1 முந்திய நாளைப் போலவே தான் அன்றும் நடந்தது. சுதர்சனன் பள்ளி இறுதிப் படிப்பு ‘சி’ பிரிவு வகுப்புக்கான பிற்பகல் முதல் பாடவேளையை முடித்து விட்டு - ‘அடுத்த பீரியடு’ தனக்கு முழுக்க முழுக்க, ஓய்வு என்ற எண்ணத்தோடு ஏற்பட்ட நிம்மதியும் மகிழ்ச்சியுமாக ஆசிரியர்கள் ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய அந்த நிம்மதி ஒரு விநாடி நேரம் கூட நீடிக்கவில்லை. பள்ளி ஊழியன் கையில் ஒரு சிறு துண்டுத் தாளுடன் சுதர்சனனை நோக்கி விரைவாகத் தேடி வந்தான். “என்னது? ஸப்டிடியூட் ஒர்க்கா?” “எனக்கென்ன தெரியும்? படிச்சுப் பாருங்க சார்!” துண்டுத் தாளைக் கையில் வாங்கிப் படித்ததும் சுதர்சனனுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது. ‘ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்கு என்னால் போக முடியவில்லை. எனக்குப் பதிலாக அங்கே போகவும்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார் தலைமை ஆசிரியர். முந்திய நாளும் இதே போல் ஏதோ ஒரு வகுப்புக்குப் போகச் சொல்லி அவர் சுதர்சனனுக்கு மெமோ அனுப்பிக் கழுத்தறுத்திருந்தார். ஏதோ வேண்டும் என்றே திட்டமிட்டுச் செய்வதைப் போலத் தோன்றியது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாள் பிற்பகலில் தலைமையாசிரியர் திடீரென்று ஆசிரியர்கள் ஓய்வு அறையான ‘ஸ்டாஃப் ரூமு’க்கு வந்தபோது சுதர்சனன் தான் வழக்கமாக உட்காரும் வேப்பமரக் காற்று வருகிற ஜன்னலோரமாக அமர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழைந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. மற்ற ஆசிரியர்களில் யார் யார் அப்போது ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் அவரைப் பார்த்ததும் மரியாதையாக எழுந்து நின்றிருக்க வேண்டும். எல்லாரையும் விட வயதில் இளையவனும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த தமிழாசிரியனும் ஆகிய அவன் தம்முடைய வரவையே கவனிக்காதது போல் குனிந்து எழுதிக் கொண்டிருந்தது தலைமையாசிரியருக்கு ஆத்திரமூட்டியது. அவர் சரியாகத் தன் பின்னால் வந்து நின்று கொண்டு தான் எழுதிக் கொண்டிருப்பதைப் படிக்க முயன்ற போது கூட அவன் அவர் வந்து தன் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை. “இதென்ன பள்ளிக்கூடமா சந்தை மடமா?” அவர் திடீரென்று சத்தம் போட்டு இரைந்த பின்பு தான் அவனுடைய கவனம் திரும்பியது. பதறிப் போய் எழுந்து நின்றான் சுதர்சனன். “மிஸ்டர் சுதர்சனன்! ஸ்கூல்லே ஒவ்வொருத்தருக்கும் ‘லீஷர் பீரியட்’ எதுக்காகக் குடுக்கிறாங்க தெரியுமா?” “...” “பையன்களோட காம்போஸிஷன் நோட்டு, ஹோம் ஒர்க், எதையாவது ‘கரெக்ட்’ பண்றதுக்குத்தான் இந்த லீஷர். நீர் கவிதை எழுதறத்துக்காகவோ, கதை எழுதறத்துக்காகவோ இங்கே நாங்க சம்பளம் கொடுக்கலே! ஞாபகமிருக்கட்டும்.” இப்படிக் கூப்பாடு போட்டு இரைந்து விட்டு அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திராமலே விருட்டென்று திரும்பிப் போய்விட்டார் தலைமை ஆசிரியர்.
