உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) தளிர் 2 நான் மூர்ச்சித்து விழுந்து விட்டேன் போல் இருக்கிறது. கண்களை விழித்துப் பார்த்த போது, வாசல் அறையில் படுத்திருப்பது புலப்பட்டது. என் தலையில் இருந்த பூவெல்லாவற்றையும் எடுத்திருந்தார்கள். தஸ்புஸ் என்று எனக்கு வேதனை தந்த அந்தப் பதினெட்டு முழப் புடவையைக் கூடக் காணவில்லை. நான் மிகவும் லேசாக இருந்தேன். மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன. என் அருகில் ஜகது அக்காவும் அம்மாவும் இருந்தார்கள். “அம்மா மழை கொட்டுகிறதா இன்னமும்?” என்று நான் கேட்டது மிக ஈன சுரத்தில் ஒலித்தது. “ஏன் அம்மா சுசீ, மழை கொட்டி அப்போதே ஓய்சு போச்சே? கோடை மழை. படபடன்னு ஒரு நாழிகை அடிச்சுது” என்று அம்மாவின் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்கிறது. என் சிறிய மைத்துனர் உள்ளே வந்தார். அவர் டாக்டர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மாவும் அக்காவும் எழுந்து நின்றார்கள். “விழித்துக் கொண்டு விட்டாள் போல் இருக்கிறதே?” என்றார் அவர். எனக்கு ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல எல்லோர் முகத்திலும் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது. அயல் மனிதரைக் கண்டால் தன் சிறு கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள முயலும் சிறு குழந்தையைப் போல் நானும் தலையணைக்கு அடியில் என் முகத்தைக் கவிழ்த்துக் கொள்ள முயன்றேன். “ஒன்றும் இல்லை, வெயில், உஷ்ணம், சந்தடி. ஏற்கனவே நல்ல திடகாத்திரமில்லாதவள் போல் இருக்கிறது. ஆகாரம் வேறு சரியாக இருக்கவில்லை” என்று அவர் அபிப்பிராயம் சொன்னார். “ஆமாம். நான் அப்போதே அதுதான் சொன்னேன். இன்று முழுவதும் அவள் ஒன்றுமே சாப்பிடவில்லை. உள்ளே அழைத்தாவது அவளைக் கவனித்திருக்க வேண்டும் நீங்கள்” என்று என் கணவருடைய குரலும் என் காதில் விழுந்தது. ஆம், அவர் இன்னமும் இங்கே தான் அறை வாசற்படியில் நிற்கிறார். அடடா! எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல்! அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள்! என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார்! என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார்? எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே? “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது? அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா?” என்று கசமுச என்ற குரலில் அம்மா முணுமுணுத்தாள். “பந்தியில் உட்கார்ந்து இப்படி ஒரேயடியாக அட்டகாசம் செய்தால்? நான் ‘போதும் பரிகாசம்’ என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை” என்று அவர் நேரடியாகவே அம்மாவுக்குப் பதில் கொடுத்தார். இந்த மாப்பிள்ளையிடம் அம்மா அந்த வழக்கத்தைக் கைவிட்டு விட வேண்டியதுதான். மேலும் மேலும் அவர் எனக்குப் பரிவதைக் கண்ட என் இதயம் குறுகுறுத்தது. பரிவது மட்டுமா? இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்! பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே! என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே? கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா? அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா! ராமு சொல்வது போல நீங்கள் அவனைக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்” என்று