உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) தளிர் 1 நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக் கொண்டு பாண்டு வாத்தியக்காரர்களின் சப்த ஜாலங்கள் செவிகளில் வந்து பாய்ந்தன. ஊர்வலத்திற்குத் தயாராகக் கார் வந்தாகி விட்டதென்பது தெரியும்படி மூலை முடுக்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ‘நான் ஏறிக் கொள்ளப் போகிறேன்; நானும் நானும்’ என்று குதித்துக் கொண்டு வாயிற்புறம் ஓடினார்கள். முகூர்த்தத்தின் போது மடிதாறு வைத்து உடுத்திய கூறைப் புடவையின் கசங்கிய பாகங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு பெரிய அக்கா இன்னமும் பிரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்திலே அவளுடைய மூத்த பெண் சாமளி கீழே சாமான் அறையின் குப்பையும் தூசும் புடவையிலே படாதபடி அவள் பிரித்த பாகத்தை முகத்தைச் சிணுக்கி முணுமுணுத்தபடியே தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் முன்பாகக் காரில் போய் உட்கார முடியவில்லையே என்ற துக்கம் அவளுக்கு. பங்குனி மாதத்திய வெப்பமும் புழுக்கமும் நிரம்பிய அறையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சமும், முடமுடவென்று புது ஆடைகளும் எனக்கு வேர்த்துக் கொட்டியது. கசங்கிய மஞ்சள் பட்டிருந்த கைக்குட்டையால் முகப் ‘பவுடரும்’ குங்குமமும் கலந்து வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு பொம்மை போல் நின்ற நான், “போதுமே அக்கா! அப்படியே உடுத்தி விடேன்!” என்றேன் அலுப்புடன். “நன்றாகத்தான் இருக்கு! ஒரு நாள் கல்யாணத்திற்கு இந்தப் பாடு படுத்தறயே? நாங்களெல்லாம் அஞ்சு நாள் எப்படி இருந்திருப்போம்? ஊர்வலத்துக்கு இப்படி வெறும் பின்னலோடா இருப்போம்? தலையிலே இரண்டு ‘டன்’ கனம் அழுத்தும். கழுத்திலே காசுமாலை முள்ளுப்போல குத்தும். இருக்கிற நகை அவ்வளவையும் சுமந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டோமே! நலங்கின் போதே புடவை ஒரே சுருக்கமாக இருந்தது; நன்றாக இல்லை. இதோ ஆச்சு. சற்று இரு” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள் அவள். பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது. மாமா அறை வாயிற்படியில் நின்று கத்தினார். “இன்னுமா ஆகவில்லை? மாப்பிள்ளை தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் ஆரம்பித்தால் தான் தாமதமில்லாமல் முடியும்!” ஒரு வழியாகப் பதினெட்டு முழப் புடவையைக் கொசுவிக் கொசுவி என் பாவாடைக்குள் வைத்துத் திணித்தாள் அக்கா. கெட்டிச் சரிகைத் தலைப்புத் தோளில் ‘டங்’கென்று நின்று நகைகளுக்கு மேல் அழுத்தியது. பரக்கப் பரக்க ஒட்டியானத்தை மாட்டிவிட்டு மாலையைப் போட்டவள் என் முகத்தைக் கவனித்துவிட்டு, “நெற்றிக் குங்குமத்தை அழிச்சுண்டுட்டியேடி சுசீ. போய் முகத்தையே சட்டுனு அலம்பிண்டு வா. புடவையிலே தண்ணீர்படாமல்” என்று உத்தரவிட்டாள். “வேண்டாம், அக்கா. இப்படியே துடைத்துப் பொட்டு வைத்துக் கொண்டால் போதும். இப்பத்தான் சற்று முன்பு முகம் அலம்பினேன். கண்ணாடியை மட்டும் கொடு” என்றேன் நான். “கண்ணாடி எங்கே? அடியே சாமளி! சனியன் அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து பார். அவதானே வச்சு அழகு பாத்துண்டிருந்தா? சாமளி, சாமளி!” என்று