![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
14. ஒரு புதிய நண்பன் அவள் அறையை விட்டு வெளியேறிய மறுகணமே அழகியநம்பியின் வேலைகள் மாறின. பைல்களைப் புரட்டினான். கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தான். அன்றைக்குத் தபாலில் வந்த கடிதங்களில் - அவள் தன் கையோடு எடுத்துக் கொண்டு போனவற்றைத் தவிர, மற்றவைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படித்தான். முக்கியமான - அவசியமான குறிப்புக்களைத் தன்னுடைய 'டைரியில்' நினைவாகக் குறித்து வைத்துக் கொண்டான். பூர்ணாவின் வேலைக்காரனாக மூன்று மணி வரை இருந்த அவன் அதற்கு மேல் ஒரு மணி நேரம் பிரமநாயகத்தின் உண்மை ஊழியனாக இருந்தான். நாடகத்தில் இரண்டு வேடம் போட்டுக் கொள்ளும் நடிகரின் நிலை அவனுடைய நிலையாயிருந்தது. அந்தச் சமயத்தில் பிரமநாயகம் உள்ளே வந்தார். அவன் எழுந்திருந்து அவரை வரவேற்றான். அறைக்குள் நுழைந்ததும் அவர் பார்வையில் முதன்முதலில் தென்பட்டது இடம் மாற்றிப் போட்டிருந்த மேசை, நாற்காலிதான். "இவற்றை நான் அந்த மேசைக்குப் பக்கத்தில் அல்லவா போட்டிருந்தேன். இங்கே யார் மாற்றிப் போட்டது? கேட்காமல் கொள்ளாமல், இதெல்லாம் என்ன காரியம்?" - என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டார் அவர். "பூர்ணா சொன்னாள்...! தவிர, எனக்கும் இந்த இடம் வாசலுக்குப் பக்கத்தில் கொஞ்சம் வசதியாக இருக்கும் போலிருக்கிறது..." - அவன் சொல்ல வந்ததை முடிக்கவில்லை. பிரமநாயகத்துக்குக் கோபம் வந்துவிட்டது. "இதென்ன? சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே! வேண்டுமென்றுதானே உன் மேசையையும் நாற்காலியையும், நான் அந்த இடத்தில் போட்டேன். என்னைக் கேட்காமல் நீ எப்படி அதை உன் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்? பூர்ணா சொன்னாளாம்; பூர்ணா! நாளைக்கு அவளா உனக்குச் சம்பளத்தை மாதம் முடிந்ததும் எண்ணிக் கொடுக்கப் போகிறாள்? நான் கொண்டு வந்து வைத்த ஆள் நீ! எனக்கு ஆதரவாக நடந்து கொள்ளத் தெரிய வேண்டாமா உனக்கு?" - அவருக்கு அப்போது என்ன பதில் சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான் அழகியநம்பி. "சே! சே! நீ இவ்வளவு மோசமாக இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. படித்த பையனுக்குக் குறிப்பறிந்து நடந்து கொள்ளத் தெரிய வேண்டாமோ? அழகுக்காகவா நான் அந்த இடத்தில் மேசை நாற்காலியைப் போட்டேன்? ஒரு காரணத்துக்காக வேண்டுமென்றுதானே அப்படிச் செய்திருந்தேன்?" அவர் இவ்வளவு பேசியபின்பும் தான் பேசாமல் நின்று கொண்டிருந்தால் தவறாக எண்ணிக் கொள்வதற்கு இடம் கொடுத்ததாக முடியும் என்று அவன் உணர்ந்தான். ஆனால், நா எழவில்லை. 