? சாதாரணமாக அவராவது ஆராய்ந்து நுட்பமாகக் கவனிப்பவராக இருந்தாலும் பாதகம் இல்லை. ‘மின்னுவதெல்லாம் பொன்’ என்று சூதுவாதில்லாத உள்ளம் படைத்த அவர், எங்கள் வீட்டு ஆடம்பரத்தைக் கண்டு பிரமித்துப் போயிருக்கும் போது, என் வாழ்வு சாரமற்றது என்று சட்டென்று எப்படி அறிவார்?

     ஆனால் அம்மா, பெண் உள்ளத்தின் இயல்பை அறிந்த அன்னை, என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். என் மனப் பெட்டியைத் திறந்து சுமையை அவளிடம் இறக்கி ஆறுதல் பெறுவேன். என் வாழ்க்கை இன்ன விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நிர்ணயம் செய்தபடி தீர்மானிப்பேன்.

     “இன்னும் ஒரு மாசத்தில் திரும்ப வேண்டுமா?” என்று விவரமறியாத பாலகிபோல நான் உள்ளூறக் கறுவிக் கொண்டேன்.

     புக்ககத்துக்குப் போய்விட்டுத் திரும்பி இருக்கும் புதுச் சுசீலா அல்லவா நான்? என்னைப் பார்க்க அதற்குள் எதிர்ப்புறம். கீழண்டை மேலண்டை வீடுகளிலிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்.

     “வெறுமேதான் வந்திருக்கிறாளா? கறுத்து இளைத்துப் போயிருப்பதைப் போர்த்தால் சந்தேகம் தென்படுகிறதே!” என்று என்னைப் பார்த்துக் கீழ்க்கோடி வீட்டுக் கோமளம் கண்ணைச் சிமிட்டினாள்.

     “நான் அப்போதே சொல்லவில்லையா? வளைகாப்புச் சாப்பாட்டை நமக்குச் சீக்கிரமே கொண்டு வந்து விட்டாள் சுசீலா!” என்று அவள் சந்தேகத்தை அதற்குள்ளாகவே தெளிய வைத்தாள், எதிர்வீட்டு மரகதம்.

     இந்தச் சந்தேகம் முதலிலேயே தோன்றாத ஜானியின் அம்மா, “ஏன் மாமி, விஷயம் அப்படியா? காரணத்துடன் தான் கறுத்துப் போயிருக்கிறாளா? என்னிடம் சொல்லக் கூடாது என்று மறைத்தீர்களா?” என்று அம்மாவிடம் சண்டைக்குப் போய்விட்டாள்.

     ‘நமக்குப் போகாத ஊகம் எல்லாம் எப்படிப் போகிறது இவர்களுக்கு? என்னிடத்தில் எத்தனை ஆசையும் ஆவலும் காட்டுகிறார்கள்?’ என்று அக்கம்பக்கம் அறியாத பட்டணத்து வீட்டிலே இருந்துவிட்டு வந்திருந்த எனக்குப் பழையபடி அந்த ஜனங்களின் சங்கம் அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.

     அவர்கள் கேட்கும் கேள்விகள் அவ்வளவாக எனக்குப் பிடிக்காமல் இருந்தாலும் முகத்தைச் சுளித்து வெடுவெடுக்காமல் வெட்கம் மேலிட “அதெல்லாம் ஒன்றும் இல்லை... போங்கள் மாமி” என்றேன்.

     “இல்லாவிட்டால் நீ சொல்வாயா? நீ மறைத்தால் இது மறைக்கும் காரியம் இல்லையாயம்மா, மறைக்க முடியாது!” என்று என் முகத்தில் வந்து இடித்து மரகதம் ஒரேயடியாக ஊர்ஜிதம் செய்துவிட்டாள்.

     அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, “என்ன மாமி, பெண் வந்திருக்கிறாளா? கூப்பிடக் கூப்பிடக் குரலே காணோமே” என்று மேற்பக்கத்து வீட்டு ஜன்னலிலிருந்து எனக்குப் பழக்கம் இல்லாததாக ஒரு குரல் வந்தது.