அந்த இரைச்சலில் கத்திக் கொண்டே இடுப்பில் இருந்த கொத்துச் சாவி கிலுங் கிலுங்கென்று சப்திக்க அவள் வெளியே போனாள். அந்தக் கண்ணாடியை எத்தனை தரம் தேடியாகி விட்டது அம்மாடி! வீடு விட்டு வீடு வந்து கல்யாணம் என்றால் எத்தனை சிரமம்! வைத்த சாமான் வைத்த இடத்திலே இல்லை. மூலைக்கு ஒரு துணியும் மணியுமாக இறைந்தாலும் சமயத்திற்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டியதாக அவ்வளவு அமளி துமளியாக இருந்தது. அக்கா கண்ணாடி கொண்டு வரவில்லை. மாமா மறுபடியும் வந்து விட்டார். “இன்னும் என்ன? அதற்குள்ளேயே மாப்பிள்ளையை இப்படியாக் காக்க வைப்பது, சுசீ?” என்று பேச்சோடு கேலியையும் கலந்து துரிதப்படுத்தினார். “இல்லையே! நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி. கண்ணாடியைக் காணோம்” என்றேன். “சரி தான் போ. இப்போதுதான் கண்ணாடியைக் காணோம், மூக்காடியைக் காணோம் என்று தேடுகிறீர்களா? தங்கம் எங்கே? அடியே தங்கம்!” என்று கத்திக் கொண்டு அவரும் போனார். நல்ல ஊர்வலம் வேண்டியிருக்கிறது! சரியான ஆகாரம் இல்லை; தூக்கம் இல்லை. ‘அம்மாடி’ என்று காலை நீட்டிக் கொண்டு எனக்குப் படுத்துத் தூங்கலாம் போல உடம்பு கெஞ்சியது. அப்போது, “இன்னம் புறப்படவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே காந்த விளக்கின் ஒளியில் வைர அணிகள் டாலடிக்க அசக்கி அசக்கி நடந்து வந்த என் ஓரகத்தி புன்னகை பூத்தாள். “இதோ ஆச்சு” என்று அதற்குள் ஓட்டமும் நடையுமாக வந்த அக்கா, “கண்ணாடி எங்க போச்சோ? நான் இட்டு விடுகிறேன்” என்று என் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தாள். பரபரப்பில் அவள் முறுக்கிய கொண்டையிலிருந்து ஊசி நழுவியது. புடைவைக் கொசுவம் இழித்து கிழே புரண்டது. எனக்கு அவள் நிலை சிரிப்பை ஊட்டியது. “ஆகட்டும், ஆகட்டும்!” என்று மாமா பராக் சொல்ல என்னைக் கிளப்பி வரும் பெருமைத் தோற்றத்துடன் ஓரகத்தி என் தோளைப் பிடித்துக் கொண்டு நடக்க, நான் ‘தஸ் புஸ்’ என்று புடவை செய்த சத்தத்துடன், வாயிற்புறம் வந்தேன். தயாராகப் பன்னீர்ச் செம்பு வைத்துக் கொண்டு நின்ற வெங்கிட்டு அத்தான் “தூங்கி விழுந்து விடாதே அவர் மேல்!” என்று சிரித்தபடியே என் மேல் பன்னீரைத் தெளித்தான். அத்தனை புருஷர்களுக்கு நடுவே அவன் செய்த கேலிக்குத் தலை குனிந்த நான் வாசல் கம்பத்திலே லேசாகச் சாய்ந்து நின்றேன். “இன்னும் நிற்பானேன்? வா, வா” என்று பெரிய அத்திம்பேர் அவசரப்படுத்தியதற்கு வெங்கிட்டு, “அட மக்கு அத்திம்பேரே! அவர் வந்து கையைப் பிடித்து அழைத்துப் போக வேண்டாமா?” என்று கூறி இடி இடியென்று நகைத்தான். உடனே என் ஓரகத்தி, “என்ன ராமு, அங்கேயே நிற்கிறாயே; வந்து கையைப் பிடித்து அழைத்துப் போ!” என்றாள். காஸ் விளக்கின் அடியில் ‘ட்வீட்’ நிஜாரும் ‘கோட்டு’மாக மாலைக் கழுத்துடன் நின்ற என் கணவர் ஜோட்டுக் கால்கள் சத்தம் செய்ய என் அருகில் வந்த போது முகத்திலே புன்னகை அரும்பியது. என் கண்களுக்குப் புதுமையாக இருந்த அவருடைய அந்தக் கோலம் எனக்கு மனத்தில் பிடித்திருந்த அலுப்பை அகற்றிப் புத்துணர்ச்சி ஊட்டியது. சில்லென நான் உணர்ந்த அவரது வலிமை பொருந்திய கரத்துள் பஞ்சு போன்ற என் கை அடங்கி விட்ட போது, ‘ஆணுக்குப் பெண் அடங்கியவள் தான்’ என்று அறிவித்தது போல் இருந்தது. மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டும் கணக்காக இடம் ஒதுக்கிவிட்டு, காரின் மற்ற உட்காரும் பாகங்களில் நிரம்பியிருந்த குஞ்சு குழந்தைகளை மேற்பார்வை பார்க்கும் தோரணையில் நின்றான் அம்மாஞ்சி சுப்பிரமணியன். என் புடவையின் தலைப்பு அவர் மேல் லேசாக உராய, நான் அவர் அருகிலே அமர்ந்தேன். மேல் மூடி அகற்றி மடக்கி விடப்பட்டிருந்த அந்தப் பழைய கார் ‘கர்... புர்ர்...’ என்று உறுமிக் கொண்டு புங்கனூர் வீதிகளை வலம் வரத் தொடங்கியது. அப்பாடா! கடைசியில் ஊர்வலம் ஆரம்பமாகி விட்டது! இதற்குத் தான் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன! என் கல்யாணப் பிரச்னை கூட அப்பாவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. இந்த ஊர்வலப் பிரச்னை எங்கள் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அப்பாவின் கோப தாபம், அம்மாவின் பட்டினி, கண்ணீர் எல்லாவற்றையும் கிளப்பி வைத்த தனிப் பெருமை இந்த ஊர்வலத்துக்கு உண்டு. விவாகம் நிச்சயமானவுடனேயே அம்மா, “கார் ஏற்பாடு செய்து விட்டீர்களா, மாப்பிள்ளை அழைப்புக்கும் ஊர்வலத்துக்கும்?” என்று கேட்டாள். அப்பா அழுத்தம் திருத்தமாக, “சுசி கல்யாணத்திற்கு ஊர்வலம் கிடையாது. ஆமாம், நிச்சயம் பண்ணி விட்டேன். மடப்பயல்! மாப்பிள்ளை அழைப்புக்கும் மறுநாளைய ஊர்வலத்துக்குமாக இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான். ஓர் ஓட்டைக் காரை வைத்துக் கொண்டு” என்றது அம்மாவைத் தூக்கிவாரிப் போட்டு விட்டது. “நீங்க சொல்வது நன்றாக இருக்கே! ஆனால் மாப்பிள்ளை அழைக்க வேண்டாமா? பணம் அதிகமாகக் கேட்குறான்னு செய்ய வேண்டிய காரியத்தை நிறுத்தினால் நாலு பேர் என்ன சொல்ல மாட்டார்கள்? கேட்கிறவர்கள் சிரிக்கப் போகிறார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்டு” என்றாள் அவள். “மாப்பிள்ளை வேண்டுமானால் பன்னிரண்டு ரூபாய் தொலைகிறது என்று அழைத்து விட்டுப் போகிறேன். ஊர்வலம் வைக்க வேணும் என்று சாஸ்திரம் கண்டிப்பாகக் கிடையாது. அயோக்கியப் பயல்! இதுதான் சமயம் என்று வாய் கூசாமல் கேட்கிறான்!” என்று அவர் இரைந்தார். இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் சுளையாக வரதட்சிணை கொடுத்து விட்டு, மேலே கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் போது ஏற்கனவே இரு பெண்களுக்கு விவாகம் செய்வித்து வற்றி வறண்ட எலுமிச்சம் பழத்தோல் போன்ற ஏழை குமஸ்தாவாகிய அவருக்கு ஊர்வலத்துக்கு இருபத்தைந்து ரூபாயாகும் என்றதும் கோபம் வராமல் என்ன செய்யும்? ஆகவே அவர் சல்லிக்குச் சல்லி கணக்குப் போட்டு இதில் சிக்கனம் செய்யலாமா, அதில் மீதம் பிடிக்கலாமா என்று ஆராய்ந்தார். அம்மாவுக்கோ கூடிய வரை எதிலும் மூளி வைக்கக் கூடாது என்று அவா. “ஒரு பெரிய விசேஷமானால் கூட நூறு இருநூறு செலவழியத்தான் செய்யும்? அதற்கு இப்படியா கணக்குப் பார்ப்பா? நம்ம தரித்திரம் இருக்கவே இருக்கு. ஊர்வலம் இல்லாமல் என்ன கல்யாணம்? உங்களிடம் கொண்டு வந்து ஈசுவரன் இப்படி என்னைப் பிணைத்து வைத்தானே? ஏறு என்றால் மாறு என்று கொண்டு!” என்று அவள் தன் வழக்கமான அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து அப்பாவை ஊர்வலம் விடச் சம்மதிக்க வைத்ததை எழுதினாலே