18 பகல் ஒரு மணி சுமாருக்கு சிண்டிகேட் சிதம்பரநாதன் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டு விடைபெற்றுப் போய்ச் சேர்ந்தார். சுதர்சனனுக்குப் பசி எடுத்தது. ரகு வருவானா அல்லது தானே தனியாகப் பகலுணவுக்குச் செல்வதா என்று தயங்கினான் சுதர்சனன். மெஸ்ஸுக்குப் போவதானால் புதியவனாகிய தான் மட்டும் தனியே போவது சரியாயிராது என்று பட்டது அவனுக்கு. ரகுவுக்காகக் கால் மணி நேரம் காத்துப் பார்த்த பின் அவன் வந்தால் அவனோடு மெஸ்ஸுக்குப் போவது, இல்லையென்றால் எங்காவது சாப்பாட்டு ஹோட்டலில் போய் உண்பது என்று முடிவு செய்து கொண்டு காத்திருந்தான். ஆதர்சபுரம் நண்பர்கள் இரண்டொருவருக்குக் கடிதம் எழுதினான். நல்லவேளையாக அவன் சாப்பாட்டுக்குப் புறப்படுவதற்குள் ரகுவே வந்துவிட்டான். “தலைவர் உன்னைப் பத்தி ரொம்ப வருத்தப்பட்டார். அவரோட அருமை பெருமைகளைப் பத்தி இப்போ நீ உதாசீனப்படுத்தலாம். ஆனால் நீயே போகப் போகத் தெரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்” என்ற வார்த்தைகளைச் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டே நுழைந்தான் ரகு. சுதர்சனன் ரகுவை உணவுக்குச் செல்லத் துரிதப் படுத்தினான்: “அதைப் பத்தி இப்போ என்ன? முடிஞ்சு போன விஷயத்தை விட்டுடு. எனக்குச் சாப்பிடப் போகணும். பசிக்குது. உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்...” “இருந்து நிதானமா எல்லோரும் இங்கேயே சாப்பிட்டு விட்டுப் போகணும்னு எங்களைத் தலைவர் கெஞ்சினாரு, நாங்க தான் அவருக்கு வீண் சிரமம் எதுக்குன்னு புறப்பட்டு வந்துட்டோம்.” “நீ வர்ரத்துக்குக் கொஞ்சநேரம் முன்னாடி வரை சிண்டிகேட் சிதம்பரநாதன் உன்னைத் தேடி வந்து காத்துக் கிட்டிருந்தாரு. இப்பத்தான் சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனாரு. ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம்...” “அப்படியா? அவரை நேரே அப்படியே தலைவர் வீட்டுக்குப் புறப்பட்டு வரச் சொல்லக் கூடாதோ? இன்னிக்குத் தலைவர் பிறந்தநாள்னு நீ சொல்லியிருந்தா அவரே அங்கே கிளம்பி வந்திருப்பாரே அப்பா?” ரகுவின் தலைவரைப் பற்றிய புலம்பல் ஓயவே ஓயாது. போலிருந்தது. அது ஒருவிதமான பைத்தியமாகவே அவனைப் பிடித்திருப்பது போலத் தோன்றியது. மூச்சுக்கு முந்நூறு தரம் தலைவர் தலைவர் என்றே அனற்றிக் கொண்டிருந்தான் அவன். சமணரைக் கழுவேற்றியது, திருநாவுக்கரசரைக் கல் தூணில் பூட்டிக் கடலில் தள்ளியது போன்ற மதவெறிகளை விட மோசமான மதவெறிகளின் வரிசையில் காரணமில்லாத இக்காலத்து வீரவணக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. எதிலும் வீரவணக்கம் புரிகிறவர்கள் மூளை வளர்ச்சி குன்றிப் போய்க் குருட்டுத்தனமாக மாறி விடுகிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சுதர்சனனால் காணமுடிந்தது. சுதர்சனனே அப்படி இளமையில் சில விர வணக்க மனப் பான்மைகளிலே அழுத்தமாகச் சிக்கியிருந்தவன் தான். அந்த