30 சில நாட்களில் ‘அழகு லாட்ஜ்’ வாழ்க்கை சுதர்சனனுக்குப் பழகிவிட்டது. அதன் நடைமுறைகள், மனிதர்கள் மனப்போக்குக்கள் எல்லாமே சுதர்சனனுக்கு ஒரு வாறு பிடிபட்டு விட்டன. அந்த லாட்ஜ் உரிமையாளர் ஓர் அரசியல் கட்சியின் முக்கியப்புள்ளி. அப்பகுதியின் கார்ப்போரேஷன் கவுன்சிலர். அவருக்கு லாட்ஜ் தவிர ஒரு பலசரக்குக் கடை, ஒரு எண்ணெய் மண்டி, நிறைய வாடகை வரக்கூடிய இரண்டு பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் ஆகியவையும் உடைமையாக இருந்தன. அதனால் அவர் ஊரறிந்த பிரமுகராயிருந்தார். சுதர் சனனுக்கு எங்கே உத்தியோகம், என்ன மாத வருமானம் என்று கூட இரண்டொரு தடவை ஜாடை மாடையாகக் கேட்டுச் சரியான பதில் கிடைக்காமல் ஏமாந்து போனார் அவர். சரியான வேலையில்லாதவர்களையும், இனிமேல்தான் வேலை தேடவேண்டும் என்ற நிலையிலுள்ளவர்களையும் அவர் பெரும்பாலும் அறைகளில் வாடகைக்கு இருக்க அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை இருக்க அநுமதிப்பது நஷ்ட வியாபாரம் என்பது அவர் கருத்து. தான் ஒரு வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனன் அவருக்குத் திட்டவட்டமாகப் பதில் கூறிவிட்டான். உண்மையும் அதுதான். தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு வராத வேலை ஒன்றைத் தேடியாக வேண்டிய அவசியம் அப்போது அவனுக்கும் இருந்தது. அறையில் மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதிக்காக நாள் தவறாமல் காலையில் இந்துப் பேப்பர் வந்து விழுந்து கொண்டிருந்தது. டூரிலிருந்து திரும்பியதும் ஒரு நாள் பேப்பர் கூட விடாமல் மொத்தமாக உட்கார்ந்து படிப்பது அவர் வழக்கமாம். ஆறை அண்ணாதாசன் ஆங்கில நாளேடுகளைத் தன் கைகளாலும் தொடுவதில்லை. பிற மொழிகள் மேல் அத்தனை வெறுப்பு. காலை வேளைகளில் சுதர்சனன் அறையில் இந்து வந்து விழுந்ததும் எடுத்துப் பார்ப்பதுண்டு. ஒருநாள் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எஜூகேஷனல் பகுதியில் ‘வாண்டட்’ காலத்தில் சென்னை நகரின் வடக்குப்பகுதி உயர் நிலைப்பள்ளி ஒன்றிற்குத் தமிழ்ப் பண்டிதர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவசரமோ என்னவோ தெரியவில்லை. உடனே விண்ணப்பிக்கவும் அல்லது முடிந்தால் நேரில் வரவும் என்கிற பாணியில் அந்த விளம்பரம் இருந்தது. ஏறக்குறையத் திருவொற்றியூருக்குப் பக்கமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தினசரி திருவல்லிக்கேணியிலிருந்து போய் வருவதற்கே மாதம் ஐம்பது அறுபது ரூபாய்க்குக் குறையாமல் ஆகிவிடும் என்று தோன்றினாலும் முயன்று பார்க்கலாம் என எண்ணினான் அவன்.