அந்தச் சம்பவம் தொடர்புள்ள கோபமும் ஆத்திரமும் இன்னும் அவர் மனதில் அப்படியே நீடிக்கிறது என்று தெரிந்தது. அதனால்தானோ என்னவோ தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவனுடைய ஓய்வு வேளையில் அவன் ஓய்வு கொள்ள முடியாமல் எந்த வகுப்புக்காவது ‘ஸப்டிடியூட்’டாக அவனை அனுப்பிக் கொண்டிருந்தார் அவர்.
‘மெமோ’வில் தன் இன்ஷியலைப் போட்டு பியூனிடம் கொடுத்தனுப்பி விட்டுத் திரும்பி நின்று தற்செயலாக எதிர்ப்புறம் தெரிந்த விளையாட்டு மைதானத்தைப் பார்த்த சுதர்சனனுக்கு மேலும் அதிக ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கப் போக வேண்டிய தலைமையாசிரியர் விளையாட்டு மைதானத்தில் மாணவிகளோடு ‘ரிங்டென்னிஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார். அது ஒரு ‘கோ-எஜுகேஷன்’ பள்ளிக்கூடம். தலைமையாசிரியர் வாசுதேவனோ மனைவியை இழந்தவர். அது மிகவும் செழிப்பான மலையடிவாரத்து நாட்டுப்புற கிராமம். ஆகையினால் பெண்களுக்கு எல்லாம் ஆற்றோரத்துத் தாவரம் போலச் சிறுவயதிலேயே ஒரு மதமதப்பும் வளர்ச்சியும் வசீகரமும் வந்திருந்தன. ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை படிக்கும் மிகவும் சிறிய பிராயத்துப் பெண்களே இப்படி வளர்ச்சிக்கு விலக்கில்லை என்றால் ஒன்பதாவது வகுப்பு முதல் பதினோராவது வகுப்பு வரை படிக்கும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்த மேல் வகுப்புப் பெண்கள் மூன்று வகுப்புக்களுக்குமான எல்லா செக்ஷன்களிலும் சேர்ந்து இருபது முப்பது பேர் இருந்தார்கள். ‘பிஸிகல் எஜுகேஷன் டிரெயினிங்’ அல்லது டிரில் கிளாஸ் எனப்படும் உடற்பயிற்சி வகுப்பு இவர்களுக்கும் உண்டு. சட்டப்படி பயிற்சி பெற்ற பெண் உடற்பயிற்சி ஆசிரியை ஒருத்தியைத் தான் இந்த மாணவிகளைக் கவனித்துக் கொள்வதற்கு நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியை கிடைக்காததால் முப்பது மாணவிகளில் ஒருத்தியை மானிட்டராகத் தேர்ந்தெடுத்து அவள் டிரில் மாஸ்டர் அறையிலிருந்து தேவையான விளையாட்டுக் கருவிகளைக் கேட்டு வாங்கி வந்து விளையாட்டு வகுப்பை எப்படியாவது நடத்திக் கொள்ள வேண்டியது என்று விடப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளாகவே தலைமையாசிரியர் வாசுதேவன் எம்.ஏ.எல்.டி. இந்த மேல் வகுப்புப் பெண்களின் உடற்பயிற்சி வகுப்புக்களில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியிருந்தார். அதைக் கவனிக்கிற பிறர் அவரைக் கேலி செய்யக் கூடிய அளவு அவர் அதிக அக்கறை காட்டினார். மாணவிகளுக்கு - அவர்களில் சிலருடைய கைகளைப் பற்றியபடி ‘ரப்பர்ரிங்’கை எப்படிப் பிடித்துக் கொள்ளுவது, எப்படி வீசுவது என்றெல்லாம் கூடத் தலைமையாசிரியர் மகிச்சியோடு சொல்லிக் கொடுக்கத் தலைப்பட்டார். இந்த விஷயத்தில் மாணவிகள் கூச்சப்பட்டு விலகி ஓடினால் கூட இவர் அவர்களை விடத் தயாராயில்லை. தம் அறையில், அமர்ந்தும், வகுப்புக்களைச் சுற்றிப் பார்த்து ‘சூபர்வைஸ்’ செய்தும் ஒரு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய வேலைகள் வேறு எவ்வளவோ இருந்தும், பழக்கத்துக்கு அடிமையான ஒரு குடிகாரனைப் போல் மாணவிகள் மைதானத்துக்கு விளையாட வருகிற நேரத்தில் எந்த வேலை எங்கே இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு மாணவிகளோடு வந்து