12. அன்பின் அலைகள் திடீரென்று இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் வந்ததையும் அழகியநம்பி சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் பேசி அவர்களை வரவேற்றதையும் அந்தப் பெண்கள் மிகவும் உரிமையோடு அவனுக்குப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டதையும் , பார்த்தபோது சமையற்காரச் சோமுவுக்கு என்னவோ போல் இருந்தது. நான்கு படித்த மனிதர்களுக்கு நடுவே படிக்காத ஒருவன் அகப்பட்டுக்கொண்டால்; அவனுக்கு ஏற்படுமே ஒரு வகைப் பயமும், கூச்சமும்; அவை சோமுவுக்கு ஏற்பட்டன. அதுவும், வந்து உட்கார்ந்தவர்கள் பெண்களாக வேறு இருக்கவே, அவனுடைய கூச்சம் இரண்டு மடங்காகிவிட்டது. "தம்பி, நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் இப்படி இந்தக் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்." - என்று அழகியநம்பியிடம் சொல்லிக்கொண்டு கடற்கரை ஒரமாக நடந்தான். மேரியும், லில்லியும் சோமுவை ஏறிட்டுப் பார்த்தார்கள். அவன் சிறிது நடந்து சென்றதும் அழகியநம்பியிடம் அவன் யாரென்று கேட்டார்கள். சோமு யார் என்பதை அவர்களுக்கு விளக்கினான் அழகியநம்பி. "அதுசரி! இப்போதுதாவது நீங்கள் உங்களுடைய முகவரியைச் சொல்லப்போகிறீர்களா, இல்லையா?" - என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு கேட்பவளைப் போலக் கேட்டாள் மேரி. மேரியின் கண்களைக் கூர்ந்து நோக்கினான் அழகியநம்பி சற்றே மலர்ந்த பெரிய கண்கள் அவை! அவள் எப்போது பேசினாலும், எதைப்பற்றிப் பேசினாலும் அந்தப் பெரிய கண்களில் ஒருவித ஒளி - ஒருவகை உணர்ச்சித் துடிப்பின் சாயை மின்னுவதை அவன் கவனித்தான். "என்ன? மேரியின் முகத்தை அப்படி விழுங்கி விடுகிறாற் போலப் பார்க்கிறீர்களே? - என்று சிரித்துக்கொண்டே அவனை வினவினாள் லில்லி. அழகியநம்பி புன்னகை செய்தான். "வேறொன்றுமில்லை! உங்கள் தங்ககையின் அழகிய பெரிய கண்கள் தாமரை இதழ்களைப்போல் இருக்கின்றன. அந்த அழகைப் பார்த்தேன்." - "நல்லவேளை! நீங்கள், நான் முகவரி கேட்டதற்குப் பதிலே சொல்லாமல் என் கண்களைப் பார்க்கவும் எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. ஒருவேளை உங்கள் முகவரி என்னுடைய கண்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதோ, என்று நினைத்தேன்." - குழந்தையைப் போலக் குலுங்கக் குலுங்க ஒரு கிண்கிணிச் சிரிப்பு. குழந்தைத் தனமான பேச்சு. மேரியின் அந்தச் சிரிப்பிலும், பேச்சிலும், ஒரு கவர்ச்சியைக் கண்டான் அழகியநம்பி.
"இதோ என் முகவரி....." ஒரு துண்டுக் காகிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்து அதில் தன் முகவரியைக் குறித்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு "நன்றி" - என்றாள் மேரி.
லில்லி பேச்சில் கலந்துகொள்ளாமல் கடலின் பக்கமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அவளிடம் ஒரு மென்மையான மாறுதல், நுணுக்கமான அயர்ச்சி - உண்டாகியிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அது தானாக நினைத்துக்கொள்ளுகிற பிரமையோ,- என்று ஒரு கணம் தனக்குத்தானே ஐயமுற்றான் அவன். லில்லிக்குத் தெரியாமலே பின்னும் அவளை நன்றாக உற்றுப் பார்த்தான். அவனுக்குத் தோன்றியது பிரமையில்லை. உண்மைதான்! கண்ணாடி மண்டலத்தில் ஊதிய ஆவி படிந்திருப்பதுபோல் அந்த மெல்லிய சலனம் ல்லிலியின் முகத்தில் இருந்தது. அழகியநம்பி சிந்தித்தான்! கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்தவள் இருந்தாற்போலிருந்து இப்படி மாறுதலை அடையக் காரணமென்ன என்று மண்டையைக் குழப்பிக்கொண்டான். அவனுடைய உள்மனம் அவனுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கத் தொடங்கியது; "அடே! முட்டாள்; உனக்கு