10 தமிழாசிரியரான சுதர்சனனுக்கு நேரடியாகவே டெர்மினேஷன் ஆர்டரை அனுப்புவதற்குத் தலைமையாசிரியர் வாசுதேவன் கூடத் தயங்கினார். மறுபடியும் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதற்குப் பதில் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். ‘டெர்மினேஷன் ஆர்டர்’ - டைப் செய்த பின்னும் அதை நிறுத்தி வைத்துக் கொண்டு ஜமீன்தாரைப் போய்ப் பார்த்து விட்டு வந்தார் தலைமையாசிரியர். ஜமீன்தாரோ ஒரே பிடிவாதமாக இருந்தார். “சாயங்காலம் மன்றக்குடி மகபதி அடிகளாரோடு ஸ்கூல் இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு நான் வருவேன். அப்படி வர்ரப்பவே அந்தத் திமிர் பிடிச்ச தமிழ் வாத்தியான் என் கண்ணிலே படக்கூடாது. அதுக்குள்ளாரவே அவனை வீட்டுக்கு அனுப்பிடணும்” - என்றார் ஜமீன்தார். அவ்வளவு பெரிய மனிதரை எதிர்த்து வாதிடும் நெஞ்சுரமும் துணிவும் தலைமையாசிரியருக்கு இல்லை. வேலை நீக்க உத்தரவைச் சுதர்சனனிடம் நேரில் கொடுப்பதா, தபாலில் அனுப்புவதா என்பது பற்றி ரைட்டருக்கும் தலைமையாசிரியருக்கும் சிறிது நேரம் ஒரு சர்ச்சை நிகழ்ந்தது. டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு நேரிலேயே கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்ட பின் தலைமையாசிரியர் அறைக்குச் சுதர்சனனை வரச் சொல்லிக் கொடுப்பதா அல்லது பியூனிடம் கொடுத்தனுப்புவதா என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அவர்களுடைய தயக்கங்களும், பயங்களும் அவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியத்தின் நியாயமின்மையையே நிரூபித்துக் கொண்டிருந்தன. மனச்சாட்சிக்கு விரோதமாகவே அதை அவர்கள் செய்தார்கள். பள்ளி வகுப்பில் படிக்கிற பெண்களுக்கு அவர்களுடைய தமிழ்ப் பாடப்புத்தகங்களிலும், கட்டுரை நோட்டுக்களிலும் ஆபாசமான முறையில் காதல் கடிதங்களை எழுதி வைத்துக் கொடுத்ததாகச் சுதர்சனன் மேல் சார்ஜ் ஃப்ரேம் செய்யப்பட்டிருந்தது. இப்படிக் குற்றம் சாட்டினாலொழிய எம்.இ.ஆர்ச்படி ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ என்று காரணம் காட்டி சுதர்சனனை உடனே டிஸ்மிஸ் செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே இப்படி ஒரு ஜோடனை செய்ய வேண்டியிருந்தது. சாதாரணமாகப் பள்ளிக்கூட சம்பந்தப்பட்ட விழாக்கள் எதற்கும் ஆதர்சபுரம் ஜமீன்தார் வர மாட்டார். கலெக்டர், மந்திரிகள், பெரிய பிரமுகர்கள் யாராவது வந்து கலந்து கொள்கிறார்கள் என்றால் தான் ஜமீன்தார் அபூர்வமாக வருவார். ஜமீன்தார் வந்தால் போட்டோ கிராபஃபருக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் விழா முடிந்த பின்பு தலைமையாசிரியர் ஒரு வசைமாரியைத் தாங்கிக் கொள்வது தவிர்க்க முடியாமல் போய்விடும். அன்று பள்ளிக் கூடத்திற்கு மன்றக்குடி மகபதி அடிகளார் வர இருப்பதனால் அவரோடு அருள் நெறி ஆனந்த மூர்த்தியும் வருவதாயிருந்தார். ஆனந்த மூர்த்தியைப் போன்ற ஓர் எஸ்டேட் உரிமையாளரும் மகபதி அடிகளும் வரும்போது தான் போகாவிட்டால் நன்றாக இராதென்று ஜமீன்தாரும் வர