20 வெளியே தெரியாமல் உள்ளுற ‘ரகு’வுக்குள் இருக்கும் வியாபார மனப்பான்மை சுதர்சனனுக்குத் தெளிவாகவே புரிந்தது. கல்வியையும் ரேட் பேசி விற்கவும், வாடகைக்கு விடவும், தவணை முறையில் செலவாணி செய்யவும் தான் ரகு தயாராக இருந்தானே ஒழியக் கற்பித்தலை முக்கியமானதாகவும் இதர அம்சங்களை இரண்டாம் பட்சமாகவும் கொண்ட ஒரு நல்ல எண்ணம் ரகுவிடமே இல்லை. பிறருடைய அறிவை வளர்ப்பதுதான் கல்வி என்பதை விட அறியாமையைச் சுரண்டுவதுதான் கல்வி என்று எல்லாரும் எல்லாமும் சேர்ந்து பழக்கப்படுத்தி இருந்தார்கள். இப்படிப் பிறருடைய அறியாமையைச் சுரண்டும் திட்டமிட்ட நோக்குடனேயே கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக் கழகங்கள் எல்லாமே தாராளமாக இயங்கி வருவதாகத் தெரிந்தது. “ஒதுங்கி இருந்து இந்த மெட்ராஸ்லே ஒண்ணுமே பண்ண முடியாது சுதர்சனம்! நான் இப்போ கலம்பகச் செல்வர் ஐயாகிட்டே இருக்கேன்னா அதுனாலே பல காரியங்களைச் சாதிச்சுக்க முடியுது. தமிழ்நாடு முழுவதும் எங்க இயக்கத்தைச் சேர்ந்த குடும்பங்களிலே எந்தப் பையன் எங்கேயிருந்து டூட்டோரியல் காலேஜ்ல சேரணும்னாலும் நேரே இங்கே புறப்பட்டு வந்துடறாங்க. என்னோட இந்த டூட்டோரியல் காலேஜோட பெயர் அவங்களுக்குத் தூக்கத்திலே எழுப்பிக் கேட்டாக் கூட ஞாபகம் இருக்காப்பிலே மனப்பாடம் ஆகியிருக்கு. சிண்டிகேட் சாரோடு சிநேகிதம் இருக்கிறதாலே யூனிவர்ஸிடி விஷயங்கள்ளாம் சுலபமா நடந்துடுது. இப்பிடி ஒண்ணை வச்சுத் தான் இன்னொண்ணு நடக்க வேண்டியிருக்கு. வேறே வழி இல்லே. வேற காலேஜ்ல வேலை பார்க்கலாம்னா நம்மாலே அதுவும் முடியாது. அரசியல் இயக்கம், தலைவர், மாநாடு அது இதுன்னெல்லாம் நமக்குன்னு சிலதைச் சொந்தமா வச்சுக்கிட்டு இனிமே ஒருத்தனுக்குக் கீழே கைகட்டிச் சேவகம் செய்யறதுங்கிறது. ரொம்பக் கஷ்டம்.” “ஏன்? பல பேரு கவர்மெண்ட் காலேஜ்லே வேலை பார்த்துக்கிட்டே கூட அதை எல்லாம் துணிஞ்சு செய்யிறாங்களே? எப்போ எப்போ எந்தெந்தக் கவர்மெண்ட் இருக்கோ அதுக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாத்திக்கிறாங்க. அறிவாளின்னு சொல்லிக்கிற கூட்டத்தைச் சேர்ந்த பல பேரு ஒரு தாசிமாதிரி அல்லது வைப்பாட்டி மாதரித் தன்னைப் போஷிக்கிற ஆளுக்கு விசுவாசத்தைச் சில்லறை சில்லறையாக் கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செய்யிறாங்களே?”
“இப்படியெல்லாம் நீ பேசறதைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு சுதர்சனம்! ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடத்திலே மேனேஜ்மெண்டைப் பகைச்சுக்கிட்டு நீ வெளியேறி வந்தாச்சு. இனிமேலாவது நமக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உண்ர்ச்சி தேவை. வாழ்நாள் பூராவும் போராடிக்கிட்டே இருக்க முடியாது. அது சலிச்சுப் போகும்.”