தபாலில் விண்ணப்பத்தை அனுப்புவதைவிட நேரில் போயே பார்த்து விடுவது நல்லதென்று தோன்றியது. விண்ணப்பத்தை எழுதி எடுத்துக் கொண்டு தன்னுடைய சான்றிதழ்கள், பட்டம், சர்வீஸ் ரிஜிஸ்தர் எல்லாவற்றோடும் புறப்பட்டான் சுதர்சனன்.
பஸ்ஸில் அந்த இடத்திற்குப் போய்ச் சேருவதற்கே ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. காலை பத்து மணிக்கு மேல் அவன் புறப்பட்டிருந்ததனால் சரியாகப் பகல் உணவிற்கான மதிய இடைவேளை நேரத்தில் அவன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான், ஆசிரியர்கள் ஒய்வு அறையில் விசாரித்ததில் தலைமையாசிரியரை இரண்டு மணிக்குமேல் தான் பார்க்க முடியுமென்று தெரிந்தது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் அறையும் ஆசிரியர்கள் ஓய்வறைக்குப் பக்கத்திலேயேதான் இருந்தது. டேவிட்கந்தையா என்று ஒரு டிராயிங் மாஸ்டர் தாமாகவே சுதர்சனனுக்கு அறிமுகமானார். சுதர்சனனிடம் பேச்சுக் கொடுத்து அவன் வந்திருக்கும் காரியத்தை அறிந்து கொண்டார். அவரே முன்வந்து சொன்னார்: “இந்தப் பள்ளிக்கூடம் செங்குந்தர் மேனேஜ்மெண்ட்லே இருக்குது. பெரும்பாலும் அவுங்க காஸ்ட் பீப்பிளைத்தான் ப்ரெஃபர் பண்ணுவாங்க. டிராயிங் மாஸ்டருக்கு இதுவரை அவுங்க காஸ்ட் கேண்டிடேட் யாரும் அப்ளை பண்ணாததாலே தான் நானே காலந்தள்ள முடியுது. அவுங்க காஸ்ட் டிராயிங் மாஸ்டர் கிடைச்சிட்டா என்னையே தள்ளிவுட்டுடுவாங்க சார்.” சாதி மதபேதமற்ற சமூகத்தைப் படைக்கணும்னு எல்லா அரசாங்கங்களும் மாத்தி மாத்தி அறிக்கை விடற லட்சணம் இதுதானா? இதுக்கு அவனவன் அவனோட ஜாதியை ஆதரிக்கலாம்னு ஒரு சட்டம பண்ணி வச்சுக்கலாமே?” “ஒரு கோடி மகாத்மாக்களும், சீர்திருத்தவாதிகளும் ஒரே சமயத்திலே பிறந்து முயற்சி பண்ணினாக்கூட இந்தியாவைத் திருத்த முடியாது சார்! இங்கே ஒவ்வொரு ஜாதிக்காரனுக்கும் அவனுக்கு வேணும்னு வசதியாயிருக்கறப்ப ஜாதி வேணும். அவனுக்கு வேணாம்கிறப்பவோ அசெளகரியமாயிருக்கறப்பவோ ஜாதி மதம்லாம் வேண்டாம்.” “இந்த ஜாதி மத விவகாரங்களிலே ரொம்பச் சீரழிஞ்சு போய் ஊழலாயிருக்கிறது கல்வித்துறைதான். கல்வித்துறையிலே இருக்கிற மாதிரி ஜாதிமத வெறி வேறெந்தத் துறையிலேயும் இப்பிடி நாத்தம் எடுத்துக் குமட்டற அளவுக்கு இல்லேன்னே சொல்லலாம்.” “ஜாதி வேணாம், மதம் வேணாம், ஏற்றத்தாழ்வு வேணாம்னு எல்லோரும் மேலுக்குச் சொல்விலிக்கிட்டு உள்ளூற நம்மை நாமே ஏமாத்திக்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர கெடுதலையும் கஷ்டத்தையும் சந்திக்கிறப்போ ஜாதி வேணாம்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர நன்மையையும், வசதிகளையும் புரிஞ்சுக்கறப்போ ஜாதி வேணும்னு உள்ளுற ஏத்துக்கிட்டு வரவேற்கிறோம். இதுதான் நம்ம தேசம். வித்தியாசங்களை ஒழிக்கிறதுங்கறது இன்னும் இங்கே தொலை துாரத்து லட்சியம் தானே ஒழிய நடை முறையாகி விடவில்லை. வரவர ரெட்டை வேஷம் போடறங்கறதே நம்ம தேசிய கலாசாரங்கள்ளே ஒண்ணாயிடிச்சு.” சுதர்சனன் இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. அவரே மேலும் தொடர்ந்தார்: “செங்குந்தர் இல்லேன்னு உங்களை ஒதுக்காமே உங் களுக்கு இப்போ வேலை கெடைச்சிட்டாலும் வேற ஒரு சங்கடம் இருக்கு. நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் காமிச்சுக்காதீங்க. நானூறு ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டீங்கன்னா முந்நூறு ரூபாய்தான் கையிலே கெடைக்கும். ‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்’ கையிலே கெடைக்கெறதுக்கு முன்னாடியும் ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் செலவழிச்சாக வேண்டியிருக்கும்.” “நீங்க எல்லாருமே அந்த மாதிரித்தான் வேலைக்குச் சேர்ந்தீங்களா? ஒருத்தருக்காவது லஞ்சம் குடுக்கறது தப்புன்னு படலியா?” “என்ன செய்யிறது? ஜனநாயக சோஷலிஸ சமூகத்தை அமைக்கிற ஜாதி மதச் சார்பற்ற நாட்டிலே இத்தனை லஞ்சமும் கொடுத்தப்புறம் தான் வேலை கெடைக்குது. வெறும் நேர்மையையும் தகுதியையும் ஒழுக்கத்தையும் எவன் மதிக்கிறேங்கறான்?” “லஞ்சம் கேட்கிறவனையும், குடுக்கிறவனையும் நடுத்தெருவிலே நிறுத்தி வச்சுச் சுட்டுடணும்.” “அப்பிடி உடனே சுடறத்துக்குக்கூட எதினாச்சும் ‘ஸம்திங்’ குடுத்தாத்தான் முடியும்.” “இதைக் கேக்கறப்ப உங்க மேலே கோபமா இருந்தாலும் நீங்க சொல்றதென்னவோ நிஜந்தான்.” “லஞ்சம் வாங்கறவன் குடுக்கறவனை எல்லாம் சுடறதுன்னு வந்தா அப்புறம் இந்தத் தேசத்துலே ஒருத்தன் மீத மிருக்க மாட்டான். இதை ரெண்டையும் செய்யாத ஆள் கெடைக்கறதே கஷ்டம். வாங்கிப் பழகின கையை விட லஞ்சம் குடுத்துப் பழகின கைதான் இங்கே அதிகம்.” “சாகறதுக்கு ஒண்ணுக்கு மட்டும்தான் இங்கே லஞ்சம் கிடையாதுன்னு நெனைக்கிறேன்.” “யார் சொன்னாங்க? அதுக்கும் கூட உண்டு, கிருஷ்ணாம் பேட்டை, கண்ணம்மா பேட்டை, ஓட்டேரி எல்லா மயானத்திலும் பொணம் உள்ளே நல்ல எடமாப் பிடிக்கக் கார்ப்பொரேஷன் சார்பில் வேலை பார்க்கிற சுடுகாட்டுப் பிரதிநிதிக்கும் ‘ஸம்திங்’ உண்டு. லஞ்சமில்லாத விஷயம் எதுவும் இங்கே கிடையாது.” ஹெட்மாஸ்டர் வந்துவிட்டதாக யாரோ வந்து தெரி வித்தார்கள். சுதர்சனன் டேவிட் கந்தையாவிடம் விடை பெற்றுக் கொண்டு தலைமையாசிரியரைப் பார்ப்பதற்குச் சென்றான். அங்கே தலைமையாசிரியர் அறை முகப்பில் ‘ஸ்ரீ சென்னிமலை முருகன் துணை’ என்று பெரிதாகப் பிளாஸ்டிக் எழுத்துக்களில் எழுதிப் போட்டிருந்தது. உள்ளே நுழைந்தால் தலைமையாசிரியரின் தலைக்கு மேலும் அப்படியே எழுதியிருந்தது. நடுத்தர வயதுத் தலைமையாசிரியர் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு நிமிர்ந்து சுதர்சனனை ஏறிட்டுப் பார்த்தார். “என்ன வேணும்? சொல்லுங்க...” “உங்க விளம்பரம் ‘ஹிண்டு’விலே பார்த்தேன்.” “என்ன விளம்பரம்? சட்னு புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.” “அதான் அந்தத் தமிழ்ப் பண்டிட் தேவைங்கிற விளம்பரம்.” “ஒ அதுவா? நீங்களும் அதுக்கு அப்ளை பண்றீங்களா?” “ஆமாம்! அப்ளிகேஷனை நேரிலேயே குடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.” “சரி குடுங்க... வாங்கிக்கறேன். அவர் அவனை உட்காரச் சொல்லி வேண்டவுமில்லை. அவன் உட்கார விரும்பவுமில்லை. கொடுத்து விட்டுப் போனால் போதும் என்ற அவசரத்தில் தான் அவனும் இருந்தான். உட்கார விரும்பி யிருந்தால் அவர் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற உபசாரத்துக்காகக் காத்திராமல் அவனே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் விண்ணப்பத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்துவிட்டு ஒரு விநாடி தயங்கி நின்றான். “இண்டர்வ்யூ லெட்டர் வரும், வந்தாப் புறப்பட்டு வாங்க, இந்த சர்டிபிகேட்ஸ் ஒரிஜனல் எல்லாம் இப்ப எங்களுக்குத் தேவை இல்லை. நீங்களே கொண்டு போகலாம். அவசியமானால் இன்டர்வ்யூவுக்குப் புறப்பட்டு வர்ரப்பக் கொண்டு வாங்க போதும்”என்று சர்டிபிகேட்டுகளை தனியே பிரித்து அவனிடமே திருப்பி நீட்டினார் தலைமையாசிரியர். அநேகமாக அந்தக் கட்டிடத்தைப் பொறுத்தவரை ஸ்ரீ சென்னிமலை முருகன் துணை வெளியாருக்குக் கிடைக்காது போலிருந்தது. சுதர்சனன் வெளியேறியபோது மறுபடி டேவிட் கந்தையா வேறொரு நரைத்த மீசைக்காரருடன் எதிர் கொண்டார். “இவர் தாங்க இங்கே சீனியர் தமிழ்ப் பண்டிட். புலவர் பூங்காவனம்.” “வணக்கம். டேவிட் இப்பத்தான் நீங்க வந்திருக்கிறதைப் பத்திச் சொன்னாருங்க. ரொம்ப மகிழ்ச்சி...” “மகிழ்ச்சிப் படறாப்ல இன்னும் எதுவும் நடந்துடலே. சும்மா அப்ளிகேஷனைக் குடுத்திருக்கேன் அவ்வளவுதான். சென்னிமலை முருகன் நமக்கும் துணையா இல்லையாங்கிறது இனிமேல்தான் தெரியணும்” என்று சிரித்துக் கொண்டே புலவருக்கு மறுமொழி கூறினான் சுதர்சனன். “இதுக்கு முன்னாடி எங்கே இருந்தீங்க? சர்வீசுக்கே புதுசா அல்லது எங்கேயாவது ஏற்கெனவே தமிழாசிரியரா இருந்திருக்கீங்களா?” “ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல்லே தமிழாசிரியரா