![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
31. உழைப்பு! உழைப்பு! உழுது பழகாத கைகள் தொடக்கத்தில் வருந்தின. மலைப்பு அடைந்தன. அதைரியமோ, சோர்வோ அடைந்து விடாமல், பொறுமையாக வேலை செய்தான் அழகியநம்பி. ஆற்றுப் படுகையாதலால் தரை அதிகமாக இறுகியிருக்கவில்லை. கலப்பையின் கொழு நுனி சுலபமாகவே மண்ணில் நுழைந்து கீறிக்கொண்டு போயிற்று. நிலா நாட்களில் இரவிலும் ஏர் பூட்டி உழுதான். மேழியைப் பிடித்து அவன் கைகள் சிவந்து கன்றின. கால்கள் நடந்து அலுத்தன. உழுத சாலுக்குள் மண்ணில் மறைந்திருந்த கற்கள் எற்றி எத்தனை தடவை அவன் கால் விரல்களின் இரத்தம் அந்த மண்ணை நனைத்திருக்கும்? மண்வெட்டியால் வாய்க்கால் வெட்டும் போது தவறிப் போய் காலில் போட்டுக் கொண்டு எத்தனை முறை இரத்தம் சிந்தியிருப்பான் அவன்? எத்தனை முட்கள் தைத்திருக்கும்? எத்தனை கற்கள் எற்றியிருக்கும்? ஓய்வு ஒழிவில்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு உழைத்தான் அவன். அவனுடைய இரத்தம், அவனுடைய வியர்வை, அவனுடைய உழைப்பு, - எல்லாவற்றையும் எந்த இடத்தில் சிந்திக் கொண்டிருந்தானோ, அந்த இடம் சர்க்காருக்கு மனுப்போட்டுத் தீர்வைப் பணம் கட்டி வாங்கிய வெறும் மண் மட்டுமல்ல. அது அவன் பிறந்த மண்! ஒரு மாத உழைப்புக்குப் பின் அந்த நிலம் நிலமாயிற்று. வெறும் மண் விளையும் மண்ணாயிற்று. காடாகக் கிடந்த பூமி கற்பகம் விளையும் கழனிகளாயிற்று. மொத்தமாக உழுது போட்ட பின் நிலப்பரப்பைத் தனித் தனிப் பிரிவுகளாக வரப்புக் கட்டிப் பிரித்தான். அருவியிலிருந்து அவன் தோண்டிக் கொண்டு வந்திருந்த வாய்க்கால், வயலின் நடுவில் இறுதிவரை வந்து இருபுறமும் நீர் பாய்ந்தது. வீட்டுக் கொல்லையில் குவிந்திருந்த குப்பையை வண்டி வண்டியாக ஏற்றிக் கொண்டு வந்து உழவில் சிதறினான். எடுத்த எடுப்பில் நன்செய்ப் பயிர்களைப் பயிரிட வேண்டாம் என்று முருகேசன் கூறிச் சென்றது நினைவுக்கு வந்தது அவனுக்கு. காய்கறிகளையே பயிர் செய்ய நினைத்தான். அப்போது மார்க்கெட்டில் அதிக விலை போகும் உயர்ந்த ரகக் காய்கறிகளாகப் பயிர் செய்தான். உயர்ந்த வித்துக்களாகத் தேடி வாங்கி வந்தான். ஒரு பகுதியில் தக்காளி, இன்னொரு பகுதியில் முட்டைக்கோஸ், மற்றோர் பகுதியில் உருளைக்கிழங்கு, வேறோர் பகுதியில் கேரட், முக்கால் ஏக்கர் அளவில் சீமை வெங்காயம் - பயிரிட்டு முடிந்ததும் தன் உழைப்பின் முழுச்சக்தியையும், நம்பிக்கையையும், இலட்சியத்தையும் - ஏன் சகலத்தையுமே அந்த மண்ணில் விதைத்துவிட்டது போன்றதொரு திருப்தி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. மலையிலிருந்து காட்டுப் பன்றிகள், கரடிகள், இறங்கி வந்து நிலத்தைக் கிளறிப் பாழ்படுத்தி விடாமல் நடுவில் பரண் போட்டுக் கொண்டு இராப் பகலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். முள் வெட்டி வேலி அடைத்தான். ஊரை மறந்து, வீட்டை மறந்து, தன்னையே மறந்து அந்த நிலமே கதியென்று கிடந்தான். கண்ணை இமைகாப்பது போல் அந்த நிலத்தைக் காத்து வந்தான். இந்த ஒன்றரை மாதத்திற்குள் அவன் உடல் கறுத்து அழகிழந்து போயிருந்தது. தசைகள் இறுகி உழைப்புக்கே உரிய முரட்டுத் தன்மை ஏறியிருந்தன. சட்டை, பனியன், போட்டுக் கொண்டு சுற்றியது மறந்தே போய்விட்டது அவனுக்கு. அரையில் அழுக்கடைந்த நாலுமுழம் வேட்டியோடும், திறந்த