26 சுதர்சனன் நினைத்தது போல உயர்வான நிலையில் ரகுவோ, ரகுவின் தனிப்பயிற்சிக் கல்லூரியோ இல்லை. ரகு அவனுடைய அரசியல் தலைவருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். அவனுடைய அரசியல் தலைவரோ பதவிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு அறிவூட்டுவதை விட அவர்களைப் பாஸ் பண்ணி விடும் ஏற்பாடுகளைத் தான் தனிப் பயிற்சிக் கல்லூரிகள் செய்து கொண்டிருந்தன. அதற்காகப் பல்கலைக் கழகங்களுக்கும் தனிப் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நடுவே இடைத் தரகு வேலை செய்து மருத்துவச்சி உத்தியோகம் பார்த்துப் பெற்றுக் கொடுப்பதற்குச் சிண்டிகேட் சிதம்பரநாதன் போன்றவர்கள் இருந்தார்கள். சென்னைக்கு வந்த பின் கல்வித்துறை, பள்ளிகள், சர்வகலாசாலைகள் மேல் மரியாதை குறைந்து அருவருப்பு ஏற்பட்டது சுதர்சனனுக்கு. இயல்பான ஞான வளர்ச்சிக்கும், விவேகத்துக்கும் நமது கல்விக்கூடங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. கல்விக்கூடங்களும் சர்வகலா சாலைகளும் நாடு முழுதும் வருடந் தவறாமல் டயம்டேபிள் போட்டுக் கொண்டு திட்டமிட்டுத் துவேஷத்தையும், ஜாதி வெறியையும், போட்டி பொறாமைகளையும் முடிவாக இணையற்ற விதத்தில் அஞ்ஞானத்தையும், அவித்தையும், மந்தபுத்தியையும் வளர்த்து வருவதாகப்பட்டது. ஒரு சமயம் எம். ஏ. பட்டதாரி ஒருவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு ரகுவைத் தேடி வந்து ஏதாவது உத்தியோகம் கிடைக்க வழி செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கம்போல் ரகு சிண்டிகேட் சிதம்பரநாதனுக்கு ஃபோன் பண்ணினான். அப்போது உடனிருந்த சுதர்சனன் வேலை தேடி வந்தவரிடம் சொன்னான்: “தெரியாத்தனமா நீங்க எம்.ஏ. முதல் வகுப்பிலே முதல் வரிசையிலே பாஸ் பண்ணித் தொலைச்சிட்டீங்க. அதனாலே உங்களுக்கு ஒண்ணும் பண்றத்துக்கில்லே மூன்றாம் வகுப்பிலே பாஸ் பண்ணியிருந்தாலாவது உங்களை எந்த யூனிவர்ஸிடிக்காவது வைஸ் சான்ஸ்லராப் போடச் சொல்லலாம். எஸ்.எஸ்.எல்.ஸி. பெயிலாயிருந்திங்கன்னா எலெக்ஷனுக்கு நின்னு கல்வி மந்திரியா வரலாம். மூன்றாவது ஃபாரம் பெயிலாகியிருந்திங்கன்னா ஒரு கட்சித் தலைவரா வந்து கல்வி மந்திரி மாதிரிப் பல மந்திரிங்களையே ஆட்டிப் படைக்கலாம். நீங்க பாவம்... விவரம் தெரியாம எம்.ஏ. ஃபர்ஸ்ட் ராங்க்லே பாஸ் பண்ணி வச்சிருக்கீங்க. இப்பல்லாம் காலேஜ்லே லெக்சரா வரணும்னாக் கூட பி.எச்.டி. வேணும்னு கேட்கிறாங்க. ஆனா அதே சமயத்திலே பி.ஏ.பி.டி. படிச்சவங்களை யூனிவர்ஸிடி வைஸ்-சான்ஸ்லராவே போட்டுடறாங்க.” “சுதர்சனன்! போதும்ப்பா... நிறுத்து. நீ தயவு செய்து இங்கே உட்கார்ந்து இப்பிடி எல்லாம் பேசதே. யாராவது என்னைப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க...” என்றான் ரகு. அவன் குரலில் பயமும் பதற்றமும் தெரிந்தது. “கவலைப்படாதே? இதுனாலே உனக்கு ஒரு கெடுதலும் வராது ரகு! யாராவது கேட்டாங்கன்னா, ‘என் ஃப்ரண்டு ஒரு லூஸ்... ஃப்ரஸ்ட்ரேடட் ஃபெல்லோ... ஏதாச்சும் இப்படித்தான் அர்த்தமில்லாம உளறிக்கிட்டிருப்பான்’னு சொல்லிச் சமாளிச்சுக்கோ” என்று சிரித்துக் கொண்டே ரகுவுக்குப் பதில் சொன்னான் சுதர்சனன். ஆனால் வேலை தேடி வந்து கஷ்டப்பட்ட பட்டதாரிக்குச் சுதர்சனன் பேச்சும் அதிலிருந்த கசப்பான நியாயமும் பிடித்திருந்தது. “நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரிங்க... இப்பல்லாம் ஒரு லெக்சராக வேலைக்கு அப்ளை பண்ணினாலே உனக்குப் பி.