19 ‘நியாயவாதியாயிருப்பதே விரக்திக்கு அடையாளம் என்று அவசரமாகத் தீர்ப்புச் சொல்லிவிடும் அளவுக்குச் சமூகமும் மனிதர்களும் இன்று மரத்துப் போயிருக்கிறார்கள் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. தவறுகளைச் செய்தோ, பிழைகளைப் புரிந்தோ எப்படியாவது முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து பணம் சம்பாதிப்பது தான் விரக்தியற்ற நிலை என்று பொன்னழகு கருதுவது போல் அவன் பேச்சு இருந்தது. ஏழையின் வேதாந்தம் எங்கும் எடுபடுவதில்லை. வேதாந்தம் பேசவும் கார், பங்களா, பணம், பதவி எல்லாம் செளகரியமாக இருந்தால் தான் அதைக் கேட்கவும், நம்பவும், மதிக்கவும் ஆட்கள் இருப்பார்கள். திருவோடு ஏந்தும் சாமியாரைச் சந்நியாஸியாக ஏற்றுக் கொள்வதைவிட இம்பாலா காரில் காவி உடையோடு வந்து இறங்கி, “பிரின்ஸிபில்ஸ் ஆஃப் யோகா” என்று தலைப்பிட்டுக் கொண்டு பேசுகிற லக்சூரியஸ் யோகிக்குத்தான் இன்று மதிப்பு என்று தெரிந்தது. தன்னுடைய நியாயவாதம் எடுபடாதது ஏன் என்று சுதர்சனனுக்கே புரிந்தது. இருந்த வேலையையும் விட்டுவிட்டுப் புதிய வேலையைத் தேடிப் பட்டினத்துக்கு வந்த இடத்திலே தன்னை யார் எப்படி மதிப்பார்கள்? சுதர்சனன் பொன்னழகை நோக்கி வினவினான்: “நிஜத்தைப் பேசினாலே அதை விரக்தின்னு சொல்றீங்க பொன்னழகண்ணே! ‘பிழைக்க வழி’ங்கிற தமிழ் வார்த்தைக்குப் பிழை செய்வதற்கு வழின்னும் அர்த்தம். தவறு செய்வதற்கு வழின்னும் அதுக்கே இன்னொரு விதமாகவும் அர்த்தம் சொல்லலாம். எதிர்காலத்திலே ஒரே காரியத்துக்கு இந்த இரண்டு அர்த்தமுமே வரும் என்று நினைத்தோ என்னவோ இப்படி ஒரு சிலேடைப் பொருளே இதுலே தற்செயலா அமைஞ்சிருக்கு அண்ணே!” “சரி நான் வரேன்... எதுக்கும் தேவைப்பட்டா வாங்க. இந்தாங்க என் விஸிட்டிங் கார்டு” என்று ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி விட்டு நகர்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் அதை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டான். சிறுமைகளையும் கயமைகளையும் கண்டு துடிதுடித்துக் குமுறும் ஓர் இளம் நேர்மையாளனுக்கு ஏற்படுகிற குமட்டல் அப்போது சுதர்சனனுக்கும் ஏற்பட்டது. அவன் இளமையில் நம்பிய தலைவர்கள் எல்லாம் முதலில் பஞ்சகல்யாணிக் குதிரைகளாகத் தோன்றிப் பின்பு மெல்ல மெல்லக் கழுதைகளாகத் தேய்ந்து போயிருந்தனர். அவனுக்குச் சுயமரியாதையைப் பால பாடம் சொல்லிக் கொடுத்த பெரியவர்களே பணத்துக்காகப் பலரிடம் அவ மரியாதைப்படக் கூடத் தயாராயிருப்பதை அவன் கண்ணெதிரே பட்டவர்த்தனமாகக் கண்டிருந்தான். ஏழைகளுக்காகக் கண்ணிர் சிந்தியே அதன் மூலம் பணக்காரர்களாகி விட்ட பல தலைவர்களுக்குப் பல முகங்கள் இருந்ததை அவன் அறிவான். ஏழைக்கு முன் கண்ணிர் விட ஒரு முகம், வசதியுள்ளவனுக்கு முன் சிரித்து மலர ஒரு முகம், மேடைகளிலே மட்டும் சீர்திருத்தம் பேச ஒரு முகம் என்று பொய்யான பல முகங்களை