24

     காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் வந்திருந்த பேராசிரியரையும் அவருடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு சிண்டிகேட் சிதம்பரநாதனைப் பார்க்கப் போனான் ரகு.

     “இந்த மாறுதல் விஷயமாக் கவனிக்க வேண்டியது ‘டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன்ஸ்’ - ஆபீஸ் தான். சிண்டிகேட்டோ, யூனிவர்ஸிடியோ இதிலே எதுவும் பண்ண முடியாது” - என்று புறப்படும்போதே தயங்கினாற் போலச் சொன்னார் வந்தவர்.

     “நம்ம சிண்டிகேட் சாரைச் சாதாரணமா நெனைக்காதீங்க. அவராலே முடியாததுன்னு எதுவுமே இல்லை. டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன் ஆபீஸ்லியும் அவர் யாரையாவது பிடிச்சு வச்சிருப்பாரு. எதுக்கும் அவரை முதல்லேயே பார்த்துட்டோம்னா நல்லது” என்று ரகு கூறியதும் வந்தவரும் அவர் மனைவியும் தட்டிச் சொல்லாமல் அவனோடு உடன் புறப்பட்டார்கள்.

     “இன்னிக்குக் காமர்ஸ் சுப்பையன் வர மாட்டாரு! லீவு. அதனாலே பி.காம். ஸ்டூடண்ட்ஸ் வந்தா வேற எங்கேயாச்சும் உட்கார்ந்துக்கச் சொல்லுங்க. இல்லாட்டி வீட்டுக்குப் போகச் சொல்லிடுங்க...” என்று போகிற போக்கில் ரகு சொல்லியதைக் கேட்டுச் சரி என்பது போல் தலையை ஆட்டினான் சுதர்சனன்.

     காமர்ஸ் ஆசிரியர் சுப்பையனுக்குச் சொந்தமாக வண்ணாரப் பேட்டையில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் இருந்தது. அதையும் நடத்திக் கொண்டேதான் ரகுவின் டூட்டோரியல் காலேஜிலும் வேலை பார்த்தார். அவர். இன்ஸ்டிடியூட்டில் பண வசூல் -சம்பளம் - வசூலிக்கும் நாட்களில் இங்கு அவர் வரமாட்டார். வருகிற நாட்களில் மாணவர்களுக்குக் கத்தை கத்தையாக ‘சைக்ளோஸ்ட்’ செய்த நோட்ஸ்களைக் கொடுத்து விடுவார். சுப்பையனுக்குப் பயங்கரமான பணத்தாசை. சென்னை நகரின் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு கமர்ஷியல் இன்ஸ்டிட்யூட்டைத் திறந்து நடத்தி ஏராளமாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை அவருக்கு உண்டு! “பணம் பண்ணத் தெரியணும் சார்! பணம் பண்ணத் தெரியாட்டி இந்த ஊர்லே ஒருத்தன் உங்களை மதிக்க மாட்டான். பல சரக்கு வியாபாரி எப்பிடிப் பேட்டைக்குப் பேட்டை புதுப் புது பிராஞ்ச் திறந்து வியாபாரம் பண்றானோ அப்பிடியே படிப்பையும் அங்கங்கே விற்கத் தெரியணும்” என்பது தான் சுப்பையன் அடிக்கடி பிறரிடம் உதிர்க்கும் பொன்மொழி.

     சுப்பையனுடைய படிப்பு விற்பனைத் தத்துவத்தை, நினைத்துவிட்டு இரண்டு நாட்களுக்கு முன் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் தான் கேட்ட ஒரு நயமான உரத்த சிந்தனைக்குரிய சொற்பொழிவையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்த்தான் சுதர்சனன்.

     “இந்தியாவில் விளைய வேண்டிய முன்னேற்றங்களும், வளர்ச்சிகளும் விளையாமல் இருக்கத் தடைகளாயிருப்பவர்கள் வெளியே வேறெங்கும் இல்லை. அவர்கள் இந்தியாவுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். குடிசைகளும் சேரிகளும், இருக்கிறவரைதான் அவற்றைச் சரி செய்வதாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கவும் உறுதியளிக்கவும் வாய்ப்பு உண்டு என்று எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் அவற்றை அதாவது குடிசைகளையும் சேரிகளையும் அப்படியே இன்னும் பேணி காக்க விரும்புகிறார்கள். அறியாமை அறவே ஒழிந்து விட்டால் பின்பு தங்களுடைய தனித்துவமும் சிறப்பும் போய் விடுமோ என்று கருதி அறிவாளிகள் ஒரளவு ‘அறியாமை’ எக்காலத்திலும் நாடு முழுவதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி ஒரு சீராகக் கவனித்துக் கொள்கிறார்கள். தாங்கள் செழிப்பை உண்டாக்குவதாகப் பிரச்சாரம் செய்யப் போதுமான ‘வறுமை’ நாட்டில் எப்போதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி வறுமையை ஒழிக்கப் பாடுபடவென்றே அவதாரம் செய்திருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதி வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பவர்களின் கதையும் இதுதான். ஒரு சில மாதங்களிலோ, வருடங்களிலோ சாதிகளும், ஏற்றத் தாழ்வுகளும் போய்விட்டால் அப்புறம் தாங்கள் எதை ஒழிக்கப் போவதாகச் சவால் விடுவது என்று தயங்கியே அவற்றை முழுமையாக ஒழித்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் போட்டி போட்டுக் கொண்டு நாட்டில் அறியாமையையும் சாதி பேதங்களையும் வளர்க்கின்றன. நான் வெற்றி வாகை சூடுவதற்காகவே பிறர் தோற்கும் வாய்ப்புக்கள் நேரவேண்டும் என்று ஒவ்வொரு வெற்றி ஆசைக்காரனும் நினைக்கிற நாடு இந்தியா. வறுமை, சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வு. கல்வியறிவின்மை, குழப்பங்கள், இவை எல்லாம் ஒவ்வொரு தேர்த விலும் ஜெயிக்க விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆகவே வறுமை, சாதி வேறுபாடு, அறியாமை இவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நாட்டிலிருந்து ஒழிந்து விடாமல் அவர்கள் இங்கே முனைந்து கவனித்துக் கொள்கிறார்கள். பலர் அறியாதவர்களாக இருந்தால்தான் ஒருவனை அறிவுமேதையாக நம்புவார்கள் என்று கருதும் நாடு இது. மற்றவர்களுக்கு முழு வளர்ச்சி வந்து விட்டால் தங்களை அப்புறம் மதிக்க மாட்டார்களோ என்று தயங்கித் தயங்கிச் செயல்படுகிற ஐந்தாம்படை அறிவாளிகள் நிறைந்திருப்பதும் இங்கேதான். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடாது. ஆனால் உலகமே இருண்டு விட வேண்டும் என்று கருதித் திட்டமிட்டுத் தவம் போலக் கண்ணை மூடிக் கொள்ளும் பூனைகள் இங்கே அதிகம். இரட்டை வேடமும் வெளிப்பூச்சான போலித் தியாகமும், உள்ளார்ந்த சுயநலமும், ஒளி வருவதை எதிர்த்துக் கூசும் இருண்ட மனநிலையும் உள்ள வரை இந்தியா உருப்படாது” - என்று அந்தச் சொற்பொழிவாளர் பேசியிருந்தார். வடக்கே ஒரு பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜிப் பேராசிரியராக இருப்பதாக அந்தச் சொற்பொழிவாளரைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டான் சுதர்சனன். அவர் கூறிய கருத்துக்கள் அவன் சிந்தனையைத் தூண்டின.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.