15 ஆனால் ரகு சுதர்சனனை விட்டுவிடத் தயாராக இல்லை. வற்புறுத்தினான். “முடியாது! நீயும் தலைவருக்கு மாலை போடக் கண்டிப்பாக வந்தாகணும்” என்று அவன் பிடிவாதமாக இருக்கவே சுதர்சனனும் கூடவே போக வேண்டியதாயிற்று. தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு வாசலில் சிறிய பந்தல் போட்டு வாழைமரம், தோரணம், கட்சிக்கொடிகள் எல்லாம் கட்டியிருந்தன. தொண்டர்கள் நாலைந்து பேர் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சட்டைகளில் நெஞ்சுப் பகுதியில் கொடிப் பின்னணியோடு தலைவரின் உருவப் படம் ஒட்டப்பட்ட பாட்ஜ் அட்டைகளைக் குண்டுசியால் குத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் கூட்டம் ஒன்று காச்மூச்சென்று இரைந்து கொண் டிருந்தது. தலைவரின் வீட்டுக்கு எதிரே சுவர்களில் பெரிய பெரிய தலைவர் படங்களோடு கூடிய சுவரொட்டிகள் அவரைப் பல்லாண்டு வாழ்த்தின. தலைவரின் கண்களில் வீட்டுக்குள் வரும்போதும், வீட்டிலிருந்து அவர் வெளியே போகும் போதும் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே அவற்றைத் தொண்டர்கள் அங்கு ஒட்டியிருப்பதாகத் தோன்றியது. “தலைவர் கையாலே ஏழை எளியவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கறதுன்னு இந்த வருஷம் புதுசா ஒண்ணைச் சேர்த்தேன். அதான் வாசல்லே இத்தினி பசங்க கூட்டம்” என்றான் ரகு. கூட்டம் சேர்க்கவே அந்த ஏற்பாட்டைச் செய்தது போல அவன் சொன்னதைச் சுதர்சனனும் கவனித்தான். அவர்களின் நடுவே தண்ணிரிலிருந்து கரையில் எடுத்துப் போட்ட மீன் மாதிரித் தவித்தான் சுதர்சனன். ரயிலிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக இதில் ஏன் வந்து சிக்கிக் கொண்டோம் என்று தோன்றியது அவனுக்கு. சென்னை நகரம் முழுவதும் சிலர் வேறு வேலையே இல்லாமல் மாலை போட்டுச் சுவரொட்டி அடித்து விளம்பரப்படுத்தி எப்போதும் யாரையாவது காரணத்தோடோ காரணமின்றியோ எதற்காகவாவது கொண்டாடிக் கொண்டே இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இவர்களுக்கு இதைத் தவிர உழைக்க வேறு வேலையே கிடையாதோ என்றும் எரிச்சலாயிருந்தது. ‘இனவழிப் பிரிந்து மொழிவழிக் கூடிக் கொள்கைவழி இணைந்து தனிப்பெரும் தலைவர் காட்டும் புது வழியில் நடப்போம்’ என்று மொத்தை மொத்தையாக அர்த்தம் புரியாமல் ஏதேதோ சுவர்களில் அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள். கார்ல் மார்க்ஸின் கேபிட்டலையும், லெனினையும் தெளிவாக உருப்போட்டு உணர்ந்திருந்த அவனுக்கு இனம், மொழி என்ற குறுகிய வட்டங்கள் என்னவோ போலிருந்தன. உழைக்கும் இனம் - உழைக்காத இனம் என்ற இரண்டு இனம்தான் உலகில் அவனுக்குத் தெரிந்திருந்தது. புத்தாடை - புதுச் சட்டை அணிந்து மலர்ந்த முகத்தோடு தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு முன்கூடத்தில் வந்து அமர்ந்தார். எல்லோரும் “தலைவர் கலம்பகச் செல்வர் வாழ்க!” என்று பெரிதாகக் குரல் கொடுத்து வாழ்த்தினார்கள். வாழ்த்து ஒலிகள் மூன்று முறை முழக்கப்பட்டன. தலைவர் எல்லாரையும் நோக்கிக் கையமர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டினார்.