வைத்திருக்கும் சமூக விரோதக் கூட்டம் ஒன்று அரசியலின் பெயராலும் பொது வாழ்வின் பெயராலும் பெருகி வருவதை அவன் கூர்ந்து, கவனித்து மனம் கசந்து கொண்டிருந்தான். காரித் துப்பலாம் போன்ற குணக் கேட்டையும், பல நிலைக்கேற்ற பல்வேறு முகங்களையும் உடைய சில மனிதர்களே எல்லா இடங்களிலும் மாலைகளுக்காகத் தங்கள் கழுத்தை நீட்டிக் கொண்டிருக்கிற சமூகத்துக்கு எப்போது யாரால் விடிவு வரப்போகிறதோ என்று குமுறியது சுதர்சனனின் உள்ளம்.
மேடையில் தலைவருக்குத் தொண்டர்கள் ஒவ்வொரு வார்டின் சார்பிலும் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள். மொத்தம் பத்தே மாலைகளை வைத்துக் கொண்டு நூறு பேர் மாற்றி மாற்றித் தலைவருக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நபர் அணிவித்த மாலையைத் தலைவர் கழற்றி மேஜை மேல் வைத்ததும் பின்புறமிருந்து இரண்டு கைகள் நீண்டு அந்த மாலையை எடுத்தன. அடுத்த மாலைக்கும் இதே கதி. இந்த ரகசியத்தின் கீழ்ப் பத்தே மாலைகளைப் பத்துத் தடவை மாற்றி மாற்றிப் போட்டால் நூறு பேர் மாலை போட்ட பெருமை வந்துவிடும். ஆனால் முடிவில் மாலைகளை எண்ணிப் பார்த்தால் மட்டும் பத்து மாலைகள்தான் இருக்கும். தலைவருக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை. கழுத்தில் விழுந்த மாலை ஒவ்வொன்றையும் தாம் கழற்றி வைக்கக் கழற்றி வைக்க அவை வைத்த சுவடு தெரியாமல் மாயமாய் மறைந்து மறுபடி புது மலையாய்த் தம் கழுத்துக்கே திரும்ப வருவதும் அவர் அறிந்த உண்மையே. பல ஆண்டுகளுக்கு முன் கட்சியின் சிறப்புக் கூட்டங்களில் மாலை சம்பந்தமான இந்தச் சிக்கன நடவடிக்கையைத் தொண்டர்களுக்கு அவரே கற்றுக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள்.
அங்கே மேடையில் தலைவருக்கு மாலை போட வருகிற ஒவ்வொருவனுக்கும் மாலை போட வேண்டும் என்கிற நோக்கத்தை விடத் தான் ஓர் ஐந்து அல்லது பத்து நிமிஷம் எப்படியாவது தட்டுத் தடுமாறி பேசி விட வேண்டும் என்று முயல்வதே துருத்திக் கொண்டு தெரிந்தது. சிலர் வாய்ப் பதற்றத்தில் பல சொற்களை நீட்டி முழக்கிப் பேசி முடிவில் தலைவருக்கு இம்மலர் மாலையை மாணிக்க மாலையாகப் பாவித்து அணிவிக்கிறேன் என்று கூற நினைத்து, ‘இம்மாலைக்குத் தலைவரை மாணிக்கமாகப் பாவித்து அணிவிக்கிறேன்’ என்று உளறிக் கொட்டினார்கள். உண்மையில் பார்த்தாலும் அந்த வார்த்தைகளே சரியாயிருந்தன. அவர்கள் தலைவருக்கு மாலையணிவிக்கவில்லை. மாலைகளுக்குத் தான் தலைவரை அணிவித்துக் கொண்டிருந்தார்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் தலைவரின் அடுத்த பிறந்த தினத்திற்குள் பத்து மாலைகளுக்குப் பதில் ஒரே மாலையையே நூறு பேர் எப்படி மாற்றி மாற்றிப் போடுவது என்ற உத்தியைக் கண்டுபிடித்து விடுவார்கள் போலிருந்தது. திடீரென்று ஓர் ஆள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியும் கையுமாக மேடையில் ஏறி மைக் முன் வந்தான். ஆட்டுக் குட்டி