22 தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளோ பதினைந்தாவது நாளோ ரகுவின் நண்பராகிய கதாசிரியர் ஒருவர் தமது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்புக் கொடுப்பதற்கு வந்திருந்தார். வந்திருந்தவரைச் சுதர்சனனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரகு. “இவர்தான் குமாரி. சுகுணவல்லி. நியூவேவ் கதாசிரியர்” - என்று அவரது பெயரை ரகு சுதர்சனனுக்குச் சொல்லியவுடன், “மீசை முளைச்ச ஆம்பிளையைக் காட்டிக் குமாரி சுகுணவல்லீன்னு சொல்றியேப்பா? இதென்னப்பா புதுமை” - என்று சுதர்சனன் கேட்டான். “பேர் மட்டுமென்ன? எல்லாமே புதுமைதான்? இந்த மாதிரிப் பெண் பேருக்கு ஒரு தனிக் கவர்ச்சி இருக்குப்பா. பேருக்கு முன்னாலே குமாரின்னு போடறதாலே அந்தக் கவர்ச்சி இன்னும் அதிகமாகுது” என்று விளக்கத் தொடங்கிய ரகுவை முந்திக்கொண்டு அந்தக் கதாசிரியரே தன்னைப் பற்றிச் சொல்லி அளக்கத் தொடங்கினார். “ஆம்பளை கொஞ்சம் ‘லவ் மேட்டர்’ எழுதினாலே விழுந்து விழுந்து படிப்பாங்க சார்! பொம்பளை - அதுவும் கலியாணமாகாத பொம்பளை இதெல்லாம் இப்பிடி எழுதறான்னா - ஹாட்கேக்ஸ் மாதிரி விற்பனை ஆகும்.” “இதெல்லாம்னா எதெல்லாம்?” “அதான்சார் ‘லவ் மேட்டர்’” “லவ் மேட்டர்னா அப்படி என்னதான் சார் எழுதுவீங்க? தமிழிலேயே விளக்குங்களேன்... தெரிஞ்சுக்கலாம்...” “சில விஷயங்களுக்கு இங்கிலீஷ் ஒரு போர்வை மாதிரி சார். நடுக்கம் இல்லாமே... குளிர் இல்லாமே அப்படியே கூசாமச் சொல்ல முடியும். செக்ஸ், லவ், அது இதுன்னு இங்கிலீஷ்லேயே சொல்றது அதுக்காகத்தான். தமிழிலே காதல், காமம்னு சொன்னா ஒரு ‘கிக்’ இருக்காது.” “ஓகோ! அதுவும் அப்படியா?” - என்று கேட்டுவிட்டு அழைப்பிதழைப் பிரித்துப் பார்ப்பதில் முனைந்தான் சுதர்சனன். “படுக்கை அறைப் பாவை, கட்டிலில் கட்டழகி, தொட்டால் துவளும் சுந்தரி முதலிய சுவையான தமிழ்க் கதைகளின் ஆசிரியையாகிய குமாரி. சுகுணவல்லியின் புதிய கதை ‘தலையணை நாயகியின் தனியறை லீலைகள்’ என்று அழைப்பிதழ் தொடங்கியது. சுதர்சனன் கேட்டான்: “படுக்கை அறை, கட்டில், இந்த இடங்களைத் தவிர வேறே எங்கேயும் நம்ம பெண்களுக்கு வேலையே இல்லையா? உங்க கதைத் தலைப்புக்களைப் பார்த்தா நம்ம பெண்கள் இருபத்து நாலு மணி நேரமும் கட்டில், படுக்கை அறை, தலையணைகளிலேயே வாழ்க்கையைக் கழிக்கிற மாதிரியில்லே தோணுது?”
“ஸேல்ஸ் நல்லா ஆகணும்னா அப்படி எல்லாம்தான் தலைப்பு போட்டாகணும் சார்! அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டா?” - என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே பாதியில் நழுவினார் அந்தக் கதாசிரியர்.