ஒத்துப் பாடினார். அம்மாவுக்கு முகம் ஒரு விநாடி கறுத்து விட்டது. ஜகது அக்காவுக்கோ விண்டு வெடித்து விடும் போல் இருந்தது முகம். “சரி, மணி நாலரை தான் ஆகிறது. ஏழு மணிக்கு மேல் ஆசீர்வாதம் வைத்துக் கொண்டால் போதும். போய் எல்லாரும் சற்றுத் தூங்கலாம். பழ ரசம் ஏதாவது அவளுக்குக் கொஞ்சம் கொடுங்கள்” என்று கூறிவிட்டு என் மைத்துனர் வெளியே சென்றார். “ஆமாம், அவளுக்கும் அலுப்பாயிருக்கும். தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டே என் கணவரும் அவரைத் தொடர்ந்து சென்றார். அவர்கள் சென்ற பிறகு அருகில் உட்கார்ந்த ஜகது என் கன்னத்தை நிமிண்டி, “அடியம்மா! அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன்! பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே!” என்று தன் முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள். ஆரஞ்சு ரசம் தயாரித்துக் கொண்டிருந்த அம்மா, “ஆமாம், அவர் சொத்தில்லையா இனிமேல்? இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு!” என்றாள். “இன்னும் சற்றுப் போனா விடியப் போகிறதே. இப்ப என்னத்துக்கம்மா?” என்று நான் சிணுங்கினேன். அத்தனை பேருடைய பரிவும் நான் அறியாமலே என்னைக் குழந்தையாக்கியிருந்தது அப்போது. “அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீ மாட்டேன்னு சிணுங்கு. அப்புறம் அவர் கொடுத்தேளான்னு கேட்டுக் கொண்டு வந்துவிடப் போகிறார். நன்றாகத்தான் இருக்கு. பதினாறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையாட்டமா இருப்பது!” என்று ஓர் அதட்டல் போட்டாள். நான் பெட்டிப் பாம்பு போல ‘மடக் மடக்’ கென்று வாங்கிக் குடித்தேன். “தூங்கு, இன்னும் சற்று நாழிகை. நாளைப் போதுக்குக் கொஞ்சம் மணையிலே உட்கார வேணும்” என்று உத்தரவிட்டவளாக அம்மா என் மேல் போர்வையை இழுத்து விட்டு வெளியே சென்றாள். “ஆமாமடி சுசீலா; அப்புறம் நீ தூங்காததற்கு அவர் வந்து எங்கள் பேரில் குற்றம் சொல்லப் போகிறார்” என்று குத்திக் காட்டுவது போல் கூறிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் ஜகது. என் நெஞ்சில் குடியேறிவிட்ட அவரைப் பற்றிக் குத்தலாகச் சொன்னால் எனக்கு மட்டும் ரோசமாக இருக்காதா? தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்? “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே? என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா?” என்று சிரித்துக் கொண்டே நானும் கேட்டுவிட்டேன். “அடேயப்பா! முழுசாக ஒரு நாள் ஆகலே? அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன்! லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ! உம்! புருஷன் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேணும்?” என்று நீட்டி முழக்கிக் கொண்டு அவள் அதிசயப்பட்ட போது ‘நாமும் இருக்கிறோமே’ என்ற ஆற்றாமையும் தொனித்தது. அவளை விட ஒரு படி நான் உயர்ந்து விட்டேன் என்ற எக்களிப்பில் மிதந்தேன். அறையின் விளக்கை அணைத்துவிட்டுக் கீழே ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கியும் விட்டாள் அலுப்பு, அலைச்சல் அல்லவா? எனக்குத் தூக்கம் வருமா? வெளியே திண்ணையிலிருந்து ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கின் ‘ஹூய்’ என்ற சப்தமும், இரண்டொருவர் விடும் குறட்டையொலியும் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வந்தன. தான் சிருட்டி செய்ததைத் திருப்பித் திருப்பி ரஸித்து இன்புறும் கலைஞனைப் போல