தனிப்பெரும் புராணமாக ஆகிவிடும். குழந்தை குஞ்சுகளுடன் எங்களையும் சுமக்க மாட்டாமல் மூச்சுத் திணறுவது போல் சப்தம் செய்து கொண்டு கார் மெதுவாக ஊர்ந்தது. பின்னே பெண்கள் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு வந்தது எங்கள் காதிலே விழாதபடி மாமா ஏற்பாடு செய்திருந்த அந்தப் பாண்டு வாத்திய கோஷ்டி சினிமா கீதங்களை அள்ளி அள்ளி வீசியது. தூங்கி விழுந்த குழந்தை ஒன்று என் காலிலே சாய்ந்தது. இரவிலே வானத்து நட்சத்திரங்களைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற ஆசை உண்டு. என் வாழ்க்கை ஆறு, முக்கியமான கட்டம் ஒன்றில் வந்திருக்கும் இன்று, வான வீதியைப் பார்க்கத் திடீரென ஆசை தோன்றியது. அதனுடனே வானவீதி ஒளி பெற்றிருந்தால் நம் வாழ்வும் அது போல ஒளிவிடும் என்ற அர்த்தமற்ற அசட்டு நம்பிக்கை கூட என்னுள்ளே முன்பின் நான் அறியாமலே எழுந்து விட்டது. இந்த எண்ணம் திடீரென எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது என்று காரணம் கூற முடியாது. மனக்குதிரை கடிவாளமின்றி ஓடும் போது தனக்குத்தானே இத்தகைய எண்ணங்களில் சபலமுற்று நின்று முரண் செய்வதுண்டு. வானத்து ஒளிக்கும் வாழ்க்கையின் ஒளிர்வுக்கும் என்ன சம்பந்தம். இது என்ன முட்டள் நினைப்பு என்று எனக்கு அப்போது சிறிதேனும் மனத்திலே உறைக்கவில்லை. எப்படி உறைக்கும்? வாயிற் படியில் தலையை அவிழ்த்துக் கொண்டு நிற்கலாகாது. தும்மும் போது எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கலாகாது என்பன போன்ற கொள்கைகளூடே பக்குவம் பெற்ற கிராம மங்கைதானே நான்? ஆனால் மனப்பெண்ணின் மீதே எல்லார் கவனமும் இருக்கும் போது, கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்கலாமா நான்? ஏற்கனவே அம்மாவும் அத்தையும், “குனிஞ்சு உட்கார், சுசி. கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் அங்கும் இங்கும் இப்படியா திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள்?” என்று கோபித்துக் கொள்கிறார்கள். கழுத்து வலி பொறுக்காமல் என்னையும் அறியாமல் மாலை சற்று நிமிர்ந்து விட்டேன் போல் இருக்கிறது. தங்கம் என்னையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். மளுக்கென்று என் தலையைப் பிடித்து குனிய வைத்த போது எனக்குக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளாமல் இருந்தது நல்ல காலந்தான். அதைப் பார்த்து என் பெரிய ஓரகத்தி வேறு சிரித்தாள். ‘பாவம்’ என்று என் நிலையை நினைத்து நகைத்தாளா, அல்லது எனக்கு மணப்பெண்ணாக இருக்கத் தெரியவில்லை என்று நகைத்தாளா என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. புங்கனூர் வீதியின் பள்ளம் ஒன்றில் அறியாமல் வண்டி விழுந்து விட்டது போலும். திடீரென ஏற்பட்ட குலுக்கல் என்னை அவர் மேல் சாய வைத்தது. பக்கத்திலே பன்னீர்ச் செம்பு சகிதம் நெருங்கி வந்து கொண்டிருந்த வெங்கிட்டு ஒரேயடியாகச் சத்தம் போட்டு நகைத்தான். எனக்கு முகமெல்லாம் ரத்தம் ஏறிவிட்டது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு சரியாக உட்கார்ந்தேன். “மாப்பிள்ளை ஸார், எங்கள் சுசி பஞ்சுக் கனங்கூட இல்லாதவள், பார்த்தீர்களா? வண்டியின் குலுக்கலில் அசைந்து விழுந்து விடாதபடி