மைதானத்தில் சேர்ந்து பல்லிளித்துக் கொண்டு நிற்கிற பழக்கம் தலைமையாசிரியருக்கு வந்துவிட்டது. இது சம்பந்தமாக எழுந்த கேலி, கிண்டல் எல்லாம் கூட அவரை ஒன்றும் மாற்றிவிடவில்லை. “ஹெட் மாஸ்டரையா தேடறீங்க? ரூம்லே இல்லேன்னா ‘ப்ளே கிரவுண்டிலே’ கேர்ள்ஸ் விளையாடற இடத்திலே போய்ப் பாருங்க. நிச்சயமா அங்கே இருப்பாரு” என்று சிரித்துக் கொண்டே மற்றவர்கள் அவரைப் பற்றிப் பதில் சொல்கிற எல்லைக்கு அவரது இந்தப் போக்குப் பிரசித்தமாயிருந்தும் அவர் பழையபடியேதான் இருந்தார். ‘அவுட்டோர் கேம்’ ஆகிய பூப்பந்து, ரிங் டென்னிஸ் ஆட்டங்களின் போது மட்டுமல்லாமல் ‘இண்டோர்கேம்’ ஆகிய ‘கேரம்’ போன்றவற்றை விளையாடிக் கொண்டிருந்தாலும் கூட மாணவிகளுக்கு நடுவே அவரும் போய் ஒட்டிக் கொண்டார். இதனால் அவரே போய் நடத்த வேண்டிய பல வகுப்புக்களுக்கு அவர் போக முடியாமல் அந்த நேரத்தில் ஓய்வாக இருக்கும் வேறு ஆசிரியர்கள் தலையில் அந்த வேலை கட்டப்பட்டது. “அவரு முன்னாலே எல்லாம் இப்படி இல்லே. ஒழுங்கா ‘கிளாஸ்’ அட்டெண்ட் பண்ணுவாரு. ஸ்கூல் நிர்வாக வேலைகளையும் உடனுக்குடனே கவனிப்பாரு. சம்சாரம் தவறிப் போனதிலேருந்துதான், இந்த மாறுதல்” - என்று தலைமையாசிரியருடைய மாறுதலுக்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. தலைமையாசிரியருக்கே ஒரு வயது வந்த பெண்ணும், பையனும் இருந்தார்கள். பையன் சேலத்துக்குப் பக்கத்தில் ஏற்காட்டில் படித்துக் கொண்டிருந்தான். பெண் திருச்சியில் தாய்வழி மாமன் வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி அவர் நினைக்கவில்லை. ஆதர்சபுரத்தில் தலைமையாசிரியர் வாசுதேவன் மட்டும் தான் தனி ஆளாக ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். சமையலுக்கு ஆள் இருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூலுக்கு அவர் தலைமையாசிரியராக வந்து அதிக நாட்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை. எல்லாத் தலைமையாசிரியர்களுக்கும் இருப்பதைப் போல் வந்த புதிதில் அவரைப் பற்றியும் ஓர் அத்து இருந்தது. இனம் புரியாத ஒரு வகை மரியாதையும் இருந்தது. நாளாக நாளாக அவை எல்லாம் கரைந்து போய் அவரைப் பற்றியும் அவர் தொடர்பான சம்பவங்களைப் பற்றியும் வெறும் அரட்டைகளும் திண்ணைப் பேச்சுக்களுமே ஊரில் மீதமிருந்தன. அவர் இல்லாத இடங்களில் அவர் இல்லாத சமயங்களில் அவரைப் பற்றிப் பேச நிறையக் கேலியும் கிண்டலும் மீதமிருந்தன. அவர் எதிரே இருக்கும் போது ஒரு போலியான வழக்கமான வெற்று மரியாதை அவருக்குக் காட்டப்பட்டது. நாற்பத்தெட்டு வயது நிறைந்திருந்தும் அவர் தலையில் கொஞ்சங்கூட நரையில்லை. எடுப்பான முகமும் அளவான உயரமும் இருந்தாலும் மூக்கு மட்டும் கருடாழ்வார் மாதிரி அமைந்திருந்து முக லட்சணத்தை ஓரளவு கெடுத்து விட்டது. எலுமிச்சம் பழ நிற மேனியும் பருமனில்லாத உடம்புமாக வற்றிய வாசுதேவனுடைய தோற்றத்தில் இளமையும் தெரியாமல் முதுமையும் தெரியாமல் நடுத்தர வயது தான் தெரிந்தது. பருவப் பிரிவுகளில் எதிலும் அடங்காத ஒரு தோற்றம் என்று தான் அதைச் சொல்ல வேண்டும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சனன் தலைமையாசிரியருக்கு நேர்மாறான குணமும் தோற்றமும் அமையப் பெற்றிருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் அவன் அந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வேலைக்குச் சேர்ந்திருந்தான். திருவையாறு கல்லூரியிலே தமிழ் வித்துவான் படிக்கும் போதே முதலில் சுயமரியாதை இயக்கம், பின்பு தி.