இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Prabhakaran Kannaiyan (18-10-2019)
மொத்த உறுப்பினர்கள் - 286
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

5. போரில் போர்

     ‘செக்கச் செவேல்’ எனத் தோன்றியது மேல்வான மெங்கும். சூரியனின் தோற்றம் மறைந்த பின்பும் அவனுடைய ‘கோப ஜ்வாலை’ என்று சொல்லும்படி மேல் வானத்தின் கீழிடம் செவ்வொளி பரவியிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டவண்ணம் மாளிகையின் மேல் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள் மருதி. அவள் அந்தக் காட்சியைக் கண்டு திகில் கொண்டாள். ‘இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் போர்க் களத்தின்’ நினைவே அவளுக்கு அப்போது எழுந்தது. அடுத்த கணமே, அந்தப் போர்க் களத்தில் தன் காதலன் அத்தி வாளும் வேலும் கொண்டு வீர நர்த்தனம் செய்வதாகக் கற்பனை செய்தாள்! அவள் செய்த கற்பனை அவள் உள்ளத்தைத் திடுக்கிடச் செய்தது. ‘ஐயோ! போருக்குப் போய், வரலாம் என்று சொல்லிவிட்டேனே! என்ன ஆகுமோ!’ என்று கலங்கினாள்; கலங்கிய சிந்தையோடு, செவ்வானத்தின் காட்சியைக் கண்டு நின்ற அவள் செவிகளில், ‘கடக்கடக்’ என்ற முழக்கம் கேட்டுச் சட்டென்று அம்முழக்கம் நின்றது. அவள் பார்வையும் சட்டென்று கீழே வீதிப் புறம் சென்றது. அத்தி குதிரையிலிருந்து கீழே இறங்குவதைக் கண்டாள்; ஓடினாள். வரவேற்றாள்.

     வாயில் கதவைத் தாழ் நீக்கித் திறந்தாள்; காதலனை அள்ளிக் கொள்ளும் ஆர்வத்தோடு வரவேற்றாள், அத்தி மௌனமாக அவளை அணைத்துக் கொண்டு மாளிகைக்குள் புகுந்தான்; அதே சமயம் வீதியிலே போர்ப்பறை முழங்குவதைக் கேட்டு மருதி திடுக்கிட்டவாறே அத்தியுடன் உள்ளே சென்றாள்.

     “இதென்ன போர்ப்பறை!...” என்று கேட்டுக் கொண்டே அத்தியின் முகத்தை உற்று நோக்கினாள்.

     “இன்று இரவில் நிலாப் பொழுதிலேயே போருக்கும். புறப்பட்டாக வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தன் ஆயுதங்கள் இருக்கும் அறைக்குள் புகுந்தான்; மருதிக்கு மிகவும் மனம் அல்லலுற்றது. அத்தி, இரும்புக் கவசங்களை எடுத்து அணிந்து கொண்டான். வயிர வாள் ஒன்றை எடுத்து அரைக் கச்சில் செருகிக் கட்டிக் கொண்டான். தோளில் அம்புப் புட்டிலையும் வில்லையும் கட்டிக் கொண்டான். வெற்றி வேலைக் கையில் எடுத்துக் கொண்டான். அதன் பின்பே மருதியை நிமிர்ந்து பார்த்தான்.

     “என்ன இது?” - மருதி கேட்டுக்கொண்டே நிலையாக நின்றாள்.

     “போருக்குப் புறப்படுகிறேன்! மருதி; உன் விரும்பத்தைப் பெற்ற பின்புதான்...”

     “இப்போதே ஏன் இந்தக் கோலம்? இவ்வளவு விரைவிலா?” - மருதியை அனைத்துக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான்.

     “மருதி, போருக்குப் புறப்பட்டுவிட்டேன்; இனி எந்தக் காரணத்தாலும் தங்கமுடியாது. பெரும் போர் நடக்கப் போகிறது. வெற்றியும் தோல்வியும் நிச்சயம் சொல்ல முடியாது. எவ்வளவு நாட்கள் போர் நடக்குமோ! அதுவும் சொல்ல முடியாது. திருப்போர்ப் புறத்தில் போர் தொடங்க வேண்டுமாம். எங்கெல்லாம் போகவேண்டுமோ தெரியவில்லை. உறையூரை முற்றுகையிடவேண்டும் என்றுகூட அரசன் கருதுகிறான். ஒன்றும் உறுதி இல்லை. இன்று போருக்குப் புறப்படவேண்டும்! அவ்வளவுதான்!-”

     “அப்படியானால் எப்போது திரும்பி வருவீர்கள் என்று சொல்ல முடியாதா? நாட்களை எண்ணிக் கொண்டாவது காலங் கழித்தால், குறிப்பிட்ட தினத்தில் பார்க்கலாம் என்று நினைத்தேனே! காலவரையறையின்றி நான் ஏங்கிக் கிடக்க வேண்டுமா? அது எப்படி முடியும் ஐயனே!” - மருதியின் கண்களில் நீர் துளும்பியது.

