4. கப்பல் புறப்படுகிறது

     அந்த நாட்களில் வியாபாரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக்கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய செயலாக இருந்தது. பாஸ்போர்ட், விசா முதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் கப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், 'கடலைக் கடந்து போதல்' என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம்.

     பிரமநாயகமும், அழகியநம்பியும் தூத்துக்குடிக்கு வந்து சேரும் போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பஸ்ஸில் பிரயாணம் செய்த சிலமணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களும், பழகிய விதமும், அந்த மனிதரைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு அளித்திருந்தன.

     நீர்க்காவியேறிய நான்கு முழம் வேட்டியும் எப்போதோ தைத்த அரைக்கைச் சட்டையும், கையில் ஒரு ஒட்டுப்போட்ட குடையுமாக... அவர் விசுக்கு விசுக்கென்று நடப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. துட்டைச் செலவழிப்பதில் சிக்கனமும், கட்டுப்பாடும் உள்ள இந்த மனிதரா சில லட்சங்களுக்குச் சொந்தக்காரர் என்று பிரமநாயகத்தைப் பற்றித் தெரியாதவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படத்தான் செய்வார்கள்.

     ஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம்போல வேகமாக நடந்தார். அவருடன் தொடர்ந்து நடக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லா வகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு. தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நடையில் உற்சாகமில்லை.

     காலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் தூத்துக்குடி வந்து சேருகிற வரை பச்சைத் தண்ணீர் கூட வாயில் ஊற்றிக் கொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழியாக இருந்தார். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை! அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகியநம்பி.

     ஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவன் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பீ! நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா? அடேடே! என்னைக் கேட்டிருக்கலாமே?' என்று மரியாதைக்காகவாவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த்தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர்.

     பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே ஏதாவது ஓட்டலில் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போலிருந்தது. பிரமநாயகம் என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தினால் பேசாமல் நடந்து கொண்டிருந்தான். துறைமுகத்துக்குப் போவதற்குள் அவராகவே ஏதாவதொரு ஓட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் செல்லுவார் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால், அது வீணாயிற்று. துறைமுக வாசலில் சுங்கச்சாவடியை அடைகிறவரை பிரமநாயகம் சிற்றுண்டிப் பிரச்சினையைக் கிளப்பவே இல்லை. கூலிக்காரர்கள் சாமான்களைக் கீழே வைத்ததும், "தம்பீ! அழகு; என்னிடம் சில்லறையாக இல்லை. இவர்களுக்கு ஆளுக்கு எட்டணா கூலி கொடுத்து அனுப்பு..." என்றார் பிரமநாயகம். அவன் ஒரு கணம் திகைத்தான். பதில் பேசாமல் சட்டைப் பைக்குள் கைவிட்டு இரண்டு அரை ரூபாய் நாணயங்களை எடுத்துக் கூலிக்காரர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பினான். பஸ் கட்டணம், சுமைகூலி எல்லாம் கொடுத்த பின் தன்னிடம் மீதமிருக்கும் ஆஸ்தியை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

     பைக்குள் துழாவினான். சில்லறைக் காசுகளாக இருந்தவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் பன்னிரண்டே முக்காலணா தேறியது. பிரமநாயகத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்படியே வெளிப்புறத்திலிருந்த ஓட்டலுக்குச் சென்று பசியைத் தணித்துக் கொண்டு வரலாமென்று தோன்றியது அவனுக்கு. அவரையும் உடன் அழைக்காமல் செல்வது நன்றாயிருக்குமோ என்று தயங்கினான்.

     'வாருங்கள்; சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வரலாம்' - என்று தான் அவரை அழைத்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று பயமாக இருந்தது. கோபித்துக் கொண்டு கூச்சல் போட்டால் என்ன செய்வது?

     கேவலம் பன்னிரண்டே முக்காலணாச் சில்லறைக்குச் சொந்தக்காரன் பன்னிரண்டு இலட்சத்துக்கு அதிபதியை உரிமையோடு காப்பி சாப்பிட அழைக்கலாமா? உயர்வு, தாழ்வு, மட்டு மரியாதை இல்லாமல் போய்விட்டதென்று அவர் திட்டுவாரோ என்னவோ?

