11. நெஞ்சம் நிறைகிறது

     "அம்மா! அம்மா இதோ பார் கடிதம். யார் எழுதியிருக்கிறார்கள் தெரியுமா?" - கைநிறையத் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொண்டு மகிழ்ச்சியால் கூவுகிறவள் போல் கூவிக் கொண்டே வாசலிலிருந்து ஓடிவந்தாள் கோமு.

     கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த காந்திமதி ஆச்சியும் அடுப்பிலிருந்து இட்லி கொப்பரையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பகவதியும் வியப்படைந்து திரும்பிப் பார்த்தனர். வாசல் பக்கமிருந்து கோமு கையில் ஒரு கடிதத்துடன் தரையில் கால் பாவாமல் துள்ளி ஓடிவந்து கொண்டிருந்தாள்.

     "என்னடி இது; குதிப்பும், கும்மாளமும்? தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது! கடிதம் வந்தால் தான் என்ன? இப்படியா குதிக்க வேண்டும்? இன்னும் குழந்தைப் புத்தி மாறவே இல்லையே?... அதுசரி! யார் போட்ட கடிதம் அது?" - காந்திமதி ஆச்சி தாய்க்கு உரிய பொறுப்போடு சிறுமி கோமுவைக் கடிந்து கேட்டாள்.

     "இல்லை அம்மா! வந்து... இதுவந்து... இலங்கையிலே இருந்து அழகியநம்பி மாமா போட்டிருக்கிறார்." - என்று சொல்லிக்கொண்டே சிறுமி கோமு தாயின் கட்டிலருகில் வந்து நின்றாள்.

     அடுப்படியில் நின்று கொண்டிருந்த பகவதியின் முகம் மலர்ந்தது. "எங்கே, கோமு! அதை இப்படிக் கொடு பார்க்கலாம்." - என்று ஓடி வந்து கோமுவின் கையிலிருந்து ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பறித்துக் கொண்டாள் பகவதி.

     "இந்தப் பிள்ளைக்குத்தான் என்ன ஒட்டுதல் பாரேன்! ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே!" என்று பெருமிதம் தொனிக்கச் சொல்லிக் கொண்டாள் ஆச்சி. அவளுடைய முகத்தில் தனிப்பட்டதோர் மகிழ்ச்சி அப்போது நிலவியது.

     "அக்காவுக்கு எவ்வளவு ஆசை பார்த்தாயா அம்மா? மாமா கடிதத்தை நான் முழுக்க படிப்பதற்குள் பாதியிலேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டு விட்டாள்" - என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே தாயிடம் புகார் செய்தாள் கோமு.

     "நீங்கள் இரண்டு பேரும் - அக்காவும் தங்கையும் மட்டும் படித்தால் போதுமா? எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா? சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ?"

     "கடிதமே உன் பெயருக்குத்தான் அம்மா போட்டிருக்கிறார்!" - கோமு ஆச்சியிடம் கூறினாள்.

     முகத்தில் மலர்ச்சி, இதழ்களில் நளினமான மென்முறுவல், கண்களில் உணர்ச்சியின் மெய்மையானதொரு ஒளி, உடலில் பூரிப்பு - அழகியநம்பியின் கடிதத்தைப் படிக்கும் போது பகவதிக்கு இத்தனை மெய்ப்பாடுகளும் உண்டாயின. அத்தனைக்கும் அந்தக் கடிதத்தில் இருந்ததெல்லாம் நாலைந்து வாக்கியங்கள் தான். அவள் அவற்றை இரண்டு மூன்று தடவைகளாவது திரும்பத் திரும்பப் படித்திருப்பாள். அப்புறமும் அவளாகக் கொடுப்பதற்கு மனமின்றித்தான் கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.

     ஆனால், சிறுமி கோமு சும்மாவிடவில்லை! "கொடு அக்கா! இன்னும் நீயே வைத்துக் கொண்டிருந்தால் நான் படிக்க வேண்டாமா? அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா?" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். "பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா? அவர்கள் இருவருக்கும் என் அன்பை மறக்காமல் சொல்லவும்." - என்று எழுதியிருந்த வாக்கியங்களை மழலை மாறாத குரலில் இரண்டு முறை திரும்பத் திரும்பப் படித்தாள் அவள்.

     "என்னடி கோமு? இதையே திரும்பத் திரும்பப் படிக்கிறாயே? இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா?" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, "அம்மா! 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா? இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா?" - என்று கேட்டாள்.

     "அவசரமென்ன இப்போது? நாளைக்குக் காலையில் எழுதிப் போடலாம்," - என்று சிறுமியின் ஆசைத் துடிப்புக்கு அணை போட்டாள் தாய்.