     “இதோ இருக்கிறேனே; சுசி, இங்கு வாம்மா!” என்று ஜன்னலருகே நின்று அம்மா என்னைக் கூப்பிட்டாள். மறுபுறத்திலே ஒரு வயசான அம்மாளும், இருபத்தைந்து வயசு மதிக்கக்கூடிய ஒரு பெண்ணும் நின்று என்னைப் பார்த்தனர்.

     “இவள் தான் சுசீலா. அஞ்சு வருஷம் சிட்சை சொல்லி வைத்திருக்கிறது. இப்போது எப்படிப் பாடுகிறாளோ? நம் வீட்டில் இருக்குமட்டும் நாமும் ஆசையாக எல்லாம் சொல்லி வைக்கிறோம்! அப்புறம் பெண் குழந்தைகள் நமக்குச் சதமா மாமி?” என்றாள் அம்மா.

     அவர்கள் எனக்கு முற்றும் புதியவர்கள். கறுப்பாய் இளவலாய் இருந்த அந்தப் பெண் கைம்பெண்ணானவளாம். சென்னைச் சர்வகலாசாலையிலே சங்கீத டிப்ளோமா பெற்று, இப்போது புதிதாகத் திறந்திருந்த புங்கனூர்ப் பெண் பாடசாலையிலே சங்கீத ஆசிரியையாக இருக்கிறாளாம். இந்த விவரங்களை எனக்கு அம்மா பின்னாடி சொன்னாள்.

     “பாட்டு, படிப்பு எல்லாம் கற்றுக் கொடுத்து எங்கள் சக்திக்கு மீறியே தான் இடமும் பார்த்துக் கொடுத்தோம். பெண் குழந்தைகள் என்றாலும் கண்ணைக் காக்காமல் நல்ல இடத்திற்குப் போனால்தானே மனத்துக்குத் திருப்தியாக இருக்கிறது? நாம் தான் ஒன்றும் தெரியாத ஜடமாக இருக்கிறோம். நம் வயிற்றில் பிறந்த அதுகளாவது ஒரு குறையுமில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே பிடிதான் எனக்கு. மாப்பிள்ளையும் தங்கமான பையன், தேர்ந்த ஜனங்களும் ஆசையும் அன்புமாக வைத்துக் கொண்டு தாங்குகிறார்கள். அதுதானே நமக்கு வேண்டும்?” என்று அம்மா லோகாபிராமமாகப் பேசுவதுபோல் என் வீட்டைப் பற்றிய பெருமை அடித்துக் கொண்டாள். மனத்திலே புளியைக் கரைந்து விட்டது போல் இருந்தது எனக்கு.

     இவ்வளவு பரிவான அபிப்பிராயம் அவள் மனத்திலும் தைத்திருக்கும் போது நான் எப்படி உண்மையை உடைத்து, உளுத்த மரம் என்று காண்பிப்பேன்?

     “நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எத்தனை அரும்பாடுபட்டு வளர்த்தாலும் அந்த அருமை தெரிந்த இடமாக இருக்க வேண்டாமா வாய்க்கும் இடமும்! நான் கேட்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லோரும் பேசியது காதில் விழுந்தது. சாதாரணமாக வரவில்லையே?” என்று அந்த அம்மாள் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.

     “அப்படி எதுவும் முன் கூட்டித் தெரிவிக்கவில்லை. போய் ஆறு மாசம் ஆச்சே. மறுதரம் அழைக்க வேண்டாமா என்று தான் அழைத்து வந்திருக்கிறது. இப்போது நீங்கள் கேட்பதையும் அவள் உடம்பையும் பார்த்தால் எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று அம்மாவும் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

     எனக்குக் கோபமாக வந்தது. முகம் ஜொலிக்க, “என்னம்மா இது? நீங்களும் ஆரம்பித்து விட்டீர்கள்? அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று அப்பால் வந்து விட்டேன்.

     அப்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. என் மாமியாருக்கு சொந்தக்காரியான கிழவி ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் ஒரு நாள். புது நாட்டுப் பெண் அல்லவா நான்? என்னை நமஸ்கரிக்கச் சொன்னார்கள். நான் வணங்கிய போது அந்த பாட்டி, “சீக்கிரமே பிள்ளைக் குழந்தை பிறக்கட்டும்” என்று தன் பொக்கை வாயைக் காட்டி ஆசீர்வதித்தாள். எங்கே அவள் வாக்குப் பலித்து விடுமோ என்று பயப்படுவது போல் இருந்தது. பட்டு அடுத்தாற் போல் கூறிய வார்த்தை.

     “மேலே மேலே அகமுடையானுக்குச் சம்பாதனை உயரட்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் பாட்டி. முதலில் அதுதான் வேண்டும்” என்றாள்.

     அவளுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் என் மாமியார். “ஆமாம்! இது ஒன்றும் பிறக்காத குடும்பம் இல்லை. அங்கும் சரி, இங்கும் சரி இப்போதைக்கு என்ன? நாலைந்து வருஷங்கள் போகட்டுமே” என்றாள்.

     இந்தக் கபடற்ற கிராம ஜனங்களுடன் அவர்கள் மனப்பான்மையை ஒப்பிட்டுப் பார்த்து நான் பெருமூச்செறிந்தேன்.

     வெகு நாட்களுக்குப் பிறகு அப்பாவுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அம்மாவின் கையால் பக்குவம் செய்த உணவைப் புசித்த போது எனக்கு அமுதம் உண்ணுவது போல் இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் அங்கே போவதும் இங்கே இரண்டு வார்த்தைகள் பேசுவதுமாகத் துள்ளித் திரிந்த போது, அதுவரை கண்டறியாத மகிழ்ச்சியைக் கண்டேன். சுசீலா, சுசீலா என்று அங்கேயுந்தான் அடிக்கு ஆயிரம் தடவை கூப்பிட்டார்கள். ஆனால் இந்த வீட்டிலே அதே சுசீலா என்ற வார்த்தைகள் இதுவரை ஒலித்திராதபடி அத்தனை இன்பமாக அல்லவோ ஒலித்தது.

     அடுத்த வீட்டுச் சங்கீத வாத்தியாரம்மா சரளா சொன்னாள் ஒருநாள்: “உன் அப்பா ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு சுசீலாவாவது கூப்பிடாமல் இருக்க மாட்டார். ‘அம்மா, சுசீலா கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருகிறாயா?’ என்பார். இல்லாவிட்டால், ‘ஆபீஸ் பையன் வருவான்; கட்டுகளை எடுத்துக் கொடுத்து விடுகிறாயா சுசீலா?’ என்பார். நான் வெகு நாட்கள் வரை உன் அம்மா பேர் தான் சுசீலாவாக்கும் என்று நினைத்திருந்தேன். அப்புறந்தான் மாமி ஒரு நாள் சொன்னாள்” என்று நகைத்தாள்.

     இதைக் கேட்கும் போது என் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. இப்படி என்னிடம் உவமை கூற முடியாதபடி அன்பு பூண்டிருக்கும் பெற்றோருக்கு, நான் கணவன் வீட்டில் லட்சிய வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கிறேன் என்று பெருமிதம் கொண்டு மகிழ்ந்து போயிருக்கும் பெற்றோருக்கு, என் அவல வாழ்வு தெரிந்தால் எத்தகைய அதிர்ச்சி உண்டாகும்? சுவர்க்க போகத்தில் திளைத்துக் கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் முன்பு ஆயிரமாயிரம் குட்டிப் பிசாசுகளும், கரும்பூதங்களும் தோன்றி நெருக்கினால் எப்படி இருக்கும்? அவர்களுக்கு அளிக்கும் கைம்மாறு?

     மனப்பெட்டியை உடைத்து அம்மாவிடம் கதற வேண்டும் என்ற தாபத்துடன் அங்கு அடி எடுத்து வைத்த எனக்கு தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளும், அவர்களுடைய மனப்போக்கும் நான் அவ்விதம் செய்வது சரியா என்ற யோசனையைக் கொடுத்து விட்டன.

     அவளால் எப்படிப் பரிகாரம் தேட முடியும்? இன்னும் உண்மையை உள்ளபடி உரைத்தால், அம்மா என் மேலேயே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? எனக்குள்ளேயே இன்னும் எவ்வித நிர்ணயமும் இருக்கவில்லையே.

