17 படிப்பு - அறிவு - இவை விசாலமடைய விசால மடையத்தான் சிறுமை, லஞ்சம், ஊழல் இவையெல்லாம் ஒழியும் என்பார்கள். படிப்பிலேயே சிறுமை, ஊழல் லஞ்சம் எல்லாம் வந்து சேர்ந்து விட்டால் என்ன செய்வது? கங்கையே சாக்கடையாகி விட்டால் அப்புறம் என்ன வழி? கங்கையையே சாக்கடையாக்கி விட்ட தன் பெருமையைத் தான் சிதம்பரநாதன் அப்போது சுதர்சனனிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்ற புறநானூற்றுப் பாண்டியனின் கல்வி பற்றிய பாடலுக்கு இப்போது குறும்பாகவும் வக்கிரமாகவும் புதுப் பொருள் கொள்ள வேண்டும் போல் தோன்றியது சுதர்சனனுக்கு. ‘உறுபொருள்’ கொடுக்கும் இடமாக ‘சிண்டிகேட் சிதம்பரநாதன்’ காட்சியளித்தார். உற்றுழி உதவுகிற பணியையும் செய்து கொண்டிருந்தார். ‘உற்றுழி’ என்பதற்கு மார்க் குறையும்போது என்று அர்த்தம் போலும். “என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க. ஏதுடா இப்படிச் சிவப்புத் தலைப்பாகையைக் கட்டிக்கிட்டு வந்து கிறுக்கன் மாதிரிப் பேசறானேன்னு உங்களுக்குத் தோணலாம். இன்னிக்கு ஐ.ஏ.எஸ்.ஸா வேலை பார்க்கிற பல பேரு நம்ம தயவிலே யூனிவர்ஸிடி பரீட்சை பாஸ் பண்ணிப் போனவங்க. நம்ம மேலே விசுவாசம் உள்ளவங்க. நாம சொல்லியனுப்பிச்சோம்னா எதையும் தட்டாமச் செய்து கொடுக்கிறவங்க.” சுதர்சனன் தலையை ஆட்டினான். அவனுக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தெரிந்த உண்மைகள் பல பொய்களின் முக விலாசங்களைத் தெரிவிக்கக் கூடியவனவாக இருந்தன. ‘உண்மைகளைப் புரட்டிப் பார். அவற்றின் மறுபுறத்தில் பொய்களின் முகங்கள் தெரியும்’ என்பது போன்ற பல உண்மைகளை விவரித்துக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சித்ம்பரநாதன். “போர்ட் ஆஃப் ஸ்டடீஸ், செனட், சிண்டிகேட், அகடமிக் கவுன்ஸில் எல்லாத்திலியுமே நமக்குச் செல்வாக்கு உண்டுங்க. ஒரு புஸ்தகத்தைப் பாடமா வச்சு இருபத்தையாயிரம், முப்பதாயிரம் பிரதிகள் நிச்சயமா உடனே விற்கலாம்கிற வசதி இதிலே மட்டும்தான் உண்டுங்கிறதாலே பல பேரு தங்கள் புஸ்தகம் பாடமா வரணும்னு ஆசைப்படறாங்க. போர்டுலே எதையும் டிஸைட் பண்ற ‘முதலை’ங்க நாலே நாலு இருக்கு. தலைக்கு ஐநூறுக்குக் குறையாமே காதும் காதும் வச்சாப்பிலே கவர்லே வச்சுத் தள்ளிட்டா அப்புறம் நீங்க சொல்ற புஸ்தகத்தைப் பாடமா வச்சுக்கலாம். இதுனோட உள் விவகாரமெல்லாம் நமக்குத் தலைகீழ்ப் பாடம். சிண்டிகேட்லே ரொம்ப காலம் இருந்திருக்கேன் பாருங்க! எல்லாரையும் எல்லாத்தையும் நல்லாத் தெரியும். போன வருஷம் நம்ம பலவேசம் பிள்ளை எழுதிய ‘பாண்டிய நாட்டுப் பலகாரங்கள்’ங்கிற புஸ்தகத்தை பி.ஏ. பட்டப் படிப்புக்கு வைக்கணும்னு யார் யார் மூலமோ தலைகீழா நின்னு செலவழிச்சு முயற்சி பண்ணினாங்க. நடக்கலே. பலவேசமும் அவர் பப்ளிஷரும் எங்கெங்கேயோ போனாங்க. யார் யாரையோ பார்த்தாங்க. ஊஹும், நடக்குமா? நடக்கலே. கடைசியிலே ‘சிதம்பரநாதா! நீயே கதி’ன்னு நம்ப கால்லே வந்து விழுந்தாங்க. அடுத்த நாளே போர்ட் மீட்டிங்கிலே காரியம் ஸக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சி போச்சு.” “யூனிவர்ஸிடி சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும் நீங்க ஒரு பெரிய ‘லயஸான்’ ஆக இருக்கீங்கன்னு சொல்லுங்க.”
