25

     சிண்டிகேட் சிதம்பரநாதனின் அந்தக் கை தன் முதுகில் பட்டதற்காக அருவருப்பு அடைந்தவன்போல் சற்றே விலகி நின்றான் சுதர்சனன். சிண்டிகேட் சிரித்தபடியே சொன்னார்:

     “சார்! ரொம்ப உணர்ச்சி வசப்படறாரு. உலக அநுபவம் பத்தாது... நாளாக நாளாகச் சரியாயிடுவாரு”என்றார் சிண்டிகேட்.

     “அதாவது தப்பு - ஊழல் - லஞ்சம், ஏமாற்றுதல், பணம் பண்ணுதல், இதையெல்லாம் எதிர்த்தால் உலக அநுபவம் இல்லாதவன்னு அர்த்தம். இதை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமா ஏத்துக்கிற அளவுக்கு மரத்துப் போயிட்டா அவனுக்கு உலக அனுபவம் வந்து விட்டதுன்னு அர்த்தம்.”

     சுதர்சனின் குரலிலிருந்த தார்மீகக் கோபமும் சத்திய ஆவேசமும் சிதம்பரநாதனை ஒரிரு கணங்கள் பதில் பேச விடாமல் தடுத்துத் தயங்க வைத்தன. அதற்குள் டிரான்ஸ்ஃபர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரியர் குறுக்கிட்டுப் பேசினார்.

     “யதார்த்த நிலைமையும் அப்பிடித்தானே இருக்கு? அதைத்தானே சார் நமக்குச் சொல்றார்? யூனிவர்ஸிடியிலே வியாபாரம் பண்ணாதவன் யார்? எக்ஸாமினேஷன் போர்டு மெம்பர்ஸ் ஒவ்வொருத்தனும், சீஃப் எக்ஸாமினரும், போர்டு மெம்பர் அல்லது சீஃப் எக்ஸாமினர்னு லெட்டர் ஹெட்டிலேயே பிரிண்ட் பண்ணி வச்சிக்கிட்டிருக்காங்க. இது இதுக்கு இன்ன இன்ன ரேட்னு அட்வர்ட்டிஸ்மெண்ட் டாரீஃப் போடற மாதிரி - ஏஜென்ஸி, சப் ஏஜென்ஸி, டீலர், ஸ்ப்-டீலர் எல்லாம் போட்டு வேலை நடக்குது. ஒருத்தன் முணு வருசம் எக்ஸாமினராக இருந்தா வீடு கட்டிடறான். சிஃப் எக்ஸாமினரா இருந்தாலோ காபி எஸ்டேட் வாங்கிடறான். என்னைப் போல ஒரு பேராசிரியருக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மூளை வேலைக்கு மாதச் சம்பளம் ஆயிரம், இரண்டாயிரம்னு சுளைகளையாகக் கிடைச்சாலும் பேராசை போக மாட்டேங்குது. ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் கடின உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளி ஒருத்தன் மாதம் முன்னூறு நானூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாத இதே நாட்டில்தான் நாங்க சிலமணி நேர மூளை உழைப்புக்காக ஆயிரமாயிரமாகச் சம்பாதிக்கிறோம்.”

     “ஏதேது? நீங்களே எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணுவீங்க போல இருக்கே...?”

     “பிரச்சாரம் ஒண்ணுமில்லே. உள்ளதைத்தான் சொன்னேன்.”

     “எல்லா ஊழலும் எல்லா அறியாமையும் கல்வியாலே தான் போகணும்னு சொல்லுவாங்க. ஆனால் கல்வித் துறையிலேயே இத்தனை ஊழலையும் ஓட்டைகளையும் வைத்துக் கொண்டு அப்புறம் இந்த நாட்டில் வேற எதைத் தான் சீர்திருத்த முடியும்?” சுதர்சனன் இப்படிக் கேட்டதற்குச் சிண்டிகேட் சிதம்பர நாதனிடமிருந்து உடனே பதில் வந்தது.

     “எதுக்காகச் சீர்திருத்தணும்னேன்? சீர்திருத்தணும்னு வரிந்து கட்டிக்கொண்டு புறப்படறதுதான் பைத்தியக்காரத்தனம். எவனாலேயும் எதையும் முழுக்கச் சீர்திருத்திட முடியாது இந்த நாட்டிலே. பிரிட்டிஷ்காரன்தான் போயிட்டானே ஒழியக் கல்வி இலாகாவிலே இன்னும் அதே மனப்பான்மையுள்ளவங்கதான் இருக்காங்க. எதையும் நீங்க மாத்திப்பிட முடியாதுன்னேன்.”

     “இன்னும் பத்து வருசத்துக்குப் பள்ளிக் கூடங்களையும் கல்லூரிகளையும் இழுத்து மூடிவிட்டு உடலுழைப்பைக் கட்டாயமாக்க வேண்டும். மனிதத் தன்மையையும், யோக்கியதையையும், நாணயத்தையும், ஒழுக்கத்தையும் சுய கெளரவத்தையும் உழைப்பை மையமாக வைத்துக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாட்டி இந்த தேசம் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிக் கூட்டமாகப் போய்விடும்.”

