![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
9. காலிமுகக் கடற்கரை அழகியநம்பி அந்தக் கடையில் என்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதை அன்று மாலையே பிரமநாயகம் விளக்கிக் கூறிவிட்டார். தன் வேலையையும், அதை யாருக்குக் கீழிருந்து தான் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்தபோது முதலில் அவன் சிறிது கூச்சமும், தயக்கமும் அடைந்தான். "காலையிலே உன்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினேனே, அந்தப் பெண்ணோடு துணையாக இருந்து அலுவல்களைக் கவனித்துக் கொள்ளத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அவள் பெயர் பூர்ணா. சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு மாதிரிப் பண்புடையவள். இந்தக் கடையில் சலுகைகளும், மற்றவர்களை அதிகாரம் செய்யும் உரிமையும் - என்னைக் காட்டிலும் அவளுக்குத்தான் அதிகம். தம்பீ அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஆதரவும், உரிமையும் இருப்பதற்குக் காரணம் உண்டு. முதல் முதலாக நான் இங்கே வந்தபோது ஒரு உறுதியும் எழுதி வாங்கிக் கொள்ளாமல் எனக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்துக் கடையும் வைத்துக் கொடுத்தது இந்தப் பூர்ணாவின் தகப்பனார் தான். நான் கடையில் இலாபம் கண்டு வியாபாரத்தில் முன்னுக்கு வந்ததும் அவருடைய கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதே சமயம் எனக்குக் கடன் கொடுத்து உதவிய அந்தப் புண்ணியவாளர் நொடித்துப் போனார். வியாபார சம்பந்தமாக நான் செய்த சில இரகசிய வேலைகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். வியாபாரத்தில் முன்னுக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்து தானாக வேண்டியிருக்கிறது. ஆனால் பண்புள்ள அந்த மனிதர் என் சூழ்ச்சிகளைக் காட்டிக் கொடுப்பதாகப் பயமுறுத்தியோ, வேறு தந்திரத்தை மேற்கொண்டோ, என்னைக் கெடுக்க முன்வரவில்லை. தம்முடைய பெண் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டில் சும்மா இருக்கிறாள் என்றும் அவளை நான் என் கடையில் கௌரவமான ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் என்னிடம் வந்து வேண்டிக்கொண்டார். அந்த மனிதரிடம் நான் பட்டிருந்த நன்றிக் கடனைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பெண்ணை இந்தக் கடை சம்பந்தமான எல்லா அலுவல்களையும் மேற்பார்க்கவும், வியாபார சம்பந்தமான தபால் போக்குவரவு, பாங்குக் கணக்கு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளவும் நியமித்தேன். மறு வருஷமே அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு அவள் ஒரே பெண்தான். "தகப்பனார் இருக்கிறவரை கடையின் முதலாளியாகிய எனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொண்டிருந்த அவள் அதன் பிறகு தனிக் கௌரவமும், மமதையும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். சாதாரணப் பதவியை 'ஸ்டோர் செகரெட்டரி' என்று தானாகவே மாற்றிக்கொண்டு தனி அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். நான் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். வியாபார இரகசியங்களும், சூழ்ச்சிகளும் தெரிந்த ஒருத்தியை வெளியே அனுப்பிவிட்டால் இன்னொரு நாட்டிலிருந்து இங்கே வந்து வியாபாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிற எனக்கு எவ்வளவோ தொல்லைகள் ஏற்படும். அவள் என்ன செய்தாலும் சரி என்று பேசாமல் பொறுமையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறேன். 