     “போருக்குப் போனல் அது எப்போது முடியுமோ? ஆனால் மருதி, உன் நினைவு எழுந்தால் உடனே திரும்பி விடுகிறேன்; நான் எந்த நிலையில் இருந்தாலும்-”

     “ஐயனே, அது முடியாத காரியம்! போர்க்களத்தில் புகுந்த பின்பு என் நினைவு தங்களுக்கு வராது! அப்படி என் நினைவோடு தாங்கள் போர் செய்வதென்றால் வெற்றி கிட்டாது என்பதை இப்போதே சொல்கிறேன்.”

     “மருதி, உன் மனதில் உறுதிக்கே இடமில்லையா? பெண் பீதியால் கணத்துக்குக் கணம் மாறி மாறிப் பேசு கிறாயே! இதோ பார், வெற்றி கிட்டுமானால் நாம் இங்கேயே சந்திப்போம். தோல்வி ஏற்படுமானால் உன்னை இங்கே காண நான் வர முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள். சோழனுக்கு வெற்றியானால் நம் சந்திப்பு தொண்டி நகரத்தில்தான். இந்நகர் அடுத்த கணமே சோழன் கீழ் அகப்படும். நான் நகருக்குள் புகுந்தால் அவன் கையில் அகப்பட்டு மடிய வேண்டியது தான்! சேரன் படைக்குத் தோல்வி என்பது உனக்குத் தெரிந்து விட்டால், விரைவில் விடங்கியாருடன் இந் நகரைவிட்டு வெளியேறித் தொண்டி நகருக்கு போய்விடு. நான் அங்கே வந்து விடுவேன். வெற்றியானல் நம் கண்கள் இதே இடத்தில் சந்திக்கும். விரைவிலேயே உன்னைச் சந்திப்பேன்; கவலையின்றி இரு! அதோ, நிலவும் புறப்பட்டது. மன்னன் என் வரவுக்காகக் காத் திருப்பான். இனி காலம் தாழ்த்துவது நேரல்ல...” என்று கூறி, மருதியின் கன்னங்களைச் சிவக்கச் செய்தான் தன் வாயிதழ்களால்.

     “நம் சந்திப்பு இங்கேயே கிட்டும்படி இறைவனை வேண்டுகிறேன்! அதோ ஆடக மாடத்துக் கோயிலின் மணியொலி கேட்கின்றது! போய் வருக, வெற்றியுடன்” என்று தழுவிக் கொண்டாள் மருதி.

     “விடங்கி! விடங்கி” என்று அழைத்தான் அத்தி.

     முதிய கிழவி ஒருத்தி உள்ளிருந்து அங்கே வந்தாள். அத்தியைப் புன்முறுவலோடு பார்த்தாள். மருதியை எடுத்து வளர்த்த செவிலித்தாய்தான் அந்தக் கிழவி. அவள் பெயர் விடங்கி என்பது. அத்தியிடம் எல்லையற்ற மதிப்புடையவள். அவன் அழைத்தவுடன் ஓடி வந்து நின்றாள்.

     “நான் போருக்கு இப்போதே புறப்பட்டுப் போகிறேன். மருதியைப் பார்த்துக்கொள்; எல்லாம் சொல்லியிருக்கிறேன்; விரைவில் வந்து விடுகிறேன்” என்று எழுந்தான்.

     “கவலைப் படாதே; பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் விடங்கி.

     “மருதி,யுத்த வாத்தியங்களின் கோஷத்தைக் கேட்டாயா? நான் போய் வருகிறேன்; இனி எனக்கு விடை கொடு அன்பே!”

     “போய் வாருங்கள், விரைவில்-வெற்றியுடன்!”

     மருதியை விட்டுப் பிரிந்து அத்தி வெளியேறினான். தன் வெண் புரவியில் ஏறி அரண்மனை நோக்கிக் கடுகினன். அரண்மனைக்குப் போகும் வழியிலேயே, படைகள் அணிவகுத்துப் போவதைக் கண்டான். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை நான்கும் அணி அணியாகச் சென்றன. எள் விழ இடமின்றிக் கண் கண்ட இடமெல்லாம் சேனைத் தொகுதிகள் கூடிச் சென்றன. அத்தியின் கண்கள் வியப்பால் படபடப்புற்றன. ‘ஆ! இவ்வளவு படைகள் இருக்கையில், வெற்றிக்குச் சந்தேகமா? இல்லை! என்ன குதூகலத்தோடு போகின்றன படைகள்! இந்தப் போர் முழக்கமே என் தோள்களைப் பூரிக்கச் செய்கின்றன. இவ்வில்வீரர்களுக்கு முன் சோழ நாட்டு வீரர்கள் நிற்க முடியும்?’ என்று யோசித்தவாறே சென்றான். அரண்மனை முற்றத்தை அடைந்த அளவிலே, அரசன் ஆயத்தமாகத் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டான்?