எல்லோரும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் அமைதியடைந்தனர். தலைவர் வேண்டிய அமைதி வந்ததும் அவரே பேசப் போகிறார் என்பதுபோல் தெரிந்தது.
“நாங்க மாலையைப் போட்டு வணங்கிடலாம்னு பார்க்கிறோம். அப்புறமா ஐயா பேசலாமே?” என்று ரகு மெல்லக் குறுக்கிட்டான். “சரி போட்டுடுங்க.” ஒவ்வொருவராக மாலையைத் தலைவர் கழுத்திலணி வித்துவிட்டுச் சாஷ்டாங்கமாக அவர் காலடியில் விழுந்து கும்பிட்டார்கள். சுதர்சனன் தன் கையிலிருந்த மாலையை யாரும் கவனிக்காத சமயம் பார்த்து ஒரு ஜன்னலோரமாக வைத்து விட்டுக் கூட்டத்தில் எவரும் கவனிக்காதபடி பின் பக்கமாக மெல்ல நழுவி வெளியேறி விட முயன்றான். அதற்குள் ரகு சுதர்சனனைப் பார்த்துவிடவே. “வா சுதர்சனம் உன் மாலை எங்கே? கொண்டாந்ததைக் காணோமா?” என்று கூப்பிட்டு விட்டான். “அவரு தமிழ்ப் புலவர் சுதர்சனம். இன்னிக்குத்தான் ஊர்லேருந்து வந்தாரு” என்று அறிமுகப்படுத்தினான். சுதர்சனன் அப்படியே நின்று அந்தத் தலைவரைக் கை கூப்பினான். மாலையை எடுத்துப் போடவோ மற்றவர்களைப் போல அவரது காலில் விழுந்து கும்பிடவோ முயலவில்லை. தலைவர் அந்தப் புதிய மனிதனின் இணங்கி வராத் தன் மையை மெல்ல உய்த்துணர்ந்ததாகத் தெரிந்தது. “இருபது ஆண்டுகளாகத் தமிழாசிரியர்களுக்குக் கேடயமாக இருந்து பாதுகாக்கும் இயக்கம் நம்முடையது. என்னுடைய அறுபத்தி இரண்டாவது பிறந்த நாளைக்கு, நம்ம இயக்கத்தைச் சேர்ந்த தமிழாசிரியருங்கள்ளாம் சேர்ந்து ‘அறுபத்தி மூணு சவரன்’ எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துக் கொண்டாடினாங்க.” “கேக் வந்தாச்சு... அறுபத்தி நாலு மெழுகுவர்த்தி சொருகி அலங்கரிச்சுத் தயாரிக்க இத்தினி நேரமாச்சுன்னு அமானுல்லா வருத்தப்பட்டாருங்க” என்று ஒரு தொண்டர் கேக் பின் தொடர உள்ளே நுழைந்தார். கேக்கைப் பெரிய தட்டில் வைத்துச் சுமந்து வந்த அமானுல்லா அதைத் தலைவருக்கு முன்னால் இருந்த சிறிய மேஜைமேல் வைத்து விட்டு ஒதுங்கி நின்று கையோடு கொண்டு வந்திருந்த மாலையைப் பிரித்துத் தலைவருக்கு அணிவித்தார். “ஆமா ஐயாவோட அறுபத்து நாலாவது பிறந்த நாளன்னிக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டி நிறுத்துத் தரப் போறோம்னு வேலூர்ப் பொதுக்குழுவிலே ஒரு தீர்மானம் நிறைவேற்றினீங்களே, அது என்னாச்சு?” என்று தலைவரே சிரித்தபடி கேட்டார். சுற்றி நின்ற தொண்டர்களும், இயக்கத் தோழர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு தொண்டர் துணிந்து அதற்குப் பதில் சொன்னார்: “அந்தப் பொறுப்பைப் பொதுச் செயலாளர் கிட்ட விட்டிருக்கோம் ஐயா!” “பொதுச் செயலாளர் எங்கே?” “ஐயா பிறந்தநாளை ஒட்டித் திருத்தணியிலே விசேஷ அர்ச்சனை அபிஷேகம்லாம் பண்ணிட்டு வரலாம்னு பொதுச் செயலாளரும் பொருளாளரும் போயிருக்காங்க. பகலுக்குள்ளே எப்பிடியும் திரும்பிடுவாங்க.” “அதுக்கில்லே. பொதுக்குழுத் தீர்மானத்தை நான் இதுக்குள்ளே மறந்து போயிருப்பேனோன்னு நீங்க நினைக்கக்கூடாது பாருங்க. அதுக்காகத்தான் நினைவூட்டினேன்...” “அதெப்படீங்க ஐயா மறக்கும்? ஐயாவையும், ஐயாவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மறந்தா நாங்க நல்லா இருப்போமா?” ஒரே குரலில் கோரஸ் பாடுவதுபோல் அவரைச் சுற்றி யிருந்தவர்கள் இதைச் சொன்னதைச் சுதர்சனன் கவனித்தான் அந்தக் கூட்டத்திலேயே ஒதுங்கியும் தனித்தும் நின்றது சுதர்சனன் ஒருவன்தான். மற்ற எல்லாரும் தெய்வத்தின் முன் நிற்கும் பக்தர்களைப் போலக் கைகட்டி வாய் பொத்திப் பயத்தோடும் பக்தியோடும் நின்று கொண்டிருத்தார்கள். சுதர்சனனை நோக்கித் தலைவர் அன்போடு கேட்டார்: “குமாரமுத்துப் புலவர் எழுதிய கூடற் கலம்பகத்தை உலக இலக்கியமாகப் பிரகடனம் செய்து நான் எழுதிய கருத்துக் கலம்பகக் கதிரொளி என்கிற நூலைப் படிச்சிருக்கிங்களா?” “இல்லீங்க. இன்னும் படிக்கல்லே. ஆனால் கூடற் கலம்பகத்தைப் படிச்சிருக்கேன். அது ஒரு நல்ல பிரபந்தம். பல நயங்கள் நிறைந்தது. உலக இலக்கியம் அதுதான்னு சொன்னால் நாம் அதைத் தவிர உலகத்திலே வேறு ஒண்ணையும் படிக்காமச் சொல்றோம்னுதான் நினைப்பாங்க...” என்று சிறிதும் தயவு தாட்சண்யமில்லாமல் அவருக்குப் பதில் சொன்னான் சுதர்சனன். “அப்போ நீங்க என்னோட இதிலே கருத்து வேறுபாடு கொள்றீங்கன்னு சொல்லுங்க.” “இதிலே நீங்க சொல்றதையே நான் ஏத்துக்க முடியாமே இருக்குங்க, ‘உலக இலக்கியம்’கிறது ரொம்பப் பெரிய வார்த்தை.” “என்னோட கருத்து வேறுபாடு கொள்ற ஒரு தமிழ்ப் புலவரையே நான் இப்போதான் முதல் முதலாப் பார்க்கிறேன்...” “ஒரே கருத்தை வீரவணக்கம் செய்யிறது அறிவு வளர்ச்சிக்கு நல்லதுன்னு நான் நினைக்கலிங்க.” “சரி! அப்புறம் பார்க்கலாம். உங்ககிட்ட நிறையப் பேச வேண்டியிருக்கும் போல்லே தோணுது” என்று சுதர்சனனை அந்தக் கும்பலிலிருந்து நாசூக்காக ஆனால் நிச்சயமாக விலக்க முயன்றார் தலைவர். சுதர்சனன் தனியே ஒரு நிமிஷம் தன்னோடு கூட வருமாறு ரகுவை வெளியே கூப்பிட்டான். ரகு தனியே வராமல் கெளவை கஜராஜன் தொடர வெளியே வந்தான். கெளவை உடனே சுதர்சனனைக் கேட்டார்: “என்னங்க இது ‘ஐயா’வோடவே நேருக்கு நேரா மோதத் தொடங்கிட்டீங்க?” “ஆமாம்? அதிலே என்ன தப்பு? ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக விவாதிப்பதற்கு யார் முன்னும் எதற்காகவும் தயங்க வேண்டியதில்லையே? “ஆனா, ஐயா முன்னே பேசறத்துக்கே ரொம்பப் புலவருங்க பயப்படுவாங்க... நீங்க என்னடான்னா...?” “அறியாமையின் அடையாளங்களில் மிகவும் முதன்மை'யானது பயம்.” “சரி சரி! சண்டை போட்டது போதும். இந்தா, என் ரூம் சாவி. நீ வீட்டிலே போயி என் ரூமிலே இரு. நான் ஒரு மணி நேரத்திலே வந்துடறேன்” என்று