நூல் முகம்

     1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக புத்தக வடிவில் வெளி வருகிறது.

     பாசாங்குகளும், போலித்தன்மைகளும் நிறைந்த மனிதர்கள் சமூக வாழ்வில் தென்படுகிற வரை அப்படி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும் - அவை நிஜத்துக்கு அப்பாற் பட்ட - நிஜத்தை விட அதிகமான பொய்ம் முகங்களாகவும் இருக்கும்.

     அந்தப் பொய்ம் முகங்களைத் தேடி அடையாளம் காணவும் காட்டவும் முயல்வது ‘அதிகப் பிரசங்கித்தன’ என்று பழமைவாதிகள் நினைக்கலாம் - சொல்லலாம், அபிப்ராயப்படலாம்.

     ஆனால் அப்படிப் பொய்ம் முகங்களை தேடி விலக்கி - மெய்யான தோற்றத்தைச் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் காட்டும் அதிகப் பிரசங்கித்தனங்கள் இன்றைய இலக்கியத்துக்கும் நாளைய இலக்கியத்துக்கும் என்றைய இலக்கியத்துக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

     இலக்கிய ஆசிரியனுடைய - முழுமையான கூரிய பார்வைக்கு எதுவும் தப்ப முடியாது - தப்பக் கூடாது. அந்தப் பார்வை கூர்மையாகவும் எந்த ஆழம் வரையானாலும் அந்த ஆழம் வரை பாய முடிந்ததாயும் இருப்பது தான் அதன் சிறப்பு.

     அத்தனை கூரிய பார்வையில் எத்தனை பொய்ம் முகங்கள் கிழிபட முடிந்தாலும் நல்லதுதான். பாசாங்குகள், வேஷங்கள், ஆஷாடபூதித்தனமான நாசுக்குப் போர்வைகள் எல்லாம் கழன்றாலொழிய ஒன்றைப் பற்றிய அல்லது ஒருவரைப் பற்றிய சத்தியம் கண்ணில் படாது.

     சத்திய தரிசனத்துக்கு யார் யாருடைய கண்கள் கூசுகின்றனவோ அவர்களுக்காக நாம் வருந்துவதையும் அநுதாப்படுவதையும் தவிர வேறெதையும் செய்வதற்கில்லை.

     பூனைகள் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லை. கண்களை மூடிக் கொள்ளாத தீரர்கள் தான் உலகை உணர்கிறார்கள். உணர்த்துகிறார்கள்.

     இந்தக் கதையில் வருகிற சுதர்சனனைப் போன்ற இளைஞர்கள் இன்றைய இந்திய சமூகத்துக்கு அதிக அளவில் தேவை.

     அவர்கள் தொகையும், எண்ணிக்கையும் பெருகுவதைப் பார்த்து யாரும் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை.

     சுதர்சனனைப் போன்ற எதிர் நீச்சலிடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதுதான் கவலைப்படுவதற்கும் பயப்படுவதற்கும் உரியது.

     ஒரு சமுதாயத்தில் அப்படி இளைஞர்கள் இருப்பது சமுதாய லாபமாகக் கணக்கிட்டுப் பெருமைப்பட வேண்டியது ஆகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் உணர்ந்து இந்த நாவலைப் படிப்பார்களானால் அவர்களுக்கு நான், மிகவும் நன்றியுடையவனாவேன்.

நா. பார்த்தசாரதி
தினமணிக்கதிர்
5-11-1980