வயதாகி என்ன பயன்? இரண்டு பெண்களுக்கு நடுவில் எப்படிப் பேசிப் பழகவேண்டுமென்றுகூடத் தெரியவில்லையே. உடன் பிறந்தவர்களாகவே இருக்கட்டுமே! ஒருத்தியின் கணகள் அழகாக இருந்தால் அதைப் பேசாமல் உன் மனத்திற்குள் நினைத்துப் பாராட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே? அதை ஏன் இன்னொருத்தியிடம் கூறினாய்? பெண்ணின் இதயம் உனக்குத் தெரியாதா? மோந்து பார்த்த அளவில் வாடிப்போகும் அனிச்ச மலரைக் காட்டிலும் மென்மையான பெண்ணுள்ளம் ஒரு சொல்லில் வாடிவிடுமே." அழகியநம்பிக்குத் தன் தவறு புலனாகியது. உணர்ச்சி வசப்பட்டு விளையாட்டுத்தனமாகப் பேசிவிட்டதை உணர்ந்தான். உலகம் முழுவதும், பெண்களின் மனம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. நிறம், உடை,மொழி, நாகரிகம், பழக்கவழக்கங்கள், - எத்தனை வேறுபாடுகள்தான் இருக்கட்டுமே. பெண்ணின் உள்ளமும், அடிப்படையான உணர்ச்சிகளும் மாறுவதே இல்லை. லில்லியைப் பழையபடி கலகலப்பான நிலைக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் சிரிப்பின் மூலமும் பேச்சின் மூலமும் செய்யத் தொடங்கினான் அவன். "மிஸ் லில்லி! அந்தக் கடலுக்குக் கிடைக்கும் பாக்கியம் எங்களுக்குக் கொஞ்சம் கிடைக்கக்கூடாதா? நீண்ட நேரமாகக் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? எங்களையுந்தான் கொஞ்சம் பாருங்களேன்." - லில்லி திரும்பினாள். அழகியநம்பி சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான்.பிறகு பதிலுக்கு அவளும் சிரித்தாள். அந்த சிரிப்பில் முழுமை இல்லை. எதையோ மறைத்துக் கொண்டு முகத்துதிக்காகச் சிரிப்பது போல இருந்தது. ஆனால், அழகியநம்பி அந்தக் குறையைத் தன் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு, "நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள். உங்கள் சிரிப்பு என் இதயத்தைக் கொள்ளைகொள்ளுகிறது." - என்று மேலுக்குப் புளுகினான். லில்லியின் முகம் மெல்ல மலர்ந்தது. திடீரென்று மெளனம் திடீரென்று மகிழ்ச்சி. அந்த பெண் புதிராகத்தான் இருந்தாள். "அடாடா! இப்படிப் பேசியே பொழுதைக் கழிக்கிறோமே! மேரி, வா; இவரையும் கூட்டிக் கொண்டு போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்" - என்றாள் லில்லி. "புறப்படுங்கள்! எதிர்ப்புறம் அரசாங்கக் கட்டிடங்களுக்குப் பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறது. போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்." - என்று எழுந்து நின்றுகொண்டு சிறு குழந்தையைப் போல் அவன் வலது கையைப் பிடித்து இழுத்தாள் மேரி. "மரியாதையாக எழுந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் நான் உங்களுடைய இன்னொரு கையைப் பிடித்து இழுக்க நேரிடும்" - என்று இடது கைப்பக்கம் நின்றுகொண்டு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் லில்லி. சிட்டுக்குருவிகள் போல் அவலக் கவலைகளற்றுத் திரியும் அந்த யுவதிகளின் அன்பிற்கு நடுவே சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் திணறினான் அழகியநம்பி. "தேநீரா? இந்த நேரத்தில் எதற்கு? தவிர, அவ்வளவு தூரம் போய்விட்டு மறுபடியும் கடற்கரைக்குத் திரும்புவதற்குள் இங்கே நன்றாக இருட்டிவிடும். சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கலாமே? - என்று மறுத்தான் அழகியநம்பி. "வரப்போகிறீர்களா? இல்லையா? நாங்கள் கூப்பிடுகிறோம் மறுக்கக்கூடாது." கோபப்படுவதுபோல் கண்களை உருட்டி விழித்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மேரி. "வேண்டாம் மேரி! அப்படிப் பார்க்காதே. எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இதோ வந்துவிடுகிறேன்." - சிரித்துக் கொண்டே எழுந்திருதந்தான் அழகியநம்பி. சோமு நின்று கொண்டிருக்கும் இடத்தைத் தேடிச் சுழன்றது அவன் விழிப்பார்வை இருபது முப்பது கெஜ தூரத்திற்கு அப்பால் கடலுக்கு மிகவும் பக்கத்தில் தனியாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். "ஏ சோமு! - என்று அவனை இரைந்து கைதட்டிக் கூப்பிட்டான் அழகியநம்பி. கடல் அலைகளின் ஓசையிலும், காற்றோசையிலும் சோமுவுக்கு அந்தக் குரல் கேட்கவே இல்லை " நான் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேனே!" - என்று துள்ளிக் குதித்து ஓடினாள் மேரி. வெள்ளைக் கவுன் அணிந்த அவள் புல் தரையில் துள்ளி ஓடுவது வெண் சிறகோடு கூடிய அன்னமொன்று வேகமாகப் பறந்து செல்வதுபோல் தோன்றியது அழகியநம்பிக்கு. "மேரிக்கு எப்போதுமே சிறுகுழந்தைத்தனம் அதிகம். இன்னும் குழந்தைப் புத்திதான்." - லில்லி புன்னகையுடன் அவனை நோக்கிக் கூறினாள். அதைச் சொல்லும்போது அவள் முகத்தை வேண்டுமென்றே உற்றுப் பார்த்தான் அவன். லில்லி சாதாரண மனவுணர்வோடு மட்டும் அந்த வார்த்தைகளைச் சொன்னதாகத் தோன்றவில்லை அவனுக்கு. தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றோ, தனக்குத் தெரிவிக்க வெண்டுமென்றோ, ஏதோ ஒன்றை அந்தச் சொற்களில் அவள் மறைத்துக் கூறுவது போல் உணர்ந்தான். வேண்டுமென்றே மேரியின் குழந்தைமையைச் சுட்டிக்காட்டி லில்லி தன் நிலையை அவன் உயர்வாக நினைக்கச் செய்வதற்கு முயல்வது போலிருந்தது. பெண்களின் உள்ளத்தில் இயற்கையாக எழும் நுணுக்கமான பொறாமையைக் கண்டு மனத்திற்குள் சிரித்துக்கொண்டான் அவன். 'நீ எனக்கே உரிமை - எனக்கு மட்டும்தான் உரிமை' என்று வற்புறுத்திச் சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது, அப்போது அவள் அவன் பக்கத்தில் நின்ற விதமும், கூறிய சொற்களும், உரிமை கொண்டாடிய முறையும். இரண்டே நிமிடத்தில் சோமுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் மேரி. அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன்னைத் தேடிவந்து கூப்பிட்டுச் சென்றபோது சோமுவுக்கு ஏற்பட்ட பெருமிதம் அவனை இலங்கைக்கு மன்னனாக முடிசூட்டியிருந்தால் கூட ஏற்பட்டிருக்காது. புல்வெளியில் ஒரு ஓரமாக நிறுத்தியிருந்த தங்களுடைய காருக்கு அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள் மேரியும் லில்லியும். அழகான நீலநிறக் கார் அது. மாலைநேரத்து மஞ்சள் வெயிலில் கண்ணாடிபோல் மின்னிக்கொண்டிருந்த்து அந்தக் கார். "ஏறிக்கொள்ளுங்கள்; போகலாம்." - மேரி பின் சீட்டின் கதவை அவனுக்காகத் திறந்துவிட்டாள். அழகியநம்பியும் சமையற்காரச் சோமுவும் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். வழுவழுவென்று மென்மையாக இருந்த ஸ்பிரிங் மெத்தை உடலைத் தூக்கிப் போட்டது. மேரியும் லில்லியும், முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தார்கள். மேரிதான் காரை ஓட்டினாள். காரில் போவது போலவா இருந்தது? ஏதோ புஷ்பகவிமானத்தில் சவாரி செய்வது மாதிரி இருந்தது அந்தச் சில விநாடிகள். நாலைந்து நிமிடங்களில் கார் ஹோட்டல் வாசலில் போய் நின்றது. மேல் நாட்டுமுறைப்படி நடத்தப்படுகிற ஹோட்டல் அது. கணவனும் மனைவியுமாக - காதலனும் காதலியுமாக- நண்பரும் நண்பருமாக - பலர் வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர். கேளிக்கை நடனங்களுக்குரிய மேல்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த்தன. இந்தியர்கள் - தமிழர்கள் அந்த ஹோட்டலில் அதிகம் காணப்படவில்லை. வெள்ளைக்கார ஆண் பெண்களின் கூட்டத்தையும், அங்கே ஒலித்த இசையொலியையும், பலவித சுருட்டுகளின் புகை மண்டலங்களிற் கிளம்பிய நெடியையும் கண்டு உள்ளே நுழைவதற்கே