மார்போடும், வெயிலென்றும், பனியென்றும் பாராமல் காத்துக் கொண்டு கிடந்தான் அவன். மாடு கட்டிக் கொள்வதற்கும், வண்டி நிறுத்திக் கொள்வதற்கும், விவசாயக் கருவிகளை வைத்துக் கொள்வதற்கும், - அந்த அருவிக் கரையில் ஒரு கீற்றுக் குடிசை வேய்ந்து கொண்டான். நாள் செல்லச் செல்ல அவன் ஊருக்குள் வருவதே குறைந்து விட்டது. தென்காசியில் வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததை அப்படியே வீட்டில் கொடுத்து விட்டான். வேளாவேளைக்குப் படுகை நிலத்தைத் தேடிக் கொண்டு உணவு வந்தது அவனுக்கு. வள்ளியம்மை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள். அழகியநம்பி உழைக்கவில்லை! அவனுடைய உழைப்பை வெறும் உழைப்பென்று மட்டும் சொல்லிவிட முடியாது. மரத்தடியில் தவம் செய்யும் முனிவன் போல், மண்ணில் - ஆற்றோரத்துப் புழுதியில் - உழைப்பு என்னும் யோகாசனத்தால் தவம் செய்து கொண்டிருந்தான் அவன். தண்டும், கமண்டலமும், ஏந்தும் முனிவர் போல் மண்வெட்டியும், கடப்பாரையும் ஏந்தினான் அவன். அவன் முகத்திலும் தாடி, மீசை, எல்லாம் காடு மண்டினாற்போல வளர்ந்து விட்டன. தலையில் எண்ணையும், சீப்பும் படிந்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டனவோ? அவனுடைய சுருள்சுருளான அழகிய கிராப்பு முடி நெருப்பு நிறத்தில் சடை விழுந்து தோன்றிற்று. புலன்களை அடக்கி உழைத்து இலட்சியத்தை நோக்கித் தவம் செய்யும் முனிவனாகத்தான் அவனும் இருந்தான். கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நிலத்தின் நடுவிலிருக்கும் பரண் மேல் ஏறி நின்று கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நான்கு புறமும் ஒரே பசுமைப் பரப்பாகத் தெரிந்த தனது படுகையைப் பார்க்கும் போதெல்லாம் அவன் உள்ளம் பூரிக்கும். நம்பிக்கை பொங்கும். உழைத்த தோள்கள் உயர்ந்து விம்மும். எத்தனையோ காலமாக ஆற்று வணடலைத் தேக்கிப் படியவைத்துக் கொண்டு மேடாகியிருந்த அந்தக் குறிஞ்சியாற்றுப் படுகை தன் நிலவளத்தையெல்லாம் அவன் உழைப்போடு சேர்த்து ஒத்துழைக்கச் செய்திருந்தது. பயிர்களின் எழுச்சியில், புடைத்து மேலெழும் பசுமையின் கொழிப்பில், அந்த ஒத்துழைப்பைக் காண முடிந்தது. ஒருநாள் அருணோதயத்தில் அவன் அப்படிப் பரண் மேல் நின்று கொண்டிருந்த போது வட்டிக் கடைப் பன்னீர்ச்செல்வமும் அவருடைய ஆட்களும் அந்தப் பாதையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மலையில் விறகு வெட்டி கரி மூட்டைக்காகத் தீ மூட்டம் போடுவதற்கு அவர் போய்க் கொண்டிருக்கிறாரென்று அவன் நினைத்துக் கொண்டான். வழக்கமாக ஒன்றரை மாதம், இரண்டு மாதங்களுக்கொரு முறை அந்த வழியாக அவர் மலைக்குப் போவதுண்டு. இந்த முறை இதுவரை காணாத புதுமை அந்தப் படுகைப் பரப்பில் தெரிவதைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கல்லும் முள்ளும் சிதறிக் கிடந்த மேடு பள்ளமான தரை வளமான காய்கறித் தோட்டமாக மாறியிருப்பதைப் பார்த்து வியந்தார். "அந்தக் கொழும்புப் பிள்ளையாண்டான் இராப்பகலாக உழைத்து மண்ணைப் பொன்னாக்கி விட்டாருங்க..." என்று அவரோடு வந்திருந்த கூலியாட்களில் ஒருவன் கூறினான். சாம்பல் நிறத்தில் 'கொழுகொழு'வென்று வளர்ந்த முட்டைக்கோஸ் செடிகள், பூவும், பலனுமாகத் தக்காளிச் செடிகள், வளமாக வளர்ந்த சீமை வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, - எல்லாப் பயிர்களையும் பார்த்த