முடிவு செய்திருந்தார். இதில் பெரிய தர்ம சங்கடம் என்னவென்றால் அடிகளார் காரில் வந்து இறங்கி ஆனந்த மூர்த்தியின் பங்களா வில் படியேறி நுழைவதற்குள்ளே இரண்டு மூன்று முறை சுதர்சனன் பெயரைச் சொல்லி அவனைப் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஜமீன்தாரும் ஆனந்தமூர்த்தியுமோ முதல் நாளிரவு சீட்டாட்டத்தின் போதே சுதர்சனனுக்குச் சீட்டுக் கிழித்து அனுப்பி விடுவது என்று முடிவு செய்து கொண்டு விட்டிருந்தார்கள். அடிகளாரும் சுதர்சனனும் பள்ளிக்கூடத்திலே, எங்காவது சந்தித்துக் கொண்டு விட நேர்ந்தால் அடிகளாரின் நிர்ப்பந்தத்திற்காவது சுதர்சனனை மறுபடி வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று பயந்தார் ஜமீன்தார். ஆனந்த மூர்த்தியும் முன்ஜாக்கிரதையாக அதைத் தவிர்த்துவிட விரும்பினார். ஆகவே தன் வீட்டுப் படியேறியதுமே அடிகளார் சுதர்சனனைப் பற்றி விசாரிப்பதை உடனே ஜமீன்தாருக்கு ஃபோன் மூலம் தெரிவித்து விட்டார் ஆனந்தமூர்த்தி. ஜமீன்தாரும் அதைக் கேட்டு உஷாராகி விட்டார். மாலைக்குள்ளே சுதர்சனனிடம் வேலை நீக்க உத்தரவை கொடுத்து அவனை உடன் வெளியே அனுப்பி விடவேண்டும் என்று ஜமீன்தார் தலைமையாசிரியரை விரட்டினார். அருள்நெறி ஆனந்தமூர்த்தியிடம் இரண்டு மூன்றுமுறை, “சுதர்சனன் இருந்தால் வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்புங்க” - என்று அடிகளார் கேட்டும் ஆனந்த மூர்த்தி அதை மெல்லத் தட்டிக் கழித்து விட்டார். இரண்டு மூன்று முறை சொன்னதற்கு மேல் பொறுமை இழந்துவிட்ட அடிகளார் தன்னுடைய கார் டிரைவரையே கூப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் சொல்லி அனுப்பினார். டிரைவர் திரும்பி வந்து தனிமையில் இருந்த அடிகளாரிடம் “இந்த பங்களாவுக்கு அவரு வரமாட்டாருங்களாம் சாமி! ஸ்கூலுக்குப் பேச வர்ரப்போ சாமியை அங்கே பார்க்கறேன்னாரு” - என்று பதிலையும் தெரிவித்து விட்டான். ஆனந்த மூர்த்தியிடம் சுதர்சனனுக்கு ஏதாவது கடுமையான மனஸ்தாபம் இருக்க வேண்டும் என்று அடிகளாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. சுதர்சனனைப் பற்றி வந்ததும் வராததுமாகத் தான் இரண்டு மூன்று தடவை விசாரித்த போதுகளில் ஆனந்தமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்ததையும் பேச்சை மாற்றியதையும், மழுப்பியதையும் அடிகளார் நினைத்துக் கொண்டார். சுதர்சனனைப் போன்ற ஓர் உண்மையான சுயமரியாதைக்காரனை அடிகளார் நேசித்தார். அவனுடைய நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், தன்மானமும், அச்சமின்மையும், ஏராளமான மற்ற சுயமரியாதைக்காரர்களிடம் அவர் பார்த்திராதவை. தன்னிடமே சுதர்சனன், மனத்தில் ஒளிவு மறைவின்றிப் பேசியிருக்கும் நிர்ப்பயமான பேச்சுக்கள் பசுமரத்தாணி போல் அவருள் பதிந்திருந்தன. ‘சரி பள்ளிக்கூட விழாவுக்குப் போகும்போது அங்கே அவனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்கே ஒடிப் போகப் போகிறான்?’