     நன்னன், ஏற்றை, கங்கன், கட்டி, புன்றுறை முதலிய சேனாபதிகள் அறுவரும் படைகளின் அணி வகுப்புக்கு நடு நடுவே நின்று கொண்டிருந்தனர். அரண்மனையிலிருந்து ஆமிராவதி நதிக் கரைவரை, படைகள் நின்ற வண்ணமாக இருந்தன. மதில் புறமெங்கும் நிலைப்படைகள் சூழ்ந்து நின்றன. அத்தி அரசனை அணுகி வணங்கினான். அரசனின் தேர் புறப்படத் தொடங்கியது; அச்சமயம், ஆடக மாடத்து அரவணைத் துயிலும் திருமால் கோயிலிலிருந்து வந்த வைணவ குரு ஒருவர், துளவ இதழ்களை அரசனுக்கு அளித்தார். திருமாலுக்கு அருச்சித்த துளவத்தை வைணவ குரு அச்சமயத்தில் கொணர்ந்து கொடுத்ததை விரும்பி ஏற்றுக்கொண்டான், அரசன்.

     படைகள் புறப்படுவதற்கான பறை முழங்கியது. அடுத்த கணமே, ‘திமி திமி’ எனப் பூமி அதிர்ந்து கொள்ளும்படியாகப் படைகள் சென்றன; அரசனின் தேரும் கடுகியது. அத்தி வெண் புரவி மீதே, அரசனின் தேர் முன்பாகச் சென்றான். வேந்தனின் தேரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்காக தேர்களும், குதிரைப் படைகளும் சூழ்ந்து சென்றன.

     “வில்லின் செல்வன் வாழ்க! சேரர் கோமான் வாழ்க!” என்ற ஒலி எங்கும் முழங்கியது. படைகள் கடு விசையுடன் நகரை விட்டுப் புறப்பட்டன. மதில் வாயிலைக் கடந்து ஆமிராவதி நதியின் கரையோரமாகத் திருப்போர் நகர் நோக்கிச் சென்றன.

     படைகள் அணி வகுப்புப் பிறழாமல் அணி அணியாகப் போவதன் காட்சியை நெடுக நோக்கிய வாறே, சேரன் கணைக்காலிரும்பொறை தேர் மீது சென்று கொண்டிருந்தான். கடு விசையுடன் போகும் தேருக்குச் சமமாக அத்தியின் வெண் புரவி பாய்ந்து சென்றது. அவனைப் பின்தொடர்ந்து ஐந்நூற்றுவர் வீரர் ஆயுதம் தாங்கிச் சென்றனர், தத்தம் குதிரைகள் மீதே.

     ஆமிராவதி நதியின் கரையோரமான சாலையில் செல்லும் படைகளின் தோற்றம், நிலவொளி துளும்பிய நதியின் நீரில் பிரதிபலித்து, நிழல் சித்திரங்களை உண்டாக்கின. ‘ஓ’ என்று வீசும் மலயக் காற்று, படைகளின் போக்கைத் துரிதப்படுத்தியது. நால்வகைப் படைகளும் செல்லுகையில் உண்டான பேராரவாரம் நிச்சப்தமான அவ்விரவில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. அருகில் கரை துளும்பிச் செல்லும் நீரையுடைய ஆமிராவதியின் சலசலப்பும், படை முழக்கத்தோடு ஒன்றாகியது.

     சேர நாட்டு வீரர்கள் வில் கொண்டு போர் செய்வதிலே திறமுடையவர்கள். விற்போரிலே சேர வீரர்களுக்குமுன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது. ‘வில்லின் செல்வர்’ என்றும், ‘வில்லுடன் பிறந்த கடுந் திறல் வீரர்’ என்றும் அவர்களைப் புகழ்வதில் தவறு என்ன இருக்கிறது? இமயத்தில் வில்லுருவம் பொறித்த பெரும் புகழ் வேந்தன் சேரனல்லவா! வில் வடிவத்தையே தம் வெற்றிக் கொடியிலே எழுதி உயர்த்திய பெருமை சேரர்களுக்குத்தானே உரியது! அத்தகைய கடுந்திறல் வீரர்களாகிய வில்லின் செல்வர்கள் மூவாயிரவர் அணி வகுத்துச் சென்றனர்; அவர்களை அடுத்தாற்போல் வேல் வீரர்கள் இரத்த வெறிகொண்டு குதி கொண்டு போயினர். யானையை வேலால் எறிந்து கொல்வதிலே திறமுடையவர்கள் அவ்வேல் வீரர். தமிழ் நாட்டு வீரரில், வேல் வீரரும் வில் வீரரும் பெயர் பெற்றவர்கள். அவர்களை அடுத்து, ஈட்டி, தோமரம், அயில் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய பெரும்படை வீரர் சென்றனர். குதிரை வீரர்களின் தொகுதி தனியே சென்றது. யானைப் படையும், குதிரைப் படையும் இருபுறமும் வரிசையாகச் சென்றன. போகப் போக, படைகளின் அணிவகுப்பு சதுரங்க வியூகமாக மாறியது. முன் படை, பின் படை, பக்கப் படைகள்-என்ற விதமாகப் படைகளின் வகுப்புக் காணப்பட்டது. முன்னும் பின்னும் இருபுறமும் கடல் போன்ற படை சூழ்ந்து செல்ல அரசன் தேர்ப் படைகளின் நடுவிலே சென்றுகொண்டிருந்தான். படைகளுக்கு வேண்டிய உணவுப் பண்டங்களும், மற்றப் பொருள்களும் தனியே, வண்டிகளிலும் மூடு பல்லக்குகளிலும், தேர்களிலும், யானை குதிரை இவற்றின் மீதும் வந்துகொண்டிருந்தன. வில்லெழுதிய கொடியானது முன் படையின் முன் வானையளாவச் சென்று கொண்டிருந்தது. இவ்விதச் சேனா சமுத்திரத்தை வருணித்துக் கூற இங்கே முடியுமா?