வீர வணக்கக் காலங்களில் தான் எப்படித் தன் கருத்துக்குச் சாதகமில்லாத கோணத்திலிருந்து ஒன்றைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறோம் அல்லது ஒதுக்கியிருக் கிறோம் என்பது இப்போது அவனுக்கே நினைவு வந்தது. “மெஸ்ஸிலேருந்து அந்தப் பொண்ணு வந்து சாப்பிடக் கூப்பிட்டிச்சுப்பா! அங்கேயே சாப்பிடப் போகலாமா? வேறெங்கேயாவது...?” என்று சுதர்சனன் ரகுவின் கவனத்தைத் தலைவர் புராணத்திலிருந்து மீண்டும் திசை திருப்ப முயன்றான். ஆனால் சுதர்சனனின் முயற்சி அவ்வளவு சுலபமாகப் பலிக்கவில்லை. சாயிபாபா பக்தர்கள் எப்படி எல்லா நேரமும் சாயிபாபாவின் விநோத அதியற்புதச் செயல்களைப் பற்றிய சம்பவங்களையே எடுத்துச் சொல்லியும் விவரித்தும் விளக்கியும் மகிழ்கிறார்களோ அதே போலத் ‘தலைவர்கள்’ என்ற நவீன இந்திய மேல் தட்டு வர்க்கத்தின் தொண்டர்களும் சதாகாலமும் தலைவர் தம் பெருமையைச் சொல்லி மகிழ்கிறவர்களாகவே இருந்தார்கள். “நம்ம மெஸ் இட்லின்னாத் தலைவருக்கு உயிர்ப்பா! எத்தனையோ நாள் என்னை வாங்கியாரச் சொல்லிச் சாப்பிட்டிருக்காரு” - என்று மெஸ் பற்றிய நினைவிலும் தலைவரையே ஞாபகப்படுத்திக் கொண்டு ஆரம்பித்து விட்டான் ரகு, சுதர்சனனுக்கு ஒரே சலிப்பாயிருந்தது. தேசத்தில் இன்று தலைவர் பக்தி - சாயிபாபா பக்தி எல்லாம் ஒரே மாதிரித்தான் இருந்தது. சுதர்சனனால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மறுபடியும் ரகுவிடம் தனக்குப் பசியாயிருப்பதையும், மெஸ்ஸுக்குப் போகலாமா என்பதையும் நினைவூட்டினான் சுதர்சனன். “கொஞ்சம் பொறுத்துக்க! தலைவர் வீட்டிலிருந்து நண்பர்கள் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க வந்தப்பறம் அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்” என்றான் ரகு. பத்து நிமிஷத்தில் அந்த நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். நான்கு பேருமாக மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பும்போது பகல் மணி இரண்டரை ஆகியிருந்தது. சுதர்சனனுக்கு ஒரே அசதியாயிருந்தது. அறைக்குத் திரும்பியதுமே சுதர்சனன் அயர்ந்து தூங்கி விட்டான். ரகுவும் அவனுடைய நண்பர்களும் தலைவர் பற்றியும் கட்சி பற்றியும் தங்களுக்குள் இடைவிடாமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் தான் அந்தப் பேச்சு சுதர்சனனின் தூக்கத்துக்கு இடையூறாக இருந்தது. அப்புறம் தூக்கம் ஆழ்ந்ததாக அமையவே அவனுக்குத் தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த எதுவுமே நினைவுமில்லை, தெரியவுமில்லை. தூங்கிவிட்டான். மறுபடி அவன் தன் உறக்கம் கலைந்தபோது தானிருப்பது ஆதர்சபுரமா சென்னையா என்ற சுதாரிப்பு வருவதற்கே சில விநாடிகள் ஆயின. அவ்வளவு அயர்ந்து தூங்கியிருந்தான்.