'நீங்கள் நினைப்பது போல் நான் பூர்ணாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடங்கிவிடவில்லை. நான் எப்போதுமே உங்களுடைய ஆள் என்பதை மறந்துவிடமாட்டேன். அந்தப் பெண்ணிடம் ஒரு மாதிரி முரட்டுத்தனமான சூழ்ச்சி அமைந்திருக்கிறது. அவளை அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் பணிந்துதான் போக வேண்டியிருக்கிறது,' - என்றெல்லாம் தன் மனத்தில் அடங்கிக் கிடக்கும் செய்திகளை அவரிடம் சொல்லிவிடுவதற்கு வார்த்தைகளைத் திரட்டிக் கொண்டான். அவற்றை அவரிடம் சொல்லிவிட வேண்டுமென்று அவன் நாக்குத் துடிதுடித்தது. ஆனால், சொல்லவில்லை. சொல்லும் துணிவு வரவில்லை. பேசாமல் தலை குனிந்து கொண்டு நின்றான். "என்ன தம்பீ! செய்வதையும் செய்துவிட்டுப் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நிற்கிறாயே? உனக்கே நன்றாயிருக்கிறதா இது?" - குரலில் கடுமையைக் குறைத்து அருகே வந்து மெல்ல அவனை நயந்து கொண்டு வினாவுகிறவர் போல் வினாவினார் அவர். அழகியநம்பி தலை நிமிர்ந்தான். "இல்லை... இது... வந்து ஒரு காரணத்திற்காகத்தான் செய்தேன். நான் இங்கே மாற்றிப் போட்டுக் கொள்ளாவிட்டால் அவள் மாற்றிப் போட்டுக் கொண்டுவிடுவாள் போலிருந்தது. அவள் இடம் மாறி உட்கார்ந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டால் அப்புறம் நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றைக்கூட நான் செய்ய முடியாமல் போய்விடும். ஆரம்பத்தில் நானே அவளுக்குக் கீழ்ப்படிந்து போவது போல் நயந்து போவது சரியென்று எனக்குத் தோன்றியது. அதுதான் இப்படி மாற்றிக் கொள்வதுபோல மாற்றிக் கொண்டேன். இதனால் என்னுடைய கண்காணிப்பில் - அல்லது கவனிப்பில் ஏதாவது குறை நேருமோ? என்று நீங்கள் பயப்பட வேண்டாம்." அழகியநம்பி எதை முதலிலேயே அவரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்லுவதற்குத் தயங்கினானோ அதைச் சொல்லிவிட்டான். பிரமநாயகம் பதில் சொல்லாமல் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, தெரியவில்லை. "சரி! சரி! நீ விவரம் தெரிந்த பையன். இதற்குமேல் உன்னை வற்புறுத்திக் கொண்டிருக்கப் போவதில்லை. காரியத்தில் கண்ணாயிருந்தால் போதும். எப்படி எப்படி மாறுவாயோ, எந்தெந்த விதமாக நடந்து கொள்வாயோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சொல்லவும் மாட்டேன்" - என்று சுபாவமான நிலைக்கு வந்து பேசினார். அழகியநம்பிக்கு அவருடைய பேச்சு சிறிது தெம்பு கொடுத்தது. தன்னையும் - தன் மனப்போக்கையும் - தன்னுடைய வார்த்தைகளால், தானே அவருக்கு விளக்கிப் புரிய வவக்க முடிந்தது, அவன் துணிவை அதிகப்படுத்தியிருந்தது. நம்பிக்கையை உயர்த்தியிருந்தது. "இப்போது நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பூர்ணா எத்தனை மணிக்கு வெளியேறினாள்?" - அறையைவிட்டு வெளியே போகப் புறப்பட்டவர் தயங்கி நின்று கொண்டே மேலும் கேட்டார். "அவள் மூன்று மணிக்கே போய்விட்டாள். நான் வரவு செலவு கணக்குகளைச் சரிபார்க்கிறேன். என்னென்ன காரியங்களை அவளுக்குத் தெரிந்தும், தெரியாமலும் நான் கண்காணிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்களோ, அவற்றையெல்லாம் இப்போதிருந்தே ஒவ்வொன்றாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமானவற்றை அவ்வப்போது குறித்தும் வைத்துக் கொண்டிருக்கிறேன்." "நல்லது! அதை பொறுமையோடு தொடர்ந்து செய்து கொண்டு வா..." - என்று