     "என்ன ஆச்சி? உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்தால் கடைக்குச் சாப்பிட வருகிற வாடிக்கைக்காரர்கள் பேசாமல் வாசலோடு திரும்பிப் போய்விட வேண்டியதுதான் போலிருக்கிறது" - என்று கேட்டுக் கொண்டே பெருமாள் கோயில் குறட்டு மணியம் நாராயண பிள்ளை உள்ளே நுழைந்தார்.

     "அடடே! மணியக்காரரா? வாருங்கள், வாருங்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்தா, கோமு! ஐயா உட்காருவதற்கு ஒரு பலகை எடுத்துப் போடு. இட்டிலி எடுத்துவை." - என்று ஆச்சி நாராயண பிள்ளையை வரவேற்றாள்.

     நாராயண பிள்ளை உட்கார்ந்தார். அவர் ஆச்சிக்குத் தன்மையான மனிதர். வேண்டியவர். அந்தக் குறிஞ்சியூரில் கண்ணியமும், நாணயமும் பொருந்திய மனிதர்கள் என்று அவள் மனத்தளவில் மதித்துவந்த சிலருக்குள் முக்கியமான ஒருவர்.

     "வேறொன்றுமில்லை. இந்த முத்தம்மாள் அண்ணி பிள்ளை அழகியநம்பி கொழும்புக்குப் போயிருக்கிறானோ இல்லையோ? 'சுகமாகப் போய்ச் சேர்ந்தேன், உங்கள் சுகத்துக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கவும்' என்று கடுதாசி எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்ததனால், நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை." - என்று ஆச்சி கூறினாள்.

     "ஆமாம்! ஆமாம்! அழகியநம்பிதானே? கப்பலேறப் போவதற்கு முன்னால் மறந்துவிடாமல் தேடிவந்து சொல்லிக் கொண்டு போனானே. நல்ல பிள்ளை." - என்று இலையில் ஆவிபறக்கும் இட்டிலிகளைப் பிட்டுக் கொண்டே பதில் சொன்னார் நாராயண பிள்ளை.

     "பாவம்! முத்தம்மாள் அண்ணி இதுநாள் வரை பட்ட துன்பங்கள் இனிமேலாவது விடியும். பிள்ளை அக்கரைச் சீமைக்குச் சம்பாதிக்கப் போயிருக்கிறான். மாதாமாதம் ஏதாவது அனுப்பினானானால் கடன்களையும் அடைத்து விடுவாள். அதோடு போய்விடவில்லை. கலியாணத்திற்கு ஒரு பெண் வேறு வைத்துக் கொண்டிருக்கிறாள்."

     "ஊம்...! முன் காலம் மாதிரியா ஆச்சி? சமஸ்தானம் போல நிலம் கரைகள் இருந்தது. பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல், உத்தியோகச் சம்பாத்தியத்தில் ஆசை வைக்காமல் குடும்பக் காரியங்கள் அது அது அப்போதைக்கப்போது தாராளமாக நடந்து கொண்டிருக்குமே. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், எந்தப் பெரிய காரியம் நடக்க வேண்டியிருந்தாலும் பிள்ளைகள் தலையெடுத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது."

     "உண்மைதான். என் நிலைமையையே பாருங்களேன் மணியக்காரரே! இந்தச் சனியன் பிடித்த நோக்காடு வந்த நாளிலிருந்து என்னால் ஒருத்தருக்கு ஒரு பயனும் இல்லை. பெற்றது இரண்டு பெண்கள். இந்த 'இட்டிலிக் கடை' என்று ஏதோ பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கக் கொண்டு, காலம் தள்ள முடிகிறது. அதுவும் ஒரு துரும்பை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடுகிற வேலைக்கூட என்னால் செய்ய முடிவது இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் என் பெண்கள் இருவரும் குடும்பப் பாங்கு அறிந்து சொன்ன வார்த்தையை மீறாமல் நடந்து காரியம் பார்ப்பதனால் தான் நான் காலம் தள்ள முடிகிறது."

     வாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொண்ட ஒரு முதிர்ந்த பெண்ணும் ஆணும் பேசிக் கொள்கிற இயற்கைப் பண்பு நிறைந்திருந்தது, காந்திமதி ஆச்சியும், நாராயணப் பிள்ளையும் பேசிக்கொண்ட பேச்சில். வாழ்க்கையின் தத்துவமே இப்படி அனுபவித்து அனுபவித்து உணர வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு வாழ்க்கையின் அனுபவங்களில் தோய்ந்துவிட்ட மாதிரி எண்ணிக்கொண்டு புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே. தெரிந்தவர்கள் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் ஒன்றும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அதிகம் தெரிந்ததுபோல் பேசுவது இந்த உலகத்தில் நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாகிவிட்டதே!

     உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ மலைத் தொடர்களுக்கு நடுவிலுள்ள அந்தச் சின்னஞ் சிறு கிராமத்தில் ஒரு இட்டிலிக் கடையின் உள்ளே அவர்கள் சராசரியான - சாதாரணமான - வெறும் குடும்பப் பிரச்சினைகளைப் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு தலைமுறையின் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் உரையாடல் அறிந்தோ, அறியாமலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

     வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்பவர்கள், இனிமேல் வாழ இருப்பவர்கள் பேசிக்கொண்ட பேச்சு அல்ல அது! வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் பேசிக் கொண்ட பேச்சு.

     "மாமா! இன்னும் இரண்டு இட்டிலி வைக்கட்டுமா? நன்றாகச் சாப்பிடுங்கள்." - என்று சிரித்துக் கொண்டே இட்டிலித் தட்டை எடுத்துத் தந்தாள் பகவதி.

     "ஐயையோ! தாங்காது அம்மா; நீ பாட்டிற்கு அரைடசன், முக்கால் டசன் என்று ஒவ்வொரு நாளும் இப்படிச் சிரித்துப் பேசிக்கொண்டே இலையில் வைத்துவிடுகின்றாய். மாசக்கடையில் 'கணக்கென்ன' என்று பார்த்தால் பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்வரை நீண்டுவிடுகிறது. பெருமாள் கோயிலில் மணியக்காரருக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசு அதிகமாகச் சம்பளம் கொடுக்க மாட்டேனென்கிறார்களே?" - என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் நாராயண பிள்ளை.

     "நான் நிறைய இட்டிலி சாப்பிடுகிறவன். அதனால் எனக்கு நிறையச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடாதோ?" - பகவதி வேண்டுமென்றே மணியக்காரரோடு வாயைக் கிண்டி விளையாடினாள்.

     இலையை எடுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்து ஆச்சி கடையில் கிடைக்கும் பிரசித்திபெற்ற சுக்குமல்லிக் காப்பிக்காக மறுபடியும் பலகையில் சப்பணங்கூட்டி உட்கார்ந்தார் மணியக்காரர்.

     "ஆச்சி! ஒன்று செய்துவிடுங்களேன்..." - என்று நமட்டுச் சிரிப்போடு ஓரக்கண்ணால் பகவதியையும் பார்த்துக் கொண்டு ஏதோ சொல்லத் தொடங்கியவர், முழுவதும் சொல்லி முடிக்காமல் சொற்களை இழுத்து நிறுத்தினார்.

     "என்ன செய்யவேண்டும்! சும்மா சொல்லுங்கள்!" - என்று தானும் சிரித்துக் கொண்டே கேட்டாள் காந்திமதி ஆச்சி.

     "ஒன்றுமில்லை. உங்கள் மூத்த பெண் - இந்தக் குட்டி பகவதியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பையன் அழகியநம்பியின் நினைவுதான் வருகிறது. பேசாமல் இந்தப் பெண்ணை அந்தப் பையனுக்குக் கட்டி கொடுத்துவிடுங்கள். சரியான ஜோடி. இப்போதே முத்தம்மாள் அண்ணியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுவிடுங்கள். பையன் எந்த வருடம் கொழும்பிலிருந்து திரும்பினாலும் உடனே கல்யாணத்தை முடித்துவிடலாம்."

     மணியக்காரர் இந்தப் பேச்சைத் தொடங்கியபோது பகவதி தலையைக் குனிந்து கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

     காந்திமதி ஆச்சி உடனே பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "என்ன ஆச்சி? எதை யோசிக்கிறீர்கள்?" - ஆச்சியின் தயக்கத்தைக் கண்டு மணியக்காரர் மீண்டும் தூண்டித் துளைத்துக் கேட்டார்.

     "மணியக்காரரே! நல்ல காரியமாக நல்ல நேரம் பார்த்து உங்கள் வாயால் சொல்லியிருக்கிறீர்கள். விதியிருந்தால் நடக்கும். ஆனால் முத்தம்மாள் அண்ணி இந்தச் சம்பந்தத்திற்கு இணங்குவாளா? என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆயிரமிருந்தாலும் நான் இட்டிலிக் கடைக்காரி. என் பெண் அழகாயிருக்கலாம்; சமர்த்தாயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயங்கள்..." - ஆச்சியின் பேச்சில் ஏக்கத்தோடு நம்பிக்கை வறட்சியின் சாயலும் ஒலித்தது.