     “சுதர்சனன் சார் இப்பல்லாம் வர வர இந்த மாதிரிப் புரட்சியாவே பேச ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்த்தாப் பயமாயிருக்கு.”

     “பயமே பாவங்களுக்கெல்லாம் தந்தை என்று மகாகவி பாரதியார் சொல்லியிருக்காரு, தெரியுமா?”

     “இங்கே ஒரு பாவமா ரெண்டு பாவமா? கல்வி இலாகா முழுவதுமே பாவங்களின் முட்டையா இருக்கு. சாதி வெறி, குரூப்பிஸம், பணப் பேராசை, பழிவாங்குதல், அறியாமை, முரண்டு, கொண்டது விடாமை, கொள்கையின்மை, இதெல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தால் அதுதான் நம்ம கல்வி இலாகா. யூனிவர்ஸிடி போர்டு ஆஃப் ஸ்டடீஸ்லே பாடப் புத்தகம் தேர்ந்தெடுக்கறப்போ படிக்கிற மாணவர்களை நினைச்சுத் தேர்ந்தெடுக்கறதில்லே. எக்ஸாமினேஷன் போர்டிலே இருக்கிறவர் தயவு இந்தப் போர்டிலே இருக்கிறவருக்கு வேணும்னு அவர் புத்தகத்தை இவர் பாடமா வச்சுடலாம். ‘அந்தப் புலவர் பொன்னம்பலனார் அஞ்சாறு பொண்ணைப் பெத்துப்பிட்டாரு. ஒண்ணொண்ணுக்கும் கட்டிக் குடுக்க ஐயாயிரம் பத்தாயிரம் செலவாகும். பாவம் அவர் சம்பாதிச்சிக்கட்டும்னுதான் போனவருஷம் எஸ்.எஸ்.எல்.சிக்கு நான் டீடயிலாக இருந்த ‘மண்ணும் விண்ணும் மதிக்கும் வள்ளுவர் மாண்பு’ - என்னும் கட்டுரைத் தொகுதியை இந்த வருசம் பி.யூ.சிக்கு நான் டீடயிலாகப் போட்டிருக்தோம்’னு காரணம் சொல்லுவாங்க. டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பதைவிட லைட்ரீடிங்காக நான் டீடயில்டு ஸ்டடிக்கு வைக்கணும்னு பேரு. ஆனா இங்கே டீடயில்டு ஸ்டடியை விடக் கடினமான வியாசங்களை நான் டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பாங்க. காரணம் யாராவது ஒருத்தர் பொண்ணுக்குக் கலியாணத்துக்குச் செலவழிக்கப் பணம் சேர்த்தாகணும். பையன் ஆறாவது வகுப்பிலும் ‘மண்ணும் விண்ணும் மதிக்கும் வள்ளுவர் தம் மாண்பை’ப் படிக்கணும், பி.யூ.சியிலும் அதையே படிக்கணும். பி.ஏ.யிலும் அதையே படிக்கணும். போஸ்ட் கிராஜுவேட் வகுப்பிலும், அதையே படிச்சுத் தீரணும். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுகிறவரை அவன் தன் புத்தியை ஒரே விஷயத்துக்கு அடகு வைக்கிற நிர்ப்பந்தம் இங்கே இருக்கும்.”

     “வள்ளுவரை மட்டும் தனியே படிச்சால் கூடத் தப்பில்லை. ஒரே குறளுக்கு ஒவ்வொரு நிலையிலும் படிக்கிற போது புதிய புதிய பொருள் நயங்கள் விரிவுபட்டுத் தோன்ற வழி இருக்கிறது. புலவர் பொன்னம்பலனார் போன்றவர்களின் அரைத்த மாவை அரைக்கும் விளக்கங்கள் மூளையைக் காயடித்து விடும். . அதை யார் தட்டிக் கேட்கப் போறாங்க? யூனிவர்ஸிடிகள் சம்பந்தப்பட்ட எல்லாமே அப்பிடித்தான் இருக்கு, மூணு வருஷம் ஒருத்தர் எக்ஸாமினரா இருக்கார்னா மூணு வருஷத்திலே எவ்வளவு சேர்த்துக் கொள்ள வழி உண்டுன்னு தான் பார்க்கிறாங்க. இந்த நாட்டிலே படிச்சவங்களுக்கு இருக்கிற பணத்தாசை படிக்காத ஏழைப் பாமர மக்களுக்குக் கூட இல்லை. இளம் பெண்களானால் அழகையும், கற்பையும் இலஞ்சமாக வாங்கிக் கொண்டு மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இரண்டு பாட்டில் விஸ்கி கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுப் புடைவை - பெரிதாகப் பளபள வென்று ஜரிகை போட்டதாக ஒண்ணோ ரெண்டோ வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். நெல்லூர் அரிசி மூட்டை ரெண்டு அனுப்பி வைத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இருநூறு ரூபாயோடு பெங்களுருக்கு ப்ளேன் டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள், அப்புறம் எதுக்குப் பரீட்சை - பாஸ்- ஃபெயில், ஃபர்ஸ்ட் கிளாஸ், ஸெகண்ட் கிளாஸ், கிரேடிங் சிஸ்டம் எல்லாம் என்ன இழவுக்காகன்னுதான் புரியிலே?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.