16 சுதர்சனன் மறுபடி நடந்தே பெல்ஸ் ரோடுக்குத் திரும்பச் சென்று ரகுவின் மாடியறையைத் திறந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு தயாராவதற்குச் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. தலைவரின் பிறந்த நாளை வாழ்த்தச் சென்ற ரகுராஜனோ மற்றவர்களோ விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை சுதர்சனனுக்கு இல்லை. அப்போது காலை பத்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கலம்பகம் டூட்டோரியல் காலேஜுக்கு அன்று விடுமுறை என்பதாகவும் விரும்புகிற மாணவ மாணவிகள் தலைவர் இல்லத்துக்கு மாலை சூட்ட வரலாம் என்பதாகவும் முகப்பில் ஒரு போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. தலைவர் மேலுள்ள பற்றின் சாயல் ‘கலம்பகம் டூட்டோரியல்ஸ்’ என்ற பெயரிலும் போர்டில் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பிலும் இருந்து தெளிவாகத் தெரிந்தது. அப்போது மாடியில் தனியாகச் சுதர்சனன் மட்டுமே இருந்தான். கீழ்ப் பகுதியில் டூட்டோரியல் காலேஜின் அட்டெண்டர் என்ற பெயரில் வேலை பார்த்த ஓர் ஊழியன் முகப்பில் காவலுக்கு உட்கார்ந்திருந்தான். இரயிலில் சரியாக உறங்காத அலுப்பிருந்தும் இப்போது சுதர்சனனுக்கு உறக்கமும் வரவில்லை. விழித்திருப்பதும் சிரமமாக இருந்தது. அறையில் இரண்டு மூன்று காலைத் தினசரிகள் வந்து விழுந்து கிடந்தன. அவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கியதும் கண்களில் தூக்கம் சொருகிக் கொண்டு வந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் தாமாக மூடின. தினசரி கையிலிருந்து இயல்பாகக் கீழே நழுவியது. யாரோ திறந்திருந்த கதவிலேயே தான் வந்திருப்பதை அறிவிக்கும் நோக்குடன் விரல்களால் மெதுவாகத் தட்டும் ஓசை கேட்டது. தட்டும் ஓசையை விட நளினமாகக் கையின் வளையொலி முந்திக் கொண்டு ஒலிக்கவே சுதர்சனன் கண் விழித்து எதிரே ஒரு பெண் நிற்பதைப் பார்த்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான். சிவந்த அழகிய நெற்றியில் செங்கோடாக இழுத்த திலகம் விளங்கச் சிரித்தவாறே ஒரு பெண் வாயிற்படி அருகே நின்று கொண்டிருந்தாள். “ரகுமாமா இல்லியா? நான் மெஸ்ஸிலே இருந்து வரேன். அவர் காலையிலே டிஃபனுக்கும் வரலே. மத்தியானம் பகல் சாப்பாட்டுக்காவது வருவாரான்னு தெரியணும்.”
இதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் சுதர்சனன் ஓரிரு கணங்கள் தயங்கினான்.
அதற்குள் அவளே மேலும் பேசினாள்: “ஓகோ நீங்க மாமாவோட சிநேகிதராக்கும்; ஊர்லேருந்து இப்பத்தான் வந்திருக்கீங்க போலேருக்கு...” “ஆமாம் ரகு வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியலெ...” “சரி. எதுக்கும் ரெண்டு சாப்பாடு வைக்கச் சொல்லி அம்மாகிட்டத் தகவல் குடுத்திடறேன்” என்று தனக்குத் தானேயும் அவனுக்காகவும் சேர்த்துப் பதில் சொன்னது போல் சொல்லிவிட்டு அந்தப் பெண் படியிறங்கிச் சென்றாள். மாடி முகப்பு வரை நடந்து சென்று சுதர்சனன் தெருவைப் பார்த்தான். அந்தப் பெண் பக்கத்து வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது. அந்த வீட்டுக்காரர்கள் ஒரு மெஸ் நடத்துகிறார்கள் என்றும் புரிந்தது. மாடி வராந்தாவின் முகப்பிலிருந்து திரும்பி அவன் அறை வாசலுக்கு வந்து சேருவதற்குள் வேறு யாரோ படியேறி வருகிற காலடிச் சத்தம் கேட்டது. சுதர்சனன் திரும்பி அறை முகப்புக்கு வந்தான். நல்ல சிவப்புக் காவி நிறத் துணியில் தலைப்பாகையும் அந்தத் தலைப்பாகையில் சிறிதாக பாட்ஜ் போல் பொன் வண்ணச் சந்திரப் பிறை வளையமும் அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தென்பட்டார். வலது கையில் குடையும். இடது கையில் தடிமனான ஒரு தோல் பையுமாக அவர் வந்திருந்தார். மூக்கின் மேலிருந்து கீழே சரியும் மூக்குக் கண்ணாடியை அடிக்கடி சரிசெய்து கொண்டார். “ரகு இருக்கானா?” “இல்லே, வெளியிலே போயிருக்காரு. நீங்க யாருன்னு சொல்லுங்க. அவர் திரும்பி வந்தப்புறம் தகவல் சொல்றேன்...” “நீங்க