“இந்த மாதிரித் தலைப்புப் போட்டுப் புத்தகம் விற்கிறதைவிட உன் நண்பர் இன்னும் சில நாட்களில் பெண்களையே நேரடியாக விற்கிற காரியம் அதிக லாபமானதுன்னு அதைத் தொடங்கினாலும் தொடங்கலாம் ரகு!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சுதர்சனன். “அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா ! இந்த எழுத்தாளர் சோமையா ஆரம்ப காலத்திலே நம்ம ஐயாவோட இயக்கத்திலே இருந்தவர். கொள்கை வழிப் பிரிந்து கூட்ட வழி இணைந்த தத்துவத்தை ஒப்புக் கொண்டவர். பின்னாலே இப்போ பிழைப்புக்காக இதெல்லாம் எழுதறாரு, ஆனாலும் எங்களுக்குள்ளே பழைய பாசம் இன்னும் விடலே?” “பழைய பாசத்தாலேதான் உங்க ஐயா இதுக்குத் தலைமை தாங்கி வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறாராக்கும்? இந்த மாதிரிப் புத்தகத்தை எல்லாம் படிச்சுப் பார்க்க உங்க ஐயாவுக்கு நேரமிருக்கா?” “படிக்கணும்னு என்ன அவசியம்? தலைப்பு முன்னுரை இதுகளை வச்சே ஐயா ஒருமணி நேரம் பேசிச் சமாளிச்சிடுவாரு.” இதைக் கேட்டுச் சுதர்சனனுக்கு சிரிப்பு வந்தது. ஆபாசமாகப் பேசவும் எழுதவும் சிலருக்கு அந்நியமொழி ஒரு போர்வை. தவறு செய்பவரை ஆதரிக்க அவர் தமக்கு வேண்டியவர் என்றொரு போர்வை, விபசாரத்தை எழுத்தாக்குவதற்கு விற்பனைக் கவர்ச்சி என்றொரு போர்வை - இப்படி ஆயிரம் போர்வைகளும், பொய்ம் முகங்களும் தேவைப்படுகிற சமூகத்தில் நீதி நியாயம் நேர்மை உழைப்புக்களுக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் கிடைக்க முடியும் என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. கோபமாகவும் இருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும், தன் பெயரிட்டு எழுதிக் கொடுக்கப் பெற்ற அழைப்பிதழைக் கெளரவப் படுத்துவதற்காகவும் அந்த வெளியீட்டு விழாவுக்கு ரகுவுடன் சுதர்சனனும் போயிருந்தான். விழா நடக்கும் கூடத்தின் முகப்பிலேயே கல்கண்டு, சந்தனம், ரோஜாப்பூவோடு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சினிமா எக்ஸ்ட்ராக்கள்போல் பளிச்சென்று விட்டுத் தெரியும் அடக்கமற்ற அழகுடன் கூடிய நாலைந்து பெண்கள்தான் வரவேற்புப் பொறுப்பில் இருந்தார்கள். இரண்டு புத்தகங்களைத் தயாரிப்பதற்கு ஆகிற செலவு அந்த ஒரு வெளியீட்டு விழாவுக்காகவே செலவிடப்பட்டிருக்கும் என்று தோன்றியது. “படுக்கையறைப் பாவை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்றன. கட்டிலில் கட்டழகி ஒன்றரை லட்சத்தை எட்டியது. நம் ஐயாவின் இராசியுள்ள கையால் வெளியிடப் படுகிற இந்தத் ‘தலையணை நாயகியின் தனியறை லீலைகள்’ - இரண்டு லட்சம் பிரதியை எட்டிவிடும் என்பதில் எங்களுக்கு ஒரு சிறிதும் ஐயமில்லை” என்பதாக வரவேற்பறையில் மன்மதன் பதிப்பக அதிபர் மதனகோபால் கூறினார். ஒரு விளம்பரக் கவர்ச்சி கருதியோ என்னவோ கதாசிரியர் குமாரி. சுகுணவல்லி - அசல் பெண்ணாகவே அன்று அங்கே மேக்-அப் போட்டுக் கொண்டு வந்திருந்தார். ஐயா தலைமையுரை வழங்க எழுந்திருந்தார். “தலையணை என்பது அழகிய தூய தனித் தமிழ்த் தொடர். இத்தலைப்பில் நாயகி என்ற சொல்லையும் பாமரர்களைக் கருத்திற்கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். எனினும், இரண்டு சொற்களும் பக்தி மார்க்கத்திலும் வருகின்றன. நாயகன், நாயகி பாவத்தைப்பற்றி ஆழ்வார்கள் நிறையப் பாடியிருக்கிறார்கள். கிருஷ்ணலீலா, ராமலீலா என்றெல்லாம் தொடர்கள் பக்தி மார்க்கத்தில் உண்டு. இதன் ஆசிரியர் நமது இயக்கத்தில் எனது தலைமையின் கீழே தொண்டராக இருந்தபோது இலக்கியம் கற்றவர். அதனால்தான் நாயகி - லீலை போன்ற சொற்களை இடமறிந்து பயன்படுத்தியுள்ளார். வாசகர்களை இவர் எப்படி வசியம் செய்கிறாரோ, தெரியவில்லை. இவரது நூல்கள் இலட்சக்கணக்கில் விற்பதாகப் பதிப்பாளர் மன்மதன் சொல்கிறார். பதிப்பாளரோ மன்மதன். ஆசிரியரோ குமாரி சுகுணவல்லி. இருவரும் இணைந்தால் புது நூல் ஒன்று பிறக்கிறது. நல்ல வேளையாக வேறு எதுவும் பிறக்கவில்லை- (சிரிப்பு, கைதட்டல்) ஆசிரியர் ‘குடும்பக்கட்டுப்பாடு’ தெரிந்தவர்.” (பெரும் சிரிப்பு-பெரும் கைதட்டல்) இந்த நகைச்சுவை சுதர்சனனுக்கு மிக மிக மட்டமாகவும் அபத்தமானதாகவும் இருந்தது. சிரிப்பு வரவில்லை. எரிச்சல்தான் வந்தது. முக்கால்வாசித் தமிழ்ச் சொற்பொழிவுகளில் பேச்சாளர்களின் தரம் குறைந்து அவர் தடுமாறுகிற இடம் நகைச்சுவையாகப் பேசியாக வேண்டுமென்று அவரே முனைந்து வலிந்து முயலுகிற இடம் தான். இந்த இடங்களில் ரகுவோ உற்சாகமாகக் கைதட்டி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தான். சுதர்சனனுக்கு அந்த அறியாமையைக் கண்டு பச்சாத்தாபமாக இருந்தது. “ஐயா பிரமாதமாப் பேசறாரு, அவரைத் தவிர வேற யாரு தலைமை வகிச்சிருந்தாலும் இவ்வளவு கூட்டம் இங்கே வராது” என்று சுதர்சனனின் காதருகே முணுமுணுத்தான் ரகு. சுதர்சனன் அதற்குப் பதில் சொல்லவில்லை. வெளியீட்டு விழா என்கிற இரசக் குறைவான ஆபாச நாடகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அப்புறம் புத்தகத்துக்குப் பாராட்டுரை வழங்க வந்த எல்லாரும் புத்தகத்தை மறந்தாற்போலத் தலைமை வகித்த ஐயாவையும், அவருடைய உரையின் சிறப்பையும் பற்றியே பேசி முடித்தனர். விழா இறுதியில் பெண் வேடமணிந்த கதாசிரியர் பெண்ணைப் போலவே நாணிக் கோணி நடந்து மைக்குக்கு முன் வந்தபோது கூட்டம் அசட்டுச் சிரிப்பலையால் அதிர்ந்தது. அந்தக் கூட்டம் முழுவதுமே அலிகளைப் பார்த்து இரசிக்கும் சாரமற்ற நபும்சகக் கும்பலோ என்று பொறுக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் ஆத்திரமாயிருந்தது சுதர்சனனுக்கு. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|