32 மதிவாணனைச் சந்தித்த மறுநாள் டேவிட் கந்தையாவைத் தற்செயலாகத் திருவல்லிக்கேணியில் பார்த்தபோது, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் வேறு யாரையோ தமிழாசிரியராக நியமித்து விட்டதாக அவர் கூறினார். பள்ளிக் கமிட்டியில் இருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சிசு பாலனார் அதற்கு அவனை நியமிக்கக்கூடாது என்று கூறி விட்டாராம். ஆகவே அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. நாட்களும் கையிலிருந்த காசும் கரையத் தொடங்கின. லஞ்ச ஊழலுக்காகச் சிசுபாலனாரை அவன் முன்பே ஒரு கூட்டத்தில் கடுமையாகச் சாடிப் பேசியிருந்தான். அழகு லாட்ஜ் இருந்த அதே தெருவிலுள்ள ஓர் அச்சகத்தில் நிரந்தரமில்லாத அவ்வப்போது திருத்துகிற புரூஃப்களுக்கு உதிரியாகப் பணம் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை அகப்பட்டது. சுதர்சனன் அந்த அச்சகத்துக்குப் போயும் திருத்தலாம், அவனது அறையைத் தேடியும் புரூஃப்கள் வரும். அவனையோ, அவனது சுதந்திரத்தையோ, எதிர்நீச்சலிடும் குணத்தையோ ஒரு வகையிலும் பாதிக்காத வேலையாயிருந்தது. அது மாதம் இருநூறு ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்தது. புரூஃப் கொஞ்சம் அதிகம் வந்த மாதங்களில் இருநூற்றைம்பது கூடக் கிடைத்தது. வேலை அவனை எந்த விதத்திலும் அடக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. அவன் அந்த அச்சகத்தில் மாதச் சம்பளத்துக்குச் சேர்ந்திருந்தால் ஒருவேளை அப்படிக் கட்டுப்பாடு வந்துவிட்டிருக்கக் கூடும். பிழை திருத்துவதை விட அதிக முனைப்போடு சமூகத்தைத் திருத்தி விடவும் ஆசைப்பட்டான் சுதர்சனன். அச்சுப் பிழை திருத்துவதைப் போல் சமூகம் அவ்வளவு எளிதாகத் திருந்தி விடத் தயாராவில்லை. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் எங்கே எந்த மூலையில் திரும்பினாலும் ஊழலும், ஒழுங்கின்மையும் தெரிந்தன. மனிதர்கள் ஏமாறினார்கள் அல்லது ஏமாற்றினார்கள். ஊழல்காரரையும் ஒழுங்கின்மையின் உற்பத்தி ஸ்தானத்தையும் கண்டு மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அஞ்சினார்கள். மடங்கினார்கள். ஒடுங்கினார்கள். ஒளிந்தார்கள். நெளிந்து மெல்ல நழுவினார்கள். அவர்களையும் அவைகளையும் பார்த்துச் சிறிதும் முனை மழுங்கி விடாத கூர்மையோடு போராடவும், எதிர் நீச்சலிடவும் சுதர்சனன் தயாராகக் காத்திருந்தான்.
முன்பு தான் பேசிய ஒரு கூட்டத்தில் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் சிசுபாலனார் லஞ்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு மார்க் போடுவது பற்றியும் பி.எச்.டிக்கு ரேட் வாங்கிப் பங்கீடு செய்து தருவது பற்றியும் சாடியதால் தான் சுதர்சனன் தன் வேலை வாய்ப்பை இழந்திருந்தான்.
அதிலிருந்து அவனைத் ‘தமிழ்த்துரோகி’ என்று ‘பிராண்ட்’ செய்து பிறரிடம் துஷ்பிரசாரம் செய்யலானார் அவர். டாக்டர் சிசுபாலனார் தமிழறிந்தது கொஞ்சம். அதிகம் அறிந்தது காக்கை பிடிப்பது. காக்கை பிடித்தே வாழ்வில் முன்னுக்கு வந்தவர் அவர். அறிவுக்கும் அவருக்கும் ஒரு காத தூரம். ‘எந்தத் தமிழன் காக்கை பிடித்தாலும் அவன் சுய மரியாதையற்றவன்’ - என்பது சுதர்சனனின் கொள்கை. அதை அவன் உரத்துக் கூறிச் சிசுபாலனாரைக் கண்டித்தான். அவனுக்கு எங்கும் எதிலும் தமிழ் தொடர்பான உத்தியோகம் எதுவும் கிடைத்து விடாமல் இருக்கும்படி சிசுபாலனார் அரும்பாடுபட்டுக் கவனித்துக் கொண்டார். சிசுபாலனாரின் எதிர்ப்பைத் துச்சமாக நினைத்தான் சுதர்சனன். அவரைவிடப் பெரிய பதவிகளிலுள்ள தீயவர்களையே எதிர்த்துக் கொள்ளவும் அவன் தயாராயிருந்தான். யாருக்கும் எதற்கும் அவன் அஞ்சவில்லை. கூர் மழுங்கவில்லை. நன்றாகத் தீட்டிய கத்தியின் நுனியைப்போல் அவன் அறிவு கூராயிருந்தது. நேர்மை வளையாமல் இருந்தது, நிமிர்வு மடங்காமல் இருந்தது.