“என்னப்பா நல்ல தூக்கம் போலிருக்கே?... காபி குடித்துவிட்டுக் கடற்கரைப் பக்கம் போகலாமா?” என்றான் ரகு. எழுந்து முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு அவனோடு புறப்பட்டான் சுதர்சனன். போகிற வழியில் காபி குடித்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்றார்கள் அவர்கள்.
மணலில் காற்றாடச் சிறிது நேரம் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவதற்குத் தான் ரகு தன்னைக் கடற்கரைக்குக் கூப்பிட்டதாகச் சுதர்சனன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கடற்கரை போனதும் தான் அங்கே தலைவர் கலம்பகச் செல்வரின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. ரகுவும் நண்பர்களும் பொதுக்கூட்ட மேடைக்குப் போனார்கள். சுதர்சனன் தனியே ஒரு மூலையில் மணலில் போய் அமர்ந்தான். ரகுவும் நண்பர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் மேடைக்கு வர மறுத்து விட்டான். தனியே மணவில் உட்கார்ந்து அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது “வணக்கங்க! எப்போ வந்தீங்க...?” என்று பழகிய குரல் ஒன்று கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான். பழைய இயக்கத் தோழரும் குடந்தை நகரில் செயலாளராக இருந்தவருமான ‘பொன்னழகு’ நின்று கொண்டிருந் தார். “அடடே வாங்கண்ணே உட்காருங்க!” என்று அவரை வரவேற்றான் சுதர்சனன். பொன்னழகு உயரமும் பருமனுமாக வாட்ட சாட்டமாயிருந்தார். “ஆமாம்! நீங்க தெற்கே எங்கேயோ - அதென்ன பேரு? ஆரவாரபுரமா ஆதர்சபுரமா? அங்கே தமிழ்ப் பண்டிட்டா இருக்கறதாவில்லே கேள்விப்பட்டேன்?” என்று கேட்டுக் கொண்டே மணலில் உட்கார்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் ஆதர்சபுரத்தில் வேலையை விட்டுவிட்டுத் தான் சென்னைக்கு வந்து சேர்ந்த விவரங்களை அவருக்குத் தெரிவித்தான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைக் கேட்காமலே அவனிடம் மேலும் தெரிவித்தார். “நம்ம ஊர்க்காரரு இங்கே மினிஸ்டர் ஆனாலும் ஆனாரு. அதுவும் இதுவுமா வந்து குவியுற பணத்தை என்ன பண்றதுன்னு அவருக்கே புரியிலே. புதுசா இங்கே மெட்ராஸ்லே ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டல் கட்டித் திறந்திருக்காரு. அதிலே இப்போ நான் ஒரு டைரக்டர். பினாமிதான்...” சுதர்சனன் பொன்னழகை நிமிர்ந்து பார்த்தான். சுயமரியாதை இயக்கத்தின் நேர்மைப் பிடிவாதமும் முரண்டுகளும் இளகிப் போய் அவர் முகத்தில் இப்போது அசடு வழிய ஒரு புது மினுமினுப்பு வந்திருப்பது தெரிந்தது. “ஊரு வீடு வாசல் இயக்கத்தை எல்லாம் விட்டிட்டு இதுக்கு எப்படி நீங்க வந்தீங்க?” “இதிலே என்ன தப்பு? ஐயாவே, ‘நம்பளவங்க ராஜ்யம் பண்றாங்க. அவங்க நல்லது பண்ணினாலும் தப்பு பண்ணினாலும் நாம அவங்களை ஆதரிக்கணும்’னு சொல்லிட்டாரே? லஞ்சமோ ஊழலோ - எது பண்ணினா என்னங்க? நம்மளவனுகளும் நாலுபேர் பணக்காரனா வந்தால் நல்லது தானே?” இப்படி அவர் கேட்டார். “தப்புப் பண்றவங்க நமக்கு வேண்டியவங்களா இருந்தால் அனுமதித்து ஆசி கூறி விட்டுடறதும் நமக்கு வேண்டாதவங்களா இருந்தால் எதிர்த்துத் தாக்கிப் போராடறதும் தான் இந்த