     ஒருபுறம் சிந்தித்துப் பார்த்தால் தவறு என் மீதும் உண்டு எனவே பட்டது. யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு கெட்டது போல என் ஜீவனற்ற இன்றைய வாழ்வுக்கு என்னுடைய அன்றைய படபடப்பும் காரணமாகத்தானே இருக்கிறது? அன்றிரவு தான் எத்தனை ராட்சஸியாக நடந்து கொண்டேன்! அவருக்கு மட்டும் மனம் புண்படாதா? ரோசம் இருக்காதா? அன்புப் பிச்சை கேட்டு வந்தவரை வெருட்டித் துரத்தினேனே! ஆனால்... ‘பெண் புத்தியே பேதைமை நிறைந்தது’ என்பது என் விஷயத்தில் எத்தனை நிதரிசனமாகி விட்டது! தவறுக்காக உள்ளூற உருகிப் போகும் என்னைக் குற்றம் செய்து விட்ட குழந்தையைத் தண்டிப்பதைப் போல் உடனேயே ஏதாவது தண்டனை கொடுத்து விட்டு அவருடையவளாக அங்கீகரித்திருக்கக் கூடாதா? வெளியிலே யாரும் வித்தியாசமாக நினைக்காதபடி, ‘சுசீ, சுசீ!’ என்று அன்பொழுகத்தான் கூப்பிட்டார். அப்பாவுடன் ஊருக்கு வரும்போது பிறர் வியக்கும்படி பிரிவில் குறைவு காணும்படிதான் பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரேயடியாக அல்லவோ மாறிவிட்டார்? “தொட வேண்டாம் என்னை!” என்று திருநீலகண்டர் மனைவி போல நான் சொன்னதை வைத்துக் கொண்டு ஆணையாக நடக்கிறாரே!

     மந்திரவாதியின் கைக்கோலைப் போல் என் போன்ற வெகுளிப் பெண்களை மனக்குறளி ஆட்டி வைக்கிறது. திசை விட்டுத் திசை பாய்ந்து ஓர் இடத்திலே ஸ்திரமின்றி அலைபாயும்படி செய்து விடுகிறது. என் மீது தவறு கண்டு ஒரு புறம் குத்தினால், இன்னொரு புறம் அவரது தப்பை எடுத்துச் சொல்லத் தயாராக வாதம் காத்திருக்கும்.

     உண்மையிலே அவருக்கு என் மீது கரை காணாக் காதல் இருந்தால் ஏதோ ஆத்திரத்தில் இரண்டு வார்த்தைகள் கூறினேன் என்பதைக் கொண்டு தனிமையில் என்னிடம் முகம் கொடுத்துப் பேசாமலா இருப்பார்? தனிமையிலே என்னைக் கண்டு விட்டாலோ ஏதோ கர்ணனைக் காணும் குந்தி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது போலத் தம் அழுத்தமான உதடுகளை இறுகப் பொருத்திக் கொண்டு வைத்த கண் இப்புறம் அப்புறம் மாறாமல் அந்தப் பாழாய்ப் போன காரியாலயக் காகிதங்களில் ஒரேயடியாய் லயித்து விடுகிறாரே; என் மீதுள்ள அன்பால் பாகாய் உருகி நைந்த மனம் இப்போது ஒரேயடியாய் நெக்குவிடாப் பாறையாகி விடக் காரணம் என்ன? அவ்வளவு மாபெரும் குற்றமா நான் செய்தேன்? நான் வெகுண்டு விழுந்ததிலும் ஒரு விதத்தில் நியாயம் இருக்கவில்லையா? காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர், பெண்மையின் சுதந்திரத்தைப் போற்றுபவர் என்றெல்லாம் கனவு கண்டிருந்த என் முன் அவரே சுதந்திரமற்று நடத்தும் வாழ்க்கைக்கு நானும் ஒன்றிப் போக வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தப்படுத்துவது போல் நடந்து கொண்டால் எனக்கு ஏற்பட்ட அளவில்லாத ஏமாற்றத்தில் வெருட்சி தோன்றியது எவ்வாறு தவறாகும்? அண்ணன், மதனியிடம் அவருக்கு அவர்கள் என்ன செய்தாலும் சரியாகத் தோன்றட்டும். ஆனால் என்னை தன் இருதயத்தில் வைத்துப் போற்றுவதாக அலங்கார வார்த்தைகள் கூறியவருக்கு, என்னை அவர்கள் வேலைக்காரிக்குச் சமமான அந்தஸ்தில் நடத்துவது ஏனோ கண்களில் படவில்லை? காதலை விட நன்றியுணர்ச்சி தானே அதிகமாக அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் நான் நடந்து கொண்ட விதம் சரியே ஒழியத் தவறே இல்லையே!