என் உள்ளமும் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்துத் திருப்பித் திருப்பி அவைகளிலேயே லயிப்பதில் இன்புற்றது. வாழ்விலே ஒரு நாள். அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது கூட அவற்றின் உண்மைகளை நான் சிந்திக்கவில்லை. இப்போதோ, அவை யாவும் என்னை அவருடன் நெருக்கிப் பிணைக்கும் புனித காரியங்களாக எனக்குப் பட்டன. அப்போது இல்லாதபடி இப்போது எனக்கு ஏதேனும் ஞானோதயம் வந்துவிட்டதோ? இல்லையா பின்? அவருடைய அன்பு கனிந்த சொல், உறங்கிக் கொண்டு இருந்த என் மனத்தை மந்திரக்கோல் போலத் தட்டி எழுப்பி விட்டதே! அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ஆனந்தம் உண்டாகிறது! இந்தப் புது மகிழ்ச்சியில் என் உடல் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏதோ புத்துணர்ச்சி பெற்றவளாகவே தோன்றியது. படுத்திருக்கப் பிடிக்கவில்லை. போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன். முதல் முதலாக என் கண்களிலே எதிரே சுவரில் மாட்டியிருந்த ரோஜாப் பூமாலை, மங்கலான ஒளியில் ஜிகினா மின்னக் காட்சியளித்தது. திறந்திருந்த அலமாரியில் ஒட்டியாணம், அராக் கொடி இரண்டும் சுழற்றி வைத்திருந்தன. என் பழைய அலங்காரத்தின் இன்னொரு சின்னமாக கூறைப் புடவை அறையின் மூலை ஒன்றில் கிடந்தது. பழையபடி அவைகளை அணிந்து கொண்டு நான் அவர் பக்கலில் அமர வேண்டும்! அந்த நினைவு எனக்கு எப்படி இன்ப மூட்டியது! பெஞ்சியை விட்டுத் துள்ளிக் குதித்தேன். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வலப்புறம் இருந்த வாய்க்கால் வளைந்து நெளிந்து காலைப் பொழுதில் மங்கிய ஒளியில் தன் மேனியைப் பளபளப்பாகக் காட்டியவாறு பெரியதொரு கரு நாகம் போல் ஓடியது. இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த தாழையும் செவ்வரளியும் காலைக் காற்றிலே தங்கள் சுகந்தத்தைக் கலந்து வைத்திருந்தன. அந்தக் கலவையில் இரவு அடித்த மழை காரணமாக லேசான மண் வாசனையும் இருந்தது. கதிரவன் இன்னும் தன் ஒளி முகத்தைக் காட்டவில்லை. ஆனால் இருளும் பிரிந்திருந்தது. காலைப் பொழுதின் அமைதி என்று நான் கதைகளில் படித்திருக்கிறேன். அது இத்தகைய கவர்ச்சி வாய்ந்தது. மனத்திற்கு ஒரு புதுமையையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லது என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன். எத்தனை நேரமாக இப்படி நின்றேனோ? ஜகது எழுந்து தோளின் மேல் கையை வைத்து, “ஏண்டி சுசீ, தூங்கலே நீ? என்ன பார்க்கிறாய் அங்கே?” என்று கேட்டாள். “ஒண்ணும் இல்லே அக்கா. நேற்று இரவு ரொம்பவும் இடி இடிச்சுதோ?” என்று வினவினேன் நான். என் மகிழ்ச்சியினூடே லேசாக அது உறுத்தியது. “அழகாயிருக்கே கேள்வி? கோடை மழை. இடி இடிச்சுது. மின்னியது. அதிலே பயந்துதான் மயங்கி விட்டதாக்கும் குழந்தை!” என்று செல்லமாக என்னை இடித்தாள் அவள். “இல்லே அப்புறம் ராத்திரி யாரோ பாடினாளே, அது யார் அக்கா?” என்று அடுத்தாற் போல நான் விசாரித்தேன். “ஆமாம். இந்த சமயத்தில் இன்ன பாட்டுத்தான் பாட வேணும்னு சில பேருக்குத் தெரியறதேயில்லை.” எனக்குச் ‘சுருக்’ கென்றது. “உன் சின்ன ஓர்ப்பாட்டிதான் பாடினாள். நாலு பேர் சந்தோஷமாயிருக்கும் சமயத்திலே அந்தப் பாட்டையா பாடுவார்கள்? அசட்டுத்தனம்!” என்று பட்டிக்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்த நாகரிகம் தெரியாத ஜகது அக்கா, அந்தப் பட்டிணத்தாளுக்குச் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தாள். இவளே இப்படிக் கூறும் போது கோணல் வகிடும், கைக் கடிகாரமுமாகத் துலங்கும் டாக்டர் மனைவியான என் சின்ன மன்னிக்கு அந்தச் சமயத்திலே அந்தப் பாட்டு பாடக் கூடாது என்று தெரியாதா? பின் ஏன் பாடினாள்? வேண்டும் என்றே பாடினாளா? நாகரிகம் இதற்கெல்லாம் பிரயோசனம் இல்லையா? இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே? ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ? ஆனால், தற்போதைய என் மகிழ்ச்சி சதம் அல்லவா? எள்ளுக்குள் எண்ணெய் போல் சுற்றி வளைத்து என் மனத்தின் உள்ளே கரும் குரும் என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கே வந்துவிட்டேன். அம்மாவும் பெரிய அக்காவும் பரபரப்பாக உள்ளே வந்தார்கள். “என்னவோ பெண் கண்ணைத் திறக்கலே. துவண்டு கிடக்கிறான்னியே? ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே? ஏண்டி சுசீ? இரவு அப்படிப் பயமுறுத்தி விட்டாயே அவரை?” என்றாள் தங்கம். அம்மா அதையே மறந்து, “கேட்டாயடி ஜகது? அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவே இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும்? எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா? அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ?’ என்று எண்ணமிட்டது. “நான் அப்பவே நினைத்தேன். இவ்வளவு தூரம் கவலைப்படுபவர், எப்படி அவளை இங்கே இனி விட்டுட்டு இருப்பார்?” என்று ஜகது என்னை ‘நறுக்’கென்று கிள்ளினாள். “இல்லை. தெரிந்தால் தானே அவளுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தயார் செய்ய ஏற்பாடு பண்ணலாம்? இப்படி அபிப்பிராயம் இருக்கும் என்று அப்பா இப்போது தான் கூப்பிட்டுச் சொல்கிறார்” என்றாள் தாய் கவலையுடன். அவள் விசாரம் அவளுக்கு. என் பாட்டி சொல்லுவாள். “இந்தப் பெண்களே நன்றியற்றதுகள். ஆயிரம்பாடு அரும்பாடுபட்டு ஆளாக்கினவர்களிடம் ஒட்டாதுகள். வயிற்றுச் சோறு இல்லாவிட்டால் கூட அங்கே தான் ஒட்டும், அதுகளுக்கு” என்று. எத்தனை அநுபவபூர்வமான வார்த்தை? இத்தனை நாட்கள் அருமையுடன் வளர்ந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமே என்ற வருத்தமோ கவலையோ எனக்கு ஏற்படவில்லை. ‘அவருடன் போகப் போகிறோம்’ என்ற குதூகலம் பொங்கியது. ‘நேற்றுச் சொல்லாவிட்டால் என்ன? என்னிடம் பிரஸ்தாபித்தால் தாய் தந்தையரை விட்டு உடனே வரப் பயப்பட்டுப் பிடிவாதம் செய்வேனோ என்று கூடத் தோன்றி இருக்கலாம். என்னைப் பார்த்தால் அப்படி நினைக்கும்படி இருக்கிறேனோ என்னவோ! பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும்? இனிமேல் அவர் வீட்டவர்களைப் போல நானும் இருக்க முயல வேண்டும். எனக்கு அப்போதுதான் அங்கே மதிப்பு இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையுலகில் சஞ்சரித்தேன். சடங்குகள் யாவும் முடிந்த பிறகு அவர்கள் இறங்கியிருந்த இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சில மணி நேரமே நான் அங்கு இருந்தேன். அந்த வீட்டில் என் மாமியார் எதையும் ம்ன்னின்று செய்பவளாகத் தோன்றவில்லை. அவளுக்குச் சொந்த உடன் பிறந்தவன் மகள் தானாம் பெரிய மதனி. அந்த சலுகையிலேதான் அவ்வளவு உரிமை பெற்றுவிட்டாளோ என்று கூட நான் நினைத்தேன். குடும்பத்தையே அவள் தான் நிர்வகிப்பவள் போல் காட்டிக் கொண்டு, எல்லோரையும் அதிகாரம் செலுத்தும் முறையில் அங்கும் இங்கும் போய் வந்தாள். புறப்படுவதற்கு முன்பு விடைபெற்றுக் கொள்ள எங்கள் விடுதிக்கு