     ஆமிராவதியும் மணிமுத்தா நதியும் காவிரியும் சங்கமாகும் முக்கூடலைப் படைகள் அடைந்தன. சேர வேந்தனின் கட்டளைப்படி, படைகள் ‘திருப்போர்’ நகரை நோக்கி, காவிரியின் அருகிலே உள்ள சாலை வழியே சென்றன. சோழனின் படைத் தலைவனும் கொங்கணத்துப் போரிலே முன்பு கொல்லப்பட்டவனுமான பழையனுக்கு உரிய நகர் திருப்போர். பழையன் இறந்த பின்பு, அவ்விடத்திலே தன் பெரும் படையுடன் சோழன் செங்கணான் தங்கினான். அவ்வூரில் இருந்துகொண்டே, கழுமலப் போரை நடத்தினான். ஆகவே, திருப்போர் நகர் மீது சேரன் படையெடுத்துச் சென்றான். மிக எளிதில் சோழனைச் சிறை செய்து விடலாம் என்று ஆதுரத்தோடு சென்றான். திருப்போரை அணுக அணுக, மிக அமைதியாக படைகளை நான புறமும் வகுத்து, அந்நகரைச் சூழ்ந்து கொள்ள ஏற்பாடு செய்தான். சேனாபதிகள் அறுவரும் மிகுந்த ஊக்கத்தோடும் வேகத்தோடும் படைகளை அணிவகுத்து நகரைச் சூழ்ந்து கொள்ள முயன்றனர்.

     நடு வானில் வெண்மதி முழுப் பொலிவுடன் உலகை எள்ளி நகையாடுவதுபோல் தோன்றினான். நிலவின் வெள்ளொளி எங்கும் பரவிக் கிடந்தது. அடர்ந்த சோலைகளையன்றி மற்ற நிலப்பரப்பு முற்றும், தூய வெண்ணிலவால் விளங்கிக் கிடந்தது. அகன்ற சாலை வழியே கடுகிச் செல்லும் சேரலாதன் படையின் தோற்றம் நன்கு புலப்பட்டது.

     “அதோ திருப்போரின் மதிள் புறம்! எவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறது பாருங்கள்! நிலவின் ஒளியிலே எளிதாக முற்றுகையிடலாம்; விரைவில் சூழ்ந்து கொள்ளுங்கள்!” சேர வேந்தனின் கட்டளை, படைத் தொகுதிகளுக்கு உணர்த்தப்பட்டது. திகுதிகுவென்று படைகள் பாய்ந்தன.

     அதே சமயம், திருப்போர் நகரில் போர் முரசு அதிர்ந்தது. சோழ வீரர்களின் வீரக் கூக்குரல் முழங்கியது. ‘கல்’ என்ற ஒலி இடையறாமல் கேட்டது. அதைக் கேட்டுச் சேரன் படைகள் திகைத்துவிட்டன. சேரன் திடுக் கிட்டான். ‘என்ன அதிசயம்! நம் படையெடுப்பை இவ்வளவு விரைவில் உணர்ந்து கொண்டு விட்டார்களே! நம் முயற்சி வீணாகாமல் இருக்க வேண்டுமே!’ என்று கலங்கினான் சேரன் கணைக்கால் இரும்பொறை. “அத்தி, நன்ன! விரைவில் முற்றுகையிடுக! சோழனின் படை புறப்படுவதற்கு முன் சூழ்ந்து கொள்க! முற்றுகையிட்ட பின்பே, நாம் போர் செய்ய முடியும்! நகருக்குள் புகுந்து போர் செய்ய வழிதேட வேண்டும்” என்று கூவினான்.