மு.க. என்று அரசியல் சார்புகள் கொண்டிருந்த சுதர்சனனிடம் கொஞ்சம் பருவமும் அறிவும் பக்குவப்படப் பக்குவப்படப் பொதுச் சிந்தனைகள் வளர்ந்து பழைய சார்புகள் எல்லாம் தவிர்ந்திருந்தன. சார்புகள் தானே தன் மேல் ஏற்றிருந்த தளைகள் என்று பின்னால் அவற்றைப் பற்றி அவனே உணர முடிந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் பிறர் தனக்கு இடுகிற தளைகளையும், சிறைகளையும் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறானே ஒழியத் தானே தன்னையறியாமல் தனக்கு இட்டுக் கொள்ளும் தளைகளையும் சிறைகளையும் பற்றி ஏனோ அதிகம் கவலைப்படுவதில்லை. உண்மையில் மிகவும் அபாயகரமானவையும், சிந்தனையையும் அறிவையும் மந்தப்படுத்தி விடுகிறவையுமான தளைகளும், சிறைகளும் ஒருவன் தனக்குத் தானே இட்டுக் கொள்பவை தான் என்பது சுதர்சனனுக்கு இப்போது புரிந்தது. கொள்கை என்ற பெயரிலும், இலட்சியம் என்ற பெயரிலும் தான் நின்ற இடத்திலிருந்தே தன்னைச் சுற்றி அல்லது தன்னை வளைத்து ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளாமல் தப்ப முடிவதும் இயலாத காரியம் தான் என்றாலும் அப்படி வட்டம் போட்டுக் கொண்டு நின்று விடுவதன் மூலமே வட்டத்துக்கு வெளியே உள்ள எதுவும் தெரியாமலும், புரியாமலும் போய் விடுகின்றன என்பது சுதர்சனனுடைய அநுபவமாகவே இருந்தது. திருவையாறு நாட்களாக இருந்தால் வாசுதேவனை அவருடைய சாதியைச் சொல்லியே எதிர்த்திருப்பான் அவன். காய்ந்த வைக்கோற்போரில் போகிற போக்கில் வீசி எறியும் நெருப்பு மாதிரி அந்த சாதித் தாக்குதல் பிரயோகம் பற்றிக் கொள்ளூம் என்ற இரகசியமும் அவனுக்குத் தெரியும். “நல்லது செய்கிறவர்களும், தவறு செய்கிறவர்களும் எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். வசதியுள்ளவர்களும் ஏழைகளும், எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். இரக்கமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும் எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். இன்றைய உலகில் பொருளாதார அடிப்படையும் ஏற்றத் தாழ்வுகளுமே புதிய சாதியைப் படைக்கின்றன” - என்ற பார்வையை அவனுக்குள்ளே வளர்த்த புது நண்பர்களுக்கு இப்போது அவன் நன்றி செலுத்தி மனப்பூர்வமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். ஆசிரியர்களின் ஓய்வு அறையிலிருந்து தலைமையாசிரியருக்குப் பதிலாக அவர் பாடம் நடத்த வேண்டிய ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்குப் போவதற்காக நடந்து கொண்டே சுதர்சனன் இவ்வளவும் நினைத்தான். பாடவேளைகளுக்கு நடுவே கிடைக்கும் லீஷர் ‘பீரியடை’ எப்படி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர் வாசுதேவன் தனக்கு அறிவுரை கூறியதையும், எச்சரித்ததையும், நினைத்த போது சுதர்சனன் உள்ளூறச் சிரித்துக் கொண்டான். தாம் உருப்படியாகப் பாடம் நடத்த