7 கிராமங்களில் இன்னும் நிலச்சுவான்களுக்கும், பணக் காரர்களுக்குமே செல்வாக்கு இருப்பதைச் சுதர்சனன் நிதர் சனமாகப் புரிந்து கொண்டான். அவனையும், பன்னீர்செல்வத்தையும் சிலமணி நேரம் போலிஸ் லாக்-அப்பில் தள்ளுகிற அளவு அந்தச் செல்வாக்கு அன்று பயன்பட்டு விட்டது. அந்த வட்டாரத்தில் செல்வாக்கும் வசதியும் பெற்றிருந்த சிலர் பன்னீர்செல்வத்தின் இயக்கத்திற்கு ஆதரவாகவும் இருந்தனர். அவர்கள் முன்வந்து ஜாமீன் கொடுத்துத் தலையிட்டுக் காரியங்களைப் பார்த்திருக்க வில்லையானால் சுதர்சனனும் பன்னீர்செல்வமும் விடுதலையாகி வெளியே வந்திருப்பதே சிரமமாகப் போயிருக்கும். திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறந்ததுமே தலைமையாசிரியர் அவனுக்கு மற்றொரு மெமோ கொடுத்தனுப்பினார். அதன் வாககங்கள் முன்னை விட மிகவும் சூடாகவும் தீவிரமாகவும் இருந்தன. தலைமையாசிரியரின் முந்திய மெமோக்களுக்கு அவன் கொடுத்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததாலும், பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் சில வெளி விவகாரங்களில் அவன் தலையிட்டிருப்பதைத் தலைமை யாசிரியர் கவனத்துக்குக் கொண்டு வந்ததின் பேரில் நிர்வாகக் கமிட்டி அன்று மாலையே கூடி அவனை நேரில் விசாரிக்க விரும்புவதாகவும் அன்று மாலை ஆறுமணிக்கு இளைய ஜமீன்தார் பங்களாவில் அவன் தலைமையாசிரியரோடு ஆஜராக வேண்டும் என்றும் மெமோவில் குறித்திருந்தது. சுதர்சனனுக்கு முதலில் கோபம் வந்தது. அப்புறம் சக ஆசிரியர்கள் சிலரை விசாரித்த போது பள்ளி நிர்வாகக் கமிட்டி அவ்வாறு கூடி நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை நீண்டநாள் வழக்கம்தான் என்று எல்லாரும் தெரிவித்தார்கள். அவர்கள் அப்படித் தெரிவிக்கிறவரை அந்த விசாரணைக்குத் தான் போவதில்லை என்று எண்ணியிருந்த சுதர்சனன் இப்போது போவது என்று முடிவு செய்து கொண்டான். “ஜமீன்தார் வீட்டிலே எக்ஸிகியூட்டிவ் போர்டு கூடி விசாரிக்கிற நிலைமைக்குப் போயாச்சுன்னா இனிமே வேலை தேறாதுன்னு அர்த்தம்” - என்று புலிக்குட்டி சீநிவாசராவோ யாரோ சொன்னபோது, “நான் அதைப்பத்தி ரொம்பக் கவலைப்படலெ! சுய மரியாதைக்கு இழுக்கு வர்ர இடத்திலே எப்படியாவது ஒட்டிக்கிட்டு வேலை பார்க்கணும்னு எனக்கு ஒண்ணும் மொடை இல்லை” - என்று முகத்திலடித்தாற் போல் பதில் சொல்லி விட்டான் சுதர்சனன். இந்த விவகாரம் இப்படி இருக்கும் போது அன்று பகலில் மாவட்டத் தமிழாசிரியர் கழகத் தலைவரும், செயலாளரும், பள்ளிக்கூடத்துக்குத் தேடி வந்திருந்தார்கள். வருடாந்தர மகாநாட்டை நடத்துவதற்கு யோசனை கேட்டும் நிதி வசூல் தேடியும் அவர்கள் புறப்பட்டு வந்திருந்தார்கள். சுதர்சனன் தன்னால் முடிந்ததைக் கொடுத்தான். பிச்சாண்டியா பிள்ளையும் ஏதோ பின்னால் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். “வருஷாந்தர மாநாட்டிலே மறந்துடாமல் பட்டிமண்டபம் ஒண்ணு போடணும்னு குறிச்சுக்குங்க” என்று அரிய யோசனை ஒன்றையும் இலவசமாக வழங்கினார் பிச்சாண்டியா பிள்ளை. “பருப்பில்லாமல் கலியாணமா? பட்டிமண்டபம் நிச்சயம் உண்டுங்க. ஆனா என்ன தலைப்பிலே போடற துன்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கோம்.”
“தமிழாசிரியன் முன்னேற உட்பகை அதிகமா, வெளிப்பகை அதிகமான்னு போடுங்களேன்” என்றார் பிச்சாண்டியாபிள்ளை!