     அத்தியும் நன்னனும் குதிரையைத் தாவவிட்டுப் பாய்ந்தனர். படைகளை ஊக்கினர். “நகரைச் சூழ்க! நகரைச் சூழ்க!” என்ற கூக்குரல் கிளம்பியது.

     கணத்துக்குக் கணம் சேரனின் படைகள், அணி அணியாக முன்னே பாய்ந்து சென்று நகரைச் சூழ்ந்தன. பிடரி மயிர் மேலெழுந்து துள்ளும்படி, குதிரைகள் சீறிப் பாய்ந்தன நகர்ப்புறத்தே! யானைகள் நிலம் அதிர வீசி நடந்தன. வேலும் வில்லும் தாங்கிய மறவர்கள் கால் நிலம்பதியாதபடிப் பாய்ந்து சென்றனர். உருளைகள் ‘கடகட’ வென்ற பெரு முழக்கம் செய்யும்படி தேர்ப்படை பின்னே அணிவகுப்போடு சூழ்ந்துகொண்டன. “போ, நெருங்கு, தள்ளு, பிடி, ஓடு!” என்று கூவிக் கொண்டே சேரன் படை திருப்போர் நகரை முற்றுகையிட்டது.

     ஆனால், திருப்போர் நகருக்குள் இருந்து பெரு முழக்கம் கேட்டது. முளைத்துக் கிளம்புவதுபோல், சோழனின் படைவீரர், நகர்ப்புற மதிலிலிருந்து சேரனின் படைகள் மீதே தாவிக் குதித்தார்கள். வேலுடன் தாவினார்கள் ஒரு கூட்டத்தினர். ‘ஓ’ என்ற பேரிரைச்சலுடன் வீரர் கூட்டம் நிலை தடுமாறியது. ஈட்டியை முன்னர் நீட்டி, பின்னே பாய்ந்தார்கள் ஒரு கூட்டத்தார்; குத்துக் கோலை பாய்ச்சியவாறே, சேரனின் யானைப் படைமீது தாவினர் வேறு கூட்டத் தினர் . மரங்களிலிருந்து குதித்தனர் வேறு தொகுதியினர். எதிர்பாராதவிதமாக, மதிள் மேலிருந்தும், மரங்களிலிருந்தும் பாய்ந்து போர் புரியும் சோழன் படையைக் கண்டு சேரன் அஞ்சினன். என்ன ஆகுமோ என்று முடுகினன். அத்தி ஒருபுறம், நன்னன் வேறுபுறம், நடுவில் சேரன், ஏற்றை முன்படையில், கங்கன் பின்படையில், கட்டி விற்போரில், புன்றுரை யானைப்படையில் - இவ்வாறு பிரிவு பிரிவாக நின்று போர் புரியலானர்கள்.

     நகர்ப் புறத்தில் குதித்த சோழன் படைகள், பெருந்தொகுதியாக நின்று, சேரனின் படையை எதிர்த்துத் தாக்கி, பின்னே தள்ளினர். மலைக்கூட்டம் பெயர்வ தென யானைகள் திரும்பியோடின. குதிரைகள் நிலை கொள்ளாமல், முன் கால்களை உயரத் தூக்கியவாறே பின்னடைந்தன. வீரர்கள் கூக்குரலிட்டவாறே வெட்டுப் பட்டும், குத்துண்டும், துண்டிக்கப் பட்டும் சிதறி வீழ்ந்தனர். எஞ்சியவர்கள் அலறியவாறே பின்னோடினர். நகரின் மதில் புறத்தை விட்டுச் சேரனின் படை மிக விரைவில் பின்னடைந்தன. நகருக்குள்ளிருந்து மேன் மேல் படைகள் வெளி வந்த வண்ணமாக இருந்தன. சோழன் செங்கணான் கடுஞ் சீற்றத்தோடு படைகள் சூழ, நகரை விட்டு வெளிவந்தான். பின்னிட்டு ஓடும் சேரனின் படையைக் கண்டு மனம் குதூகலம் கொண்டான். சேரன் மீது கடுங் கோபம் கொண்டான். நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த கடும்போர் அன்று நேர்ந்துவிட்ட தாகவே என்ணினான். சேரனின் ஆண்மையை அடக்க உறுதி செய்து கொண்டான். நன்னன் முதலிய படைத்தலைவரை ஒருங்கே அழித்து விட மனம் துணிந்தான். சோழன், தன் படைகளைக் கடுந்தாக்குதல் செய்யுமாறு கட்டளையிட்டான். தானே படைத்தலைமை கொண்டு போரை நடத்தினன். கடும்போர் மூண்டது.

     சோழனின் முன் படையிலே அவன் மகன் - அரசிளங் குமரன் ‘நல்லடிக்கோன்’ நின்று போர் செய்தான். சேரன் படையும் எதிர்த்துப் பொருதது. பின்னிட்டு ஓடும் தன் படையை முன்னர் செலுத்திச் சோழனுடன் போர் செய்தான் சேரன்.