     மாபெரும் இலக்கியக் கடலிலே முழுகி ஆராய்ச்சிகள் நடந்துபவனைப் போன்று முடிவு காணாத என் போராட்டங்கள் என் குறைகளைப் பெற்றவளிடம் உடைத்துக் கூறப் போதிய துணிவில்லாமல் ஆக்கிவிட்டன. தாயன்பின் தாளடியிலே மனப் புண்ணுக்கு மருந்து தேடலாம் என்று எண்ணிக் குதூகலத்துடன் புறப்பட்டு வந்த எனக்கு மனப்புண் அதிகமாக வீங்கி வேதனை கொடுத்ததே ஒழிய அதை உடைத்துவிட நடுக்கமாக இருந்தது. உள்ளே ஜுரத்தை வைத்துக் கொண்டு, வெளியே தெரிந்தால் தாய் படுக்கையில் கிடத்தி விடப் போகிறாளே என்று பயந்து வெளியே கள்ளமில்லாதது போல் நடமாடும் குழந்தை போல நானும் மேலுக்குச் சிரித்துப் பேசினேன்.

     அடுத்த வீட்டுச் சரளாவையும் என்னையும் சங்கீத ஞானம் நட்புக் கயிற்றால் பிணைத்தது. அவளுக்கு அவ்வளவாகக் குரலினிமை இல்லை. ஆனால் தேர்ந்த சாதகத்தாலும் தெளிந்த ஞானத்தாலும் அந்தக் கலை அவளிடம் ஒளியுடன் விளங்கியது. என் குரலினிமையைக் கண்டு அவள் வியந்தாள். “இவ்வளவு அரிய கலையைக் கற்றுக் கொண்டு அலட்சியமாக இருக்கிறாயே. உன் சாரீரம் யாருக்கும் கிட்டாத பாக்கியமாக்கும்? தொடர்ந்து சாதகம் செய்தால் கலையுலகிலே நீ எப்படிப் பிரகாசிப்பாய், தெரியுமா?” என்று என்னுள்ளே ஆசையைத் தூண்டி விட்டாள். நான் அங்கிருக்கும் போதே அவள் ஒரு நாள் வானொலி நிலையத்துக்குச் சென்று பாடி விட்டு வந்தாள். அம்மா, நான், அவள் தாய் மூவரும் அதைத் தாசில்தார் வீட்டு ரேடியோவில் போய்க் கேட்டு வந்தோம். அப்போது எனக்கு, ‘நாமும் இம்மாதிரி ஒரு நாள் பாடுவோமா? பாடினால் திடீரென்று அவர் வியக்கத்தக்க விதமாக வானொலிப் புத்தகத்தில் “சுசீலா ராமநாதன்” என்ற பெயரைப் பார்த்தால் எப்படி இருக்கும்!’ என்ற புதுக் கற்பனைகள் மனத்தில் எழுந்தது. எனக்கு அநுசரணையாக இருந்த சரளாவின் உதவி கொண்டு நான் என் பழைய வெறுப்பையும் மனநோவையும் மறந்து புது முயற்சியில் ஈடுபடலானேன். நாளடைவில் என் நெஞ்சில் குடி கொண்டு வாதனை கொடுத்த அவரைப் பற்றிய, என் எதிர்காலப் பிணைப்பைப் பற்றிய, எல்லா நினைவுகளும் மெல்ல மெல்ல அமுங்கி, அந்த இடத்தில் என் புது லட்சியம் முன் வந்து நிற்கலாயிற்று.