-என்று நினைத்துக் கொண்டார் அடிகளார். அடிகளாரைச் சந்திப்பதற்கு யார் யாரையோ பெரிய மனிதர்களை அழைத்து வந்தார் ஆனந்தமூர்த்தி. எல்லாருமே வசதி படைத்தவர்களும், பணக்காரர்களும், நிலப்பிரபுக்களுமாக இருந்தார்கள். அடிகளாரின் அருளால் தங்கள் செல்வமும், புகழும், வசதிகளும் மேலும் மேலும் பெருகும் என்ற சுயநல நம்பிக்கையோடு விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கிப் பூசிக் கொண்டார்கள். கை கட்டி வாய் பொத்தி விலகி நின்று பயபக்தியோடு அவரிடம் மரியாதையாகப் பழகினார்கள். சுதர்சனன் இப்படியெல்லாம் தன்னிடம் செயற்கையாகப் பழக மாட்டான் என்பது அடிகளாருக்கு நினைவு வந்தது. சுதர்சனன் விழுந்து கும்பிட மாட்டான். விபூதி வாங்கிப் பூசமாட்டான் என்றாலும் அன்பாக மரியாதையாக, மனத்திலிருப்பதை ஒளிக்காமல், மறைக்காமல் பழகுவான். அவனுக்கு ஏமாற்றத் தெரியாது. நடிக்கத் தெரியாது. வந்தவர்களுக்காக அவரால் மகிழ முடியவில்லை. வராமலிருந்த சுதர்சனனுக்குத்தான் அவர் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. “ஏன் சாமீ. இந்தத் தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே திமிர் புடிச்சவங்களா இருக்காங்களே? இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் அறிவுரை சொன்னால் தேவலை சாமி!” என்று இருந்தாற் போலிருந்து அருள் நெறி ஆனந்தமூர்த்தி ஏதோ பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தபோது, “ஆமாங்க! ரொம்ப மோசம்! அவங்களுக்குச் சாமி, பூதத்துல நம்பிக்கை இல்லே. பணிவு கிடையாது. எடுத்தெறிஞ்சு பேசறாங்க” என்றார் உடனிருந்த கவுண்டர். தன் மகனுக்குச் சுதர்சனன் தான் கலப்பு மண ஏற்பாடு செய்தான் என்கிற பழைய கோபத்தில் இன்னும் இருந்தார் கவுண்டர். அவரால் சுதர்சனன் மேலுள்ள ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளவே முடியவில்லை.
“இந்த ஊரிலே ஏற்கெனவே ‘அக்ரேரியன் ப்ராப்ளம்’ நிறைய இருக்கு. இங்கே வந்து சூழ்நிலையைக் கெடுக்கிறாப்லே பிரசங்கம்லாம் பண்றாங்க. நம்ம உப்பையே தின்னுட்டு நமக்கே வேட்டு வைக்கிறாங்க. விசுவாசம்கிறதே நாட்டிலேருந்து போயிடிச்சு. பெரிய மனுஷனுக்குச் சாதாரண மரியாதை கூடத் தர மாட்டேங்கிறாங்க ஊரே நல்லா இல்லே” - என்று அழுகுனி வேதாந்தம் போலப் பேசத் தொடங்கினார் அருள்நெறி ஆனந்தமூர்த்தி. இதற்கு அடிகளார் எதுவும் பதில் சொல்லவில்லை.
“சாமி இதையெல்லாம் கண்டிச்சுப் பிரசங்கத்துலே ரெண்டு வார்த்தை ஸ்ட்ராங்காச் சொல்லனும்.” இதற்கும் அடிகளார் பதில் சொல்லவில்லை. நிலப் பிரபுக்களும், உடைமையாளர்களும், வசதியுள்ளவர்களும், உலகம் தங்களுக்காகவே என்று நினைக்கவும் அதற்கு மாறான சூழ்நிலையை எதிரே சந்திக்க நேர்ந்தால், “எல்லாமே கெட்டுவிட்டது” - என்று பேசவுமாக இருப்பார்கள் என்பதற்கு நிதரிசனமாக இருந்தார்கள் அங்கே கூடியிருந்த ஊர்ப்பிரமுகர்கள். அவர்களுக்குக் கோடிக்கணக்கான அடித்தளத்து மக்களின் சிரமங்களைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாதிருந்தது அப்போது.” சரியாகப் பிற்பகல் 3 1/2 மணிக்குப் பள்ளிக்கூடத்துப் ப்யூன் நாதமுனி ஒட்டிய உறையைச் சுதர்சனனிடம் கொண்டு