     இடது புறத்திலே அத்தியும் வலப் புறத்திலே நன்னனும் நின்று போர்புரிய, நடுவிலே கணைக்காலிரும் பொறை நின்று பொருதான். விற்போரில் அவன் வல்லவன் அல்லவா? அம்புகளை, செங்கணான் மீதும், நல்லடிக்கோன் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். மெள்ள மெள்ளப் படைகளின் நெருக்கத்திலே, மிக அணிமையில் செங்கணானும் கணைக்காலிரும்பொறையும் எதிர் நின்று பொருதார்கள். கடல் கிளர்ந்து எழுந்தாற் போன்ற படைத் தொகுதியின் நடுவில், வெண்ணிலாவின் வெள்ளொளியில், வாளும் வேலும் மின்னின! வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் மழைத் தாரையெனப் பாய்ந்தன. “கொல்லு, பிடி, வெட்டு, குத்து, தள்ளு, எறி!” என்று அவரவர் கூறிக்கொண்டே, மோதிப் பொருதார்கள். இரு திறத்திலும் வெட்டுண்டும் குத்துண்டும், அம்பு மட்டும், மிதியுண்டும், வேறு பட்டும் மாண்டவர் பலர்; நூற்றுக்கணக்காக வீரர் அழிந்த பின்பும் - படைகள் மடிந்த பின்பும் போர் நின்ற பாடில்லை.

     திடீரென்று செங்கணான் சிறு படையுடன், சேரனின் அணிவகுப்புக்குள் பிளந்து புகுந்தான். அவன் மகன் நல்லடிக்கோன் பெரும்படையுடன், பின் தொடர்ந்து சேரனின் படையை வளைத்துக் கொண்டான். முன் நின்று பொருத கணைக்காலிரும்பொறை அவனைச் சுற்றி நின்ற சிறு படைத் தொகுதியோடு வளைத்துக் கொள்ளப்பட்டான்; அவ்வளவிலே, பெருங் கூக்குரல் எழுந்தது. சேரனின் மாபெரும் படை நிலை கலங்கிக் கொந்தளித்தது. செங்கணான் வெற்றி முரசு கொட்டச் செய்தான். அடுத்த கணமே, சேரனின் படைகள் சிதறின. நல்லடிக்கோன், நின்ற இடத்தில் நிற்காமல் சேரநாட்டுப் படைகளைத் தாக்கித் துரத்தினான்.

     வெற்றி முரசு கொட்டிய முழக்கம் காதில் விழவே, அத்தி திடுக்கிட்டான். சேரன் வளைத்துக் கொள்ளப் பட்டதைக் கண்ட கணமே, வெண் புரவியை மேற்குத் திக்கிலே தட்டி விட்டான், குதிரை வயல் வரப்புத் தெரியாமல் மனோ வேகத்தோடு பாய்ந்து சென்றது. அதைப் பின் தொடர்ந்த சோழனின் வீரர் திரும்ப வேண்டியதாயிற்று. அத்தி வெண் புரவியில் அம்பு வேகத்தோடு சென்று விட்டான். நன்னன் கொங்கணம் நோக்கிக் கடுகி விட்டான். முன் படையில் சிக்கியவர்கள், கங்கனும், கட்டியும், புன்றுரையும், கணைக்கால் இரும்பொறையுமே! சேரன் நிலை சோர்ந்து தேரில் சாய்ந்து விட்டான். படைகள் நானாபுறமும் ஓடிவிட்டன. வளைப் புண்ட படையில், சிறைப்பட்டு நின்றான் சேரன். அவன் வேறு என்ன செய்வான்? செங்கணான், சேரனைப் பார்த்து திக்கெட்டும் எதிரொலிக்க நகை செய்தான். அப்போதே அவன் மகன் நல்லடிக்கோனை நோக்கி, “நல்லடிக்கோன், படைகளை துரத்திச் சென்று, கருவூரைக் கைப்பற்றிக் கொள்! போ முன்னதாக” என்றான். நல்லடிக்கோன் பெரும் படையோடு, ஓடும் படைகளைத் துரத்தியவாறே கருவூர்க் கோட்டை நோக்கி கடுகிச் சென்றான்.

*****

     கருவூர்க் கோட்டைக்குள் இருந்து காலை முரசம் அதிர்ந்தது. அதே சமயம் ஆராமிவதி நதியின் அணை முகப்பிலிருந்து நிமிர்ந்த தலையோடு சில வீரர்கள் சாலையின் வழியைக் கூர்ந்து பார்த்தார்கள். காலைக் கதிரவனின் ஒளி கண்களைக் கூசச்செய்தாலும், அவர்கள் மிகுந்த ஆதுரத்தோடு கீழ்த் திசையை உற்றுப் பார்த்தார்கள். மெள்ள மெள்ள ஆமிராவதியின் நடு அணையில் வந்து நின்று முன்னிலும் அதிகமாக உற்றுப் பார்த்தனர்; நெடுந்துரத்துக்கு அப்பால் சாலை வழியே வரும் ஓர் உருவம் தெரிந்தது. சிறிது நாழிகைக்கெல்லாம் குதிரையின் காலடிச் சப்தம் கேட்டது. அவர்கள் நெஞ்சமும் திடுக்கிட்டது. ஏன்?