இருந்தேன். அப்புறம் இங்கேயே ஒரு டூட்டோரியல் காலேஜ்ல கொஞ்ச நாள் இருந்தேன்.” “டூட்டோரியல் காலேஜ் சர்வீஸை எல்லாம் இங்கே கவுண்ட் பண்ண மாட்டாங்க... ஜமீன்தார் ஹைஸ்கூல்லே எத்தினி வருசம் இருந்தீங்களோ?” “வருஷக் கணக்கெல்லாம் சொல்றாப்ல ஒண்ணுமில்லே! ஏதோ கொஞ்ச காலம் இருந்தேன். அதாவது அவங்களுக்கு என்னையும் எனக்கு அவங்களையும் பிடிக்கிற வரை இருந்தேன்னு வச்சுக்குங்களேன்.” “ஆமாமா, ஒரே எடத்திலே மொளையடிச்சாப்பில இருக்கணும்னு அவசியமா என்ன? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு தானே நம்ப தமிழ்ப் புலவனே பாடி வச்சிருக்கான்?” “அதுனாலேதான் சர்க்கார் ஸ்கூல் காலேஜ்களிலே எல்லாம் அடிக்கடி எந்த ஊருக்காவது டிரான்ஸ்ஃபர் பண்றாங்கன்னு தோணுது. ‘யாதும் ஊரே’ பாடினவனே, ‘டிரான்ஸ்பரை’ நினைச்சுத்தான் அப்படிப் பாடியிருக்கணும்.” “ரொம்ப தமாஷாப் பேசறீங்க. நீங்க நம்ப ஸ்கூலுக் வந்தாப் போதும். நல்லாப் போது போவும்.” “ஆனா வெறும் தமாஷுக்காகவே யாரும் வேலை தர மாட்டாங்களே?” என்று அவருக்கு உடனே பதில் சொல்லிச் சிரித்தான் சுதர்சனன். “செங்குந்தர் திலகம் தொரப்பாக்கம் முருகேச முதலியாரைத் தெரியுங்களா உங்களுக்கு?” “ஏன்? எனக்கு யாரையும் தெரியாது.” “இல்லே! அவரு ஒரு லெட்டர் குடுத்தார்னா இந்த வேலை உங்களுக்குக் கிடைச்ச மாதிரின்னு வச்சுக்குங்களேன்.” “அவரு எங்கே இருக்காரோ?” “பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியுமுங்களே! டி.எம்.எம். எக்ஸ்போர்ட்டர்ஸ்னு கொடவுன் ஸ்ட்ரீட்லியே அவுங்கதான் பெரிய கார்ப்பெட் எக்ஸ்போர்ட்டர்ஸ்.” “எனக்குத் தெரியாதுங்க! ஒரு வேளை நான் இன்னும் பச்சைக் குழந்தையாகவே இருந்தால் தெரிஞ்சிருக்குமோ என்னவோ? யார் கண்டாங்க?” “ரொம்பத் தமாஷாப் பேசறீங்க.” சுதர்சனன் டேவிட் கந்தையாவிடமும் புலவர் பூங்காவனத்திடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது பகல் இரண்டரை மணிக்குமேல் ஆகிவிட்டது. மறுபடி பஸ் பிடித்துத் திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தபோது மாலை ஆகிவிட்டது. பஸ் ஸ்டாப்பில் இறங்கி அறைக்குச் செல்வதற்காகப் பைகிராப்ட்ஸ் சாலையின் ஜனவெள்ளம் கடற்கரையை நோக்கிப் பொங்குவதை எதிர்த்து மேற்குத் திசையில் அவன் எதிர் நீச்சலிட்டபோது பின்னாலிருந்து, “அண்ணே! சுகந்தானா?” என்று ஒரு பழகிய குரல் அவனை விளித்தது. திரும்பிப் பார்த்தால் திருவையாறு கல்லூரியில் புலவர் வகுப்பில் உடன் பயின்ற மதிவாணன் நின்றுகொண்டிருந்தார். அவரை நோக்கிச் சுதர்சனனின் முகம் மலர்ச்சி காட்டியது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|