![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
12 இந்தக் குதிரையின் மேல் பணம் கட்டினால் ஜெயிக்கும் என்று கூறுகிறவர்களைப்போல் மணவை மலரெழிலன் போன்றவர்கள் அரசாங்கத்தையே ஒரு குதிரைப் பந்தயமாக நடத்தி ஜெயிக்கிற குதிரைகளின் மேல் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஏழைகள் - மேட்டுக்குடி மக்கள் என்று பிரித்துப் பிரித்துப் பேசியே தன்னளவில் தானும் ஒரு புதிய மேட்டுக் குடி ஆகிவிட முயலும் ஒரு சம காலத்து நவீன வர்க்கம் சுதர்சனனுக்குத் தெரிந்தது. அவன் அந்த வக்கீல் இராமநுஜாச்சாரியிடமிருந்தும், மணவை மலரெழிலனிடமிருந்தும் தப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவன் முன்பு ஐயாவிடமே ஒருமுறைக்கு நேருக்கு நேர் வாதாடியிருந்தான். “ஐயா தயாரித்தனுப்பிய சீர்திருத்தவாதிகளில் பலர் சாமியை நம்பமாட்டேன்னிட்டு அதே சமயத்திலே பணத்தையே சாமியாக நம்பிக் கும்பிடறாங்க. சாதி கிடையாதுன்னிட்டு ஊரூராய் பணம் படைச்ச பெரிய மனுஷனைத் தனிச் சாதியா உயர்த்தி மதிச்சிக் கும்பிட்டு மரியாதை பண்றாங்க. சாமியைக் கும்பிடறதில்லே. அதே சமயத்திலே வசதியுள்ளவனைக் கண்டு பயந்து மதிக்கறாங்க. இதெல் லாம் என்னாலே ஏத்துக்க முடியலே” “என்ன செய்யிறது தம்பி! நம்பளவங்கள்ளேயே பலர் சுயமரியாதை இயக்கத்தைச் சரியாப் புரிஞ்சுக்கலே. பழைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆளுங்க பல பேரு அப்படியே இதுக்கு உள்ளாரவும் வந்துட்டாங்க. அவசரப் பட்டா ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் பொறுத்துக்குங்க. நிதானமா எல்லாம் படிப்படியா மாத்திடலாம்” என்றார் அவர். அவர் மேல் மதிப்பிருந்தும் சுதர்சனன் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுத்தான். “‘சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’னு சொன்ன பாரதியார் உங்களுக்கு முன்னாடியே நீங்க சொன்னதை நல்லாச் சொல்லியிருக்காரு. ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ன்னு சொன்ன பாரதி பழைய மேல் வர்க்கத்தையும் காலணி ஆதிக்கம் என்ற வைதிக மனப்பான்மையால் உலகைச் சுரண்டிய புதிய பார்ப்பனர்களாய் உலகில் உருவெடுத்த வெள்ளைக்கார வர்க்கத்தையும் இணைத்தே சாடியிருக்கிறான். இன்னும் கூடப் பொருளாதார அடிப்படையில் வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வசதியான - நீங்கள் சுரண்டுவதற்கு ஏற்ற ஒரு கோணத்திலேயே கால் நூற்றாண்டாக வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். விமர்சிக்கிறீர்கள். பூணூல் அணிந்தவர்கள் பிறப்பால் தான் பார்ப்பனர்கள். பூணூல் அணியாதவர்கள் பலரிலும் பார்ப்பனீயம் உண்டு. பூணூல் அணிந்தவர்களிலும் பார்ப்பனியம் இல்லாதவர்கள் உண்டு. சாதிகள் வர்க்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டுமே ஒழிய ஒரு சாதி மட்டும் ஒழிந்து மற்றச் சாதிகள் வர்க்கங்கள் நீடிக்கக்கூடாது.” ஐயா ‘அவனுடைய வாதம் இயக்கத்தைப் பலப்படுத்தப் பயன்படாது’ என்றார். அன்று