“இல்லே சுயமரியாதை உள்ளவனுக்கு அது சலிக்காது. அதுதான் உண்மை வாழ்க்கையாக இருக்கும் ரகு!” “சரி! இப்ப அதெல்லாம் எதுக்கு? வீண் விவாதங்களால் ஒரு நயா பைசாவுக்குப் பிரயோசனம் கிடையாது. ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாம், இங்கே மெட்ராஸுக்குள்ளே எந்த கவர்மெண்ட் காலேஜிலேயும் ஹைஸ்கூல்லேயும் உன்னை மாதிரி ஆளுக்கு வேலை கிடைக்காது. கிடைச்சாலும் உனக்கு அது ஒத்து வராது.” “அப்போ இங்கே நம்ம டூட்டோரியல்லே இருக்கிற பி.ஏ.-பி.யூ.ஸீ. கிளாஸோட புலவர் வகுப்புப் பயிற்சிகளையும் உன்னை வச்சுத் தொடங்கிட வேண்டியது தான்.” “நல்லாச் செய்யலாம். ஆனால் ஒரு கண்டிஷன். இந்த டூட்டோரியல் காலேஜிலே உனக்குக் கீழே வேலை பார்க்க வந்திருக்கேன் என்கிறதை வச்சு உன் கட்சி தலைவர், மாநாடு இதை எல்லாம் நீ என்னோடும் சப்பந்தப்படுத்தக் கூடாது ரகு. அங்கே மாலை போட வா. இங்கே பேசவான்னெல்லாம் தொந்தரவு செய்யக் கூடாது. அதில் நான் என்னுடைய தனித்தன்மையை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்பதை இப்போதே உனக்கு சொல்லிவிடு கிறேன்.” “அதுதான் நீ வந்ததிலிருந்து நீ எப்படி நடந்துகொண்டாய் என்பதைப் பார்த்து நானே புரிந்து கொண்டு விட்டேனே? இன்னும் அதை நீ சொல்லித்தானா தெரிய வேண்டும்?” “எப்பவும் வெளிப்படையாகச் சொல்லிடறதுதான் நல்லதுப்பா! நீ என்னடான்னா உன்னோட படிப்பு நீ நடத்தற காலேஜ் முதலிய சகலத்தையும் நீ தலைவர்னு நினைக்கிற யாரோ ஒருத்தருக்குச் சமர்ப்பணம் பண்ணிப் போட்ட மாதிரிப் பேசுறே? நான் அதுக்கெல்லாம் ஆளில்லேப்பா. முதல்லேயே அதைச் சொல்லிடணும்கிறத்துக்காகத் தான் இதைப் பேசறேன்.” “உன் இஷ்டம் எப்படியோ அப்பிடி நீ நடந்துக்கலாம். தலைவரோட பழக்கம் உன்னை வளர்க்குமே ஒழிய, அழித்து விடாது. உன் நன்மைக்காகத்தான் நான் உன்னை அவருக்கு மாலை போடச் சொன்னேனே ஒழிய என் நன்மைக்காக அல்ல. வேண்டாம்னா விட்டுடேன்! அதிலென்ன வந்தது?” “ஏத்துக்கிட்டாத்தானே அப்பா விட்டுடறதைப் பத்தின பிரச்னை. நான்தான் அதை ஏத்துக்கவே இல்லியே?” மறுநாள் காலையே சுதர்சனனுக்கு முறையாக ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை டைப் செய்து கையில் கொடுத்து விட்டான் ரகு. அதில் சுதர்சனனின் மாதச் சம்பளம் ரூபாய் ஐநூறு என்று தெளிவாகக் குறித்திருந்தான். அதை வாங்கிப் படித்த உடனே சுதர்சனன், “சும்மா ஒரு வீம்புக்காக ஐநூறு அறுநூறுன்னு சொல்லிப் போட்டு அப்புறம் நீ சங்கடப்படக் கூடாது? எனக்கு அவ்வளவு கொடுத்தாகணும்னு அவசியம் இருக்கா, அவ்வளவு கொடுக்க உனக்குக் கட்டுபடி ஆகுமான்னு பார்த்துச் செய். அவசரப்படாதே. எனக்குப் பெரிசாச் சம்பாதிக்கணும்னு ஒண்ணும் அரிப்பு