“கரெக்டாச் சொன்னிங்க. நல்லவங்களுக்கு உபகாரம் பண்றதே ஒரு சந்தோஷம்... அதைத்தான் கடந்த கால் நூற் றாண்டாகப் பண்ணிக்கிட்டிருக்கேன்.”
“நீங்க சொல்றதெல்லாம் கேட்டா ரொம்ப சுவா ரஸ்யமா இருக்குங்க...” “ரகுவும் நானும் உயிர்ச் சிநேகிதம். எப்ப நான் படியேறி வந்தாலும் கீழே டிக்கடைக்குச் சொல்லியனுப்பி ‘சிண்டிகேட் சார் வந்திருக்காரு. ஸ்ட்ராங்கா ஒரு டீ கொண்டு வா’ன்னுடுவான். என் மேலே ரகுவுக்குக் கொள்ளைப் பிரியம். ரகு மட்டுமில்லே. காலேஜ் கரெஸ் பாண்டெண்டுகள், பிரின்ஸிபால்கள், எல்லாருமே சிண்டிகேட் சிதம்பரநாதன்னா உயிரை விட்டுடுவாங்க...” “டீக்குச் சொல்லி அனுப்பட்டுங்களா? நான் புதிசு. எனக்கு இங்கே டீக்கடைக்காரங்க யாரையும் தெரியாது! நாம போயே குடிச்சுட்டு வந்துடலாமா?” என்று பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிய சுதர்சனனைத் தடுத்து, “நீங்க உட்காருங்க நானே டீக்கடைப் பையனைக் கூப்பிடறேன். ரகுவோட அக்கவுண்ட்லேயே அவன் டீ கொண்டு வருவான்” என்று கூறி விட்டு மாடி முகப்புக்கு எழுந்திருந்து போய்த் தாமே டீக்கடைப் பையனுக்குக் குரல் கொடுத்தார் சிதம்பரநாதன். சுதர்சனனுக்குத் திகைப்பாயிருந்தது. கல்வியும் - உயர் தர ஞானமும் கூடத் தரகுப் பொருள்கள் ஆக்கப்பட்டிருப்பது வேதனையை அளித்தது. மன வளர்ச்சி - பக்குவம் - பண்பாடு எல்லாவற்றையும் அளிக்க வேண்டிய கல்வித் துறை வெறும் ‘மார்க் - மார்க்கெட்’ ஆகியிருப்பது தெரிந்தது. கல்வியைப் பற்றிய எல்லா ஏற்பாடுகளுடனும் யாரும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யாமலே வஞ்சமும் ஊழலும் திருட்டும் பொய்யும் சூதுவாதும் ஜாதியும் களை யாக முளைத்துப் பயிரே மறையுமளவு மறைத்துக்கொண்டு மண்டியிருப்பது தெளிவாக எதிரே தெரிந்தது. “என்ன பெரிசா யோசனையிலே மூழ்கிட்டீங்க? உங்க ஃப்ரண்ட்ஸ் யாராச்சும் பி.எச்.டிக்கு தீஸிஸ் சப்மிட் பண்றவங்க இருக்காங்களா? இருந்தாச் சொல்லுங்க. அவங்க சிரமப் படவே வேணாம். ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிற தலைப்பை மட்டும் நம்பகிட்டச் சொன்னாப் போதும்...” “நீங்க சொல்றது ஒண்ணும் புரியலீங்களே...” “நான் என்ன ஃப்ரஞ்சிலியோ ஜெர்மன்லியோவா பேசறேன்? நல்லாப் புரியும்படியாத் தமிழ்லதானே சொல்லிக்கிட்டிருக்கேன்? உங்களுக்கு ஒரு சிரமமும் வைக்காமே ‘தீஸிஸை’த் தானே நீட்டா எழுதி ஆறு காப்பி டைப் பண்ணிக் கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. தமிழ் தீஸிஸ்னா ரெண்டாயிரம் ரூபாய். இங்கிலீஷ் தீஸிஸ்னா மூவாயிரம் ரூபாய். நீங்க விரலைக்கூட அசைக்க வேணாம். பி.எச்.டி. உங்களைத் தேடித் தானா வந்து சேரும்... கொஞ்சம் தாராளமாச் செலவழிக்க மட்டும் தயாராயிருக்கணும்.” “இது மாதிரிக்கூட ஒரு ‘லெண்டிங் சர்வீஸ்’ இருக்குங்களா?” பாதி இயல்பாகவும் பாதிக் குத்தலாகவும் தான் அவரை இப்படிக் கேட்டிருந்தான் சுதர்சனன். “இருக்காவது ஒண்ணாவது? இருக்கும்படியா இந்தச் சிண்டிகேட் சிதம்பரநாதன் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கான்னு நெனைச்சுப் பெருமைப்படுங்க! டாக்டர் நாகேசுவரனார், டாக்டர் இருதயசாமீன்னு இப்பப் பேருக்கு முன்னே ஜம்னு டாக்டர்ப் பட்டம் போட்டுக்கிறவங்கள்ளாம் யார் தயவுலே அதை வாங்கினாங்கன்னு அவுங்களையே போய்க் கேட்டுப் பாருங்க. அப்பத்தான் தெரியும் நம்ப பெருமை...” டீக்கடையிலிருந்து பையன் வாங்கிக் கொண்டு வந்து வைத்த தேநீரைக் குடிக்கக் கூட