கூச்சமும், தயக்கமும் அடைந்தான் சமையற் கார சோமு. "பயப்படதே! வா. டீ குடித்துவிட்டு உடனே வெளியே வந்துவிடலாம்." - என்று அவனைக் கூட்டிக் கொண்டு போனான் அழகியநம்பி. தேவையோ தேவையில்லையோ, லில்லியும் மேரியுமாக அந்த ஹோட்டலில் தாங்கள் சந்தித்த தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அழகியநம்பியை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பயனாகச் சுமார் பத்துப்பன்னிரண்டு ஆங்கிலப் பெண்களோடும் ஆண்களோடு கைகுலுக்கி அவனுக்கு அலுத்து விட்டது. சாதரணமாக இந்தியர்களோ, தமிழர்களோ அதிகம் பழகாத அந்த ஹோட்டலுக்குள் இரு வெள்ளைக்கார யுவதிகள் இரு தமிழர்களோடு நுழைந்தால் மற்றவர்களுக்கு வியப்பாயிராதா? ஏதோ பொருட்காட்சியிலுள்ள அபூர்வ உருவங்களைப் பார்ப்பதுபோல் அழகியநம்பியையும் சோமுவையும் பார்த்தனர். படிப்பறிவும் துணிவும் உள்ள அழகியநம்பி புதிய பார்வையையும் சமாளித்துக்கொண்டான். சோமுதான் ஒன்றும் புரியாமல், "ஏனடா இதற்குள் வந்து மாட்டிக் கொண்டோம்?" என்று மிரண்டுபோய் விழித்தான். மேரி இதை புரிந்துகொண்டாள். ஹாலில் இருந்த போது மேஜைக்கு முன்னால் உட்காரப்போன லில்லியைத் தடுத்து "வேண்டாம் அக்கா! தனியாக ஒரு குடும்ப அறையைப் பார்த்து உட்காரலாம்." - என்றாள். 'ஃபேமலி ரூம்' என்று எழுதியிருந்த ஒரு அறைக்குள் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டார்கள். சிரிப்பும், பேச்சும் தேநீர் பருகுதலுமாக அரைமணி நேரம் அந்த அறைக்குள் கழிந்தது. மறுபடியும் அவர்கள் ஹோட்ட்ல் வாசலுக்கு வந்தபோது மெல்லிய இருள்திரை உலகத்தின் மேல் விழுந்து மூடத் தொடங்கியிருந்தது. "திரும்பவும் கடற்கரைக்குப் போய்ச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போகலாமே!" - என்றாள் மேரி. "தம்பி இப்போதே திரும்பினால்தான் போய் உடனே என் சமையல் வேலையைத் தொடங்கலாம். நான் போய்த் தான் இராத்திரிச் சமையலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்" - என்று அழகியநம்பியின் காதருகே இரகசியம் பேசுவதுபோல் மெல்லக் கூறினான் சோமு. அவன் சொல்லியதை அவர்களுக்குச் சொன்னான் அழகியநம்பி. "பரவாயில்லை! அப்படியானால் ஒரு காரியம் செய்யலாம். மேரி; நீ நம்முடைய காரில் இந்த ஆளை ஏற்றிக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வா! அதுவரை நான் இவரோடு கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்." - என்றாள் லில்லி. மேரி அதற்கு மறுமொழி கூறவில்லை. தயங்கி நின்றாள். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அழகியநம்பி இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தான். அவனுக்கு இருவர் மனநிலையும் நன்றாகத் தெரிந்தது. மேரியை அனுப்பிவிட்டு அவனோடு சிறிதுநேரம் தனிமையாகப் பேசவும் பழகவும் லில்லிக்கு உள்ளூர ஆசை. அழகியநம்பியை அக்காவுடன் விட்டுச் செல்ல விருப்பமில்லை மேரிக்கு. "வீணாக நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்; லில்லி! நாங்கள் இருவருமே புறப்பட்டுப் போகிறோம். இனிமேல் இவ்வளவு இருட்டியபின் கடற்கரையில் தனியாக உட்கார்ந்து என்ன பேசப் போகிறோம். இன்னொரு நாள் நாமெல்லோரும் கடற்கரையில் சந்தித்தால் போயிற்று. இப்போது நீங்களும் மேரியும் வீட்டிற்குச் செல்லுங்கள். நானும் சோமுவும், பஸ்ஸில் போகிறோம். "இல்லை! இல்லை! பஸ்ஸில் போகவேண்டாம். உங்கள் இருவரையும் எங்கல் காரிலேயே கடையில் கொண்டுபோய் விட்டு விட்டு அப்புறம் நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்" - என்றாள் மேரி. அவனும் சோமுவும், ஏறிகொண்டனர். அவர்களும் ஏறிக்கொண்டார்கள். தூரத்தில் கடலின் அலைகள் கரையோரத்து மின்சார விளக்கொளியில் மின்னின. கார் சென்றது. |