5. ஐந்து உள்ளங்கள் அழகியநம்பி தூத்துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்பலேறிய அதேநாள் இரவில் அவனுடைய ஊரில் ஐந்து உள்ளங்கள் ஓயாமல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட்ட தனித்தனிக் கோணங்களிலே அமைந்திருந்தன. அழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் எத்தனை எத்தனை விதமான எண்ணங்கள்; கனவுகள் முந்துகின்றன. குறிஞ்சியூர் - அதுதான் அந்த ஊரின் பெயர் - மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த வீடு திருநெல்வேலி. ஆனால், பிறந்தவீட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவளை முந்திக் கொண்டு போய்விட்டான். ஒரு வயது வந்த பெண், ஒரு வயது வந்த பிள்ளை - இருவரையும், குடும்பத்தின் சக்திக்கு மீறின கடனையும், அவள் பொறுப்பில் வைத்துவிட்டுப் போயிருந்தான் கணவன். 'அழகியநம்பியின் படிப்பு அரைகுறையாக நின்றுவிட்டது. ஒரு வேளையும் இல்லாமல் ஊரோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா? கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ? சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே! வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது? இன்றைக்கே இப்படி இருக்கிறதே? இன்னும் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை வருடங்கள் - அவன் முகத்தில் விழிக்காமல் கழிக்க வேண்டுமோ? அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது?'
'இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது? அவனுக்கும்தான் என்ன! வயதாகவில்லையா? ஏதோ நாலைந்து வருஷம் அக்கரைச் சீமையில் ஓடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும்பினானானால், கடன்களைத் தீர்த்துவிட்டு இந்தக் கல்யாணங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறம் தான் இந்தக் குடும்பம் ஒரு வழிக்கு வரும். எனக்கு நிம்மதி ஏற்படும். எல்லாவற்றுக்கும் அழகியநம்பியை நம்பித்தான் இருக்கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது.'
'பிரமநாயகம் முன்கோபக்காரர். செட்டு, சிக்கனம் என்று கண்டிப்பாக இருக்கிறவர். இவன் அந்த மனிதரிடம் எப்படிப் பழகப் போகிறானோ? ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது!' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம்! பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ? கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ? இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா? இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ? 'சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்' - என்று இவன் கைப்படக் கடிதம் வந்து சேர்ந்தாலொழிய எனக்கு நிம்மதி இல்லை' - அந்தத் தாயின் சிந்தனையும் பெருமூச்சும், இரவும் வளர்ந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு முடிவுதான் ஏது? அழகானதொரு பூங்கொடி நெளிந்து கிடப்பது போலப் படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் தங்கை வள்ளியம்மை. தூக்கத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். செம்பவழத் துண்டங்கள் போன்ற அவள் உதடுகள் பூட்டு நெகிழ்ந்து புன்னகை செய்து கொண்டிருந்தன. அண்ணனின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள் அந்தப் பெண். 'அழகியநம்பி கொழும்பிலிருந்து பெரும் பணக்காரனாகத் திரும்பி வருகிறான். வள்ளியம்மைக்குப் பட்டுப் புடவைகளும் துணி மணி நகைகளும் வாங்கிக் குவிக்கிறான். தங்கையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சாத குறையாகக் கொண்டாடுகிறான். ஊரெல்லாம் அவன் பெருமைதான் பேசப்படுகிறது. குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டான். பழைய கால மாதிரியில் சிறிதாக இருந்த மச்சு வீட்டைச் செப்பனிட்டு அழகிய பெரிய மாடி வீடாக ஆக்கி விட்டான். ஒத்தியிலும், ஈட்டின் பேரிலும் அடைபட்டிருந்த பூர்வீகமான நிலங்களை எல்லாம் பணம் கொடுத்து மீட்டுச் சொந்தமாக்கிக் கொண்டான். குறிஞ்சியூர் அவனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் மரியாதையும் அளிக்கின்றது. 