27 சுதர்சனன் அப்போது திடீரென்று ஆவேசம் வந்தவனைப் போலப் பேசலானான். “புரட்சி என்கிற கூரான - ஆழமான வார்த்தையைக் கூட மேடைகளிலே பேசிப் பேசிக் காயடிச்சு முனை மழுங்கப் பண்ணிட்டோம் இங்கே. எல்லாமே நாளடைவில் வெறும் சடங்காக முனை மழுங்கிப் போய் விடுகிற நாட்டிலே எந்தப் புரட்சியும் விளையாது.” “உங்க பேச்சைக் கேட்டால் ஏதோ டானிக் சாப்பிட்ட மாதிரித் தெம்பா இருக்கு. ஆனா அதே சமயத்திலே வாழ்க்கைக் கவலையும் - பொழைப்பைப் பத்தின நினைவும் வருது சார்” என்றார் வேலை தேடி வந்த இளைஞர். “வாழ்வதற்குப் பொழைக்க வேண்டியது தான். ஆனால் சுயமரியாதையோட பிழைக்கணும்கிற உறுதி வேணும். சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்பாங்க. சேரிட்டி மட்டுமில்லே, மொராலிட்டி, கிரடிபிலிட்டி, சின்ஸியாரிட்டி முதலியதும் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்.” “நீங்க சொல்றதிலே ஒரு வார்த்தைகூடத் தப்பு இல்லே. அப்பிடியே ஒப்புக்கொள்கிறேன். எந்த ஒரு வாசலாவது திறந்திருக்கும்னு போனாலும் ஏமாற்றம்தான் மீதமாயிருக்கு. எல்லா வாசலும் எல்லா வழியும் அடைச்சிருக்கு. ஏலவாக்கம் குலாப்தாஸ் மோகன்தாஸ் காலேஜிலே ஒரு வேகன்ஸி இருக்குன்னு தெரிஞ்சு தேடிப் போனேன். காலேஜ் நிர்வாக போர்டிலே ஒருத்தர் மனசு வச்சா நிச்சயம் வேலை கிடைக்கும். அவரைத் தனியே போய்ப் பாருங்கன்னாங்க. போய்ப் பார்த்தேன். முதல்லே ஆர்டர் போடறத்துக்கு முந்தி ஐயாயிரமும் அப்புறம் நிரந்தரமாகும் போது இன்னொரு மூவாயிரமும் ரொக்கமாக் கேட்கிறாரு. ஒரு வருஷம் பூராச் சம்பாதிச்சாக் கூட அவ்வளவு பணம் வராது. தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும் அவங்க தொடங்கற ஸ்கூல்களையும், காலேஜுங்களையும் கூட லாபம் தரக்கூடிய ஒரு புது இண்டஸ்டிரி மாதிரித்தான் தொடங்கறாங்க. அந்தக் காலேஜையோ ஸ்கூலையோ தொடங்கறபோது செலவழிக்கிற கொஞ்சப் பணத்தைக் கூட. ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆக எண்ணித்தான் செலவழிக்கிறாங்க, அட்மிஷனுக்குப் பணம், வேலைக்குப் பணம், பில்டிங், லைப்ரரி, லாபரேடரி, எல்லாத்துலயும் பணம்னு மழை பெய்யறதுபோல ஒரு காலேஜ்லேருந்தோ ஹைஸ்கூல்லேருந்தோ வருமானம் வெள்ளமாக் கொட்டுது! அதைப் பார்த்து ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக் காலேஜ், ஸ்கூல்னு தொடங்கிக்கிட்டே இருக்காங்க. இந்த மாதிரி ‘எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டு’ங்களாலே விற்கிறவங்களுக்குத்தான் கொள்ளை லாபம். வாங்கறவங்களுக்கு ஒரே நஷ்டம்.” “நம்ம கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நாணயமில்லாத பேராசை பிடித்த வியாபாரிகளால் நடத்தப்படுகிற வெறும் எஜுகேஷன் ஷாப்புகளாகவும், எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் ஆகி ரொம்ப நாளாச்சு. ரேஷன் கார்டுக்கு இருக்கிற மரியாதை கூட யூனிவர்ஸிடி டிகிரிக்கு இல்லே. ரேஷன் கார்டை அடமானமா வச்சுக் கிட்டு பத்து ரூபாய் கடன் தர்ரதுக்கு மார்வாரிங்க தயாராயிருக்காங்க. டிகிரியை நம்பி அஞ்சு பைசாக் கூடத் தர்ரத்துக்கு எவனும் எங்கேயும் தயாராயில்லே.” “புதுசு புதுசாக் காலேஜு, புதுசு புதுசா யூனிவர்ஸிடி எல்லாம் தொடங்கிக்கிட்டே இருக்காங்க. ஏற்கெனவே படிச்சு வெளியிலே வந்தவனுக்கே வேலை இல்லே. கல்வியினோட பிரயோஜனம் சுருங்கிப் போச்சு. மெட்ராஸ்லே படிக்கிறவன் பம்பாயிலே போய் வேலை தேடலாம்னா முடியிலே. பம்பாயிலே படிச்சவன் இங்கே வந்து வேலை தேடலாம்னா ஒத்துக்கல்லே. இங்கே படிக்கிறவனுக்கு இந்தி