![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
32. நல்வினைகள் ஒன்று கூடுகின்றன காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? ஒரு மழைக்காலம், ஒரு கூதிர்காலம், ஒரு பின் பனிக்காலம், ஒரு முன் பனிக்காலம், ஒரு இளவேனிற் காலம், ஒரு முதுவேனிற் காலம் - ஆறு பெரும் பருவங்கள் ஓடும் சித்திரங்கள் போல் தோன்றி மறைந்துவிட்டன. அதற்கு மேலும் நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன. இந்தச் சிறிய காலத்திற்குள் அழகியநம்பியின் வாழ்வில் தான் எத்தனை மாறுதல்கள்! பன்னீர்ச்செல்வத்தின் கடனை அடைத்துவிட்டு அவருக்கு முன்னால் நிமிர்ந்து நடக்கிறான் அவன். தென்காசியில் வாங்கியிருந்த கடனும் தீர்ந்துவிட்டது. அவனுடைய காய்கறிப் பண்ணையில் முழுமையாக இரண்டு சாகுபடிகள் முடிந்து விற்று முதலாகிவிட்டன. மூன்றாவது சாகுபடிப் பயிர்கள் பலனளிக்கும் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. அவன் வீட்டில் திருமகள் விலாசம் பொங்கியது. பையனுக்கும் அவன் அதிர்ஷ்டத்திற்கும் ஊரில் திருஷ்டிபட்டு விடக் கூடாதே என்று அவன் தாய் பயந்தாள். ஊரிலுள்ளவர்கள் அவனையும் ஒரு பெரிய மனிதனாக மதித்தார்கள். காந்திமதி ஆச்சி மனஸ்தாபத்தத மறந்து அவனைக் கூப்பிட்டனுப்பினாள். அவன் போனான். ஆச்சியோடு நாராயண பிள்ளையும் இருந்தார். "என்ன தம்பீ? ஆச்சிக்கு முன்னாலேயே ஏதோ வாக்குக் கொடுத்திருந்தீர்களாமே? உங்களுக்கும் வயசாகிறது? ஆண்டவன் புண்ணியத்தில் உழைத்து முன்னுக்கு வந்து நன்றாயிருக்கிறீர்கள். கலியாணம் செய்து கொள்கிற வயசு தானே இது? உங்களுக்கு முடிந்துவிட்டால் பின்பு உங்கள் தங்கை கலியாணமும் நல்ல படியாக நடக்கும்." நாராயண பிள்ளை காந்திமதி ஆச்சியின் சார்பில் பேச்சை ஆரம்பித்தார். சிறிது நேரம் அவருக்குப் பதில் சொல்லாமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான் அழகியநம்பி. அவன் மௌனத்தைக் கண்டு ஆச்சியும் வாய் திறந்தாள்: "உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம் தம்பி! - நான் வற்புறுத்தமாட்டேன். நீங்கள் முன்போலவா இருக்கிறீர்கள்; இப்போது? பலவகையிலும் முன்னேற்றமடைந்து வசதியான விதத்தில் இருக்கிறீர்கள். எத்தனையோ பெரிய இடங்களிலிருந்து உங்களுக்குப் பெண் கொடுக்கத் தயாராயிருப்பார்கள்." ஆச்சியின் சொற்கள் பொதுவாகக் கூறப்பட்டவை போலிருந்தாலும் அவனைக் குத்திக் காட்டுவதாகத் தோன்றின அவனுக்கு. மேலும் சிறிது நேரம் யோசித்துக் கொண்டே பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான் அவன். "என்ன தம்பீ யோசனை? மனத்தில் படுவதைச் சொல்லுங்கள். தயங்க வேண்டாம்." - என்று துரிதப்படுத்தினார் நாராயண பிள்ளை. தனக்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனைப் போல் தலைநிமிர்ந்தான் அழகியநம்பி. அப்போது உட்புறத்தில் கதவோரமாக அந்த இரண்டு கண்கள் ஏக்கத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். பதினேழு மாதங்களாக அவனைக் காணாமல் ஏமாந்து ஏங்கிய கண்கள் அவை. 'இனியும் என்னால் பொறுக்க முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று அவனைக் கெஞ்சியது அந்தப் பார்வை. "மணியக்காரரே! இந்த மாத முடிவிற்குள் ஏதாவது நல்ல முகூர்த்தம் இருக்கிறதா? - பார்த்து ஏற்பாடு செய்து விடுங்கள். எனக்குப் பூரணமான சம்மதம் தான். நான் தயார்," - என்று கதவுப் பக்கம் சென்ற தன் பார்வையைத் திருப்பி அவரை நோக்கிக் கூறிவிட்டு எழுந்திருந்தான் அவன். 