'கொழும்பு ஐயா வீடு' - என்று பாமர மக்களிடையே அவன் வீடு பெயர் பெற்று விடுகிறது! தன் தங்கை வள்ளியம்மையின் திருமணத்திற்காக அந்த வட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணச் செழிப்புள்ள குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்கிறான் அழகியநம்பி.' - இப்படி என்னென்னவோ இன்பமயமான கனவுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை. உறக்கம் வராத தாய், உறங்கிக் கொண்டே கனவு காணும் மகள். இருவருக்கும், இருவருடைய நினைவுகளுக்கும் இடையே தான் எவ்வளவு வேற்றுமைகள்? இரவின் அமைதியில் அதே குறிஞ்சியூரில், அதே தெருவின் கோடியில் வேறு மூன்று உள்ளங்களும் அழகியநம்பியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தன. காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையின் தாழ்வாரத்தில் பூவரசமரத்துக் காற்று சுகமாக முன்புறமிருந்து வீசிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை வியாபாரத்துக்காக மாவு முதலியவற்றை அரைத்து மூடி வைத்துவிட்டுப் பற்றுப் பாத்திரங்களைக் கழுவிக் கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தான் அவர்கள் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர். இன்னும் ஒருவரும் தூங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. "அம்மா! அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ? தூத்துக்குடியிலிருந்து கப்பல் புறப்பட்டிருக்குமில்லையா?" - சிறுமி கோமு மெல்லக் கேள்வியைக் கிளப்பினாள். "தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்குப் போகும் கப்பல் சாயங்காலமாகப் புறப்படும் என்று சொல்லுவார்கள். அழகியநம்பி இந்த நேரத்துக்கு நடுக்கடலில் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் எல்லாம் சமுத்திரத்தைத் தாண்டிக் கப்பலில் ஊர்போக விடமாட்டார்கள். இப்போதுதான் அதெல்லாம் நம்புவதே இல்லையே! வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம் அல்லவா பாவம் புண்ணியமெல்லாம்." - சிறுமியின் கேள்விக்குச் சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும், விடை கூறினாள் காந்திமதி ஆச்சி. "மாமா எதற்காக அம்மா இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கொழும்புக்குப் போகிறார்?" - சிறுமி கோமு இரண்டாவது கேள்வியைத் தொடுத்தாள். தாயும் தங்கையும் பேசுவதைக் கவனமாக விழித்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பகவதி. கோமுவின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டுக் காந்திமதி ஆச்சிக்குச் சிரிப்பு வந்தது. "எதற்காக இருக்கும்? எல்லாரும் எதற்காக வெளியூருக்குப் போவார்களோ அதற்காகத்தான் மாமாவும் போகிறார்! பணம் சேர்ப்பதற்கடி பெண்ணே! பணம் சேர்ப்பதற்கு!" - என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னாள் ஆச்சி. "ஏன் அம்மா? அங்கெல்லாம் நம்மவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ இல்லையோ!" - என்று அதுவரை மௌனமாக இருந்த பகவதி கேட்டாள். "இல்லாமல் என்னடி? மஞ்சள் கடுதாசி கொடுத்து ஏழையாய்ப் போனவன் எல்லாம் நாலுகாசு சேர்க்க அக்கரைச் சீமைக்குத்தானே போகிறான்" - என்று ஆச்சி கூறினாள். "இல்லை! இங்கேயே இருந்தவர்களுக்கு அந்தத் தேசமும் சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ? நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே!" "பகவதி! நேரமாகிறதே... காலையில் எழுந்திருந்து காரியங்கள் செய்ய வேண்டாமா? சீக்கிரம் தூங்கு அம்மா," - என்று ஆச்சி பெண்ணிடம் வேண்டிக் கொண்டாள். "காலையில் அந்த மாமா மட்டும் வந்திருக்கவில்லையானால் அக்கா பாடு திண்டாட்டம்தான். எவ்வளவு துணிச்சலாகத் தண்ணீருக்குள் குதித்து அக்காவைக் கரைக்குக் கொண்டு வந்தார் தெரியுமா?" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். "இன்றைக்கு நடந்தது சரி! கடவுள் புண்ணியத்தில் அழகியநம்பி வந்து காப்பாற்றி விட்டான். இனிமேல் நீங்கள் இம்மாதிரி விடிந்ததும் விடியாததுமாக எழுந்திருந்து தனியாகக் குளத்துக்குப் போகக் கூடாது. குளம் வெள்ளத்தால் கரை தெரியாமல் நிரம்பிக் கிடக்கிறது" - என்று இருவருக்கும் சேர்த்துக் கூறுவதுபோல் எச்சரித்தாள் ஆச்சி. ஆச்சி, பகவதி, கோமு மூன்று பேரும் தூங்குவதற்கு முயற்சி செய்யும் நோக்கத்துடன் கண்களை மூடினர். மூடிய விழிகள் ஆறுக்கும் முன்னால் அழகியநம்பியின் கவர்ச்சிகரமான முகத்தோற்றம், உருவெளியில் தெரிந்தது. 'இந்த வயதில் இந்த ஊரில் எத்தனையோ விடலைப் பிள்ளைகள் இருக்கின்றன. படித்து முட்டாளானவர்கள் சிலர், படிக்காமல் முட்டாள்களாக இருப்பவர்கள் சிலர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வகையில் கெட்டுப் போய்த் திரிகின்றான். ஆனால், இந்தப் பிள்ளை அழகியநம்பி எவ்வளவு கண்ணியமாக எவ்வளவு நாணயமாக ஊரில் பழகினான்? தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா? அதுதான் போகட்டும். கொழும்புக்குப் போகிறவன் என்ன பணிவாக வீடு தேடி வந்து என்னிடம் சொல்லிக் கொண்டு போகிறான். விநயமான பிள்ளை. குணமுள்ள பிள்ளை. ஏழைக் குடும்பத்தின் பொறுப்பையும் கடன் சுமைகளையும், இந்த வயதிலேயே தாங்கிக் கொண்டு துன்பப்படும்படி நேர்ந்தது. எப்படியோ பிழைத்து முன்னுக்கு வரவேண்டும். நல்லவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான்' - இது அழகியநம்பியைப் பற்றிக் காந்திமதி ஆச்சியின் மனத்தில் தோன்றிய நினைவு. கோமு நினைத்தாள்: - 'மாமா எவ்வளவு வேகமாகத் தண்ணீருக்குள் பாய்ந்தார்? எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார்! அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம்?' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி! ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பினால் உங்கள் பெண் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்' என்று அழகியநம்பி வேடிக்கைக்குச் சொன்ன வார்த்தைகள் கோமுவின் பிஞ்சு மனத்தில் அழிய முடியாத அல்லது அழிக்க முடியாத ஒரு இடத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சொற்கள் விளையாட்டுப் போக்கில் பொருள் வலுவின்றிக் கேலிக்காகச் - சிரிப்பதற்காகக் கூறப்பட்டவை என்று அவள் நினைக்கவில்லை. உணர்ச்சி மலராத, காரண காரியங்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தெரியாத - அந்த இளம் உள்ளம் அந்தச் சொற்களில் எதையோ தேடத் தொடங்கியிருந்தது. நீரிலிருந்து கரையில் இழுத்துப் போட்ட மீன்போலத் துடித்தாள் பகவதி. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தாயாரும் தங்கையும் அழகியநம்பியைப் பற்றிய பேச்சைக் கிளப்பியபோது அவனைப் பற்றித் தன் உள்ளத்தில் பொங்கிப் புலர்ந்து எழும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்போல ஒரு ஆர்வம் எழுந்தது. ஆனால், அவளுடைய வயசுக்கு அவள் அப்படிப் பேசிவிட முடியுமா? பெண்ணுக்கு வயது வந்துவிட்டால் அவளுடைய உடலின் தூய்மையையும், உள்ளத்தின் தூய்மையையும் மட்டுமே சுற்றி இருப்பவர்கள் கவனிப்பதில்லை. அவளுடைய ஒவ்வொரு வாயசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறது சுற்றுப்புறம். ஒரு சொல்லில் அல்லது சொல்லின் பொருளில் கோணல் இருந்துவிட்டால், அல்லது இருப்பதாகத் தெரிந்தால், பெண்ணின் உணர்ச்சியிலேயே அந்தக் கோணல் இருக்கவேண்டுமென்று சுற்றுப்புறம் அனுமானிக்க முடியும்? பக்கத்திலே இருப்பவர்கள் அந்நியர்களில்லை? தாயும் தங்கையும் தான் பக்கத்திலிருக்கிறார்கள். கலியாணமாகாத வயசுப்பெண், கலியாணமாகாத வயசுப் பையனைப்பற்றி எத்தனை எத்தனையோ நளினமான சுவையுள்ள நினைவுகளை நினைக்க முடியும்? அருகிலிருப்பது தாயும் தங்கையுமானாலும் நூறு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது அவளுடைய அந்தரங்கத்தைக் காட்டிக் கொடுக்காமல் போய்விடாது. பகவதி பேசவில்லை. பேச வேண்டியதையும் சேர்த்து நினைத்தாள்; கொள்ளை கொள்ளையாக நினைத்தாள். அத்தனை இன்ப நினைவுகளும் அவள் மனத்திலேயே மலர்ந்து அவள் மனத்திலேயே உதிர்ந்தன. அந்த நினைவு ஏற்பட்டபோது அழகியநம்பியின் கைபட்ட இடமெல்லாம் அவள் உடலில் புல்லரித்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம், சிரிப்பு, கொஞ்சும் கண்கள், அறிவொளி திகழும் நீண்ட - முகம் எல்லாம் பகவதியின் மனத்தில் சித்திரமாகப் பதிந்துவிட்டன. போயிருக்க வேண்டிய உயிரைக் காப்பாற்றி விட்டான். அவள் இப்போது இருக்கிறாள் என்றால் அவனால் இருக்கிறாள். அவனால் மட்டுமின்றி அவனுக்காகவும் இருக்க வேண்டுமென்று அவள் உள்ளம் சொல்லியது. களங்கமில்லாத அவள் கன்னி உள்ளத்தை அன்று காலை நிகழ்ந்த குளத்தங்கரைச் சம்பவத்திலிருந்து கவர்ந்து கொண்டவன் எவனோ அவன் கண்காணாத சீமைக்குக் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கிறான். அதை நினைத்தபோது அந்தப் பேதைப் பெண்ணின் உள்ளம் குமைந்தது. அழகியநம்பி திரும்புவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும்? கடவுள் எவ்வளவு நல்லவர்! எவ்வளவு தொலைவிற்கு அப்பால் அவர் இருந்தாலும் மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே! பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது! அது பெண்ணின் மனம் ஆயிற்றே! அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா? அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான்! ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே! பகவதிக்கும் தூக்கம் வரவில்லை. தாயும் தங்கையும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணும் மூடவில்லை. மனமும் மூடவில்லை, நினைவுகளும் மூடவில்லை. ஒரு பெரிய கப்பல், நீலக்கடலில் மிதக்கிறது! அதில் அழகியநம்பியின் உருவைக் கற்பனை செய்ய முயன்றாள் அவள். |