'நரி, இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி' என்று அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால், இனியும் தொடர்ந்து அவளை அப்படி விட்டுவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டிருப்பதில் பயனில்லை. வரவர அவள் போக்கைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. அது மட்டுமில்லை; என் போக்கைக்கூடக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு அவள் வளர்ந்து விட்டாள். இந்தச் சில மாதங்களாகவே என் மனத்தில் அவளைப் பற்றிய குழப்பம் தான் தம்பீ! ஊருக்கு வந்ததும் உன்னைச் சந்தித்ததும், இங்கே என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததும் என்ன நோக்கத்திற்காக என்பது உனக்கு இப்போது ஒருவாறு புரிந்திருக்கும். திடீரென்று அவளை வெளியே போகச் சொல்லிவிட்டு உன்னை அந்த ஸ்தானத்தில் உட்கார்த்திவிடுவேன். ஆனால் அப்படிச் செய்வது சாமர்த்தியமான காரியமில்லை. உனக்கு, என்னுடைய வியாபாரத்துக்கு, எனக்கு, எல்லாவற்றுக்குமே விபரீதமான விளைவுகளைக் கண்மூடித் திறப்பதற்குள் அடுக்கடுக்காக உண்டாக்கி விடுவாள் அவள். அவ்வளவிற்கு அவள் சாமர்த்தியக்காரி. "உன்னை அவளுக்கு அடங்கிய ஆள்போல வேலைக்கு அமர்த்தி வைப்பதே அவளைப் படிப்படியாகத் தேவையற்றவளாக்கி வெளியேற்றப்போவதன் பூர்வாங்க ஏற்பாடுதான் என்பதை நீ புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். வியாபார சூட்சுமங்கள், கடையின் வரவு செலவு, இலாபக் கணக்குகளை வைத்திருக்கிற விதம், எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்தே அவளுக்கு அடங்கி ஒடுங்கி வேலை கற்றுக் கொள்கிறவனைப் போல நீ கற்றுக்கொண்டு விட வேண்டும். இதுவரை அந்த அறையில் அவளைத் தவிர வேறுயாரும் இருந்ததில்லை. ஆனால், இனிமேல் அதே அறையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்துதான் உன் வேலையைச் செய்யப்போகிறாய் நீ. உனக்காகவே ஒரு மேசை நாற்காலியை அந்த அறைக்குள் அவளுக்குப் பக்கத்தில் போட்டுவிடச் சொல்கிறேன். கூச்சம், வெட்கம், தயக்கம் எதுவுமே உன்னிடம் இருக்கக்கூடாது. முழுக்க முழுக்கக் காரியத்தில் கண்ணாக நடந்து கொள்ள வேண்டும். நீ எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகவும், சாதுரியமாகவும் நடந்து கொள்கின்றாயோ அவ்வளவு விரைவாக அவளை இங்கிருந்து கிளப்புவதற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் நான். பூர்ணாவைச் சாதாரணப் பெண்ணாக நினைத்துவிடாதே; ஒரு இராச தந்திரிக்குத் தேவையான சூதுவாது, சூழ்ச்சிகளுக்கு மேல் அதிகமாகவே அவளுக்குப் பொருந்தியிருக்கின்றன. நீ அவளுக்கு இடையூறாக இங்கே வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் எதையும் செய்து உன்னை மடக்கப் பார்ப்பாள். கவனமாக நடந்து கொள்." ஒரு பெரிய கதையையே சொல்லி முடிக்கிறவர் போல அழகியநம்பிக்கு இவ்வளவையும் சொல்லி முடித்தார் பிரமநாயகம். கேட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டான் அவன். கடிதங்களை எழுதித் தபாலில் சேர்ப்பதற்காகச் சோமுவிடம் கொடுத்துவிட்டுத் 'தானும் சிறிது நேரம் உடலைக் கீழே சாய்க்கலாம்' என்று அவன் தன் அறையில் பாயை விரித்துப் படுத்திருந்தான். படுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் விழித்துக் கொண்டுவிட்டார். குழாயடியில் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு நேரே அழகியநம்பியின் அறைக்கு வந்தார். அழகியநம்பிக்குப் பகலில் தூங்கும் பழக்கம் கிடையாது. சும்மா கண்களை மூடிக்கொண்டு உடல் அலுப்புத் தணிவதற்காகப் படுத்திருந்தான். காலடியோசை கேட்டதும் அறைக்குள் வருவது யார் என்று பார்ப்பதற்காகக் கண்களைத் திறந்தான். பிரமநாயகம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் மரியாதைக்காக எழுந்திருந்து நின்றான். "தூங்குகிறாயா? உன்னிடம் சில முக்கியமான விஷயங்களை இப்போதே சொல்லிவிடலாம் என்று பார்த்தேன்" - என்றார் அவர். "நான் தூங்கவில்லை. சும்மாதான் படுத்துக் கொண்டிருந்தேன்" - என்றான் அழகியநம்பி. "அப்படியானால் இதோ ஒரு நிமிடம் பொறு! வந்துவிடுகிறேன்" - என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று அறையின் கதவுகளை அடைத்துத் தாழிட்டு விட்டு வந்தார் அவர். அறைக்குள்ளே மங்கிய இருட்டுப் படர்ந்தது. 