‘கொடுத்தும் கொளல் வேண்டுமன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை’ என்ற குறள் கூறுவது போல் சமூக விரோதிகளின் பகையை விலை கொடுத்தாவது வாங்கி எதிர்க்க ஆசைப்பட்டான் அவன். காலம் ஓடியது. தனது போர்க்குணம் மழுங்காமல், அவன் சென்னையில் வாழ்ந்தான். சென்னையின் கலப்படச் சூழ்நிலை கூட இவனைக் கட்டுக் குலைக்க முடியவில்லை. மிக அதிகப் பணமும், பெரிய உத்தியோகமும், நிறைய வசதிகளும் தனது எதிர்நீச்சலிடும் குணத்தை மாற்றித் தன்னைக் கூர் மழுங்கப் பண்ணி விடுமோ என்று தயங்கி அவற்றை ஏற்காமலே ஒரு சீர்திருத்தத் துறவியாக நோன்பு நோற்று விரதமிருந்து வாழ்ந்தான் அவன். சமூகம் நலம் பெறப் பத்தியமிருப்பவனைப் போல இருந்தான். குழந்தை நலம் பெறக் கசப்பான மருந்தையும் உண்ணும் தாய்போல தான் சிரமப் பட்டான். அவனைப் பலர் பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள். வேறு சிலர் கிறுக்கு என்றார்கள். வேறு சிலர் கடவுள் நம்பிக்கையற்றவன் என்றார்கள். ஒத்துப்போகத் தெரியாத முரடு என்றார்கள். என்னென்னவோ சொன்னார்கள். எப்படி எப்டியோ சொன்னார்கள். அவற்றுக்காக அவன் கவலைப்பட வில்லை. தன்னைப் பற்றிய பயம் இல்லாததால் பிறருக்கு அவன் அஞ்சவில்லை, குற்றமுள்ள பிறரை அஞ்ச வைத்தான். கோடி ரூபாய் வருமானமுள்ள ஒரு கோழையாயிருப்பதைவிட அன்றாடம் உழைத்துக் கூலிக்காசு வாங்கும் தன் மானமுள்ள தீரனாயிருக்கவே அவன் விரும்பினான். அது அவன் கூர்மைக்குப் பாதுகாப்பு அளித்தது. எவ்வளவு காலமானாலும் தீட்டிய அம்புபோல் கூராகப் பாயத் தயாராயிருக்க வேண்டுமென்பது வாழ்வைப் பற்றிய அவனது கணிப்பு. வாழ்நாள் முழுவதும் அப்படி இருந்துவிட அவனால் முடியும். முடிகிறது. முடிந்தது. ஒருவேளை அவன் வாழ்வே முடிந்தாலும் கூட இந்தக் கூர்மை முடியாது. இது ஒரு தொடர்கின்ற தத்துவமாக அடுத்த தலைமுறை இளம் இலட்சியவாதிகளுக்கு இதே அளவு முனை மழுங்காமல் அளிக்கப்படும். தொடர்ந்து தரப்படும். ஏதோ ஒரு மூல விளக்கிலிருந்து பல அடுப்புக்களை மூட்டிச் சமைக்க முடிவதுபோல் சுதர்சனன் என்ற இந்த ‘மூலக்கனல்’ பட்டினத்தின் எந்த மூலையிலாவது எப்படியாவது அவியாமல் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறவரை சமூகப் புரட்சிக்கான கருத்துக்களும் , துணிவும் சமைக்கப் படும் இடத்துக்கெல்லாம் எரிபொருளைக் கொடுத்து இயக்க இது நிச்சயமாகப் பயன்படும். அதுவரை அவனது கூர்மையும் அழியாது. கதையும் அழியாது என்ற நம்பிக்கையோடு அவனைப் பட்டினத்தில் அக்கினிக் குஞ்சாகப் பொதிந்து வைத்துப் பார்க்கலாமே! சுதர்சனன் என்ற அந்த இளம் அக்கினிக் குஞ்சின் வெம்மையில் பல பொய்ம் முகங்களும், முகத்துவாரங்களும் எரிந்து அழியட்டுமே! அவை அழிகிற வரை அவனுக்கும் அவனுடைய கதைக்கும் பட்டினத்தில் இடமிருக்கிறது. அவை முடிய வழி இல்லை. காரணமும் இல்லை. தீமையை அழிக்கப் புறப்படுகிறவனின் வாழ்க்கை வசதியானதாக அமைய முடியாது. அது வசதியானதாக அமைந்து விட்டால் தீமைகளை அவன் அழிக்க முடியாது. இந்த ஒரே காரணத்துக்காகச் சுதர்சனனை இப்போது அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அந்த முனை மழுங்காத போர்க்குணத்தின் கூர்மையுடனேயே சென்னையில் விட்டுவிட்டு நாம் இதோடு விடைபெறுவோம். சிரமசாத்தியமான அவனுடைய போர்களில் அவன் வெற்றிபெறட்டும்! அவன் பெறும் வெற்றிகள் அவுனுடைய சொந்த வெற்றியாக மட்டும் அமையாது. சமூகத்தின் பொது வெற்றிகளாகவே அவை வாய்க்கும். அந்த வெற்றிகளுக்காக அவனையும் அவன் எதிர்கொண்டு அழிக்க வேண்டிய பொய்ம் முகங்களையும் தனியே விடுத்து நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். மறுபடி அவசியம் நேரும்போது அவசியம் நேர்கிற காலங்களில் இடங்களில் அவனை அந்தக் கூர் மழுங்காத தீரனை நீங்களும் நானும் அவசியம் சந்திக்கலாம். அதுவரை...? (முற்றும்) பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|