     இந்த நிலையில் தான் அப்பா ஒரு நாள் எனக்கு ஒரு கடிதம் கொணர்ந்து கொடுத்தார். ‘சுசீலா ராமநாதன்’ என்ற அந்த அச்சுப் போன்ற கையெழுத்தைத் தாங்கிய கடிதத்தை அதற்கு முன் அதே வீட்டில் நான் பெற்றுக் கொண்ட போது என் இருதயம் ஒளிமதியைக் காணும் கடல் போலப் பொங்கிப் பூரித்ததே; அப்போது எல்லையற்ற ஆனந்தத் துடிப்பினால் நடுங்கிய கைகள் இப்போது இனமறியாத அச்சத்தாலும் குழப்பத்தாலும் நடுங்கின. அந்த உறைக்குள் அப்பாவுக்கு ஒரு கடிதமும் எனக்கு நாலே வரிகள் கொண்ட ஒரு கடிதமும் அடங்கியிருந்தன. “பிரியமுள்ள சுசி! கோடைக்கு அண்ணா, மதனி முதலிய எல்லோரும் ஊட்டிக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருக்கிறோம். ஆதலால் இந்தக் கடிதம் கண்டவுடனே அப்பாவைக் கொண்டு வந்து விடச் சொல். தனியாக அவருக்கும் எழுதியிருக்கிறேன். சாக்குப் போக்கு எதுவும் கூறிக் கொண்டு வராமல் இருந்து விடாதே. ராமு.”

     இதுதான் அந்த ஆங்கிலக் கடிதத்தின் சாராம்சம்.

     அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை பிடிபடவில்லை. ஏதோ நான் ஒரு மகாராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டு மகாராணியாக ஆகிவிட்டது போல் அவர்கள் உச்சாணிக் கொம்பில் பறந்தார்கள். ஆனால் மலைவாசம் அநுபவிக்கப் போகும் மகாராஜாவுக்கும் மகாராணிக்கும் கையாளாக இருக்கத்தான் என்னை அழைக்கிறார்கள் என்ற உண்மை எனக்கல்லவோ தெரியும்?

     மாப்பிள்ளையின் உத்தரவைச் சிரமேல் தாங்குவது போல் அவர்கள் என்னைக் கொண்டு விட உடனே யத்தனம் செய்தது எனக்குக் கவலையை ஊட்டியது. அன்றிரவு என் அன்னையிடம் அந்தரங்கமாகப் பேச்சைத் துவக்கினேன். “அம்மா, இப்போது என்னை ஒன்றும் கொண்டு விட வேண்டாம்; இன்னும் இரண்டு மாசம் இருக்கிறேனே” என்றேன்.

     என் முகத்தை அவள் ஆச்சரியம் குலவும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படிச் சொன்னால் நன்றாக இருக்குமா சுசீலா! அவர் ஆசையுடன் அழைத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாசம் வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வது முறையா?” என்றாள்.

     “இல்லை அம்மா, எனக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை. ஏன் போக வேண்டும் என்றிருக்கிறது” என்றேன் நான், மெதுவாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு.

     “அழகாய்த்தான் இருக்கிறது. பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீடு போக வேண்டும் என்று நினைத்தால் முதலில் அப்படித்தான் இருக்கும். அசடு மாதிரி எதாவது பேசாதே. அவர் என்ன நினைத்துக் கொள்வார் அப்புறம்; நியாயம் தவறி நாமும் போகக்கூடாது பார்!” என்றாள் அவள்.

     நான் இன்னமும், “வந்து... இல்லை அம்மா எனக்கு அங்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நானே எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். என் மாமியாருக்குப் பெரிய மாட்டுப் பெண் தான் அருமை. அவள் வைத்ததுதான் சட்டம். அதற்காகவே என்னை இப்போது அழைக்கிறார்கள்” என்று திருப்திப்படாத சிறுமி போல முணுமுணுத்தேன்.