அவளை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் அந்தக் குறும்புக்காரன். அவரும் புன்னகை செய்த வண்ணம் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். நானோ குனிந்த தலை நிமிராமல் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்குள் பின்னே திரும்பிய மாமா, “டேய் வெங்கிட்டு, சுத்த முட்டாளாக ஏண்டா காரைச் சுத்திச் சுத்தி வரே? இப்படி வா. அவர்கள் ஏதாவது பேசுவதாக இருந்தாலும் இடைஞ்சல் செய்து கொண்டு?” என்று கத்தினார். அவன் தலை தெறிக்க ஓடினான். விவரம் புரியாத ஓர் உணர்ச்சி என் நெஞ்சைப் படபடக்க வைத்தது. அது சந்தோஷமா, பயமா, கோபமா என்று என்னாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கை எப்படி என் மடிமீதிருந்த கையை எடுத்துக் கொண்டதென்று நான் அறியவில்லை. என் உள்ளங்கையை ஓர் அழுத்து அழுத்தி, “சுசீ!” என்று அவர் என் காதுகளில் மட்டும் படும்படியாகக் கூப்பிட்ட போது திறந்திருந்த என் மனத்திரை காற்றிலே அடித்துக் கொள்ளும் ஜன்னல் திரை போல வேகமாகச் சத்தம் செய்தது. பக்கத்து வீட்டு ஜானி என்னிடம் கூறியவை எல்லாம் திறந்துவிட்ட குழாயிலிருந்து கொட்டுவது போல என் நினைவில் வந்து நிரம்பின. ஜானி என்னை விட இரண்டு வயசு பெரியவள். அவளுக்குச் சென்ற வருஷந்தான் மணம் நிகழ்ந்தது. மனத்திலே குமிழியிடும் மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும் அவளுடைய ‘அவர்’ முதல் முதலிலே எப்படி அவளிடம் பேசிப் பழகினார் என்ற இன்ப நிகழ்ச்சிகளை என்னிடம் அவள் கூறிய போது எனக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லைதான். இப்போது...? அவர் கூப்பிட்ட குரலுக்கு எப்படிப் பதில் கூறுவது? என்ன கூறுவது? ஆனாலும் ஜானி சொல்வது போல, இந்தப் புருஷர்களுக்கே அசாத்திய துணிச்சல் தான். எனக்கு நாக்கு எழும்பவில்லை. கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டேன். “மிகவும் புழுக்கமாயிருக்கிறதில்லை?” என்றார் அவர், அடுத்த படியாக. தலையை அசைக்காமலேயே நான் “ஊம்” என்றேன். “கூப்பிட்டால் பதில் சொல்ல மாட்டாயோ என்று பயந்தேன். ஆமாம், இன்று முழுவதும் நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே; களைப்பாக இருக்காதா? அசடு போல் இப்படியா கூச்சப்படுவது?” என்றார் உரிமையுடன். இந்த அரை நாளில் அவர் என்னிடம் எத்தனை சுதந்திரம் கொண்டாட ஆரம்பித்து விட்டார். விருந்தும் உபசாரமும் திருமண வைபவத்தில் ஏகமாக நடக்கின்றன. ஆனால் மணப்பெண்ணைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்டப் பட்டினி தான். முன்னே அறிமுகம் இல்லாத புது மனிதனுடன் உட்கார வைத்து கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் கூச்சலும் கேலியுமாக ரகளை பண்ண, விருந்து செய்கிறார்களாம் விருந்து! நான் அன்று இலையையே தொடவில்லை. காபி காபி என்று அதைக் குடித்தே வயிற்றை நிரப்பி இருந்தேன். அதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார். “உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?” என்றார் பின்னும்; விடமாட்டார் போல் இருக்கிறதே! ‘இல்லை’ என்ற உண்மையைச் சொல்லாமல் அதற்கும் “ஊம்” என்றேன். “ரொம்பவும் வெட்கப்படுகிறாயே, சுசீ; எங்கள் வீட்டில் மன்னி எல்லோரும் எப்படி சகஜமாகப் பழகுகிறார்கள், பார்த்தாயா? அப்படி