வேண்டிய நேரத்தையே வீணாக்கிவிட்டுப் பெண்பிள்ளைகள் குனிவது, நிமிர்வதையும், ஓடுவதையும் கைவீசுவதையும் பார்க்கிற நைப்பாசையில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவர், அடுத்தவர்களுக்கு உபதேசிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்குள் அவன் நுழைந்ததும் மாணவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களை உட்காரச் சொல்லிக் கையமர்த்திவிட்டுத் தானும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். கோரஸ் போல எல்லாப் பையன்களும் ஒரே சமயத்தில் ஒரேவிதமான வேண்டுகோளை அவனிடம் விடுத்தனர். “ஏதாவது நல்ல கதையாச் சொல்லுங்க சார், கேட்கிறோம்.” சாதாரணமாக மாரல் இன்ஸ்ட்ரக்ஷன், ஹாபி, இன்னொருவர் வராததை நிறைவு செய்வதற்குப் போகும் பாடவேளைகள், எல்லாவற்றிலும் பையன்களுடைய முதல் வேண்டுகோள் கதை சொல்லச் சொல்லித்தான் வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. பையன்களுக்கு எதனால் இவ்வளவு பெரிய கதைப் பைத்தியம் பிடித்திருக்கிறது? ஒரு வேளை முழுப் பாடத் திட்டமும் ஒரு மாணவனை அல்லது முழு மாணவ சமூகத்தையும் அலுப்படையச் செய்வதாகவோ, களைப்பூட்டுவதாகவோ, இருக்கிறதோ என்னவோ? அதிலிருந்து விடுபடுவதற்குத்தான் கதை கதை என்று கேட்கிறார்களோ? “கதை இருக்கட்டும், உங்க ‘செலபஸ்’ எந்த அளவில் இருக்கு? பரீட்சைக்கு நடக்க வேண்டிய பாடமாவது முடிஞ்சிருக்கா, இல்லியா?” “எப்படி சார் முடியும்? இங்கிலீஷ் கிளாஷ் எச்.எம். எடுத்தாலும் எடுத்தார்... முக்கால்வாசி நாள் அவராலே எங்க கிளாஸுக்கு வர முடியாமப் போகுது. உங்களை மாதிரி யாராவது ஸப்டிடியூட் தான் வராங்க...” “நான் இங்கிலீஷ் நடத்தட்டுமா?” “நீங்க எப்பிடி சார் நடத்த முடியும்? தமிழ்ப் பண்டிட் இங்கிலீஷ் நடத்தலாமா?” “தமிழ்ப் பண்டிட் தமிழ் மட்டும்தான் நடத்தணுமாக்கும்?” “நீங்க ஜாலியா எதினாச்சும் கதை சொல்லுங்க சார்...” “தமிழ்ப் பண்டிட் கதை மட்டும் சொல்லலாமாக்கும்...?” “நீங்க கதை எல்லாம் எழுதறவரு. அதனாலே நல்லாச் சொல்லுவீங்க சார்...” “எழுதறது வேறே, சொல்றது வேறே. எழுதிட்டா நல்லாச் சொல்லிட முடியும்னு இல்லே தம்பிகளா...” “நீங்க ஃபோர்த் ஃபாரம் ‘பி’ செக்ஷன் நான் டீடயில்ட் கிளாஸ்லே அருமையான கதையெல்லாம் சொல்வீங்கன்னு என் தம்பி சொல்லியிருக்கான் சார்.” “இன்னிக்கு இங்கே நான் கதை கிதை சொல்ல மாட்டேன். நீங்க ஏதாவது சத்தம் போடாமப் படிச்சிட்டிருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன்...” மறுபடியும் தலைமையாசிரியர் மேற்பார்வைக்காகச் சுற்றி வரும் போது அவரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் இப்போது சுதர்சனத்துக்கு ஒரு சிறிதும் இல்லை. மாணவர்களை அமைதியாக அவர்கள் பாடத்தைப் படிக்கச் சொல்லிவிட்டு அரைகுறையாக நிறுத்தி வைத்திருந்த தன் கவிதையை மேலும் தொடர்ந்து எழுதலானான் அவன். பெண்களின் ‘டிரில் பீரியடு’ முடிகிற வரை தலைமையாசிரியர் நிச்சயம் விளையாட்டு மைதானத்தில் தான் இருப்பார் என்பதில் அவன் மனம் முழு நம்பிக்கை வைத்திருந்தது. பக்கத்து வகுப்பறையில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாச ராவ் மாணவர்களுக்கு ஏதோ ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு அவர்கள், அதைச் செய்கிற நேரத்தில் உலாவுவதற்கு வராந்தாப் பக்கம் வந்தவர். “என்ன? சுதர்சனம் சாருக்கு ஓசிப் பீரியடா?” என்று சுதர்சனம் அமர்ந்திருந்த வகுப்பறை ஜன்னலருகே நின்று சிரித்தபடி கேட்டார். சுதர்சனனும் எழுதுவதை நிறுத்தி விட்டு எழுந்து ஜன்னலருகே சென்றான். ராவிடம் விவரம் தெரிவித்தான். அவர் சொன்னார்: “கேர்ள்ஸுக்கு டிரில் பீரியடு இருந்தா ஹெச்.எம். கிளாஸுக்கு வரமாட்டார்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே?” “அப்படீன்னா, டயம் டேபிளில் கேர்ள்ஸுக்கான டிரில் பீரியடை அவரே போட்டு எடுத்துக்கலாமே? ஏன் மத்தவங்க கழுத்தை அறுக்கிறாரு?” “கோபப்படாதீங்க? இப்பத்தான் வேலையிலே சேர்ந்திருக்கீங்க?... கொஞ்சம் பொறுத்துப் போங்க...” என்று சுதர்சனனுக்கு அறிவுரை கூறினார் புலிக்குட்டி. சீனிவாச ராவுக்கு அந்தப் பள்ளிக்கூடத்திலே எப்படியோ புலிக்குட்டி என்ற பெயர் அவரது சொந்தப் பெயரே மறைகிற அளவு நிலைத்து விட்டது. “டேய்! ஹோம் ஒர்க் போடாமே வராதே! புலிக்குட்டி கிளாஸ்லே நாற்பத்தஞ்சு நிமிஷமும் பெஞ்சு மேலே ஏறி நிற்க வேண்டியிருக்கும்” - என்று பையன்களே ஒருவருக்கொருவர் குறிப்பிட்டுப் பேசிக்கொள்ளும் அளவு கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாச ராவ் போன்று பல ஆண்டுகள் அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் கூடத் தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்கு ஓரளவு அடங்கியும், பயந்தும், நடந்ததைப் பார்த்துச் சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால் தான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இதே புலிக்குட்டி தன்னிடம் உரையாடிய ஓர் உரையாடலை சுதர்சனன் இன்னும் மறந்து விடவில்லை. பள்ளிக்கூட அலுவலக அறையில் ரைட்டர் நரசிம்மலுநாயுடு, “இவர் தான் புது ஜூனியர் தமிழ்ப் பண்டிடி - “ என்று சீனிவாச ராவுக்குச் சுதர்சனனை அறிமுகப்படுத்தியிருந்தார். அதோடு சுதர்சனன் தமிழ் வித்வான் தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறி ஆயிரம் ரூபாய்ப் பரிசு பெற்றிருப்பதையும் அவர் புலிக்குட்டியிடம் சொல்லியிருந்தும், “நீங்க நாயுடுவா மிஸ்டர் சுதர்சனன்? மனவாடு... அதான் நரசிம்மலு நாயுடு படுகுஷியா அறிமுகப்படுத்தறாரு...” என்று ராவ் பதில் கூறியிருந்தார். தான் நாயுடுதான் என்பதைச் சீனிவாச ராவ் கண்டுபிடித்துவிட்டதில் சுதர்சனனுக்கு வருத்தமோ வெட்கமோ ஒன்றுமில்லை என்றாலும் ராவ் முதல் சந்திப்பிலேயே தன்னிடம் மிகவும் கொச்சையாக நடந்து கொண்டு விட்டதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல் நிர்வாகிகளாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து இருந்து வந்ததால் தான் சீனிவாச ராவ் இப்படிச் சொல்லியிருந்தார் போலும். ஆனாலும் அவர் சொல்லிய விதம் ஒரு தினுசாயிருந்தது. நிர்வாகி எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே சலுகை அதிகம் என்று ஒரு வம்பு பேசப் பட்டாலும், உண்மையில் அப்படி எதுவுமில்லை. தலைமையாசிரியர் வாசுதேவன் வைஷ்ணவ ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். ராவ் - கன்னடக்காரர். வேறு சிலரும் இப்படிப் பலவிதமாக இருந்தார்கள். ஆனாலும் வம்பு என்னவோ பேசப்பட்டது. வம்புக்குக் காரணங்களும் கற்பிக்கப்பட்டன. தஞ்சை நம்மாழ்வார் நாயுடு குமாரர் ராமாநுஜலு நாயுடு என்பதாகத் தன் தந்தை காலத்தில் சாதி, ஊர், தகப்பன் பெயர்களைச் சேர்த்து எழுதுவதே மரியாதை என்று கருதப்பட்டு வந்தது போலன்றிப் பெயரைச் சுருக்கி ‘டி.ஆர்.சுதர்சனன்’ என்று மட்டுமே வைத்துக் கொண்டிருந்தும் ராவ் இப்படிக் கொச்சையாகத் தன்னை விசாரித்து விட்டாரே என்று எண்ணி சுதர்சனனின் மனம் சங்கடப் படத்தான் செய்தது. சீனிவாச ராவுக்கு என்னவோ அந்தப் பள்ளிக்கூட நிர்வாகத்தைப் பற்றிப் புறம்பேசுவதில் அலாதியான ருசியே உண்டு. ஆனால் பள்ளி நிர்வாகியையோ, நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களையோ அவர் நேரில் பார்த்து விட்டால் அடக்கமும் மரியாதையும் உள்ளவர் போல் நடிக்கத் தவறமாட்டார். தலைமையாசிரியர் வாசுதேவனை நேரில் பார்த்தாலும் அப்படித்தான். ஆனால் ஸ்டாஃப் ரூமில் நாயுடுக்கள் அல்லாத பிற ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் அரட்டையில், “ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல் - பை தி நாயுடூஸ் - ஃபார் தி நாயுடூஸ்...” - என்பது போல் ராவ் கிண்டல் செய்து அடிக்கடி பேசுவது உண்டு என்பதைச் சுதர்சனன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சீனிவாச ராவ் யாரிடம் யாரைப் பற்றி எப்படி எப்போது புறம் பேசுவார் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. தலைமையாசிரியர் இல்லாத போது தலைமையாசிரியரைப் பற்றி சுதர்சனனிடம் பேசுவார். சுதர்சனன் இல்லாத போது சுதர்சனனைப் பற்றித் தலைமையாசிரியரிடம் பேசுவார். யார் யார் எல்லாம் அப்போது அந்த விநாடி வரை பக்கத்தில் இல்லையோ அவர்களைப் பற்றி யார் யார் எல்லாம் பக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் பேசித் தீர்ப்பது புலிக்குட்டி சீனிவாச ராவின் பழக்கம். அங்கு வந்த சிறிது காலத்திலேயே சுதர்சனன் இதைப் புரிந்து கொண்டிருந்தான். அதனால் ராவ் ஜன்னலோரமாக நின்றே பத்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தும் அவன் சும்மா கேட்டுக் கொண்டிருந்தானே ஒழியப் பதில் எதுவும் சொல்லவில்லை. ராவ் பேசுவதைக் கேட்கலாமே ஒழிய பதில் சொல்லக்கூடாது. ஏனென்றால் அந்தப் பதில்களைக் கொண்டே அதற்குரியவர்களைப் பற்றி வேறு யாரிடமாவது பேசவும் ராவ் தயங்கமாட்டார். அவர் தம்முடைய வகுப்பறைக்குத் திரும்பச் சென்ற பின், சுதர்சனன் மறுபடி தன்னுடைய நாற்காலியில் போய் அமர்ந்தான். கவிதை எழுத வரவில்லை. மனம் எது எதிலோ போய்ச் சிக்கியிருந்தது. வடக்குக் கோடியில் மீண்டும் இரண்டு பையன்கள் எழுந்து, “சார்! இண்ட்ரெஸ்டிங்கா ஒரு ஸ்டோரி சொல்லுங்க சார்...” என்றார்கள். “கதை கிடக்கட்டும். பாடத்தைப் படிங்க! பரீட்சை வருது.” சிறிது கடுமையாக அதட்டி அவன் இதைச் சொல்லிய பின் கதை சொல்லுமாறு கேட்கும் துணிவு மாணவர்களில் யாருக்கும் வரவில்லை. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|