'ஸ்விட்ச்' இருந்த இடத்தைத் தடவி மின்சார விளக்கைப் போட்டார். செய்கிற முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கையையும் பார்த்தபோது அவர் சொல்லப் போகிற செய்தி முக்கியமானதாகவும், பரம் இரகசியமாகவும் இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டு வியந்தான் அழகியநம்பி. பிரமநாயகம் உள்ளே வந்து அவனிடம் கூறிய விரிவான செய்திகள் தாம் மேலே கூறப்பட்டவை. இந்த இரகசியங்களைப் பேசி முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வெளியே வந்த போது மாலை மூன்று மணி. அதற்குள் சமையற்காரச் சோமு தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து காப்பி, சிற்றுண்டி தயாரித்திருந்தான். காபி சிற்றுண்டியை அருந்திவிட்டுச் சமையற்காரச் சோமுவுக்குக் கீழ்வரும் கட்டளையைப் பிறப்பித்தார் பிரமநாயகம். "சோமு! நீ ஒன்று செய்! தம்பியோடு போய் ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்துவிட்டு வா. வந்தபிறகு இராத்திரிச் சமையலுக்கு அடுப்பு மூட்டினால் போதும். தம்பீ! ஊரெல்லாம் பார்க்கவேண்டும் அல்லவா." "ஆகட்டும் ஐயா!" - என்றான் சோமு. "தம்பீ! அழகு! எனக்குக் கொஞ்சம் கடை வியாபார சம்பந்தமான வேலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாட்களாக ஊரில் இல்லாததால் அவற்றை இன்றே கவனிக்க வேண்டும். இல்லையானால் நானே உன்கூடச் சுற்றிக் காட்டுவதற்கு வரலாம்" - என்று அழகியநம்பியை நோக்கிக் கூறினார் அவர். "அதனாலென்ன? பரவாயில்லை. நான் சோமுவையே அழைத்துக் கொண்டு போகிறேன்" - என்று தன்னடக்கமாக அவருக்குப் பதில் கூறிவிட்டான் அவன். பிரமநாயகம் கடைக்குள் சென்றார். அழகியநம்பி வெளியில் புறப்படுவதற்கு தயாரானான். சமையற்காரச் சோமு சமையலறைக்குரியதாயிருந்த தன் தோற்றத்தை வெளியில் புறப்பட்டுச் செல்வதற்கு ஏற்றதாக மாற்றத் தொடங்கினான். படிய வாரிவிட்ட தலையும் பளபளவென்று மினுக்கும் சில்க் அரைக்கைச் சட்டையும் சரிகை அங்கவஸ்திரமுமாகப் பத்தே நிமிஷத்தில் பணக்காரத் தோற்றத்தோடு அழகியநம்பிக்கு முன்னால் வந்து நின்றான் சோமு. "அடேடே! யார் இது? சோமுதானா?" - என்று கேலியாகக் கேட்டான் அழகியநம்பி. அதைக் கேட்டுச் சிறிது வெட்கமடைந்தது போல் சிரித்துக் கொண்டான் சோமு. அந்தச் சிரிப்பில் அசடு வழிந்தது. "சரி! வா, போகலாம்" - என்று அவனைக் கூட்டிக் கொண்டு வெளியேறினான் அழகியநம்பி. அவர்கள் பின் பகுதியிலிருந்து கடைக்குள் நுழைந்தபோது கடையில் சரியான வியாபார நேரம். போக வழியே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆண்களும் பெண்களுமாக ஏகக் கூட்டம். மாலை நேரத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு ஓரமாக வழியை விலக்கிக் கொண்டு அழகியநம்பியும் சோமுவும் வெளியே வந்தனர். அப்படி வரும்போது பூர்ணாவின் அறைக்குள் பிரமநாயகமும், அவளும், ஏதோ இரைந்து சப்தம் போட்டு விவாதித்துக் கொண்டிருப்பது அவன் செவிகளில் விழுந்தது. அதற்காக அவன் அந்த அறை வாசலில் தயங்கி நிற்கவில்லை. நடந்து வருகிறபோதே தானாகக் காதில் விழுந்ததை மட்டும் கேட்டுக் கொண்டு சென்றான். தெருவில் இறங்கி நடந்தனர் இருவரும். டவுன்பஸ் நிறுத்துமிடத்தில் போய்ப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு நின்றனர். "தம்பீ! நாம் முதலில் மியூஸியத்தைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் மிருகக் காட்சி சாலைக்குப் போகலாம். கடற்கரையைக் கடைசியாக வைத்துக் கொள்ளுவோம். அப்படி வைத்துக் கொண்டால்தான் கடற்கரையில் கால்மணி அரைமணிக்கூறு இருந்து காற்று வாங்கிவிட்டு வரலாம்," - என்று சுற்றிப் பார்க்கும் திட்டத்தை விவரித்தான் சோமு. "நான் ஊருக்குப் புதிய ஆள். எந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படி எப்படிப் போய்வரவேண்டும்? ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. நீ எப்படிச் சொல்லுகிறாயோ அப்படி நான் கேட்கத் தயார்" - என்று மொத்தமாகத் தன் சம்மதத்தையும் தன்னையும் சேர்த்துச் சோமுவிடம் ஒப்படைத்தான் அழகியநம்பி. பஸ் வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு அந்த அழகிய பெரிய நகரத்தின் வீதிகளைப் பார்த்தான் அழகியநம்பி. ஒளி, ஒலி, ஆரவாரங்கள், கண்ணைப் பறிக்கும் காட்சிகள், தெருவோரத்துக் கடைவீதிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பஸ்கள், கார், டிராம் - ரேடியோ சங்கீதத்தின் ஒலி - எல்லாம் நிறைந்த ஒரு புதிய உலகத்தின் நடுவே நகர்ந்து கொண்டிருந்தான் அவன். சிங்களப் பேச்சொலி, ஆங்கிலப் பேச்சொலி - எல்லாம் தெரிந்தன; கேட்டன. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சோமு, இரு சிறகிலும் தெரிந்த பெரிய கட்டிடங்கள், கடைகள், காட்சிகள், பற்றிய விளக்கத்தை ஆவலோடு கூறிக்கொண்டு வந்தான். பத்துநிமிஷ ஓட்டத்திற்குப் பின் முன்புறத்தில் பசும்புல் வெளிக்கும் நீரூற்றுக்களுக்கும் அப்பால் ஒரு பெரிய வெண்ணிற மாளிகைக்கு அருகில் இருந்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. "தம்பீ! இறங்குவோம். இதுதான் மியூஸியம்" - என்று முன்னால் இறங்கினான் சோமு. அழகியநம்பியும் இறங்கினான். புல்வெளிக்கிடையே சென்ற சாலையில் இருவரும் நடந்தனர். இடுப்பில் பச்சைக் கட்டம் போட்ட கைலி வேஷ்டியும் முண்டா பனியனுமாக நான்கைந்து சிங்கள ஆட்கள் ஏதோ சினிமாப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே எதிரே வந்தனர். அவர்களைக் கடந்து இருவரும் மேலே நடந்து சென்றனர். பொருட்காட்சிசாலை முழுவதையும் சோமு அழகியநம்பிக்குச் சுற்றிக் காட்டினான். சரித்திர சம்பந்தமான சிலைகள், மிருகங்களின் எலும்புக் கூடுகள், அரசர்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், - எல்லாவற்றையும் வரிசையாக அங்கே கண்டான் அழகியநம்பி. அற்புதமும், வியப்பும், புதுமையும், நிறைந்த ஒரு உலகத்திற்குத் திடீரென்று வந்துவிட்டது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. இறந்த பிராணிகளின் உடல்களைப் பாடம் செய்து கெட்டுப் போகாமல் தைலங்களில் இட்டு வைத்திருந்த ஒரு பகுதியைப் பார்த்துக் கொண்டே வந்த போதுமட்டும் அழகியநம்பியின் மனத்தில் அருவருப்பு நிறைந்த ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. செத்த உடல்களைச் சாகாத உடல்கள் பார்ப்பதில்கூட ஒரு இன்பமா? அது கூட ஒரு பொருட்காட்சியா? மனித உள்ளம் உயிரோடு வாழும் அழகைமட்டும் பார்க்க விரும்பவில்லை. உயிரிழந்து கிடப்பதையும் பார்த்து மகிழ வேண்டுமென்ற கண்நோக்கு மனிதனுக்கு அல்லது மனித இனத்துக்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. இருக்கத்தான் வேண்டும். பொருட்காட்சி சாலையைப் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வாசலுக்கு வந்தனர். "மிருகக் காட்சிசாலை தெகிவளை என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கும் இந்த வழியாகவே பஸ் போகிறது. பஸ் வரட்டும். அதுவரை இங்கேயே நிற்போம்" - என்று வாயிலில் வந்ததும் சொன்னான் சோமு. "ஏனப்பா சோமு! இந்த ஊரில் அதிக நேரம் மனிதர்கள் வீட்டிலேயே தங்கமாட்டார்களோ! எந்த நேரமும், எந்த வீதியிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் அலை மோதுகிறதே?" - என்று தன் மனத்தில் அவ்வளவு நேரமாகக் கனத்துப் போயிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான் அழகியநம்பி. "இந்த ஊரில் எப்போதுமே அப்படித்தான். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் தெருவில் கூட்டத்திற்குக் குறைவிருக்காது." - சோமு இப்படிப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பஸ் வந்துவிட்டது. தெகிவளைக்கு போகிற சாலை வெள்ளவத்தையை அடைகிறவரை கடற்கரையோரமாகவே சென்றது. சாலையின் வலது கைப்புறம் நீலக் கடல் பரந்து கிடந்தது. மற்றொருபுறம் உயர்ந்த கட்டிடங்கள் தெரிந்தன. "போய்விட்டு நாம் இங்கேதான் திரும்பிவர வேண்டும். இதுதான் கடற்கரை. இந்த இடத்திற்குக் 'காலிமுகம்' என்று பெயர்." - என்று பஸ்ஸில் போகும்போதே கடற்கரையைச் சுட்டிக் காட்டினான் சோமு. தெகிவளைக்குப் போய் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது மணி ஐந்தரைக்குமேல் ஆகிவிட்டது. அழகான பெரிய தோட்டத்துக்கு நடுவே ஏற்றமும் இறக்கமுமான பகுதிகளில் காட்சிசாலை அமைந்திருந்தது. மனிதர்களின் திறமை, விலங்குகளின் திறமையைத் தன்னுடைய காட்சியின்பத்துக்காக அங்கே அடக்கி வைத்திருப்பதை அவன் கண்டான். மறுபடியும் அங்கிருந்து பஸ் பிடித்துக் காலிமுகக் கடற்கரையில் வந்து இறங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது. அந்த நேரத்தில் அந்த கடற்கரை தனிப்பட்ட அழகுடன் விளங்கியது. திருச்செந்தூரிலும் தூத்துக்குடியிலும் கடற்கரையில் மணற்பரப்பைத் தான் அவன் கண்டிருக்கிறான். கொழும்பு - காலிமுகக் கடற்கரையிலோ, மரகதப் பாய் விரித்ததுபோல் புல் வெளியைக் கண்டான். கடற்கரைக்கு எதிரே பிரம்மாண்டமான அரசாங்கக் கட்டிடங்களும், அப்பால் நகரத்தில் உயரமும் தாழ்வுமான கட்டிடங்களின் உச்சிகளில் தெரியும் பல நிற மின்சார விளக்குகளும், வியாபாரங்களும் தூரத்து ஓவியம் போல் தெரிந்தன. மணி அடித்து ஓய்ந்ததும் அடங்கி மெதுவாக ஒலிக்கும் அதன் ஓசையைப் போல நகரத்தின் ஒலிகள் தொலைவில் சிறிதும் பெரிதுமாக ஒலித்தன. தங்கச் சிலைகளைப் போல் குழந்தைகள், வாளிப்பான உடற்கட்டோடு இளங் கணவரோடு கைகோர்த்துத் தழுவினாற்போல வரும் வெள்ளை யுவதிகள், அடக்க ஒடுக்கமாகக் குத்துவிளக்குப்போலக் கணவனுக்குப் பக்கத்தில் நடந்துவரும் தமிழ்ப் பெண்கள், - சிங்கள மங்கையர், - எல்லோரும் அந்தக் கடற்கரையின் புல் தரைக்கு அழகு கொடுத்தனர். அழகியநம்பியும் சோமுவும் கூட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டனர். முந்திரிப்பருப்பு விற்கும் சிங்களப் பையன் கடல் அலையின் சத்தத்தையும் மீறிக் கொண்டு தன் சத்தம் ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலோ, என்னவோ, "கஜ்ஜிக்கொட்டை! கஜ்ஜிக் கொட்டை!' (கஜ்ஜிக்கொட்டை என்றால் சிங்களத்தில் முந்திரிப்பருப்பு என்று பொருள்) என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டே அவர்கள் உட்கார்ந்திருந்த பக்கமாக வந்தான். சோமு அவனை அருகில் கூப்பிட்டுக் காசைக் கொடுத்து இரண்டு முந்திரிப்பருப்புப் பொட்டலங்கள் வாங்கினான். ஒன்றை அழகியநம்பியிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் காகிதப் பொட்டலத்தைப் பிரித்து முந்திரிப்பருப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். "ஹலோ..." - இனிமையோடு இழைந்த பெண் குரல்கள் இரட்டையாகச் சேர்ந்து ஒலித்தன. அழகியநம்பி தலை நிமிர்ந்து எதிரே பார்த்தான். தூய வெண்ணிறக் கவுன் அணிந்த தோற்றத்தோடு மேரியும், லில்லியும் சிரித்துக் கொண்டு நின்றனர். "வாருங்கள்! வாருங்கள்! நல்ல சமயத்தில் நல்ல இடத்தில்தான் உங்களைச் சந்திக்கிறேன்" - அழகியநம்பி எழுந்து நின்று அவர்களை வரவேற்றான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது. |