     “என்ன வேகம் ஆ! இவ்வளவு துரிதமாக வருபவன் யார்? என்ன செய்தியோ! அதோ குதிரையின் வேகம்-” என்று கூறிக்கொண்டே ஒரு வீரன் மற்றவர்களைப் பார்த்துப் பிரமித் தான்.

     சாலை வழியே தாவிவரும் குதிரையைப் பார்த்து உள்ளம் திடுக்கிட்டது யாவருக்கும். ஆம்! உண்மையில் வேகத்தைச் சாமனியமாகச் சொல்ல முடியுமா? அதில் ஏறி வருபவனும் சாமானிய வீரனாய் இருக்க முடியாது தான்! தெறித்த நடை! குதிரையின் பாய்ச்சலில் பொறி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்! குதிரை வரும் வேகத்தைப் பார்க்கும் போது, சாலையின் மரங்கள் யாவும் - ஆமிராவதியோடு அணை முகப்பில் நிற்கும் வீரர் யாவரும் சுழல்வதுபோல் தெரிந்தது; பார்த்தவர்களின் கண்கள் சுழன்றன; குதிரையும் அணுகி விட்டது. அது அணையை நோக்கியே வருவதும் தெரிந்தது. வீரர்கள் சட்டென்று இருபுறமும் அகன்று நின்று உற்றுப் பார்த்தார்கள். என்ன ஆச்சர்யம்! குதிரை சாலையோடு மின்னலென பாய்ந்து சென்றது. அணையில் நின்றவர்கள் திடுக்கிட்டார்கள். அடுத்த கணமே தடாலெனப் பெருஞ் சப்தம் எழுந்தது. குதிரையின் மீது வீரன் இல்லை.

     ஆமிராவதியின் கரைப்புரத்தில் மணல் பாவிய நிலப் பரப்பிலே தாவிக் குதித்தான். இல்லையேல் குதிரை வந்த வேகத்தில் அவன் அவ்விடத்தில் எவ்வாறு உடனே இறங்க முடியும்? குதிரையும் வேகத்தோடு தாவிச் சென்று சிறிது தூரத்திற்கப்பால் மெல்ல ஓடியவாறே ஒரு மர நிழலில் போய் நின்றுவிட்டது. அவ்வீரன் குதித்த வேகத்தில் ஒரு கணம் அசைவற்று நின்றான்; மறு கணமே ஆமிராவிதி அணை மீது நிற்கும் வீரரிடம் ஓடி வந்தான், போர்க் களத்திலிருந்து ஓடிவரும் சேரநாட்டு வீரனே அவன் என்பதை உணர்ந்து அவ்வீரர்கள் குதூகலித்தார்கள்.

     ஆம்! அவன் போரில் புறங்காட்டி ஓடிவந்த சேர நாட்டு வீரன்தான்! அவ்வீரன் சிறிதும் களைப்புற வில்லை. பெருமூச்சு விட்டவாறே பரபரப்புடன் பேசினன்: “நம் அரசர் சிறைப்பட்டார். சோழனின் படை அணுகிக் கொண்டிருக்கிறது. நம் படைகள் சிதறிவிட்டன” என்றான்.

     “ஆ! அரசர் சிறைப்பட்டாரா? உண்மையாகவா!”

     “ஆம்! இன்னும் சிறிது நாழிகைக்குள் சோழனின் படைகள் இந்நகரை வளைத்துக் கொள்ளும்.”

     “ஐயோ! என்ன விபரீதம்! வாருங்கள் விரைவில் கோட்டைக்குள் சென்று செய்தியை அறிவிப்போம்.”

     அதைக் கேட்டவுடன் வீரர் யாவரும் மனம் பதறியவர்களாய் கோட்டைக்குள் ஓடத் தலைப்பட்டனர். அப் போது செய்தி கொணர்ந்த வீரன் அவர்களை வழிமறித்தான்: “அடே என்ன இது? முதலில் இந்த அணையைத் தகர்த்து உடைப்போம். அப்புறம் மேற்கொண்டு செய்தியை யாவருக்கும் அறிவிப்போம். இல்லையேல் மிக எளிதில் பகைவன் படை நகருக்குள் புகுந்துவிடுமடா! இந்த அணையை உடைத்தால் தோணிகள் மூலமாகவோ புதிய அணை போட்டோதான் உள்ளே போக முடியும்! மதில் கதவுகளையும் சார்த்தி விட்டால் படைகள் சிறிது தாமதப்பட்டே கதவுகளை பிளந்துதான் புக முடியும்! அதற்குள்ளாக நாம் நகர ஜனங்களைத் தக்கபடி பாதுகாப்புடன் இருக்கும்படி சொல்லலாம்” என்றான்.