நாட்டிலே கட்சி அரசியல்னு ஆனப்புறம் இதைப் பத்தி ஒண்ணும் பேசறத்துக்கு யோக்கியதை இல்லே அண்ணே...” “நீங்க என்ன சொல்றீங்க சுதர்சனம்?” “தெளிவாச் சொல்லணும்னா இந்த விஷயத்திலே ஐயாவையோ உங்களையோ நான் ஆதரிக்க மாட்டேன். முதல்லே ஒரு சுயமரியாதைக்காரன் என்றும் எதற்கும் மடங்காத நேர்மையாளனாக இருக்கணும். அந்த நேர்மை என்னிக்குப் போச்சோ அன்னிக்கே சுயமரியாதை இயக்கமும் போச்சு.” “அதெப்படி? இப்பத்தான் நம்ம இயக்கத்துக்கு ஒவ் வொண்ணா வெற்றிமேலே வெற்றியே கிடைச்சிட்டிருக்கு, நம்மளவங்களே இப்போ நாட்டை ஆளுறாங்க. நமக்கு வேண்டியவங்களுக்குச் சலுகை, காண்ட்ராக்ட் எல்லாம் நிறையக் கிடைக்குது. இதைப் போயி குறை சொல்றீங்களே அண்ணே! இதோ பாருங்க... நீங்களோ ஆதர்சபுரத்திலே வேலையை விட்டுட்டேங்கிறீங்க. பேசாமல் இப்பவே எங்கூட வாங்க... நம்ப மந்திரி அண்ணன் கிட்டக் கூட்டிக் கிட்டு போயிக் கழக முன்னணிப் பேச்சாளர்னு உங்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கச் சொல்லி மாசத்துக்கு ஏழு எட்டுக் கூட்டம் ஏற்பாடு பண்ணி ஒரு கூட்டத்துக்கு முந்நூறு ரூவா தரச் சொல்றேன். சுலபமா மாசம் ஒண்ணுக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் உங்களுக்குக் கிடைச்சிடும். அதுக்கப்புறம் ‘தோழர் சுதர்சனனார் கார் வழங்குநிதி’ன்னு அறிக்கைவிட்டு வசூல் பண்ணுவோம். ஆறு மாசத்திலே ஒரு புதுக்காரையும் நீங்க வாங்கிக்கலாம். இனிமே ஒருத்தன் கிட்டக் கைகட்டிச் சேவகம் பண்ண வேணாம் நீங்க!... என்ன சொல்றீங்க? தயாரா?...உம்...னு ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்பவே இட்டுக்கிட்டுப் போயி அண்ணன்கிட்டச் சொல்லிடலாம்...” “சுயமரியாதை இயக்கத்திலே நான் வந்து சேர்ந்தப்போ அரசியல் - சமூக சேவை எல்லாமே பொதுத் தொண்டுகளாகப் பிரதிபலன் கருதாத சேவைகளாக இருந்திச்சு அண்ணே, இப்போ அதுவும் ஒரு தொழிலாகிச் சம்பாதிக்க முடியுதுன்னு நீங்களே சொல்றீங்க. கேட்க அசிங்கமா இருக்கு. நான் அதுக்கு ஆளில்லே! நாளாக நாளாகப் பொது ஜன சேவைக்குன்னு தொடங்கின எல்லா நல்ல இயக்கமும் பிள்ளையார் பிடிக்கக் குரங்கானாற் போல ஆயிடிச்சு. எல்லாப் பொதுநல இயக்கத்திலேயும் - வேறே வேலையே இல்லாத சோம்பேறிகள், ரெளடிகள், வேறு எதற்கும் கையாலாகாதவர்கள், இடைத்தரகர்கள், லாயக்கில்லாதவர்களெல்லாம் வந்து நிரம்பிட்டாங்கங்கிறது தான் என் அபிப்பிராயம். இதோ எதிரே மேடைக்கு மேலே நடக்குதே ஒரு விழா - அதுவே இதுக்குச் சரியான உதாரணம். சாதனைகளை மறந்து விட்டு மனிதர்களை முகஸ்துதி செய்து மாலை போட்டுத் தமுக்கடித்தே நாம் காலங்கடத்திக் கொண்டிருக்கிறோமே தவிர உழைப்பிலும் உண்மையிலும் நமக்கு நம்பிக்கை போயிடிச்சு...?” “நீங்க ரொம்ப விரக்தியா இருக்கீங்க... பிழைக்க வழி சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க...?” என்றார் பொன்னழகு. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|