நீயும் இருக்க வேண்டும். ஆண்பிள்ளையைக் கண்டுவிட்டாலே வாரிச் சுருட்டிக் கொண்டு சமையலறைக்குள் ஓடும் பெண்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது” என்று முதலிலேயே அவர் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்த போது நான் பூரித்துப் போனேன். அப்பா முதல் நாளே வந்து சொன்னார். “சுசியகத்தில் எல்லோரும் மிகவும் நாகரிகமாகப் பழகுகிறார்கள். மைத்துனருடன் பேசக்கூடாது, மாமனாரைக் கண்டால் எழுந்து ஓட வேண்டும் என்ற தொந்தரவெல்லாம் அவளுக்கு இருக்காது. இன்று மத்தியான்னம் அவளுடைய ஓர்ப்படிகள் சரிக்குச் சமமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாளை நம் சுசீலாவும் அப்படித்தான் இருப்பாள்” என்றார் என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டே. அப்போது எனக்கு எத்தனை பெருமையாக இருந்தது! பாவம் என் சின்னக்கா ஜகதுவுக்குப் பொறாமையாகக் கூட இருந்திருக்கும். படு கர்நாடகமான பட்டிக்காட்டில் அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள். மூன்றாம் தடவையாக அவர் கோரிக்கைக்கு நான் ‘ஊம்’ கொட்டினேன். என் கையைக் கொஞ்சம் பலமாக அழுத்தி அவர் “சுசீலா நீ எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் தெரியுமா? அன்றைக்கு நீ பாடினாயே அதை என் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது. பெண் பார்க்க என்று நான் என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தரந்தான் வந்தேன். அப்போதே நீதான் எனக்காகப் பிறந்திருப்பவளென்று தீர்மானித்து விட்டேன்” என்றார். இந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த போது இருதயந்தான் எப்படி விம்மியது? நான் இனிமையாகப் பாடுகிறேன் என்று எத்தனையோ பேர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர் சொல்லும் போது என் மனக்கிண்ணம் அட்சய பாத்திரம் போலப் பொங்கிப் பொங்கிப் பெருகுவானேன்? அவர் என்னைப் பார்க்க வந்த போது பாடுவதற்குப் பாட்டு அம்மாமி தான் பொறுக்கித் தந்தாள். ‘மனமுவந்தருள் செய்யத் தாமதமேனோ’ என்று துவங்கும் அந்தப் பாட்டை நான் பாடமாட்டேன் என்று தான் மறுத்தேன். “சொன்னால் கேட்க வேண்டும்” என்று அம்மாவும் சேர்ந்து கடிந்து கொண்ட போது விளையாட்டுப் போல அதைப் பாடி விட்டேன். அதைக் குறித்து வைத்துக் கொண்டு இப்போது கேட்கிறாரே, பொல்லாத மனிதர்! பாட்டையும் பாடச் சொல்லிவிட்டுக் கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து அம்மாமி என்னைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தாள். நானே வேண்டுமென்று அந்தப் பாட்டைப் பாடியதாக அவர் நினைத்திருப்பதை அறிந்து அளவற்ற மகிழ்வெய்தினேன். “என்னையும் முதல் முறையாகப் பார்க்க வந்தவர் நீங்கள் தாம்” என்று கூற மனம் துடித்தது. ஆனால் கூச்சம் தடுத்தது. “என்ன ராமு? ஒரு நாழிகையாகப் பேச்சு வெளுத்து வாங்குகிறாயா! ஊம், ஊம் என்று அவள் எத்தனை ஊம் கொட்டுகிறாள்?” என்று சிரித்துக் கொண்டே என் பெரிய ஓரகத்தி காரின் பக்கமாக வந்து குரல் கொடுத்தாள். நான் இந்த உலக சிந்தனைக்கு வந்தேன். அவருக்குத்தான் எத்தனை துணிச்சல்! “ஒன்றும் பிரயோசனம் இல்லை, மன்னி. ஊம் ஊம் என்பதைத் தவிர வேறு வார்த்தையே வெளியே வரமாட்டேன் என்கிறது!” என்றார் என்னைத் திரும்பிப் பார்த்து