     "இல்லை ஆச்சி! இந்தச் சம்பந்தம் அவசியம் நடந்தே தீருமென்று என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது. பார்க்கப் போனால், கிரகரீதியான தொடர்பு கூட இதில் இருக்கும் போலிருக்கிறது. அன்றைக்கு உங்கள் பெண்ணுக்குச் சரியான நீர்க்கண்டம். தண்ணீரில் மிதந்தபோது தற்செயலாக அந்தப் பையன் வந்து காப்பாற்றியிருக்கிறான். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து நினைத்துப் பார்க்கும் போது இந்தச் சம்பந்தம் நம் சக்திக்கும் அடங்காமல் தானே நடக்கத் தெய்வ சங்கல்பமே துணை செய்யலாமென நினைக்கிறேன்."

     "என்னவோ, உங்கள் மனத்தில் படுகிறதை நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம்! நம் கையில் என்ன இருக்கிறது?"

     ஆச்சியும் மணியக்காரரும், இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, "அம்மா! வாசலிலிருந்து யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரித் தெரிகிறதே" - என்று சொல்லிக் கொண்டே யாரென்று பார்ப்பதற்காகச் சென்றாள் கோமு.

     "சரி! நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். கோவிலில் நாலு வாரமாகப் படித்தனக்கணக்கு எழுதாமல் சுமந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையாண்டான் அழகியநம்பிக்குப் பதில் கடிதாசி எழுதினால் நான் ரொம்ப விசாரித்ததாக ஒரு வரி சேர்த்து எழுதுங்கள்" - என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து புறப்பட்டார் பெருமாள் கோவில் மணியக்காரர். அந்தச் சமயத்தில் எட்டிப் பார்த்தது யாரென்று பார்ப்பதற்காக வாயிற்புறம் சென்றிருந்த கோமு அழகியநம்பியின் தாய் முத்தம்மாள் அண்ணியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். இட்டிலிக் கடைக்குள் ஆண் குரலைக் கேட்கவே உள்ளே நுழையலாமா; கூடாதா? - என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, "என்ன அத்தை! இங்கே நிற்கிறீர்கள்? உள்ளே வரக்கூடாதா? நன்றாயிருக்கிறது, நீங்கள் செய்கிற காரியம்!" - என்று அந்த அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். எதிரே வந்த மணியக்காரரைப் பார்த்ததும் புடைவைத் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள் அந்த அம்மாள். மணியக்காரர் நடையைக் கடந்து தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கிச் சென்றார்.

     "வாருங்கள்! வாருங்கள்! ஏது அத்தி பூத்தாற் போலிருக்கிறது? இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே?" - என்று வரவேற்றாள் காந்திமதி ஆச்சி.

     "இந்தா பகவதி! அத்தை வந்திருக்கிறார்கள் பார்! வயதான பெரியவர்கள் வந்தால் சேவித்து ஆசீர்வாதம் பண்ணச் சொல்ல வேண்டாமா?"

     உட்புறம் இருந்த பகவதி முகம் மலர ஓடிவந்து, "சேவிக்கிறேன் அத்தை!" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, "உங்கள் பெண்ணா? அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே?" - என்று வியப்போடு ஆச்சியிடம் கூறினாள்.

     "நீங்கள் எங்கே அதிகமாக வெளியில் வருகிறீர்கள்? நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே! ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள்! அதனால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறது." - ஆச்சி பதில் கூறினாள்.

     "எனக்கு எங்கே வர ஒழிகிறது? உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா? அதனால் பழக்கமே விட்டுப் போயிற்று."

     "என்னவோ, இன்றைக்காவது வர வழி தெரிந்ததே உங்களுக்கு. எங்கள் பாக்கியந்தான்..."

     "அழகியநம்பி கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு அவசர காரியமாக உங்களிடம் தான் உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். இல்லையென்று சொல்லக்கூடாது" - என்று பீடிகையோடு பேச்சைத் தொடங்கினாள் முத்தம்மாள் அண்ணி.

     அந்த அம்மாள் தன் வீட்டைத்தேடி வந்ததே கிடைத்தற்கரிய பாக்கியம், என்றெண்ணிக் கொண்டிருந்த காந்திமதி ஆச்சிக்கு இந்த வேண்டுகோள் இன்னும் வியப்பை அளித்தது. பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண் பகவதியின் இளம் நெஞ்சமோ தானாகக் கற்பித்துக்கொண்ட சில இனிய நினைவுகளால் நிறைந்து கொண்டிருந்தது.