     “வெகு சமர்த்துதான் பெண்! வெளியே சொன்னால் வெட்கக்கேடு! என்னடி கஷ்டம் அங்கே? புக்ககம், பெரிய குடும்பம் என்றால் வேலையில்லாமல் பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருக்க முடியுமா? பெண்ணாய்ப் பிறந்தவள் புருஷன் வீட்டில் ஆடி ஓடி உழைக்கத்தான் வேண்டும். ஜகதுவைப் பார். மாடு, சாணி, சகதி என்று உழலும் போதே புக்ககம் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டாளே. வந்து பத்து நாட்கள் ஆவதற்குள் துடித்து விடுவாளே. மாப்பிள்ளை கொள்ளை ஆசைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறார். நீ இங்கே குறளி பண்ணிக் கொள்! முரண்டு கிரண்டு பண்ணி இதற்கெல்லாம் பச்சைக் குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கலாம் என்று நினைத்துப் பேசாதே சுசீ. அண்ணன் தம்பி என்று இந்த நாளில் இப்படி வித்தியாசம் இல்லாமல் இருக்கிறார்களே என்று நாங்கள் எவ்வளவோ சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நீ போன மறுநாளே எக்கச்சக்கமாக ஏதாவது சொல்லிக் கொண்டு எங்கள் பேரைக் கெடுத்து விடாதே, ஆமாம்!” என்று என் பேரில் கோபம் கொண்டு அவள் எச்சரித்தாள்.

     மாப்பிள்ளை பேரில் உள்ள நல்ல அபிப்பிராயம் என்னைக் கூட நம்ப முடியாதபடி அவ்வளவு தூரம் பசுமரத்தாணி போல் அவர்கள் மனத்தில் உறைந்து போயிருக்கிறதே. அதை நான் எப்படி நெகிழச் செய்வேன்? அப்படி முயன்றும் எனக்கேயன்றோ சாட்டை அடி விழுகிறது? முதலிலேயே என் மீது அம்மா அநுதாபம் கொள்ளாத போது, என் கணவருக்கும் எனக்குமுள்ள உறவை நான் வெளியே சொன்னால் என்னை நம்புவாளா? இன்னும் அசட்டுப் பட்டந்தான் கிடைக்கும்.

     அத்தனை நல்ல பிள்ளையாகத் தோன்றி அப்பாவிடம் நல்ல பெயர் சம்பாதித்து விட்ட அவர் மீது என் சீற்றம் அளவிட முடியாதபடி பெருகியது. மேலுக்கு மட்டும் அன்புள்ளவர் போல நடக்கும் அவர் மனத்திலே உண்மையாக என்னதான் இருக்கும்?

     என்னவோ பெண்ணுள்ளம் புரியாதது, புரியாதது என்று கதாசிரியர்களும் மன ஆராய்ச்சியாளர்களும் கதைக்கிறார்களே, இந்த ஆணுள்லத்தைப் போலப் புரிந்து கொள்ள முடியாத பொருளே கிடையாது என்று எனக்கு அநுபவபூர்வமாகத் தெரிந்தது. நிலைக்கு நிலை மாறும் என் சஞ்சல உள்ளம் கொண்டு அவருடைய இருண்ட குகை மனத்தைக் கண்டு கொள்ளவே முடியவில்லை!

     குழந்தைப் பிடிவாதம் செய்கிறேன் என்று அம்மா அலட்சியமாக எண்ணி அதட்டிவிட்ட போதிலும் என் தைரியம் குன்றவில்லை. தளர்ச்சி அடையாமலே, “அம்மா, நீ நினைக்கும்படி நான் குழந்தைப் பிடிவாதம் செய்யவில்லை. நீ அப்படி, இப்படி என்று புகழ்ந்து கொள்ளும் மாப்பிள்ளையைப் போல் இரும்பு நெஞ்சம் படைத்த மனிதர்கள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள். அண்ணா, மதனி இட்டதுதான் அவருக்கு ஆணை. அன்பில்லாத அந்த வீட்டிலே என்னால் இனிச் சிறை வாசம் அனுபவிக்க முடியாது அம்மா!” என்றேன். கண்ணீர் துரத்திக் கொண்டு வந்தது.