மேடையலங்கார வெளிச்சங்களில் மிரண்டு ‘அம்மே’ என்று கத்தியது. “தலைவருக்குப் பதினேழாவது வட்டத்தின் சார்பில் இந்த ஆட்டுக் குட்டியை அளிக்கிறேன்” என்றான். தலைவர் அதை அணைத்தாற்போல் வாங்கிப் பக்கத்திலிருந்த ஆளிடம், “பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வை” என்று சொல்லிக் கொடுத்தார். அது மைக்கில் எல்லோருக்குமே தெளிவாகக் கேட்டது. அடுத்து மற்றொருவன் தலைவரிடம் இரண்டு முயல் குட்டிகளை அளித்தான். இந்த விவகாரங்கள் முடியவே இரவு எட்டு மணி வரை ஆகிவிட்டது. ஒரு சர்க்கஸ் காட்சியைப் பார்ப்பதுபோல் சுதர்சனன் மணலில் அம்ர்ந்து இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமத்துக் காவல் தேவதைகளுக்கு ஆடு, மாடு, கோழி என்று நேர்ந்து கொண்டு பலி கொடுக்கும் வழக்கம் ஏனோ அவனுக்கு அப்போது நினைவு வந்தது. தலைவரின் பிறந்த தினப் பாராட்டு விழாப் பொதுக் கூட்டம் இரவு பத்தரை மணிக்கு முடிந்தது. ரகுவும் நண்பர்களும் மேடையிலிருந்து கீழே இறங்கி வர பதினொரு மணி ஆகிவிட்டது. சுதர்சனன் அதுவரை காத்துக் கொண்டிருந்தான். ரகு மேடையிலிருந்து வந்தபோது அவனோடு ஒரு பட்டாளமே வந்தது. தன்னுடன் வந்தவர்களில் புதியவர்களுக்குச் சுதர்சனனை ரகு அறிமுகம் செய்து வைத்த போது, “அடடே! அப்பிடிங்களா? அண்ணன் தமிழ்ப் புலவர்ங்கிறீங்க. தெரிஞ்சிருந்தா ஐயாவைப் பத்தி இவரையும் ரெண்டு வார்த்தை பேசச் சொல்லி மேடையில் ஏற்றியிருக்கலாமே?” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொல்லியதைக் கேட்டபோது உலகம் முழுவதுமே மேடையில் ஏறிப் பேசுவதற்கு ஏங்கிக் கொண்டு தவிப்பது போல அவர்களுக்குள் ஒரு பாவனை இருக்கிறது என்பதை உணர முடிந்தது. சுதர்சனனும் அப்படி ஏங்கியிருக்க வேண்டும் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? திரும்புகிற வழியில் ஏதோ விளம்பர போர்டில்லாத மெஸ் போன்ற ஓர் இட்டிலிக் கடையில் கூட்டமாக அத்தனை பேரும் நுழைந்து இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். ரகுவுக்குக் குறைந்தது இருபத்தைந்து ரூபாயாவது அன்று கையிலிருந்து செலவழிந்திருக்க வேண்டும் என்று சுதர்சனன் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டின் அரசியல் முக்கியஸ்தன் செலவாளியாக இருந்தே தீர வேண்டிய அவசியமும் அரசியல் மிகவும் ‘காஸ்ட்லி’யாக இருப்பதும் புரிந்தது. அறைக்குத் திரும்பிச் சிறிது நேரமானதும் தூங்குவதற்கு முன் ரகு தற்செயலாக “ஏனப்பா சுதர்சனம்? நீ இங்கேயே நம்ம ட்யூட்டோரியில்லே இருந்துக்கிறியா? அல்லது ரெகுலர் சர்வீஸா ஏதாவது ஸ்கூல்லே போய் வேலை பார்க்க ஆசையா?” என்று அவனுடைய வேலையைப் பற்றி அப்போதுதான் ஞாபகம் வந்தவனைப் போல் வினவினான். திடீரென்று அவன் இதை வினவியிருந்ததால், சுதர்சனனுக்கு உடனே இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நண்பனுக்கு அப்போது தலைவர் - விழா