சொல்லிவிட்டுப் புறப்படக் கதவைத் திறந்தவர் மறுபடியும் நாலைந்தடி நடந்து வந்து அவனை அருகே அழைத்து; "இன்னொரு செய்தி; உன்னிடம் கூற மறந்துவிட்டேனே? நான் இப்போது ஐந்து மணிக்குக் கண்டிக்குப் போகிறேன். வியாபார சம்பந்தமான ஒரு முக்கிய காரியம். திரும்ப இரண்டு நாள் ஆகும். கவனமாகப் பார்த்துக் கொள்!" - என்று கூறினார். "ஆகட்டும்! பார்த்துக் கொள்கிறேன்" - என்றான் அவன். "இப்போது நீ எங்காவது வெளியில் போகப் போகிறாயா?" 'ஆமாம்! ஆறு மணிக்குப் பூர்ணா வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாள். போக வேண்டும்' - இப்படிப் பதில் சொல்ல இருந்தான் அவன். சொற்கள் கூட நாவின் நுனி வரையில் வந்து விட்டன. நல்லவேளை, தன்னைச் சமாளித்துக் கொண்டு அதையே வேறொரு விதமாக மறைத்துச் சொன்னான். "நேற்றுச் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்று ஆறு மணிக்குக் கிளம்பலாம் என்றிருக்கிறேன்." "அதற்கென்ன; போய்விட்டு வாயேன்" - கூறிவிட்டு வெளியேறிச் சென்று விட்டார் அவர். சற்று முன் தான் அவருக்குச் சொல்வதற்கிருந்த பதிலை எண்ணிப் பார்த்தபோது 'தான் பிரமநாயகத்திடம் வசமாகச் சிக்கிக் கொள்வதற்கு இருந்தது' அவனுக்கு நினைவு வந்தது. வெறும் வாயை மென்று கொண்டிருப்பவருக்கு அவல் வேறு கிடைத்து விட்டால் கேட்க வேண்டுமா? 'ஏற்கனவே பூர்ணாவின் ஆளாக நான் மாறி அவள் வாயில் சிக்கிவிடுவேனோ?' - என்ற பயம் இவருக்கு இருக்கிறது. 'இன்று மாலை பூர்ணாவைச் சந்திக்க அவள் வீட்டுக்கு நான் தேடிப் போகப்போகிறேன் - என்பதை வேறு இவர் தெரிந்து கொண்டுவிட்டால் ஒரே அடியாக என் மேல் சந்தேகப்பட்டு என்னைப் பற்றி நம்பிக்கையிழந்து போய்விடுவார். நல்ல வேளை! என் வாயில் அந்தச் சொற்கள் வந்துவிடாமல் தப்பித்துக் கொண்டேன்' - என்று நினைத்து மன அமைதி அடைந்தான் அழகியநம்பி. நாலே முக்கால் மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக்கொண்டு பின் கட்டிலிருந்த தன் அறைக்குச் சென்றான் அவன். சமையற்காரச் சோமு தயாராகச் சிற்றுண்டி - காபி - எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தான். முகம் கை கால் கழுவிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான். கால் மணி நேரம் கழித்து அழகியநம்பி தன் அறைக்குத் திரும்பிய போது அறை வாசலில் தன்னை எதிர்பார்த்துக் கொண்டு அதே கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். புன்முறுவலோடு கைகூப்பி அவனை வணங்கினார் அந்த இளைஞர். "வாருங்கள்! இப்படி உள்ளே வந்து உட்காருங்கள்" - என்று அவரை வரவேற்று அவருக்குப் பதில் வணக்கம் செலுத்தினான் அழகியநம்பி. பிரமநாயகம் தன்னைக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தியபோதும், வேறு இரண்டொரு சந்தர்ப்பங்களிலும் அந்த இளைஞரை கடைக்குள் சந்தித்திருந்தான் அவன். அந்த இளைஞருக்கு நல்ல சிவப்பு நிறம். அழகிய முகம். அகன்ற நெற்றியின் தொடக்கத்தில் புருவங்கள் கூடும் இடத்தில் சிறிய வட்டவடிவமான சந்தனப் பொட்டு இலங்கியது. கள்ளங்கபடமில்லாத சிரிப்பு, களையுள்ள தோற்றம் - இரண்டும் அந்த