31 மதிவாணனைப் பார்த்ததில் பழைய நாட்களின் நினைவுகள் மனத்தில் விரைந்து சுழன்றன. புலவர் கல்லூரி வாழ்க்கை, திருவையாறு காவேரியில் நீச்சலடித்தது, பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு, எல்லாம் முறையாகவும். தாறுமாறாகவும் ஞாபகம் வந்தன. ‘சோமசுந்தரம்’ என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தார் அவர். “என்ன செய்யிறீங்க மதிவாணன்? செளக்கியமா இருக்கீங்களா? எப்படி வாழ்க்கை நடக்குது?” “இங்கேதான் மெட்ராஸ்லே ஒரு வாரப் பத்திரிகையிலே புரூப் ரீடரா இருக்கேன். செளக்கியத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே. ஆனா இப்ப நான் வாங்கற சம்பளத்தை நம்பி எந்தப் பொம்பிளையும் இப்ப எனக்குக் கழுத்தை நீட்ட முடியாது.” “நீங்க எப்பிடி அண்ணே? இன்னும் தனிக்கட்டை தானா?” “தனி ஆள்னு திருத்திக்குங்க. நான் என்னிக்கும், எதிலேயும் கட்டையா இருந்ததில்லே. இனிமேயும் அப்பிடி இருக்கப் போறது கிடையாது. ஆனா அதுக்காக எனக்குள்ளாரப் பெரிய ஏக்கம் எதுவும் பிடிச்சு வாட்டறதில்லே. ஒரு விதத்திலே என்னோட எதிர்நீச்சல் சுபாவத்துக்கு இப்பிடித் தனி ஆளா இருக்கறதே நல்லதுன்னு கூடத் தோணுது...” “‘இல்லறமல்லது நல்லறமில்லை’ - ‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’ன்னெல்லாம் நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்களே அண்ணே...” “அவங்க காலத்துச் சமூக அமைப்பே வேறு. நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் கூறப்பட்ட அறிவுரைகள் அறவுரைகள் எல்லாமே இன்றைய புதிய சூழ்நிலையிலும், புதிய காலத்திலும் மறுபரிசீலனைக்குரியவை.” “இன்னமும் அண்ணைக்கி இருந்த மாதிரியேதான் தர்க்கம் பண்றீங்கண்ணே! கொஞ்சங்கூட மாறலே... வாங்க... ஒரு காபி குடிச்சிட்டுப் ‘பீச்’லே போய் உட்கார்ந்து பேசுவோம். . . ” வாழ்வில் நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் ஒரு கல்லூரி தோழனை மறுத்துச் சொல்லி ஏமாற்ற விரும்பாத காரணத்தால் மதிவாணனோடு காப்பிக் குடிக்கச் சென்றான் சுதர்சனன். மாட்டேனென்று மறுப்பதோ அப்படி மறுப்பதன் மூலம் தன்னை உயரத்தில் தூக்கி நிறுத்திக் கொள்ளுவதோ நண்பனை அவமதிப்பதாக இருக்குமென்று அவன் நினைத்தான். தன்னை மதிப்பதோடு பிறரை அவமதிக்காமலிருப்பதும் சேர்த்துத்தான் சுயமரியாதை என்றெண்ணினான் அவன்.
காபி குடித்துக் கொண்டே மதிவாணனிடம் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையைப் பற்றி, விசாரித்தான் சுதர்சனன்.