எச்.டி. இருக்கான்னு தூண்டித் தூண்டிக் கேட்கிறாங்க. அதே சமயத்திலே வெறும் பி.ஏ.பி.டி.யை யூனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராவே போட்டுடறாங்க.” “சின்ன வேலைக்குத்தான் தகுதி - திறமை - தரம் இதெல்லாம் கேட்டுத் தட்டிக் கழிப்பாங்க. மூவாயிரம் நாலாயிரம் மாதச் சம்பளம் வாங்கற பெரிய வேலையாப் பார்த்துத் தேடினீங்கன்னா அந்தத் தகுதி - திறமை - தரம் எல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க. உத்தியோகத்துக்குத்தான் தகுதி. பதவிக்கு அதெல்லாம் இல்லே.” “வேலைதான் கிடைக்கலே. வேலையைத் தேடிப் போனா முதல்லே பி.எச்.டி.யைத் தேடிக்கிட்டு அப்புறம் வேலைக்கு வாங்கறாங்க. பி.எச்.டி.க்கு ரிஜிஸ்தர் பண்ணப் போனாலோ அங்கே ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்குங்க. ஏற்கனவே பி.எச்.டி. வாங்கினவங்க சில பேருதான் ‘கய்டு’ ஆக முடியும். புதுசா யாரும் பி.எச்.டிக்குப் பதிவு பண்ணிக்கிறதோ, தீஸிஸ் எழுதறதோ. பி.எச்.டி. வாங்கறதோ ‘கய்டு’ங்களுக்கே பிடிக்கறதில்லை...” “அப்புறம் அவங்க எப்படி ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸுக்கு வழிகாட்ட முடியும்?” “சார்! நீங்க ரொம்ப ஃப்ராங்காப் பேசறதைப் பார்த்ததுமே எனக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சு. ஒரு சீனியர் புரொபசர் - நான் அவரு பேரைச் சொல்ல விரும்பவில்லை - ஒரு பொண்ணுக்கு ரிஸர்ச் கய்டாக இருந்தாரு, ஆராய்ச்சித் தலைப்பு கலிங்கத்துப்பரணியில் கடை திறப்புக் காட்சி என்று கொடுத்திருந்தாங்க. அதிலே ரிஸர்ச்சுக்கோ, தீஸிஸுக்கோ பிரமாதமா ஸ்கோப் ஒண்னும் இல்லே. ஆனாலும் வழிகாட்டியாக வாய்த்த புரொபலருக்கு என்னமோ அந்தத் தலைப்புத்தான் பிடிச்சிருக்கு. வழிகாட்டறப்பவே நடுநடுவே அவரு பிரமாதமான யோசனைகளெல்லாம் சொல்லிக் குடுத்திருக்காரு. “படுக்கையறைக் காட்சிகளெல்லாம் தத்ரூபமா வரலே. உங்களுக்கு அநுபவம் பத்தாது”ன்னிருக்காரு அந்தப் பெண்ணைப் பார்த்து. அது கலியாணமாகாத பெண்ணு. முதல்லே ஒண்ணும் புரியாம முழிச்சிருக்கு, அப்புறம் இந்தப் புரொபசரே அதுக்கும் ‘கய்ட்’ பண்ணியிருக்காரு. தீஸிஸ், முடிஞ்சு எவல்யூடர்ஸுக்குப் போயி அவங்க அபிப்பிராயமும் சொல்லி முதன்மையாகத் தீர்ப்புக் கூற வேண்டிய சீனியர் ஆய்வாளர் ‘வைவாவோஸி’க்கு (நேர்முகத் தேர்வு) அழைத்திருக்கிறார். அவரும் அதே பழைய கேள்வியைக் கேட்டிருக்கிறார். “என்னம்மா காதல் காட்சிகளை உணர்ந்து எழுதலேயே நீ? ரீ ஸ்ப்மிஷனுக்குச் சிபாரிசு பண்ணி எழுதட்டுமா”ன்னு வார்த்தைகளை இழுத்திருக்காரு. உடனே அந்தப் பொண்ணு பயந்து பதறிப் போய் “சார் தயவுசெய்து இழுத்தடிக்காதீங்க சார்! ‘உணர்ந்து எழுதறது’ன்னா புரியலே... நீங்கதான் வழிகாட்டணும்”னு சொல்லி இருக்கு. அப்புறம் அவரும் அவருடைய புரொபஸர் பண்ணினமாதிரியே ‘கய்ட்’ பண்ணிட்டு பி.எச்.டி அவார்ட் பண்ணலாம்னு சிபாரிசு பண்ணியிருக்காரு. இப்பிடி ரெண்டு தடவை ரெண்டு படுக்கையறைக்குள்ளே போனப்புறம் தான் அந்த விஷயத்திலேயே வெற்றி யடைய முடிஞ்சிருக்கு, பொம்பிளையானால் இப்பிடி. ஆம்பளையானால் பணம் லஞ்சம் அரசியல் செல்வாக்கு அல்லது அரசியல்வாதியின் பிரஷர்னு ஏதாச்சும் இருக்கணும்.”
