25. தீர்மானம் சபாரத்தினம் வந்துவிட்டார். சொல்லிவிட்டுப் போனபடி விரைவாகக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான் டிரைவர். வேலை போய்விட்டதே என்ற கவலையோ வருத்தமோ அந்த மனிதரிடம் இல்லை. வழக்கம் போல் அட்சர லட்சம் பெறும் அந்தச் சிரிப்போடு, "என்ன? பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா?" - என்று கேட்டுக்கொண்டே அவன் முன் வந்து நின்றார் சபாரத்தினம். "சௌகரியந்தான்." - என்றான் அழகியநம்பி. மேரி சபாரத்தினத்தை உட்காரச் சொல்லித் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் அதைப் பருகியதும், "நான் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். அதற்காகத்தான் இப்போது சந்திக்க விரும்பினேன்." - என்று அழகியநம்பி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே சொன்னான். "அதற்கென்ன? பேசுவோமே!" - என்று சொல்லிச் சிரித்தார் சபாரத்தினம். 'இனிமேல் பேச என்ன இருக்கிறது?' - என்று சிரிப்பது போல் இருந்தது அவர் சிரித்த விதம். "மாடிக்குப் போய்ப் பேசிவிட்டு வாருங்களேன். மேரீ! இவர்களுக்கு மாடியறைக் கதவைத் திறந்துவிடு" - என்றார் வோட்ஹவுஸ். "வாருங்கள் போகலாம்." - மேரி அழைத்தாள். அழகியநம்பி சபாரத்தினத்தைக் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றான். கடற்காற்று வீசும் அந்த மாடியறையின் மனோரம்மியமான சூழ்நிலையில் ஒரு விநாடி என்ன பேசுவது? யார் முதலில் பேசுவது? - என்று திகைத்துப் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர் இருவரும். "என்ன நடந்தது? எனக்கு விவரமாகச் சொல்லுங்கள். அவளைக் கண்டாலே பயந்து சாகிற மனிதர் கொலை செய்கிற அளவுக்கு எப்படித் துணிந்தார்?" - அழகியநம்பி பேச்சைத் தொடங்கினான். "அழகியநம்பீ! இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்கு நினைவிருக்குமே? நீங்கள் புறப்படுவதற்கு முதல்நாள் மத்தியானம் உங்கள் அறைக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது நான் என்ன சொன்னேன்?" - "பூர்ணாவுக்கும் பிரமநாயகத்துக்கும் உள்ளூர விரோதம் இருக்கிறதென்று குறிப்பாகச் சொல்லியிருந்தீர்கள்." "சொல்லியிருந்தேன் அல்லவா? அது திடீரென்று முற்றி விட்டது. அவர்கள் இருவருக்கும் உங்கள் விஷயமாகத்தான் தகராறும் விவாதமும் ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை கடை கிடையாதென்றாலும் பூர்ணாவை வரச்சொல்லியிருக்கிறார் பிரமநாயகம். அவள் வந்திருக்கிறாள். அலுவலக அறைக்குள் நீண்ட நேரம் இருவருக்கும் பலமான விவாதமும் சப்தமும் ஏற்பட்டிருக்கின்றன. அதுவரை என்றும் பேசாத முறையில் திட்டியும், வைதும் இரைந்து பேசிக் கொண்டார்களாம். அதற்குக் காரணம், உங்களைப் பற்றிய பிரச்னையில் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுதானாம். இதைச் சமையற்காரச் சோமுவிடம் விசாரித்து அறிந்து கொண்டேன் நான்.
"மறுநாள் திங்கட்கிழமையாகையால் கடை உண்டு. அதனால், ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் தொடர்ந்து நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் நானும், கடையில் வழக்கமாக வேலை பார்த்து வரும் மற்ற நண்பர்களும் நன்கு அறிவோம். திங்கட்கிழமை காலையில் பத்தேகால் மணிக்குப் பூர்ணா எப்போதும் போல் வந்து அலுவலக அறைக்குள் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