யாருன்னு தெரியலியே புதுசா இருக்கே?... இதுக்கு முன்னே உங்களை இங்கே நான் பார்த்ததில்லே. கலம்பகம் டூட்டோரியல்ஸ்லே வேலைக்குச் சேர்ந்திருக்கீங்களா?” “இல்லே. ரகுவோட சிநேகிதன், இன்னிக்குக் காலையிலேதான் ஊரிலேருந்து வந்தேன்...” அவன் உட்காரச் சொல்ல வேண்டுமென்று எதிர்பாராமலே அறைக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் தாமாகவே உட்கார்ந்து கொண்டார் அவர். “இப்போ நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லியா? சொல்றேன் கேட்டுக்குங்க. ‘சிண்டிகேட் சிதம்பரநாதன்’னு சொன்னா இங்கே எல்லாருக்கும் தெரியும். ரகுவோட பெஸ்ட் ஃபிரண்ட். ரகுவுக்கு மட்டுமில்லே, எல்லாக் கல்லூரி நிர்வாகிகளுக்கும் உபகாரம் பண்றவன்.” - என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டபடியே ஒரு விஸிடிங் கார்டை எடுத்துச் சுதர்சனனிடம் நீட்டினார் வந்தவர். வி. சிதம்பரநாதன் முன்னாள் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் என்று தொடங்கியது அந்த அட்டை. அப்புறமும் பல அச்சிட்ட வரிகள் தொடர்ந்தன. “சிவப்புத் தலைப்பாகை கட்டியிருக்கீங்களே? அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” “இதுவா, மெய்வழிச் சாலையிலே ரொம்ப காலமாக ஈடுபாடு உண்டு. அதான்.” “அப்பிடிங்களா? இந்த மாதிரித் தலைப்பாகையோட ரொம்பப் பேருங்களைப் பல இடங்களிலே பார்த்திருக்கேன். ஆனா இது என்னன்னு மட்டும் புரிஞ்சதில்லை. இப்பத்தான் புரிஞ்சுது.” “நம்ம ரகு கிட்ட எனக்குத் தனிப்பிரியம். எப்பவும் என்னாலே முடிஞ்ச உபகாரத்தை அவனுக்கு உடனே செய்துடுவேன். யூனிவர்ஸிடியிலே எனக்குத் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. சிண்டிகேட் சிதம்பரநாதன் வரார்னா - வி.ஸி - அறைக் கதவைத் திறந்து வெளியிலே வந்து வாங்கன்னு வரவேற்பார். ரெஜிஸ்திரார் எனக்கு முன்னே உட்கார்ந்து பேசமாட்டான். நீங்க நாலு நம்பர் எங்கிட்டக் குறிச்சுக் குடுத்தீங்கன்னா, நாலும் பாஸ் தான். பிலோ ஆவரேஜ் ஸ்டூடன்ஸுக்கு ‘டிஸ்ட்டிங்ஷன்’ வாங்கித் தர்ரதும் உண்டு. அக்டோபர் பரீட்சைக்குக் கலம்பகம் டூட்டோரியல்ஸ்லேயிருந்து ஐம்பது பேர் போனாங்க. காலேஜுக்கு ஒரு ‘குட்வில்’ வரணும், ஐம்பது பேருமே பாஸ் பண்ணினாத்தான் நல்லதுன்னு ரகு ஆசைப்பட்டான். ஐம்பது பேரையும் பாஸ் பண்ண வச்சேன், எந்தப் பேப்பரை யார் செட் பண்றாங்க, யார் திருத்தறாங்கங்கிறது எனக்கு அத்துபடி. யூனிவர்ஸிடி என்கிற சமுத்திரத்திலே ‘செவன்த் ஃப்ளீட்’ மாதிரி நான் ஒரு சக்தி வாய்ந்த கடற்படைன்னு வச்சுக்குங்களேன்.” “அப்படிங்களா? நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தாச் சொந்தமாகவே தனி யூனிவர்ஸிடி ஒண்ணு நடத்தற அளவு அத்தனை திறமை உங்ககிட்ட இருக்கும் போலத் தெரியுதே?” “ஒண்ணென்ன? பத்து யூனிவர்ஸிடி நடித்த முடியும்னேன். ஆனா இந்த ‘சோஷல் ஸெர்வீஸ்’லே இருக்கிற சந்தோஷம் அதிலே எல்லாம் கிடைக்காதே!” “ரகுவை உங்களுக்கு எத்தனை வருஷமாப் பழக்கமோ?” “வருஷம் என்ன வேண்டிக்கெடக்கு அவன் டூட்டோரியல் காலேஜ் ஆரம்பிச்ச அன்னிக்கிலேருந்து எங்களுக்குள்ளே பழக்கம்தான். இப்போ நீங்கதான் இருக்கீங்க. நாளைக்கே நாலு நம்பரைக் குறிச்சிக் குடுத்துக் ‘கவனிச்சுக்குங்க’-ன்னு எங்கிட்டச் சொன்னா அப்புறம் ஆட்ட மேட்டிக்கா நீங்க நம்ம கஸ்டமர் ஆயிடறீங்க. ஏமாத்தறது - ஒத்திப் போடறது - எல்லாம் நம்மகிட்டக் கிடையாது. உங்ககிட்ட ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கைநீட்டி வாங்கினாப் பேப்பர் திருத்தறவங்களுக்குப் போகவேண்டிய ஷேர் ஒரு நயா பைசாக் கூடக் குறையாமக் கரெக்டாப் போய்ச் சேர்ந்துவிடும். ‘சிண்டிகேட் சிதம்பர நாதன் சார் குறிச்சிக் கொடுத்த நம்பரா? கவலையில்லாமச் செய்துடலாம். வரவேண்டியது ஒழுங்காகக் கவர்லே வச்சு வந்திடும்’னு யூனிவர்ஸிடி எக்ஸாமினர்ஸே தங்களுக்குள்ளே என்னைப் பத்திச் சிலாகிச்சுப் பேசிப்பாங்கன்னாப் பார்த்துக்குங்களேன்...” பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|