![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
29. அவநம்பிக்கைப் பேச்சுக்கள் குறிஞ்சியருவியில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறபோது அவர்கள் அதே திட்டத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள். "தீர்வை செலுத்தி ஒழுங்காகச் சாகுபடி செய்வதாக மனு அனுப்பினால் புறம்போக்கு நிலத்தை ஜாரி செய்து கொடுப்பதில் அதிகம் தகராறு இருக்காது. உன் விண்ணப்பத்தைக் கிராம முன்சீப் சிபாரிசு செய்து ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி ஊரில் அவர் வந்து புறம்போக்குத் தரிசைப் பார்வையிடுவார். உன்னைக் கூப்பிட்டு விசாரிப்பார். பின்பு மேலதிகாரிக்குச் சிபாரிசு செய்து அனுப்புவார். ஒரு மாதத்திற்குள் நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உன்னிடமிருந்து மகசூல்படி தீர்வை வசூலிக்கச் சொல்லிக் கிராம முன்சீப்புக்கு உத்தரவு வந்துவிடும்." "இதெல்லாம் இவ்வளவு விவரமாக உனக்கு எப்படித் தெரியும் முருகேசா? "என் தந்தை ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என்பதை முன்பே உனக்குச் சொல்லியிருக்கிறேனே. அதற்குள் மறந்துவிட்டாயா?" - என்று முருகேசன் கூறவும் அழகியநம்பிக்கு அவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கை உண்டாயிற்று. "நிலம் கைக்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா? அதைப் பயன்படுத்தி ஒழுங்கு செய்வதற்கு ஏராளமாகச் செலவு ஆகுமே? நான் எங்கிருந்து பணம் புரட்டுவேன்? ஏற்கெனவே அப்பா வைத்துவிட்டுப் போயிருக்கிற கடன் வேறு இருக்கிறது." - "பணச் செலவுக்கும், கடன் வாங்குவதற்கும் பயப்படுகிறவன் இந்த மாதிரி ஆசைகளையும், இலட்சியங்களையும் வைத்துக் கொண்டு தொல்லைப்படக் கூடாது. அதுதான் அப்போதே சொன்னேன். பட்டினத்துப் பக்கம் உத்தியோகம் பார்க்கப் போனால் தான் பிழைக்கலாம். நீயோ உறுதியாக ஏர் பிடிக்கத் தான் போகிறேன் என்கிறாய். இன்னொருவனுடைய நிலத்தைப் பிடித்து உழுது கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டுக்கே உனக்குத் தேறாது. துணிந்து இரண்டாயிரம், மூவாயிரம், செலவழித்து இந்த மாதிரிப் புது முயற்சியில் இறங்கினால் இரண்டே வருஷத்தில் உன் கடன் அடைபட்டுப் போகும். இந்தக் கிராமத்திலேயே பெரியதொரு விவசாயப் பண்ணையை உருவாக்கி ஆளும் பெருமையை நீ அடைவாய். ஆரம்பத்தில் உன் உழைப்பைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்தவர்கள் ஆச்சரியப் படும்படி செய்யலாம்!" "அது சரி! அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இன்னொருவர் நிலத்தைக் குத்தகை பிடித்தால் எனக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவு இல்லை. நானூறு, ஐநூறு, செலவழித்து ஒரு ஜோடி மாடு மட்டும் வாங்கிக் கொண்டால் போதும். உழவுக்கும், இறவைக்கும் பயன்படும். நிலத்துக்காரர் உரம், உழவுக்கு ஒத்துக் கொடுப்பார்." "பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். நீ முதலில் கிராம முன்சீப்பைச் சந்தித்து உன் மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்." "நீயும் கூட வா. வீட்டில் போய்ச் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேருமாகப் போய் அவரைச் சந்திப்போம். முடிந்தால் அப்படியே மனுவையும் எழுதிக் கொடுத்துவிடலாம். உன்னுடைய நம்பிக்கையின் பேரில் தான் நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்." "கூடாது! எந்தக் காரியத்துக்கும் இன்னொருவருடைய நம்பிக்கையை விடத் தன்னம்பிக்கை தான் அவசியம்" - என்று சொல்லிச் சிரித்தான் முருகேசன். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். காப்பி, பலகாரம், ஆயிற்று. முருகேசன் மாடிக்குப் போனான். அழகியநம்பி அம்மாவுக்கு கொழும்பில் நடந்த விவரங்களைச் சொன்னான். அம்மா எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டாள். "பிரமநாயகம் இனிமேல் என்ன ஆவார்?" "ஆவதென்ன? இலட்சக் கணக்கில் சர்க்காருக்குச் சேர வேண்டிய பணத்தை மோசடி செய்திருக்கிறார். ஒரு கொலையும் செய்திருக்கிறார். ஆயுள் தண்டனை - அல்லது தூக்குத் தண்டனைக்குக் குறைவாக எதுவும் கிடைக்காதென்று பேசிக் கொள்கிறார்கள்." "சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை. கடல் கடந்து போனால் அங்கும் உன் அதிர்ஷ்டம் இப்படி முடிந்து விட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?" "சொந்த ஊரிலேயே பிழைப்பதென்று தீர்மானித்துவிட்டேன் அம்மா!" "என்னது? சொந்த ஊரிலா? என்ன செய்யப் போகிறாய்? பன்னீர்ச்செல்வம் மாதிரி பணம் வைத்துக் கொண்டிருக்கிறாயா; இருந்த இடத்திலிருந்தே கரியையும், விறகையும் அனுப்பி இலட்சம் இலட்சமாகக் குவிப்பதற்கு? இருக்கிற கடனையே அடைக்க வழியில்லை. தங்கை வேறு ஒருத்தி இருக்கிறாள் கலியாணத்துக்கு!" "பதறாதே அம்மா! நான் சொல்கிற திட்டத்தைக் கேட்டு விட்டு அப்புறம் சொல்." - என்று தொடங்கி முருகேசனும் தானும் தீர்மானித்திருப்பதையெல்லாம் தன் தாய்க்கு விவரித்துச் சொன்னான் அழகியநம்பி. "உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன? பேசாமல் நாலு இடத்திற்கு எழுதிப் போட்டு நல்ல உத்தியோகமாகத் தேடிக் கொண்டு போய்ச் சேர்." - என்றாள் அவன் தாய். "நீ என்ன வேண்டுமானாலும் சொல் அம்மா! இத்தனை நாளாக இல்லாமல் உன் வார்த்தையைத் தட்டிப் பேசுவதற்கு என்னை மன்னித்துவிடு. நான் என் உழைப்பை இந்த மண்ணில் பயன்படுத்துவதற்கு உறுதி செய்துவிட்டேன். ஆரம்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் வரும். அவற்றை நான் பொருட்படுத்தப் போவதில்லை." அது நாள் வரை எதிர்த்துப் பேசாதவன் எதிர்த்துப் பேசியதைக் கண்டதும் அவள் திகைத்துப் போனாள். "என்னவோ, நீ தலையெடுத்தாவது இந்தக் குடும்பத்துக்கு விடியும் என்றிருந்தேன். நீயும் இப்படிக் கிளம்பி விட்டாய். எக்கேடு கெட்டாவது போ." - என்று கோபத்துடன் இரைந்தாள் அந்த அம்மாள். அதற்கு மேல் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை அவன். நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுப்பதற்காக பழக்கூடையைப் பிரித்துப் பழங்களை எடுத்துக் கொண்டான். துணிப் பெட்டியைத் திறந்து காந்திமதி ஆச்சியின் பெண்களுக்குக் கொடுப்பதற்காக நல்ல துணிகளாகக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வள்ளியம்மையைக் கூப்பிட்டு எஞ்சியவற்றை அவளிடம் ஒப்படைத்தான். "இந்தாருங்கள் அண்ணா!" - என்று கடிகாரத்தையும் மோதிரங்களையும் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தவன் அவற்றையும் வாங்கி அணிந்து கொண்டான். "நான் இப்படிக் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறேன் அம்மா!" - தாய் பதில் சொல்லவில்லை. அவளுக்கு அவன் மேல் கோபம் போலிருக்கிறது. அவனும் அவள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. பழங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த முருகேசனுக்கு வாசல் படியில் நின்று குரல் கொடுத்தான். முருகேசன் இறங்கி வந்ததும் இருவரும் கிளம்பினர். வழியில் எதிர்ப்பட்டவர்கள், அவனாகவே வலுவில் போய்ச் சந்தித்தவர்கள், - எல்லோரிடமும் கிராமபோன் ரிகார்டு போல் திரும்பத் திரும்பத் தான் கொழும்பிலிருந்து வர நேர்ந்த காரணங்களை ஒப்பிக்க வேண்டியிருந்தது. சிலர் தாங்களாகவே அவனைத் தூண்டிக் கேட்டார்கள். சிலரிடம் அவனாகவே அதை ஒப்பித்தான். எல்லோருமே அவன் கூறியவற்றைக் கேட்டுவிட்டு முடிவில் தவறாமல் ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். "இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் தம்பீ?" என்ற