எல்லோரும் வந்தார்கள். பெரியவளாக லட்சணமாகப் பெரிய மதனி, “கல்யாணம் நன்றாக நடத்தி விட்டீர்கள். எங்களுக்கெல்லாம் சந்தோஷம்” என்று உபசாரமாகக் கூறினாள். அக்காவும் அம்மாவும் ஓடி ஓடித் தாம்பூலம் வழங்கினார்கள். பின் அவள், “இனிமேல் ஆடி கீடின்னு அவன் வரமாட்டான். சீர் செனத்தியின்னு பாத்திரமாகவும் பண்டமாகவும் வாங்க வேண்டாம். அவனுக்கு வேஷ்டி அது இதுன்னு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு நகையாகச் செய்து போட்டாலும் ஒரு காரியமாக இருக்கும்” என்றாள் மெதுவாக. பாத்திரம் பண்டத்திலிருந்து நகை என்ற பெரிய வஸ்துவுக்கு அடி போடுகிறாள் என்ற எண்ணம் எனக்கு உறுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘எத்தனை பெருந்தன்மை! அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள்?’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே நான் வியந்து நின்றேன். என் தோளைத் தொட்டு அசக்கி, “ஊருக்குப் போறோம். கடுதாசி எழுது. அங்கு வரும் போது உடம்பு நன்றாக தேறி இருக்க வேண்டும். ரொம்ப பூஞ்சையாக இருக்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள். அவர்களுடன் அதே வண்டிக்குப் போகிற பேர்கள் எங்கள் வீட்டில் இருந்தனர். கூடம் முழுவதும், தாம்பூலம் வாங்கிக் கொள்வோரும், மூட்டை கட்டுவோருமாகப் பெண்கள் நிரம்பியிருந்தனர். ‘படக் படக்’ கென்ற வேஷ்டிச் சத்தம் என் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அத்தனை பெண்களுக்கும் மத்தியில் அவர் தாம் என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டு வந்தார். கூடத்துத் தூணின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற என் கையிலே சிறியதொரு நீளமான அட்டைப் பெட்டியைத் திணித்தார். சின்னக் குழந்தையிடம் சொல்வது போல என் கன்னத்தை லேசாகத் தட்டி, “போய் வரட்டுமா, சுசீ?” என்றார். குழுமியிருந்த அத்தனை பேர்களும் தங்கள் தங்கள் செயலை மறந்து பேசாமல் நின்றார்கள். அவர் அப்பால் சென்றாரோ இல்லையோ, வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு சிரித்தார்கள். என்னால் தலையே தூக்க முடியாதபடி அக்காவும் அம்மாமியும் கன்னத்தில் வந்து இடித்துக் கேலி செய்தார்கள். “என்னதுடி அது. அவ்வளவு அருமையாக அவர் கொடுத்த பொருள்? பார்த்துவிட்டுத் தரட்டுமாடி நான்?” என்று என் கையில் இருந்ததை ‘வெடுக்’கென்று பிடுங்கினாள் ஜகது. மதனி சிரித்துக் கொண்டே, “அவள் அண்ணா அவனுக்குப் ‘பிரஸன்ட்’ பண்ணினார் அதை. அவன் அவளுக்குக் கொடுத்து விட்டான்” என்றாள். “கடிதம் எழுதப் பேனா கொடுத்திருக்கிறார்” என்று ஜகது திறந்து பார்த்து முடிப்பதற்குள், “எங்கே! எங்கே?” என்று எல்லோரும் ஏதோ அதிசயத்தைக் கண்டது போல் முட்டி மோதிக் கொண்டார்கள். ‘பட்டிக்காட்டுத் தனத்தை இப்படிக் காண்பித்துக் கொள்கிறார்களே. ஊருக்குப் போய் இந்த ஜனங்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்களோ என்னவோ’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது எனக்கு. ஆகா! வாழ்விலே இந்த ஒரு நாள் என் போக்கிலேதான் என்ன மகத்தான மாறுதலைச் செய்து விட்டது! பதினாறு வருஷங்கள் இருந்து வளர்ந்த வீட்டிலிருந்தும் அன்புக்குரிய உறவினர்களிடமிருந்தும், தனியாளாகிவிட்ட நான், மலர்ச்சி எய்திவிட்ட புத்தம் புது மலரைப் போல ஒய்யாரத்துடனும் கர்வத்துடனும் தலை தூக்கி நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா? பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|