இளைஞரைப் பார்த்தவுடன் அழகியநம்பியின் உள்ளத்தில் ஒருவகைக் கவர்ச்சியை உண்டாக்கின. அந்த இளைஞர் யாழ்ப்பாணத் தமிழர் என்றும், அந்தக் கடையில் மாதச் சம்பளத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களில் அவரும் ஒருவர் என்றும் பொதுவாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். இரண்டொரு முறை அவனைச் சந்தித்த போது அவர் புன்முறுவலும் வணக்கமும் செலுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கூட அந்த இளைஞரைப் பற்றி விரிவாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டானதில்லை. அந்த இளைஞர் தன்னைத் தேடிவந்து தன் அறைக்குள் உட்கார்ந்தவுடன் இத்தனை நினைவுகளும் அழகியநம்பியின் மனத்தில் உண்டாயின. "தயவு செய்து உங்கள் பெயரை எனக்குச் சொல்லுங்கள். அன்றைக்கு உங்களை அறிமுகம் செய்யும்போது கேட்டது, மறந்துவிடது." - அழகியநம்பி சிரித்த முகத்தோடு அந்த இளைஞரை விசாரித்தான். "என் பெயர் சபாரத்தினம்" - என்றார் அந்த இளைஞர். யாழ்ப்பாணத்தாருக்கே உரிய தமிழின் இனிமை, தமிழின் குழைவு, தமிழின் தூய்மை, - எல்லாம் அந்த இளைஞரின் பேச்சில் அமைந்திருந்தன. "எனக்குத் தமிழ்நாட்டு நண்பர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் உங்களோடு நெருங்கிப் பழக ஆசைப்படுகிறேன். முதல்முதலாக நேற்று உங்களைப் பார்த்த காலந்தொடக்கம், என் மனத்தில் உங்கள் மேல் ஒரு அன்பு ஏற்பட்டுவிட்டது." சபாரத்தினம் சிறு குழந்தை போல் தன் மனத்தில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி வெளியிட்டார். சொற்களைச் சிதைக்காமல், விழுங்காமல் நிறுத்தி நிறுத்தி இனிய குரலில் அந்த இளைஞர் பேசிய விதம் அழகியநம்பியின் உள்ளத்தைத் தொட்டது. அவருடைய பேச்சில் இடையிடையே ஈழத்துத் தமிழ் நடையின் மரபுத் தொடர்கள் இயல்பாக வந்து கலந்தன. அதைச் சுமையோடு அனுபவித்துக் கேட்டான் அழகியநம்பி. அந்தத் தமிழ்ப் பேச்சின் புதுமைக்கு, அந்த இளைஞரின் உள்ளங் கபடமற்ற, சூதுவாதில்லாத அன்புக்கு, தன் மனத்தையும், அதிலிருந்த அன்பையும் மொத்தமாக விலைகொடுத்து விட்டான் அழகியநம்பி. அந்த இளைஞரின் அழகான, சிரிப்புக் கொஞ்சும் முகத்தையே அன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. ஒரு அரைமணி நேரம் தமிழ் இலக்கிய உலகம், வியாபார நிலவரம், சமய வளர்ச்சி - ஆகிய பலதிறப்பட்ட செய்திகளைப் பற்றிய உரையாடலில் சுற்றி வந்தனர் அவர்கள் இருவரும். திடீரென்று பூர்ணாவின் வீட்டிற்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அதுவரை அந்த இளைஞரின் இனிய பழக்கத்தில் தன்னை மறந்து போயிருந்த அவன் அறைக்குள் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தான். 