நகைத்துக் கொண்டே. நான் ஊம் கொட்டினதை அவர் மூலமே அவள் தெரிந்து கொண்டு விட்டதை அறிந்ததும் வெட்கம் என் முகத்தில் சூடேற்றியது. சுமாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவள், தலையை மறுபடியும் கவிழ்த்துக் கொண்டேன். அவர் இப்போது முன்னே சென்ற என் மைத்துனரையும், அருகே வந்த ஓரகத்தியையும் பார்த்தேன். அப்போது ‘உங்களுக்கு எல்லோரும் எப்படி எப்படி உறவோ அப்படித்தான் இனி எனக்கும் உங்களுக்கு மரியாதைக்கு உரியவர்கள் எனக்கும் அளவில்லாத மரியாதைக்கு உரியவர்கள்!’ என்று என் மனம் கற்பித்துக் கொண்டபடியே சொல்ல வார்த்தைகள் மேலுக்கு வந்தன. ஆனால் அந்தப் பாழும் சங்கோசம் உள்ளுக்கு இழுத்துக் கொண்டது. ஆம், அவர் குரலில் அவர் விருப்பம் அப்படி இருப்பதாக எனக்குத் தொனித்தது. என்னையே கவனித்துக் கொண்டிருந்த மன்னி, “நம் வீட்டுக்கு வந்து நாலு நாள் ஆகிவிட்டால் நீ போதும் போதும் என்று முறையிடும்படி பேசிவாள். ஏன் அம்மா சுசிலா? அவன் முதலிலேயே புகார் பண்ணும்படியா நடப்பது?” என்று முறுவலித்தாள். என்னை அறியாமலேயே என் இதழ்கள் அவளைப் பார்த்து மலர்ந்தன. அந்தக் கணத்தில் நான் வண்ண மலர் வாசம் சூழும் உலகம் எதிலோ கவலையற்றுச் சஞ்சரிப்பதாக உணர்ந்தேன். என்னை விட பாக்கியசாலி யாருமே உலகத்தில் இருக்க முடியாது என்று எண்ணினேன். சிறு வயசிலேயே தந்தையை இழந்திருந்த என் கணவர், பெரிய தமையன் மதனி இவர்களுடைய அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர் என்றும் தற்போதும் அவர்களுடனேதான் இருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். எனவே அவர்களைத் தாய் தந்தையர் போலப் பாவிப்பது இயல்புதானே? அவர் மூலமாக இந்தச் சொற்கள் வந்த பிறகு மதனி என் கண்ணுக்கு அன்புருவாகத் தென்பட்டாள். அவர் மலர் முகமும் அகலக் குங்குமப் பொட்டும் என் மனத்தில் உயிர் பெற்று நான் அவளுடன் அன்பால் பிணைந்து வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்ற நினைப்பை எழுப்பி என்னைக் குளிர வைத்தன. இப்படி எந்தப் பெண்ணுக்காவது புக்ககம் வாய்க்குமா? சின்ன அக்கா ஜகது இருக்கிறாளே, அவள் மாமனார் மாமியார் எதிரில் இன்னமும் அத்திம்பேருடன் பேசமாட்டாள். முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இவ்வளவு சகஜமாக மதனியை வைத்துக் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுக்கிறாரே! சந்தேகமில்லாமல் நான் கொடுத்து வைத்தவள் தான். கிடைத்தற்கரிய கணவனுடன் நல்ல புக்கமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் வாழ்வு ஒளி பெற்று விட்டது. இனிமேல் மலர்ந்து மணம் வீசும். ‘டுடும் டுடும் டுடு’ என்று பாண்டு கோஷ்டி ஓய்ந்து தவில் முழங்கியது. நான் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! தெருக்கள் கடந்து நாங்கள் திரும்பவும் கல்யாணப் பந்தலைச் சமீபித்து விட்டோம்! அதற்குள்ளா முடிந்து விட்டது? இவ்வளவு சீக்கிரமா? அடடா! இது போலச் சந்தோஷம் இனி வருமா? ‘ஊர்வலம் நிச்சயம் விட வேண்டும்’ என்று அம்மா சொன்னாளே, என்று பல எண்ணங்கள் என் மனத்தைச் சங்கிலி போல் தொடர்ந்தன. காரிலே ஏறுமுன் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தூரம் இப்போது வெகுவாகக் குறுகி நான் அவருடன் மிகவும் நெருங்கி