கிடையாது. இங்கிலீஷும் சுமார். அங்கே படிக்கிறவனுக்கு தென்னிந்திய மொழிகளிலே பற்றாக்குறை. உலகளாவிய சர்வதேச குணமாக இருக்க வேண்டிய கல்வி, ஞானம். இதையெல்லாம்கூடப் புரொவின்ஷியலாகவும், ரீஜனலாக வும் ஆக்கிக் கெடுத்துட முடிஞ்ச எக்ஸ்பர்ட்டுங்க இந்தியா விலேதான் இருக்காங்கன்னு தெரியுது.” “இந்தியாவிலே அது ஒண்ணுலே மட்டும் தானா எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க? அத்தனை கெட்ட காரியங்களுக்கும் போதுமான எக்ஸ்பர்ட்டுங்க நம்மகிட்ட இருக்காங்க. சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியேன்னு வந்து சாதிகளை வளர்க்கிறதிலே எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க. வேற்றுமைகளையும், ஏற்ற தாழ்வுகளையும் போக்கிச் சமதர்மத்தை நிலைநாட்டப் போறேன்னு வந்து நிமிஷத்துக்கொரு வேற்றுமையையும், ஏற்றத் தாழ்வையும் பயிரிட்டு வளர்த்துக்கிட்டிருக்கிற எக்ஸ்பர்ட்டுங்களும் இருக்காங்க. தேசத்தைவிடத் தங்களைப் பெரிதாக நினைத்துக் கொள்ளும் முரண்டு பிடித்த தனி மனிதர்கள் நிறைந்த நாடு இது. இங்கே இந்த நிலைமையிலே வேறென்ன எதிர்பார்க்க முடியும்? சீரழிய ஆரம்பித்திருக்கிற தேசத்தைத் திருத்தலாம், சீரழிந்து முடிந்துவிட்ட தேசத்தையும் திருத்தலாம். தொடர்ந்து இடைவிடாமல் சீரழிந்துகொண்டே இருக்கிற தேசத்தை யாராலேயும் திருத்த முடியாது. ஒன்றை ஒழுங்கு செய்ய ஆரம்பிப்பதற்குள் நூறு விஷயம் கெட்டுப்போய் விடுகிற தேசத்தில் எதையுமே ஒழுங்கு செய்ய முடியாது.” “இங்கே அநாவசியமாக அரசியல் பேச வேண்டாம். வீண் வம்பு வரும். கொஞ்ச நேரத்திலே சிண்டிகேட் சிதம்பரநாதன் இங்கே வரப் போறாரு, அவரு காதிலே விழறாப்ல யூனிவர்ஸிடியைக் கிரிடிசைஸ் பண்ணிப் பேசறது நல்லா இருக்காது. ‘தயவு செய்து இங்கே யாரும் அரசியல் பேச வேண்டாம்’னு ஒரு பெரிய போர்டு எழுதச் சொல்லிப் பக்கத்துப் ‘பெயிண்ட்’டுக் கடையிலே குடுத்திருக்கேன். போர்டு வந்ததும் மாட்டப் போறேன்” என்று திடீரென்று ரகு கடுமையான குரலில் குறுக்கிட்டுக் கண்டித்தான். “ரொம்ப வேடிக்கைதாம்ப்பா! நீயே ஒரு கட்சியிலே இருக்கே. ஒரு தலைவரை வழிபடறே, அரசியல்லே அவர் சொல்றதை எல்லாம் அது சரியானாலும், தப்பானாலும் அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டுக் கடைப்பிடிக்கிறே. மத்தவங்க அரசியல் பேசறபோது மட்டும் ருத்திராட்சப் பூனை மாதிரி கண்ணை மூடிக்கிறதிலே என்ன பிரயோசனம்? விபசாரம் பண்றவங்க அதைப் பத்திப் பேசறத்துக்கோ கேட்கிறத்துக்கோ பயப்பட்டுக் கூசுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதுமாதிரித்தான் இருக்கு இதுவும். பார்பர் ஷாப்பிலும், ஹோட்டலிலும், வெற்றிலை பாக்குக் கடையிலும், லைப்ரரிகளிலும், ‘இங்கே அரசியல் பேசவேண்டாம்’னு போர்டு மாட்டி வைக்கிற அளவுக்கு நம்ம நாட்டு அரசியல் அநாரோக்கியமா இருக்குன்னு தெரியுது. அரசியலைப் பற்றிச் சராசரி இந்தியங்க ரெண்டு பேர் பேசிக்க ஆரம்பிச்சா அது அடிதடியிலேதான் முடியும்னு தெரியுது. பயப்படாதே. எனக்கும் இவருக்கும் அடிதடி வராது. உன்னோட நாற்காலி, மேஜைகளை நாங்க உடைச்சிட மாட்டோம்” - என்றான் சுதர்சனன். ரகுவின் முகத்தில் சிடுசிடுப்பு அதிகமாகி எள்ளும் கொள்ளும் வெடித்தது. சுதர்சனன் தன்னுடைய பேச்சுப் போக்கில் சொல்லியிருந்த ஓர் உதாரணம் ரகுவைக் கோபம் கொள்ளச் செய்திருந்தது. நட்பு, பழக்கம், மரியாதை எல்லாம் மறந்து போய்ச் சுதர்சனனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எல்லைக்கு ரகுவின் ஆத்திரம் முற்றியிருந்தது.