     “ஆம், ஆம்!” என்று கூறி அந்த வீரர்கள் யாவரும் சேர்ந்து மிடுக்குடன் பல ஆயுதங்களாலும் அணையை உடைத்துத் தகர்த்தார்கள். அதைக் கண்டு மேன்மேலும் வீரர்கள் கூடிவிட்டார்கள். மிக விரைவில் அணை உடைக்கப்பட்டது.

     வீரர் கூட்டம் மிகுந்த வேகத்துடன் வேல்வேலியை நானுபுறமும் சுற்றிப்போட்டுவிட்டு மதில் கதவுகளைச் சார்த்திவிட்டார்கள். மதிலின் பின்னர் காவலாக நான்கு யானைகளையும் நிறுத்தி விட்டு அக நகருக்குள் செய்தி பரப்பிக்கொண்டே ஓடினார்கள்.

     “சேரவேந்தர் சிறைப்பட்டார். சோழனின் படை கடுகி வருகிறது. எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள்.”

     இவ்வித வார்த்தைகள் நானா புறமும் எதிரொலித்தன. செய்தி கேட்ட ஜனங்கள் அங்கங்கே ஓடி அவரவர் மாளிகையில் புகுந்து மறைந்தார்கள். வீதியெங்கும் குதூகலித்துச் சென்றவர்கள் யாவரும் நெஞ்சம் திடுக்கிட்டு ஓடி மறையலானார்கள். அரண்மனை வாயில் கதவுகள் சார்த்தப்பட்டன. அங்கங்கே நகர்க்காவலர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலிவுடன் காணப்பட்ட அந்நகரம் செய்தி கேட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நிலை கலங்கியது; அமைதி இழந்தது. ஜனங்களின்றி வெறிச்சிட்டன நகரின் ராஜ வீதிகள். யுத்த பயத்தால் தாக்கப்பட்ட நாடு நகரங்கள் - பகைவனின் கீழ் அகப்பட்ட பிற நாடு நகரங்கள் எவ்விதம் அமைதியோடு குதுகலத்தோடு இருக்க முடியும்? தமிழ்நாட்டின் முடி மன்னர் மூவரில் ஒருவனான ஒப்பற்ற சேர வேந்தன், சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரிய சோழனின் கீழ் சிறைப்பட்டது, அற்பமான நிகழ்ச்சியா? சேரநாட்டின் கதி என்ன ஆவது?

     தோல்வியின் எதிரொலியால் கருவூர் முழுவதும் நிலைகலங்கிவிட்டது; பயமும் துயரமும் கொண்டு ஒவ்வொருவரும் மனம் பதறினார்கள். சேரன் சிறைப்பட்ட செய்தியும், சோழன் கருவூர் நோக்கி வரும் செய்தியும் பெரும்பயத்தை உண்டாக்கின. மானமும் வீரமும் கொண்டு அழியாப்புகழுடன் வீறு பெற்று விளங்கிய சேரன் பகைவன் கீழ் சிறைப்பட்ட பின் அவன் குடிமக்கள் அமைதியோடு இருக்கமுடியுமா?

     நகருக்குள் அழுகைக் குரலும், கூக்குரலும் எதிரொலித்தன. கோப வார்த்தைகள் பொங்கிப் புறப்பட்டன, சேரநாட்டு மறவர்களிடமிருந்து, பகைவரைப் பழி வாங்கும் நேக்கத்தோடு சில வீரர் மனம் பதறி வஞ்சினம் கூறினார்கள். நகரைக் காவல் புரிந்த நிலைப்படை வீரர்கள் வில்லும் அம்புப்புட்டிலும் தாங்கியவர்களாய், வாள் களை உயர்த்தி வீசிக் கர்ச்சித்தும் ஜனங்களை அவரவர் மாளிகைக்குள் புகுந்து இருக்கும்படிக் கூவியும் இளங்காளைப் பருவமுடையவர்களை, போருக்கு வரும்படி முரசு கொட்டி அழைத்தும் ஒருவரோடோருவர் தோளோடு தோள் மோத வீதியெங்கும் திரிந்தும், வீரட்டகாசம் செய்தார்கள்! தம் தலைவன் சிறைப்பட்ட பின்பும் மனம் தளராமல், பகைவரைப் பழிவாங்கி எதிர்க்கத் துணிந்த அவர்களின் வீரத்தை என்ன என்பது! பகைவர் படை சீறி வருவது கண்டும் நகரைக் காக்கத் துணிந்த அவ்வீரர்களின் நாட்டுப்பற்றைச் சாமானியமாகச் சொல்ல முடியுமா?மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

மாபெரும் தமிழ்க் கனவு
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)