முதல் மெல்ல ஐயாவிடமிருந்து வழி விலகிப் பரந்த சமத்துவத்தையும் மிக விசாலமான அபேத வாதத்தையும் நாடி வருவதற்கு இந்த வாதம் சுதர்சனனுக்குப் பயன்பட்டது. அவனுடைய மனத்தில் உலகளாவிய சுய மரியாதையும் உலகளாவிய அபேதவாதமும் பதிந்தன. ஐயாவிடம் தயாரானவர்கள் பொறுப்புக்கு வந்து வாரிசுகளாக நிர்வாகம் செய்யத் தொடங்கிய போது லஞ்சம், ஊழல், சுரண்டல் எல்லாமே முன்னெப்போதும் இல்லாத வகையில் தாண்டவமாடத் தொடங்கியதனாலே அவர்கள் மெய்யான சுயமரியாதைவாதிகள் இல்லை என்று அவன் உணரத் தொடங்கினான். மணவை மலரெழிலனைச் சந்தித்தபோது மறுபடி இந்தப் பழைய விஷயங்கள் எல்லாம் சுதர்சனனுக்கு இன்று நினைவு வரத் தொடங்கின. ‘ஒப்பில்லாத சமுதாயம் - உலகத்துக் கொரு புதுமை’- என்று பாரதி பாடிய புதுமைச் சமுதாயம் - பொதுமைச் சமுதாயம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டான் சுதர்சனன். ஆதர்சபுரம் வந்திருந்த மன்றக்குடி மகபதி அடிகளார் அன்றிரவு எப்படியும் தன்னைக் கண்டு பேச முயல்வார் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. பள்ளியிலிருந்து தான் விலக்கப்பட்டு விட்ட செய்தியை நிர்வாகிகளோ, தலைமை ஆசிரியரோ அடிகளாரிடம் சொல்லியிருப்பார்களா அல்லது பூசி மெழுகியிருப்பார்களா என்பதை அவனால் இன்னும் அநுமானம் செய்ய முடியாமல் இருந்தது. தான் விலக்கப் பட்டுவிட்டதை அவரிடம் சொன்னால் அவரே அந்தப் பிரச்னையில் தலையிட்டு ஏதாவது சிபாரிசுக்கு வரக்கூடும் என்ற பயத்தில் அல்லது முன்னெச்சரிக்கையில் அவர்கள் அதை அவரிடம் கூறியிருக்க மாட்டார்கள் என்று தான் முடிவில் தோன்றியது. அதுதான் சத்தியம் என்றும் தோன்றியது. இலக்கிய மன்றத்தில் பேச அடிகளார் வந்தபோது பள்ளியில் என்னென்ன நடந்திருக்கக்கூடும் என்று சிந்தித் தான் அவன். தலைமையாசிரியர் தம்முடைய வழக்கப்படி பூர்ணகும்ப மரியாதையோடும் மேளதாளத்தோடும் அடிகளாரைப் பள்ளிக்குள் வரவேற்றிருப்பார். மாணவர்கள் முன்னிலையில் அடிகளார் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தமிழ் மொழியின் தனிச்சிறப்பு, திருக்குறளின் உயர்வு எல்லாவற்றையும் பற்றி முழங்கியிருப்பார். கூட்ட முடிவில் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியாபிள்ளை - அடிகளாரைச் சந்தித்து “இன்னிக்கி உங்க பேச்சு ரொம்பப் பிரமாதங்க! எல்லாக் கருத்தையும் கோவையா அழகாச் சொல்லிட்டீங்க” என்று புகழ்ந்து விட்டு அப்புறம், “அடுத்த மாதம் ஆலம்பட்டியிலே ஒரு பட்டி மன்றம் ஏற்பாடாகியிருக்கு. அதுக்கு சாமிதான் தலைமை தாங்கணும்னு அந்த ஊர்க்காரங்க ஆசைப்படறாங்க. நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும்” - என்று வேண்டியிருப்பார். பட்டிமன்றத்துக்குத் தலைமை தாங்குவதைப் பொறுத்து அடிகளாருக்கு ஒரு கிராக்கி இருந்தது. எல்லாப் பட்டிமன்றங்களிலும் பாங்க் பாலன்ஸ் ஷீட் போல ஐந்தொகை போட்டுச் சமத்காரமாகத் தீர்ப்புச் சொல்வதில் வல்லவர் அவர். அவ்வப்போது ஜனங்களுக்குச் சில இனிய அதிர்ச்சிகளையும் அளிக்கவல்ல திறமை அவருக்கு இருந்தது. ‘மக்களுக்கு நலம் தருவது இல்லறமா துறவறமா?’ என்று தலைப்பு இருந்தால் அடிகளார் ‘நலம் தருவது இல்லறமே’ - என்று தீர்ப்பளிப்பார். ‘வாழ்வுக்கு இன்பம் தருவது காதலா, தியாகமா?’ - என்றிருந்தால் அடிகளார் ‘காதலே’ - என்று தீர்ப்பளிப்பார். கேட்கின்ற பொது மக்களுக்கு அவர் நிர்தாட்சண்யமாகத் தீர்ப்புச் சொல்கிறார். என்பது போல, ஒரு வியப்பை இது உண்டாக்கும். “காதல் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு அரணாக மூன்று கருத்தைச் சொன்னார்கள். தியாகம் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு அரணாக இரண்டு கருத்துக்களை மட்டுமே சொன்னார்கள். மூன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் ஒன்று மீதப்படுகிறது. இரண்டு கட்சிகளின் வாதங்களிலும் இருந்த பலங்களையும், பலவீனங்களையும் கழித்து விட்டுப் பார்க்கும்போது காதல் கட்சியே வலிமையாகத் தோன்றுகிறது. ஆகவே காதல் வெற்றி பெறுகிறது. காதலுக்குத் தியாகம் விட்டுக் கொடுக்கிறது” என்று அடிகளார் நாசூக்காகத் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் கை தட்டல் ஓய்வதற்குப் பத்து நிமிஷம் பிடிக்கும். ‘கண்ணகியின் கற்புச் சிறந்ததா? மாதவியின் கற்புச் சிறந்ததா?’ என்று தலைப்பு இருந்தாலும் எப்படியாவது சுற்றி வளைத்து வாதங்களைக் கற்பித்து நியாயங்களைத் தேடி ‘மாதவியின் கற்பே சிறந்தது’ என்று அடிகளார் முடிவு கூறுவார். மக்களைத் தேடிச் சென்று அவர்கள் குறை நிறைகளைத் தாம் கவனித்து உதவினார் என்பதைவிட மக்கள் தம்மைத் தேடி வந்து தமக்கு உதவும்படியும் தம்மைப் புகழும்படியும் செய்து கொண்டிருந்தார் அடிகளார். அவர் ஒவ்வொரு வகையான மக்களுக்கும் தக்க விதமாகக் காண்பித்து மலருவதற்கு ஒவ்வொரு முகம் வீதம் பல முகங்கள், பல சிரிப்புக்கள், பல பாணிகள் வைத்திருந்தார். ஒரு சாமியார் இவ்வளவு ‘வெறைட்டி’யோடு இருக்கிறாரே என்று மக்களும் மூக்கில் விரலை வைத்து வியந்தார்கள். மக்கள் வியக்கவும், பிரமிக்கவும் தொடங்கவே சாமியாரும் அதே வகை வியப்பையும், பிரமிப்பையும் புகழாக மாற்றிக் கேஷ் பண்ணத் தொடங்கியிருந்தார். வரவு பிரமாதமாக இருந்தது. நிறைய நிகர லாபமும் கிடைத்தது. முதலில் தானும் சிறிது காலம் ஐயாவிடமும், வேறு சிலரிடமும் வியப்புக் கொண்டதைப் போல் இந்த மகபதி அடிகளாரிடமும் வியப்புக் கொண்டிருந்தது சுதர்சனனுக்கு நினைவு வந்தது. பின்னால் நிலப்பிரபுக்களின் நண்பராகவும் முதலாளிகளின் விசுவாசியாகவும் பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே முற்போக்கு, சீர்திருத்தம், என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவராகவும் இந்த அடிகளார் இருப்பதைச் சுதர்சனன் கண்டு பிடித்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல் அன்றிரவு பதினொரு மணிக்குமேல் ஊரடங்கியதும் மகபதி அடிகளாரின் கார் இரகசியமாகச் சுதர்சனனின் வீட்டைத் தேடி வந்தது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|