‘பண்றது எல்லாம் விபச்சாரம் - ஆனால் அதைப் பத்திப் பேசறத்துக்கோ, கேட்கிறத்துக்கோ மட்டும் பயம், கூச்சம்’-என்று அரசியல் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூசும் சராசரி இந்திய மத்தியதர வர்க்கத்தின் ருத்திராட்சப் பூனை மனப்பான்மையைச் சுதர்சனன் கிண்டல் செய்ததைத் தனக்கு மட்டுமென்று எடுத்துக் கொண்டு விட்டான் ரகு, தான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதையும், ஒரு தலைவரைக் கடைப்பிடித்து நடப்பதையும் படுகேவலமான முறையில் கிண்டல் செய்யவே சுதர்சனன் அந்தக் கடுமையான விமர்சன வாக்கியங்களைக் கூறியிருப்பதாக எண்ணிக்க கொண்ட ரகு, திடீரென்று வெடித்துச் சீறினான்.
“நமக்குப் பிடிச்சா ஒரு இடத்திலே இருக்கணும், இல்லாட்டி மரியாதையா வெளியேறிப் போயிடணும். பிடிக்காத இடத்திலே முளையடிச்சாப்பில உட்கார்ந்துக் கிட்டு வேலை குடுத்தவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டி ருக்கிறது ஒழுங்கும் இல்லை. நியாயமும் இல்லை.” சுதர்சனனை நேரே அம்புகள் போல் வந்து தாக்கினஇந்தச் சொற்கள். முதலில் தேடி வந்து பேசிக் கொண்டிருந்த இளைஞருக்குச் சொல்லி விடை கொடுத்து அனுப்பிவிட்டு அப்புறம் ரகுவின் பக்கமாகத் திரும்பினான் அவன். “நாட்டிலே எல்லாரும் எல்லா முனையிலும் எல்லா நிமிஷத்திலும் அரசியல் பண்ணிக்கிட்டு, அரசியலால் பாதிக்கப்பட்டு, அரசியலாக இருந்துக்கிட்டே ஏதோ அதைப் பத்திப் பேசறதும், கேக்கறதும் மட்டுமே பாவம்னு அடிக்கடி சொல்லிக்கிறாங்களே அதைக் கிண்டல் பண்ணித் தான் நான் பேசினேன், அவுசாரித்தனம்னு வந்தப்புறம் எதையோ முடிக்கிட்டு அவுசாரித்தனம் பண்றதும்பாங்களே அது மாதிரியில்ல இது இருக்குது?” “இந்த வார்த்தைங்கள்ளாமே எனக்குப் பிடிக்கலே சுதர்சனன். உனக்கும் நமக்கும் ஒத்துவராது போல இருக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்தேன். முடியலே. நாம மரியாதையா ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிஞ்சுடறதுதான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு படறது.” ‘சரிதான் வெளியே போடா’ என்று சொல்ல வேண்டியதைக் கொஞ்சம் மரியாதையாக ரகு சொல்லிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனனுக்குத் தோன்றியது. மேலும் விவாதம் நீடிக்கும் பட்சத்தில் இந்த ரகுவுக்கே இன்னும் ஆத்திரம் அதிகமாகி ‘வெளியே போடா நாயே’ என்று கூடச் சீறிவிழலாம். அது நேருவதற்குள் தான் நாகரிகமாக முந்திக் கொண்டு ஒதுங்கி விடுவது நல்லதென்று சுதர்சனனுக்குத் தோன்றவே அவன் பெட்டி படுக்கைகளை எடுத்து மூட்டைக் கட்டத் தொடங்கினான். “இந்தா உனக்குச் சேர வேண்டிய பாக்கிப் பணம்” என்று ரகு நீட்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலே வாங்கிக் கொண்டான் சுதர்சனன். நடந்தவற்றால் ஒரு சிறிதும் கழிவிரக்கமோ வருத்தமோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ அவன் மனத்தில் இல்லை. ஒன்றுமே நடந்து விடாததுபோல் சகஜமாகத் தெருவில் இறங்கிப் பெட்டிப் படுக்கையை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வைத்தான் சுதர்சனன். பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|