"வியாபார விஷயமாக வெளியில் அலைந்துவிட்டுப் பன்னிரண்டு மணி சுமாருக்குப் பிரமநாயகம் கடைக்கு வந்தார். பூர்ணாவிடம் போய் அறைக்குள் சிறிது நேரம் கோபத்தோடு இரைந்து கொண்டிருந்தார். அவளும் பதிலுக்கு இரைந்தாள். இருவரும் அறைக்குள் போட்டுக் கொண்ட சத்தம் கடை முழுதும் கேட்டது. "சத்தம் போட்டுவிட்டுக் குளித்துச் சாப்பிடுவதற்காகப் பின் கட்டுக்குப் போயிருந்தார் பிரமநாயகம். அவர் உள்ளே போய்ப் பதினைந்து, இருபது நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. கடை வாசலில் ஒரு பெரிய கார் வந்து நின்றது. இரண்டு மூன்று பேர் இறங்கி வந்தார்கள். பார்த்தால் ஏதோ சர்க்கார் அதிகாரிகள் போல் தோன்றினர். கடையில் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வந்திருப்பார்கள் என்ற நினைப்புடன் நான் அவர்களை வரவேற்றேன். "நாங்கள் கடையில் சாமான்கள் வாங்க வரவில்லை. விற்பனை வரி, வருமான வரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள். எங்கள் உத்தியோக வேலையாகக் கணக்கு வழக்குகளைப் பரிசோதனை செய்ய வந்திருக்கிறோம்." - என்று சொன்னார்கள் அவர்கள். உடனே நான் அவர்களைப் பூர்ணாவின் அறையில் கொண்டு போய் விட்டேன். அவர்களுடைய வரவைக் கடையின் 'ப்யூன்' மூலம் பின் கட்டில் குளித்துக் கொண்டிருந்த பிரமநாயகத்துக்குச் சொல்லி அனுப்பினேன். என் மனத்தில் சந்தேகமும், பயமும் ஏற்பட்டிருந்தன. அன்று அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நல்ல காரியத்திற்காக வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. "நான் நினைத்துச் சந்தேகப்பட்டது வீண் போகவில்லை. இத்தனை வருடங்களாகப் பிரமநாயகம் விற்பனை வரி - வருமானவரித் துறையில் செய்திருந்த அவ்வளவு மோசடிகளையும் நாற்பது நிமிஷங்களில் அம்பலமாக்கி விட்டார்கள். எல்லா விவரங்களையும் குறித்துக் கொண்டு போலீசுக்குப் போன் செய்தார்கள். போலீஸ் 'வான்' வந்தது. பிரமநாயகத்தைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். போய் இரண்டு மூன்று மணி நேரத்தில் ஜாமீனில் திரும்பி வந்தார் அவர். அவர் திரும்பி வந்த போது பூர்ணா இல்லை. அவள் மூன்று மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக் கொண்டு போய்விட்டாள். வரும்போது அடிப்பட்ட புலிபோல் சீறிக்கொண்டு வந்தார் பிரமநாயகம். பூர்ணாதான் காட்டிக் கொடுத்திருக்கிறாள், என்றே சந்தேகமறப் புரிந்து கொண்டார். ஜாமீனில் திரும்பி வந்தபின் அவரைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவர் எங்கும் வெளியே போகவில்லை. பின்கட்டில் அவருடைய அறைக்குள்ளேயே பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். சோமுவை நெருப்புக் கொண்டுவரச் சொல்லி ஏதோ சில கடிதங்களையும் கணக்குப் பேரேடுகளையும் பைல்களையும் அறைக்குள்ளேயே கொளுத்தினாராம். "அலுவலகச் சாவியைப் பூர்ணா கொடுத்து விட்டுப் போயிருக்கிறாளா?" - என்று என்னைக் கூப்பிட்டுக் கேட்டார். "இல்லை! வழக்கமாகச் சமையற்காரச் சோமுவிடமாவது என்னிடமாவது கொடுத்துவிட்டுப் போவது உண்டு. இன்றைக்குக் கையோடு கொண்டு போய்விட்டாள் போலிருக்கிறது" - என்று சொன்னேன் நான். சாவியைப் பூர்ணா கொண்டு போய்விட்டாள் என்று தெரிந்தவுடன் அவர்பட்ட ஆத்திரத்துக்கும், வேதனைக்கும் ஒரு அளவே இல்லை. 'சாவியில்லாவிட்டால் என்ன? நீயும் சோமுவும் சேர்ந்து உடைக்க முடியுமா?" - என்றார். நாங்கள் பதில் சொல்லவில்லை. அவரும் அதற்கு மேல் அதை அதிகம் வற்புறுத்தவில்லை. "பின்பு இரவு ஏழுமணிக்கு நான் கடைவேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் போனபோதும் வேறு விசேடமாக எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. பிரமநாயகம் முதல் நாளிரவு போல் பித்துப் பிடித்தவர் போன்ற நிலையிலேயே அறைக்குள் அடைந்து கிடந்தார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒன்பது மணியிலிருந்து பத்தேகால் மணிக்குள் பூர்ணா வந்து விட்டாளா, என்று இருபது முப்பது தடவையாவது முன் கட்டுக்குக் கேட்டனுப்பியிருப்பார். பத்து பன்னிரண்டு தடவையாவது அலுவலக அறை திறந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரச் சொல்லிச் சமையற்காரச் சோமுவை விரட்டியிருப்பார். 