பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 25 ...

2401 அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32

2402 உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33

2403 மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான * சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34

* சிவோகமாம்

2404 முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்த * மாகவே. 35

* மாகமே; மாமே

16. பதி பசு பாசம் வேறின்மை

2405 அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே. 1

2406 பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 2

2407 கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
* தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. 3

* துடக்கொன்றும்

2408 பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வ * தெவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. 4

* தவ்வண்ணம்

2409 விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. 5

2410 நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. 6

2411 ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 7

2412 பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே. 8

2413 பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. 9

2414 அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணு * மாக
அறிந்த அனாதி வியாத்தனு # மாவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. 10

* வாகும்; மாகில்
# மாகில்

2415 படைப்புஆதி யாவது * பரஞ்சிவம் சத்தி
இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. 11

* பரசிவஞ்

2416 ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே. 12

2417 மேவும் * பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே. 13

* பரஞ்சிவ

2418 படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்
* தடைத்த அனாதியை ஐந்தென லாமே. 14

* தடத்தவ னாதியை

2419 ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையின் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. 15

2420 வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
வாட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்
தாட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. 16

2421 நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. 17

2422 ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. 18

2423 பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் * பதிபசு வாகுமே. 19

* பதிபதி யாகுமே

2424 அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. 20

17. * அடித்தலை அறியும் திறங்கூறல்

(* அடிதலை)

2425 காலும் தலையும் அறியார் * கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே. 1

* கலாதிகள்

2426 தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 2

2427 நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 3

2428 சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. 4

2429 பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலினை சூடிநின் றேனே. 5

2430 பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி * யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 6

* செஞ்சடை

2431 தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. 7

2432 ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
* தன்றாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. 8

* கன்றாத

2433 கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள * நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 9

* ச் சாடினான்

2434 பெற்ற புதல்வர் * போற் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. 10

* பாற்

18. முக்குற்றம்

2435 மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை * நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. 1

* நீங்கியே நீங்கினர்

2436 காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 2

19. முப்பதம்

2437 தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1

2438 போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் * மெய்ம்மையே. 2

* மேன்மையே

2439 தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் * ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 3

* ணான்சிவன்

2440 அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
* துணையது வாயுரை # யற்றிடத் தோன்றுமே. 4

* துணையறு
# யற்றிடந்

2441 தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 5

(இப்பாடல் 2473ம், 2826-ம் பாடலாகவும் வந்துள்ளது)

2442 ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே. 6

2443 நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. 7

2444 பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே. 8

20. முப்பரம்

2445 தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று * படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1

* மடிமண்

2446 மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 2

2447 ஆறாறு தத்துவத் * தப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் # சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே. 3

* தப்புரத்
# சிவபதம்

2448 பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4

2449 பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே. 5

2450 நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே. 6

2451 தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. 7

21. பரலட்சணம்

2452 அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1

(இப்பாடல் 2582-ம் பாடலாகவும் வந்துள்ளது)

2453 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய * வப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2

* வப்பரம்

2454 துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3

2455 செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
* அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4

* அம்மைப்

2456 வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5

2457 என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியிற் * சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6

* சொருகிப்

2458 பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7

2459 சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்குமா நேயத்தே. 8

2460 மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9

2461 வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10

2462 தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11

2463 பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12

2464 வெளிகால் கனல்அப்பு மேவுமண் * ணின்ற
தளியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி # யவன்வடி வாமே. 13

* ணுண்டை; ணுண்ட
# வியன்வடி

2465 மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14

22. முத்திரியம்

2466 நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1

2467 தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2

2468 அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்
கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. 3

2469 ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான * பராபத்து அயிக்கியத்து
ஓர்அந்த மா* மிரு பாதியைச் சேர்த்திடே. 4

* பராபரத் தயிக்கிய மோரந்த மாயிரேழு பாதியைச் செற்றிட்டே
# மிருகாதியைச்

2470 தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5

2471 அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6

2472 நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே. 7

2473 தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்
நம்பிய மூன்றாம் துரியத்து * நற்றாமம்
அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8

* நன்றாகும்

23. மும்முத்தி

2474 சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
* ஓயுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1

* ஓவுப

2475 ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2

2476 சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் * சிறந்தனன் தானே. 3

* சிறந்தது

2477 சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4

24. முச்சொரூபம்

2478 ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1

2479 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2

2480 உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3

2481 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் * பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4

* பான்மை

2482 மணிஒளி சோபை இலக்கணம் * வாய்த்து
மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5

* வாய்த்த

2483 கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6

2484 உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7

25. முக்கரணம்

2485 இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
* உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1

* உடனுறு

2486 ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே. 2

2487 முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. 3

26. முச்சூனிய தொந்தத்தசி *

(* முச்சூனியம் தொந்தத்தசி)

2488 தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1

2489 தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. 2

2490 தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

2491 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

2492 தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. 5

2493 ஆகிய * வச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய # வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் $ பரசிவன் ஆமே. 6

* வச்சோமன் தேய்வது
# யவ்விட் டாகாயம்
$ பரன்சிவ
(இப்பாடல் 2570-ம் பாடலாகவும் வந்துள்ளது)

2494 தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் * தசியதே. 7

* தசியவே

27. முப்பாழ்

2495 காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1

2496 மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2

2497 எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3

2498 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய * பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய * பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4

* பராபரம்
(இப்பாடல் 2572-ம் பாடலாகவும் வந்துள்ளது)

2499 ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5

2500 உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6