'நேரத்தைக் கடக்க விட்டுவிட்டோமே!' - என்று உணர்ந்து கொண்டதற்கு உரிய பரபரப்பின் சாயல் அவன் முகத்தில் உண்டாயிற்று. அழகியநம்பியின் முகத்தில் உண்டான அந்தக் குறிப்பின் மாறுதலைப் புரிந்து கொண்ட இளைஞர் சபாரத்தினம், "நீங்கள் எங்காவது வெளியே புறப்பட்டு போவதற்கு இருந்தீர்களோ? அடடா; நான் நேரந்தெரியாமல் வந்து உங்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது!" - என்று வருந்திக் கூறினார். "அதெல்லாம் ஒன்றுமில்லை! உங்களைச் சந்தித்தது, உங்களோடு உரையாடியது - இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்த காரியத்திற்காகவும் நான் புறப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்களிள் கழித்து கூட நான் புறப்படலாம். ஆறு, ஆறரை மணி சுமாருக்கு ஒருவரைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறேன்." - என்று சொல்லிக்கொண்டே இடத்தை விட்டு எழுந்திருந்தான் அழகியநம்பி. இளைஞர் சபாரத்தினமும் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்திருந்தார். "உங்களை நான் இன்று இங்கே கண்டு பேசியதுபோல் எங்கள் வீட்டிலும் எல்லோரும் கண்டு பேச ஆவலாயிருப்பார்கள். நீங்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய வீட்டிற்குச் சமூகமளிக்க வேண்டும்." "ஆகட்டும்! கட்டாயம் வருகிறேன்" - என்று சிரித்துக் கொண்டே தலையை அசைத்தான் அழகியநம்பி. அந்த இளைஞரின் சிரிப்பில் ஒரு விந்தை நிறைந்த பண்பு இருப்பதை அவன் கண்டான். அந்தச் சிரிப்பைக் காண்கின்றவர்கள் எத்தகைய கடுமையானவர்களாயிருந்தாலும், அவர்களையும் தம்மையறியாமலே பதிலுக்குச் சிரிக்க வைக்கும் ஒரு தன்மை சபாரத்தினத்தின் சிரிப்பிற்கு இருந்தது. சட்டைப் பையிலிருந்த பூர்ணாவின் 'விஸிட்டிங் கார்டை' எடுத்து அதில் குறிப்பிட்டிருந்த முகவரியைப் பார்த்தான். அதில் இருந்த தெருவின் பெயரையே அவன் அப்போதுதான் படித்தான். 'அந்தத் தெருவிற்குத் தான் மட்டும் தனியாக எப்படிப் போவது? எப்படி அவள் வீட்டைக் கண்டுபிடிப்பது?' - என்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. 'சோமுவைக் கூட்டிக் கொண்டு போனால் என்ன? அவனுக்குத் தெரியாத தெருவா இந்த ஊரில் இருக்கப் போகிறது?' - என்று நினைத்தான். 'சோமு பிரமநாயகத்திடம் சொல்லி விடுவானோ?' என்றும் பயந்தான். கூடியவரை தான் பூர்ணாவின் வீட்டுக்குப் போவது எவருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. உடனே சோமுவைக் கூப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டான். அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டு நின்ற போது. "நல்லது! நான் விடைபெற்று கொள்கிறேன். நாம் பின்பு சந்திப்போம்." - என்று சபாரத்தினம் விடைபெற்றுக் கொண்டார். 'இவரிடமே கேட்டால் என்ன?' என்று எண்ணிச் சிறிது தயங்கினான் அவன். "சபாரத்தினம்! கொஞ்சம் இப்படி வாருங்கள். உங்களிடம் ஒன்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்." - விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றுவிட்ட அவரை மீண்டும் கூப்பிட்டான் அழகியநம்பி. "ஓ! என்ன வேண்டும்? கேளுங்கள், நன்றாகச் சொல்கிறேன்" - சபாரத்தினம் திரும்பி வந்தார். அந்த 'ஓ' என்னும் வியப்பிடைச் சொல்லை அவர் சொல்லும் போது குயில் அகவுவது போன்ற ஒரு நளினம் - ஒரு மென்மை அதில் கலந்திருந்தது. அழகியநம்பி அந்தத் தெருவின் பெயரை அவரிடம் சொல்லி அதற்குப் போய்ச் சேரவேண்டிய வழி விவரங்களைச் சொல்லுமாறு கேட்டான். |