     'கை வறண்டு கிடக்கும் ஏழைக்குத்தான் அடுத்த விநாடியைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விநாடியில் இருப்பதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. பன்னிரண்டே முக்காலணாவில் இரண்டு பேர் காப்பி சிற்றுண்டி சாப்பிட்டு விடலாமென்று நான் நினைக்கிறேன். பன்னிரண்டு இலட்சத்துக்கு உரியவர் வயிற்றையும், பசியையும், பக்கத்திலிருப்பவனையும் மறந்து காரியத்தில் கண்ணாகச் சுங்கச் சாவடியின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.' - இதை நினைத்த போது அழகியநம்பிக்குச் சிரிப்புதான் வந்தது. உதடுகளுக்கு அப்பால் வெளிப்பட்டுவிடாமல் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு விட்டான்.

     துறைமுகத்தில் சுறுசுறுப்பான நேரம் அது. ஐந்தேகால் மணிக்குக் கொழும்புக்குப் புறப்பட வேண்டிய கப்பல் ஒரு புறமும், நாலரை மணிக்குக் கொழும்பிலிருந்து வந்த கப்பல் ஒரு புறமுமாக நின்று கொண்டிருந்தன. ஏற்றுமதி, இறக்குமதி காரணங்களுக்காகக் கூடியிருந்த வியாபாரிகள், முத்துச் சலாபத்தில் சிப்பிகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் முத்துக் குளிப்பவர்கள், கப்பலில் வந்து இறங்கிச் சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு வெளிவரும் பிரயாணிகள், சுமை தூக்கும் கூலிகள், போலீஸ்காரர்கள், துறைமுக அதிகாரிகள், - என்று பல்வேறு நிலையைச் சேர்ந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். பல்வேறு விதமான குரல்கள் அங்கே ஒலித்தன.

     அந்த மாலை நேரத்தில் அந்தத் துறைமுகத்தில் ஒரு புதிய உலகமே தன் கண்களுக்கு முன்னே உருவாகித் தோன்றுவது போலிருந்தது அழகிய நம்பிக்கு. கடலின் நீல நெடும் பரப்பையும், அதற்கு இப்பால் வெண்மைக் கரையிட்டதுபோல விளங்கும் மணல் வெளியையும் ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொம்மைகளைப் பார்ப்பதுபோல் அவன் ஆர்வத்துடனே பார்த்தான். கடற்கரைப் பகுதிகளை அவன் இதற்குமுன் அதிகமாகப் பார்த்ததில்லை. எப்போதோ, அவனுக்கு இரண்டு வயதாகவோ, மூன்று வயதாகவோ இருக்கும்போது முடி இறக்குவதற்காக அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம். அவன் தாயார் அடிக்கடி கூறுவாள்.

     பிரமநாயகம் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வெளியே திரும்பி வந்து, "தம்பீ! கப்பலில் வந்து இறங்கியவர்களை முதலில் சோதனை செய்து அனுப்பிய பின்புதான் உள்ளே போகிறவர்களைச் சோதனை செய்வார்களாம். அதுவரை சாமான்களைப் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே நின்று கொண்டிரு. நான் பக்கத்தில் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன்" - என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். "கொஞ்சம் பொறுங்கள். ஓட்டல்வரை போய்விட்டு வந்துவிடுகிறேன்," - என்று சொல்லிவிடத் துடித்தது அவன் நாக்கு. ஆனால், சொல்லவில்லை. அவனுடைய தலை அவனை அறியாமலே அவருக்குச் சாதகமாகச் சம்மதமென்று கூறுவது போல் அசைந்தது.

     பீப்பாய் உருளுவதுபோல விசுக்கு விசுக்கென்று நடந்து சென்ற பிரமநாயகத்தின் குறுகிய உருவத்தை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. அவர் யார்? அவரிடம் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும்? - அவனுக்கே புரியவில்லை. 'சொல்லிவிட வேண்டும், துணிவோடு சொல்லியே ஆகவேண்டும்' - என்று நினைக்கிறான். அவர் முகத்தைப் பார்த்ததும் மறந்துவிடுகிறான். எங்கும், எப்போதும், உலகம் முழுவதும் அடிமைத்தனம் என்ற ஒரு இழிந்த பண்பே இப்படிக் காரண காரியமற்ற ஒருவகைப் பயத்தினால் தான் உண்டாகிறதோ; என்று சிந்தித்தான் அவன்.