“சேட் ஜம்னாதாஸ் கிஷன் சந்த்னு யாரோ ஒரு வடக்கத்தி ஆள் நடத்தற பத்திரிகைங்க, ஒரு சினிமா வீக்லி, ரெண்டு ஃபாஷன் ஜர்னல், மூணு டெய்லி தமிழ் தெலுங்கு மலையாளம்னு எல்லாத்திலியுமா இருக்கு. அதோட தமிழ்ல ஒரு வீக்லியும் புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க! ‘தமிழ் மணி மாலை’ன்னு பேரு.” “காவி-அதான் கா. விஜயராகவன்கிறவரு.” “அதென்ன காவி கமண்டலம்னு என்னென்னவோ மாதிரிச் சாமியாருங்க விவகாரமாய்ப் பேரெல்லாம் வருது?” “அது காவன்னா விஜயராகவன்கிற முழுப் பேரோட சுருக்கம். சட்னு ஜனங்க ஞாபகத்திலே இருக்கிற மாதிரி வரணும் பாருங்க... அதான்...” “நீங்க எப்பிடி இதிலே போய்ப் புகுந்தீங்க?... எங்கேயாவது ஹைஸ்கூல்லே தமிழ்ப் பண்டிட்டா இருப்பீங்கன்னில்லே நினைச்சேன்?... சாய்ஞ்சாச் சாயிற பக்கமே சாயிற மாடுங்க மாதிரிப் புலவர், வித்துவான், பண்டிதர்களை மாதிரித் தமிழ்ப் பட்டதாரிகளை எல்லாம் தமிழ் வாத்தியார் வேலைக்குத் தவிர வேறெதுக்கும் நுழைய விடாம வச்சிருக்கிற நாட்டிலே தான் நாம வசிக்கிறோம். ஆனா அடிக்கடி நாட்டை ஆளர கட்சிக்காரங்க யாருன்னாலும் ‘தமிழாசிரியர் பணியைப் போலப் புனிதமானது ஒண்ணும் இல்லே’ன்னு மேடையிலே, பெருமையாப் பேசுவாங்க...” “அதுக்கில்லேண்ணே! ஸ்கூல்லே இருந்தால் காம்போஸிஷன் நோட்புக்ஸ் திருத்தப் போறோம்... இங்கே புரூஃப் திருத்தறோம். பெரிசா இதுலே வித்தியாசம் ஒண்ணுமில்லே...” “ஆசிரியருன்னீங்களே, யாரோ காவியோ கமண்டலமோ, அவரு நல்லாப் படிச்சவரா? நல்லது கெட்டது சிந்திக்கத் தெரிஞ்சவரா? மதிப்பு மரியாதை தெரிஞ்சவரா?” “ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணிக்கிட்டிருந்தாரு... அதே வகையிலே தான் எங்க முதலாளிங்களுக்கும் கொஞ்சம் பழக்கம்... இவங்களுக்கு அவரைப் பிடிச்சுப்போச்சு, எடிட்டராப் போட்டுட்டாங்க...” “எக்ஸ்ட்ரா சப்ளைன்னா? என்னன்னு புரியும்படியாச் சொல்லுங்க.” “புரியும் படியாச் சொன்னா ‘அசிங்கம்’னு தான் இப்படி சொன்னேன் அண்ணே! இப்போ நீங்களே வற்புறுத்திக் கேட்கிறீங்க...! அதாவது அழகான இளம் பெண்களைச் சினிமாவிலே நடிக்கிறதுக்குன்னு ஆசை காட்டிக் கொண்டாந்து இந்த ‘லயன்’லே விடறது...” “ஒகோ... அந்த மாதிரி செர்வீஸா?” “இங்கிலீஷ் படிச்சவங்க- ‘கோ பிட்வின்’னு சொல்லுவாங்க... இந்தப் பட்டணம்கிற கலாசாரச் சீரழிவுக்கேந்திரத்திலே மரியாதையும் மானமும் உள்ள நல்ல உத்யோகம்லாம் இன்னிக்கு இந்த மாதிரிக் ‘கோ பிட்வீனு’ங்க கையிலே போய்ச் சிக்கிடிச்சு...” “ஒரு பெரிய புரட்சிக்கான சூழ்நிலை வர்ரப்ப இப்பிடிக், கசடுகள்லாம் மொத்தமா அடிச்சுட்டுப் போயிடும். கவலைப்படாதே. இப்படி நசிவு சக்திகள் தென்பட்டு அங்கங்கே பொது வெறுப்பும் ஆத்திரமும் உருவான பின்புதான் புரட்சியே வரும். அதுதான் உலக வரலாறு. அடிச்சிக்கிட்டு போய் ஒழியறத்துக்கு முன்னாடிக் கொஞ்சநேரம் எல்லாருக்கும் நெறையத் தெரியற மாதிரி இதெல்லாம் மேலாக மிதக்கும். அது போலத்தான் இதுவும் இப்ப