'சம்மதிக்க மாட்டான்' - என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அவன் சம்மதம் ஆச்சரியத்தை அளித்தது. "உட்காருங்கள் தம்பீ! கொஞ்சம் பொறுத்திருந்து போகலாம். கோமுவை அனுப்பி உங்கள் அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லுகிறேன். நாலு பெரியவர்களையும் வைத்துக் கொண்டு இந்த நல்ல நேரத்திலேயே வெற்றிலைப் பாக்கு மாற்றி நிச்சயம் செய்து கொண்டு விடலாம்." "தேவையானால் செய்து கொள்ளுங்கள்! நான் நிலத்துப் பக்கம் போகவேண்டும். எனக்கு வேலை இருக்கிறது." - என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்காமல் கிளம்பி விட்டான் அவன். மறுநாள் அழகியநம்பி எதிர்பாராத ஆச்சரியம் ஒன்று நடந்தது. "சிரஞ்சீவி முருகேசனுக்கு உன் தங்கையைச் செய்து கொள்ளலாமென்று எங்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது! நீ சம்மதித்துப் பதில் எழுதினால் நாளையே எல்லோரும் பெண் பார்ப்பதற்குப் புறப்பட்டு வந்து சேர்கிறோம்" - என்று முருகேசனின் தந்தை அவனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அழகியநம்பி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். கடிதத்தை அம்மாவிடம் படித்துக் கொண்டிருந்தான். "சம்மதம் - பெண் பார்க்க வாருங்கள் - என்று பதில் எழுதிவிடு." - என்று அவன் தாய் கூறினாள். அப்படியே முருகேசனின் தந்தைக்குப் பதிலும் எழுதிப் போட்டுவிட்டான். முருகேசன் ஏற்கனவே வந்திருந்த போது அழகியநம்பியின் தங்கையைப் பார்த்திருந்தான். அவன் பெற்றோர்களுக்கும் வள்ளியம்மையைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அழகியநம்பியின் மேல் முருகேசனின் தந்தைக்கு ஒரு தனிப்பட்ட அபிமானம் இருந்தது. "நல்ல பிள்ளை. படித்திருக்கிறோம் என்று தலை கனத்துப் போய்த் திரியாமல் சொந்த ஊரிலேயே வழி தெரிந்து வகையாக முன்னேறிவிட்டான்." - என்று அவனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். அதனால்தான் அழகியநம்பியின் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையே அவருக்கு உண்டாயிருந்தது. சீர்சிறப்பு வகைகளிலும் 'அதைச் செய். இதைச் செய்' - என்று அழகியநம்பியிடம் அதிகமாக வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை அவர். "உன்னால் முடிந்ததைச் செய்! போதும். நீ எது செய்தாலும் எனக்குச் சம்மதந்தான்." - என்று அவன் இஷ்டப்படி விட்டு விட்டார் அவர். "இரண்டு கல்யாணங்களையும் ஒரே முகூர்த்தத்தில் ஒன்றாகச் சேர்த்தே நடத்திவிடலாம்." - என்று காந்திமதி ஆச்சி கூறினாள். எல்லோருக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது. கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாயின. நாராயண பிள்ளையிலிருந்து புலவர் ஆறுமுகம் வரை குறிஞ்சியூரின் பிரமுகர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு கல்யாணத்திற்கு ஓடியாடி வேலை செய்வது போல் அலைந்து ஏற்பாடுகளைக் கவனித்தனர். இரண்டு குடும்பங்களுள் நடைபெறும் ஒரு சாதாரணக் கலியாணமாக அது தெரியவில்லை. குறிஞ்சியூர் என்ற பெரிய குடும்பமே அந்தக் கலியாணத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. குறிஞ்சியூரில் அப்போது மனோரம்மியமான பருவகாலம். ஊருக்குப் பன்னீர் தெளிப்பது போல் சாரல் பெய்து கொண்டிருந்தது. அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. சல்லாத் துணிக்குள்ளிருந்து வெட்கத்தோடு தலையை நீட்டிப் பார்க்கும் மணப் பெண்போல் வெண் மேகப் படலங்களுக்கிடையே மலைச் சிகரங்கள் தெரிந்தன. ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள் அத்தனையும் நீர் நிரம்பி நிமிர்ந்து கிடந்தன. எங்கும் பசுமை! எங்கும் குளிர்ச்சி! எங்கும் வளம்! உலகத்தின் மாபெரும் இன்பங்களெல்லாம் அந்த மலைத் தொடருக்கு நடுவே வந்து ஒரு சிறிய கிராமமாக உருப்பெற்றிருப்பது போல் தோன்றியது. இரண்டு கல்யாணத்துக்காகவும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உற்றார், உறவினர், விருந்தினர் வந்து கூடிக் கொண்டிருந்தனர். முகூர்த்தத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் இருந்தன. முருகேசன் குடும்பத்தார் மாப்பிள்ளை வீட்டாருக்குரிய மரியாதைகளோடு ஒரு தனி வீட்டில் வந்து தங்கியிருந்தனர். காந்திமதி ஆச்சியின் கடையில் இரண்டு கல்யாணங்களுக்கும் போதுமான பட்சணங்களைச் சமையர்காரர்கள் இரவு பகலாகச் செய்து கொண்டிருந்தனர். தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டாயிற்று. இரட்டை நாதஸ்வரத்துக்கு நல்ல மேளக்காரராகப் பார்த்துப் பேசி முன் பணம் கொடுத்தாயிற்று. வாசகசாலைக் கந்தப்பனும், புலவர் ஆறுமுகமுமாகச் சேர்ந்து மணமக்களுக்கு வாசித்தளிப்பதற்காக வாழ்த்துமடல் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் காலை தன்னுடைய காய்கறிப் பண்ணையில் உருளைக்கிழங்குச் செடிகளுக்குத் தூரில் உரம் அணைத்துக் கொண்டிருந்தான் அழகியநம்பி. திடீரென்று கோமுவின் குரல் அங்கே கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். வயல் வரப்புகளின் மேல் கோமு ஓடிவந்து கொண்டிருந்தாள். "என்ன கோமு? என்ன சமாசாரம்? இவ்வளவு அவசரமாக ஓடி வந்தே?" - என்று கேட்டான் அவன். "மாமா, உங்களைத் தேடிக் கொண்டு யாரோ குடும்பத்தோடு வந்திருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தால் நம் பக்கத்து மனிதர் மாதிரியில்லை. நாராயண பிள்ளை என்னை அனுப்பினார். உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்." - என்றாள் கோமு. அழகியநம்பிக்கு ஆச்சரியமாயிருந்தது. 'யாராயிருக்கலாம்?' - என்று யோசித்துப் பார்த்தான், தெரியவில்லை. 'போய்ப் பார்த்தால் தானே தெரிகிறது' - என்று கோமுவுடன் புறப்பட்டான். வீட்டை அடைகிறவரை ஓயாத சிந்தனையோடு தான் நடந்தான். வீட்டு வாசலில் வந்து தேடி வந்திருக்கிற மனிதரைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சபாரத்தினம் தான் வந்திருந்தார். எவ்வளவு நாட்களுக்குப் பின் நினைவு வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். அப்படியே சிறுகுழந்தை போல் திண்ணைமேல் தாவி அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான் அவன். "உங்களுக்குக் கலியாணம் என்பது எனக்குத் தெரியாது. நானும் என் வீட்டிலுள்ளவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேலாயிற்று. தென்னாட்டில் ஒவ்வொரு கோவில்களாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வருகிறோம். கன்னியாகுமரிக்குப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் உங்கள் நினைவு வந்தது. 'குறிஞ்சியூர்' என்று நீங்கள் சொல்லிய ஞாபகமிருந்ததினால் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்." - என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். அவருடைய அந்தச் சிரிப்பை அவ்வளவு நாளுக்குப் பின் மறுபடியும் காண நேர்ந்த வியப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான் அழகியநம்பி. நாராயண பிள்ளை முதலியவர்களுக்குச் சபாரத்தினத்தை அறிமுகப்படுத்தி வைத்தான். அவனைப் பார்த்துவிட்டு உடனே திரும்பும் நோக்கத்தோடு வந்திருந்த அவர். திருமணத்திற்கும் இருந்துவிட்டுப் போக எண்ணினார். அழகியநம்பியும் அவரை வற்புறுத்தினான். அவர் மேலும் இரண்டு மூன்று நாள் அங்கே தங்க இணங்கினார். அன்று மாலை சபாரத்தினத்தையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய காய்கறிப் பண்ணையைச் சுற்றிக் காட்டுவதற்குப் புறப்பட்டான் அழகியநம்பி. சுற்றிலும் தெரிந்த கருநீல மலைத் தொடர்களையும், வயல்வெளிகளையும், மற்ற இயற்கை வளங்களையும் பார்த்து மகிழ்ந்து கொண்டே, "அழகியநம்பீ! நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் கிராமத்துக்கு ஈடாக தெய்வலோகத்தைக் கூடச் சொல்ல முடியாது." - என்று பூரிப்போடு கூறினார். சபாரத்தினம். அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். "அவரைத் தூக்குப் போட்டுவிட்டார்கள். அவருடைய கடை இருந்த இடத்தில் இப்போது ஒரு கசாப்புக் கடை இருக்கிறது." - என்றார் சபாரத்தினம். "கசாப்புக் கடை வைப்பதற்கு அது முற்றிலும் பொருத்தமான இடம் தான்." - அவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். லில்லி, மேரி, வோட்ஹவுஸ் தம்பதிகள் - ஆகியோரைப் பற்றி விசாரித்த போது, "அதற்குப் பின்பு தாம் அவர்களைச் சந்திக்கவே நேரவில்லை." - என்று அவர் தெரிவித்தார். ஊருக்கு வந்த பின் தன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை அவருக்குத் தொகுத்துச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஏதேது! நீங்கள் பெரிய அசுரசாதனை தான் செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. கேட்டால் பிரமிப்பாக இருக்கிறது எனக்கு." - என்றார் சபாரத்தினம். "நான் சாதிக்கவில்லை; சபாரத்தினம்! எனக்குள்ளே ஒரு வெறி, ஒரு முரண்டு, - சதா என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தது. நினைத்ததை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எங்கிருந்தோ ஒரு பிடிவாதம் என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு என் கைகளை உழைக்கச் செய்தது. இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது; 'நான் தானா இவ்வளவு செய்தேன்?' என்று என் மேலேயே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது." "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு சிறு பொறி இருக்கத்தான் இருக்கிறது. எப்போதாவது அது ஒளி காட்டி வெற்றி பெறுகிறது." - என்றார் சபாரத்தினம். "என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய இந்தக் கிராமத்திற்குக் கொழும்பிலிருந்து திரும்பி வந்து இறங்கிய விநாடியிலேயே அந்த இலட்சியப் பொறி பற்றிக் கொண்டு விட்டது! அதோ பாருங்கள்! உங்கள் கண் பார்வைக்குத் தென்படுகிற அந்தப் பசுமை முழுதும் நான் இந்த இரண்டு கைகளினால் உழைத்து உருவாக்கிய பூமி." - என்று பெருமிதம் பொங்கும் குரலில் அவருக்குப் பண்ணையைக் காட்டினான் அழகியநம்பி. இருவரும் ஆற்றுப் படுகையில் ஏறி வயலுக்குள் நுழைந்தார்கள். தக்காளிச் செடிகளின் பக்கமாக அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். செடி தாங்காமல் நெருப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகத் தக்காளிப் பழங்கள் தெரிந்தன. "இந்தப் பழங்களுக்குத்தான் எவ்வளவு சிவப்பு? இவ்வளவு சிவப்பான தக்காளிப் பழங்களை இலங்கையில் கூட நான் பார்த்ததில்லை!" - என்றார் சபாரத்தினம். "எப்படிப் பார்த்திருக்க முடியும்? இந்த மண்ணில் நான் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் அல்லவா இப்படிப் பழுத்திருக்கின்றன! நான் சிந்திய இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் இப்போது என்னைப் பெற்றெடுத்த மண் இப்படி எனக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது." - இந்த வார்த்தைகளைக் கூறும் போது அழகியநம்பிக்குக் கண்களில் நீர் துளிர்த்து விட்டது. முற்றும் |