“இந்த மாதிரித் தலைப்பைவிட நமக்கு வேறே அவமானமே வேண்டியதில்லே” - என்று சுதர்சனனும் மறைக் காமல் தன் கருத்தைச் சொல்லி வைத்தான். “நீங்க சும்மா போடுங்க! சுதர்சனத்துக்குப் பட்டி மண்டபம்னாலே, பிடிக்காது. அதுதான் அப்படிச் சொல்றாரு” என்றார் பிச்சாண்டியா பிள்ளை. “நீங்க சொல்றபடியே எல்லாம் செய்யலாம் ஐயா! உங்களாலே ஒரு காரியம் ஆகணும். ரெண்டு நாள் இம்மாநாட்டுக்கு நாலு வேளைச் சிற்றுண்டி, நாலு வேளைச் சாப்பாடு ஆகுது. இது தவிரப் பந்தல், போஸ்டர், அழைப்பிதழ் அச்சிடப் பிரஸ் செலவுகள் எல்லாம் வேற இருக்கு. நிறைய டொனேஷன்ஸ் எதிர்பார்க்கறோம். நீங்ககூட வந்தீங்கன்னா அருள்நெறி ஐயா, இளைய ஜமீன்தார் எல்லாரையும் ஒரு ரவுண்டு பார்க்கலாம்னு நினைக்கிறோம்” - என்றார்கள் வந்தவர்கள், பிள்ளைதான் அதற்குச் சரியான ஆள் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சுதர்சனனை அவர்கள் கூப்பிடவில்லை. உடனே பிச்சாண்டியா பிள்ளையும் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ஒப்புக் கொண்டார். வசதியுள்ளவர்களைப் பார்த்துக் கும்பிடுவதிலும், தன்னைகட்டிக் கொள்வதிலும், அவர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் தமிழாசிரியர்களுக்கு இருக்கும் அக்கறையைச் சுதர்சனன் கவனித்தான். இன்னும் சங்ககாலத்துப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளாகவே அவர்கள் இருப்பதையும் சுதர்சனன் கவனித்தான். ஒரு நிதி வசூல் நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரில் வசதியுள்ளவர்கள் யார் யாரென்று தேடியலைந்து அவர்களை முகஸ்துதி செய்து பணம் கறந்து இரண்டு நாள் மகாநாடு நடத்துவதை விட யாருடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்களோ அந்தத் தமிழாசிரியர்களிடமே ஒன்றும் அரையுமாக வசூல் செய்து தன்மானத்துடனே மகாநாடு நடத்த லாமே என்று தோன்றியது. 45 வயதுக்கு மேற்பட்ட பல தமிழாசிரியர்கள், பெரிய மனிதர்களையும், பணக்காரர்களையும் அளவு கடந்து முகஸ்துதி செய்வதைப் பார்த்துச் சுதர்சனன் அருவருப்பே அடைந்தது உண்டு. முகஸ்துதியும் பண்டிதர்களும் கூடப்பிறந்த விஷயங்களோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ‘வையையாற்று மணலினும் பலநாள் வாழய பேரியாற்று மணலை எண்ணினாலும் நின்வாழ் நாளின் பெருக் கத்தை எண்ண முடியாது’ - என்பது போல் எல்லாம் வாழ்த்திப் பாடியிருக்கும் பல பழம் புலவர்களின் அதே பழைய இரத்தம்தான் இந்தத் தலைமுறைத் தமிழாசிரியர்களின் உடலிலும் ஓடுகிறதோ என்று கூட அவன் நினைத்தது உண்டு. இளமை முறுக்கேறிய இரத்த ஓட்டத்தோடும், சுயமரியாதை இயக்கம் கற்பித்துக் கொடுத்திருந்த துணிவோடும், கூழைக் கும்பிடுகளும், கூன் விழுந்த முதுகுகளும் இல்லாத தமிழாசிரியர்களைத் தேடினான் அவன். அப்படிப்பட்டவர்கள் மிக மிக அருமையாகவே கிடைத்தார்கள். ஒவ்வொரு தமிழாசிரியனுக்கும் முப்பது வயதுக்குள்ளேயே மனம் கிழடு தட்டி மூத்துப் போவதைக் கண்டு வேறு அவன் எரிச்சலடைந்தான். பிச்சாண்டியா பிள்ளையிடம் மாவட்டத் தமிழாசிரியர் கழகத் தலைவரும், செயலாளரும் அந்த வட்டாரத்துப் பணக்காரர்களின் பட்டியலை விசாரித்து எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சுதர்சனன் இதைத்தான் நினைத் தான். மாலை நாலரை மணியானதும் அவன் தலைமையாசிரியருக்கு ஒரு துண்டுத்தாளில், “நான் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருக்கிறேன். எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது சொல்லி அனுப்பவும்” - என்று எழுதிக் கொடுத்தனுப்பினான். அப்புறம் நாற்காலியை எடுத்து வேப்பப் மரத்தடியில் போட்டு உட்கார்ந்து ஏதோ ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டலானான். ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குப் புறப்பட்டுப் போயினர். ஐந்தரை மணிக்குப் ப்யூன் வந்து சுதர்சனனைத் தலைமையாசிரியர் கூப்பிடுவதாகக் கூப்பிட்டான். சுதர்சனன் தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தான். தலைமையாசிரியருடைய மேஜையில் மேலாக ஒரு டேபிள் வெயிட் கண்ணாடிக் குண்டுக்குக் கீழே அவன் சற்று முன் அவருக்கு எழுதியனுப்பிய துண்டுத்தாள் இருந்தது. அவனைப் பார்த்ததும் அவர் கூப்பாடு போட்டு இரையத் தொடங்கினார். “நீர் உம்மைப் பத்தி என்ன நினைச்சிண்டிருக்கிறீர்னே எனக்குத் தெரியலே. நான் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷன்கிற முறையிலே உமக்கு மெமோ எழுதியனுப்பறது, சர்க்குலர் விடறது, உம்மைக் கூப்பிடறது எல்லாம் செய்ய முடியும். நீர் எப்படி இதுமாதிரி எல்லாம் எனக்கு எழுதி அனுப்பலாம்? இதை எல்லாம் செய்யறதுக்கு உமக்கு என்ன அதிகாரம் இருக்கு? எந்தக் ‘கப்பாஸிட்டியிலே’ நீர் இதையெல்லாம் செய்யறீர்? இங்கே நான் ஹெச்.எம்மா? இல்லே நீரே ஹெச்.எம்னு உமக்கு நினைப்பா? தெரியா மத்தான் கேட்கிறேன்.” இதற்கு சுதர்சனன் பதில் சொல்லவில்லை. ஏதோ ஆத்திரத்தில் அவர் கத்துவதாக அவனுக்குத் தோன்றியது. “ஏன் பதில் சொல்லாம நிற்கிறீர்?” “வெளியூர்லேருந்து உங்க பேருக்கு நான் ஒரு லெட்டர் எழுதறது எப்படித் தப்பில்லையோ அப்பிடியே இதை எழுதினதும் தப்பில்லே. தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டா எல்லாமே தப்புத்தான் சார்.” “இந்த நியாயம்லாம் எனக்கு தேவை இல்லே மிஸ்டர் சுதர்சனம்! ஸ்கூல் பிரெமிஸஸ்லேருந்து எனக்கு அட்ரஸ் பண்ணி இனிமே எதையும் நீர் ஆள் மூலமா எழுதி அனுப்பப்படாது. அப்படி அனுப்பிச்சா அதைப் பத்தி நான் ரொம்ப ஸீரியஸ்ஸா வியூ பண்ண வேண்டியிருக்கும்.” “சரி சார் அனுப்பலே...” என்று ஒரே வரியில் அதை முடித்துவிட்டான் அவன். “நான் சைக்கிளிலே போகப் போறேன். நீர் நடந்து வந்துடும். கமிட்டி ஜமீன்தார்வாள் வீட்டிலே கூடறது.” சுதர்சனன் தலையை அசைத்தான். தலைமையாசிரியர் வாசுதேவன் டர்பன், கோட்டு, டை எல்லாம் தரித்து பிரிட்டீஷ் இம்பீரியலிஸத்தின் சின்னமான பழைய இந்திய உடையில் ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டார். சுதர்சனன் வழக்கம்போல நாலு முழம் வேட்டி, அரைக்கைச் சட்டை, ஒரு கைத்தறித் துண்டு சகிதம் நடந்தே ஜமீன்தார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே ஜமீன்தாரோடு கவுண்டர், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, வேறு சில ஆட்கள் எல்லாம் இருந்தனர். அவ்வளவு பேரும் ஸ்கூல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இல்லை என்பது சுதர்சனனுக்கே தெரிந்தது. மெமோவில் எழுதியிருந்ததற்கும் அங்கு நடப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. கமிட்டி முன்பு மட்டுமே விசாரிக்கப் படவேண்டிய ஒரு விஷயத்தை ஊரார் முன்பெல்லாம் விசாரிப்பது சுதர்சனனுக்குப் பிடிக்காததோடு பாதிக்கப்பட்ட மற்றொரு நபரும் தன்னை விரும்பாதவருமாகிய கவுண்டரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே தன்னை எப்படி நியாயமாக விசாரிக்க முடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. விசாரணைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுதர்சனனைத் தவிர ஏனைய அனைவரும் உட்கார நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுதர்சனன் நடுவாக நிற்க வேண்டியதாயிற்று. அங்கிருந்தவர்களில் யாரும் அவனை ‘வா’ என்று சொல்லும் சாதாரண முகமன் வார்த்தைக்கும் கூடத் தயாராயில்லை. “லெட் அஸ் புரொஸீட்...” என்று தலைமையாசிரியர் ஃபைல் கட்டைப் பிரித்துத் தொடங்கியதுமே, “நீங்க தொடங்கறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு சின்னச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திடுங்க. உங்க மெமோவிலே ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக்கு முன்னாடி நான் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லணும்னுதான் குறிப்பிட்டிருந்ததா ஞாபகம்! இப்போ இங்கே கமிட்டி மெம்பர்ஸ் மட்டும் இல்லே, யார் யாரோ இருக்காங்க. இதை முதல்லே எனக்குத் தெளிவுப்படுத்துங்க” என்று சுதர்சனன் அவர்களைக் கேட்டான். பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|