மேலாகத் தெரியுது.” “காவிக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஆபிஸ் கார் ஒண்ணு குடுத்திருக்காங்க. இன்னிக்கி அமெரிக்கா நாளைக்கி ஜப்பான் நாளன்னிக்கி ஆஸ்திரேலியான்னு பறந்துக் கிட்டிருக்காரு.” “பூர்ஷ்வா சமூக அமைப்பில் ‘பிம்ப்’களும் இடைத் தரகர்களும் லாப வேட்டைக்காரர்களும் தான் தற்காலிகமான பல வசதிகளோடு செழிப்பாக இருப்பார்கள். அது தவிர்க்க முடியாதது.” “எங்க பத்திரிகை முதலாளிக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. சர்க்குலேஷன் நிறைய இருந்தால் போதும். ஒவ்வொரு பத்தாயிரம் பிரதி ஏறினதும் திருப்பதிக்குப் போயி நூறு ரூபாய் உண்டியல்லே போட்டுச் சாமி கும்பிட்டிட்டு வந்துடுவாரு!” “லாபத்துலே சாமிக்கு லஞ்சமா?” “ஆசிரியர் காவியும் கூடப் போய்ச் சாமி கும்பிட்டுட்டு வருவாரு. அவருக்கும் சாமி பக்தி நிறைய உண்டு.” “அதுலே எது அதிகம்? சாமி பக்தியா? பொம்பளை பக்தியா? இந்த ஊர்லே சில பேரு ரெண்டையுமே ஒரே மாதிரித்தான் பண்றாங்க. பொம்பளைக்கும் நிறையச் செலவழிக்கிறாங்க. எது மேலே அவங்களுக்கும் ஆசை அதிகம்னு தான் தெரியலே?” “அது சரி! நீங்க எண்ணண்ணே செய்றிங்க? உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே...” மதிவாணன் பேச்சை மாற்ற முயன்றதுபோல் தெரிந்தது. “எங்கண்ணே தங்கியிருக்கிங்க...” “இங்கேதான் திருவல்லிக்கேணியிலே... நீங்க...?” “அட! அதிசயமாவில்லே இருக்கு. நானும் இங்கேதான் தங்கியிருக்கேன், நீங்களும் இங்கேயே இருந்துமா இத்தினி நாள் ஒருத்தர்கொருத்தர் பார்த்துக்காம இருக்கோம்?” “அது இந்த மாதிரி ஊர்லே ரொம்ப சகஜம். அடுத்த வீட்டுக்காரனைத் தெரிஞ்சுக்கவே ஆறுமாசம் ஆகிற மாதிரி வறட்டு ஜம்பமும் அசட்டு நாகரிகமும் பிடிச்ச ஊரு இது...” “உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்க ஆபீஸிலேயே எதினாச்சும் புரூஃப் ரீடர் அது இதுன்னு காலி இருக்காங்கிறதை விசாரிக்கலாம். தமிழ்ப் பத்திரிகை நடத்தறதுக்குக் கொஞ்சம் தமிழ் தெரிஞ்சவங்களோட உதவியும் தேவைன்னு இப்பல்லாம் நெனைக்க ஆரம்பிச்சிருக்காங்க.” “அதாவது தமிழிலே விஷய ஞானமுள்ளவன் ஒருத்தன் தமிழ்ப் பத்திரிகை ஆபீஸிலே இருந்தா அதுனாலேபெரிய, எடைஞ்சல் எதுவும் இல்லேன்னு நினைக்கிற அளவு தாராள மனசு வந்திருக்கு... இல்லியா? மாமனார் மாமியார் சீர்வரிசை, தலை தீபாவளி, பட்டாஸ், மைத்துனன் ஜோக், நாத்தனார்க் கொடுமை இதுக்கு மேலே சமூகப் பிரச்சனைகளே இல்லேன்னு பண்ணி வச்சிருந்தானுவ...” “இப்ப நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு அண்ணோ இல்லாட்டி நான் வேலை பார்க்க முடியுமா?” “நீங்க என்ன பெரிய குபேரன் வேலையா பார்க்கிறீங்க? சும்மாக் கன்னாச் சன்னாத் திருத்திக்கிட்டிருக்கீங்க, அவ்வளவு தானே?” “ஏதோ அதாச்சும் குடுத்திருக்காங்களே?” “சின்ன விஷயங்களிலேயே திருப்தியடைஞ்சு வாழ்வில் மேற்கொண்டு எதுவும் முயலாமல் பிரயத்தனத் தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்கு அதுசரிதான்! என்னாலே அது முடியாது. கடைசி விநாடி வரை அடுத்த மேல் படியிலே ஏறியாகணும்கிற போராடும் குணமுள்ள வாழ்க்கையைத் தேடி முயன்று வாழ விரும்பறவன் நான். தமிழ் தெரியாதவன் முதல் போட்டுத் தரம் தெரியாதவன் அதிகாரம் பண்ணி நடத்தற பத்திரிகையிலே என்னை மாதிரி ஆளாலே காலந்தள்ள முடியாது. அப்படி வேலை எனக்கு ஒருநாளும் ஒத்து வரவும் வராது.” “எனக்கே தட்டிச் சொல்ல முடியாத சிபாரிசு இருந்ததாலே தான் இந்த வேலை கிடைச்சது. இல்லாட்டி ‘காவி’ அவருக்கு வேண்டிய யாரையாவது நியமிச்சு அதிலேயும் ஏதாவது கமிஷன் அடிச்சிருப்பாரு.” “அதென்ன கமிஷன் அடிக்கிறது?” “முன்னாடி எண்ணெய், மொளகாய், உப்புப் புளி பருப்புக்குத்தான் கமிஷன் மண்டிங்க இருந்திச்சு. இப்போ பத்திரிகை ஆபீஸுங்களும் கமிஷன் மண்டி மாதிரி ஆயிடுச்சாக்கும்?” “அதுக்கு ஆரம்ப முகாம் உங்க ஆபீஸ்தானா? இனிமே தான் மத்ததுக்கும் அது மெல்ல மெல்லப் பரவும்” என்று கூறிவிட்டுச் சுதர்சனனே மேலும் சொல்லலானான்: “நான் தான் அப்பவே சொன்னேனே, பூர்ஷ்வா சமூக அமைப்பிலே எல்லா விவகாரங்களிலும் இடைத்தரகர்களும் கமிஷன் ஏஜண்டுகளும் உழைக்காதவர்களுமே அதிக லாபம் சம்பாதிப்பவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததுன்னு.” பேசியபடியே சுதர்சனனும் மதிவாணனும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள். கடற்கரையிலிருந்து நகரை நோக்கிக் குளிர்ந்த காற்றுப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. நகரும் கடற்கரையும் சங்கமமாகிற அந்த முகத்துவாரத்தில் காற்று மிகவும் சுத்தமாகவும் சுகமாகவும் இருந்தது. சுதர்சனன் சொன்னான்: “இந்தக் காத்து ஒண்ணு தான் மெட்ராஸ்லே சுத்தமா இருக்கு. இதுவும் இந்த இடத் திலேதான் இப்பிடிக் சுத்தமா இருக்க முடியுது - ஊருக்குள்ளார நுழைஞ்சிட்டாக் கலப்படமாயிப் போகுது.” “கலப்படமே இங்கே ஒரு புதுக்கலாசாரமாவே ஆயிப் போச்சு அண்ணே!” “புலவர் கல்லுரரியிலே படிக்கறப்ப இருந்த தன்மானம், துணிவு, தீமையான, தவறான விஷயங்களைப் பற்றிய ஆத்திரத்தோடு கூடின அலட்சியம் இதெல்லாம் போயி நீங்க இப்பிடிச் சீத்தலைச் சாத்தனார் வேலை - அதான் புரூஃப் ரீடிங்லே சிக்கினது எனக்குப் பெரிய ஆச்சரியமாகத் தான் இருக்கு?” “ஆமாண்ணே! சித்தலைச் சாத்தனார் மாதிரி எழுத்தாணியாலே தலையிலே குத்திக்காத குறைதான்.” “தலைப்புக்காகத் தலையிலே குத்திக்கிட்டுச் செத்தாலும் கூட இப்போ இங்கே யாரும் அதெப்பத்திக் கவலைப் படமாட்டானுவ.” பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|