கேள்விதான் அது! சாதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்குப் பொதுவாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டான். புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், மணியம் நாராயணப்பிள்ளை, ஆகிய ஒரு சில முக்கியமான மனிதர்களிடம் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை விவரித்து அதுபற்றி அவர்கள் கருத்தைக் கேட்டான். ஒருவராவது அவன் கருத்தத ஆதரித்து, "அப்படியே செய் தம்பி! அது நல்ல திட்டம்தான்." - என்று சொல்ல முன்வரவில்லை. "எதற்குத் தம்பி! உங்களுக்கு இந்த வம்பு எல்லாம்? பேசாமல் பட்டினக் கரைகளில் எங்காவது உத்தியோகம் பாருங்கள். நாலு காசு மிச்சம் பிடிக்கலாம். குடும்பமும் கடனிலிருந்து கரையேறும்." - என்று ஆள் தவறாமல் முன்பே ஒன்றாகக் கூடிப் பேசி வைத்துக் கொண்டவர்கள் போல் சொன்னார்கள். தன்னுடைய திட்டத்தைப் புரிந்து கொண்டு நம்பிக்கையாக இரண்டு வார்த்தை சொல்லுகிறவர்களை அந்தக் கிராமம் முழுதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தான் அவன். ஒரு ஆள் கூடக் கிடைக்கவில்லை. வரிசையாகத் தொடர்ந்து, அடுத்தடுத்து அவநம்பிக்கை யளிப்பவர்களையே அவன் சந்தித்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் அவன் தாய் கூறியதைத்தான் வெளியிலுள்ள மற்றவர்களும் கூறினார்கள். காந்திமதி ஆச்சி அவனை அன்போடு வரவேற்றாள். எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். 'மாமா!' - என்று துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள் கோமு. பகவதியின் நீண்ட அழகிய விழிகள் பருகிவிடுவது போல் அவனைப் பார்த்தன. உதடுகள் நெகிழ்ந்து நகை அரும்பியது. காந்திமதி ஆச்சி வாயைத் திறந்து பேசி வரவேற்றதைவிடப் பகவதியின் அந்தக் கண்கள் வரவேற்ற வரவேற்பு அவன் உள்ளமெலாம் நிறைந்து உவகை செய்தது. "கோமு! இந்தா; இதையெல்லாம் அக்காவிடம் கொண்டு போய்க் கொடு." - என்று கையோடு கொண்டு வந்திருந்த பழங்களையும், துணிகளையும் கொடுத்தான் அழகியநம்பி. "இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம் தம்பி?" - கடைசியில் ஆச்சியும் அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள். அதுவரை மற்றவர்களிடம் சொல்லியடைந்திருந்த அவநம்பிக்கையை ஒரு கணம் மறக்க முயன்று கொண்டே ஆச்சியிடமும் தன் திட்டத்தை விவரித்தான் அவன். "இதோ பார் தம்பி! நான் சொல்லுகிறேனென்று கோபித்துக் கொள்ளாதே; நிலத்தைக் கொத்தி வேலை பார்க்கிறதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது. பேசாமல் நான் சொல்வதைக் கேள். எனக்குச் சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். 'ஏதடா ஆச்சி இப்படிப் பேசுகிறாளே' - என்று நினைத்துக் கொள்ளாதே. என்னிடம் கையில் கொஞ்சம் ரொக்கமும் இந்தக் கடையும், பத்து மரக்கால் விதைப்பாட்டுக்கு நன்செயும் இருக்கின்றன. எனக்குப் பிள்ளை வாரிசு இல்லை. பகவதியையும் கட்டிக் கொடுத்து இவ்வளவையும் உன் கையில் ஒப்படைத்து விடுகிறேன். நானும் இருக்கிறவரை உன்னிடமே இருந்துவிடுகிறேன். பிற்காலத்தில் கோமுவைப் பெரியவளாக வளர்த்து வாழவைக்க வேண்டியதும் உன் பொறுப்பு. உன் தங்கை வள்ளியம்மைக்கும் நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடு. ஊரோடு இருந்து கடையை நடத்திக் கொண்டு நிலத்தையும் மேற்பார்த்துக் கொள்ளலாம். இந்த யோசனையால் உன் குடும்பமும் உருப்படும், என் குடும்பமும் உருப்படும். இதை முன்பே ஜாடையாக உன் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறேன். இதைவிட்டு அந்த ஆற்று வண்டலில் மண்வெட்டியைப் பிடித்துக் கொண்டு கஷ்டப்படுவதில் என்ன சுகம் கிடைக்கப் போகிறதோ உனக்கு?" - ஆச்சியின் புதிய யோசனை அவனைத் திகைக்கச் செய்தது. ஒரு விநாடி அவன் மனம் சபலமடைந்தது. 'ஆகட்டும்! அப்படியே செய்து விடலாம்' - என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனத்தின் அந்தரங்கத்தில் எந்தப் பெண் ஒளிந்து கொண்டிருக்கிறாளோ அவளையும் கொடுத்துக் கஷ்டமில்லாமல் வாழப் போதுமான சொத்துக்களையும் தருகிறபோது எப்படி மறுக்கத் தோன்றும்? "உன் அம்மாவிடம் கலந்தாலோசித்துக் கொண்டு இன்னும் பத்துப் பன்னிரண்டு நாளில் எனக்கு ஒரு முடிவு சொல்." "ஆகட்டும்! யோசித்துச் சொல்லுகிறேன்." - என்று பொதுவாகப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் அவன். அவனும் முருகேசனும் வாசற்பகுதி இறங்கித் தெருவில் நடந்த போது கோமு மூச்சு இரைக்க இரைக்க வேகமாக ஓடி வந்தாள். "என்ன கோமு?" "மாமா! வந்து... நான் அம்மா உங்களுக்கு எழுதச் சொன்ன கடிதத்தில் கடைசியாக ஒருவரி எழுதியிருந்தேனே, அதைப் படித்தீர்களோ?" - அவனருகே வந்து நாணிக்கொணி நின்று கொண்டு ஒடுங்கிய குரலில் மெதுவாகக் கேட்டாள். அழகியநம்பி சிரித்தான். "கோமு! இதை நீயாக வந்து கேட்கிறாயா? கேட்டுக்கொண்டு வரச்சொல்லி உன் அக்கா அனுப்பினாளா?" - முருகேசனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவன் இப்படிக் கேட்டதும் கோமு வெட்கமடைந்து முகம் சிவக்கச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடி விட்டாள். "என்ன கேட்டாள்?" - என்றான் முருகேசன். "ஒன்றுமில்லை! வேறு விஷயம்." - என்று மழுப்பினான் அழகியநம்பி. "ஓ!... புரிகிறது எனக்கு." - என்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே குறும்புத்தனமாகச் சிரித்தான் முருகேசன். அர்த்தம் நிறைந்து கனிந்த சிரிப்பு அது. "சரி! இப்போது நேரே முன்சீப் வீட்டிற்குப் போக வேண்டியது தான். விண்ணப்பம் எழுதுவதற்குக் காகிதம், பேனா, எல்லாம் கையோடு கொண்டு வந்திருக்கிறேன்" - என்று பேச்சை மாற்றினான் அழகியநம்பி. "என்னப்பா இது? 'வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது' - என்கிற கதையாக இருக்கிறதே. இத்தனை பேரிடம் இவ்வளவு அறிவுரை கேட்ட பின்புமா நிலத்தை உழுது வாழ வேண்டுமென்ற ஆசையை நீ விடவில்லை?" - முருகேசன் வியப்படைந்தவன் போல் அழகியநம்பியை வினாவினான். "வசதிகள் நெருங்கி வருகிறதென்று அறிந்தவுடன் இலட்சியங்களை நழுவவிடுவதில் அர்த்தமில்லை. உயிரே போனாலும் நான் நினைத்ததை நிறுத்தமாட்டேன். இத்தனன பேரிடமும், இவ்வளவு நாழிகைகளும் கேட்ட அவநம்பிக்கைப் பேச்சுக்களெல்லாம் என் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றன. என்னுடைய பிடிவாதத்துக்கு இராட்சஸ பலத்தை உண்டாக்கியிருக்கின்றன. எனக்கு ஒரு இரகசியம் நன்றாகத் தெரியும். சாமானிய மனிதர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மொத்தமாக எதிர்க்கிற விஷயம் எதுவோ அதில் இலட்சியவாதிக்கு உறுதியாக வெற்றி கிட்டும்." "சரி? உன் இஷ்டம். வா! போகலாம்." கிராம முன்சீப் புன்னைவனம் திண்ணையில் உட்கார்ந்து தீர்வை - இருசால் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அழகியநம்பியும் முருகேசனும் போனவுடன் எழுந்து வரவேற்றார். முறையான விசாரணை, பதில், எல்லாம் முடிந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே முருகேசன் மனுவை எழுதிவிட்டான். அழகியநம்பி அதைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட்டு முன்சீப்பிடம் கொடுத்தான். அவர் அதை வாங்கி மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு படித்தார். இருவரும் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முழுதும் படித்து முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த முன்சீப், முகத்தைச் சுளித்தார். பின்பு இலேசாகச் சிரிக்க முயன்றார். சிரிப்பு வரவில்லை! |