9

     சுதர்சனனின் பேச்சு ஆதர்சபுரம் ஜமீன்தாரைப் பற்றியதாக இருக்கவே தலைமையாசிரியர் கொஞ்சம் பின் வாங்கினார். நடுத்தெருவில் ஒரு பொது இடத்தில் தனக்குச் சரி என்று படாத ஒரு பெரிய மனிதனைப் பற்றிப் பயப்படாமல் விமர்சிக்கிற தைரியம் சுதர்சனனுக்கு இருந்தது. அதைக் கேட்கிற தைரியம் தலைமையாசிரியர் வாசுதேவனுக்குத்தான் இல்லை. மெல்ல சைக்கிளில் ஏறிக் கொண்டு “சரி! அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நழுவினார். ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள அல்லது ஒரு முரண்பாட்டைச் சந்திப்பதற்கு அவ்வளவு பயம் அவருக்கு. சுதர்சனனின் தைரியத்தையும், தன்மானத்தையும் பார்த்து வியந்து புகழத் தயாரானதுடன், அதை வெளிப்படையாகச் செய்யத் தயங்கிய மனத்தோடு அவனிடம் நின்று பேசிய தலைமையாசிரியர் அவனோடு தான் பேசிக் கொண்டிருப்பதை ஜமீன்தாருக்கோ, அருள்நெறி ஆனந்த மூர்த்திக்கோ கவுண்டருக்கோ யாராவது பார்த்துக் கொண்டு போய்ச் சொல்லி விடுவார்களோ என்று பயந்துவிட்டார்.

     அவர் பயந்து கொண்டுதான் போகிறார் என்பது சுதர்சனனுக்கும் புரிந்தது. தலைமையாசிரியர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியா பிள்ளை எதிர்ப்பட்டார். அவர் கையில் ஏதோ நோட்டுப் புத்தகம், ரசீதுப் புத்தகம் எல்லாம் இருந்தன. தமிழாசிரியர் மாநாட்டுக்காக அவர் தீவிரமாக வசூலில் இறங்கியிருக்கிறார் என்று தோன்றியது. சுதர்சனனைப் பார்த்ததுமே அவர் ஆரம்பித்தார்:

     “என்ன? தகராறு எந்த மட்டிலே இருக்கு? எல்லாம். சரியாச்சா இல்லியா?”

     “எந்தத் தகராறு?” என்று ஒன்றும் தெரியாதது போல் அவரைப் பதிலுக்குக் கேட்டு வைத்தான் சுதர்சனன்.

     “அதான் ஸ்கூல் தகராறு...”

     “நான் தகராறு ஒண்ணும் பண்ணலியே? அவங்கதான் மெமோ, எக்ஸ்பிளநேஷன்னு இழுத்தடிச்சிக்கிட்டிருக்காங்க. ஒண்ணுமில்லாத விஷயத்துக்காக எக்ஸிக்யூடிவ் போர்டுக்கு முன்னாடி நான் பதில் சொல்லணும்கிறாங்க. ஜமீன்தார் ஸ்கூல்லே வேலை பார்க்கிற வாத்தியாருங்கள்ளாம் தனக்கு அடிமைங்கன்னு நினைக்கிறாரு...”

     “அப்ப நான் வரட்டுமா? வசூல் வேலையா அலைஞ்சுக்கிட்டிருக்கேன். இன்னும் நெறைய எடத்துக்குப் போகணும்.”

     தான் சொல்லிய விஷயத்தில் பட்டுக்கொள்ளாமல் பிச்சாண்டியா பிள்ளை நழுவியதிலிருந்து அவரும் சர்ச்சைக்குப் பயப்படுகிறார் என்று புரிந்தது.

     சுதர்சனம் ஊர்ச்சாவடிக்கு அருகே இருந்த பொது நூல்நிலையத்தில் போய்ச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் வீட்டுக்குத் திரும்பினான். அவன் வீடு திரும்பியபோது இருட்டிவிட்டது. தெருவிளக்கடியில் வீட்டு வாசலில் அவனுக்குக் குடியிருக்க வீடு வாடகைக்கு விட்டிருந்த கன்னையாப் பத்தர் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னை எதிர்பார்த்துத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சுதர்சனன் அவரைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான். கதவைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு, “உள்ளே வாங்க சார்! பாவம் ரொம்ப நாழியாக் காத்துக் கிட்டிருக்கீங்க போலிருக்கு...” என்று அவரை மிகவும் மரியாதையாக உள்ளே வரவேற்று உட்காரச் சொன்னான் சுதர்சனன்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.