     ஆனால், அவரிடம் அவனுக்கு ஏற்பட்ட பயத்துக்குக் காரணம் இல்லையென்று எப்படிச் சொல்லிவிட முடியும்? அவருக்குக் கீழே வேலை பார்த்து ஆளாவதற்குத்தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான்? அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா? அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவர் நுழைந்த இடத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். துறைமுகத்து வாசலில் வலதுப் பக்கம் திரும்பி, அங்கிருந்த ஓட்டலுள் நுழைந்தார் பிரமநாயகம்.

     பார்த்துக் கொண்டே நின்ற அழகியநம்பிக்கு யாரோ உச்சந்தலையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. 'பக்கத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று தன்னிடத்தில் பிரமநாயகம் ஏன் பொய் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்று திகைத்தான்! ஒரு விநாடி பிரமநாயகம் என்ற அந்தப் பெரிய பணக்கார மனிதர் மிகக் கேவலமானவராக - மிக இழிந்தவராகத் தோன்றினார். அவனுடைய இளம் மனம் கொதித்தது. 'சே! சே! இப்படியும் ஒரு மனிதன் கருமியாக இருக்க முடியுமா? கூட வந்தவனிடம் பொய் சொல்லிவிட்டுப் போய்த் தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அற்பத்தனமான மனிதனைப் பின்பற்றியா நான் செல்லுகிறேன்?' - என்று எண்ணிய போது அவனுடைய உணர்வு குமுறியது. தண்ணீரில் நீந்தத் தெரியாமல் தத்தளிக்கின்றவன் எது கையிற் சிக்கினாலும் அதையே ஆதாரமாக எண்ணிப் பற்றிக் கொள்வதுபோலப் பிரமநாயகத்தின் கருமித்தனத்தை எண்ணிக் கொதித்த அவன் மனம், தனக்குத் தானாகவே ஒரு ஆறுதலைத் தேடிக்கொண்டது. 'இரண்டு பேரும் ஒரே சமயத்தில் ஓட்டலுக்குப் போனால் சாமான்களைப் பார்த்துக் கொள்ள ஆளில்லையே என்றெண்ணித் தான் பிரமநாயகம் முதலில் போயிருப்பார். திரும்பி வந்து தன்னிடம் பணம் கொடுத்துச் சாப்பிட அனுப்புவார். என்ன இருந்தாலும் நன்றாக ஆராயாமல் ஒரு மனிதரைப் பற்றி நாமாகத் தவறுபட எண்ணிக் கொள்ளக் கூடாது' - என்று எண்ணித் தற்காலிகமான பொறுமையை ஏற்படுத்திக் கொண்டான் அழகியநம்பி.

     மீன்வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அழகியநம்பி நின்றான். அவனுடைய கண்கள் ஓட்டலின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. அரைமணி நேரத்திற்குப் பிறகு ஏப்பம் விட்டுக் கொண்டே வாயில் வெற்றிலைச் சிவப்பு விளங்க ஓட்டலிலிருந்து வெளியேறி அவன் இருந்த இடத்தை நோக்கி வந்தார் பிரமநாயகம். அவருக்குத் தெரியும்படியாக நேருக்கு நேர் அவர் வருகிற திசையை எதிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த அழகியநம்பி, அவர் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்று பார்வையை வேறுபுறம் திருப்பினான். அந்தப் பயம், தயக்கம் இவைகளில் எதுவுமே தன்னிடம் இருக்கக் கூடாதென்றுதான் அவன் எண்ணினான். ஆனால் அவை அவனிடமே மறைந்திருந்து சமயா சமயங்களில் வெளிப்பட்டுத் தொலைத்தன.

