3

     வாழ்க்கை முறைப்பட வேண்டும். அநாவசியமான வெறிகள் தணிய வேண்டும் என்றுதான் அவன் ஆசிரியர் தொழிலுக்கு வந்தான். தமிழ்க் கல்லூரியில் படித்தபோது இருந்த சுதர்சனன் வேறு. இப்போதுள்ள சுதர்சனன் வேறு என்று பிரித்து நினைக்கவும், பேசவும் ஏற்றபடி அவன் அவ்வளவு தூரம் மாறியிருந்தான்.

     அவன் தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தி அழிப்புப் போர், பிள்ளையார் சிலை உடைப்புப் போர் எல்லாமே நடந்தன. கல்லூரியில் ‘வெட்டிக் கொண்டுவா, என்றால் கட்டிக்கொண்டு வருகிற’ சாமர்த்தியமுள்ள மணி மணியான மாணவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்கள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

     தமிழைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழல்லாததை எல்லாம் அழித்து விடவேண்டும் என்ற முரட்டு வெறியும், பகுத்தறிவு வளர வேண்டுமானால் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டும் என்ற முரண்டும் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்த காலம் அது.

     நாம் ஆதரிக்கும் எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதைவிட நாம் எதிர்க்கும் எண்ணங்களுக்குரியவர்களை அழித்து விடவேண்டும் என்ற எதிர்மறைப் பார்வையே வளர்ந்திருந்தது. பின்பு புலவர் வகுப்பு இறுதி ஆண்டில் அந்தக் கல்லூரியில் அவர்களோடு சேர்ந்து படித்த ஒரு மார்க்சிஸ்டு சுதர்சனனின் இந்தப் பார்வையை மெல்ல மாற்றி உலகளாவிய தத்துவ நோக்காக உருவாக்கினார், .உழைக்கும் கூட்டம், உழைக்காத கூட்டம், உடமைக்குப் போட்டி போடும் சோம்பேறிகள், உழைத்து வாழும் தொழிலாளிகள் என்று பார்வையை பெரியதாக்கினார் அந்த நண்பர்.

     அவன் அதற்கு முன்பு சார்ந்திருந்த இயக்கம் பெரிய நிலப்பிரபுக்களும், பணக்காரர்களும், பழைய ஜஸ்டிஸ்கட்சி ஆட்களும் நிரம்பியதாக இருக்கவே புதியமனப்பான்மையின் காரணமாக அதன் மேலுள்ள பிடிப்பு மெல்ல மெல்ல விடுபட்டு வெறுப்பாக மாறியது. தலைமையாசிரியர் வாசு தேவன் மேல் இன்றும் இதற்கு முன்பும் அவனுள் ஏற்பட்டிருந்த வெறுப்பு சாதி அடிப்படையில் அல்ல. ஆதர்ச புரத்தில், நிலப்பிரபுக்கள் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். ஏழைகள், உழைப்பவர்கள், தொழிலாளிகளும் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள்.

     அந்த ஆண்டின் பள்ளி நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பட்டியல் தயாரித்தபோதே தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் ஒரு சிறிய தகராறு மூண்டிருந்தது. சொல்லப்போனால் தலைமைத் தமிழாசிரிய ராகிய பிச்சாண்டியா பிள்ளைதான் நூல்களின் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். அவர் பழையகாலத் தமிழ்ப் பண்டிதர், தற்கால நூல்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாதவர். சிவஞான முனிவரின் இராமாயண முதற் செய்யுட் ‘சங்கோத்தர விருத்தி’க்குப் பிறகு வந்த வெளியீடுகளைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஆகவே அவராகவே நூல்களின் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பைச் சுதர்சனனிடம் விட்டார். நூற்றைம்பது புத்தகங்களில் சுதர்சனன் ‘வாழ்க்கை வரலாறு’ என்ற பிரிவில் காந்தி, நேரு, சுபாஷ் போஸ் போன்றவர்களோடு கார்ல்மார்க்ஸ், வீரர் வி.ஐ.லெனின், என்ற இரு புத்தகங்களைச் சேர்த்திருந்தான். தலைமையாசிரியருக்குக் கோபம் மூண்டுவிட்டது. “கண்ட புஸ்தகங்களை எல்லாம் சேர்த்துப் பையன்களைக் கெடுக்கப் பார்க்கிறீரே...”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.