வந்து கொடுத்து டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் ஞாபகமாகக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனான். தன்னிடம் நாதமுனி அதைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போன புத்து நிமிஷத்துக்குப் பின்புதான் சுதர்சனன் அதைப் பிரித்தான். படித்துப் பார்த்தான். ஆனால் பரபரப்போ பதற்றமோ சிறிதும் அடையவில்லை. சிறிது நேரத்தில் பள்ளி வகுப்புக்கள் முடிவதற்கான மணி அடித்தது. இலக்கிய மன்றவிழா இருந்ததனால் இரு பீரியடுகள் முந்தியதாக இருக்கும்போதே வகுப்புக்கள் கலைவதற்கான நிறைவு மணி அடிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் மைதானத்தில் கூடத் தொடங்கியிருந்தனர். சுதர்சனன் சகஜமாகச் சிரித்துப் பேசியபடியே ஆசிரியர்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தான். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மன்றக்குடி மகபதி அடிகளாரின் இலக்கிய மன்றக் கூட்டத்திற்காகப் புறப்பட்டபோது சுதர்சனன் மட்டும் போகாமல் விலகி வீடு திரும்பி விட்டான். அவர்களுடைய வேலை நீக்கத்திற்கான உத்தரவு பற்றி அவன் கவலைப்படவில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அவனுக்கு இல்லை. ஆனால் அவர்கள் அதைச் செய்த விதமும் அதற்காகக் காட்டிய காரணமும் அவனுக்குச் சரியாகப் படவில்லை. ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ - என்று தன்னை நீக்குவதற்காக அவர்கள் போட்டிருந்த காரணம் அவனுக்கு எரிச்சலூட்டியது. தான் செய்யாத குற்றத்தை அவர்கள் தன்மேல் சுமத்தி அனுப்பப் பார்ப்பதை அவன் சகித்துக் கொள்ளத் தயாராயில்லை. நம்பிக்கையான வக்கீல் ஒருவரைக் கலந்து பேசினான். ஆனால் அவருக்குக் கல்வி இலாகா விதிகள் தெரிந்திருக்கவில்லை. ஆதர்சபுரத்திலேயே இருந்த வேறு ஒரு தொண்டு கிழமான ரிடயர்டு எல்.டி.ஹெட்மாஸ்டரை வக்கிலும், சுதர்சனனுமாகப் போய்ப் பார்த்தார்கள். அவரிடமிருந்து கல்வி இலாகா விதிகள் விவரமாகத் தெரிந்தன. அந்த விதிகளின்படி சுதர்சனன் எந்தத் தவறான காரியத்தையும் செய்திருக்கவில்லை என்று தெரியவே வக்கீல் பள்ளி நிர்வாகிக்கும் தலைமையாசிரியருக்கும் நோட்டிஸ் அனுப்பலாம் என்றார். அதைச் சொல்லிவிட்டு, “இதெல்லாம் பண்ணனுமா, அவசியமாங்கிறதை நீங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசியுங்க. உங்களாலே இந்தப் பணக்காரங்களையும் திமிங்கலங்களையும் எதிர்த்து நிற்க முடியும்னா இந்த வம்புலே இறங்குங்க. இல்லாட்டி மூச்சுவிடாமே வேறே எங்கேயாவது வேலை பார்த்துக்கிட்டுப் புறப்பட்டுப் போயிடுங்க” - என்று சுதர்சனனுக்கு ஒர் இலவச அறிவுரையும் கூறினார். “எனக்கு இவங்ககிட்டே வேலை பார்த்து ஆகணும்கிறது இல்லே. ஆனால் ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்டினாலே’ தான் நான் வெளியேற்றப்பட்டேன்னு அவங்க புளுகியிருக்கிற புளுகை மட்டும் நான் அப்படியே ஒத்துக்கிட்டுப் போகத் தயாராயில்லே சார்” - என்றான் சுதர்சனன். பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|