     “என்னடி சுசீலா இது? நீ எத்தனையோ சமர்த்தாக இருக்கிறாய் என்று மகிழ்ந்து போனேனே நான். அப்பாவானால் ஒரே மாட்டாய், நம் பெண்ணைப் போல உலகிலேயே யாரும் இருக்க மாட்டாள் என்று ஆகாசத்தில் பறந்து கொண்டிருக்கிறார். நீ தலையிலே கல்லைத் தூக்கிப் போடுவது போலல்லவோ சொல்கிறாய்? அன்பில்லாதவனா இப்படி ஒரு மாசம் ஆனதும் கடிதாசு போடுவான்? குடும்பத்தில் இருப்பதென்றால் ஏறவும் தாழவுந்தான் இருக்கும். இதைக் கூடச் சகித்துப் போகாமல் இங்கே இருப்பேன் என்று நீ சொல்வது அழகாயிருக்கிறதாடி சுசீ? அப்படியே கஷ்டப்படுத்தினால் கூட முதல் முதலில் தாழ்ந்து போவதுதான் பெண்களுக்கு அழகு. கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்து பேரன் பேத்தி எடுத்தாச்சு. இப்போது கூட உன் அத்தை பாட்டி என்ன அலட்சியம் பண்ணினாலும் நான் நேருக்கு நேர் என்ன சொல்ல முடிகிறது? போனதும் போகாததுமாக அண்ணா, மன்னி இட்டதுதான் ஆணை என்று நீ சொல்ல முடியுமோ? பொறுமை வேண்டாமோ? கெட்ட பெயர் சம்பாதிக்க நேரமாகாது. நல்ல பெயர் வாங்கத்தான் நாளாகும். வெளியே வாசலில் போய் வரும் புருஷன் சமயத்தில் கோபித்துக் கொள்வான். ஏன்? அடிக்கிறவன் கூட உண்டு. தணிந்துதான் போக வேண்டும். உனக்கே பதற்றம் எப்போதும் அதிகம். அதை நான் சொல்லும் போது உனக்குக் கோபமாக வரும். அத்தை இரண்டு புடவை வாங்கிக் கொடுத்தாளாம். நீ அதை முகத்தில் அடித்தாற் போல் அந்தப் பையனிடம் பொய்யும் புளுகும் சொல்லித் திருப்பி அனுப்பினாயாமே; பெரியவர்கள், பெருந்தலை என்று நாங்கள் இருக்கும் போது நீ செய்த அதிகப் பிரசங்கித்தனம் என் தலையில் அல்லவா வந்து விடிகிறது? இந்த மாதிரியில் தானே நீ அங்கேயும் நடந்து கொண்டிருப்பாய்?” என்று அம்மா பழைய குப்பைகளை எல்லாம் கிளறிவிட்டு எனக்கு இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டாள். என்னிடமுள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டி.

     நான் என்ன செய்வேன்? என்றென்றும் சுயேச்சையாக, தாய் தந்தையாருக்குச் செல்லப் பெண்ணாக, அந்த வீட்டிலேயே நடமாடும் பெண்ணாக நான் இருந்திருக்கக் கூடாதா? மண வாழ்வு எனக்கு மனவேதனை நிறைந்த துன்பச் சிறையாகப் போய்விட்டதே. ஆகா! அந்த ஒளியில்லா வானம், ஜயத்தின் பாட்டு எல்லாம் என் வருங்காலத்தை எப்படி அறிவித்திருக்கின்றன! அந்தக் கனவு அன்புக் கரங்கள், பயங்கர உருவம், பேய்ச் சிரிப்பு - இவையெல்லாம் எவற்றின் அறிகுறியோ? உதட்டிலே அமுதமும் உள்ளத்திலே... என்ன இருக்குமோ?

     வீட்டுக்கு வேலை செய்ய ஆள், அவசியம் நேரிட்ட போது இச்சையைத் தீர்த்துக் கொள்ளப் பெயருக்கு மனைவி என்று இருந்திருக்குமோ என்னவோ? ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது வரும் இந்த ஏமாற்றங்களில் நிலைகுலையவா நான் பெண் பிறந்தேன்?

     அலைகடலின் நடுவே புயலில் சிக்குண்ட ஓட்டை மரக்கலம் போல ஆதரவின்றி வாழ்க்கைச் சுழலின் நடுவே அகப்பட்டுக் கொண்டு விட்டேனென்று எனக்குத் தோன்றியது. மூச்சு இருக்கும் மட்டும் போராடும் நோயுண்ட ஜீவன் போல நானும் போராடித்தானே ஆக வேண்டும்? வேறு என்ன வழி?