போது பன்னீர்ச்செல்வத்தின் மனத்தில் பேராசை எழுந்தது. மனத்தையும், கண்களையும் அடக்க முடியாமல் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தெரியும் அந்தப் பசுமையை மீண்டும் பார்த்துக் கொண்டே மேலே நடந்து செல்லத் தோன்றாது தயங்கி நின்றார் அவர். பரண்மேல் அழகியநம்பி நின்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். மனத்திற்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, நின்று கொண்டிருந்த வரப்பின் புல் தரையின் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார். "அதோ பரண்மேல் நிற்கிறான் அந்தப் பையன்; போய் நான் கூப்பிடுகிறேனென்று கூப்பிட்டுக் கொண்டு வா." - என்று தம் ஆட்களில் ஒருவனைத் துரத்தினார். அழகியநம்பி தக்காளிச் செடிகளுக்குக் கொத்தி விடுவதற்காக அப்போதுதான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பன்னீர்ச்செல்வம் அனுப்பிய ஆள், "இந்தாங்க; தம்பீ! உங்களை ஐயா கூப்பிடுகிறார்." - என்று அவனருகே வந்து சொன்னான். "வருகிறேன் போ." - என்று சொல்லிவிட்டு மண்வெட்டியோடு அவனுக்குப் பின்னால் நடந்தான் அழகியநம்பி. "வா தம்பீ! உன் திறமையைப் பார்த்தேன். எனக்கு கண் கூசுகிறது. இரண்டரை மாதத்துக்கு முன்னாலே வெட்ட வெளியாய்க் கிடந்த இடத்தை இப்படிப் பசுமை குலுங்கச் செய்துவிட்டாயே; நீ சாமர்த்தியக்காரன் தான் அப்பா. நான் கூட ஆரம்பத்திலே ஏதோ மட்டமாக நினைத்தேன். பைத்தியகாரத்தனமாக நீ வீணுக்கு உழைக்கிறாய் என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது உன் உழைப்பின் அருமை." "முகஸ்துதி, புகழ்ச்சி, இவையெல்லாம் இப்போது எனக்குத் தேவை இல்லை. கூப்பிட்டனுப்பிய காரியத்தை முதலில் சொல்லுங்கள். எனக்கு உங்களோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. வேலை இருக்கிறது." - என்று அவரை இடைமறித்தான் அழகியநம்பி. "ஆளே மாறிப் போய்விட்டாய்! உன்னைப் பார்த்தால் பழைய அழகியநம்பி மாதிரியே தெரியவில்லையே?" - அவன் இடைமறித்துக் கூறியதையும் அவனுடைய ஆத்திரத்தையும் அவசரத்தையும் பொருட்படுத்தாதவர் போலப் பேசிக் கொண்டே அவன் தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சிரித்தார் அவர். அழகியநம்பி முகத்தைச் சுளித்தான். பன்னீர்ச்செல்வம் தம் பக்கத்தில் இருந்த ஆட்களுக்கு ஏதோ ஜாடை காட்டினார். உடனே அவர்கள் தூரத்தில் விலகிப் போய் நின்று கொண்டார்கள். "உட்கார் தம்பீ!" அவர் அவனிடம் ஏதோ அந்தரங்க விஷயம் பேசப் போகிறவரைப் போல் பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார். "சும்மா சொல்லுங்கள். எனக்கு உட்கார நேரமில்லை" - "சொன்னால் உனக்குக் கோபம் வராதே?" "சுற்றி வளைக்காதீர்கள். எனக்கு நேரம் வீணாகிறது. நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்" - அவனுடைய குரலில் ஆத்திரம் ஏறியிருந்தது. "இப்படியே இந்த மகசூலை எனக்கு விட்டுவிடு. உன் கடன் பத்திரத்தை இந்த நிமிஷமே கிழித்தெறிந்து விடுகிறேன். நீ கொடுக்க வேண்டிய இரண்டாயிர ரூபாய்க் கடனையும் இந்த ஒரே சாகுபடியில் எடுத்துக் கொண்டு அடுத்த சாகுபடிக்கு நிலத்தை உன்னிடம் திருப்பிவிட்டு விடுகிறேன்." அவர் கூறியதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு இரத்தம் கொதித்தது. "என்ன சொன்னீர்?" - என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு மண்வெட்டியை ஓங்கிவிட்டான். பன்னீர்ச்செல்வம் அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே எழுந்து விலகி நின்றார். "புத்திகெட்ட மனிதரே! உம்மிடம் கடன் வாங்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா? வாய் கூசாமல் எப்படி ஐயா கேட்டீர்?" - என்று கூச்சலிட்டான் அவன். "கடன்காரப் பயலுக்கு ரோஷத்தைப் பார்!" - என்று அடிபட்ட நாய் போல் முணுமுணுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார் பன்னீர்ச்செல்வம். "அயோக்கியன்! விறகுக்கும், கரிக்குமாக மலையை மொட்டையடிப்பது போல் மனிதர்களையும் மொட்டையடிக்கப் பார்க்கிறான்." - என்று அவர் காதில் கேட்கும்படி இரைந்தே சொன்னான் அழகியநம்பி. அவர் போன மறுகணமே ஒரு திருஷ்டிப் பொம்மை கட்டி வயலுக்கு நடுவே நிறுத்தினான். இன்னொரு நாள் மணியக்கார நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், முன்சீப் புன்னைவனம், கந்தப்பன், - எல்லோரும் அருவியில் குளிப்பதற்காக மலையடிவாரத்துக்கு வந்திருந்தார்கள். குளித்துவிட்டுத் திரும்பிப் போவதற்கு முன் அழகியநம்பியின் காய்கறித் தோட்டத்தைப் பார்க்க வந்தனர். "என்ன ஐயா புன்னைவனம்? ஏன் இப்படி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்? அன்றைக்கு உம்மிடமும், என்னிடமும் வந்து யோசனை கேட்டபோது கேலி செய்தோமே? இன்றைக்குப் பார்த்தீரா? புழுதி மண்ணாய்க் கிடந்த ஆற்றுப்படுகையைப் பொன் விளையும் பூமியாக்கி விட்டானே?" - என்று புன்னைவனத்தை நோக்கிக் கூறினார் நாராயணபிள்ளை. "என்ன இருந்தாலும் படித்தவன் மூளையே தனி. எவ்வளவு அருமையாக யோசித்துத் திட்டமாக வேலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா. இத்தனை வருஷமாக இந்த ஆற்றுப் படுகையை நாம் பார்த்துக் கொண்டு தானே இருந்தோம்? நம்மில் ஒருத்தனுக்காவது இப்படிச் செய்ய வேண்டுமென்று புத்தியில் பட்டதா?" - என்றார் புலவர் ஆறுமுகம். "பையன் கூடிய சீக்கிரம் இதில் முன்னுக்கு வந்துவிடுவான் போலிருக்கிறதே!" - என்றார் புன்னைவனம். கந்தப்பன் அந்தப் பசுமை வளத்தைப் பார்த்துப் பேச வாயின்றி நடந்து வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பாய்கிற வாய்க்காலில் மண் சரியாமல் செப்பனிட்டுக் கொண்டிருந்த அழகியநம்பி வயலுக்குள் கூட்டமாகப் பேச்சுக்குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தான். அவர்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் எதிர்கொண்டு வரவேற்று, "வாருங்கள்." - என்று கூறிப் புன்னகை செய்தான். "என்னப்பா; அழகியநம்பீ! பெரிய பண்ணைக்கு முதலாளியாக மாறிவிட்டாற் போல் இருக்கிறதே?" - என்று புலவர் ஆறுமுகம் சிரித்துக் கொண்டே கேட்டார். "நீங்கள் சொல்வது தவறு! இன்றும், நாளையும், என்றுமே ஒரு சாதாரண உழைப்பாளிதான் நான். எனக்கென்று தனிப் பெருமை எதுவும் இல்லை. எல்லாம் இந்த மண்ணின் பெருமை!" என்று விநயமாக அவர்களுக்கு அவன் பதில் சொன்னான். "அப்படிச் சொல்லிவிட முடியுமா அப்பா? ஊரெல்லாம் உன்னைக் கிறுக்கனாக நினைத்துக் கேலி செய்தபோது அலுக்காமல் சலிக்காமல் இந்த மண்ணில் நீதானே உழைத்தாய்?" "எனக்கு நம்பிக்கை இருந்தது. வைராக்கியம் இருந்தது. உழைத்தேன்." - என்று பெருமையாகச் சொன்னான் அவன். சிறிது நேரம் அவனோடு அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். |