இல்லை. முடையும் இல்லை.” “சும்மா இருக்கட்டும் சுதர்சனம்! ஐநூறுக்குக் குறைஞ்சு கொடுத்தா அது சம்பளமே இல்லை. ஐநூறு ரூபாயாவது கொடுக்க வேணாமா உனக்கு?” “முடிஞ்சாக் கொடு. ஜம்பத்துக்காகக் கொடுத்துவிட்டு அப்புறம் நஷ்டப்படாதே ரகு!” “இல்லே இருக்கட்டும். உனக்குத் தரக்கூடியது எதுவும் வீண் போயிடாது அப்பா...” மறுபடியும் மறுபடியும் நண்பன் ரகு சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தானே ஒழிய வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவதற்கு அவனால் முடியவில்லை என்பது சுதர்சனனுக்கே புரிந்தது. அந்த டூட்டோரியல் காலேஜில் மொத்தம் எட்டுப் பேர் வேலை பார்த்து வந்தனர். ரகுதான் பிரின்ஸிபால் அண்ட் டைரக்டர். ஒரு கிளார்க், ஒரு அகௌண்டெண்ட் மற்ற ஐந்து பேரும் பார்ட்-டைம் விரிவுரையாளர்கள். மாணவர்களுக்குத் தொகை - டியூஷன் ஃபீஸ் என்ற பெயரில் மொத்தமாக ஒரு பரீட்சைக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகைக்கு ஈடாக சைக்ளோஸ்ட் செய்த நோட்ஸும் குறிப்புக்களும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித் தனியே தரப்பட்டன. பரீட்சைகளில் எந்த விதத்திலேனும் மாணவர்களை வெற்றி பெற வைக்கும் உத்தரவாதமும் முன்கூட்டியே அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதமும் ரகுவின் செல்வாக்கும் அங்கே சேரும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. ரகு நடத்தி வந்த பயிற்சிக் கல்லூரியின் வெற்றி இரகசியமே இதில்தான் அடங்கி இருந்தது. ரகுவின் அரசியல் தொடர்புகளுக்கும் அவனுடைய தொழில் வெற்றிக்கும் சம்பந்தம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். சுதர்சனன் அந்தப் பயிற்சிக் கல்லூரியில் வேலை பார்க்கச் சம்மதித்தான். ஆனால் ரகு குறிப்பிட்டிருந்த சம்பளத் தொகையை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி காட்டவோ, குறைவாகக் கிடைக்குமானால் அதற்காக வருத்தப்படவோ அவன் தயாராயில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வருமானமும் சுதந்திரமான போக்கிற்குப் பங்கமில்லாத ஒரு நிலைமையையும்தான் அவன் விரும்பினான். இந்த எண்ணத்தோடுதான் ரகுவிடம் வேலை பார்க்க அவன் ஒப்புக்கொண்டும் இருந்தான். முறையான கல்லூரி, பள்ளிக்கூடங்களுக்கும் இப்படிப் பயிற்சிக் கல்லூரிக்கும் கற்பிக்கும் முறைகளில் நிறைய வித்தி யாசம் இருக்குமென்று தோன்றியது. இங்கே சொல்லிக் கொடுப்பதைவிட அதிகமாகப் பரீட்சைக்குத் தயாரிக்க வேண்டியிருக்கும் என்று தோன்றியது. கற்பிப்பதை விட மாணவர்களுக்கு அதிகமாக நோட்ஸ் தயாரித்து எழுதிப் போட வேண்டும் என்றும் தோன்றியது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|