விட்டது போலவும், பந்தப் பிணைப்பு என்னை அவருடன் நன்றாக இறுக்கி விட்டது போலவும் எனக்குத் தோன்றியது. திறந்து கிடந்த என் சிந்தனைக் கதவு அவரை உள்ளே குடியேற்றிவிட்டு வேறு ஏதும் உள்ளே புகாதபடி தாழிட்டுக் கொண்டு விட்டது. ஐந்தாறு வார்த்தைகள் தாம். ஆனாலும் முதன்முதலாக அவரிடமிருந்து வந்த அவை என் நெஞ்சைக் கவர்ந்து விட்டன. கார் நின்றது. தூங்கி விழுந்த குழந்தைகளைச் சொந்தக்காரர்கள் எடுத்துக் கொண்ட பின் தான் எங்களுக்கு இறங்க வழி கிடைத்தது. இறங்கும் போது சட்டென்று ஞாபகத்தில் தூண்டப் பெற்றவளாக நான் வானவெளியை அண்ணாந்து பார்த்தேன். என் நெஞ்சம் துணுக்குற்றது. கண்கள் இருண்டு வரும் போல இருந்தன. ஒரு நட்சத்திரத்தைக் கூடக் காணவில்லை. இரண்டு தினங்கள் சென்றால் பௌர்ணமி. இருந்தும் சந்திரனின் சுவடே தெரியாதபடி நாற்புறமும் கருமேகங்கள் குமுறிக் கொண்டிருந்தன. “உம், கையைக் கோத்துக் கொண்டு பந்தலுக்குள் வாருங்கள்” என்ற அம்மாவின் உத்தரவும் என் கணவர் என் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு பந்தலுக்குள் நுழைந்ததும் எனக்குக் கனவிலே நடப்பது போல் இருந்தன. “கிடு கிடு கிடா டமா...” என்று இடி முழங்கியது. “நல்லவேளை! மழைக்கு முன் வந்து விட்டோம். பெரிய மழை வரும் போல் இருக்கிறது” என்றார் என் மைத்துனர். ஜோடனை செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் நாங்கள் உட்கார்ந்தோம். “நம் வீட்டுப் பெண்கள் கல்யாணம் என்றாலே மழை வராமல் இருக்காதே” என்று அம்மா முணுமுணுத்தது என் காதில் விழுந்தது. இடி, மின்னல் ஏன் இன்று எல்லாம் வர வேண்டும்? நான் முன்பு நினைத்தபடி இவை என் வருங்காலத்தின் சூசகமா. சே! அதெல்லாம் ஒன்றும் வராது. சற்று முன் நடந்த நிகழ்ச்சி, இன்னும் சற்று நேரம் நீடிக்காதா என்று எனக்கு ஆசையூட்டிய நிகழ்ச்சி, கொஞ்சமும் மங்காத புத்தம் புதிய அந்த இன்ப நிகழ்ச்சி, என் கலக்கத்தினூடே மழையிடையே வெயில் போலப் பிரகாசித்தது. மழை வராதா? அது ஒரு தப்பா? ஜகது கல்யாணத்தில் மழை பெய்தது ஏன்? ஜானி கல்யாணத்தின் போது கூடத்தான் சாயங்காலம் கொட்டுக் கொட்டென்று கொட்டியது. அதனாலேயே மறுநாள் ஊர்வலம் விட்டார்கள். இதற்கும் என் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? யாரோ தூங்கி விழுந்த குரலில் பாடினார்கள். நான் என் மனத்தை இழுத்து அந்தப் பாட்டில் செலுத்தினேன். படீர் படீர் என்று என் நெஞ்சில் யாரோ குத்துவது போல் வேதனை ஊட்டும்படி, “கண் குளிரக் காண்பதெல்லாம் கனவாகி” என்று வார்த்தைகள் சுழன்று சுழன்று ஒலித்தது. நான் கண்பதெல்லாம் பொய்யா? நிஜமாக என் வருங்காலம் இன்றைய பொலிவோடு நிகழாதா? மீண்டும் பயங்கரமாக இடி முழங்கியது. தொடர்ந்து மின்னல் ஒன்று வெட்டியது. “பொய்! பொய்! பொய்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் என்னுள் கூச்சலிட்டன. கண்கள் நிலை நிற்காமல் சுழலுவன போல் இருந்தன. என் தலையே தரித்து நிற்க முடியாமல் இருப்பதை உணர்ந்தேன். நெஞ்சில் ஏதோ தடை கட்டியது. என்னையும் அறியாமல் ஊஞ்சற் சங்கிலியில் சாயப்போன எனக்கு அந்த நிலையிலும் கடபுடவென்று மழை விழுந்த சப்தம் கேட்டது. அவ்வளவு தான். வேறு ஏதும் எனக்கு நினைவு இருக்கவில்லை. பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|