'காலையிலிருந்து குளிக்கவில்லை. சாப்பிடவில்லை. வெறிபிடித்தவர் போல உட்கார்ந்திருக்கிறார்' - என்றான் சோமு. "பத்தேகால் மணிக்குப் பூர்ணா வந்து கதவைத் திறந்து கொண்டு போய் அறைக்குள் உட்கார்ந்தாள். உடனே நான் பின் கட்டுக்குப் போய் 'அவள் வந்துவிட்டாள். அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.' - என்று அவரிடம் சொன்னேன். 'வந்துவிட்டாளா?...' - என்று கேட்டுக் கொண்டே வேகமாக எழுந்திருந்து வந்தார். அறைக்குள் நுழைந்தார். "நாங்களெல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தவாறே என்ன நடக்கப்போகிறதோ; - என்று பயத்தோடு காதை தீட்டிக் கொண்டு கேட்பதற்குத் தயாராக இருந்தோம். நாங்கள் எதிர் பார்த்தபடி பிரமநாயகம் உள்ளே சென்றவுடன் உள்ளே பலத்த கூப்பாடோ, விவாதமோ உண்டாகவில்லை. அமைதியாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் போலிருக்கிறது. அரைமணி நேரமானதும் சத்தம் பலத்தது. அறையே இடிந்து விழுந்துவிடும் போல ஒருவருக்கொருவர் கூப்பாடு போட்டுக் கொண்டார்கள். "திடீரென்று அந்தப் பெண் பூர்ணா குரூரமாக அலறும் ஒலி பயங்கரமாகக் கேட்டது. பிரமநாயகத்தின் குரல் கேட்கவில்லை. நானும் இன்னும் இரண்டொருவரும் அறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போய்ப் பார்த்தோம். அப்பப்பா! என்ன கோரக் காட்சி? காகிதம் அறுப்பதற்காக மேஜை மேல் வைத்திருந்த நீளமான கத்தியை அவள் நெஞ்சில் நாலைந்து முறை குத்தி எடுத்துவிட்டார் பிரமநாயகம். வெறி பிடித்து விட்டதால் நிறுத்தாமல் கத்தியைக் குத்திக் குத்தி உருவிக் கொண்டிருந்தார். மேஜை, நாற்காலி, பைல்கள், கணக்குப் புத்தகங்கள், டைப்ரைட்டர்கள், - எங்கும் சிவப்பு ரத்தம் பீறிட்டுச் சிதறியிருந்தது. நானும் மற்றவர்களும் அப்போது அவர் அருகே நெருங்கவே பயந்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டோம். "கூப்பாட்டையும், அலறலையும் கேட்டுக் கடை வாசலில் என்னவோ ஏதோ, என்று கூட்டம் கூடிவிட்டது. கால்மணி நேரங்கழித்துக் கைகளிலும், உடம்பின் பல பாகங்களிலும் இரத்தக்கறை படிந்த தோற்றத்தோடு தாமாகவே அறையிலிருந்து வெளியே வந்தார் பிரமநாயகம். கண்களில் கொலை வெறி அப்போது அடங்கவில்லை. எல்லோரும் அவரவர்கள் இடத்தில் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். அவர் நேராகப் போன் இருந்த இடத்தை நோக்கிப் போனார். போனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆள் பயந்து எழுந்து ஒதுங்கி நின்று கொண்டான். இரத்தக்கறை படிந்த கையால் அவராகவே தாம் கொலை செய்துவிட்டதாகப் போலீஸுக்குப் போன் செய்தார். பின்பு எங்களையெல்லாம் பார்த்து நிதானமாகச் சொன்னார்: - "நாளையிலிருந்து இந்தக் கடை நடக்காது. உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை." ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்துவிட்டோம். பின்பு கடை வாசலில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, "ஏன் கூட்டம் போடுகிறீர்கள்? போய்விடுங்கள்?" - என்றார். போலீஸ் லாரி வந்தது. அவரைக் கைது செய்தார்கள். எங்களில் சிலரைச் கொலைக்குச் சாட்சிகளாகப் பதிவு செய்து கொண்டார்கள். கொலை செய்யப்பட்ட பூர்ணாவின் உடலை வைத்தியப் பரிசோதனைக்காக அப்புறப்படுத்தினார்கள். எங்களையெல்லாம் வெளியேற்றிவிட்டுக் கடையின் எல்லாப் பகுதிகளையும் பூட்டிச் சீல் வைத்துப் போலீஸ்காரர்களைக் காவல் வைத்தனர். பிரமநாயகத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டனர். நடந்தது