“இந்த நாட்டிலே முக்கால்வாசிப் படிப்பாளிகள் அயோக்கியத்தனத்தையே ஒரு ‘ஆர்ட்டா’ டெவலப் பண்ணிக்கிட்டிருக்காங்க. எல்லா விதமான கீபொஸிஷன்ஸிலேயும் இப்பிடி யாராவது இருக்காங்க.”
“ஏற்கெனவே பி.எச்.டி. வாங்கின சில பெரிய ஆட்களோட ‘தீஸிஸ்’ இதுவரை அச்சிலேயே வெளிவரலே. காரணம் என்ன தெரியுமா? அதெல்லாம் அச்சிலே வந்தாக்கா இன்னிக்கு அதைப் படிக்கிற சாதாரண ஸ்டுடண்ட்ஸ் கூடச் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க. அத்தனை ‘எலிமெண்ட்ரி’ யான விஷயங்களை சிறுபிள்ளைத்தனமா எழுதி எப்பிடியோ பி.எச்.டி. வாங்கியிருக்காங்க. அதே சமயத்திலே புதுசா யார் பி.எச்.டி.க்கு ரிஜிஸ்டர் பண்ண வந்தாலும் வயித்தெரிச்சல் படறாங்க. சில பேருக்குத் தீஸிஸ் எழுதித் தர வாடகைக்கு நல்ல ஆளுங்க கூடக் கிடைக்கிறாங்க.” “உங்களை மாதிரி நாலு இளைஞர்கள் பயந்து போய் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்க. அதுனாலே அவங்க எல்லாருமே தங்களுக்குப் பயந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு நெனைச்சுக் குதிரை ஏற ஆசைப்படறாங்க. பயத்தை ஒழிக்கணும். முதல்லே ஒரு அறிவாளி நிர்ப்பயமானவனாகவும் சுயமரியாதை உள்ளவனாகவும் இருக்கக் கத்துக்கணும். அந்த ரெண்டையும் கத்துக்காமே மத்த ஆயிரம் விஷயத்தைக் கத்துக்கிட்டிருந்தாலும் அவனை அறிவாளியா மதிச்சு லட்சியம் பண்ணக் கூடாது. கோழைத்தனத்தையும் அறிவையும் கலக்கிறது மயிரையும் கீரையையும் கலந்து வைக்கிற மாதிரி.” “வயித்துக் கவலை வந்து நடுத்தெருவிலே அனாதையா நின்னுடுவோமோன்னு பயம் வர்ரப்ப மத்தப் பயமும் தானா வந்துடுதுங்களே?” “நியாயமான அறிவாளியா இருந்து துணிச்சலையும் சுயமரியாதையையும் காப்பாத்திக்க முடியலேன்னா அப்புறம் தெருவிலே கைவண்டி இழுத்தாவது - மூட்டை தூக்கியாவது நியாயத்தையும் சுயமரியாதையும் காப்பாத்திக் கொள்ள வேண்டியதுதான். நம்மிலே பல பேர் சோறா? தன்மானமா? என்கிற கேள்வி வருகிற போது நமக்கு இப்போது சோறு போதும் தன்மானம் வயிற்றை நிரப்பாது. சோறுதான் வயிற்றை நிரப்பும் என்பது நம்முடைய கணிப்பாக இருந்துவிடுகிறது.” “பிழைக்கத் தெரியாதவன்னு நாலுபேர் கேலி பண்ணு வாங்களே சார்?” “நாலு பேர் சொல்றதுக்கெல்லாம் தயங்கினா அப்புறம் தயங்கிக்கிட்டே இருக்க வேண்டியது தான். கட்டுத்தறியிலே கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து விட்ட பிறகும் முன்பு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி தான் இன்னும் கட்டப் பட்டிருப்பதாகவே நினைத்து நின்றுகொண்டு இருப்பது போல நாமும் தயங்கி நின்று கொண்டிருக்கக் கூடாது. அர்த்தமில்லாத கூச்சமும், நாணமும், தயக்கமும் உள்ள சமூகத்தில் எந்த நல்ல மாறுதலும் உடனே நிகழாது.” பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|