நேரமின்றிப் பேசிக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சிதம்பரநாதன். “டீயை முதல்லே குடியுங்க. ஆறிடப் போவுது” என்று அவருக்கு நினைவூட்டினான் சுதர்சனன். அவர் தேநீரை எடுத்துப் பருகினார். சுதர்சனனும் பருகினான். தேநீர் குடித்து முடித்ததும் ஏதோ மறுபடி நினைத்துக் கொண்டவர் போல், “ஆமாம்! உங்க பேரென்ன சொன்னீங்க? மறந்து போச்சே...?” என்று இரண்டாவது தடவையாகவும் அவனைக் கேட்டார் சிதம்பரநாதன். “சுதர்சனம்.” “சுதர்சனம்னா?...” “டி. ஆர். சுதர்சனம்” “அதாவது - வந்து...?” எல்லாப் படித்தவர்களையும் போல் தனது சாதியைப் பற்றி விசாரிக்கும் ஆசையில் சிதம்பரநாதன் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதிகளை ஒழித்து விட விரும்பும் இந்த நவீன காலத்தில் தான் ஒவ்வொரு படித்த மனிதனுக்கும் அடுத்தவனுடைய சாதியை அறிந்து கொள்ள விரும்பும் முனைப்பு நிறைய இருக்கிறது என்பதைச் சுதர்சனன் புரிந்து கொண் டிருந்தான். படித்தவர்கள் இதை விசாரித்தறிவதற்குப் பல உத்திகள், தொழில் முறைகள், அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் கூட அவன் அறிந்து வைத்திருந்தான். விசாரிக்கிறவர் தனக்கு நன்றாக ஊர், பேர் குலம், கோத்திரம் எல்லாம் தெரிந்த ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவருக்கு நீங்க ரிலேஷனுங்களா?” என்று கேட்பது ஒரு முறை. “இல்லை” என்று பதில் கிடைத்தாலும் “ஆமாம்” என்று பதில் கிடைத்தாலும் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்துவிடக் கூடும். ‘இல்லை’ என்று பதில் கிடைத்தால் ‘அவர் எந்தச் சாதி இல்லை’ என்ற விவரமாவது புரியும். ‘ஆமாம்’ என்று பதில் கிடைத் தாலோ எந்தச் சாதி என்பதே நேரடியாகத் தெரிந்துவிடும். இப்படி மாற்றி மாற்றி இரண்டு மூன்று தெரிந்த பெயர்களைச் சொல்லி அவருக்கு உறவா? இவருக்கு உறவா? என்று கேட்டாலே சாதி தெரிந்துவிடும். அதிலும் முடியா விட்டால், “உங்க ஃபாதர்...?” என்று கேட்டு நிறுத்தினால் நாராயணப்பிள்ளை அல்லது குப்புசாமி முதலியார் அல்லது கிருஷ்ணையர் என்று பதில் வந்து சாதியைக் காட்டிக் கொடுத்துவிடும். முந்திய தலைமுறை மனிதர்கள் பெயர் சாதியோடுதான் வரும் என்ற நம்பிக்கை அல்லது பெரியவர்கள் பெயரை மரியாதை இல்லாமல் நாராயணன், குப்புசாமி, கிருஷ்ணன் என்று மொட்டையாகச் சொல்லத் துணிய மாட்டார்கள் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். படித்தவர்களிடம் மறைந்துள்ள காட்டுமிராண்டித் தனங்களில் இதுவும் ஒன்று என்பதைப் புரிந்து கொண்டிருந்த சுதர்சனம் அப்போது சிண்டிகேட் சிதம்பரநாதனை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்கு என்ன தெரியணும்? நான் என்ன சாதின்னு, தானே தெரியணும்? தைரியமாத்தான் கேளுங்களேன். ஏன் பூசி மெழுகறீங்க? எங்கப்பா நாயுடு; எனக்குச் சாதியிலே நம்பிக்கை கிடையாது” என்றான். “இல்லே... நான் விசாரிக்க வந்தது என்னன்னா...?” எதையோ மழுப்பினாற் போல இழுத்தார் சிதம்பரநாதன். தனது முயற்சியை - அதன் இரகசியமான உத்தியைச் சுதர்சனன் கண்டுபிடித்து விட்டானே என்று கூச்சமாக இருந்திருக்க வேண்டும் அவருக்கு. மூஞ்சியில் அடித்தது போல் அவன் அந்தப் பதிலைக் கூறிய பின்னர் அவனிடம் மேற்கொண்டு பேசுவதற்கு அவர் தயங்க வேண்டி வந்தது. ‘இவனிடம் உஷாராக இருக்க வேண்டும்’ என்ற உணர்வும் அவருள்ளே மெல்லத் தோன்றியது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|