     பிரமநாயகம் வரும்போதே அவசரப் படுத்திக் கொண்டு வந்தார். "தம்பீ! நாழியாகிவிட்டது. கப்பல் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கிறது. வா; சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொள்வோம். உள்ளே சுங்கச் சோதனை முடிவதற்குக் கால்மணி நேரம் ஆகிவிடும்" - என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழகியநம்பிக்குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை?... அது பலக்குறைவான முருங்கைக்கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, "சீ! நீயும் ஒரு மனிதனா?" - என்று கேட்டுவிட்டுப் பிரமநாயகத்தின் முகத்தில் காறித் துப்பவேண்டும் போல் தோன்றியது. துப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய் 'மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம்' - என்று எண்ணினான். தன்மானமும், மனக்கொதிப்பும், அப்படி எண்ணச் செய்தன அவனை. வெறும் எண்ணம்தான்! வெறும் கைத்துடிப்புத்தான். அடுத்த கணமே காரியவாதியாக, தன் எச்சரிக்கை மிக்க சராசரி மனிதனாக மாறினான் அழகியநம்பி.

     'எந்த முன் கோபம் என்ற குணத்தை நான் வெறுக்கிறேனோ, அதே முன்கோபம் என்ற குணத்துக்கு நானே ஆளாகிவிடலாமா? பிரமநாயகம் செய்தது கேவலமான செயல்தான். ஆனால், நானும் என் எதிர்காலத்தில் ஒரு பகுதியும் எந்த மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோமோ, அவரை இப்போதே பகைத்துக் கொள்வதில் பயன் இல்லை. பொறுமை எல்லோருக்கும் சாதாரணமாக வேண்டும். ஆனால், ஏழைக்கு அது கட்டாயமாக வேண்டும்.'

     அழகியநம்பி பசியைப் பொறுத்துக் கொண்டான். பிரமநாயகம் அவனுக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுக்களைச் சுமந்து அவரைப் பின்பற்றிச் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தான்.

     வயிற்றுப் பசி, மனம், மானம் எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. சுங்கச்சாவடிக்குள் அவர்களுடைய சாமான்களைப் பரிசோதிப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கால் மணி நேரத்தில் 'பார்த்தோம்' என்று பெயர் செய்தாற்போல் பரிசோதித்துவிட்டுக் கப்பலுக்கு அனுமதித்தார்கள். சுங்க இலாகாவில் வேலை பார்க்கும் பலருக்குப் பிரமநாயகத்தை நன்றாகத் தெரிந்திருந்தது. சிலர் அவரைப் பார்த்ததும் புன்னகை புரிந்தனர். இன்னும் சிலர் வணக்கம் செலுத்தினர். வேறு சிலர் ஒரு தினுசாகத் தலையை அசைத்தனர். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அர்த்தமும் குறிப்பும் இருப்பது போல் பட்டது அழகியநம்பிக்கு. பிரமநாயகத்தையும், அவரோடு தொடர்புடையவர்களையும், தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உற்றுக் கவனிப்பது அவனுக்கு அவசியமான, தேவையான நிகழ்ச்சியாக இருந்தது.

     கப்பலுக்கு டிக்கெட்டுகள் அவரே வாங்கிவிட்டார். சாமான்கள் எல்லாம் ஏற்றப்பட்ட பின் பிரமநாயகமும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். அன்றைக்குக் கொழும்புக் கப்பலில் அதிகக் கூட்டம் இல்லை. ஆண்களும் பெண்களுமாகத் தேயிலைத் தோட்டத்திற்கென்று கங்காணியாரால் அழைத்துக் கொண்டு போகப்படும் ஒரு சிறு கூலிக் கூட்டம், பட்டுக் கவுன் அசைந்தாடச் செவ்விதழ் திறந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆங்கிலோ - இந்திய யுவதிகள், இன்னும் சில பேர்கள். எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும் மொத்தம் இருபது, இருபத்திரண்டு பேருக்குமேல் இராது.

     கப்பல் புறப்படுமுன் அதற்குள்ளேயே இருந்த சிற்றுண்டிச் சாலைக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான் அழகியநம்பி. சட்டைப் பையிலிருந்த பன்னிரெண்டே முக்காலணா, இப்போது நாலே முக்கால் அணாவாகக் குறைந்திருந்தது. மணி ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆயிற்று. கப்பல் புறப்படுவதற்கான முதல் மணியை அடித்தார்கள். கப்பலின் சங்கு ஒலித்தது. வழியனுப்புவதற்காக வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். நங்கூரம் அவிழ்க்கப்பட்டுக் கப்பல் கடலில் நகர்ந்தது. அழகியநம்பி கரைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிறந்த மண் சிறிது சிறிதாகப் பின்னுக்கு நகர்ந்தது.