இதுதான். பிரமநாயகம் ரிமாண்டில் இருக்கிறார். அவரை நம்பி இருபதாயிரம், முப்பதாயிரம் என்று ஏராளமான தொகைகளுக்குச் சரக்குக் கொடுத்தவர்களெல்லாம் கையைச் சுட்டுக் கொண்டு தவிக்கிறார்கள். மனிதனுக்குக் கிடைப்பதென்னவோ தூக்குத் தண்டனைக்குக் குறைவாக வேறெதுவும் இருக்காதென்று பேசிக் கொள்கிறார்கள்." -சபாரத்தினம் சொல்லி முடித்தார். அழகியநம்பி சிந்தனையில் மூழ்கியவனாக அதிர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். "நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் இனிமேல்?" - சபாரத்தினம் அவனைக் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான். "செய்வதென்ன? அதை, இந்த நிகழ்ச்சிகளெல்லாம் எனக்குத் தெரிவதற்கு முன்பே நான் தீர்மானித்து வைத்து விட்டேனே!" "ஊருக்குத் திரும்பிப் போகும் திட்டம் தானே அது?" - சபாரத்தினம் சிரித்துக்கொண்டே கேட்டார். "ஆமாம்! கஷ்டமோ, நஷ்டமோ, அதைப் பிறந்த மண்ணிலேயே அனுபவிக்கத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை நான் அறிந்து கொள்ளலாமோ?" "உங்களைப் போலவே எனக்கும் பிறந்த மண் இருக்கிறது. அருமையான வயல்கள் - தென்னந்தோப்பு - எல்லாம் இருக்கின்றன. பேசாமல் வீட்டோடு ஒழித்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப் போகப் போகிறேன். ஊரோடு நிலங்கரைகளைப் பார்த்துக் கொண்டும் ஒழிந்த வேளைகளில் தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டும் நாட்களைக் கழிக்கப் போகிறேன். மனிதர்களை நம்பி வாழ்வது அலுத்துப் போய்விட்டது! மண்ணை நம்பி வாழ்வதற்குப் புறப்பட்டுவிட்டேன். ஆனால், என் உள்ளத்தில் ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்கிறது. மனிதர்களை நம்பி வாழ்ந்த போது குறிக்கிடுகிற போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் - இவைகளெல்லாம் மண்ணை நம்பி வாழும் போது ஏற்படாது. அந்த வாழ்க்கையில் அமைதி இருக்கும், இன்பமிருக்கும், பண்பு இருக்கும், தன்னம்பிக்கை இருக்கும்." இதைக் கேட்டபோது அழகியநம்பிக்கு உள்ளம் சிலிர்த்தது. 'ஆகா! இந்தச் சபாரத்தினத்திற்கும், எனக்கும் ஒரே மாதிரி உள்ளத்தை, ஒரே மாதிரிச் சிந்தனையை, படைத்தவன் வைத்துவிட்டானா; என்ன? இலங்கையின் மலைப்பகுதியில், தேயிலை, இரப்பர்த் தோட்டங்களில், உழைக்கும் மக்களைப் பார்த்தபோது என் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் தோன்றினவோ, அதே எண்ணங்களை இப்போது இவரும் வெளியிடுகிறாரே?' - என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். "நீங்கள் என்றைக்கு யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுகிறீர்கள்?" "ஏன்? இன்னும் ஒரு வாரம் போல ஆகும்!" "இல்லை! சும்மாதான் கேட்டேன். நான் நாளைக்குக் காலையில் கப்பலேறலாம் என்றிருக்கிறேன்." - அழகியநம்பியின் குரல் தழுதழுத்தது. "என்ன? அதற்குள்ளாகவா? சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நீங்கள் விரும்பினால் பிரமநாயகத்தைச் சந்தித்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போகலாமே?" "வேண்டாம்! நான் அவரைச் சந்திக்கவும் விரும்பவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளவும் விரும்பவில்லை." "அவ்வளவு வெறுப்பா?" "வெறுப்பும் கிடையாது! இரக்கமும் கிடையாது! இனி மேல் நான் என்னைப் பற்றி மட்டும் தான் கவலைப்பட முடியும்." "கடைக்குள் உங்கள் பொருள்கள் எவையேனும் இருக்கின்றனவோ?" "எதுவும் இருப்பதாக நினைவில்லை. இருந்தாலும் அவற்றை நினைத்து நான் காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை!" - தீர்மானமாகக் கூறினான் அவன். |