அறைச் சாவியைச் சுதர்சனனிடம் நீட்டினான் ரகு. சுதர்சனன் சாவியை வாங்கிக்கொண்டு “மன்னிச்சுடுப்பா! நீ சொன்னபடி மாலையைத் தலைவருக்கு நான் போடலே. அறிமுகமில்லாதவங்களுக்குத் திடீர்னு மாலை போடறது நாகரிகமில்லேன்னு எனக்குத் தோணிச்சு” என்றான். “பெரிய வம்புக்காரன் நீ... தலைவருக்கு முன்னாடி என்னைத் தலைகுனிய வச்சிட்டே” என்று சுதர்சனனைப் பார்த்து ரகு அலுத்துக் கொண்டான். சுதர்சனன் சாவியோடு வெளியேறித் தெருவுக்கு வந்து சேர்ந்தான். ரகுவைப் போல் விவரந்தெரிந்தவனே இப்படிச் சிறுபிள்ளை விளையாட்டுகிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சுதர்சனன் ஆச்சரியப்பட்டான், தன்னைச் சுற்றி சத்தம் போடத் தெரிந்த ஒரு சிறு ஆள்கட்டுள்ள கும்பலைச் சேர்த்து வைத்துக் கொள்ள முடிந்த யாரும் இங்கே தலைவராகி விட முடிந்த நிலைமை சுதர்சனனுக்குப் புரிந்தது. பிறருடைய சிந்தனையை ஏற்காமல் தான் கூறியதையே அனைவரும் ஏற்க வேண்டும் என்று எண்ணும் அடாவடித்தனத்தை அரசியலின் பேராலோ, இலக்கியத்தின் பேராலோ சுதர்சனன் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. தலைவராயிருப்பது என்பதையே ஒரு தொழிலாகப் பண்ணிக்கொண்டு உழைக்காமல் வளரும் ஒரு தந்தக் கோபுரவாசிகளின் கூட்டம் பெருகக் கூடாது என்று சுதர்சனன் கருதினான். ஆனால் கண் முன்னால் அப்படித் தலைமைத் தொழிலின் நிரந்தர அதிபர்களாகவே அடுத்தடுத்துத் தென்பட்டார்களே ஒழிய உழைப்பு, நாணயம், ஒழுக்கம், பண்பாடு இவை உள்ள உண்மைத் தலைவர்கள். எங்குமே தென்படக் காணோம். ஒவ்வொன்றும் ஒரு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்ததே ஒழியப் பரந்த மனிதகுலத்தைப் பற்றி எந்தத் தலைவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காட்ட வெவ்வேறு முகங்கள் இருந்தன. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தனி முகங்காட்ட வேண்டிய சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் அவர்கள் நன்றாகத் தேர்ந்திருந்தார்கள். பழைய சமஸ்தானாதிபதிகளைப் போல ஒவ்வொரு குட்டித் தலைவருக்கும் ஒரு கட்சி, ஒரு கொடி, ஒரு பட்டாளம், ஜெயகோஷம் போடப் பத்துப் பதினைந்து பேர் - எல்லாம் இருந்தார்கள். சாதி பேதமின்றி, மொழி பேதமின்றி விருப்பு வெறுப்புக்களற்ற முறையில் மனித குலத்துக்காகப் பாடுபட முன்வரும் ஒரு எதிர்காலத் தலைவனைத் தேடிச் சுதர்சனன் கவலைப்பட்டான். அறுபத்து நாலாவது பிறந்த தினத்துக்கு 64 சவரன்களைத் தேடும் தலைவர்களும், 50-வது பிறந்த தினத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டும் தலைவர்களுமாகத் தென்பட்டார்களே தவிர மக்களுக்கு ஏதாவது தங்களிடமிருந்து தரக்கூடிய தலைவர்கள் எங்குமே தென்படவில்லை. தட்சிணைக்கு மன்றாடும் பூசாரிகளைவிட மோசமான தலைவர்கள் தமிழ்நாட்டின் நகரங்களில் மலிந்திருந்தார்கள். பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|