எல்லாம் மறந்து போய்த் திடீரென்று தன்னுடைய வேலை விஷயம் எப்படி ஞாபகம் வந்ததென்று நினைத்துச் சுதர்சனன் வியந்தான். ஒருவேளை தன்னை விரைவாகத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியின் ஆரம்பமாகத்தான் அந்த வினாவே வெளிவந்ததோ என்றுகூட அவனுக்கு நண்பனின் மேல் சந்தேகமாக இருந்தது. “நிதானமா யோசிச்சு முடிவு பண்ணலாம். இப்போ நடுராத்திரியிலே பேசி முடிவு பண்ண வேண்டிய அத்தனை அவசரமான விஷயமில்லை அது” என்றான் சுதர்சனன். “அதுக்கில்லே! எனக்கு ஒரு புது ஐடியா தோணிச்சு. ஏற்கெனவே சிண்டிகேட் சிதம்பரநாதன் என்னை விடாமத் தூண்டிக்கிட்டிருக்காரு. வெறும் பட்டப்படிப்போட போகாமே ஒரியண்டல் டைட்டில்ஸ் இருக்கே - அதாவது வித்வான் பட்டம், அதுக்கும் இங்கேயே கிளாஸ் நடத்தலாம். டுயூஷன் ஏற்பாடு பண்ணலாம். பிரைவேட்டா வித்வான் எழுதறவங்க எல்லாம் நிறையப்பேர் வந்து சேருவாங்க. அதை அப்படியே உன் பொறுப்பிலே விட்டுடலாம்னு நினைக்கிறேன். வித்வான், புலவர் பட்டங்களுக்கு இப்ப நிறையபேர் படிக்கத் தேடி வர்ராங்க.” “யோசிக்கலாம். எனக்கு ஒண்னும் ஆட்சேபணை இல்லே! எத்தனை பேர் சேருவாங்கன்னு பார்ப்போம். தினப்பத்திரிகையிலே உன் டூட்டோரியல்ஸ் பேரிலே ஒரு விளம்பரம் போட்டால் தானே தெரிந்துவிடும். ‘புதிதாக வித்வான் வகுப்புக்களுக்கும் பாடம் நடத்துகிறோம். சேர விரும்புகிறவர்கள் உடன் விண்ணப்பிக்கவும்’ என்று விளம்பரம் கொடுத்தால் சரியாயிருக்கும்.” “சரி! நாளைக்கே அந்த விளம்பரத்தைக் கொடுத்துப் பார்த்தால் போச்சு! சிண்டிகேட் சார் மட்டும் தயவுபண்ணினார்னா நம்மகிட்ட வந்து சேர்ர ஒவ்வொரு ஸ்டூடண்டையும் ஜெயிக்க வைக்கலாம். அப்படி ஜெயிக்க வச்சு ஒரு வருஷம் நல்ல ரிஸ்ல்ட் காமிச்சிட்டோம்னா அடுத்தவருஷம் தானா நிறைய ஸ்டூடண்ட்ஸ் வந்து சேருவாங்க.” “ஏன்? சிண்டிகேட் சார் தயவு இல்லாமல் - ஸ்டூடண்ட்ஸுக்கு நல்லாக் கோச் - அப் பண்ணியே நாம ஜெயிக்க வைக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை உண்டு. நாம் பட்டம் பெறுவதற்குக் கல்வியின் ஏஜெண்டுகளாகச் செயல்படக் கூடாது. கல்வியை அறிமுகப்படுத்தும் போதகர்களாகச் செயல்பட வேண்டும் ரகு!” “இப்படி எல்லாம் லட்சியம் பேசிக்கிட்டிருந்தோம்னா டூட்டோரியல் காலேஜ் நடத்த முடியாது. ஏதாச்சும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.” “அதாவது ஒழுங்காக இருந்தால் கெடுதல் என்கிறாய். ஒழுங்கின்மையை வேகமாகக் கற்றுக் கொண்டும் கற்பித்தும். வாழ்ந்தால்தான் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறாய்...” சுதர்சனன் இப்படிக் கோபமாகக் கேட்டபோது ரகு சிரித்துக் கொண்டே, “நான் அப்படிச் சொல்லவில்லை அப்பா! உலக அனுபவம் அப்படிச் சொல்லுகிறது. இலட்சியத்துக்கும் அனுபவ நடைமுறைக்கும் நடுவே இருக்கும் இடைவெளி பெரியது தான்! அதற்கு நாம் என்ன செய்வது?” பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|